{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rpq9a9hj/", "data": {"id": "rpq9a9hj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rpq9a9hj/", "kind": "article", "headword": "இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு", "romanization": "ilivōvu, cārci yuvaciṉiviccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.233337+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு என்பவர் முற்போக்குக் கருத்துக் கொண்ட உருசிய அரசியல் தலைவர்.", "body_ta": "இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு என்பவர் முற்போக்குக் கருத்துக் கொண்ட உருசிய அரசியல் தலைவர். இவர் 1917–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் உருசியாவில் உருவாக்கப்பெற்ற இடைக்கால அரசின் முதலமைச்சராக இருந்தார். இலிவோவு (Lvov, Georgi Yevgenievich) கி.பி. 1861–ஆம் ஆண்டு துலா (Tula) என்னும் ஊரில் பிறந்தார். இவரை இளவரசர் இலிவோவு (Prince Lvov) என்றும் கூறுவர். இவர் கி.பி. 1885–ஆம் ஆண்டில் மாசுகோ (Moscow) பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் பட்டம் பெற்றார். பின்னர், சார் மன்னரின் அரசுப் பணியாளராகச் சேர்ந்தார். சமூகப் பணியையும் பொதுப்பணிகளையும் செய்யும் நோக்குடன் கி.பி. 1893–இல் தம் பதவியை விட்டு விலகினார். பின்னர்த் துலா என்னும் ஊரில் தல ஆட்சிக் குழுவின் தலைவராகவும் அனைத்து உருசிய ஒன்றியத் தல ஆட்சிக் குழுக்களின் தலைவராகவும் பணியாற்றினார்.\n\nஇலிவோலின் தீவிரமான அரசியல் வாழ்க்கை 1906–ஆம் ஆண்டில் தொடங்கியது. இவர் முற்போக்கு அரசியலமைப்பு மக்களாட்சிக் கட்சியில் (Kadet) சேர்ந்து, உருசிய நாடாளுமன்றமான தூமா (Duma) விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசுவின் ஆட்சி 1917–இல் ஒழிக்கப்பட்டபின், புதிய இடைக்கால அரசின் அமைச்சரவைக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரண்டு மாதங்கள் ஆட்சியை நடத்திய பின், 1917–சூலை மாதம் 21–ஆம் நாள் ஆட்சியை அலெக்சாந்தர் கெரன்சுகி (Alexander Kerensky) என்பாரிடம் ஒப்படைத்துவிட்டுப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.\n\nபோல்சுவிக்குகள் (Polsheviks) 1917 நவம்பரில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டவுடன் இலிவோவு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பெற்றார். ஆனால், இவர் சிறையிலிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், 1919–இல் உருசியப் போல்சுவிக்குக் கட்சியின் பகைக் குழுத் தலைவராகிப் பாரிசில் வாழ்ந்தார். வெர்சே (Versailles) அமைதி மாநாட்டில் இவர் உருசியாவின் பேராளர் ஆவதற்கு முயன்று தோல்வியுற்றார். இவர் 1925–இல் பாரிசில் காலமானார்."}}