{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rtjbxvxa/", "data": {"id": "rtjbxvxa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rtjbxvxa/", "kind": "article", "headword": "அசுநான்தாசு", "romanization": "acunāṉtācu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.178288+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மராத்திய நாட்டுக் கவிஞருள் ஒருவர்.", "body_ta": "மராத்திய நாட்டுக் கவிஞருள் ஒருவர். அப்சல்கானுக்கும் சிவாசிக்கும் நடந்த போரில் அப்சல்கான் கொல்லப்பட்டார். அவ்வரலாற்று நிகழ்ச்சியை நாட்டுப் பாடலாகப் பாடியவர் அசுநான்தாசு என்ற கவிஞர், இக்கவிஞரைப் புனேயிலிருந்து பிரதாப்கர் கோட்டைக்குச் சிவாசியின் தாயார் சீசாபாய்தான் அனுப்பி வைத்தார். நாட்டுப் பாடலைப் புனைந்து பாடிக் காட்டியவரும் அசுநான்தாசே ஆவார். அந்நாட்களில் அப்சல்கான் கொலையுண்ட நிகழ்ச்சியை வெளியிட வாய்ப்புகள் இல்லை. நாட்டுப் பாடல் மூலம்தான் அதனை வெளியிட முடியும். அசுநான்தாசின் பாடல்களைச் செவிமடுத்த சீசாபாயும் சிவாசியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். சிவாசி அதற்குப் பரிசாக ஒரு கிலோ தங்கத்தையும் குதிரையொன்றையும் கொடுத்தார். இப்பாடல்கள் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றுகள் இப்பாடல்களைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாடலாசிரியர் இக்கவிதைகளில் ‘சத்திரபதி’ ‘மகராசன்’ என்னும் சொற்களால் சிவாசியை விளித்துள்ளார். இந்நாட்டுப் பாடலை அக்வொர்த்து என்பார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்."}}