{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/seup8tds/", "data": {"id": "seup8tds", "url": "https://nigandu.oliyonresearch.com/e/seup8tds/", "kind": "article", "headword": "இனக்குழு ஒப்பாய்வியல்", "romanization": "iṉakkuḻu oppāyviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.415859+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மானிடவியலின் முதன்மையான பெரும் பிரிவுகளுள் ஒன்றாகும்.", "body_ta": "மானிடவியலின் முதன்மையான பெரும் பிரிவுகளுள் ஒன்றாகும். உலகத்திலுள்ள மனித இனங்களும் அவர்கள் பண்பாடுகளும் பரவியுள்ளமை குறித்து ஒப்பீட்டு முறையில் ஆராயும் பெரும் பரப்பை இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) கொண்டுள்ளது. வரவாற்றுக்காலந் தொட்டு மனித இனங்களும் பண்பாடுகளும் பல நிலைகளில் பரவி வளர்ந்து வந்துள்ளன. இவற்றின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளையும் அறிவது முதல் இப்போதுள்ள இனங்களையும் பண்பாடுகளையும் ஒப்பிட்டறிவதுவரை இத்துறை ஆராய்கிறது. இக்காலச் சமுதாயங்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நிலவும் தொடர்புகள், பண்பாட்டு முறைகள், சூழ்நிலை, வாழ்நிலை ஆகியவற்றின் அமைப்புகள் முதலான பல்வேறு கூறுகளையும் ஒப்பிட்டுக் காண்கிறது. இப்பிரிவு ஓர் அறிவியல் பரப்பாகையால் ஒவ்வொரு பண்பாட்டையும் தனித்தனியே ஆராயாமல் ஒரு பண்பாட்டின் ஒவ்வொரு கூற்றையும் மற்றப் பண்பாட்டோடு ஒப்பிட்டுப் பகுத்தாய்ந்து, ஒரு பொதுவான முறைமையைக் காண்கிறது. இனக்குழுவியல் (Ethnography) ஒரு தனிச் சமூகத்தின் வாழ்க்கை முறைகளை முழுவதுமாக விவரிக்கும் பிரிவாக அல்லது ஒரு சமூகத்தைப் பற்றிய முழுவதுமான களப்பணி விவரமாக விளங்குகிறது. பல சமூகத்தைப் பற்றிய விரிவான களப்பணி விவரங்கள் கிடைக்கப் பெற்றவுடன், அவற்றை ஒருமுகப்படுத்திப் பிற பண்பாடுகளோடு ஒப்பிட்டாய்ந்து ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகளின்பாலும் பரந்த அளவில் பொது முறையினை வரையறை செய்வதே, இனக்குழு ஒப்பாய்வியலின் உட்கருத்தாகும். எடுத்துக்காட்டாக, வேட்டையாடி–உணவு சேகரிக்கும் பழங்குடிகளின் பிழைப்புப் பொருளாதாரத்தின் (Subsistence Economy) பொதுக் கருத்தை அறியும் பொருட்டுத் தந்தைவழிப் பழங்குடி, தாய் வழிப் பழங்குடி, பல்கணவர் முறைப்பழங்குடி, பல்மனைவி முறைப்பழங்குடி முதலான பல்வேறு சமுதாய அமைப்புகளைக் கொண்ட பழங்குடிகளிடையே காணப்படும் வேட்டையாடி–உணவு சேகரிக்கும் ஆதாரத் தொழிலின் பல கூறுகளையும் இனக்குழுவியல் ஆய்வுகளிலிருந்து பெற்று, அனைத்துத் தரவுகளையும் ஒப்பிட்டாய்ந்து, ஒரு பொதுக் கருத்தினை உருவாக்குவதாகும். இதைப் போன்றே, பண்பாடுகளின் ஒவ்வோர் அமைப்பின்பாலும் பொதுவான முறைமையைக் காண்பதாகும்.\n\nஇனக்குழு ஒப்பாய்வியல் மேற்கூறிய கூறுகளைச் சிறப்பாகத் தனிநிலையில் ஆராயும் பொருட்டுப் பல கொள்கை நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பண்பாடும் பல கால கட்டங்களில் பல நிலைகளை ஏற்றுவளர்ந்ததை அறிய முற்படும்போது, வரலாற்றுப் பின்னணி இன்றியமையாததாகிறது. இப்பின்னணியுடன் பண்பாட்டை அறிவது பண்பாட்டு வரலாறு (Cultural History) எனவும், பொது ஒழுங்கு முறையில் பண்பாட்டின் வளர்ச்சியை அறிவது ‘பண்பாட்டுப் படிமலர்ச்சிக் கொள்கை’ (Cultural Evolutionism) எனவும் கட்டப்படுகிறது.\n\nஇனக்குழு ஒப்பாய்வியல், முற்றிலும் கோட்பாடுகளைச் சார்ந்த ஒரு மானிடவியல் பரப்பாகும். மனிதர்களின் நடத்தைக் கோலம், மனித நடத்தைகளுக்கும் பண்பாட்டிற்கும் இடையேயான தொடர்புகள் முதலானவற்றின் மீதான கோட்பாடுகளை நெறிப்படுத்துகிறது. தொடக்க காலங்களில் இனக்குழுவியலார், பெரும்பான்மையாகத் தொழில் சாராச் சமூகங்களையும், மேலைநாட்டவரல்லாத சமூகங்களையும் தங்கள் ஆய்வுப் பரப்பில் கொண்டிருந்தனர். இக்குடிகளுக்குத் தொன்மைக்குடி, பழங்குடி, எழுத்தறிவில்லாக்குடி, எளியகுடி, தொழில்சாராக்குடி எனச் சில பாகுபாட்டுக் காரணிகளை முன்வைத்துப் பெயரிட்டனர். இவர்கள் அனைவரும் ‘திணைக்குடிகள்’ (Native Peoples) என்றும் கூறப்பட்டனர். இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னரே, அமெரிக்க நகரச் சமுதாயங்களும், தொழில்துறை சார்ந்த ஐரோப்பியச் சமுதாயங்களும் இனக் குழுவியல் பரப்பில் உள்ளடக்கி ஆராயப்பட்டு வருகின்றன. இதனையடுத்துக் கலப்புச் சமுதாயங்களை (Complex Societies) மானிடவியல் ஆய்வுப் பரப்பு முதன்மையாக ஆராய முற்பட்டது. இதனால் இனக்குழு, ஒப்பாய்வியல் பரப்பு விரிவடைந்தது. எளிய சமூகங்களின் பண்பாட்டு ஒப்பாய்வுகளைக் கண்டறிந்து வருத்த பண்பாட்டுக் கொள்கைகள், தொழில்சார் சமூகங்கள் கலப்புச் சமூகங்கள் முதலானவற்றின் ஒப்பாய்வுகள் அனைத்தும், மக்களின் வாழ்க்கை முறைகளை முழுவதுமாகத் தெளிவுபடுத்தியதுடன் மானிடவியலின் பண்பாட்டு மீதான கொள்கைகளையும் விரிவுபடுத்தி முழுமைப்படுத்தியது எனலாம்.\n\nஇனக்குழு ஒப்பாய்வியலின் வரலாற்றுக்கால வளர்ச்சி\n\nஇனக்குழு ஒப்பாய்வியலின் வளர்ச்சியை அறிய, இத்துறைக்கென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளையும் நிறுவனங்களையும் அறிய வேண்டும். இங்கிலாந்தில் கி.பி. 1843–ஆம் ஆண்டில் ‘இனக்குழு ஒப்பாய்வியல் கழகம்’ (Ethnological Society) ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டிலேயே மானிடவியல் களப் பணிக்கான விளக்க ஏட்டினை இக்கழகம் வெளியிட்டது. பின்னர் கி.பி. 1863–ஆம் ஆண்டு இலண்டனில் ‘மானிடவியல் கழகம்’ (Anthropological Society) தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் கி.பி. 1871–இல் இரண்டு கழகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அயர்லாந்து, பிரிட்டன் மானிடவியல் நிறுவனம்’ (Anthropological Institute of Great Britain and Ireland) என்ற பெயருடன் விளங்கியது. பின்னர், 1907–ஆம் ஆண்டில், ‘பேரரசு’ (Royal) என்ற முன்னடைவு சேர்க்கப்பட்டு ‘அயர்லாந்து, பிரிட்டன் நாடுகளின் பேரரசு மானிடவியல் நிறுவனம்’ என விளங்கியது. அமெரிக்காவில் கி.பி. 1842–ஆம் ஆண்டில், அமெரிக்க இனக்குழு ஒப்பாய்வியல் கழகமும் (American Ethnological Society) கி.பி. 1879–இல் வாசிங்டன் மானிடவியற் கழகமும் (Anthropological Society of Washington), 1902–இல் அமெரிக்க மானிடவியல் கழகமும் (American Anthropological Association) தோற்றுவிக்கப்பட்டன. பிரான்சில் ‘பாரிசு இனக்குழு ஒப்பாய்வியல் கழகம்’ (The Society Ethnologique De Paris) கி.பி. 1828–ஆம் ஆண்டிலும், செருமனியில் இனக்குழு ஒப்பாய்வியல் கழகம் கி.பி. 1869–ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன.\n\nஇனக்குழு ஒப்பாய்வியலார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுத்து வைக்கப்பட்ட தொன்மைப் பண்பாட்டுக் கூறுகளை ஒப்பிட்டு ஆய்வதிலும் சமகாலப் பண்பாடுகளை ஒப்பிட்டு ஆய்வதிலும் ஈடுபட்டனர். அப்போது, இனக்குழுவியலுக்கும் இனக்குழு ஒப்பாய்வியலுக்கும் மிகுந்த வேறுபாடு இல்லை. ஏனெனில், இனக்குழுவியலார் தாம் ஆராயும் பண்பாட்டுடன், அண்டைய பண்பாடுகளைக் குறித்தும் ஒப்பிட்டு எழுதி வந்தனர். தொடக்க காலத்தில் புவியியலுக்கும் மண்ணியலுக்கும் எவ்வாறு தெளிவான தனித்தன்மை இல்லையோ அவ்வாறே இனக்குழுவியலுக்கும் இனக்குழு ஒப்பாய்வியலுக்கும் தெளிவான தனித்தன்மை காணப்படவில்லை. இனக்குழு ஒப்பாய்வியல் இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் மிகுந்த வளர்ச்சி நிலையினை எட்டியது. வெர்னி ரே (Verne Ray) தாம் தொகுத்த 7,633 பண்பாட்டுக் கூறுகளும், சார்சு பீட்டர் முர்டாக்கு (George Peter Murdock) தொகுத்து வெளியிட்ட 1000க்குச் சற்றுக் குறைவான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இனக்குழுலியல் வரைபடமும் (Ethnographic Atlas) இனக்குழு ஒப்பாய்வியலின் வளர்ச்சியினைக் குறிப்பதாகும்.\n\nபடிமலர்ச்சி ஆய்வுகள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதனால் இனக்குழு ஒப்பாய்வியலில் இரண்டு பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஒரு பிரிவு அமெரிக்க நாட்டில் பிரான்சு போவாசுவாலும் (Franz Boas) மற்றொரு பிரிவு செருமனியில் இரட்சல் (Ratzal), புரோபனியிசு (Probenius) ஆகிய இருவராலும் தோற்றம் பெற்றன. இரண்டு பிரிவுகளுமே பண்பாட்டு வளர்ச்சியில் பரவலும் (Diffusion) இடப் பெயர்ச்சியும் (Migration) வரலாற்றுக் காலத்தினூடே நிகழ்ந்து வருகின்றன என வலியுறுத்திக் கூறின.\n\nஅமெரிக்கர், செருமானியர் முதலானோர் ஏற்படுத்திய பிரிவுகளை அடுத்து, 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், செயற்பாட்டியல் பிரிவுகள் (Functional Schools) ஏற்படலாயின. இவர்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில், ஒருவழிப் படிமலர்ச்சியியலாரையும் (Unilinear Evolutionists) பண்பாட்டு வரலாற்றாளர்களையும் (Culture Historicalists) ஒதுக்கி, மலினோசுக்கியும் (Malinowski), இசாட்கிளிப் பிரௌனும் (Radcliff–Brown) வகுத்த செயற்பாட்டியற் கோட்பாட்டின் (Functionalism) வழிச் சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் காணப்படும் முறைகளையும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ள தன்மையினையும் அறிய முற்பட்டனர். அதன் பின்னர், அமெரிக்க நாட்டில் முர்டாக்கு, பண்பாட்டிடை ஆய்வுகளை (Cross–Cultural Studies) மேற்கொண்டார். இது பிற்கால இனக்குழு ஒப்பாய்வியல் துறையில் முதன்மையான பங்கினைப் பெற்றுவிட்டது.\n\nதுணை நூல்கள்\n\nDixon, R.B., The Building of Cultures, Scribner, New York, 1928.\n\nLowie, R.H., The History of Ethnological Theory, Farrar and Rinehart, New York, 1937.\n\nMurdock, G.P., Social Structure, Macmillan, New York, 1949."}}