{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rs9qqb3z/", "data": {"id": "rs9qqb3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rs9qqb3z/", "kind": "article", "headword": "இலிவி", "romanization": "ilivi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.204362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பெரும் புகழ்பெற்ற பண்டைய உரோமானிய வரலாற்றறிஞர்.", "body_ta": "பெரும் புகழ்பெற்ற பண்டைய உரோமானிய வரலாற்றறிஞர். இவருடைய இயற்பெயர் தைட்டசு இலியியசு (Titus Livius), இலிவி (Livy) பட்டாவியம் (Patavium) என்னும் ஊரில் பிறந்தவர். பட்டாவியத்தை இக்காலத்தில் பாடுவா (Padua) என்கிறார்கள். உள்ளூரிலேயே இவருக்குச் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பிருந்தது. கிரேக்க உலகில் பயணம் செய்யவும் அரசியலில் பங்கு பெறவும் உரிய வாய்ப்பினை இவர் பெறவில்லை. கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களை இவர் விரிவாகக் கற்றவர். சிசரோ (Cicero) என்பாரின் இலக்கியம் இலிவியைப் பெரிதும் கவர்ந்தது.\n\nஇளைஞராக இருந்தபோதே இவர் வரலாற்றை எழுதும் பேரார்வத்தால் உந்தப்பட்டவரானார் நல்வினைப் பயனாக இவருக்கு உரோமாபுரியின் முதல் பேரரசரான அக்டேவியனுடன் தொடர்பு ஏற்பட்டது. அக்டேவியனை அகசுடசு சீசர் என்றும் கூறுவர். அக்டேவியன் இலிவிக்குப் பேராதரவு காட்டி கி.மு. 753 முதல் கி.மு. 9 வரையுள்ள உரோமானிய மக்களின் வரலாற்றை எழுதும் மாபெரும் திட்டமொன்றை அமைத்துத் தரும்படி தூண்டினார்.\n\nஇவர் எழுதிய வரலாறு, ‘அப் உர்பி கண்டிதா’ (Ab Urbe Condita) எனப்பட்டது. ‘மாநகர் (உரோமாபுரி) நிலைநாட்டப் பெற்றதிலிருந்து’ (From the Foundation of the City) என்று அதனைக் கூறுவர். அந்நூல் 142 தொகுதிகளைக் கொண்டது. உரோமாபுரி வரலாறு பற்றிய இவருடைய முதல் தொகுதி கி.மு. 27–25–ஆம் ஆண்டுகளில் வெளியாயிற்று. அடுத்த தொகுதிகள் அதற்குப் பின்னர் விரைந்து வெளியாயின.\n\nஇலிவியின் 1 முதல் 10 வரையிலான நூல் தொகுதிகள் கி.மு. 753 முதல் கி.மு. 293–ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளையும், 21 முதல் 45 வரையிலான தொகுதிகள் கி.மு. 219 முதல் கி.மு. 167–ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றையும் குறிப்பன. மேற்கூறிய 45 தொகுதிகளும் இன்றும் அழியாமல் நிலைத்துள்ளன. இலிவி, 142 தொகுதிகளின் சுருக்கத்தையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரு தொகுதிக்கான சுருக்கத்தைத் தவிர ஏனையவை இன்றும் உள்ளன. இலிவியின் நூற்றொகுப்புகள் பொதுவாக ஐந்தைந்து தொகுதிகளைக் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டன. தொடக்கத்தில் இவர் கி.மு. 31–ஆம் ஆண்டு வரையிலான தொகுதிகளையே வெளியிட எண்ணியிருந்தார். அவ்வாண்டில் நடைபெற்ற ஆக்டியப்போரில் (Battle of Actium) அகசுடசு வெற்றி பெற்றுப் பேரரசில் அமைதியை நிலைநாட்டினார். இவர் எழுதிய வரலாறு 133 தொகுதிகளுடன் முடிவடைந்திருந்தது. 134 முதல் 142 வரையிலுமான தொகுதிகள் கி.மு. 9–ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளன. அகசுடசு உயிருடன் இருந்த காலத்திலேயே 120 தொகுதிகள் வரை வெளியிடப்பட்டன. 121 முதல் 142 வரையிலான தொகுதிகள் அகசுடசு இறந்த ஆண்டான கி.பி. 14–ஆம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. இத்தொகுதிகள் கி.மு. 42 முதல் கி.மு. 9–ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாகையால் இத்தொகுதிகளில் அகசுடசுக்குத் தொல்லை கொடுக்கும் செய்திகள் இருந்திருக்கக்கூடும் என்றும், அதனால்தான் அவை வெளியிடப்படவில்லை என்றும் கருதுகிறார்கள்.\n\nஇலிவியின் நூல் தொகுதிகளை இன்றைய கணக்குப்படி பதிக்க வேண்டுமாயின், தொகுதி ஒன்று 300 பக்கங்கள் கொண்டதாக 24 தொகுதிகளாகப் பதிக்கலாம். இதிலிருந்து இலிவியின் பணியின் பெருமையையும் சிறப்பையும் உணரலாம்.\n\nமுதல் இருபது தொகுதிகளுக்குச் சான்றுகள் குறைவாக இருந்தமையால் அவை 535 ஆண்டுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்குகின்றன. ஆனால், 21 முதல் 30 வரையிலான தொகுதிகள் 18 ஆண்டு வரலாற்றை–அதாவது இரண்டாம் பியூனியப் போர் வரையிலான வரலாற்றை விளக்குகின்றன. பின்னால் வெளியான தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோராண்டில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை மட்டும் குறிக்கிறது.\n\nஉண்மையான அரசியல் அறிவையோ இராணுவ நுணுக்கத்தையோ இலிவி பெற்றிருக்கவில்லை. ஆனால், இவருக்குக் கதை கூறும் ஆற்றல் மிகுந்து இருந்தது. இவர் தாம் எழுதிய வரலாற்றுத் தொகுதிகளை உரைநடைக் காவியமாக எழுதியுள்ளார். இவருடைய நூல் இலக்கிய நடையைவிட அற உணர்வைக் கற்பிக்கும் ஆற்றல் கொண்டது.\n\nதாம் எழுதிய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு இலிவிக்குப் போதுமான சான்றுகள் கிடைத்தில. அதனால், அவை திறனாய்வு என்னும் உரைகல்லால் உரைத்துப் பார்க்கப்படாதவை. எனவே, குற்றங் குறைகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். தவறான செய்திகளும் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளும் இவருடைய நூலில் காணப்படுவது இயற்கை. தாம் வாழ்ந்த காலத்திற்கு முந்தைய கால நிகழ்ச்சிகளையும் நிறுவனங்களையும் பழக்க வழக்கங்களையும் தம் காலத்துச் சமூக நிலையோடும் அரசர்களோடும் ஒப்பிட்டு எழுதி, வரலாற்றில் பிழை செய்துவிட்டார் இலிவி என்று சாடுபவர்களும் உண்டு. இதனால், சில வேளைகளில் இவருடைய வரலாற்றுக் கூற்றுகள் கட்டுக்கதைகளாகவும் மாறிவிட்டன. நாட்டுணர்ச்சியின் விளைவாகத் தம் காலத்தவர்களின் குற்றங்குறைகளைச் சொல்லாமல் விட்ட குறையும் இவரிடம் உண்டு.\n\nசான்றுகள் போதுமானவையாக இருக்கும் கால கட்ட வரலாற்று நிகழ்ச்சிகளில் மேற்கூறிய குறைகள் குறைவாகவேயுள்ளன. இரண்டாம் பியூனியப் போர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிறப்பானவை எனலாம். இதற்குக் காரணம் போலிபயசின் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அவை எழுதப் பெற்றமையேயாகும்.\n\nஇலிவிக்குச் சுதந்திரம், சட்டம், மானம், நாட்டுணர்ச்சி போன்ற கோட்பாடுகளில் ஆழ்ந்த பற்றிருந்தது. எனவே, இவரிடம் அறஞ் சார்ந்த மனச் சான்று குடிகொண்டிருந்ததெனலாம். உரோமாபுரியின் பெருமையைப் பாதுகாத்த பெருமை இவருடைய வரலாற்றுக்குண்டு. இவருடைய இலக்கிய நடையும் அழகுமிக்கது. வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் இவர் மிக வல்லவர்.\n\nஇவர் மொழி தூய்மைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. இவருடைய வரலாற்றோவியம் அகசுதசின் பொற்காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் அரும்பெரும் நினைவுச் சின்னம் என்றும், இன்றும் நிலைத்துள்ள அழியாத சொல்லோவியம் என்றும் கூறலாம்.\n\nஇலிவி தம் வாழ்நாளின் பெரும் பகுதியை உரோமாபுரியிலேயே கழித்தாலும் பட்டாவியத்தில் கி.பி. 17–ஆம் ஆண்டில் காலமானார்."}}