{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sd392p59/", "data": {"id": "sd392p59", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sd392p59/", "kind": "article", "headword": "உத்தாலகர்", "romanization": "uttālakar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.770985+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்தாலகர் என்பவர் சாந்தோக்கிய உபநிடதத்தில் குறிக்கப்பெற்றுள்ள மெய்யறிஞர்களுள் ஒருவர்; ஆன்மிக ஞானமும் வேத, சாத்திரங்களில் ஆழ்ந்த புலமையும் உடையோர் மரபில் தோன்றியவர்.", "body_ta": "உத்தாலகர் என்பவர் சாந்தோக்கிய உபநிடதத்தில் குறிக்கப்பெற்றுள்ள மெய்யறிஞர்களுள் ஒருவர்; ஆன்மிக ஞானமும் வேத, சாத்திரங்களில் ஆழ்ந்த புலமையும் உடையோர் மரபில் தோன்றியவர். இவர் தம் மகன் சுவேதகேதுவும் (Svetaketu) ஆன்மிக ஞானத்தில் தேர்ச்சி பெற்று, மெய்யறிஞனாகத் திகழ விரும்பினார். எனவே உத்தாலகர் (Uddalaka) தம் மகனை ஓர் ஆசிரியரிடம் அனுப்பினார்.\n\nசுவேதகேது 12 ஆண்டுகள் வேதங்களையும் சாத்திரங்களையும் பயின்று, அவற்றை நன்கு மனனம் செய்து, கல்விச் செருக்குடன் தம் தந்தையிடம் திரும்பினான். தம் மகன் பிரம்மவித்தை எனப்படும் மெய்யறிவினை ஐயந்திரிபறப் பயின்று வந்திருப்பான் என்னும் கருத்தினராகிய உத்தாலகர் சுவேதகேதுவிடம், ‘கேட்க முடியாததைக் கேட்கவும் காண முடியாததைக் காணவும் அறியமுடியாததை அறியவும் செய்வதாகிய அறிவைப்பற்றி உன் ஆசிரியரிடம் கற்றாயா?’ என வினவினார். வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமே சுற்றிருந்த சுவேதகேது அத்தகைய அறிவு பற்றி யாதும் அறியானாகி, அதனை விளக்குமாறு தன் தந்தையிடம் வேண்டினான். உத்தாலகர் அவனுக்குப் பல எடுத்துக்காட்டுகள் வாயிலாக ஆன்மாவும் பிரம்மனும் (இறைவனும்) ஒன்றே என்னும் அத்துவிதமாகிய ஞானநெறியை விளக்கினார்.\n\nகளிமண்ணின் இயல்பை நன்கு அறிந்து கொண்டால் அதனால் செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் அறிந்து கொள்ளவியலுதல் போன்று பிரம்மனை அறிந்து கொள்வதன் வாயிலாக இவ்வுலகு முழுவதையும் அறிந்து கொள்ளவியலும். இதன்வழிப் பிரம்மன் ஒன்றே அனைத்துலகமாக விரிந்துள்ளது என்பதனை உத்தாலகர் அறிவுறுத்துகிறார். மேலும், இவர் இவ்வுலகு இன்மையிலிருந்து (சூனியத்திலிருந்து) உருவாகியது என்னும் கருத்தை மறுத்து, பிரம்மன் என்னும் உண்மையிலிருந்தே (Sat) உள்ளதாகிய உலகு தோன்றியுள்ளது என்பதை நிறுவுகிறார்.\n\nபிரம்மன் பற்றிய அறிவு இல்லாதபோதே அவன் வேறு, இவன் வேறு; மரம் வேறு, விலங்கு வேறு என்பன போன்ற வேற்றுமை உணர்வு தோன்றுகிறது. ஆனால் பிரம்மனை அறிந்து ஒடுங்கிய நிலையில் எல்லாம் பிரம்மனாகவே விளங்கும். பல்வேறு வகைப் பூக்களிலிருந்து கொண்டுவரப் பெற்ற தேன் எல்லாம் தேன் கூட்டிற்குள் வந்தபோது, வேறுபாடின்றித் தேன் என்னும் ஒன்றாகவே அமைவதை எடுத்துக்காட்டி, இதனை உத்தாலகர் புலப்படுத்துகிறார். தானும் பிரம்மனும் ஒன்று என்னும் உணர்வு அடைவதே வீடு அடைதல் ஆகும். இவ்வுணர்வு அடைந்தோர் கடலுள் வந்து கலந்த அனைத்து ஆற்றுநீரும் பிறப்பிடம், ஊர்ந்த இடம், பெயர் போல்வன மறைந்து கடல்நீர் என்னும் ஒன்றாகவே அமைதலைப் போன்று, எல்லாம் தாமே என்னும் ஒருமைப்பாட்டுணர்வில் திளைப்பர் என்று கூறும் இவர், உடல் ஆன்மா வெளியேறியதும் உருமாறத்தக்கது; ஆனால் ஆன்மா நுண்பொருளாக அழிவின்மை உடையது என விளக்குகிறார்.\n\nஉத்தாலகரிடம் மெய்யறிவு பெற்ற சுவேதகேது தன்னை உணர்ந்தநிலையில் பேரறிஞன் ஆனான்."}}