{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rsyd6zc6/", "data": {"id": "rsyd6zc6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rsyd6zc6/", "kind": "article", "headword": "சுருணைகளுக்கு மின் காப்பிடும் முறைகள்", "romanization": "curuṇaikaḷukku miṉ kāppiṭum muṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:57.992099+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சுருணைகளுக்கோ, அவற்றின் பிரிவுகளுக்கோ இரண்டு முறைகளில் மின் காப்பிடலாம்.", "body_ta": "சுருணைகளுக்கோ, அவற்றின் பிரிவுகளுக்கோ இரண்டு முறைகளில் மின் காப்பிடலாம். அவை, சுருளைச் சுற்றி எழுசுருள் முறையில் நாடாவைச் சுற்றுதல், அகலமான மின் காப்புத் துண்டால் சுருளைச் சுற்றி மடித்தல் என்பன. நாடாக்களுக்கும், சுற்றப்படும் சுருளுக்கும் இடையில் அமையும் கோணத்தைப் பொறுத்து, நாடாக்கள் பல வகை அளவு மேற்படிவுடன் சுற்றப்படுகின்றன.\n\nபடம் 1 (அ) வில் உள்ளவாறு சுற்றப்படும் சுற்றிடை வெளி நாடாச் சுற்றல் மின் காப்பாக உதவாது. தற்காலிகப் பிணைப்பியாகச் சுருள் சுற்றுகளை ஒன்றாகக் கட்டவோ, முன் சுற்றிய மின் காப்பைப் பிணைத்துக் கட்டவோ மட்டும் பயன் படும்.\n\nபடம் 1 (ஆ) இல் உள்ள சுற்றிணைத்த நாடாச் சுற்றல், தொடர்ச்சியான மின் காப்பீடாக உதவாது. ஏனெனில், சுற்றுகளின் நடுவில் உள்ள மிகச் சிறு நுண் வெளிகள் வெற்றுக் கம்பியாக இருக்கும். எனவே, இந்த வகை நாடாச் சுற்றல் முறை ஏற்கனவே, நாடா சுற்றிய மின் காப்புகளுக்கு இயக்க வலிமை தரும் வெற்றுச் சுற்றலாக மட்டுமே உதவும். காட்டாக, அபிரகத் தாள், குழைவணத் துணி ஆகியவற்றால் மின் காப்பிட்ட காடிப் பகுதி மின்னகச் சுருள்களை, டபீடா நாடாவால் சுற்றணைத்த முறையில் நாடா அடித்துக் கட்டலாம்.\n\nபடம் 1(இ) இல் உள்ள மேற்படிவு நாடாச் சுற்றல் முறை, நாடாச் சுருணைக்கோ, சுருள் சுருணைக்கோ தலைமை மின் காப்பிடப் பயன் படுகிறது. நாடாச் சுற்று அடுக்குகளின் எண்ணிக்கை, பொறியின் மின்னழுத்த வரையளவைப் பொறுத்தது. மேற்படிவு முறையில், இரண்டாம் சுற்று நாடாவின் ஒரு பகுதி, முதல் சுற்று நாடாப் பகுதியின் மேல் படியும். ⅓, ½ அல்லது ⅔ பகுதி நாடா அகலம் வரை மேற்படிவு ஏற்படச் செய்யலாம். ஆனால், வழக்கமாக ½ பகுதி நாடா அகலமே மேற்படிவாகப் பயன் படுகிறது. ½ மேற்படிவுக்கு மின் காப்புக் களம் இரட்டை மடங்காக அமையும். எனவே, மின் காப்பு வலிமை தனி நாடாச் சுற்றைப் போல் இரட்டை மடங்காகும். ஒரு குறிப்பிட்ட மின் காப்பு வலிமையைப் பெற இரண்டு அடுக்கு நாடா தேவையானால், ½ மேற்படிவு முறையில் சுருளைச் சுற்றி, இரண்டு முறை நாடா அடிக்க வேண்டும். இந்நிலையில், ஒரு சுருள் பக்கம் நான்கு முறை நாடாவால் சுற்றப்படும், மின் காப்பின் இரட்டிய நாடா பல முறை அடிக்க வேண்டி நேர்ந்தால், அது காடிக் கூற்றைக் கூடுதலாக்கும். 6000V மின்னழுத்தத்திற்கு 0.13 மி.மீ. கனமுள்ள மைகா அல்லது அபிரக நாடாவால் காடிப் பகுதிச் சுருள்களுக்கு ஒன்பது அடுக்குகள் நாடா அடிக்க வேண்டும். இந்த நிலையில், சுருள் பக்க நாடாவின் வடிவ இயல் தளம் 18 நாடாவாகும் அல்லது 3.1 மி.மீ. ஆகும் (பகுத்தலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு).\n\nஒரு மின் காப்பிட வேண்டிய சுருணைச் சுருளின் நீள, அளவு அகலமான நாடாவால் சுற்றினால், மொத்த மின் காப்புக் கனம் நாடா அடிக்கும் போதிருந்ததை விடக் குறைவாக இருக்கும் (படம்1—ஈ). ஒரு சுருளுக்கு ஓர் அடுக்கு மின் காப்பு மட்டும் போதுமானால், மடிப்பு முறையில் சுருளின் இரண்டு பக்கங்களில் மட்டும் மேற்படிவு உள்ளவாறு சுற்றினால், போதும். படம் 1 (உ)இல் உள்ளவாறு இரண்டு அடுக்கு மின் காப்புப் போதுமானால், இம்மடிப்பு முறையில் சுருளின் ஒரு பக்கம் மட்டும் மேற்படிவு உள்ளபடி 2¼ சுற்றுகள் சுற்றினால் போதும். இரண்டுக்கும் மேற்பட்ட மின் காப்பு அடுக்குகள் தேவைப்படும் போதும், சுருளின் ஒரு பக்கம் மட்டும் மேற்படிவு உள்ளவாறு சுற்றினால்.போதும். எனவே, இம்முறையில் அடுக்குகள் மிகுதியானால், கனம் குறைகிறது. மேலும், ஒரே சுழலில் சுருள் முழுதும் மின் காப்பிடப்படுவதால், மின் காப்பீட்டு வேலை நேரமும் குறையும்.\n\nஅகலமான ஓரே மின் காப்புத் துண்டால் மடித்து மின் காப்பிடும் முறைக்கு உறை மின் காப்பீடு என்று பெயர். நாடாவால் நீளத்தின் நெடுகச் சுற்றி, மின் காப்பிடும் முறைக்குத் தொடர்ச்சி மின் காப்பீடு என்று பெயர். சுருளின் காடிப் பகுதிகள் நேரடியாக உறை மின் காப்பீட்டால் மின் காப்பிடப்படுகின்றன. ஓரச் சுருணைகளை நாடாவால் தொடர்ச்சி மின் காப்பீடு முறையில் காப்பிடலாம். இந்த இரு வகை மின் காப்பும் சந்திக்கும் புள்ளி, எளிதாக மின் முறிவுக்கு இலக்காக நேரும். தற்கால உயர் மின்னழுத்தப் பொறிகள் தொடர்ச்சி மின் காப்பீட்டு முறையையே பயன்படுத்துகின்றன, தாழ் மின்னழுத்தப் பொறிகளில் உறை மின் காப்பீட்டு முறையே பயன்படுகிறது.\n\nகுழைவணமிட்ட துணி நாடாக்கள் போன்ற சில வகை மின் காப்பு நாடாக்கள் மின் பொறித் தொழிலகங்களில் துணி மறையாணிகளின் வடிவங்களுக்கு ஏற்றவாறு வெப்பப்படுத்தப் படும். சுருள்களைச் சுற்றிலும் அமையும் பொருத்திகளுக்கு மின் காப்பிட நாடாக்களின் முனையில் 45° கோண ஒர வெட்டுகள் வெட்டப்படுகின்றன. இப்படி ஓரம் வெட்டிய நாடாவை இழுத்தால், அதன் மின் காப்பு வலிமை குறையும். இந்தக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக 70°—80° கோணம் வரையில் அள்ளிப் பின்னிய இழைத் திரிகள் உள்ள குழைவண நாடாக்கள் பயன்படுகின்றன. —உலோ. செந்தமிழ்க்கோதை நூலோதி. B.L. Theraja, A Text Book of Electrical Technology, Twelfth Edition, Nirja Construction and Development Co. (p) Ltd, New Delhi, 1987."}}