{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rzg2pfdj/", "data": {"id": "rzg2pfdj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rzg2pfdj/", "kind": "article", "headword": "பட்டுப் புழு நோய்கள்", "romanization": "paṭṭup puḻu nōykaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:05.142717+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பட்டுப் புழு வளர்ப்பில், மிகவும் இன்றியமையாதது புழுக்களைப் பூச்சி, நோய்கள் முதலியவற்றிலிருந்து காப்பதாகும்.", "body_ta": "பட்டுப் புழு வளர்ப்பில், மிகவும் இன்றியமையாதது புழுக்களைப் பூச்சி, நோய்கள் முதலியவற்றிலிருந்து காப்பதாகும்.\n\nபெப்ரின் நோய். இந்நோய் நோசிமா பாம்பிசிஸ் என்னும் புரோட்டாசோவா நுண்ணுயிரியால் உண்டாகிறது. இதை மிளகு நோய் என்றும் குறிப்பிடுவர். இந்நோய், தாய்ப் புழுவின் முட்டையின் மூலமும் பரவுகிறது. இந்நோய் தாக்கிய முட்டைகள் ஒன்றின் மேல் ஒன்றாக இடப் படும். மேலும், அவை முட்டையிலிருந்து பிரிந்து வந்து விடும். நோய்த் தாக்கிய புழுக்கள், தம் உடலில் கரும் புள்ளிகளுடனும், சோர்வடைந்தும், மெலிந்தும், உணவு உட்கொள்ளாமலும், ஒரே சமயத்தில், சட்டையுரிக்காமலும் காணப் படும். பின்னர், புழுக்கள் கூடு கட்டாமல் இறந்து விடும். கூடுகளைக் கட்டினாலும், புழுக்கள் உட்புறம் இறந்து விடும்.\n\nஅந்துப் பூச்சிப் பருவத்தில் இறகுகளின் பக்கத்தில், கரும் புள்ளிகள் தோன்றும். கூட்டுப் புழுவிலிருந்து வரும் பூச்சிகளின் இறகுகள் நன்கு வளராமலும், முட்டையிடும் திறன் குறைந்தும் காணப் படும். இந்நோய் வராமல் தடுக்க, முட்டையிட்ட தாய்ப் பூச்சியைப் பரிசோதித்து, நோயற்ற முட்டைகளை வைத்துக் கொண்டு, ஏனையவற்றை எரித்து விட வேண்டும். மேலும், முட்டைகளை 2% பார்மலின் கரைசலில், 2 நிமிடம் வைத்திருந்து பின், நீரால் கழுவ வேண்டும். புழுக்களை வளர்க்கும் அறையையும், பிற கருவிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.\n\nபாக்டீரியா நோய். இந்நோய்களில் குடல் தொடர்பானவை, பாக்டீரியாவாலும், உயர் தட்ப வெப்ப நிலைகளினாலும், குறைந்த காற்றோட்டத்தாலும், தகுதியற்ற தரம் குறைந்த இலைகளை உணவாகக் கொடுப்பதாலும், புழுக்களின் குடலில் காரத் தன்மை குறைவதாலும், புழுக்களின் எண்ணிக்கை மிகுவதாலும் உண்டாகின்றன. இந்நோய் குடல் நோய், செப்டிசிமியா, சோட்சோ என மூவகைப் படும்.\n\nகுடல் நோய் . இந்நோய் ஸ்டெரெப்டோக்காக்கை கோலை புரோடியஸ் என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. நோய் தாக்கிய புழுக்கள் மெலிந்தும், செரிமானமும், பசியும் இன்றியும், வளர்ச்சி குறைந்தும், சோர்வடைந்தும் காணப் படும். சில புழுக்கள் சட்டையுரித்தலின் போது, உணவு உட்கொள்ளா, புழுக்களின் உடல் சுருங்கி, அழுகி விடும். புழுக்களின் வாயிலிருந்து நீர்மம் வெளி வரும். கழிவுப் பொருள் கடினமற்றும், உருமாறியும், குடலின் தோலுடன் வெளி வரும். இதை வயிற்றுப் போக்கு எனலாம். இந்நோயைத் தடுக்க, பருவ காலங்களுக்கேற்பத் தகுந்த முட்டைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முட்டைகள் சரியான முறையில் பொரிக்க, 25°C வெப்பமும், 85% ஈரப் பசையும் இருக்க வேண்டும். சத்துப் பொருள்கள் நிறைந்த இலைகளை உணவாகக் கொடுக்க வேண்டும்.\n\nசெப்டிசீமியா. ஸ்டெரெப்டோகாகை, ஸ்டேபை லோகாக்கை என்னும் பாக்டீரியாக்கள், புழுக்களின் குருதியில் உடலில் ஏற்படும் காயங்களின் மூலம் உட்புகுந்து, நோயை உண்டாக்குகின்றன. நோயால் தாக்கப் பட்ட புழுக்களின் முன் கால்கள் வலிமையற்று விடும். தோல் சுருங்கும். வாந்தி ஏற்படும். மலம் நீர் கலந்து வெளிப் படும். புழுக்கள் இறந்த பின், மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறி, முன் பகுதி பருத்துப் பின் பகுதி சுருங்கி விடும்.\n\nசோட்டா. இந்நோய் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. இந்தப் பாக்டீரியா நச்சு நீர்மத்தைச் சுரந்து, அவை குடலின் செரிமான நீருடன் கலந்து, குடலால் உறிஞ்சப் பட்டு, நரம்புகள் பாதிக்கப் படுகின்றன. இதை வாத நோய் என்பர். நோய் தாக்கிய புழுக்கள், பசியின்றிச் சோர்வடைந்து, தோல் சுருங்கி, வாந்தியெடுக்கும். முன் கால்கள் வலிவிழந்து, இறந்து விடும். புழுக்கள் இறந்தவுடன், உடல் கறுப்பு நிறமாக மாறி, உடலிலிருந்து கெடு மணமுள்ள நீர்மம் வெளிப் படும்.\n\nவைரஸ் நோய்கள். பட்டுப் புழுக்களைக் கிராசரி, பாலிஹெட்ரோசிஸ், கட்டினா, பிளாச்சரி என்னும் வைரஸ் நோய்கள் தாக்குகின்றன.\n\nகிராசரி. இந்நோய் போரிவினா என்னும் வைரசால் உண்டாகிறது. நோய்த் தாக்கிய புழுக்கள், மஞ்சள் நிறமாக உள்ளமையால், இதைக் காமாலை நோய் என்றும் கூறுவர். இந்நோயால் பசி குறைந்து, தோல் வலிவிழந்து, உடலின் இரு பகுதிகளுக்கிடையேயுள்ள தோல் பருத்துப் பளப்பளப்பாக இருக்கும். உடலின் உட்புறமுள்ள நீர்மம் கடினமாகிப் புழுக்கள் மஞ்சள் நிறமாக, குறைந்த உணவாலும்,தரமற்ற இலைகளை உணவாகக் கொடுப்பதாலும், தட்ப வெப்ப நிலை மாற்றங்களாலும், காற்றுக் குறைவாலும் ஏற்படும். இந்நோயைத் தடுக்க, புழுக்களை வளர்க்கும் அறைகள் காற்றோட்டத்துடனும், சீரான தட்ப வெப்ப நிலைகளுடனும் இருக்க வேண்டும். புழுக்களைக் கையாளும் போது, காயங்கள் ஏற்படாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். தரமான இலைகளையே உணவாகக் கொடுக்க வேண்டும். புழுக்கள் வளர்க்கப் படும் கருவிகளை 2% பார்மலினால் கழுவ வேண்டும்.\n\nபாலிஹெட்ரோசிஸ். இந்நோய்க் காரணி ஸ்மிதிவா என்னும் வைரஸ் ஆகும். முட்டைகள் பொரிக்க வைத்திருக்கும் போதும், உண்ணும் உணவு மூலமும், நோய் தாக்குகிறது. நோய் தாக்கிய புழுக்களுக்குப் பசி குறைந்து விடும். வளர்ச்சி குறைந்து உடலின் மேல் பகுதியில், மஞ்சள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் காணப் படும். புழுக்கள் மென்மையான வெள்ளை நிறமான மலத்தை வெளியேற்றும்.\n\nபளாச்சரி. இந்நோய் மொராடோரி என்னும் வைரசினால் உண்டாகிறது. இந்த வைரஸ் உணவுடன், வாய் வழியாகப் புழுக்களின் உடம்பினுள் புகுந்து தாக்குகின்றது.\n\nகட்டினா. இதுவும் வைரஸ் நோய் ஆகும். நோய்த் தாக்கிய புழுக்களின் தலை பளப்பளப்பாகக் காணப் படும். பசியிருக்காது, வாயினின்று வெண்ணிற நீர்மம் வெளி வரும். தொண்டைப் பகுதிக்குக் கீழ் உணவு இல்லாமல், செரிமான நீர் மட்டும் உள்ளமையால், மஞ்சள் நிறமாகவும், கண்ணாடி போன்றும் இருக்கும். பொதுவாக, வைரஸ் நோயால் தாக்கப்பட்ட புழுக்களை எரித்து விட வேண்டும். புழுக்களை வளர்க்கும் அறைகளையும், கருவிகளையும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.\n\nபூசண நோய்கள். இந்நோய்கள் வெள்ளை, மஞ்சள், பச்சை என்று மூவகை மஸ்கார்டைன் பூசணத்தால் ஏற்படுகின்றன.\n\nவெள்ளை மஸ்கார்டைன். இது பைலேரியா பஸ்சியானா என்னும் பூசணத்தால் உண்டாகிறது. இந்தப் பூசணம் தோல், சுவாசக் குழல் இவற்றின் மூலம் உள்ளே புகுந்து, புழுக்களைத் தாக்குகிறது. நோயுற்ற புழுக்களின் உடலின் குருதி கடின நீர்மமாக மாறி, பின் குருதி ஓட்டம் நின்று, புழுக்கள் இறந்து விடுகின்றன. நோய்த் தாக்கிய புழுக்களுக்குப் பசி இருக்காது. அவை சுறுசுறுப்பற்று, உடலில் எண்ணெய் படிந்த தோற்றத்துடன், வாந்தியும், பேதியும் எடுத்து உடல் கடினமாகி இறந்து விடும்.\n\nஇறந்த புழுக்களின் மேல் வெள்ளை நிற மாவு போன்ற தூள் படரும். இந்நோய் உயர் வெப்பமும், ஈரப் பசையும் உள்ள நிலையில் பெருகக் கூடியதாகையால், புழுக்கள் வளர்க்கப் படும் அறையைக் காற்றோட்டமாகவும், குறைவான ஈரப் பசையுடையதாகவும் வைத்திருக்க வேண்டும். நோயால் தாக்கப் பட்ட புழுக்களை, உடனே எரித்து விட வேண்டும். மேலும் செரசான், சுண்ணாம்புத் தூள் 1:19 என்னும் அளவில் கலந்து புழுக்களை வளர்க்கும் அறையில் தெளிக்க வேண்டும். புழு வளர்ப்பு முடிந்தவுடன், அறையை 5% பார்மலினைப் பயன் படுத்தி நன்றாகத் தூய்மையாக்க வேண்டும்.\n\nபச்சை மஸ்கார்டைன். இந்நோய் மேட்டோரைசியம் அனிநோபிலியே என்னும் பூசணத்தால் உண்டாகிறது. இந்தப் பூசணம், புழுக்களின் மேல் தோலைத் துளைத்து, உட்புகுந்து தாக்குகிறது. நோயால் தாக்கப்பட்ட புழுக்கள் உணவு உட்கொள்ளாமல், மஞ்சள் நிறமாக மாறி, இறந்து விடும். புழுக்கள் இறந்த பின், விரைந்து மண் நிறம் கலந்து, மஞ்சள் நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் மாறி, இறுதியில் பச்சை நிறமாகி விடும்.\n\nமஞ்சள் மஸ்கார்டைன். இந்நோய் ஏறத் தாழ வெள்ளை மஸ்கார்டைன் போலவே இருக்கும். இம்மூவகைப் பூசண நோய்களுக்கும், தடுப்பு முறைகள் வெள்ளை மஸ்கார்டைன் நோயின் கட்டுப்பாட்டில் கூறியிருப்பதைப் போன்றேயாகும். பட்டுப் புழுவைத் தாக்கும் பூச்சிகள் டிரைகோலைகா பாம்பிஸ். இப்பூச்சி ஈ இனத்தைச் சேர்ந்தது. இதை யூ.ஜி. ஈ என்பர். இந்தத் தாய்ப் பூச்சி 3–5 பருவப் பட்டுப் புழுக்களின் மேல் முட்டையிடும். மூன்று நாளில் முட்டைகளிலிருந்து வெளி வரும் புழு, பட்டுப் புழுவின் உடலைத் துளைத்து, உட்புறம் சென்று, அங்குள்ள கொழுப்புப் பொருள்களை உட்கொள்ளும். பின்னர், மீண்டும் 1 வாரம் கழித்துப் பட்டுப் புழுவின் உடலைத் துளைத்து, வெளி வந்து மண்ணில் விழுந்து விடும். பிறகு, கூட்டுப் புழுவாக மாறி, 2 வாரத்தில் மீண்டும், தாய்ப் பூச்சியாக வெளி வரும். இதன் உயிர் வாழ்க்கை 15–23 நாள் ஆகும். சில சமயங்களில், இது பட்டுப் புழு கூடு கட்டிய பிறகு, அதனைத் துளைத்து வெளி வரும். இவ்வாறு ஏற்படும் மிகு சேதத்தைக் கட்டுப் படுத்த, புழு வளர்ப்பு அறையின் நாற்புறமும் நைலான் வலையைக் கொசு வலையைப் போன்று அமைத்து, அதன் கீழ், பட்டுப் புழுக்களைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.யு.ஜி.ஈ. தாக்கிய புழுக்களைத் தனியே எடுத்து எரித்து விட வேண்டும். தட்டுகளில் யு.ஜி.ஈ. இன் புழுவோ, கூட்டுப்புழுவோ இருந்தால் ,அதையும் எடுத்து எரித்து விட வேண்டும். சன்னல், கதவு முதலியவற்றிற்கு நைலான் வலை அடித்துப் பட்டுப் புழு வளர்க்கும் அறைகளில், இப்பூச்சி உட்புகாமல் தடுக்க வேண்டும்.\n\nபேன். இது வளர்ந்த அந்துப் பூச்சி, கூட்டுப் புழு, பட்டுப் புழு ஆகியவற்றைத் தாக்குகிறது. பேன் தாக்கிய பட்டுப் புழுவின், உடலில் கறுப்புப் புள்ளிகள் காணப் படும். புழுக்கள் பசி குறைந்து, சோர்வடைந்து மஞ்சள் கலந்த பச்சை நிற நீர்மத்தாலான வாந்தி எடுக்கும். பேன், பட்டுப் புழுவின் உடலிலுள்ள சத்துப் பொருள்களை உறிஞ்சி, நச்சு நீர்மத்தைப் புழுக்களின் உடலில் செலுத்துவதால், பட்டுப் புழு இறந்து விடும். பட்டுப் புழு வளரும் அறைகளைத் தூய்மையாக வைப்பதால், பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.\n\nஎறும்பு. இது பட்டுப் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் தாக்கி அழிக்கும், இதனைக் கட்டுப் படுத்த, பட்டுப் புழுக்கள் வளர்க்கப் படும் தட்டுகளிலுள்ள மரத்தாங்கல் எறும்புக் குழிகளில் இட வேண்டும்.\n\nபல்லி, எலி இவை பட்டுப் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் கடித்து கூட்டின் உட்புறம் இருக்கும் புழுக்களை உண்ணும். எனவே, பட்டுப் புழு வளர்க்கப் படும் வீடுகளில், பல்லி, எலிகள் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். பட்டுப் புழுக்கள் வளர்க்கும் அறையிலுள்ள கதவு, சன்னல் முதலியவற்றிற்குக் கம்பி வலைகள் அடித்துப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். —இராபின்சன் தாமஸ்"}}