{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s4bv6gau/", "data": {"id": "s4bv6gau", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s4bv6gau/", "kind": "article", "headword": "இளவிச்சிக்கோ", "romanization": "iḷaviccikkō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.248385+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "விச்சி எனப்படும் மலைக்குத் தலைவனான விச்சிக்கோ என்னும் சங்ககால மன்னனின் இளவல்.", "body_ta": "விச்சி எனப்படும் மலைக்குத் தலைவனான விச்சிக்கோ என்னும் சங்ககால மன்னனின் இளவல். அடுத்த நிலையில்–அரசு மேற்கொள்ளுதற்குரிய நிலையில் உள்ளமையால், இளவரசு என்னும் குறிப்பில் இளவிச்சிக்கோ எனப்பட்டான். இப்பெயருக்கு ‘இளவச்சிரக்கோ’ என்றொரு பாடபேதம் உள்ளது என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் தம் புறநானூற்றுப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஒருகால் இவனும் கண்டீரக்கோ என்பவனின் இளவலான இளங்கண்டீரக்கோவும் ஒருங்கே மகிழ்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைத் தழுவி, இளவிச்சிக்கோவைத் தழுவாது புறக்கணித்தார். தன்னைத் தழுவாது விடுத்தமைக்குக் காரணம் யாதென வினவிய இளவிச்சிக்கோவிற்குக் கூறுவதாக இப்புலவர் பாடியுள்ள பாடல் புறநானூற்றின் 151–ஆம் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலில், ‘இளங்கண்டீரக்கோ, ஆடவர் வெளியே சென்ற போதும் இல்லத்திற்கு வந்த இரவலர்க்குப் பிடியினைப் பரிசளித்து ஓம்பும் ஈகைப் பண்புமிக்க பெண்களையுடைய கண்டீரக்கோவின் தம்பியாதலின் தழுவிக் கொண்டேன்’ என்றும், ‘இளவிச்சிக்கோ தழுவிக் கொள்ளத்தக்கவனாயினும் பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்தமையானும், இரவலர்க்கு ஈயாது அடைத்த கதவினை உடைய அரசன் மரபில் வந்தமையானும் தழுவாது விடுத்தேன்’ என்றும் பெருஞ் சாத்தனார் விளக்கியுள்ளார்."}}