{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rcq5uxhr/", "data": {"id": "rcq5uxhr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rcq5uxhr/", "kind": "article", "headword": "இலெவலாசியன் நுட்பம்", "romanization": "ilevalāciyaṉ nuṭpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.555816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "முதற் கற்காலத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் ஐரோப்பாவில் கற்கால மனிதனால் கற்கருவிகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் பெயர்.", "body_ta": "முதற் கற்காலத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் ஐரோப்பாவில் கற்கால மனிதனால் கற்கருவிகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் பெயர். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசு நகரின் புறநகர்ப் பகுதியில் இலெவலாசியசு (Levalloisias) என்ற இடத்தில் முதன்முதலில் இவ்வகை நுட்பம் கொண்டு செய்யப்பட்ட சில்லுக்கருவிகள் (Flake) கிடைத்தமையால் இப்பெயர் தரப்பட்டது.\n\nபொதுவாகக் கற்கால மனிதன் தான் பயன்படுத்தும் கருவிகளை மூலக்கல்லில் (Core) இருந்து செய்தான். இத்தொழில் நுட்ப முறைப்படி முதலில் சில்லுகள் மூலக்கல்லிலிருந்து எடுக்கப்படும். இதன் நடுவில் சில்லுகள் எடுக்கப்படாத பகுதி ஆமையோடு போல இருக்கும். இதனால் அக்கருவி சில சமயங்கள் ஆமையோடு போன்றது என்று (Tortoise Core) சொல்லப்படும். இதனை மூலக்கல்லிலிருந்து பெயர்த்து எடுக்கும் பொருட்டு, மிகவும் நுட்பமான முறையில் மூலக்கல்லின் மீது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு வலிமையுடன் அடிக்கும்பொழுது சில்லுவடிவில் கருவி பிளந்து வெளிப்படும். இங்ஙனம் இக்கருவி செய்யும் முறை முன்பு பயன்படுத்திய, அதாவது மூலக்கல்லையே கருவியாக மாற்றும் நிலையினின்றும் மாறுபட்டு, மூலக்கல்லின் ஒரு சில்லையே உருவாக்கிக் கருவியாக்கிப் பிரித்தெடுத்தலேயாகும். இம்முறைக்கு இலெவலாசியன் நுட்பம் (Levolloisian Technique) என்று பெயர். இது அக்காலத்திய கற்கால மனிதனின் நுட்ப அறிவின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்கோடரிகளைத் தவிர. பட்டைக் கத்திகளும் (Blades) முனைகளும் (Points) செய்யப்பட்டன. கே.இரா."}}