{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r3fput8q/", "data": {"id": "r3fput8q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3fput8q/", "kind": "article", "headword": "சூல் பைத் தசை", "romanization": "cūl pait tacai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.471189+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கருப்பைச் சுவரின் மூன்று அடுக்குகளில், சூல் பையகத் தசையே (myometrium) பருமனானது.", "body_ta": "கருப்பைச் சுவரின் மூன்று அடுக்குகளில், சூல் பையகத் தசையே (myometrium) பருமனானது. கருப் பைக் கழுத்தில் உள்ள சூல் பையகத் தசையில் எளிய தசைத் திசுவும், பெருமளவில் நார்த் திசுவும் காணப் படுவதால், இது முரடாக இருக்கிறது. சீரற்ற நிலையில் தசை இழைகளும், நார்த் திசுவும் கலந்துள்ளன. கருப்பையின் உடலில் சூல் பையகத்தசை 10–20 மி.மீ. பருமனாக இருக்கும். பேறு காலப் பின் நிலைகளில், மூன்று அடுக்குகளையும் எளிதில் பிரித்தறியலாம். உதர உறையின் (peritoneum) அடியில் இருக்கும் வெளி அடுக்கு நீள் போக்கில் இருக்கும். கருப்பைக் கழுத்திலிருந்து செல்லும் இழைகள் முன் புறமாகக் கருப்பைக் கழுத்தின் பின்பரப்பை அடைகின்றன. இந்த அடுக்கு மிகவும் மெல்லியதாக இருப்பதால், குழந்தை பெறாத கருப் பையில் இதைக் கண்டு பிடிக்க முடியாது. குழந்தையை வெளியே தள்ளும் போது, இந்த அடுக்கு முக்கிய பணி புரிகிறது. மூன்று அடுக்குகளிலும், மிகவும் பருமனானது மைய அடுக்கேயாகும். இதில் தசைக் கற்றைகள் இணைப்புத் திசுவுடன் காணப்படுகின்றன.\n\nகுழந்தை பெறக் கூடிய பேறு கால நிலையில் எளிய தசைத் திசு மிகுதியாகக் காணப்படும். பூப்படைவதற்கு முன்பும், மாத விடாய் நின்ற போதும், இந்த அடுக்குக் குறைவாகவே காணப்படும். இதில், தசைக் கற்றைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. கருப்பைக்கான குருதி நாளங்கள் இணைப்புத் திசுக்களில் இருப்பதால், குருதி நாளங்களின் துளை, தசைச் செல்களின் சுருக்கத்தைப் பொறுத்துள்ளது. குழந்தையை வெளியேற்றும் பங்கு இருந்த போதும், குருதிப் பெருக்கைத் தடை செய்வதே இந்த அடுக்கின் பணியாகும். உள் தசை அடுக்கில் வட்ட வடிவ இழைகள் காணப்படுகின்றன. இவை உள் வாயிலைச் சுற்றியும், கருக் குழலின் திறப்புகளிலும் காணப்படுகின்றன. இது சுருக்குத் தசையாகப் பணி புரிவதாகக் கொள்ளலாம். —மு. கி.ராஜாசுப்பிரமணியம்"}}