{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/quyr8cp3/", "data": {"id": "quyr8cp3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quyr8cp3/", "kind": "article", "headword": "நெ", "romanization": "ne", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.407880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நெகிழ்வு உரு மாற்றம் (உலோகம்)", "body_ta": "நெகிழ்வு உரு மாற்றம் (உலோகம்)\n\nஒவ்வோர் உலோகத்திற்கும் ஒரு மீட்சியியல் எல்லை (elastic limit) உண்டு. அந்த மீட்சியியல் எல்லைக்குள், அவ்வுலோகத்தின் மேல் செயல் படும் தகைவு (stress), உலோகத்தினைத் தற்காலிக உரு மாற்றம் அடையச் செய்கிறது. இந்தத் தகைவு அல்லது புற விசை நீக்கப் படுமானால், அவ்வுலோகப் பொருள் தன் பழைய உருவத்தை மீண்டும் பெறுகிறது. ஆனால், மீட்சியியல் எல்லைக்கு மேல் தகைவுக்கு உட்படுத்தப் பட்ட உலோகம், ஒரு நிலையான உரு மாற்றத்தைப் பெறுகிறது. தகைவு நீக்கப் பெற்ற போதிலும், உலோகம் பழைய வடிவத்தைப் பெறுதில்லை. இந்த நிலையான உரு மாற்றம் நெகிழ்வு அல்லது குழைம உரு மாற்றம் எனப் படுகிறது.\n\nஉலோகத்தின் இந்த அடிப்புறப் பண்பு அதனை அழுத்தத்தால் உருட்டுதல் (rolling) , அடித்து வடித்தல் (forging), வளைத்தல் (bending), நீட்டல் (drawing), தகடாக்கல் (flattening), வட்டு உருவாக்கல் (coining) போன்ற பல்வேறு உலோக வடிவமைப்பு முறைகளுக்கு உட்படுத்தப் பயன் படுகிறது.\n\nகுழைம உருமாற்ற நுட்பம். உலோகங்களில் குழைம உரு மாற்றம், உலோக நழுவு (slip), முறுக்கு (twinning) ஆகிய செயல்பாடுகளினால் நிகழ்கிறது.\n\nநழுவு. உலோகப் படிகத்தின் ஒரு பகுதி, மற்றொரு பகுதியைப் பொறுத்து நிலையாக இடம் பெயர்வது, நழுவு எனப் படுகிறது. இந்த இடப் பெயர்வு, அணுக்களின் தளமொன்று (plane of atoms), மற்றொரு தளத்தின் மீது நகரும் போது நினழ்கிறது. இந்த நகருதல் நிகழும் தளங்கள் நழுவு தளங்கள் (slip planes) என்றும், நழுவுவதல் நிகழும் திசை, நழுவு திசை (direction of slip) என்றும் குறிப்பிடப் படும். நழுவு தளத்திற்கு மேலும், கீழும் உள்ள அணுத் தொகுப்பு (block of crystals) எவ்வித உருக் குலைவையும் அடைவதில்லை.\n\nநழுவு நிகழும் தளத்தில் அணுத் தொகுப்புகள் மேலும் அதிக அளவில் நகரும் போதோ, புதிய நழுவு தளங்கள் தோன்றும் போதோ உலோகம் மேலும் உருமாற்றம் அடைகிறது. பொதுவாக உலோகங்கள் அவற்றின் அணுக்கள் அமைந்திருக்கும் நிலையைப் பொறுத்துப் பல்வேறு படிக அமைப்பைப் (Crystallographic structures) பெறுகின்றன. எந்த ஒரு படிக அமைப்பிலும், ஒரு குறிப்பிட்ட தளத்தில், ஒரு குறிப்பிட்ட திசையிலேயே நழுவுதல் நிகழ்கிறது. ஒவ்வொரு படிக அமைப்பிற்கும், நழுவு தளங்களும், நழுவு திசைகளும் நன்கு வரையறுக்கப் பட்டுள்ளன. அவை எண்ணிக்கையில் ஒன்றோ, மேற்பட்டோ இருக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nமுறுக்கு. தகைவிற்கு உட்படுத்தப்பட்ட பகுதி உருக் குலைவு பெற்று, உருக் குலைவு பெறாத மற்றொரு பகுதியைப் பொறுத்துக் கண்ணாடிப் பிம்பம் போன்ற அமைப்பைப் பெறுமாறு, அணுக்கள் இடம் பெயர்வது நிகழ்ந்தால், அது முறுக்கு எனப் படுகிறது. கண்ணாடிப் பிம்பம் பெறப் படும் தளம், முறுக்குத் தளம் எனப் படுகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நிலை மாறு வெப்ப நிலை அல்லது மறு படிகமாக்கு வெப்ப நிலை. உலோகத்தை வெப்பப் படுத்திக் குழைம உருமாற்றத்தை ஏற்படுத்தினால், புற விசை குறைந்த அளவு இருந்தாலே போதுமானது. ஆனால், அறை வெப்ப நிலையில் சற்று அதிகளவில் புற விசை அளிக்கப் பட வேண்டும். வெப்பப் படுத்தும் போது, உலோக அணுக்கள் இடம் பெயர்வது நிகழ்கிறது.\n\nஅணுக்கள் இடம் பெயர்ந்து, பழைய படிக அமைப்பு மறைந்து, ஒரு புதிய படிக அமைப்பு உண்டாகும். இவ்வெப்ப நிலை நிலை மாறு வெப்ப நிலை (Critical temperature) அல்லது மறு படிகமாக்கல் வெப்ப நிலை (recrystallization temperature) எனப் படும்.\n\nசில உலோகங்களை வெப்பப் படுத்தும் போது, அவற்றின் படிக அமைப்பு மறைந்து, வேறு புதிய அமைப்பு உண்டாகிறது. இது அவ்வுலோகத்தின் இயல்பாகும். மீண்டும் குளிர்விக்கும் போது, அவ்வுலோகங்கள் பழைய படிக அமைப்பிற்குத் திரும்புகின்றன. இந்நிகழ்ச்சி மறுபடிகமாக்கல் (recrystallization) எனப் படுகிறது.\n\nகுளிர்–பணி. மறு படிகமாக்கு வெப்ப நிலைக்குக் கீழாக ஓர் உலோகப் பொருளின் மேல் செய்யும் பணி குளிர்–பணி (cold working) எனப் படுகிறது. இந்தக் குளிர் பணி திரிபு கடினத் தன்மையை (strain hardening) உலோகத்தில் உண்டாக்கும்.\n\nமேலும் அணுத் துகள்கள் (Grains) உருக் குலைவு அடைந்து, அணுத் துகளின் அமைப்பு பாதிக்கிறது. எனவே, குளிர் பணியில் நெகிழ்வு உரு மாற்றத்திற்கு உட்படுத்தப் பட்ட உலோகம் வெப்பச் செயல்பாட்டிற்கும் (heat treatment) உட்படுத்தப் படுகிறது.\n\nமிகு வெப்பப் பணி. உலோகத்தின் மீது பணி செய்யும் போதே, நிலை மாறு வெப்ப நிலையை உலோகம் அடையுமானால், அவ்வகைப் பணி மிகு வெப்பப் பணி (hot working) எனப் படுகிறது. இவ்வகைப் பணிகள் உலோகங்களின் நிலை மாறு வெப்ப நிலை அல்லது மறு படிகமாக்கு வெப்ப நிலைக்கும் மேலாகக் கொண்டு சென்று குளிரச் செய்வது, சூடாக்கிப் பதப் படுத்துதல் எனப் படுகிறது.\n\nவெப்பச் செயல்பாட்டு முறைகளில் சூடாக்கிப் பதப்படுத்துதல் எனப் படுகிறது. வெப்பச் செயல்பாட்டு முறைகளில் சூடாக்கிப் பதப்படுத்துதலும் ஒரு வகையாகும். எனவே, மிகு வெப்பப் பணியல் உலோகத்தினை நெகிழ்வு உரு மாற்றம் அடையச் செய்தால், தனிப் பட்ட வெப்பம் தேவையில்லை. —கோ. நாகேஸ்வரன்\n\nநெகிழி\n\nதற்கால வாழ்வில் மிக இன்றியமையாமை பெற்று, நெகிழி யுகம் (plastic age) என்று பெயர் வழங்குமளவிற்குப் பலவாறு பயன் படுபவை இந்தச் செயற்கைப் பொருள்கள்.\n\n1860ஆம் ஆண்டிலேயே செல்லுலாயிடு முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்ததென்றாலும், ரப்பர், உலோகம் ஆகியவற்றின் உற்பத்தி, தேவைக்குப் போதுமான அளவிற்கில்லாமையால் 1940 ஆண்டில்தான் நெகிழிப் பொருள்களை உருவாக்குவதில் அழுத்து வார்த்தல் (compression moulding), ஊதி வார்த்தல் (blow moulding), புகுத்தி வார்த்தல் (injection moulding), தாரை வார்த்தல் (extrusion dye moulding), தகடாக்கல் (lamination) போன்ற செயல் முறைகளும் செம்மை பெற்றன.\n\nவலிமை, எடை தாங்கும் திறன், லேசாயிருத்தல், வளைந்து கொடுக்கும் இயல்பு, உடையாதிருத்தல், தோற்றக் கவர்ச்சி, காற்றினாலும், வேதி வினைகளாலும் கெடாதிருத்தல், விலை குறைவு விரைவாக மறு பயனுறுத்தலுக்கிசைதல், பல தரப் பட்ட தேவைகளுக்கும் ஏற்ற பல்லுறுப்பாக்கல் (polymerisation )நிலையிலேயே மாறுதல் செய்ய வாய்ப்பளிப்பது, வேண்டிய வடிவத்தில் ஆக்க இடமளிப்பது முதலியன நெகிழியின் சிறப்புத் தன்மைகள்.\n\nசில எரியக் கூடியவை என்பதும் யாவுமே நுண்ணுயிராற் சிதைவு படாதன என்பதும் குறைபாடாகும். பிந்தைய தன்மையால் பயனுறுத்தலுக்குப் பின், விட்டெறியப் படும் நெகிழிப் பொருள் நிலத்தின் பால் நிலையாய்த் தங்கி, எதிர் காலச் சிக்கல்களுக்கு காரணமாகிறது.\n\nபல்லுறுப்பாக்கல் நிகழ்ச்சி மூன்று வகையில் நிகழலாம். அவை: சிறு மூலக் கூறுகள் சேர்க்கை வினையில் நெடுகச் சேர்வது; இரண்டு வெவ்வேறு இணைப் பல்லுறுப்பாக்கல் (copolymerisation) நிகழ்த்துவது, இவ்வாறு குறுக்க வினை மேலும் மிகுதியாகவும், குறுக்குப் பிணைப்புகளை உண்டாகும் வகையிலும் நிகழ்ந்து மிகக் கெட்டியான பொருட்களை விளைப்பது என்பன.\n\nஇம்மூவகையிலும் நிகழ்ந்த எடுத்துக் காட்டுகள், அவை தரும் விளைப் பொருட்களின் பொது வாய்ப்பாடு, பெயர் ஆகியன கீழே தரப் படுகிறது.\n\nஇவ்வாறான பல்லுறுப்பாக்கல் வினைகளுக்கு உதவக் கூடிய வினையூக்கிகள் வருமாறு:\n\nஇயங்கு உறுப்புகள் (free radicals). பெராக்சைடுகளிலிருந்து R'–O' அல்லது R–CO–O' அல்லது ஆக்சிஜன் வளிமத்திலிருந்து அல்லது Fe2+ மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கூட்டுச் சேர்த்து.\n\nநேரயனிகள் (Cations). எ–டு H*(BF₃+H₂O) புரோப்பீன் மற்றும் ஐசோபியூட்டீன் இம்முறையில் பல்லுறுப்பாகிறது.\n\nஎதிரயனிகள் (anions). ஹைட்ராக்சைடு அயனி, அல்க்கைல் அயனி (R) போன்றவை. எத்திலீன் ஆக்சைடு இம்முறையில் பல்லுறுப்பாக்கப்படும்.\n\nசைக்ளர்–நட்டா வினையூக்கிகள். ௭–டு: TiCl₄ + (C₂H₅)₃ Al விரைவாகவும், தீவிரமற்ற சூழ்நிலைகளிலும் கூடப் பல்லுறுப்பாக்கலை நிகழ்த்தும். இவை குறிப்பிட்ட திசை சார் வடிவமைப்புடன் இயக்குவது கூடுதற் சிறப்பு.\n\nகுறுக்க வினையூக்கி. பொதுவாக அமிலம் அல்லது காரம், சிறு மூலக் கூறை வெளியேற்றிப் பல்லுறுப்பாக்கலில், திண்மைப் பொருளை விளைவிக்கும். எ–டு: ஃபீனால் மற்றும் ஃபார்மால்டிஹைடு இணைப் பல்லுறுப் பாக்கலுக்கு அமிலம் உதவுகிறது. நெகிழிகளை வெப்பத்தாற் இளகும் வகை (thermoplastic) என்றும் வெப்பத்தாற் இறுகும் வகை (thermosettling) என்றும் பிரிக்கலாம்.\n\nவெப்பத்தாற் இளகுவன\n\nசெல்லூலோஸ் நைட்ரேட். ஆல்கஹால், கற்பூரத்துடன் அழுத்த வெப்பச் சூழ்நிலையில் வினைப் படுத்தினால், செல்லுலாயிடு விளைகிறது. எரியவும், உடையவும் கூடியது. மூக்குக் கண்ணாடிச் சட்டம், பந்து, பூச்சு இவற்றிற்கு இது உதவுகிறது.\n\nசெல்லூலோஸ் அசெட்டேட். மடித்துக் கட்டும் உறை, புகைப்படச் சுருள், ஒலிப் பதிவு நாடா, சீப்பு போன்றவற்றைச் செய்ய இது உதவும்.\n\nசெல்லூலோஸ் புரோப்பியோனேட், பியூட்டிரேட். செல்லூலோஸ் அசெட்டேட்டை விட வலிவான இவை வளிமக் குழாய்களுக்கும் பயன் படுகின்றன.\n\nஎத்தில் செல்லூலோஸ். மிக வலிவுடைய இது தலைக் காப்புச் செய்ய உதவும். பாலித்தீன். பை, உறை, மழைச் சட்டை, பிழி புட்டி, மின் தடைப் பொருள் ஆகியவை தயாரிப்பில், பாலித்தீன் பயனாகிறது.\n\nபாலிபுரோப்பீன். பாலித்தினை விட வலு மிகுந்தது. இது எத்திலீன் மற்றும் புரோப்பிலீன் கூட்டுப் பல்லுறுப்பாக்கலில் சிறந்த நெகிழிகளைத் தரும்.\n\nபாலிவினைல் குளோரைடு. (PVC). இது மூடும் உறை, தரை விரிப்பான், நீர்க் குழாய் மற்றும் ஆய்வகத்தில் பயனுறும் குடுவை ஆகியவை தயாரிக்க உதவுகிறது.\n\nபாலிமெத்தில் மெத்தாக்ரிலேட். இது ஒளி புக விடுவது. கண்ணாடிக்கு ஒரு மாற்றுப் பொருளாகவும், வானூர்திப் பகுதி குறி காட்டும் விளக்கு, செயற்கைப் பற்கள் செய்யவும் பயனாகும்.\n\nடெஃப்லான் வகை. இது ஃபுளுரின் மிகுந்த பாலித்தீன் இனம். பாலி டெட்ரா ஃபுளோரோ எத்தீன் என்னும் வேதிப் பெயர் கொண்டது. 275°C வரை வெப்பந்தாங்கும். வேதிப் பாதிப்புகளை எதிர்த்து நிற்கும். இது உராய்தலற்றது. உயவுப் பொருள் தேவைப் படாத எந்திரப் பகுதிகள் செய்ய இது உதவும். இதனைக் கொண்டு தொட்டி, நீரொட்டாத சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றைச் செய்யலாம்.\n\nபாலி ஸ்டைரீன். தெளிவான ஒளி புகக் கூடிய புட்டி வகை, வானொலிப் பெட்டி போன்றவற்றின் புறப் பகுதிகளுக்கும், விளையாட்டுப் பொருள்களுக்கும் இது பயனாகும்.\n\nநைலான். இது பாலி அமைடு வகையைச் சேர்ந்தது. காப்ரோலாக்டம் பல்லுறுப்பாக்கலின் விளைவாகக் கிடைப்பது நைலான்.\n\nஇது வலிமை, நிலைத் தன்மையில் முதன்மையாக இருப்பதும், நீராவியிலும் கெடாதிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. உயவுப் பொருள் தேவைப்படாத எந்திரப் பகுதி, ஆடை, அறுவை மருத்துவக் கருவி, எந்திரப் பல்லிணை, பல் துலக்கும் புருசு, தூரிகை, வலை, டயர் ஆகியவற்றைச் செய்யப் பயன் படும்.\n\nஏபி.எஸ். (ABS) அக்ரிலோ நைட்ரைல், பியூட்டாடையீன், ஸ்டைரீன் ஆகிய மூன்றும் சேர்ந்து பல்லுறுப்பாக்கப்பட்டு, வலிமையான இது கிடைக்கிறது.\n\nநிலைத் தன்மை, தாக்குதலைத் தாங்கும் திறன் கொண்டது. தலைக் காப்புத் தொப்பி, பெட்டி, குழாய் செய்ய இது உதவும்.\n\nஅக்ரிலிக்குகள். இது பாலிமெத்தில் மெத்தாக்ரிலேட்டைப் போன்றது. மெத்தில் அக்ரிலேட் பல்லுறுப்பாக்கலில் தருவது ஓர் எளிய எடுத்துக் காட்டு. தொலைக் காட்சி ஏற்புப் பெட்டியின் திரை, கைக்குப் போட்டுக் கொள்ளும் காப்புறை, பூச்சு, கோந்து வகை செய்ய இது உதவும்.\n\nடெரிலீன் போன்ற செயற்கை இழை, ரேயான் போன்ற பஞ்சின் மாற்றுருவம், செயற்கை ரப்பர் போன்றவையும் ஒரு நோக்கில் வெப்பத்தால் இளகும் நெகிழி வகையைச் சேரும்.\n\nவெப்பத்தாற் இறுகுவன இவ்வகையில் பல்லுறுப்பாக்கல் வினை மேலும் தீவிரமாக நிகழ்கிறது. ஒரு வரிசைக்கும், மற்றொன்றிற்கும் குறுக்குப் பிணைப்புகள் (Cross linking) ஏற்படுகின்றன.\n\nகிளிப்டால் அல்லது அல்கிட். மின்னழுத்தம், வெப்பம், நீர் போன்றவற்றின் பாதிப்பை எதிர்த்து நிற்க வல்லது. பெருவாரியாகப் பயன் படுவது, பூச்சு, மின் தடை, வெற்றிடக் குமிழின் அடிப் பகுதி, பல வகை மின் கருவி செய்யப் பயனாகும்.\n\nஎப்பாக்சி ரெசின். சிறந்த வெப்ப எதிர்த் தன்மை, வேதி நிலைத் தன்மை, உயரிய பசைத் தன்மை கொண்ட, இது பசை பூச்சு, மேசை மேற்பரப்பு, மின்னணுக் கருவி செய்யப் பயன் படுகிறது.\n\nபாலி யூரித்தேன். டொலுயீன்-2,4, டை அசோசயனேட், ஹெக்சா மெத்திலீன் டைஅமீனுடன் வினை புரிந்து இந்நுரை நெகிழியைத் தருகிறது. இணங்கக் கூடிய விறைப்புத் தன்மை, இத்தன்மையை விரும்பியவாறு கூட்டவும், குறைக்கவும் முடிதல், கரைப்பானை எதிர்த்து நிற்கும் திறன், அமிலம், காரம், ஆக்சிஜனேற்றி இவற்றால் கெடாமை, மெத்தை, ஒலி எழுப்பான், குளிர் பெட்டியில் வெப்பத் தடைப் பொருளாக விளங்கல், ஊர்தி இருக்கை, பெரும் தொட்டி, பெட்டி முதலியவை செய்யப் பயன் படல் ஆகியவை இதன் சிறப்புகள்.\n\nபேக்கலைட். இது விறைப்பானது. எளிதில் எரியாது. வெப்பம் மற்றும் மின்சாரத்தைத் தடை செய்ய வல்லது. பல வகை மின் கருவிப் பகுதிகள், பல கருவிகளின் கைப்பிடிப் பகுதி, கலக்கி, வானொலிப் பெட்டி போன்றவற்றிற்குப் பயன் படுகிறது. மேலும் அயனி-மாற்றியாகப் பயன்படுத்தும் போது, நீரில் உள்ள உலோக அயனிகளை ஏற்ற ஹைட்ரஜன் அயனியைப் பதிலுக்கீந்து, நீரைத் தூய்மை செய்யும் பணியில் உதவ வல்லது.\n\nயூரியா ஃபார்மால்டிஹைடு ரெசின். மிகக் கடினமான, நிறங் கெடாத, சிறந்த மின் தடைப் பொருளாகும். புட்டி மூடி, கைப்பிடி, மின் விசைக் கருவி செய்ய இது உதவுகிறது. யூரியாவிற்குப் பதிலாக, மெலமீனைப் பயன் படுத்தினால் விளையும் ரெசின் அழுக்கடையாத மேற்பரப்பு வழங்கும். நேநீர்க் கோப்பை, மேசைப் பரப்பு (ஃபார்மிகா), இவற்றைச் செம்மையாக்குகிறது.\n\nசிலிக்கான் அல்லது சிலாக்சேன். இது கரிம அடிப்படையின்றி உருவாக்கப்பட்ட பல்லுறுப்பி. தீப்பற்றிக் கொள்ளும் தன்மை இதற்குக் கிடையாது. 400°C வரையிலான வெப்ப நிலையை நன்கு தாங்கும். சிறந்த மின் தடைப் பொருளான இது, நெடிய சங்கிலி வடிவமுடைய பல்லுறுப்பி உயவுப் பொருளாகப் பயன் படும். உடலியல் தன்மை இராமையால், சிலிக்கோன் பல்லுறுப்பி பல வகைப் பயன்களோடு, செயற்கை உடலுறுப்பு, குருதிக் குழாய் போன்றவற்றையும் ஆக்க உதவும்.\n\nபாலிசல்ஃபோன். இது 150°C வரையிலான வெப்பத்தைத் தாங்கும். சிறந்த வலிமையும், திண்மையும் பெற்றது. இது தானூர்திப் பகுதி, மின்னியல் கருவி, கணிப் பொறிப் பகுதி ஆகியவை செய்யப் பயன் படுகிறது. —வி.என். வேதாந்த தேசிகன் துணை நூல். J.H. Briston and C.C.Gosselin, Introduction to plastics, Newnes–Butterworths, London, 1970; J.Harry Dubois and Frederick W.John, Plastics, Sixth Edition, Van Nostrand Reinhold Company, New york, 1981.\n\nநெகிழிக் கட்டமைப்பு\n\nபல்லுறுப்பு ரெசின்களை வார்ப்புத் தூளாக மாற்றிய நிலையில், நெகிழி வடிவமைப்புகளாக உருப் பெறச் செய்யும் முறை இதில் அடங்கும்.\n\nபல்லுறுப்பு, ரெசின்களைத் தக்க வேதிப் பொருள்களுடன் கலந்து, வார்ப்புத் தூளாக (moulding powder) மாற்றிய பின்பு, இறுதிக் கட்டமாக நெகிழி அமைப்புகளாக வடிவமைத்தலுக்குப் பல வழி முறைகள் கண்டறியப் பட்டுள்ளன. அவை: பீச்சி வார்த்தல் (injection moulding), அழுத்தி வார்த்தல் (compression moulding), பிழிந்து வார்த்தல் (extrusion), தகடாக்குதல் (lamination), ஊதி வார்த்தல் (blow moulding), அழுத்தி மெருகேற்றல் (calendering), மாற்ற வார்த்தல் (transfer moulding) என்பன அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன.\n\nபீச்சி வார்த்தல். வெப்பத்தால் இளக வல்ல நெகிழி களுக்கு ஏற்ற வார்ப்பு முறைகளுள் முதன்மையானது இது. இவ்வழி முறையில் (படம் 1) ரவை அல்லது தூள் வடிவிலான ரெசினைச் சூடாக்கப் படும் உருளையொன்றின் ஒரு முனையிலிட்டு, மற்றொரு முனையில் அமைக்கப்பட்ட சிறு துளை வழியே பீச்சி, வார்ப்பு அச்சின் கொள்ளிடத்தை நிரப்புதல் அடிப்படை இயக்கமாகும்.\n\nஇன்றைய நெகிழி உலகில் வெப்பத்தால் இறுக வல்ல வகையையும், இவ்வழி முறை மூலம் வார்ப்பதற்கு வசதி உள்ளது. இளக வல்ல நெகிழிகளுக்கும், இறுக வல்ல நெகிழிகளுக்கும் வேறுபாடு உள்ளது. வெப்பமூட்டும் உருளையின் வழியே வார்ப்புத் தூளைச் செலுத்துவதற்கு 10000 முதல் 25000 Ib /in² அழுத்தம் தேவை. உருளையின் வெப்ப நிலை வரம்பு பொதுவாக 95–315°C வரையானாலும், வெப்பத்தால் இளக வல்ல நெகிழிகளுக்கு 175–315°C வரம்பும், வெப்பத்தால் இறுக வல்ல நெகிழிகளுக்கு 175°C க்குக் குறைவாகவும் நிலை நிறுத்தப் படும். இவ்வழி முறைகளில் கட்டுப் படுத்தப்பட வேண்டிய துணை அலகுகளாக வார்ப்புத் தூளின் வெப்ப நிலை, வார்ப்பின் வெப்ப நிலை, பீச்சு அழுத்தம், வார்ப்பு அச்சுக் குழி நிரப்பும் வேகம், பீச்சப் படும்போது, ரெசினின் பாகு தன்மை, ஒவ்வொரு முறையும் புகுத்தப் படும் பொருளின் அளவு, ஒவ்வொரு வார்ப்புக்கும் தேவைப் படும் காலம் ஆகியவை விளங்குகின்றன. பீச்சி வார்த்தல் முறையில் உந்து தண்டு, எதிரீட்டுத் திருகு என இரு உத்திகள் கையாளப் படுகின்றன. திருகின் ஆழம், தூள் புகுத்தப் படும் இடத்திலிருந்து பீச்சும் நுண் துளை வரை சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வரும். இத்திருகு மென்மையூட்டும் அமைப்பாகவும், பீச்சும் அமைப்பாகவும் ஒருங்கே செயல் படுகிறது. பெய் குடுவையிலிருந்து (hopper) நுண் துளை வரை இடு பகுதி (feed zone) என முப்பிரிவுகள் உண்டு. பின்னோக்கி பாய்வைத் தவிர்க்கும் தடுக்கிதழ் (Value) வாயிலாக, உருகிய ரெசின் நுண் துளையை அடைகிறது. நுண் துளைக்குப் பின்னால் உள்ள பகுதி நிரம்பியவுடன் விளையும் அழுத்தம், சுழலும் திருகைப் பின்னோக்கித் தள்ளுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் திருகு மீண்டும் முன்னோக்கித் தள்ளப் படுகிறது. இம்முன்னோக்கி விசையின் தாக்கத்தினால் மூடப் பட்ட வார்ப்பச்சுக் குழி நிரப்பப் படுகிறது. வார்ப்பு அச்சு திறந்திருக்கையில், பீச்சு துளை வழியாகக் கசிவைத் தடுப்பதற்கான ஒரு தடுக்கிதழ் அமைக்கப் பட்டுள்ளது. ரெசின் பொருள் திருகின் உராய்வினாலும், வெளியிலிருந்து செலுத்தப் படும் வெப்பத்தினாலும் உருக்கப் படுகிறது. பீச்சுகையில் அழுத்தம் உயர் நிலையில் இருப்பதால், வார்ப்புத் தூள் பிதுங்கி வெளி வராமல் தடுக்கும் பொருட்டுப் போதுமான அளவு பிடிப்பு விசையும் கூடுதலாகத் தேவைப் படும். எந்திர வகை, நீரியல் வகை, இரண்டும் இணைந்த வகை என மூவகைப் பிடிப்பு அமைப்புகள் உள்ளன, வார்ப்புத் தகட்டில் இடம் பெறும் குழிகளின் பெரும் எண்ணிக்கை பின் வரும் காரணிகளைப் பொறுத்தது. அவை எந்திரம் ஒரு முறையில் உட்செலுத்த வல்ல ரெசினின் அளவு (shot capcity), எந்திரத்தின் பிடிப்பியின் திறன், எந்திரத்தின் நெகிழ்வு ஏற்றும் தன்மை, வழி முறையின் மொத்த செலவு என்பன. பொதுவாக, எந்திரத்தின் ரெசின் உட்செலுத்து அளவில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்படாமல் புகுத்துவது நன்மை பயக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> Q_1 = \\frac{\\frac{2}{3}\\cdot S - W_r}{W_p}\n\nஇங்கு Q₁ = வார்ப்புத் தகட்டில் குழிகளின் எண்ணிக்கை S = எந்திரத்தின் பிசின் செலுத்தும் அளவு Wr = வார்ப்பு நுழைவு (Sprue), ஓடு பாதை (runner) ஆகியவற்றின் நிறை Wp = வார்க்கப் பட்ட பொருளின் நிறை\n\nநவீன பீச்சி வார்த்தல் எந்திரங்கள் கணிப்பிகளையும், மனித எந்திரங்களையும் கொண்டு இயக்கப் படுகின்றன. வார்ப்பச்சு நீரோட்டத்தால் குளிர்விக்கப் படுகிறது. வார்க்கப்பட்ட பொருளை அமைப்பிலிருந்து விடுவிப்பதற்கு, வெளித் தள்ளும் ஊசிகள் (ejector pins) பயன் படுகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nபீச்சி வார்த்தல் முறையின் கூடுதல் நன்மை. இரு முறையில் உயர் வகை அமைப்புகளை விரைவாக உருவாக்கலாம். பிற வழி முறைகளுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் செலவு குறைவு. வார்க்கப்படும் பொருளின் புறப் பரப்பு செம்மையாக இருக்கும். தானியங்கு அமைப்பாக மாற்றுதல் எளிது. மேலும், சிக்கலான வடிவமைப்புகளையும் இதில் உருவாக்கலாம்.\n\nகுறைபாடுகள். எந்திரம் விலையுயர்ந்ததாகையால், நிறைந்த எண்ணிக்கையில் பொருள்களைத் தயாரித்தலே சிறந்தது. தரமான பொருளைத் தயாரிப்பதற்கு வழி முறையை மிகக் கவனமாகச் செயல்படுத்த வேண்டும்.\n\nஅட்டவணை\n\nஅமுக்கி வார்த்தல். பொதுவாக வெப்பத்தால் இறுக வல்ல நெகிழிகள் இச்செயல் முறையின் மூலம் தயாரிக்கப் படுகின்றன. குறிப்பாகஃபீனால் ஃபார்மால்டிஹைடு, யூரியா–ஃபார்மால்டிஹைடு, மெலமின்–ஃபார்மால்டிஹைடு ஆகியன இவ்வகை வார்ப்புக்கு உட்படுத்தப் படுகின்றன. இவ்வார்ப்பு அச்சு துருத்தும் பகுதி மேல் பாதியாகவும் <!---- Words repeated ---> குழிப்பகுதி கீழ்ப் பாதியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. குழியில் ரெசினை நிரப்பி, துருத்தும் மேல் பகுதியை அதன் மீது பொருத்தி, அழுத்த வேண்டும். வார்ப்பு அச்சைச் சற்றே சூடு படுத்தினால், வார்ப்பு உருவாதல் எளிதாகும். உருகிய ரெசின் வார்ப்பின் குழிவான பகுதிகள் யாவற்றிலும் நிரம்புகிறது. ஓரிரு நிமிடங்களுக்கு சூடு படுத்திக் குறுக்குப் பிணைப்புகள் உருவாதலை முழுமையாக்க வேண்டும். பின்பு, வார்க்கப் பட்ட பொருள் வார்ப்பச்சிலிருந்து புறந்தள்ளப் படுகிறது. பிதுங்கி உறைந்த பகுதிகளைப் (flash) பின்பு வெட்டி, அகற்றி விடலாம்.\n\nவார்ப்புக் குழியின் ஆழம் வார்ப்புத் தூளின் அடர்த்தியைப் பொறுத்ததாகும். குறை அடர்த்தித் தூளுக்கும், மிகை அடர்த்தித் தூளுக்கும், வெவ்வேறு அமைப்புகளைப் பயன் படுத்த வேண்டும். செலவினம் மிகுந்த மாற்றங்களைப் புகுத்தாமல், ஒரே வகை அமைப்பை இரு வேறு துகள் வகைகளுக்குப் பயன் படுத்த வேண்டுமாயின், வார்க்கப் படும் அடிப்படைப் பொருள்களின் பாய்ம இயல்புகளை நன்கு அறிய வேண்டும்.\n\nதெறிப்பு (பிதுக்கம்) முறை (Flash), தெறிப்பு அற்ற முறை (Positive), பகுதித் தெறிப்பு (Semi Positive) முறை (படம். 3) என அமுக்க வார்ப்பு முறை மூன்று வகைப் படும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தெறிப்பு முறையில் வார்ப்புக் குழியில் நிரம்பியது போக மிகையளவு ரெசின் அழுத்தும் தண்டுக்கும், குழிக்கும் இடையே அமுக்கப் பட்டு, பிதுங்கி வெளியேறுகிறது. வார்க்கப்பட்ட பொருளை வெளியே எடுத்த பின்பு, பிதுக்கப் பட்ட பகுதியை வெட்டி அகற்றி விடலாம்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> தெறிப்பு அற்ற முறையில் மிகையளவு ரெசின் ஒரு வடிகால் குழியில் ஒதுக்கப் படுகிறது. துணியினால் நிரப்பப் பட்ட, தாக்கு வலிமை தாங்க வல்ல, இறுக வல்ல நெகிழி அமைப்புக்களுக்கு இவ்வழி முறை ஏற்றதாகும். இவ்வகை அமுக்க வார்ப்பு அச்சில் குழியை நிரப்புவதற்குத் தேவையான துகளைத் துல்லியமாக எடையிட்டு நிரப்ப வேண்டும்.\n\nபகுதித் தெறிப்பு முறையில் வார்ப்புத் தூளை ஓரளவு அமுக்கும் போது, தூளின் ஒரு பகுதி பக்கவாட்டுச் சந்துகளில் புகுந்து விடுகிறது. மேலும் முழுமையாக அமுக்கும் போது, வார்ப்பு அச்சினுள் அகப்பட்டுள்ள தூள் வடிவமைப்பைப் பெறும். இதில் மேல் நோக்கிய தெறிப்புத் தோன்றுவதால், எளிதில் அகற்ற இயலும்.\n\nஅமுக்க வார்த்தலின் கூடுதல் நன்மை. மெல்லிய (<.15 செ.மீ.) அமைப்புகளை மடிப்பும் (Warpage), பரிமாணத் தடுமாற்றமும் இன்றித் தயாரிக்க இயலும்; நுழை வாயில் தழும்புகள் தோன்றுவதில்லையாதலால், சிறு அமைப்புகள் தயாரிப்புக்கு இம்முறை ஏற்றதாகிறது; சுருக்கம் குறைவாகவும் சீர்மையாகவும் உள்ளது. 1.5 கி.கி. நிறைக்கு மேற்பட்ட பொருள்களின் தயாரிப்புக்கு இம்முறை சிக்கனமானது; சிக்கலான வடிவமைப்புக் கொண்ட பொருள்கள் எளிதாகக் தயாரிக்கப் படுகின்றன; உயர் தாக்கு வலிமை கொண்ட பொருள்களைத் தயாரித்தல் எளிது; வடிவமைத்தலும், கட்டுமானம் செய்தலும் எளிதாகையால், முதற் கட்டச் செலவினம் குறைவாகும்; இழை வலிவூக்கப் பட்ட வார்ப்புகளில் தாக்கு வலிமை பெருமளவில் பெறப் படுகிறது. பிற மூடிய வார்ப்பு வகை அமைப்புகளில் வலிவாக்கப் பயன் படும் இழைகள் உடையக் கூடும். அவ்வாய்ப்பு இம்முறையில் குறைவாகும்.\n\nவார்ப்பு வாயில் (sprues), எச்சம் ஓடு பாதை (runners) ஆகியன இல்லாமையால், வார்ப்புத் தூள் இழப்பு மிகவும் குறைவு; பீச்சி வார்த்தல், மாற்றி வார்த்தல் போன்ற அமைப்புகளுக்குத் தேவைப் படுவது போல், உயர்ந்த அளவு பிடிப்பு அழுத்தம் தேவைப் படுவதில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திற்கு, நிறைந்த எண்ணிக்கையில் அமைப்புகளைத் தயாரிக்கலாம். வார்ப்புக் குழிகளின் அரிப்பு நிகழ்வு குறைவாதலால், வார்ப்புப் பராமரிப்பு வேலையும் குறைவாகும்.\n\nகுறைபாடுகள். வார்ப்புத் தூளின் மீது, வார்ப்பின் மேல் பகுதி அமுக்கப் படுகையில், செருகும் பகுதிகள் சிதைவடையக் கூடும்; மாற்ற வார்ப்பு, பீச்சி வார்த்தல் முறைகளைப் போலன்றி, இவ்வழி முறையில் கனமான வார்ப்படங்கள் பதப்படுத்தலுக்கு நீண்ட நேரம் ஆகும். ஒவ்வொரு குழியும் தனித் தனியே நிரப்பப்படுவதால், இவ்வழிமுறைகளுக்குச் செயல் நேரம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. பிற முறைகளைப் போலல்லாமல், இம்முறையில் தெறிப்பு அகற்றம் நீண்ட நேரம் பிடிக்கும் கட்டமாகிறது.\n\nமாற்றி வார்த்தல். ஃபீனாலிக், மெலமின், பாலியூரிதேன் போன்ற இறுக வல்ல நெகிழிகளுக்கு இவ்வழிமுறை சிறந்ததென அறியப் பட்டுள்ளது (படம் 4). அமுக்க வார்த்தலுக்கும், இம்முறைக்கும் இடைப் பட்ட முதன்மையான வேறுபாடு வார்ப்பு அச்சுக் குழிகளில் வார்ப்புத் தூளை நிரப்பும் உத்தியைப் பொறுத்தது. இம்முறையில் வார்ப்பு அச்சுக் குழிகளுக்கு வெளியே உள்ள ஒரு சிறு அறையில் வார்ப்புத் தூள் நிரப்பப் பட்டு, அமுக்கும் போது, குழிகளில் நிரப்பப் படுகிறது. குழிகளில் அடை பட்டிருக்கும் காற்று, தக்க இடங்களில் அமைக்கப் பட்டுள்ள துளைகளின் வழியாக வெளியேற்றப் பட வேண்டும். வார்ப்புத் தூளின் தன்மையையும், வார்க்கப் படும் அமைப்பின் குறுக்களவையும் பொறுத்து, பல்லுறுப்பாக்கலுக்கும், பதப்படுத்துதலுக்கும் தேவைப் படும் காலம், வெப்ப நிலை, அழுத்தம் ஆகியன அமைகின்றன. அமுக்கி வார்த்தலைப் போலன்றி, இம் முறையில் தெறிப்பு கூடுதலாக இல்லை. ஒரே அமைப்பைப் பல எண்ணிக்கையில் தயாரிக்கலாம். அமுக்கி வார்த்தலில் தயாரிக்க இயலாத, சிக்கலான வடிவமைப்புக் கொண்ட சிறு உறுப்புகளை இவ்வழி முறையில் தயாரிக்கலாம்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nபிழிந்து வார்த்தல். நெகிழிப் பொருள்களைத் தொடர்ச்சியாகவும், நீளமாகவும் உருவாக்கும் முறை, 'நெகிழிக்கான அடிப்படை ரெசினைச் சூடாக்கியோ, தக்க கரைப்பானில் கரைத்தோ, மென்மையூட்டி, மென்மையான பிசினைத் தேவைப்படும் அமைப்பின் வடிவத்தில் அமைந்த துளையச்சு வழியே அழுத்தத்தில் செலுத்துதல் இம்முறையின் அடிப்படை இயக்கமாகும் (படம் 5). பிழிந்து இழுக்கப் பட்ட நெகிழி, ஒரு குளிர்விக்கும் ஊடகத்தின் வழியே இட்டுச் செல்லப் படுகிறது. வெப்பமும், இடு பொருள் நிறையும் துல்லியமாக இருத்தல் தேவையாகும். பெய் குடுவையில் இடப் படும் தூள், எந்திரத்தினூடே சென்று, அச்சுத் துளை வழியே வெளியே இழுக்கப் படுகிறது. உருளை வடிவினாலான எந்திரத்தில் ஒரு நீள் திருகு சுழன்று கொண்டிருக்கும். சுழலும் திருகு, தூளை ஒரு முனையிலிருந்து, மற்றொன்று எடுத்துச் செல்வதுடன், திருகுக்கும், உருளையின் உட்சுவருக்கும் இடைவெளி குன்றியிருப்பதால், உராய்வு மூலம் தூளை உருக்கவும் செய்கிறது. மின் தடை வழிச் சூடேற்றுதலும் நிகழ்த்தப் படுகிறது. அச்சுத் துளையின் வடிவமைப்பைப் பொறுத்துத் தண்டு, குழாய், பட்டை, படலம் ஆகியவற்றைச் சமச் சீர்மையான குறுக்களவிலும், தடிமனிலும் தயாரிக்கலாம். பிற நெகிழிக் கட்டமைப்பு முறைகளில் தயாரிக்க முடியாதவையும், செலவினம் மிகுந்து என ஒதுக்கப் பட்ட வடிவமைப்புக்களையும் இம்முறையில் தயாரிக்க இயலும். புதிய பிழிந்து வார்த்தல் உத்திகளால் 150 செ.மீ. குறுக்களவு கொண்ட வடிகால் குழாய்கள் தயாரித்தல் தற்போது எளிதாகி விட்டது.\n\nதகடாக்கல். காகிதம், துணி, கண்ணாடி, கித்தான், மெலிந்த மரப்பலகை ஆகிய ஏதேனும் ஒன்றை, வெப்பத்தால் இறுகும் நெகிழியொன்றின் கரைசலில் புகுத்தினால், பற்றுப் பொருளின் இரு புறமும் நெகிழி ரெசின் ஒட்டும் (படம் 6). இவ்வாறு, ரெசின் பூசப்பட்ட தகடுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, இவ்வடுக்கின் மீது அழுத்தத்தைச் செலுத்தினால், தகடுகளுக்கு இடையே குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, இவ்வடுக்கு முழுவதும் ஒரே தகடாக மாற்றமடைகிறது. புறப் பரப்பில் தூய ரெசினாலான ஒரு மெல்லிய அடுக்கு இடம் பெறுவதால், இத்தகடுகள் வழவழப்பான கண் கவர் தோற்றம் பெறுகின்றன. ரெசின் ஒளி புக விடும் பண்பு கொண்டதாக இருப்பின், அடித் தளம் கண்ணுக்குப் புலப் படும்.\n\nதகடு வகை நெகிழிகள் ஏடுகளாகவும், தண்டுகளாகவும், குழாய்களாகவும் (படம் 7) தயாரிக்கப் படுகின்றன. சரியான குறுக்களவு கொண்ட ஓர் அடித் தண்டின் மீது, தயாரிக்கப் பட்ட தகட்டைச் சுற்றி, பதப் படுத்திய பின்பு, அடித் தண்டை அகற்றினால், குழாய் கிடைக்கும். தடித்த தகடுகளால் உருவாக்கப் படும் பற்சக்கரங்கள் உலோகப் பற்சக்கரங்களுக்கு இணையான திறன் கொண்டிருக்கும்.\n\nதட்டையாக இல்லாமல், எளிய, வளைவான அமைப்புகளைக் கொண்டிருக்கும் படகுகள், பேருந்துகள், சரக்கு ஊர்திகள் பாதுகாப்புக் கவசங்கள் ஆகியன குறைந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்ப நிலைகளிலும் தயாரிக்கப் படுகின்றன. உலோகம், கடினமான மரம், துகள் பலகை ஆகிய ஏதேனும் ஒன்றினாலான வார்ப்பு அச்சின் மீது, அடுக்கடுக்காக ரெசினில் முக்கப் பட்ட மெல்லிய கண்ணாடித் துணியைப் போர்த்தித் தேவையான தடிமனுக்குக் கொணர வேண்டும். தகடாக்கப் பட்ட நெகிழியமைந்த வார்ப்பு அச்சு ஒரு பைக்குள் இடப் பட்டு, பையிலிருந்து காற்று வெளியேற்றப்cபடுகிறது. வெளிக் காற்றழுத்தம் தகட்டை வார்ப்பின் மீது அமிழ்த்துகிறது. அறை வெப்ப நிலையிலோ, சற்றே உயர் வெப்ப நிலையிலோ பதப் படக் கூடிய நெகிழிகளாக இருப்பின், வெற்றிட அமைப்பு தேவையிராது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nவெற்றிட வழி ஆக்கல் (Vacuum torming or thermoforming) வடிவமைக்கப் பட்ட வார்ப்பு அச்சின் மீது நெகிழித் தகடு வைக்கப்பட்டு, வார்ப்புக்கும், தகடுக்கும் இடையில் வெற்றிடம் உருவாக்கப் படுகிறது. இதன் விளைவாக, நெகிழி அற்ற அமைப்பு அடைகிறது. நெகிழியை மென்மையாக்கும் பொருட்டுச் சூடு படுத்தப் படுகிறது. அமைப்பின் வடிவம் உருப் பெற்ற பின், அச்சு குளிர்விக்கப் பட்டு வெற்றிடம் விடுவிக்கப் படுகிறது. ஒரு முறை முழுமையாக நிகழ்த்துவதற்குச் சில மணித் துளிகளே ஆகுமாதலால், இவ்வழிமுறை பெரிதும் பரிந்துரைக்கப் படுகிறது.\n\nஊதி வார்த்தல். பழங்காலத்தில் கண்ணாடியாலான பொருள்கள் தயாரிக்க இவ்வழி முறை பயனாகிறது. உள்ளீடற்ற பொருள்களான புட்டி, கலன் ஆகியவற்றை உருவாக்க, இது சிறந்த முறையாகும். நெகிழியினாலான தண்டு வார்ப்பு அச்சில் புகுத்தப் பட்டு, அச்சு மூடப் படுகிறது. பொருளினூடே காற்றை அழுத்தத்தில் செலுத்தினால், மென்மையான திண்மமான நெகிழி வார்ப்புச் சுவர்களின் மீது படிகிறது. வார்ப்பு அச்சை விலக்கிப் பிரித்தால், உருப் பெற்ற பொருள் வெளிப் படுகிறது.\n\nவார்ப்பு அச்சில் புகுத்தப் படும் பகுதி உருகிய நெகிழித் தண்டு (Parison) பிழிந்து வார்த்தல் முறையில் தயாரிக்கப் படுகிறது. வார்ப்பு அச்சு வெப்பக் கடத்துத் திறன் மிகுந்த, வெப்பத்தால் பதப்படுத்தப் பட்ட அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கும். வடிவமைப்பில் எளிதாகவும், உருவில் பெரிதாகவும் உள்ள மோதல் தடுப்புத் தண்டு (bumper beam), தானுந்தி வளிமத் தொட்டி ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு இது ஏற்ற முறையாகும். பிழிந்து வார்த்தல் முறை மூலம் தயாரிப்பதை விட. இம்முறை மூலமாகப் பெரிய வடிவமைப்புகளை உருவாக்கலாம். ஊதி வார்த்தலுக்கு மூன்று அடிப்படை உத்திகள் உள்ளன. அவை பரிமாற்ற திருகி (reciprocating screw), மொங்கான் சேர்ப்பி (ram accumulator), சேர்ப்பு முனை (accumulator head) என்பன. தொடர்ச்சியான பிழிந்து வார்த்தலில் தயாரிப்பதை விடவும், பெரிய, கனமான பொருள்களை இவ்வுத்திகளால் தயாரிக்கலாம். 90 செ.மீ. அங்குல அகலமும், 240 செ.மீ. நீளமும் கொண்ட உறுப்புகளைத் தயாரிக்க இவ்வழி முறையில் தற்போது வசதி உள்ளது. ப,ட,U,S, போன்ற வடிவங்களை இதில் வார்க்க இயலும்.\n\nஅழுத்தி மெருகேற்றல். தொடர்ச்சியான இச்செயல் முறையில் சுழலும் உருளைகள் இரண்டுக்குமிடையே மென்மையாக்கப் பட்ட ரெசினைப் புகுத்தி, அழுத்தும் போது, சீர்மையான தடிமன் கொண்ட ஏடாக (தகடாக) வெளி வருகிறது. ஒருங்கிணைந்து உருளும் இச்சக்கரங்களுக்கிடையே உருகிய ரெசின் ஈர்க்கப்பட்டு, அணைக்கப் படுகிறது. மிகக் குறைந்த பிழை வரம்பு கொண்ட சீர்மையான தடிமன் கொண்ட ஏடுகளை விரைவாகத் தயாரிப்பதற்கு இம்முறை சிறந்ததாகும். 2 மீ. அகலம் வரை கொண்ட இளக வல்ல நெகிழி ஏடுகளை, நிமிடத்திற்கு 100 மீ. என்னும் விரைவில், இம்முறையால் தயாரிக்க இயலும். மறு புறத்தில், 0.05மி. மீட்டருக்கும் குறைவான தடிமனில் ஏடுகளைத் தயாரிக்கவும் இயலும். இம்முறையில் கட்டுப் படுத்த வேண்டிய அலகுகள், உருளையின் விட்டம், உருளையின் சுற்று வேகம், உருளைகளுக்கு இடைப்பட்ட தொலைவு, ஏடு இழுக்கப் படும் வேகம் ஆகியனவாகும்.\n\nசுழற்றி வார்த்தல் (rotomolulding). மடிப்பும், உள்ளீடுமற்ற எவ்வமைப்பையும், இச்செயல் முறையால் தயாரிக்கலாம். ஊதி வார்த்தல் முறை மூலம் தயாரிக்க இயலாத முழுமையாக மூடப் பட்ட வடிவங்களைக் கூட இம்முறை மூலம் தயாரிக்கலாம். ரெசினை, வார்ப்பு அச்சினுள் புகுத்தி, மூடப்பட்ட வார்ப்பு அச்சை ஓர் அடுப்பிலிட்டுச் சுழற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு அச்சுத் திசைகளில் சுழற்றினால், தூள் நன்கு நெகிழ்ந்து, சிட்டம் கட்டிப் பிறிதோர் அறையில் குளிர்விக்கப் படுகிறது. குளிர்விக்கப் படும் போதே, சுழற்சி தொடர்ந்து நிகழ்த்தப் படுகிறது. இவ்வழி முறைகளுக்கு அழுத்தம் மிகக் குறைவாகவே தேவைப் படுகிறது. உருவாகும் அமைப்பு சமச் சீர்மை பொருந்தியதாகவும், தகைவு எச்சம் அற்றதாகவும் உள்ளது. சுழற்சி வார்ப்புக்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. எனவே, இதில் பயன் படுத்தப் படும் ரெசின்கள் வெப்பம் தாங்க வல்லதாக இருத்தல் தேவை. நைட்ரஜனை உட்செலுத்திக் காற்றை வெளியேற்றுவதால், இந்நிலையிறக்கம் தவிர்க்கப் படுகிறது.\n\nகால் பந்து, மிதவை, தொட்டி, கலன் பெட்ரோல் தொட்டி ஆகியன இச்செயல் முறையால் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவில், இம்முறை மூலம் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப் படும் அமைப்பு மேல் நிலை நீர்த தொட்டியாகும். பிற வார்ப்பு அச்சுகளும் விலை குறைவானவை, விரைவாகச் செயல்படாமை ஒன்றே இவ்வமைப்பின் குறையாகும். வார்ப்பில் உள்ளகம், வெளியுறை ஆகியவற்றை இரு கட்ட வார்த்தலில் உருவாக்கலாம். ரெசினைத் திறன் மிக்க முறையில் சூடு படுத்துதலும், சுழற்சியினால் சமச் சீராகச் சிதறச் செய்தலும்இவ்வழி முறையின் சிறப்பியல்புகளாகும்.\n\nநெகிழி வடிவமைப்பில் கவனிக்க வேண்டியவை. நெகிழி உலோகங்களுக்கு நேரடிப் பதிலீட்டுப் பொருள்கள் இல்லையாததால், வார்ப்புக்கான பொருள் தேர்ந்தெடுத்தலும், வடிவமைப்பு அடிப்படைகளும் இத்துறையில் பெரிதும் மாறுபட்டுள்ளன. ஒன்றிப் போன நிறம், வேதி அரிமான எதிர்ப்பு, எடையற்ற தன்மை, வெப்ப மற்றும் மின் காப்பீட்டுப் பண்பு ஆகியன நெகிழியின் கூடுதல் நன்மைகளாகும். பாய்மத் தன்மை, பகுதிப் பாய்மத் தன்மை கொண்ட பொருளை வார்ப்பு அச்சின் குழிகளில் நிரப்பி, குறித்த வடிவத்தில் திண்மமாக்குகையில், சில அடிப்படைச் சிக்கல்கள் எழுகின்றன. முதலில் ரெசினைத் தக்க அளவில் புகுத்திக் குழி நிறையச் செய்தல் வேண்டும். இரண்டாவதாக, ரெசினில் அடை பட்டிருக்கும் காற்றை அகற்ற வேண்டும். மூன்றாவதாகக் திண்மமாக உறைகையில், பொருளில் தோன்றும் சுருக்கத்தைத் துல்லியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக, வார்ப்பு உறைந்த பின்பு, அச்சிலிருந்து எளிதில் வெளியேற்றப் பட வேண்டும். உருவாக்கப்படும் அமைப்பு, அதன் பணித் தேவையை நிறைவு செய்வதாக அமைதல் வேண்டும். இழு வலிமை, தாக்கு வலிமை, பரிமாண நிலைப்புத் தன்மை, நிறம் ஆகியன வரையறுக்கப் பட வேண்டும். வார்ப்பு அச்சின் தளத்தின் இரு மருங்கிலும், சற்றே சாய்வான தளமாக அமைத்து, வார்ப்பை அச்சிலிருந்து விடுவிப்பதற்கு வசதி தேவை. வார்ப்பு அச்சில் (undercuts) இயன்ற வரை, குழிகளைத் தவிர்க்கப் பட வேண்டும். இவ்வகை வார்ப்பை அகற்றுவதற்கு வார்ப்பின் இரு பாதிகளையும், விலக்கும் திசைக்குச் செங்குத்தான திசையில் அசையக் கூடிய பகுதிகளை உருவாக்க வேண்டும்.\n\nவார்ப்பின் அனைத்துப் பகுதிகளையும், சமச் சீர்மையுடன் ரெசின் பாய்வை அறுதியிடவும், அமைப்பின் மூலைகளில் உட்தகைவுச் செறிவுகளைத் தவிர்க்கவும், போதுமான எண்ணிக்கையில் செருகித் தடுப்புகளை (fillets) அமைக்க வேண்டும். இதனால், மெல்லிய, நெளிவான, அழகிய உறுப்புகளைத் தயாரித்தல் எளிதாகும். வெளியில் தெரியும் விளிம்புகளை மழுங்கச் செய்தல் பயன் தரும். 0.26–0.38 மி.மீ. ஆரம் கொண்ட மழுங்கிய விளிம்புகளைப் பயன்படுத்தினால், வார்ப்பின் பக்க முனைகள் பெயர்ந்து விழுதலைத் தவிர்க்க இயலும். மின்னமைப்புகளுக்கான நெகிழி வார்ப்புகளில், கூரான முனை மூலை, விளிம்பு ஆகியன மின்னழுத்தச் சரிவுகளைக் கூடுதலாக்கும் தன்மை படைத்தவை. தடித்த மூலைகளையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வளிமங்கள் இப்பகுதிகளில் சேகரிக்கப் படலாம். பதப் படுத்துதலும் சரி வர நிகழாது போகலாம்.\n\nசிறும (தகுந்த) பரிமாண நிலைப்பு (±0.08 மி.மீ) அச்சுப் பிரிப்புக் கோட்டிற்கு இணையான திசையில் அறுதி செய்யப் படல் வேண்டும். இதற்குச் செங்குத்துத் திசையில் பரிமாண நிலைப்பை 0.26 மி.மீ. வரை விட வேண்டும். நிரப்பி பயன் படுத்தப் படுகையில், நெகிழியின் புறப் பரப்பில் ஒரு மெல்லிய தூய ரெசின் படலம் பளபளப்புடன் அமைந்திருக்கும். விடு படும் வரம்புகள் (எல்லைக் கோடுகள்) கூரிய முனைகளில் இடம் பெறுமாறு அமைத்தால், நிரப்பி துருத்திக் கொண்டிருப்பது வெளித் தெரியாது. நெகிழி குறைந்த மீட்சிக் குணகம் கொண்டவையாதலால், பெரிய, தட்டையான உறுப்புகள் விறைப்புக் குறைந்தனவாகவுள்ளன. தேவைப் படும் அளவுக்கு விறைப்புத் தன்மையைக் கூட்டுவதற்கு மேடுகளை அமைக்கலாம் . (ribbing), புள்ளி தெளித்த அல்லது யாப்பமைந்த புறப் பரப்புகளில் கீறல்கள் வெளியே தெரியாமல் இருப்பதுடன், கண் கவர் தோற்றத்தையும் அளிக்கின்றன. வார்ப்பு அச்சுகளில் உள்ள ஊசி அமுக்க வார்த்தல் அமைப்பில், அச்சை மூடும் போது வளைகிறது. இதன் நீளம் விட்டத்தின் இரு மடங்குக்கு மேற்படாமல், இருத்தல் வேண்டும். எனினும், மாற்றி வார்த்தலில் இந்த விகிதம் 5 வரை இருக்கலாம்.\n\nவார்ப்புக்குப் பின்பு, மறையிடப் பட வேண்டிய துளைகள் இருப்பின், வார்ப்பினைத் தயாரிக்கும் போதே, துளையிட வேண்டும். இதனால், துளையின் வெளி விளிம்பில் ரெசின் பெயர்தல் தவிர்க்கப் படுகிறது. மறையிடப் பட்ட துளையின் விட்டம் 6.35 மி.மீட்டருக்குக் குறைவாயின், வார்த்தலுக்குப் பின்பு, மறை கடைதல் பயன் தரும். துளையின் விட்டம் 6.35 மி.மீட்டருக்கு மேற்படின், மறையை வார்ப்பிலேயே உருவாக்குதல் அல்லது செருகு அமைப்புப் புகுத்துதல் பயன் தரும். வார்ப்பு அச்சிலேயே மறை கடையப் படுவதால், வார்க்கப்படும் அமைப்பைத் திருகி வெளியே எடுப்பதற்கு வசதியாக, வார்ப்பின் பகுதி அகற்றப் படக் கூடியதாக இருக்க வேண்டும். —மே. ரா. பாலசுப்பிரமணியம் துணை நூல். Benjamin W. Niebel, Alan B. Draper, Richard A. Wysk, Modern Manufacturing Process Engineering, McGraw–Hill Book Company, New york, 1989; William F. Smith, Principles of Materials Science Engineering, McGraw–Hill Book Company New York, 1896; E. Paul Degarmo, J. Temple Black, Ronald A. Kohser <!---- See the book first page at https://i.ibb.co/0RkgKdkD/Delete.jpg, the book at https://dcetind.weebly.com/uploads/9/1/6/3/9163431/solutions_manual_-_materials___processing_in_manufacturing__demargo_.pdf---->, Materials and Processes in Manufacturing, Sixth Edition, Macmillan Publishing Co, Newyork, 1984; V.R. Gowariker, et.al., Polymer Science, Wiley Eastern, New Delhi, 1986.\n\nநெஞ்சுக் கரிப்பு\n\nபின்னொழுக்கு உணவுக் குழல் அழற்சி எனப்படும். நெஞ்சுக் கரிப்பில் (heart burn) உணவுக் குழல் புண்ணாகும் அல்லது இறுக்கமடையலாம். இரைப் பையிலிருந்து பெப்டிக் நீர்ம அமிலம், எதிர்க்களித்துச் சென்று, உணவுக் குழலில் புண்களையும், இறுக்கத்தையும் உண்டாகுகிறது. மீண்டும், மீண்டும் வாந்தி எடுக்கும் போது, நெஞ்சுக் கரிப்பும் நின்று விடுகிறது. உணவுக் குழலிலுள்ள சுருக்குத் தசைகளின் (sphincter) திறன் குறைவால், இந்நிலை உண்டாகிறது. இரைப் பை, உதர விதானத் துளைகள் வழியாக மேல் நோக்கி மார்புக் கூட்டினுள் செல்லும் போது, இந்நிலை உண்டாகிறது.\n\nநெஞ்சுக் கரிப்பு எனப் படும் இதய எரிச்சல் இந்நோயின் அறிகுறி. மேலும், வயிற்றின் நீர்மமும், வாயினுள் எதிர்க்களிக்கிறது. கீழ் நோக்கிக் குனிதல், சுமை தூக்குதல், வயிற்று உள்ளழுத்தம் மிகையாதல் ஆகிய இந்நிலைகளில் நோய் உண்டாகிறது. இதனால், விழுங்கலில் கடினம் ஏற்படலாம். மார்பு நடு எலும்பின் (Sternum) பின்பக்கமாகத் தோன்றும் இவ்வலி, இதய வலி போன்று தெரியும்.\n\nபிதுக்கமடைந்துள்ள பையில் காணப் படும் சிறிய புண்ணால் கூடக் குருதி ஒழுக்கு ஏற்படலாம். உணவுக் குழல் உள் நோக்கி, பேரியம் மாவு விழுங்கல் முறை ஆகியவற்றால், நோய் அறுதியிடல் உறுதியாகிறது. இரைப்பைப் புண்களுக்குக் கொடுக்கப் படும் மருந்துகளுக்கும், உணவும் மருத்துவமாக அமைகின்றன. நோயாளி, தலையணை வைத்து, ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்திருக்க வேண்டும்; தேவையிருந்தால் அறுவை செய்யலாம். —அ. கதிரேசன் துணை நூல். K. Chaudhry, Medicine for Students, Seventh Edition, Jaypee Brothers, New Delhi, 1984.\n\nநெஞ்சுக் காயங்கள்\n\nஇவை பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பொறுத்து, மிக எளிய காயங்களாகவோ, சிக்கலான காயங்களாகவோ இருக்கலாம். ஓரளவு ஊடுருவியோ, முழுக்க ஊடுருவியோ, காயம் இருக்கலாம். எவ்வளவு எளியதாக இருந்த போதிலும், மார்புக் கூட்டின் உறுப்புகளுக்கும், வயிற்றின் உறுப்புகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். குத்துக் காயங்களோ, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களோ பெருங்கேடு உண்டாக்கா. மார்புக் கூட்டில் இயல்பாக ஃபுளுரா உறையில் குருதி தேங்கும். ஆகவே, தேக்கமடையும் குருதியை அகற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.\n\nவெடி குண்டு வெடித்து, அதிலிருந்து வரும் துணுக்குகளால் மிகவும் சிக்கலான காயங்கள் உண்டாகலாம். இந்நிலையில், மார்புச் சுவரின் சிதைவு மிகையாக இருக்கும். அழுக்கான துணித் துண்டுகளும் உட்செல்லலாம். நுரையீரல் பாதிப்பும், சிதைவும் ஏற்படலாம். மேலும் மீடியாஸ் டைன் உறுப்பு, உதர விதானம், வயிற்று உறுப்பு ஆகியவையும் பாதிக்கப் படலாம்.\n\nபெரும்பான்மையான நோயாளிகளுக்கு அறுவை தேவைப் படுகிறது. இயன்ற வரை, விரைவில் அறுவை செய்ய வேண்டும். உள்ளேயோ, வெளியேயோ கட்டுப் படுத்த முடியாத குருதிப் போக்கு ஏற்பட்டால், மார்புக் கூட்டைத் திறந்து பார்க்க வேண்டும். மூச்சுக் குழல் வழியாக உணர்வகற்றப் பட்டு, போதிய அளவில் மூச்சு விடுவதற்கும் மூச்சுக் குழல் சுரப்புகளை அகற்றவும் ஏற்பாடு செய்யலாம். மார்பின் காயத்தைச் சீர் செய்து, ஒடிந்த விலா எலும்புத் துணுக்குகளை அகற்றி, குருதி வெளிப் பட்டுக் கொண்டிருக்கும் விலா இடைக் குருதி நாளங்களுக்குத் தையலிட்டு, குருதிப் பெருக்கை நிறுத்த வேண்டும். ஃபுளுரா உறைக் குழிவையும் சோதித்துப் பார்த்துத் தேவையிருந்தால், மார்புத் திறப்பு அறுவை நிகழ்த்தலாம். தேங்கிய குருதி, குருதி உறைக் கட்டி, தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும். தேவையான நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுக்க வேண்டும். அறுவைக்குப் பின்னர், நுரையீரல்கள் முழுமையாக விரிவடைய, மூச்சுப் பயிற்சிகளைக் கையாள வேண்டும். —அ. கதிரேசன் துணை நூல். A.J.Harding Rains and H.David Ritchie, Bailey & Love's Short Practice of Surgery, Seventeenth Edition, H.K.Lewis & Co. Ltd., London,1977.\n\nநெஞ்சு வளை\n\nஒரு வட்டப் பரிதியின் (Circumference) மேல் உள்ள ஒரு நிலைப் புள்ளி, இவ்வட்டத்தின் விட்டமுடைய மற்றொரு வட்டத்தைச் சுற்றி நழுவாமல், உருளும் போது ஏற்படும் வளை வரை, நெஞ்சு வளை (Cardioid) எனப்படும். அமைப்பில், இவ்வளை வரை இதயம் போலிருப்பதால், நெஞ்சு வளை எனக் கூறப் படுகிறது.\n\nஇரு வட்டங்களின் விட்டங்கள் ‘a’ அளவுடையதாக இருப்பின், நெஞ்சு வளையின் சமன்பாடுகள் செவ்வக ஆய முறையில் (x²+y²-ax)² = a²(x²+y²) எனவும், போலார் ஆய முறையில் r=a(l ± cosθ) எனவும், குறிக்கப் படுகின்றன. புற உருள் வளை (epicycloid), லிமேகான் (Limacon) வளை ஆகியவற்றின் தனிச் செறிவுடைய வளை, நெஞ்சு வளை என நிறுவப் பட்டுள்ளது. இதன் பரப்பு \\frac{3}{2}\\pi a^2 என்றும், வளை வரையின் நீளம் 8a என்றும் கணக்கிடப் பட்டுள்ளன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nr=a(1 – cos θ)வின் வளை வரை\n\nY–அச்சின் இடப் புறம் அமையும் —பங்கஜம் கணேசன்\n\nநெட்டாங்கு\n\nவான நெட்டாங்கு, புவிப் பரப்பு நெட்டாங்கு என நெட்டாங்கை (longitude) இரு வகைப் படுத்தலாம்.\n\nவான நெட்டாங்கு. சூரியத் தோற்றப் பாதையின் (ecliptic) மேல் உள்ள மேட முற் புள்ளியிலிருந்து (first point of Aries) துருவத்தையும், விண் மீனையும் இணைக்கும் குத்து வட்டத்தின் அடி வரையிலுள்ள அளவு வான நெட்டாங்கு என்பதாகும். இது λ என்னும் எழுத்தினால், பொதுவாகக் குறிக்கப் படும்.\n\nசூரியனின் ஆண்டு இயக்கத் திசையிலேயே வலஞ் சுழியாக (கிழக்காக) λ அளக்கப் படும். படத்தில் C,L சூரியனின் தோற்றப் பாதை; M,KSM என்னும் குத்து வட்டத்தின் அடி; τ மேட முதற்புள்ளி rM வான நெட்டாங்கின் அளவாகும். r, S,M மூன்றுமே நிலையானதால், நெட்டாங்கும் நிலையாக இருக்கும்.\n\nபுவிப் பரப்பு நெட்டாங்கு. புவியின் வட, தென் துருவங்கள் வழியாக, புவியின் நடு வரைக்குக் (terrestrial equator) குத்தாகச் செல்லும் பெரும் வட்டங்கள், நெட்டாங்கு வட்டங்கள் (circles of longitude) எனப் படும். புவியின் மேல் உள்ள ஓர் இடத்தின் வழியாகச் செல்லும் நெட்டாங்கு, அந்த இடத்தின் புவி உச்சி வட்டம் (terrestrial meridian) என்றும் குறிப்பிடப் படும்.\n\nகிரீன்விச் நாட்டின் வழியாகச் செல்லும் நெட்டாங்கு 0° நெட்டாங்கு என்றும், அதற்குக் கிழக்கே 15°, 30°, 45°… என 180° வரையிலும், மேற்காக 15°, 30°, 45°, … 180° வரையிலும் குறிக்கப் பட்டிருக்கும் புவி கோள வடிவத்திலிருப்பதால், கிழக்கு, மேற்காகக் குறிக்கப் பட்டிருக்கும் 180° நெட்டாங்கு ஒரே நெட்டாங்கைக் குறிக்கிறது.\n\nபுவி மேற்கிலிருந்து கிழக்காகத் தன் அச்சை ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் 24 மணி ஆகிறது. அதாவது 360° சுற்ற 24 மணி நேரமானால், ஒரு மணிக்கு 15° வீதம் புவி சுழல்கிறது. கிரீன்விச்சிலிருந்து கிழக்காக உள்ள இடங்களில் 15°க்கு ஒரு மணி வீதம் (1மணி). கிரீன்விச் மணியை விட முன்னதாகவும், மேற்கில், அதே அளவு பின்னதாகவும், நேரங் காட்டும். கப்பலிலோ, வான ஊர்தியிலோ பயணம் செய்பவர்களுக்கு, கிழக்காகச் சென்று 180° அடையும் போது, 12 மணி நேரம் முன்னதாகவும், மேற்காகச் சென்றால் 12 மணி நேரம் பின்னதாகவும் இருக்கும். எனவே, 180° நெட்டாங்கை அனைத்துலக நாட்கோடு (international date line) எனக் குறிப்பிட்டு, எப்பக்கத்திலிருந்து வந்தாலும், அக்கோட்டை அடையும் போது, நேரத்தை கிரீன்விச் நேரப் படித் திருத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நெட்டாங்கு, இயற்கையாகவே நாடு, தீவு வழியாகச் செல்லாமல், பசுபிக் பெருங்கடல் வழியாக, ஓரிரு சிறு தீவுகள் வழியாக மட்டுமே செல்கிறது.\n\nகிரீன்விச் நாட்டிலிருந்து ஓரிடத்தின் நெட்டாங்குத் தொலைவினைக் கணக்கிட்டு, அதிலிருந்து அந்த இடத்தின் நியம நேரம் (Standard time) கணக்கிடப் படுகிறது. —பங்கஜம் கணேசன்\n\nநெட்டி\n\nஇதனைக் கிடைச்சி, சடை, சிடை, நெல்லி தள்ளி என்று கூறுவதுண்டு. இதன் தாவரப் பெயர் ஏஸ்கினோமேன் இண்டிகா (Aeschynomene indica) ஆகும். லெகுமினோசிக் குடும்பத்தைச் சேர்ந்த, இது கால்வாய், ஏரி, குளங்கள் ஆகியவற்றின் ஓரங்களில் வளர்ந்து காணப் படும். மியான்மரிலும், இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் தென் மாநிலங்களிலும் இதனைக் காணலாம். கடற்கரை மட்டத்திலிருந்து மலைப் பகுதியில் 750 மீ. உயரம் வரையில் காணப் படும் இச்செடியின் தக்கை விலை குறைந்தது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> அமைப்பு. நேராக 1மீ. உயரம் வளரும் இதன் தண்டு மென்மையானது; மரக் கட்டை போன்றது. கிளைத்து வளரும் தன்மை கொண்டது. இலைகள் 10 செ.மீ. நீளமுள்ளவை. நீள் சதுரமான ஒவ்வோர் இலையிலும் 15–25 இரட்டைச் சிற்றிலைகள் இருக்கின்றன. இலையோரம் முழுமையானது. இலைக் காம்பு 7 மி.மீ. நீளமுடையது. இலையடிச் செதில்கள் 1 செ.மீ அளவிலும், நுனி கூராயுமிருக்கும். மஞ்சரி 2 செ.மீ. நீளத் துணர் (raceme) வகையாகும். சில சமயங்களில், பூக்கள் தனியாக உண்டாகியிருக்கும். மஞ்சரிக் காம்பு பளபளப்பாக 1.5 செ.மீ. நீளத்திலிருக்கும். பூக்காம்பு 5 மி.மீ. நீளமானது. ஒவ்வொரு பூவின் குறுக்களவும் 6 மி.மீ. நீளமானது.\n\nபுல்லி வட்டக் குழல் மயிரற்ற 3.5 செ.மீ. நீளத்திலிருக்கும். புல்லி வட்டம் ஆழமான இரு கதுப்புகளுடனிருக்கும். மேல் கதுப்பு 4 மி.மீ. நீளமும் கீழ்க் கதுப்பு 5 மி.மீ. நீளமும் உடையன. அல்லிகள் மஞ்சள் நிறங்கொண்டவை. கொடி அல்லி மி.மீ. அளவிலும், இறகு அல்லி 6X3 மி.மீ. அளவிலும், படகு அல்லி 7X3 மி.மீ. அளவிலும் நீள் சதுரமாக மழுங்கியோ, கூர்மையாகவோ இருக்கும். மகரந்தத் தாள் கற்றைகள் (5 + 5) 4 மி.மீ. நீளமானவை. மகரந்தப் பைகள் ஒரே சீரானவை. உள்பக்கம் வளைந்திருக்கும். சூல் பை காம்புடன் கூடியது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூல்கள் கொண்டது. சூல்தண்டு நூல் போன்றிருக்கும்.பூக்கள் ஜனவரி - மார்ச்சு மாதங்களில் உண்டாகின்றன. கனி நீண்ட காம்பு கொண்டது. 2–10 தட்டையான, ஒரு விதை கொண்ட எளிதில் பிரிக்கக் கூடிய இணைப்புகள் கொண்டது. காய்கள் ஆண்டு முழுவதும் காணப் படும். விதைகள் ஏறத் தாழச் சிறு நீரக வடிவிலிருக்கும்.\n\nபயன். இதன் இலைகளை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிடலாம். இச்செடி ஆண் விந்துவை அழிக்கும் இயல்புடையது. —கோ. அர்ச்சுனன்\n\nநெட்டிப் பகுதி\n\nதாவர அச்சின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நெட்டிப் பகுதி (pith) ஆகும். இதைத் சுற்றிலும் சாற்றுக் குழாய்க் கற்றைகள் காணப் படும். பெரும்பாலான தண்டுகளிலும், வேர்களிலும் காணப் படும். பூக்கும் விதைத் தாவரங்களுள் இது இராத தாவரமே இல்லை எனலாம். சைலாப்கிடு, லைகாப்சிடு, ஸ்ஃபினோஃபல்லம், சில பெரணிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நெட்டிப் பகுதி காணப் படுகிறது. பெரணி வேர், பல ஒரு வித்திலைத் தாவர வேர், இரு வித்திலை தாவர வேர் ஆகியவற்றிலும் இப்பகுதி உள்ளது.\n\nசில வகையான வேர்களின் மையப் பகுதியில் ஆக்கு படைத்திசு (xylem tissue) காணப் படும். ஒரே அச்சில் அதன் அளவு, வளர்ச்சி வேகம் ஆகியவற்றைப் பொறுத்து, நெட்டிப் பகுதி அமையும்; அவற்றுள், பெரிய அச்சுகளில் இது இருக்கும். நெட்டித் திசுவில், பெரும்பான்மையான பாரன்கைமாச் செல்கள் நீள் வரிசைகளில் அமைந்திருக்கும். நுனி ஆக்கு திசுவில் இருந்து, நெட்டித் தாய்ச் செல்கள் குறுக்குப் பகுப்பு அடைவதால், மேற்கூறிய நீள் வரிசைச் செல்கள் அமைகின்றன. நெட்டிப் பகுதியின் விளிம்புப் பகுதியில் உள்ள சிறிய செல்கள், தடித்த செல் சுவர்களுடன் கூடியவை. இவை மையத்தில் உள்ள செல்களை விட நீண்ட காலம் உயிரோடு இருக்கின்றன. இத்தகைய செல்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வரம்பு இருந்தால், அப்பகுதி மைய உறை (medullary sheath) அல்லது மையச் சுற்றுப் பகுதி (peri medullay zone) எனப் படும்.\n\nபொதுவாக, நெட்டிச் செல் சுவர்கள் மென்மையானவை; சில அச்சுகளில் உள்ள நெட்டிச் செல்களின் தடித்த செல் சுவர்கள் மென்மையானவை; நாளடைவில் அவை தடித்துக் கெட்டியானவையாகவோ, மென்மையான செல் சுவர்களுடனோ இருக்கும். சில அச்சுகளில் உள்ள பித் செல்கள் தடித்த செல் சுவர்கள் உடைய ஸ்கிளீரன்கைமாச் செல்களாகக் காணப் படும். பெரணிகளின் தண்டுகளில் நெட்டியின் உட்பகுதி ஸ்கிளீரன்கைமாச் செல்களாலும், வெளிப் பகுதி பாரன்கைமாச் செல்களாலும் ஆக்கப் பட்டிருக்கும். சில இரு வித்திலைத் தாவரத் தண்டுகளில் உள்ள நெட்டிப் பகுதியில், ஸ்கிளீரன்கைமாச் செல்கள், பாரன்கைமாச் செல்களுடன் கலந்து அடுத்தடுத்துக் காணப் படும். இது தடுப்புச் சுவரோடு கூடிய நெட்டிப் பகுதி எனப் படும். வளர்ச்சியினால், பாரன்கைமாச் செல்கள் கிழிந்து விட்டால், ஸ்கிளீரன்கைமாப் பகுதியும், செல்கள் அற்ற பகுதியும் மாறி, மாறி அமைந்திருக்கும். இது அறைகள் உடைய நெட்டிப் பகுதி எனப் படும். ஒரு சில தாவரங்களில், நெட்டி முழுவதும் செல்கள் எவையுமில்லாமல் இருந்து, கணுப் பகுதியில், ஸ்கிளீரன்கைமா அல்லது பாரன்கைமாச் செல்களுடைய நெட்டிப் பகுதி காணப் படும். ஒரு வித்திலைத் தாவரங்களின் கணுப் பகுதியில் சாற்றுக் குழாய்க் கற்றைகள் உள்ளன.\n\nஉருவம். படி மலர்ச்சிக் கீழான சாற்றுக் குழாய்க் கற்றைத் தாவரத் தண்டுகளின் நெட்டியும், பல தாவரங்களின் வேர்களில் உள்ள நெட்டியும் உருளை வடிவானவை. உயர் வகைச் சாற்றுக் குழாய்க் கற்றைத் தாவரங்களின் நெட்டி குறுக்கு வெட்டில் கோணங்கள் பெற்றிருக்கும் அல்லது விண் மீன் வடிவாக இருக்கும். நெட்டிப் பகுதியின் வடிவம் அவ்வத்தாவரத்தின் இலையடுக்கத்தைப் பொறுத்தது. ஓக் மரத்தின் நெட்டி, ஐந்து கோணங்களும், அல்டர் மரத்தின் நெட்டி மூன்று கோணங்களும் கொண்டது: சாற்றுக் குழாய்க் கற்றைகளைப் பெற்ற தண்டுகளில், அவற்றிற்கிடையே ஆரப் போக்கில், நெட்டிக் கதிர்கள் (rays) அல்லது மையக் கதிர்கள் (medullary rays) உள்ளன. இவை பெரும்பாலும் பாரன்கைமாத் திசுவால் ஆகியவை இப்பகுதியில் உயிருள்ள சிறிய செல்கள் நெருங்கி அமைந்தவை. இதனால் நெட்டியப் பகுதியும் தண்டின் வெளி வட்டப் பகுதியும் இணைக்கப் படுகின்றன.\n\nஉட்பொருள்கள். நெட்டிப் பொருளகள் சேமிக்கப் பட்டிருக்கும் சுரப்புச் செல்கள், சுரப்பு வழிகள், பால் செல்கள் ஆகியன நெட்டிப் பகுதியில் உள்ளன. இரண்டாம் குறுக்கு வளர்ச்சி மிகுந்துள்ள தண்டுகளில், சாற்றுக் குழாய்த் திசுக்கள் உண்டாவதால், நெட்டிப் பகுதி அமைவதில்லை. ஆனால், வெளி விளிம்பு நெட்டிப் பகுதி உயிருடன் இருக்கும். சில தாவர நெட்டிச் செல்கள் உயிரற்றவையாக உள்ளன.\n\nபணிகள். நெட்டிப் பகுதியின் சிறப்பான பணி உணவு சேமிப்பது. அதில் ஸ்கிளீரன்கைமா செல்கள் அமைந்திருந்தால், தாவரத்திற்கு வலிமை தரப் பயன் படும். மையக் கதிர்ப் பகுதியில், பாரன்கைமாச் செல்கள் இருந்தால், நெட்டிப் பகுதியிலிருந்து புறணிப் பகுதிக்கு, உணவுப் பொருள் எடுத்துச் செல்லப் படுகிறது. இரு வித்திலைத் தாவரத் தண்டுகளில் உள்ள மையக் கதிர்ப் பகுதியில் உள்ள கதிர்ச் செல்கள் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறிச் சாற்றுக் குழாய்க் கற்றைகளுக்கு இடையே, கட்டைச் செல்களாக (Cambium) மாறி, இரண்டாம் நிலை சுறுக்கு வளர்ச்சிக்குப் பயன்படும். —கே.ஆர். பாலச்சந்திரகணேசன்\n\nநெட்டிலிங்கம்\n\nஇதைக் கொடி மரம் என்றும் கூறுவதுண்டு. இதன் தாவரப் பெயர் பாலியால்தியா லாஞ்சிஃபோலியா (Polyalthia longifolia) ஆகும். இதன் இணைப் பெயர்கள் உவேரியா லாஞ்சிஃபோலியா (Uvaria longifolia). குவாட்டேரியா லாஞ்சிஃபோலியா வகை பெண்டுலோசா (P.Longifolia var Penduosa) என்னும் மரத்தில் கிளைகள் தொங்கிக் கொண்டிருக்கும். உயரமாக வளரும் இம்மரத்தை, இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் பொதுவாகக் காணலாம். மும்பையில் ஏறக் குறைய ஒரு நூற்றாண்டுக் காலமாக வளர்க்கப் பட்டு வருகிறது. கிளைத்துப் பெரும் பரப்பில் படராமல் தழைத்து வளரும் இம்மரம் செங்குத்தாக வளர்வது குறிப்பிடத் தக்கது. இம்மரக்கட்டை மஞ்சள் நிறமாகவோ, மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகவோ இருக்கும். இதன் மரம் மென்மையானது. இம்மரத்தில் உற்பத்தியாகும் விதைகள், ஓராண்டிற்கு நல்ல முளைப்புத் திறனுடன் இருக்கும். விதைகளைப் பாலித்தீன் பைகளில் வைத்து, நீர் ஊற்றி வளர்த்து இரண்டாண்டு நிரம்பியதும், அக்கன்றுகளை நட்டு, இம்மரத்தை இனப் பெருக்கம் செய்வது வழக்கம். பெரும்பாலும் ஜுன்–ஆகஸ்டு மாதங்களில் கன்றுகளை நடுவர்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> அமைப்பு. நெட்டிலிங்க மரம் 20 மீ. உயரமும் 1.4 மீ. பருமனும் பெற்றிருக்கும். இதன் மரப் பட்டை வழவழப்பாகச் சாம்பல் நிறத்தில்2 செ.மீ. கனமுடையது. பசுமை மாறா இம்மரத்தின் இலைகள் கண்ணாடி போன்று பளபளப்பாக இருக்கும். இலைகள், ஈட்டி வடிவில் அலை அலையான ஓரத்தைக் கொண்டிருக்கும். பூக்கள், நட்சத்திர வடிவிலும், மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் உள்ளன. 5–6 எண்ணிக்கையில் கொத்தாக உண்டாகும். பூக்களைப் பிப்ரவரி–ஏப்ரல் மாதங்களில் காணலாம். ஒவ்வொரு பூவும் 2–5 செ.மீ. நீளமுடையது. மெல்லிய காம்புகள் கொண்ட பூக்களின், புல்லி இதழ்கள் மூன்று. அல்லி இதழ்கள் 3X3 ஒழுங்கற்றவை. மலர்  இதழடி (torus) குவிந்திருக்கும். ஆப்பு வடிவான பல மகரந்தத் தாள்கள் காணப் படுகின்றன. சூலிலைகள் (carpels) பல, முட்டை போன்றவை. சூல்கள் திசுவறைக்கு ஒன்று அல்லது இரண்டு காணப் படும். காய்கள் பச்சை நிறமானவை. பழங்கள் முட்டை வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில். ஒவ்வொரு பழத்திலும், ஒவ்வொரு விதையைக் கொண்டிருக்கும்.\n\nபயன். நெட்டிலிங்கம் நிழல் தரும் மரங்களுள் ஒன்றாகும். இதன் தழை அடர் பச்சை நிறமாக நீண்டும் உள்ளமையால், விழாக்களில் எழிலூட்டப் பயனாகிறது. இம்மரம் நேராக மிக உயரமாக வளர்வதால், கொடிகள் கட்டுவதற்குப் பயன் படுகிறது. வீட்டின் முகப்புகளிலும், பூங்காக்களிலும் இம்மரத்தில் கிளைகள் தொங்கி வளரும். இதன் மரத்திலிருந்து பீப்பாய், மேளம், பெட்டி, மரப் பலகை, பென்சில் மற்றும் தீக்குச்சி போன்றவற்றைத் தயாரிக்கலாம். இதன் பழங்களைப் பறவை, வௌவால், குரங்கு முதலியன உண்ணுகின்றன. இம்மரப்பட்டையைக் குடிநீர் செய்து தர, அதிசாரம், சீத பேதி, பெரும்பாடு முதலிய நோய்கள் நீங்கும். பட்டையை ஒரு நாள் காடியில் ஊற வைத்துக் கிடைத்த நீரால், புண்களைக் கழுவ அவை விரைவில் குணமாகும். இதன் மரப்பட்டை காய்ச்சலைக் குணமாக்குவதாக அறியப் படுகிறது. இப்பட்டை அசோக மரப் பட்டையுடன் கலப்படம் செய்து விற்கப் படுகிறது. —கோ. அர்ச்சுனன்\n\nநெட்டைக் காலிப் பறவை\n\nவீட்டுக் குருவி அளவுள்ள நெட்டைக் காலிப் பறவை கரும் பழுப்பு நிறமுடையது. இதன் மார்பு பழுப்புப் பட்டைகளால் ஆனது. அலகு வலிமையற்றதும், வால் நீளமாகவும் காணப் படும். உடல் வெள்ளை இறகுகளால் போர்த்தப் பட்டிருக்கிறது. இணை இணையாகவும், தனித்தும், வெற்று நிலங்களில் சுற்றித் திரிகிறது. இந்தியாவிற்குப் பனிக் காலத்தில், நெட்டைக் காலிப் பறவை வலசை வருகிறது. ஒவ்வொன்றும், உருவ அமைப்பிலும், பழக்க வழக்கங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப் படும். இந்தியா முழுவதிலும், பாகிஸ்தானிலும், இலங்கையிலும், மியான்மரிலும் இது பரவியிருக்கிறது. நிறங்களின் அடிப்படையில் மூன்று இனங்களாக இதைப் பிரிக்கலாம். நான்காம் இனமொன்று பனிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகிறது. வறள் நிலங்களிலேயே வாழும் இது, பொட்டல் காடுகளிலிருந்து 2 கி.மீ. உயரம் வரை கூடச் செல்லும். உழப் பட்ட நிலங்களிலும், கால் நடை மேய்க்கின்ற இடங்களிலும், புல் நிறைந்த மலை அடிவாரங்களிலும் இப்பறவை காணப் படும். வண்டுகளையும், சிறு பூச்சிகளையும் பெருமளவில் உண்ணும். பூச்சிகளைப் பிடிக்கும் போது, வாலை மேலும், கீழும், வாலாட்டிப் பறவையைப் போல ஆட்டிக் கொண்டே இருக்கும். பறக்கும் போது, ஆண் பறவை மெதுவாக ‘ட்சீப், ட்சீப்’ எனக் கத்திக் கொண்டே இருக்கும். இனப் பெருக்கக் காலத்தில், ஆண் பறவை வானில் பறந்து பாடிக் கொண்டே நிலத்தை நோக்கி வரும். பிப்ரவரி– அக்டோபர், மார்ச்–ஜுன் காலங்களில், இனப் பெருக்கம் செய்யும். புல், வேர்த் தூவி போன்றவற்றைக் கொண்டு கிண்ண வடிவில் கூடமைக்கும். மஞ்சளும், பழுப்பு கலந்த வெண்மை நிறத்தையும், பழுப்புப் புள்ளிகளையும் கொண்ட 3 அல்லது 4 முட்டைகளை இடுகிறது. ஆண், பெண், பறவைகள் கூடு கட்டுவதிலும், இளம் பறவைகளைப் பேணுவதிலும் பெரும் கவனம் செலுத்துகின்றன.\n\nமர நெட்டைக் காலிப் பறவை (Anthus trivialis tririalis) . இதன் உடலமைப்பு 16.5 செ.மீ. அளவும், இறகு 7–9 செ.மீ. பின் கால் நகம் 7.6 செ.மீ. அளவும் உடையன. இதன் அலகு கறுப்பு கலந்த பழுப்பு நிறமானது. கால்கள் இறைச்சி நிறம் உடையன. மேல் பகுதி மண் நிறமாகப் பெரிய கறுப்புப் பட்டைகளைக் கொண்டுள்ளது. வெளி நாட்டிலிருந்து பனிக் காலத்தில், இப்பறவை இந்தியாவிற்கு வலசை வருகிறது. வட மேற்கு இந்தியாவிலும், காஷ்மீரிலும் இனப் பெருக்கம் செய்கிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இந்திய மர நெட்டைக் காலி. இதன் உடல் 15–16.5 செ.மீ. அளவும், இறகு 8.5–8.9 செ.மீ. அளவும், வால் 6.9 செ.மீ அளவும், கணுக்கால் 2.1 செ.மீ அளவும் உடையன. உறுதியாகவும், அடியில் சதைப் பற்றுடனும் உள்ளது. தலையிலும், கழுத்திலும், பழுப்பு கலந்த கறுப்பு வரிகள் உண்டு. வயிற்றுப் புறம் வெண்மையானது; இப்பறவை, மலைகளில் வசித்து வருகிறது. காடுகளுக்கு அருகில் மரங்களுக்கு அடியே கூட்டங் கூட்டமாகப் புல் வெளிகளில் மேயும். இடர் வரும் போது, மரங்களுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். இமய மலைப் பகுதியில், இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது.\n\nநீலகிரி நெட்டைக்காலி (Anthus nilghiriensis). இதன் உடல் 17.8 செ.மீ. அளவும், இறகு 7.8 செ.மீ அளவும், வால் 5–15 செ.மீ அளவும், கணுக்கால் 2.50 செ.மீ. அளவும் உடையன. இதன் கீழ்த் தாடை கறுப்பாகவும், நிறப் படலம் ஆழ்ந்த பழுப்பு நிறமாகவும் காணப் படும். கால்களும், பாதங்களும், சதை நிறைந்தவை. மலைகளிலும், புல் வெளிகளிலும் மேயும். இதன் இனப் பெருக்கம் மார்ச்–ஜுன் ஆகும். புற்களால், புற்களுக்கு அடியிலேயே கூடு கட்டுகிறது. அதில் 3–4 முட்டைகள் இடுகிறது.\n\nபாறை நெட்டைக்காலி(Anthus sordidus similis) நீலகிரி, திருவாங்கூர் மலைகளில் இது பரவியிருக்கிறது. கற்களும், பாறைகளும் நிறைந்த புல்வெளிகளில் நன்கு மேய்கிறது. மார்ச்–மே இதன் இனப் பெருக்கக் காலமாகும். இதன் முட்டைகள் மஞ்கள் கலந்த பழுப்பு நிறமானவை.\n\nரிச்சர்ட் நெட்டைக்காலி(Anthus richardi vieill). இதன் அலகு பழுப்பு நிறத்திலும், வாய் மஞ்சள் நிறத்திலும் காணப் படும். கால்கள் சதைப் பற்றுள்ளவை. விழிப் படலம் பழுப்பு நிறமானது. பனிக் காலத்தில் இந்தியாவிற்கு வரும். இது மேற்குக் கடற்கரையின் திறந்த வெளி நிலங்களில் மேய்கிறது. சைபீரியாவிலும், மைய ஆசியாவிலும், இனப் பெருக்கம் செய்கிறது. ஆன்தஸ்ரிச்சார்டி கோடெல்ஸ்கி (Anthus richardi godlavskilacz) என்னும் பறவை, ரிச்சர்ட் பறவையைப் போன்றே இருந்தாலும், பின்னங்கால் நகம் மட்டும்: குட்டையானது. நெல் அறுவடைக்குப் பின்பு, அந்த நிலங்களில் மேய்வதற்காகப் பனிக் காலத்தில் இங்கு வருகிறது. காசி மலைகளில் இனப் பெருக்கம் செய்கிறது.\n\nஇந்திய நெட்டைக்காலி (Anthus richardi rafulus vieill) இதன் அலகு பெரியது. பின் கால் நகம் குட்டையானது. மலைகளிலேயே எப்போதும் வசிக்கும் இது, சில நேரங்களில், சம வெளிகளுக்கும் வரும். நெல் வயல்களில் அடிக்கடி தென் படும். மார்ச்–ஜுனில் இனப் பெருக்கம் செய்யும். தரைக்குக் கீழ், புற்களைக் கொண்டு கூடுகளை அமைத்துக் கொள்கிறது.\n\nகபில நிற நெட்டைக் காலி (Anthus campestries compestries linn). இதன் மேல் புறம் பழுப்பு நிறமானது. விழிப் படலம் கரும் பழுப்பு நிறத்தில் உள்ளது. இதன் கால்களும், பாதங்களும் மஞ்சள் நிறச் சதைப் பற்று கொண்டவை. பனிக் காலத்தில், தென்னிந்தியாவிற்கு வலசை வரும் இது ஐரோப்பாவில், இனப்பெருக்கம் செய்கிறது. —ஜி. எம். நடராஜன்\n\nநெட்டைக் கொக்கு\n\nஇது குருயிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இது பெரிய உடலையும், நீண்ட கழுத்தையும், கால்களையும், 19–20 கழுத்து முள்ளெலும்புகளையும் கொண்டுள்ளது. இதன் அலகு நீண்டும், தலையில் நீளத்திற்குச் சமமாகவும் இருக்கும். புற மூக்குத் துளைகள், அலகின் தொடக்கத்தில் மென்மையான தோலால் மூடப்பட்டுள்ளன. வாலில் 12 இறகுகள் உள்ளன. மார்பு எலும்பு, கத்தி போன்று உட்புறத்தில் காற்றுக் குழல் (tracheae) நிரம்பிக் காணப் படுகிறது.\n\nகிரஸ் பல்லாஸ் (Grus Pallas).இவ்வினத்தில், தலையின் உச்சியில் இறகுகளில்லை. ஆனால், அதன் பக்கவாட்டிலும், கழுத்திலும் இறகுகள் உள்ளன. இறக்கை நீண்டும், வால் குட்டையாகவும் உள்ளன. காலின் கீழ்: மூட்டின் கீழ்ப் பகுதி (tibia) இறகு இன்றியும், கால் விரல் (toes) குட்டையாகவும், உறுதியாகவும் அமைந்துள்ளன. விரல்களில், மழுங்கிய, குட்டையான நகங்கள் (Claws) காணப் படுகின்றன. ஆண், பெண் பறவைகளுக்கு இடையே இறகு அமைப்பிலும், நிறத்திலும் வேற்றுமை கிடையாது.\n\nகிரஸ் கிரஸ் லில் போர்டி (Grus Grus lil Fordi) . இவ்வினத்தைக் கிழக்கிந்திய கொக்கு (Eastern cranes) என்றும் குறிப்பிடுவர். ஆண் பறவையின் உடல் 45 செ.மீ. நீளமும், இறக்கை 22 செ.மீ. நீளமும், வால் 8 செ.மீ. நீளமும், கணுக்கால் 9.5 செ.மீ. நீளமும், அலகு 4.6 செ.மீ. நீளமும் உள்ளன.\n\nதலையின் உச்சி கறுப்பாகவும், பிடப் பகுதிகளுக்கு (occipital) இடையே குறுக்காக ஒரு சிவப்புப் பட்டையுமுள்ளன. அலகின் அடிப் பகுதி பச்சையாகவும், நுனிப் பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப் படும். கால் கறுப்பாகவும், உள்ளங்கால் மர நிறமாகவும், மெத்தை போன்றுள்ளன. கழுத்தில் கறுப்பும், சாம்பல் நிறமும் கலந்த இறகுகளுள்ள பெண் பறவைகளிலும், பறவைகளைப் போலவே இறகுகள் அமைந்திருக்கின்றன. இளம் பறவை மர நிறத்தை ஒத்துள்ளது. மேலும், இதன் தலை முழுவதும் இறகுகள் உள்ளன. பிறந்த குஞ்சுகளில் பஞ்சு போன்ற மஞ்சள் நிறத் தூவி இறகுகள் (down feathers) மிகுதியாகக் காணப் படுகின்றன.\n\nஇவ்வகைக் கொக்கு திருவாங்கூர்ப் பகுதியில் மிகுதியாகக் காணப் படும். இது நதிகளில், குறிப்பாக, நீர்த் தேக்கங்களிலும், அணைக் கட்டுகளிலும் தானியக் கழனிகளிலும் விடியலில் இரை தேடப் புறப்படும். வெயில் நேரத்தில், ஒரே ஒரு காலில் நின்று கொண்டு தூங்கும். குறைந்தது 300 பறவைகள் ஒன்று சேர்ந்து, கூட்டம் கூட்டமாக பறந்து போகும். அதற்கே உரிய தாரை (trumpet) போன்ற நீண்ட ஒலியை அடிக்கடி எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒன்று அல்லது இரண்டு முறை வட்டமிட்டுப் பறந்து, நீண்ட ஒலியை எழுப்பிய பிறகே, நிலத்தில் அமரும். உணவு உண்ணும் போது, மிகவும் கவனமாக இருக்கும். தானியங்களையும், பிற தாவரங்களையும் விரும்பி உண்ணும்.\n\nஇந்திய சாரஸ் கொக்கு (Anligone antigone). <!---- See : https://birdsoftheworld.org/bow/species/sarcra1/cur/introduction----> இதில் ஆண் கொக்கு 145 செ.மீ. உள்ளது. இறக்கை 60 செ.மீ, வால் 25 செ.மீ, கணுக்கால் 30 செ.மீ. அலகு 17 அங்குலம் நீளமுள்ளன. அலகின் அடிப் பகுதி இளம் பச்சையாகவும், நுனிப் பகுதி கறுப்பாகவும், தலையின் உச்சி சிறு நீட்சிகளைப் போன்ற மொட்டுகளுடன் சாம்பல் நிறத்துடனும், கழுத்து இளஞ் சிவப்பாகவும், கரு விழி ஆரஞ்சு நிறத்துடனும், கால்கள் செந்நிறமாகவுமுள்ளன. தொண்டை மற்றும் கன்னப் பகுதிகளில் (cheeks) கறுப்பு இறகுகள் உள்ளன. இவ்விறகுகள் காதுக்கருகில் மிகுந்து காணப் படுகின்றன. ஆண் கொக்கிற்கும், பெண் கொக்கிற்கும் அனைத்துப் பண்புகளும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளன. இளம் கொக்குகளின் உடல் முழுவதும் சாம்பல் நிற இறகுகள் உள்ளன. பிறந்த குஞ்சுகளின் மேல் புறம் மர நிற இறகுகளும், கீழ்ப் புறம் வெண்மை இறகுகளும் காணப் படுகின்றன. இப்பறவை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கோதாவரியின் வட பகுதியிலும் மிகுதியாக வசிக்கிறது. குறிப்பாக, விளை நிலங்களுக்கு அஅருகில் வாழ்கிறது. பகலில் இரை தேடி, மாலை நேரத்தில் நீர் நிலைகளுக்கு வந்து, அங்கேயே இரவுப் பொழுதைக் கழிக்கிறது.\n\nசில எப்போதும் இணை இணையாக நீர் நிலைகளில் வாழ்கின்றன. குளிர் மற்றும் இலையுதிர் காலங்களில் இரண்டு அல்லது மூன்று இளங் கொக்குகளுடன் காணப் படும். துணையை இழந்தால், பெரிதும் துன்பமடையும் பண்பையும் பெற்றுள்ளது.\n\nதவளை, பல்லி, சிறிய ஊரும் உயிரினங்கள், வேர், நீர்த் தாவரங்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணுகிறது. நெடுந் தொலைவிற்குக் கேட்கும் அளவிற்கு ஒலியை எழுப்புகிறது. ஜுலை, ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் கூடு கட்டி வாழும். வடிவத்தில் பல வண்ணப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.\n\nஆந்திரோபாய் டெஸ் வெயிலோட். (Anthropoides vieillot). <!---- https://www.gbif.org/species/2474935 ----> இச்சிற்றினம் இந்தியக் கொக்குகளிலேயே மிகவும் சிறியதாகும். டெமாய் செல்லி( Demoiselle) <!---- https://en.wikipedia.org/wiki/Demoiselle_crane----> வகைக் கொக்கு இறகுகளையும், விரலிடைச் சவ்வுப் பகுதிகளையும் (webs) பெற்றுள்ளது. மார்பு எலும்பில் நீண்ட, வெண்மையான இறகுகள் முன் புறம் நீட்டிக் கொண்டுள்ளன.\n\nஆண் கொக்கின் நீளம் 75 செ.மீ. அளவும், இறக்கையின் நீளம் 47 செ.மீ. வாலின் நீளம் 17 செ.மீ. அளவும், கணுக்காலின் நீளம் 17 செ.மீ. அளவும், அலகின் நீளம் 6.5 செ.மீ. அளவும் இருக்கும். அலகின் அடிப் பகுதி மங்கிய பச்சை நிறமாகவும், நுனிப் பகுதி வெளுத்த சிவப்பு நிறமாகவும் உள்ளன. கால்களும், விரல்களும், கறுப்பு நிறமுடையன. தலை, முகம், கழுத்து, மார்புப் பகுதிகளில் கறுப்பு இறகுகளுமுள்ளன. காம்பிறகுகள் கறுப்பு நிறமானவை. பெண் கொக்கில், இப்பண்புகள் அனைத்தும் ஒரே வகையாக இருக்கின்றன.\n\nஇக்கொக்கு, குளிர் காலத்தில் பெருமளவில் காணப் படுகிறது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள கொள்ளேகால் பகுதியில் மிகுதியாக வாழ்கின்றன. வானில் அடிக்கடி வட்டமிட்டுக் கொண்டே ‘சூர்… சூர்… .சூர்…’ என ஒலி எழுப்பியவாறு செல்லும். விடியலில், தோட்டங்களில் பெருமளவில் இரை தேடும். இரவில் நதியோரங்களில், மணல் பகுதிகளில் உறங்கும். சில சமயங்களில், தவளைகளை விரும்பி உண்ணும். மே, ஜுன், மார்கழி மாதங்களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வட ஆசியப் பகுதிகளிலும் இனப் பெருக்கம் செய்யும். மைய வட இந்தியா, பாகிஸ்தான், அஸ்ஸாம், மியான்மர் பகுதிகளில் இக்கொக்கு வாழ்வதாகக் கூறுகின்றனர். —உ. கருப்பணன் துணை நூல். Salim Ali, The Book of Indian Birds, Bombay Natural History Society, Bombay 1955.\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> நெடுஞ்சாலைப் பொறியியல்\n\nபொதுவாக ஊர்திகள் வசதியான முறையில் செல்ல உதவும் பாதை, நெடுஞ்சாலை (highway) எனப் படும். பயன் படுத்தும் வகைக்கு ஏற்ப, பார வண்டிப் பாதை, கன ரக ஊர்திப் பாதை, மிதி வண்டிச் சாலை, மலைச் சாலை எனக் குறிக்கப் படுவதுண்டு.\n\nசாலை பொதுவாக எளிதான வகையில், ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடம் சென்று வரவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் , நாட்டின் வளர்ச்சிக்கும், கலை, கல்வி, தொழில் வளர்ச்சிக்கும் உதவுகிறது. போர்க் காலங்களில் சாலை இன்றியமையாத தேவையாகி விடுவதோடு, சட்டம், ஒழுங்கு நிலையைச் சீராக நிலை நிறுத்தவும் உதவுகிறது.\n\nஎப்போதும் உலர்ந்த நிலையில், புல், செடி எதுவும் வளராத நல்ல சாலையில், தேவையான அளவு சரிவும், எளிய வளைவுகளும், நல்ல மேற்பரப்பும் இருக்க வேண்டும். நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும், குறைந்த செலவில் கட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் நகர்ப் புறச் சாலைகள், கிராமப் புறச் சாலைகள் என இரு வகையுண்டு. நகர்ப் புறச் சாலைகள் ஐவகையாகவும், கிராமப் புறச் சாலைகள் நால் வகையாகவும் பகுக்கப் படும்.\n\nநகர்ப் புறச் சாலை மீவிரைவுச் சாலை. மிக வேகமாகச் செல்லும் கன ரக ஊர்திகளுக்கென ஒதுக்கப் பட்ட நகரச் சாலைகள் பெரும் தொழிற் சாலைகள் உள்ள நகரங்களை நேரடியாக இணைக்கக் கூடியவை.\n\nஇணைப்புச் சாலை. தொடர்ந்து செல்லக் கூடிய இந்த ஊர்திச் சாலைகளைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குறுக்காகக் கடந்து செல்லலாம்.\n\nதுணை இணைப்புச் சாலை. இது போக்குவரத்துக் குறைவான நகரங்களுக்குள் உள்ள இணைப்புச் சாலைகளில் கிளைகளாக உள்ளது. குறுகிய சாலையாக உள்ளமையால், ஊர்திகளை நிறுத்திச் சுமை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இச்சாலை பொது மக்கள் மிகுதியாகப் பயன் படுத்தக் கூடியது.\n\nஒருங்கிணைக்கும் சாலை. இது பரவலாக அனைத்துத் திசைகளிலும் உள்ள பெரிய பொதுச் சாலைகளை ஒருங்கிணைக்கிறது.இச்சாலை குடியிருப்புப் பகுதி, தொழிற்சாலைப் பகுதி, வணிகச் சந்தைப் பகுதிகளை இணைக்கிறது. சாலைப் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இச்சாலைகளில் ஊர்திகளை நிறுத்தக் கூடாது.\n\nஉள்ளுர்ச் சாலை. தனிப்பட்ட கட்டடங்களையும், குடியிருப்புகளையும் சென்றடையப் பயன் படும் இச்சாலை, போக்குவரத்து முடியவும், தொடங்கவும் பயனாகும். இச்சாலையில் மனிதர் நடமாடுவதற்கும், ஊர்தி நிறுத்துவதற்கும் தடை இல்லை.\n\nகிராமப் புறச் சாலை தேசிய நெடுஞ்சாலை. இது நாட்டின் முதன்மை இடங்களான விமான நிலையம், துறைமுகம், வெளிநாட்டுச் சாலை, தலை நகரம், போர்ப் பணி நிலையம் ஆகியவற்றை நேரிடையாக இணைக்கும் மிக நீண்ட தொலைவுச் சாலையாகும். ஆண்டு முழுவதும் பயன்படுத்தக் கூடிய இது, மையப் பொதுப் பணித் துறையினரால் பராமரிக்கப் பட்டு வருகிறது. இச்சாலை நகரங்களுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு செல்லும் சாலைகளில், நகரங்களுக்குள் உள்ள பகுதிகள் மட்டும் நகரச் சாலை எனக் குறிப்பிடப் படும்.\n\nமாநில நெடுஞ்சாலை. இது அருகே உள்ள மாநிலங்களையும், பெருநகரங்களையும், மாவட்டத் தலைநகர்களையும் இணைக்கும் சாலையாகும். மாநிலங்களுக்குள் போக்குவரத்துக்கென உள்ள இந்த இணைப்புச் சாலை, பொதுப் .பணித் துறையினால் பராமரிக்கப் படுகிறது.\n\nமாவட்ட முதன்மைச் சாலை. இது மாவட்டங்களில் உள்ள வணிக மையங்களை இணைக்கவும், அவற்றைத் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் பயன் படும்.\n\nகிராமச் சாலை. இது கிராமங்களை இணைக்கவும், அவற்றைப் பிற முதன்மைச் சாலைகளுடன் இணைக்கவும் பயன் படும். இது பொதுவாகப் படகுத் துறை, நெடுஞ்சாலை, புகை வண்டி நிலையம் முதலிய இடங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் சாலை ஆகும். சாலை அமைக்கும் முன்பு, அவற்றின் வழித் தடங்களை வரையறுக்கப் பல்வேறு கூறுகளையும் ஆராய வேண்டும். மிகவும் பயனளிக்கும் வழித் தடங்களையே தேர்வு செய்து, சாலை அமைக்கும் போது, அச்சாலையின் திறனையும் அது அமைக்கப் படவிருக்கும் காரணத்தையும் அறிந்து, முடிந்த அளவு நேராகவும், தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே விலகிச் செல்லுமாறும் அமைக்க வேண்டும். சாலை அமைப்பது, அது செல்லும் இடங்களின் வளர்ச்சிக்காகவே. ஆதலால், அச்சாலை, அனைத்து முதன்மை இடங்களையும், பெரும் எண்ணிக்கையிலான இடங்களையும் இணைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அச்சாலையில், வழக்கமாகச் செல்லக் கூடிய ஊர்திகளின் வசதிக்கேற்ப வழித் தடங்களை அமைக்க வேண்டும். சாலையில் மிகவும் செங்குத்தான சரிவுகள் இல்லாமல், சாலைகளில் வளைவுகள் அமைக்கும் போது, அகலமாக இருக்குமாறு நீண்ட ஆரங்களில் அமைக்க வேண்டும். சாலையை ஊர்தி ஓட்டுநர் முழுமையாக ஊன்றிப் பார்க்க வசதியாக அமைக்க வேண்டும்.\n\nநெடுஞ்சாலை வழித் தடங்களில், குளம், கிணறு, புதர், சுடுகாடு, மதச் சடங்கு நடக்கும் இடம் முதலியவை குறுக்கிடாமல் அமைக்க வேண்டும். ஒன்றை ஒன்று குறுக்காகக் கடக்கும் நீரோட்டங்களில்,  கட்டுமானங்கள் மிகுதியும் குறுக்கிடக் கூடாது. நதி குறுக்கிடும் இடங்களில், செங்கோணத்தில் கடந்து செல்லும் வகையிலும், பாலங்கள் கட்டுவதற்கு ஏற்ற முறையிலும் வழித் தடம் அமைக்க வேண்டும். இருப்புப் பாதைகளைச் செங்கோணத்தில் கடக்க வேண்டும். சிறந்த அடிவாரம் அமைத்துப் பெருமளவிற்கு மண்ணை வெட்டுதல், நிரப்புதல் செய்யாது, அடர்ந்த காடுகளும், விலை உயர்ந்த விளை நிலங்களும் இல்லாமல், சாலை அமைதல் வேண்டும். முன்னரே அவ்விடங்களில் பயன் படுத்தப் பட்டு வரும் வழித்தடங்களைப் புதிய சாலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழித் தடங்கள் அப்பகுதி மக்களின் முழுத் தேவையையும், நிறைவு செய்யக் கூடியவையாக இருக்க வேண்டும்.\n\nசாலைகளின் வழித் தடங்கள் மலை வழிப் பாதைகளாக இருக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள் உள்ளன. குறைந்த செலவில் மலைகளில் உள்ள இரண்டு இடங்களை இணைக்கும் வழிகளை அறிதல் வேண்டும். பெருங் காற்றினால் தாக்காதவாறும், சூரிய ஒளி மிகுதியாகக் கிடைக்கும் வகையிலும் சாலைகளை அமைக்க வேண்டும். கற்பாறைகளைத் தகர்த்துப் பாதை அமைப்பதனைக் குறைக்க வேண்டும். பாதையின் சாய்வு மிக அதிகமாக இராமலும், மண் சரிவு ஏற்படாத வகையிலும் அமைக்க வேண்டும்.\n\nகூடுமான வரையில் குகைப் பாதைகளைத் தவிர்த்து, பாலங்கள் மிகுதியும் வராத வகையில் சாலை அமைக்க வேண்டும். கூடுதலான கொண்டை ஊசி வளைவுகளைத் (hair pin bends) தவிர்க்க வேண்டும். இடையிடையே ஊர்திகளை நிறுத்தி ஓய்வு பெற வசதியான இடங்கள் அமையுமாறு சாலைகளை அமைக்க வேண்டும்.\n\nசிக்கன வழித் தடம், சாலைகளின் சாய்வு, வளைவு, வளைவுகளில் தேவையான அகலம், சாலையின் மையப் பகுதியிலிருந்து, ஓரம் வரையிலும் உள்ள சாய்வு, ஓட்டுநர்களின் பார்க்கக் கூடிய தொலைவு, ஊர்தி முந்திச் செல்வதற்குப் பார்க்கக் கூடிய தொலைவு, சாலையின் கொள்ளவு முதலியவற்றைக் கணக்கிட்டுச் சாலைகளை அமைக்க வேண்டும்.\n\nநகரங்களில் அமைக்கப் படும் சாலைகளின் வடிவம் பல வகைகளில் அமைக்கப் படுகிறது. இது செவ்வக வகை, அறுங்கோண வகை எனப் பல வகைப் படும். சாலைகளின் சந்திப்பு, இரு திசைச் சந்திப்பு, குறுக்கு வெட்டுச் சந்திப்பு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்திப்பு, ஒரு தளச் சந்திப்பு, அடுக்குத் தளச் சந்திப்பு, வட்ட வடிவச் சாலைச் சந்திப்பு எனப் பல வகைப் படும்.\n\nநகரச் சாலை அமைக்கும் போது, முதலில் மொத்த அகலத்தையும் கணக்கிட்டு, அதற்குச் சாலையின் அகலம், சாலையின் இரு புறமும் உள்ள குழிவான பகுதிகளின் சாய்வு, சாலையைத் தாங்கும் மேடு, அதன் உயரம், எதிர் காலத்தில் சாலையை விரிவு படுத்தத் தேவையான இடம், ஓட்டுநர் பார்க்கக் கூடிய தொலைவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, அறிய வேண்டும். சாலையின் இரு புறமும் உள்ள கழிவு நீர்ப் பாதை வரை உள்ள தொலைவைச் சாலையின் அமைப்பு அகலம் எனலாம். சாலைப் போக்குவரத்து மிகுந்திருந்தால், இந்த அமைப்பு அகலம் மிகுதியாகத் தேவைப் படும்.\n\nசாலையின் மையப் பகுதியில் ஊர்திகள் செல்லும் பாதையின் அகலமே ஊர்திப் பாதை எனப் படும். இப்பகுதி தார் அல்லது கற்காரையினால் மூடப் பட்ட சாலைப் பகுதி ஆகும். சாதாரணமாக ஊர்திப் பாதையின் அகலம் 3.75 மீ. இருக்கும். இது அகலத்தில் நடுவில் அமைந்துள்ள மையப் பகுதி உயர்ந்தும், இரு புறமும் சரிவாகவும் கட்டப்பட்ட சாலை ஆகும். நடுப் பகுதி, சாலையின் உச்சி அல்லது தலைமைப் பகுதி என்று குறிக்கப் படும். சரிவான புற அமைப்பு சாலையின் நடுவே மழை நீர் தங்காமல், செல்லும் பொருட்டு அமைக்கப் படுகிறது. அகலமான சாலைகளில் நடுப் பகுதியில் உள்ள சிறிய தடுப்புச் சுவர், இரு புறமும் செல்லும் ஊர்தியின் பாதையைப் பிரித்துக் காட்டப் பயன் படுகிறது. ஊர்திப் பாதைக்கு அடுத்துக் கழிவு நீர்ப் பாதை வரையிலும் உள்ள பகுதி, சாலையின் கரை எனப் படும். இக்கரைப் பகுதி உறுதியாகக் கற்களாலும், செங்கற்களாலும், இறுக்கப் பட்ட மண்ணாலும் அமைக்கப் பட்டிருக்கும். இக்கரைப் பகுதிகள் கழிவு நீர்ப் பாதையை நோக்கிச் சாய்வுடன் இருக்கும். இக்கரையின் அகலம் 0.5–4 மீ. இருக்கும். இக்கரை, சாலை ஓர அறிவிப்புப் பலகை நிறுத்தவும், அவசரத் தேவைக்கு ஊர்திகளை நிறுத்தவும், மாட்டு வண்டி போன்ற ஊர்தி செல்லவும், சாலையின் மையப் பகுதிக்குப் பக்கத் துணையாகச் செயல்படவும் பயன் படுகிறது. கரைகளின் சரிவு 1 மடங்கு உயரத்திற்கு 1.5 மடங்கு அகலம் என்னும் அளவில் மண் கரைகளாக அமைக்கப் படும். பாறைகளாக இருந்தால், செங்குத்தாக அமைத்துக் கொள்ளலாம். இக்கரைகளுக்கும், கழிவு நீர்க் குழிகளுக்கும் இடையே திணடு போன்ற பகுதி உள்ளது.\n\nகட்டுமானப் பொருள்களின் தன்மைக்கேற்பச் சாலையினைப் பல வகையாகப் பிரிக்கலாம். அது மண் சாலை, சரளைக் கல் சாலை, உருளைக் கல் சாலை, சுண்ணாம்புக் கல் சாலை, நீர், கல், மண் இணைந்த சாலை, தார்ச் சாலை, சிமெட்டிச் சாலை, கற்காரைச் சாலை எனப் பல வகைப் படும். சில குறிப்பிட்ட இடங்களில், அழகுற சில வகையான சாலைகள் கட்டப் படுவதும் உண்டு. அவை கற்பலகை, செங்கல் ஓடு, மரப் பலகை, ரப்பர் விரிப்பு, உலோகத் தகடு, கண்ணாடித் தகடு முதலிய பொருள்களைக் கொண்டு அமைக்கப் படும் சாலைகள் ஆகும். கிராமங்களில் கருங்கற்கள் இன்றி, மண் மற்றும் சரளைக் கற்களால், அதில் செல்லக் கூடிய ஊர்திகளின் எண்ணிக்கை, தாங்கும் பாரம், அதன் செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்தும் தேர்வு செய்யப் படும்.\n\nமண் சாலை குறைந்த சுமையைத் தாங்கக் கூடியது. இச்சாலை களிமண், மணல், வண்டல் ஆகிய மண் வகைகளால் கட்டப் படும். மணலும், களிமண்ணும் சரியான விகித்தில் கலந்து, நீர் சேர்த்து 11.5 செ.மீ. கனம் வரும் வரை அமைத்து, அதுவே 7.5 செ.மீ. கனம் வரும்படி அழுத்தம் கொடுத்து, இறுக்கம் அடையச் செய்ய வேண்டும்.\n\nசரளைக் கல், உருளைக் கல் சாலை அமைக்க 6–36 மி.மீ. கற்களை 26% மணலும், 13% களிமண்ணும் சேர்ந்த இணைப்புக் கலவையுடன், 15–30 செ.மீ. கனத்திற்குப் போட வேண்டும். மேற்பரப்பில் 1 செ.மீ கனத்திற்கு மணல் தூவ வேண்டும். மழைக் காலங்களில் இச்சாலை சகதியும், சேறுமாகக் காட்சியளிக்கும்.\n\nநீரினால் இணைப்புப் பெறும் கற்சாலை நீர் இணைப்புக் கற்சாலை எனப்படுகிறது. இச்சாலைக்கு மண் தரையின் மீது முதலில் 2.5–7.5 செ.மீ அளவுள்ள கற்களைப் பரப்பி, மிகுதியான நீரைத் தெளிக்க வேண்டும். மீண்டும், மீண்டும் நீரைத் தெளிப்பதால், கற்கள் படிந்து, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, இணைந்து கொள்கின்றன. பின்னர், அவற்றின் மீது நொறுங்கிய கற்செதில்கள் தூவப் படுகின்றன. பின்னர், நீரும், மணலும் சேர்க்கப் படுகின்றன. மேற்பரப்பு, நீர்  தெளிக்கப்பட்ட பின்பு, மணல் படிந்து, மென்மையான சாலையாக அமைகிறது.\n\nதார்ச்சாலை எனப் படுவது, தார் நீர்ம நிலையில் வெப்பத்துடன் கற்களுடன் கலக்கப் பட்டு, சமன் படுத்தப் பட்ட, இறுக்கமான மண் தரையின் மீது போடப் பட்டுக் கனரக ஊர்தி இணைக்கப் பட்ட, பெரிய, கனமான உருளையால் உருட்டப் பட்டு, அழுத்தம் கொடுக்கப் பட்டு, இறுக்கமடைவதால், உருவாகும் சாலையாகும். இதன் மேற்பரப்பினைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். கோடைக் காலத்தில், சூரிய ஒளி வெப்பத்தால் தார் மீண்டும் உருகி, நீர்ம நிலையை அடையக் கூடும்.\n\nசிமெண்ட் கற்காரைச் சாலை எனப்படுவது, சிமெண்ட், கல், மணல், நீர் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து, கற்காரைத் தளமாகச் சமப் படுத்தப் பட்ட மண் தரையில், கட்டுவது ஆகும். சாலை 5 மீ. குறைவான அகலத்தில் கட்டப் பட வேண்டுமானால், முழு அகலத்திற்கும் ஒரே தளமாகக் கற்காரைத் தளம் கட்டப் படும். இத்தளங்களின் ஒரு பகுதி நீளம் 10–20 மீ. இருக்கும். ஒவ்வொரு பகுதித் தளத்திற்கும் இடையில் 12 மி.மீ. இடைவெளி விடப் பட்டிருக்கும். தளத்தில், வெப்பத்தினால் சிறு விரிவு ஏற்படும். அதனை எதிர் கொள்ளவே இடைவெளிகள் விடப் படுகின்றன. சாலையின் அகலம் 5 மீட்டருக்கு மேல் இருந்தால், சாலையின் அகலம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு, முன்னர் அமைத்தது போலவே, ஒவ்வொரு பகுதியாகக் கட்டப் படும். இவ்விரு பகுதிகளுக்கிடையேயும் நீள வாக்கில், கட்டுமான இடைவெளி விடப் பட்டிருக்கும். இச்சாலை கற்காரைக் கலவை போடப் பட்ட பின்னர், திமிசுக் கட்டைகளால் அடிக்கப் பட்டு, இறுக்கம் அடையச் செய்யப் படும். இக்காலங்களில் அதிர்வுத் தண்டுகளைப் பயன் படுத்திக் கற்காரைக் கலவையின் இடையே, காற்றுக் குமிழ்கள் இல்லாமல் ஏறத் தாழ 10 செ.மீ. கனத்தில் கட்டப் படும் கற்காரைத் தளம் ஒரு நாள் உலர்ந்த பின்னர், 28 நாள்கள் வரை நீர் ஊற்றி இறுக்கமடைய வைக்கப் பட்ட பின், ஊர்தி செல்லும் சாலையாகப் பயன் படுத்தப் படுகிறது. —எஸ். எஸ். சேகர்\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> நெப்ட்டூனியம்\n\nதனிம மீள் வரிசை அட்டவணையில், அணு எண் 89 கொண்ட ஆக்ட்டீனியத்திலிருந்து அணு எண் 103 கொண்ட லாரன்சியம் வரையிலான பதினைந்து தனிமங்கள் ஆக்ட்டினைடுகள் எனப் படுகின்றன. இத்தொகுப்பின் உட்பகுதியாக அணு எண் 92 கொண்ட யுரேனிய நீரைத் தொடர்வதான தனிமங்கள் யுரேனியம் கடந்த தனிமங்கள் (trausuranic elements) எனப் படும்.\n\nயுரேனியம் வரையிலானவை மட்டுமே இயற்கையில் அமைந்த நிலையான தனிமங்கள். யுரேனியத்தை அடுத்துத் தொடர்பவை அனைத்தும் செயற்கைத் தனிமங்களே. அவ்வாறு, செயற்கை முறையில் முதன் முதலில் கண்டறியப் பட்டது அணு எண் 93 கொண்ட நெப்ட்டூனியம். விண்வெளியிலுள்ள யுரேனஸ் என்னும் கோளின் பெயரைச் சார்ந்து யுரேனியம் பெயரிடப் பட்டது. யுரேனல் கோளைக் கடந்து, நெப்ட்யூன் கோள் உள்ளது. அதைச் சார்ந்து, காரணப் பெயராக நெப்ட்டூனியம் அமைந்துள்ளது. இத்தனிமத்தின் குறியீடு Np. இதன் நிறை எண் 237.\n\nஅமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் மாக்மில்லன், அபெல்சன் என்னும் இரு இயற்பியலார் யுரேனியத்தை நியூட்ரான் துகள்களால் தாக்கி, இப்புதிய தனிமத்தை 1940இல் உருவாக்கினர். ஆய்வக அளவில் நடை பெற்ற இம்முயற்சியைத் தொடர்ந்து, 1944இல் மாக்னுசன், லா சாபெல் என்னும் இருவர் எடையிடத் தக்க அளவில் நெப்ட்டூனியத்தைத் தயாரித்தனர். அணுக் கரு உலைகளில், யுரேனிய எரி பொருள் தனிமங்களில் நெப்ட்டூனியம்–237, புளுட்டோனியம்–239 ஆகிய ஐசோடோப்புகள் கலந்திருக்கின்றன. உரிய கரைப்பான்களைப் பயன் படுத்தி, அயனிப் பரிமாற்ற ரெசின் கொண்டு, இக்கலவையிலிருந்து நெப்ட்டூனியத்தைப் பிரித்தெடுக்கலாம்.\n\nநெப்ட்டூனியத்தின் ஐசோடோப்புகள் கதிரியக்கப் பண்பு கொண்டவை. நிறை எண் 237 கொண்ட நெப்ட்டூனியம்–237 ஐசோடோப் ஆல்ஃபா கதிர்களை வெளியிட்டுச் சிதைகிறது. இதன் அரை ஆயுள் காலம் 2.14 X 10⁶ ஆண்டுகள் (தோராயமாக இரண்டு மில்லியன் ஆண்டுகள்). நெப்ட்டூனியம்–239 ஐசோடோப்பின் அரை ஆயுள் காலம் 2.35 நாள்கள். வேதிப் பண்புகளில் நெப்ட்டூனியம் யுரேனியத்தை ஒத்துள்ளது.\n\nஇத்தனிமத்தின் சேர்மங்களில் நெப்ட்டூனிய ஆக்சைடு குறிப்பிடத் தக்கது. அணுக் கட்டமைப்பில் நெப்ட்டூனிய ஆக்சைடு (NP₃0₃) யுரேனிய ஆக்சைடான UO₂ என்பதுடன் ஒத்திருக்கிறது. U₃O₈ போன்று, NP₃O₈ என்னும் ஆக்சைடும் கண்டறியப் பட்டுள்ளது. நெப்ட்டூனிய ஹைட்ராக்சைடு, ஓசோனுடன் வினைப் பட்டு, NPO₃, 2H₂O, NPO₃, H₂O ஆகிய நீரேறிய நெப்ட்டூனிய டிரை ஆக்சைடுகளைத் தருகிறது. இந்த வினையை 300°C வெப்ப நிலைக்கு மேல் நிகழ்த்தினால் கருமை நிற NP₂O₅ கிடைக்கிறது.\n\nநெப்ட்டூனிய ஹாலைடுகள் கட்டமைப்பில் யுரேனிய ஹாலைடுகளை ஒத்துள்ளன. நெப்ட்டூனியம் டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன், ஹைட்ரஜன் புளுரைடு ஆகியவற்றைக் கலந்து வினைப் படுத்தினால், நெப்ட்டூனிய புளுரைடு கிடைக்கும்.\n\nநெப்ட்டூனியச் சேர்மங்களை நீரிலிட்டுக் கரைத்தால், அத்தகைய நீர்க் கரைசல்களில் நெப்ட்டூனியம் +3, +4, +5 ஆகிய வெவ்வேறான ஆக்சிஜனேற்ற நிலைகளில் அமைகிறது. நீர்க் கரைசலில் காணப் படும் NP+5 அயனி பிறவற்றை விட, அதிக நிலைப்பு தன்மை கொண்டிருக்கிறது. [NpF₅], [NpF₇]2- போன்ற அணைவு அயனிகளிலும், Np+5நிலையைக் காணலாம்.\n\nஅண்மையில், நெப்ட்டூனியத்தின் கார்பைடுகள், பாஸ்பைடுகள், நைட்ரைடுகள், சிலிக்கேட்டுகள் ஆகியன தயாரிக்கப் பட்டுள்ளன. நெப்ட்டூனியம் அடங்கிய கரிம உலோகச் சேர்மங்களும் தற்போது கண்டறியப் பட்டுள்ளன. —௧. சேது துணை நூல். F. Albert Cotton and Geoffrey Wilkinson, Advanced Inorganic Chemistry, Third Edition, Wiley Eastern Ltd. New Delhi, 1993.\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> நெப்டியூன்\n\nசூரியனைச் சுற்றி இயங்கும் ஒன்பது கோள்களுள் புவியும் ஒன்றாகும். ஏனைய எட்டுக் கோளங்களில் ரோமானியர்களின் கடல் தெய்வத்தின் பெயரை நெப்டியூன் பெற்றுள்ளது. உட்கோள், புறக் கோள் எனக் கோள், இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு கோளும் சூரியனை, நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும். புவியின் இயங்கு பாதைக்கு உட்புறப் பாதை பெற்றிருப்பவை உள்கோள் எனவும், ஏனையவை புறக் கோள் எனவும் குறிப்பிடப் படும்.\n\nநெப்டியூன் ஒரு புறக் கோளாகும். கோள்களைச் சூரியனிலிருந்து, அவற்றிற்குள்ள தொலைவிற்கேற்ப ஏறு வரிசையில் வரிசைப் படுத்தினால், நெப்டியூன் எட்டாம் இடத்தைப் பெறுகிறது. புவிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவை S எனக் கொண்டால், நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு 30S ஆகும். சூரியனிலிருந்து இக்கோள் ஏறத்தாழ 4, 486,100,000 கி.மீ. தொலைவில் உள்ளது. அதாவது புவியைப் போல் நான்கு மடங்காகும். இது புவியைப் போல் அடர்த்தியாக இராவிடினும், இதன் நிறை புவியைப் போல் 17 மடங்கு ஆகும். இது சூரியனைச் சுற்றி வருவதோடு, தன் மையத்தின் வழியே செல்லும் ஒரு கற்பனை அச்சைப் பொறுத்துச் சுழலவும் செய்கிறது.\n\nபுவி, சூரியனை ஒரு முறை முழுமையாகச் சுற்றி வர ஓர் ஆண்டு ஆகிறது. ஆனால், நெப்டியூன் சூரியனை ஒரு முறை முழுவதுமாகச் சுற்றி வர 165 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இதன் அச்சு, சூரியனைச் சுற்றி வரும் இதன் பாதைக்குச் செங்குத்தாக அமையாமல், 30° சாய்ந்திருப்பதால், இதன் வட, தென் பாதிகள் சம வெப்பத்தைச் சூரியனிலிருந்து பெறுவதில்லை. இதன் விளைவாகப் பருவ காலங்களும், தட்ப வெப்ப மாற்றங்களும் ஏற்படுகின்றன.\n\nநெப்டியூன் புவியை விடத் தட்ப வெப்பம் மிகக் குறைவாக உள்ளமையாலும், ஆக்சிஜன் இன்மையாலும், தாவரங்களோ, விலங்குகளோ இக்கோளில் வாழ்வது மிகக் கடினமாகும். இதன் மீது வளி மண்டலம் 3,200 கி.மீ. பரவியுள்ளது. இதில் மீதேன், ஹைட்ரஜன், ஈதேன் ஆகிய வளிமங்களும் இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.\n\nபுவியின் துணைக் கோள் சந்திரன் ஆகும். இதே போன்று, நெப்டியூனுக்கு ஆறு துணைக் கோள்கள் உள்ளன. நெப்டியூனின் டிரிட்டன் (Triton) எனும் துணைக்கோள் 1844 ஆம் ஆண்டிலும், நீரியட் (Nereid) எனும் துணைக் கோள் 1949 ஆம் ஆண்டிலும் கண்டு பிடிக்கப் பட்டன. நெப்டியூனின் பிறிதொரு துணைக் கோளை வாயேஜர்–2 எனும் விண் கலம் 1989 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கண்டு பிடித்தது. வாயேஜர்–2 விண் கலம் நெப்டியூனுக்கு 3,40,00000 கி.மீ. தொலைவில் இருந்த போது, அக்கோளுக்கு மேற்கொண்டு 3 துணைக் கோள்கள் உள்ளமையைக் கண்டு பிடித்தது. வாயேஜர்–2 அனுப்பி வைத்த படங்களில், சற்றுப் பிரகாசமான திட்டுகள் காணப் பட்டன. ஏறக் குறைய 5 நாள்களுக்கு இவற்றை ஆராய்ந்த பின்னரே, இவை நெப்டியூனின் துணைக் கோள்கள் என்று அறிவியலார் உறுதி செய்தனர். வாயேஜர்–2 விண் கலம் கண்டு பிடித்துள்ள நான்கு துணைக் கோள்களும், நெப்டியூனின் பழைய இரு துணைக் கோள்களை விட அந்தக் கோளுக்கு நெருக்கமாக உள்ளன.\n\nடிரிடன் நெப்டியூனிலிருந்து 320,000 கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள துணைக் கோள்களிலேயே மிகப் பெரியது டிரிடன் ஆகும். இது கிழக்கிலிருந்து மேற்காக, வட்டமான பாதையில் நெப்டியூனைச் சுற்றி வருகிறது. ஒரு முறை நெப்டியூனைச் சுற்றி வர, இது ஆறு நாள்கள் எடுத்துக் கொள்கிறது. நீரிய்ட், நெப்டியூனிலிருந்து 5.6 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் விட்டம் 241 கி.மீ. ஆகும். இத்துணைக் கோள் நீள் வட்டப் பாதையில், 360 நாள்களுக்கு ஒரு முறை நெப்டியூனைச் சுற்றி வருகிறது. சனிக் கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பதைப் போல், நெப்டியூனைச் சுற்றியும் இரு வளையங்கள் இருப்பதை, 1982 இல் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.\n\nவாயேஜர்–2 விண் கலம் நெப்டியூன் கோள்களுக்குப் பல லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலையிலேயே, புதிய துணைக் கோள்கள் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதால், இந்த விண் கலம் அக்கோளை நெருங்க மேலும் பல துணைக் கோள்கள் கண்டு பிடிக்கப் படலாம் என அறிவியலார் கருதுகின்றனர். 1979 ஆம் ஆண்டு வியாழன் கோளை நெருங்கிப் படம் பிடித்ததுடன், 1981 ஆம் ஆண்டில் சனியை எட்டிப் பிடித்து, அதனையும் படம் பிடித்தது. 1986ஆம் ஆண்டில், யுரேனஸ் கோளைப்படமெடுத்துப் புவிக்கு அனுப்பியது. இக்கோள் இந்த அளவுக்கு நெருக்கமாகப் படமெடுக்கப் பட்டது இதுவே முதல் முறையாகும். நெப்டியூன் கோளை எட்டுகின்ற முதலாம் விண் கலம் எனும் பெருமையையும் வாயேஜர் பெற்றுள்ளது.\n\nநெப்டியூனின் இரு வளையங்களும் முழுமையற்றே உள்ளன. ஒரு வளையம் 48,270 கி.மீ. நீளம் கொண்டதாகவும், மற்றொரு வளையம் 9,655 கி.மீ. நீளம் கொண்டதாகவும் உள்ளன. இவ்வளையங்களில் அடங்கிய பொருள்கள் தூசு வடிவில் உள்ளவையா அல்லது சிறு கற்கள் வடிவில் உள்ளவையா அல்லது பெரிய பாறாங்கற்கள் வடிவில் உள்ளவையா என்பது தெரியவில்லை. வாயேஜர்–2 ஆய்வுக் கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து நெப்டியூன் வளையங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. நியூட்டனின் இயக்க விதிகளையும், வானவியல் கொள்கைகளையும் பயன் படுத்தி, 1843ஆம் ஆண்டு ஜான் ஆடம்ஸ் என்னும் ஆங்கிலக் கணக்கியல் வான அறிஞரும், 1846ஆம் ஆண்டு ஜே.ஜே. லெவர்ரியர் என்னும் பிரஞ்சுக் கணித அறிஞரும் தனித் தனியே கண்டுபிடித்த நெப்டியூன் எனும் கோள் அறிவியலாரின் ஆய்வுக்குப் பெரிதும் பயன் படுகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> —எம். அரவாண்டி\n\nநெம்பு கோல்\n\nஇது ஓர் ஆதாரப்புள்ளியைப் பற்றிச் சுழலும் தன்மையுள்ள கோல் ஆகும். நெம்பு கோல் (lever), விசையை அல்லது இயக்கத்தைப் பெருக்குவதற்குப் பயன் படுகிறது. ஒரு புள்ளியை மையமாக வைத்து இந்தத் தண்டு இயங்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இப்புள்ளி ஆதாரப் புள்ளி (fulcrum) எனப் படும் (படம் 1). உறுதிச் சம நிலையில் இருப்பதற்கு, இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை, நெம்பு கோல் பயன் படுத்துகிறது. அவை: எந்தவொரு புள்ளியையும் மையமாகக் கொண்டு, செயல் படும் திருப்புத் திறன்களின் குறியியல் கூட்டுத் தொகை சுழியாகும்; ஒரு புள்ளியின் வழியாகப் பல திசைகளிலும் செயல் படும் விசைகளின் குறியியல் கூட்டுத் தொகை சுழியாகும் என்பன.\n\nநெம்புகோலின் ஆதாரப் புள்ளியை மையமாகக் கொண்டு செயல் படும் திருப்புத் திறன்கள் இடஞ்சுழியாக இருப்பின், அவற்றை நேர் குறியாகவும், வலஞ்சுழியாக இருப்பின், அவற்றை எதிர்க் குறியாகவும் கொள்ளப் படும். உராய்வில்லாத நெம்பு கோல் ஒன்றிற்கு\n\nFBb - FAa = 0 FB = FA a/b FB : வெளியீட்டு விசையைக் குறிப்பது FA : உள்ளீட்டு விசையைக் குறிப்பது எனவே எந்திர இலாபம் = FB / FA = a/b\n\nஆதாரத்தானம். எடை செயல் படும் புள்ளி, திறன் செயல் படும் புள்ளி ஆகியவற்றின் நிலைகளுக்கேற்ப நெம்பு கோல் முதல் வகை நெம்பு கோல், இரண்டாம் வகை நெம்பு கோல், மூன்றாம் வகை நெம்பு கோல் என மூன்று வகைப் படுகிறது.\n\nஆதாரத் தானத்திற்கும், திறன் செயல் படும் புள்ளிக்கும், இடைப் பட்ட நேர் குத்துத் தொலைவு திறன் புயம் என்றும், ஆதாரத் தானத்திற்கும், எடை செயற்படும் புள்ளிக்கும் இடைப்பட்ட நேர் குத்துத் தொலைவு எடைப் புயம் என்றும் வழங்கப் படும். நெம்பு கோலின் எந்திர லாபம் என்பது திறன் புயத்திற்கும் எடைப் புயத்திற்கும் உள்ள விகிதமாகும். எந்திர லாபம் = முதல் வகை நெம்பு கோலில் ஆதாரத் தானம் இடையில் இருப்பதால், திறன் புயமும், எடைப் புயமும் ஒன்றுக்கொன்று சமமாகவோ, ஒன்றை விட மற்றொன்று பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம். இவ்வகை நெம்பு கோலில் எந்திர லாபம் ஒன்றாகவோ, ஒன்றை விட அதிகமாகவோ, ஒன்றை விடக் குறைவாகவோ இருக்கும்.\n\nஇரண்டாம் வகை நெம்பு கோலில் எடை செயற்படும் புள்ளி இடையில் இருப்பதால், திறன் புயம் எப்போதும் எடைப் புயத்தை விட மிகுதியாக இருக்கும். இதனால், இவ்வகை நெம்பு கோலில் எந்திர லாபம் எப்போதும் ஒன்றை விட. மிகுந்தே இருக்கும்.\n\nமூன்றாம் வகை நெம்பு கோலில் திறன் செயற்படும் புள்ளி இடையில் இருப்பதால், திறன் புயம் எப்போதும் எடை புயத்தை விடக் குறைவாக இருக்கும். இதனால், இவ்வகை நெம்பு கோலில் எந்திர லாபம் எப்போதும் ஒன்றை விடக் குறைவாகவே இருக்கும். கதவு, பாக்கு வெட்டி, குறடு, தாளில் துளை போடும் கருவி போன்றவை நெம்பு கோலின் தத்துவத்தைப் பயன் படுத்தும் எளிய கருவிகளாகும். எடை போடும் எந்திரங்கள், தராசு போன்றவற்றிலும், பொருள்களின் பண்புகளை ஆராய்ந்து அறியும் எந்திரங்களிலும், சிக்கலான பல வகை நெம்பு கோல் அமைப்புகள் பயன் படுகின்றன. —எம். இளங்கோவன் —ரெ. ஆறுமுகம்\n\nநெம்புருள் இயங்கமைப்பு\n\nகாண்க: திரிமுனை இயங்கமைப்பு\n\nநெமர்டீனியா\n\nஇது உடற்குழியற்ற (acoelomatic) இரு பக்கச் சமச் சீருடைய (bilaterally symmetrical) தட்டையான, கண்டப் பகுப்பற்ற (unsegmented) விலங்கினச் சிறுபான்மைத் தொகுதியைச் சேர்ந்த புழுவாகும். இது பொதுவாக ரிப்பன் புழு அல்லது துதிக்கைப் புழு என்றும் குறிக்கப் படும். குளிர்ச்சியான பகுதிகளில் மிகுந்து காணப் படும் இப்புழு, பெரும்பாலும் கடலிலேயே காணப் படும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இப்புழுவிற்குத் தனியான தலை இல்லை. முன் முனை கூர்மையாகவும், பின் முனை சற்றுக் குறுகியும் இருக்கும். உடல் கண்டப் பகுப்பற்று இருப்பினும், உள் பகுதி போலிக் கண்டப் பகுப்புடன் (pseudo metamerism) காணப்படுகிறது. முன் முனை தலைக் கண்களையும், தலைப் பள்ளங்களையும் கொண்ட தலைக் கதுப்பு (head lobe) எனப் படும். தலைக் கதுப்பில் 200 அல்லது மேற்பட்ட பக்க வாட்டில் அமையப் பெற்ற கண்கள் உள்ளன. வாய்க்கு மேல் புறத்தில் உள்ள ஒரு துளை வழியாக, துதிக்கை போன்ற உறுப்பு வெளியே வரக் கூடிய அமைப்பைப் பெற்றுள்ளது. ஒரு குழியில் அமைந்துள்ள இது தொடு உணர்ச்சி உறுப்பாகவும், இரையைப் பிடிக்கவும், தற்காப்பிற்கும் பயன் படுகிறது. இதன் முன் முனை திறந்தும், பின் முனை மூடியும் உள்ளன.\n\nநெமர்டீனியாப் புழுவிற்கு உண்மையான உடற் குழியும், சுவாச உறுப்புகளும் இல்லை. உடல் வெற்றிடங்கள் ஜெல்லி போன்ற மீசன்கைமாவினால் (mesenchyma) நிரப்பப் பட்டுள்ளன. குடல் நேராகவும், முழுமையாகவும், பக்க வாட்டுப் பிதுக்கங்களைப் பெற்றும், உள்ளது. இதன் பின் முனையில் மல வாய் உள்ளது. மூடிய குருதி ஓட்ட மண்டலம் ஒரு நடு முதுகுப் பக்கக் குழாயையும், இரண்டு பக்க நீள் வாட்டுக் குழாயையும் பெற்றுள்ளது. ஆங்காங்கு, குறிப்பிட்ட இடங்களில் உள்ள குழாய்களைப் பெற்ற கழிவு நீக்க மண்டலம் உள்ளது. இக்குழாய் ஒவ்வொன்றும் சுடர்ச் செல்களில் (flame cells) முடிவடையும். நரம்பு மண்டலம் 4 கதுப்புகளை உடைய முனையையும், துதிக்கையைச் சுற்றியுள்ள நரம்பு வளையத்தையும், இரண்டு நீள் வாட்டு நரம்புகளையும் பெற்றுள்ளது. மூளையுடன் இணைந்து, ஓர் இரட்டைக் குறு இழைப் பள்ளங்கள் உள்ளன. இவை தொடு உணர்ச்சி உறுப்பாகவும், வேதி உணர்வு உறுப்பாகவும் செயல் படுகின்றன.\n\nநெமர்டீனியா வகைப் புழுவில் ஆண், பெண் உயிரிகள் தனித் தனியாக உள்ளன. சில உயிரிகளில் இரு பாலிகளாக (hermaphrodite) உள்ளன. இன உறுப்புகள் மீசன்கைமாவிலிருந்து உண்டாகி, குடல் பிதுக்கங்களுக்கிடையில் வட்டமான பைகளாக உள்ளன். இவ்வுறுப்புகள் நாளங்களற்றுக் காணப் படுகின்றன. இப்புழுவிற்கு நேர்முக வளர்ச்சி உண்டு. சில சமயங்களில் இதன் வாழ்க்கையில், நீர் மேற்பரப்பில் நீந்தி வாழும் வேற்றிளவுயிரி இடம் பெறுகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> துண்டாக்கப்பட்டு (fragmentation), அவற்றிலிருந்து முழு உயிரி வளரும் முறை (asexual reproduction) பொதுவாக நடை பெறுகிறது. 700 இனங்களாகப் பரவி இருந்தாலும், அவை அனைத்தையும் உள்ளடக்கி 2 வகுப்புகளாகவும், 4 வரிசைகளாகவும் இப்புழு பிரிக்கப் பட்டுள்ளது.\n\nஅனோப்லா (Anopla) என்னும் முதல் வகுப்பில் அடங்கும் உயிரிகளில் துதிக்கை, குத்தூசி போன்ற துணை அமைப்புகள் இல்லை. வாய், மூளைக்குப் பின்னால், குடல் பிதுக்கங்களற்றுக் காணப் படுகிறது. உள், வெளித் தசை அடுக்கு நீளமாகவும், நடு அடுக்கு வட்ட இழைகளை உடையதாகவும் இருக்கின்றன.\n\nஇவ்வகுப்பில் கீழ் வரும் பாலியோ நெமர்ட்டினி என்னும் வரிசையில் அடங்கும் உயிரிகளில், உடல் சுவர்த் தசைகள் 2 அல்லது 3 அடுக்குகளைப் பெற்றுள்ளன. உள் அடுக்கு வட்ட இழைகளை உடையது. பொதுவாகக் கண்கள் இருப்- பதில்லை. எ–டு: டியுபுலானஸ் (Tubulanus), செபலோதிரிக்ஸ் (Cephalothrix), காரினோமா (Carinoma).\n\nஹெட்டிரோ நெமர்ட்டீனி எனும் இரண்டாம் வரிசையில் அடங்கும் உயிரிகளில், கீழ்த் திசை அடுக்கு நீள் இழைகளைப் பெற்றது. இவ்வுயிரிகளில் கண்கள் இருக்கும். எ.கா. லினியஸ் (Leneus), மைக்ரூரா (Micrura), செரிப்ராடுலஸ் (Cerebratulus).\n\nஇரண்டாம் வகுப்பான இநோப்லாவில், துதிக்கையுடன் குத்தூசிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். வெளியே வட்ட இழைகளையும், உள்ளே நீள் இழைகளையும் உடைய தசை அடுக்கு காணப் படும். இவற்றின் குடலில் பிதுக்கங்கள் இல்லை. இவ்வகுப்பில் ஹாப்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையும், டெல்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையும் அடங்கும்.\n\nஹாப்லோ நெமர்ட்டீனி வரிசையில் உள்ள உயிரிகளுக்குக் குத்தூசி அமைப்புடன், துதிக்கை உள்ளது. குடல் நேராகவும், இணையான பக்கவாட்டுப் பிதுக்கங்களைப் பெற்றுமுள்ளது. வாய், மூளைக்கு முன் புறம் அமைந்துள்ளது. எ–டு: புரோஸ்டோமா (prostoma), பாராநெமர்ட்டீஸ் (Paranemertes) டெல்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையில் அடங்கும் உயிரிகளுக்குத் துதிக்கையில் குத்தூசி போன்ற அமைப்பு இல்லை. குடல் பிதுக்கங்களற்றுக் காணப்படும். இவை அனைத்தும் ஒட்டுறுப்புகளைக் கொண்ட ஒட்டுண்ணிகளாக உள்ளன. ௭–டு: மாலக்கோ டெல்லா (Malacodella).\n\nநெமர்ட்டீன் பொது அமைப்பில் தட்டைப் புழுவை ஒத்திருக்கிறது. ஆனால், மல வாய், துதிக்கை, குருதிக் குழாய் மண்டலம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் தன்மையில் இது தட்டைப் புழுவை விட உயர் நிலையில் காணப் படுகிறது.\n\nலினியஸ் (leneus) என்னும் உயிரி அனைத்து நாடுகளிலும் வாழும். இதன் உடல் மிக மிக நீளமாக நாடா போன்று சுருங்கும் தன்மையுடையது. இதன் தலை சற்று அகலமாகவும், கண்களைப் பெற்றும், ஓர் இரட்டைப் பக்கவாட்டு உயர் பள்ளங்களைப் பெற்றும் இருக்கும். இவ்வுயிரியினால் நீந்தி வாழ முடியாது. ஆனால், இதன் உடல் ஒழுங்கற்ற முறையில் முறுக்கிக் கொண்டிருக்கும். இதற்கு வியத்தகு முறையில் இழப்பு மீட்டல் தகுதி அமைந்துள்ளது. மேலும், மிதமான தட்ப வெப்ப நிலையில் துண்டாக்கப் படுதல் மூலம் இனப் பெருக்கம் நடை பெறுகிறது.\n\nசெரிப்ராடுலஸ் (cerebratulus) என்பது அனைத்துக் கடலிலும் வாழும் புழுவாகும். இது நீளமான, தட்டையான பக்க விளிம்புகளையுடைய உடலமைப்பைப் பெற்றது. இதனால், நீந்துவது எளிதாகிறது. பொதுவாகக் கண் இருப்பதில்லை. வெற்றிடமாக, மெல்லுடலிகளின் ஓட்டில் அடிக்கடி இது தங்கும். இதன் தலைப் பகுதி 3 முன் பக்க உறுப்புகளையும், தலைப் பக்கப் பள்ளங்களையும் பெற்றுள்ளது. துதிக்கை மிக நீளமாக இருக்கும். மூளை நரம்புச் செல் திரள் பெரியதாக இருக்கும் —வெ. கிரிஜாபாய்\n\nநெய்க் கவசம்\n\nமூட்டுப் பகுதியைச் சுற்றிக் கவசம் போல் காணப் படும் நெய்க் கவசம் (Synovial Membrane) ஒரு வழுவழுப்பான நெய் போன்ற நீர்மத்தைச் சுரந்து, அசைவை எளிதாக்குவதால், இதனை மூட்டுப் பையுறைச் சவ்வு என்றும் குறிக்கலாம். இது மூட்டை அடுத்துள்ள தசை நாண்களைச் சுற்றியிருக்கும் முண்டுப்பைக்கு அருகிலுள்ள பகுதியின் மேல் உராய்வைக் குறைப்பதற்காகவும் பயன் படுகிறது. முட்டையின் வெண் கருவை ஒத்த மூட்டு நீர்மம் இக்கவசத்தால் சுரக்கவும், உட்கவரவும் படுகிறது. இது கருப் பருவத்தில் காணப் படும் நடுமென் தோல் (mesoderm) பகுதியிலிருந்து உருவாகிறது.\n\nவெளிர் நிறத்தில், வழுவழுப்பாகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் உள்ள இச்சவ்வின் உட்புறம் விரல்கள் போன்ற வில்லை (villi) காணப் படும். மூட்டை அடுத்து, மடிப்புகளுள் கொழுப்புத் திசு நிறைந்து காணப் படும். இதனால், மூட்டின் அசைவின் போது ஏற்படும் வெற்றிடங்களை இக்கொழுப்பு நிறைந்த பகுதி நிரப்புகிறது. பொதுவாக, விரல் போன்ற பகுதி குறைவாகக் காணப் படும். நெய்க் கவசத்தின் உட்புறம் உட்சுவர் (intima) ஆகும். புறச் சுவர் நார், கொழுப்பு மற்றும் மீட்சித் (elastic) திசுக்களினால் ஆனது. இதில் காணப் படும் நெய்க் கவசச் செல்கள் A, B என இரு வகைப் படும். நெய்க் கவச நீர்மம், அசையும் மூட்டுப் பகுதிக்கு நெய் போன்று உதவுவதுடன், மூட்டுக் குறுக்கென்பிற்கு உணவுமளிக்கிறது. கூடுதலாக, நீர்மம் சுரந்த மூட்டைப் பாதுகாப்பதுடன், நோய் நுண்ணுயிர்களை அழிக்க உதவும் பெருவிழுங்கிச் (Macrophage) செல்களாகவும், நெய்க் கவசம் மாறுமெனக் கருதப் படுகிறது. —மா.ஜெ. ஃபிரெடரிக் ஜோசப்\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> நெய்க் கொட்டை\n\nஇதன் தாவரவியல் பெயர் ஹார்புல்லியா ஆர்போரியா (Harpullia arborea) என்பதாகும். ஹா. இம்பிரிக்கேட்டா (H. imbricata), ஹா. குபனியாய்டெஸ் (H. cupaniodes) என்பன இதன் இணை தாவரப் பெயர்களாகும். இது இந்தியாவில் அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1 கி.மீ. உயரம் வரை உள்ள இடங்களில் வளர்கிறது.\n\nஅமைப்பு. இது அழகு தரும் மரம். இதன் அடி மரம் சீராக இருக்கும். பட்டை இளம் பழுப்பு நிறமானது. இலைகள் மாற்றடுக்கில் 3–4 இரட்டைச் சிறகு கூட்டிலைகளாக இருக்கும். சிற்றிலைகள் முட்டை நீள் வட்டமானவை. இவற்றின் அடிப் பகுதி சாய்வாயிருக்கும். தோல் போன்ற கீழ்ப் பகுதி இளம் பச்சையானது. ஒழுங்கான பூக்கள் இளமஞ்சள் நிறமாயும், ஒளி வீசும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இவை பல பால் ஈரகம் கொண்டவை. புல்லி இதழ்கள் 4–5 நேரானவை. சமமாயும், திருகு இதழ் அமைவிலும் இருக்கும். அல்லி இதழ்கள் 4–5, வழக்கமாகக் கால்களுடனும், குறுகி நீள் வட்டமாகவும், செதில்களற்றும் இருக்கும். வட்டத் தட்டு தெளிவற்றது.\n\nமகரந்தத் தாள்கள் 5–8, வட்டத் தட்டின் உட்புறத்தில் செருகியிருக்கும். மகரந்தக் கம்பி மென்மையாயிருக்கும். மகரந்தப் பை நீள் சதுரமாயிருக்கும். இரண்டு அறைகள் கொண்ட சூல் பை முட்டை வடிவானது. சூலகத் தண்டு, நீட்சியடைந்திருக்கும். சூலக முடி மெலிந்து, ஏறக் குறையத் திருகியிருக்கும். ஒவ்வொரு சூலக அறையும், இரண்டு சூல்களைக் கொண்டிருக்கும். கனி, தோல் போன்ற இரண்டு விதைகள் கொண்ட அறை வழி வெடிக்கும் (loculicidal) வகையாகும். கனி, இரண்டு தடுக்கிதழ்களுடன் பழுப்பு ஆரஞ்சு நிறம் கொண்டது. அறைகளில் 1–2 விதைகளிருக்கும். இவை சற்று உருண்டையாகவும், கறுப்பாகவுமிருக்கும். வழக்கமாகப் பத்திரியுடன் (aril) காணப் படும். கரு தடித்த அரைக் கோண வித்திலைகளுடன் காணப் படும்.பயன். காய்கள் சோப்பைப் போன்று, நுரையைத் தரும். பட்டை, யானைக் கொளுஞ்சி (Entada scandens) என்னும் கொடியைப் போன்று, மயிரிலுள்ள அழுக்கைப் போக்கும். மீன்களைக் கொல்லும். விதையிலிருந்து எடுக்கப் படும் எண்ணெயை வாத வலிக்குத் தடவலாம். —கோ. அர்ச்சுனன்\n\nநெய்ச் சட்டி\n\nஇதற்கு நெய்ச் சட்டிக் கீரை, சகதேவி, சிற்றிலை, சீதா செங்கழுநீர், சீதேவி செங்கழுநீர், தேவகந்தம் என்றும் பெயர்களுண்டு. இதன் தாவரப் பெயர் வெர்னோனியா சினேரியா (Vernonia cinerea) என்பதாகும். கோனிசா சினேரியா (Conyza cinerea) என்பது இதன் இணை தாவரப் பெயராகும். ஆஸ்டரேசிக் குடும்பத்தைச் சேர்ந்த, இதனைச் சிற்றூர் மக்கள் உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இச்செடியை வெப்ப மண்டல ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் காணலாம். இது கடற்கரை, சமவெளி, மலைப் பகுதி ஆகிய இடங்களில் காணப் படும். இதனைத் தரிசு நிலங்களிலும், கூட்டங் கூட்டமாகக் காணலாம்.\n\nஅமைப்பு. இச்செடி 75 செ.மீ. உயரம் வளரும். தனியிலைகள், மாற்றடுக்கில் அமைந்தவை. முழு இலைகள் முட்டை–நீள் முட்டை முதல் தலை கீழ் ஈட்டி வடிவானவை. இலை மேற்பகுதி வழவழப்பாகவும், கீழ்ப் பகுதி சிறு மயிர் அடர்ந்தும் காணப் படும். இலை நுனி கூரானது. இலைக் காம்பு 1 செ.மீ. நீளமானது. கூட்டுப் பூத்திரள்கள் (panicles) தளர்வானவை. தலை மஞ்சரி மலர்கள் அனைத்தும் ஒரேயினத்தவை. மஞ்சரியடிச் சிதல்கள் (involucre) மணி வடிவானவை. இவை இலையையொத்து மென்மையாயிருக்கும். பூத்தளம் குழிவுடன் காணப் படும். அல்லிகள் சமமானவை; 0.7 மி.மீ. அளவானவை. குழலின் நீளம் 3.5 மி.மீ. அல்லி மடல்கள் 5, குறுகலாக இருக்கும். 5 மகரந்தப் பைகள் நீள் சதுரமாக 1 மி.மீ. அளவானவை. சூல் பை 0.8 மி.மீ. அளவானது. சூலகத் தண்டு 3.5 மி.மீ. நீளமானது. சூலக முடி கூரிய நுனியுடையது. மலர்கள் இளஞ் சிவப்பு–ஊதா நிறத்திலிருக்கும். இலைகள் நவம்பர்–ஏப்ரலில் மிகுதியாகக் காணப் படுகின்றன.\n\nபயன். இதன் இலை, பூ, வேர் முதலியவை மருத்துவப் பயன்களைத் தரக் கூடியவை. உடலுக்கு வலிமையைத் தரும். நஞ்சை முறிக்கும் வியர்வையை உண்டாக்கும். இச்செடியை உலர்த்திப் பொடித்துச் சாறெடுத்துக் காய்ச்சலுக்குக் கொடுக்க, வியர்வையை மிகுதிப் படுத்தும். உட்சூடு, வெள்ளை, வாய்ப் புண், வாந்தி, வாய்க் கசப்பு போகும். சிறுநீர்ப் பை நோய், நீர்க் கடுப்பிற்கும் தரலாம். பசி உண்டாகும். நா வறட்சி நீங்கும்.\n\nபுதிய வேரை ஒரு பிடி எடுத்துச் சிதைத்து, மண் சட்டி யிலிட்டு நீர் சேர்த்துக் குடிநீராக்கி, நாளும் இரு வேளை குடித்து வர வீக்கங்கள் கரையும். இவ்வேர் சர்வ மேக ராஜாங்க எண்ணெயில் பயனாகிறது. உடல் சூடு தணித்து, உடல் அழகுற நெய்ச் சட்டி வேர், இலை, பூ ஆகியவற்றை இடித்துப் பிழிந்த சாறு 1 லிட்டருடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சுண்டக் காய்ச்சி வடித்து, வாரம் இரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். விதையைப் பொடித்து, வெல்லத்தில் தர, புழுக்கள் சாகும். விதையைக் குடி நீரிட்டு, உள்ளுக்குத் தரத் தோல் நோய்கள் குணமாகும். இதன் கீரையைப் பருப்புச் சேர்த்து, வேக வைத்துக் கடைந்து, நெய் சேர்த்து, உணவுடன் கலந்துண்ணக் கண்ணுக்கு ஒளி கிடைக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> —கோ. அர்ச்சுனன்\n\nநெய்ம்மீன் (சித்திரை)\n\nகோடைக் கால விண் மீன் குழுவான கன்னி (Virgo) ராசியில் அமைந்துள்ள α–வர்ஜினிஸ் (α–Virginis) என்னும் விண் மீன், நெய்ம்மீன் அல்லது சித்திரை (spica) எனப் படுகிறது. இது வானத்தில் தோன்றும் ஒளி மிக்க விண் மீன்களில், பதினைந்தாம் விண் மீனாகும். இது கன்னி ராசியில் உள்ள விண் மீன்களில், மிகவும் அதிக ஒளியுடைய விண் மீன். இவ்விண் மீன் ஓர் இரும விண் மீன் (binary star) ஆகும். இவ்விண் மீனின் பொலிவு பரிமாணம் (magnitude) தோராயமாக 0.98 ஆகும். வெண்மை கலந்த நீல நிறமுடைய இது B₁ நிற மாலை வகையைச் (Spectral type) சார்ந்ததாகும். புவியிலிருந்து ஏறத் தாழ 270 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது; சூரியனைப் போல் ஏறத் தாழ 2440 மடங்கு ஒளியுடையது. இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 20,000K ஆகும். —பெ. வடிவேல்\n\nநெய்யாத் துணி\n\nநூற்பும், நெசவும் இன்றி இழையை, நேரடியாகத் துணியாக மாற்றித் தயாரிக்கப் படும் நெய்யாத் துணி (Non-woven fabric) என்றும், உருவாக்கப் பட்ட துணி (formed fabric) என்றும் குறிப்பிடப்படும். பொருள்களின் ஆய்வுக்கான அமெரிக்க நிறுவனம் (American Society for Testing Materials–ASTM) நெய்யாத் துணிக்குரிய வரையறையை எந்திர வழியிலோ, வேதி மாற்றம் வாயிலாகவோ, சூடேற்றியோ, தக்க கரைப்பானைப் பயன்படுத்தியோ, இவ்வழி முறைகளை இணைத்துப் பயன்படுத்தியோ, இழைகளை ஒன்றோடொன்று ஒட்டி அல்லது பின்னிப் பிணைத்து உருவாக்கப் படும் துணி நெய்யாத் துணி ஆகும் என வரையறுத்துள்ளது.\n\n1930 இல் சில நெசவாலைகள் கழிவுப் பருத்தி இழைகளை நேரடியாகத் துணியாக்க முயன்ற போது, நெய்யாத் துணியின் வரலாறு தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, பெருமளவில் தயாரிப்பு தோற்றுவிக்கப் பட்டது.\n\nநெய்யாத் துணிகளின் தயாரிப்பு முறைகளும், சீர் செய்தலும் இழைகளின் தன்மை, இழைகளை அடுக்கும் முறை, பாலி எஸ்ட்டர், அக்ரிலிக், பாலி புரோப்பிலீன், பாலி எத்திலீன் எனப் பல வகை இழைகளும், இவற்றின் கலப்பினங்களும், கலவைகளும் இதற்குப் பயன் படுத்தப் படும். வெட்டிழை நீளம் 2–150 மி.மீ. இருக்கலாம். இத்துறையில் பயனாகும் இழைகளின் நுண்மை, பொதுவாக 1.5–6 டெனியர் இருக்கும். அறுவை மருத்துவம், தொழிலகப் பயன்களுக்கான துணிகளை உருவாக்க 5 மைக்ரோ டெனியர் வரை சன்னமான இழைகள் கூடப் பயன் படுகின்றன.\n\nநெய்யாத் துணி உருவாக்கத்தில் முதற் கட்டமாக வலையமைப்பு (web formation) நிகழ்த்தப் படுகிறது. இதில் இணையாக வைக்கப் பட்ட வலை (parallel laid web), குறுக்காக வைக்கப் பட்ட வலை (cross laid web), சீரின்றி வைக்கப் பட்ட வலை (random laid web), விரைவாகத் தெளிக்கப் படும் முறை (high velocity spray), காற்றினால் அமைக்கப் படும் வலை (air laid web), ஈர அமைப்பு வலை (wet-lay web) ஆகியவை அடங்கும்.\n\nஇணை வலை. நீட்டும் எந்திரத்தின் (carding machine) வழியே செலுத்தப் படும் இழை இணைப் பொருமையில் (parallel alignment) அமர்த்தப் படுகின்றது. மேன்மேலும், இவ்வாறு அடுக்கப் படுவதால், வேண்டிய அளவுக்குக் கடிமனாக வலை உருவாகிறது. இத்துணியின் நீள வாட்ட வலிவு கூடுதலாகவும், குறுக்கு வாட்ட வலிவு குறைவாகவும் இருக்கும்.\n\nகுறுக்கு வலை. நீட்டும் எந்திரத்திலிருந்து வெளி வரும் நேரிழை அடுத்தடுத்த அடுக்குகளில் குறுக்காக அமைந்திருக்குமாறு நெறிப் படுத்தப் படுகின்றது. இத்துணியின் இழு வலிமை அனைத்துத் திசைகளிலும் சமமாக இருக்கும்.\n\nசீரற்ற வலை. உதிரி இழையைக் காற்றினால் ஊதி ஒரு சுழலும், துளை மிகுந்த உருளையின் மீது செலுத்தினால், உருளையினுள் நிலவும் வெற்றிடம் இழையை, உருளையின் மீது ஒட்டுமாறு செய்கிறது. இதன் விளைவாக, ஒரு கனமான வலைப் பின்னல் (matte) உருவாகிறது. இதனை, ஓர் உள் வாங்கி (licker-in) அல்லது பற்கள் பொருத்தப் பட்ட சுழலும் உருளை மீது செலுத்தி வலையைப் பிரித்து, இங்கு தோன்றும் துகள்களை, மற்றொரு வெற்றிட உருளை மீது செலுத்தினால், திசைச் சீரற்ற, ஆனால், பொதுச் சீரான வலை கிட்டும். இவ்வலைகளின் எடையும் சீராக இருக்கும்.\n\nதெளித்தல் வழி வலை. இலையை ஒரு வாரின் (belt) மீது தெளித்துச் சீரற்ற வலையைத் தோற்றுவிக்க வேண்டும். பின்பு, வெப்பமும், அழுத்தமும் உயர்த்தப் பட்டு இழை உருக்கப் படுகின்றது. இதனால், இழைகள் நன்கு இணைகின்றன. இவ்வுத்தி வெப்பத்தால், இளக வல்ல இழை வகைகளுக்கு நன்கு பொருந்தும்.\n\nகாற்றூது வழி வலை. நீட்டும் (நேராக்கும்) எந்திரம் அல்லது இழை புரியிலிருந்து உயர் விரைவு காற்றோட்டத்தினால் இழை இழுக்கப்பட்டு, ஒரு நகரும் திரையின் மீது பாய்ச்சப் படுகிறது. இழை அமைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவதற்கு வெற்றிட அமைப்புகளும், அழி சட்டங்களும் (grids) உள்ளன. இவற்றின் பயனாகக் கோடு, பனிக் கட்டி வடிவம் ஆகியவற்றைக் கொண்ட துணியை உருவாக்கலாம்.\n\nஈர (வழி முறை) வலை. இழையை வேதிப் பொருள்களுடன் கலந்து, கலவையை அடிப்பானின் மூலமும், கலக்கி மூலமும் செலுத்திக் காகிதக் கூழ் (pulp) போன்று செய்து, ஒரு வலைத் திரையின் மீது இட வேண்டும். மிகையான ஈரம் அகற்றப் பட்டு, உருவாகும் வலை அமுக்கப் படுகிறது. நெய்யாத் துணி உருவாக்கத்தின் இரண்டாம் கட்டமாக, வலையிலுள்ள இழைகள் வேதி முறையில் பிணைக்கப் படுகின்றன.\n\nரெசின் பிணைப்பு (resin bonding). நீர்ம உறிஞ்சு தன்மை கொண்ட இழைகளாலான வலையாக இருப்பின், இவ்வலையைத் தக்க ஒட்டுவிப்பியைக் கொண்டு, நிறையுற்றதாக்க வேண்டும். தெளித்தல், அச்சிடல், ஒற்றுதல், அமிழ்த்துதல் எனப் பல வழி முறைகள் இதற்குப் பயனாகின்றன. பின்பு, இரண்டு உருளைகளுக்கு இடையே செலுத்தி, அழுத்தி, மிகையான நீர்மத்தைப் பிழிந்தெடுக்க வேண்டும். இறுதியாக, உலர்த்தப் பட்ட வலையை ஏறத் தாழ 200°Cக்குச் சூடேற்றிப் பதப்படுத்த வேண்டும்.\n\nரப்பர் பால் நுரை வழிப் பிணைப்பு (latex foam bonding). ரப்பர் பாலை வலை மீது தெளிக்கலாம் அல்லது சுழலும் சல்லடைகளினூடே செலுத்தலாம். எளிதில் வெடித்து விடும் நுரை தோன்றினால், விளையும் துணி விறைப்பாகவும், நிலையான நுரை தோன்றினால், உருவாகும் துணி நெகிழ்வுற்றதாகவும் இருக்கும்.\n\nஊன் பசைப் பிணைப்பு (Gelatin bonding). செல்லுலோஸ் வழிப் பொருளான BAR இழையை வெட்டிழை வடிவில் வலையின் கூறான இழையுடன் கலந்து, நீரிலிட்டால், BAR இழைகள் படிக உருவற்ற திண்மக் கூழாக மாறி, வலையின் முதன்மை இழைகளின் குறுக்கீட்டுப் பகுதிகளில் வீழ் படிகின்றன. இதன் பின்பு, இவ்வலை அழுக்கப் பட்டு உலர்த்தப் படுகிறது.\n\nவெப்பத்தால் இளக்கிப் பிணைத்தல் (Thermoplastic bonding) . வெப்பத்தால் இளகாத அல்லது உயர் உருகு நிலை கொண்ட, வெப்பத்தால் இளக வல்ல இழையாலான வலையுடன் எளிதில் உருக வல்ல இழையைக் கலக்கலாம். பின்பு, இவ்வலையை உருளை அழுத்தத்திற்குட் படுத்தியோ, புடைப்புருவேற்றியோ துணியாக்கலாம். உருளைகளுக்கிடையே அழுத்தும் போது, வலையுடன் கலக்கப் படும் இளக வல்ல நெகிழியின் உருகு நிலைக்குச் சூடேற்ற வேண்டும். அப்போது, இளக வல்ல இழை உருகிப் பிணைப்பை உருவாக்குகிறது.\n\nநூற்புப் பிணைப்பு (spun bonding). இழை வலை, ஒரு நகரும் திரை அல்லது வாரின் மீது படிவிக்கப் பட்டு, பின்பு இயல்பிய, இயைபிய முறைகளில் பிணைக்கப் படுகிறது. இது நீர்மப் பல படியிலிருந்து துணி வரை செல்லும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இதனைச் செயல் படுத்துவதற்கு, நான்கு உத்திகள் உள்ளன. ஒரு வழி முறையில் துணை முகப்பிலிருந்து நீளிழை இழுக்கப் பட்டு, ஒரு நகரும் திரையின் மீது படிவிக்கப் படுகிறது. இதனால், பெறப் படும் வலையை முன் முனை ஊசிகளால் குத்தி, ஒரு படித்தான துணியை உருவாக்கலாம். ஊசியின் தன்மை, ஊசி எய்தும் ஆழம், இழை வகை, இழையின் குறுக்களவு ஆகியவற்றைச் சரி வர அமைத்து, துணியின் தடிமன், வலிமை மற்றும் அடர்த்தியைத் தக்க நிலையில் நிறுவலாம். இரண்டாம் வழி முறையில் துளை முகப்பிலிருந்து நீளிழைகளைக் காற்றோட்டத்தினால் இழுத்து, ஒரு திரை மீது சீரின்றித் தெளிக்க வேண்டும். வெப்பமும், அழுத்தமும் மேலிட்ட நிலையில், இவ்வலையை இரண்டு உருளைகளுக்கிடையே அமுக்கினால், பிணைப்புத் தோன்றும். மூன்றாம் உத்தியில், சுழலும் துளை முகப்பு வழியே நகரும் வாரின் மீது பரப்பப் படுகிறது. இவ்விழைகளின் மீது ஒரு வேதிப் பிணைப்புப் பொருளைத் தெளித்துப் பதனிடுவர். வலையமைவுக்காக விழும் இழைகளில் மின்னேற்றத்தைத் தோற்றுவித்து, அவற்றின் பரவலையும் ஒருங்கிணைப்பையும் கட்டுப்படுத்தலாம். ஒரே வலையில் இரு வேறு பல படிகளைப் பிழிந்து வார்க்கலாம் (extruded) அல்லது இழைகளை அலைவுறுத்தலாம் (Crimping) அல்லது விஸ்கோஸ் ரேயான் இழையைப் பயன் படுத்தலாம். இவை போன்று பல நுண் திருத்தங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. நூற்பிணைப்பு முறையில் தயாரிக்கப் பட்ட துணிகளுக்கு ரீமே, டைவக், டைபார் , செரெக்ஸ் போன்ற வணிகச் சின்னங்கள் உள்ளன. இவை முறையே பாலி எஸ்ட்டர், பாலி எத்திலீன், பாலி புரோப்பிலீன், நைலான் ஆகிய இழைகளினாலான நெய்யாத் துணிகள். நூற்புச் சரிகை வகைப் பிணைப்பு (spun laced bonding) என்னும் முறையில், காற்றால் ஊதித் தெளிக்கப் படும் இழைகள் ஒரு குறிப்பிட்ட கோள வடிவில் திரையின் மீது அமர்கின்றன. இதனால், சித்திர வேலைப்பாடுகள் மிகுந்த துணி உருவாகும். பாலி எஸ்டர் , நைலான் ஆகியன இம்முறைக்கு ஏற்றவை.\n\nஉருக்கிப் பிணைத்தல் (Melting). ஈரிழைக் கோவைகளை (bicomponent composite fabrics) ஒன்றுக்குள் ஒன்றாகவோ, அடுத்தடுத்தோ அமையுமாறு பிழிந்து வார்க்கலாம். கவனமாகச் சூடேற்றினால், எளிதில் உருகும் கூறு இழை உருகி, ஏனைய இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கிறது. இக்கட்டத்திற்கு முன்பாகச் சுரண்டிக் கிளறும் (Napping) முறையைச் செயல் படுத்தினால், போர்வை, ஜமக்காளம் போன்ற துணிகளைக் கூடத் தயாரிக்கலாம். உடலுள் பிணைப்பு (autogenic bonding). செயற்கை இழையாலான ஒரு வலை மீது தகுந்த கரைப்பானைத் தெளித்தால், இழை கரைந்து மென்மையாகும். கரைந்த பகுதி, கரையாத இழைப் பகுதிகளை ஒட்டுவிக்கும். தக்க தருணத்தில், கரைப்பானை ஆவியாக்கி வெளியேற்றினால், பிணைப்புற்ற வலை கிடைக்கும்.\n\nகதிர் வீச்சு வகைப் பிணைப்பு (radiation bonding). நிறைவுறாத பாலி எஸ்ட்டரையும், ஓரளவு ஒருங்கமைந்த பாலி எஸ்ட்டரையும் கொண்ட வலையை ஒரு குறுக்குப் பிணைப்பூட்டும் வேதிப் பொருளுடன் கலந்து, எலெக்ட்ரான் கற்றைக் கதிர் வீச்சுக்குட் படுத்தினால், குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, நீளிழைகள் பிணைகின்றன.\n\nகோவைப் பிணைப்பு (Composite bonding). இதில் இரு வகை உள்ளன. ஸ்கிரிம் வலிவூட்டப்பட்ட பொருள் (SRM) எனும் அமைப்பில், இழை வலைகள் உடுக்கை அமைப்புற்ற (Sandwich) நைலானாலான ஸ்கிரிம் உள்ளுறையின் மீது சுற்றப் பட்டுள்ளன. திசு–இழைத் தகடு (Tissue fibre laminate–TFL) எனும் தயாரிப்பில், திசுக்களாலான வலையைக் குறைந்த முறுக்கேற்றப்பட்ட நீள் ரேயான் நூல்களின் மீது அச்சிடல் பிணைப்புத் தோற்றுவிக்கப் படுகிறது. இரு வகைத் துணிகளும், ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வல்ல அறுவை மருத்துவ வகைத் துணிகளாகப் பயனாகின்றன.\n\nதைத்துப் பிணைத்தல் (Stitch through bonding). ஏடு நிலைக்குட்படுத்தப் பட்ட வலைகளை, வெப்பத்தால் இளகும் நெகிழி நூல்களைக் கொண்டு தைத்துச் சூடேற்றினால், நூல் இளகி, சுருங்கி வலையமைப்பை ஒட்டுவித்துப் பிணைக்கிறது.\n\nஅச்சு வகை ஓட்டுவிப்பு (printed adhesive bonding). இளக வல்ல ஒட்டுவிப்பியாலான கோலத்தை, ஒரு வாரின் மீது அச்சிட்டு, அதன் மீது நீளிழை வலையை அல்லது நேராக்கப் பட்ட (carded) வெட்டிழையைப் பரப்ப வேண்டும். ஒட்டுவிப்பி ஓரளவு பதனிடப் பட்ட நிலையில் வாரிலிருந்து விடுபட்டு, வலையின் மீது ஒட்டும். இவ்வலையைச் சூடாக்கினால், ஒட்டுவிப்பி இளகிச் சுருங்குகிறது. இவ்வாறு, ஒன்றிணைந்த ஒட்டுவிப்பி அடுக்கு ஒரு தாங்கு திரையாகி, இழைகள் யாவற்றையும் மேல் நோக்கி நிற்குமாறு செய்கிறது. அடுக்கின் கோல அமைப்பும், யாப்பும் பதிக்கப் பட்ட ஒட்டுவிப்பியின் கோல அமைப்பைப் பொறுத்திருக்கும். இறுதியாக, துணியைச் சூடேற்றி வடிவமைக்கலாம். இவ்வழி முறையில் சிறு திருத்தங்களைப் புகுத்துவற்கு இழையின் தன்மை, வலையின் ஒருங்கமைப்பு, ஒட்டுவிப்புப் பாணி, ஒட்டும் இழையின் எண்ணிக்கை ஒன்றிணைதல் விகிதம் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n\nஊசிப் பொத்தல் முறை (needle punching). இழை வலைகளை முன் முனை கொண்ட ஊசிகளால் குத்துகையில், இழைகள் சிடுக்குறுகின்றன (entangled). ஊசிகளை மீண்டும் வெளியே எடுக்கும் போது, இச்சிடுக்குகள் கூடுதலாகின்றன. ஊசிகளின் எண்ணிக்கை, அவற்றின் முனையிலுள்ள முள்களின் வடிவமைப்பு, ஊசிகளைப் புகுத்தும் கோணம், ஊசி உட்புகும் ஆழம், இழை வகை ஆகியவற்றைப் பொறுத்து நெய்யாத் துணியின் இயல்பு உருவாகும்.\n\nநெய்யாத் துணியைச் சீர் செய்தல். சாயந் தோய்த்தல், அச்சிடுதல், மேன்மையேற்றம், உருளை அழுத்தம் எனப் பல சீர் செய்தல் முறைகள் இவ்வகைத் துணிகளுக்கு ஏற்றவையாகும்.\n\nசிறப்பியல்பு. ஒரு நெய்யாத் துணியின் தன்மை அதன் தயாரிப்புக் கட்டத்தில் நிலவிய துணையலகுகளைப் பொறுத்ததாகும். எனவே, இத்தன்மை அகன்ற வரம்புக்குட் பட்டது. தோற்றத்தில், இத்துணி காகிதத்தைப் போன்றோ, பின்னல் கம்பளியைப் போன்றோ, மிக அரிதாக நெசவுத் துணி போன்றோ இருக்கும். திசுக் காகிதத்தைப் போன்று மெலிதாகவோ, அட்டையைப் போன்று தடித்தோ, தயாரிக்கப் படலாம். குறை ஆடிமை (translucence) அல்லது முழு ஆடிமை (transparancy) பெறப் படலாம். நுண் துளைமையிலும் (porosity) பரந்த வரம்பு உள்ளது. துவளுமை (drapability) ,நீள் வலிமை ஆகியன நெய்யாத் துணியில் குறைந்த அளவிலேயே இடம் பெறுகின்றன. இவை பெரும்பாலும் உலர் சலவைக்கே ஏற்றவை. நெய்யாத் துணிகளுக்குக் குறிப்பிட்ட பயனுக்கான தன்மைகளைப் புகுத்தலாம். எடுத்துக் காட்டாக, சில வகைச் சிறு துவாலை (diaper) நெய்யாத் துணியாலான இரு வேறு அடுக்கைக் கொண்டது. மேலடுக்கில், நனைப்பூட்டியால் நிரப்பப் பட்ட பாலிஎஸ்ட்டர் துணி இடம் பெறுகின்றது. இது விரைவாக நீர்மம் புகுந்து வடிவதற்கு உதவுகிறது. பக்க வாட்டில் உறிஞ்சப்படுதல் மிகச் சிறிதளவே நிகழ்கிறது. உள்ளடுக்கில் நீர்மத்தை உறிஞ்ச வல்ல ரேயான் உள்ளது. அறுவை மருத்துவர் அணியும் முகமூடி தயாரிப்பதற்கு மெல்லிய, எளிதில் வடி கட்ட வல்ல நெய்யாத் துணி பயனாகிறது. இதன் இழைகளின் நுண்மை மைக்ரோ டெனியர் அளவில் இருக்கும். பனிச் சறுக்கு விளையாட்டு வீரர் அணியும் உடையை மைக்ரோ டெனியர் இழைகளாலான தடித்த, மென் தோலையொத்த (fluffy) வெப்பம் காக்கும் நெய்யாத் துணி கொண்டு தயாரிக்கலாம்.\n\nநெய்யாத் துணியைப் பயன் முறை அடிப்படையில் நீடித்து உழைப்பது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தக்கது என இரு பிரிவாக வகைப் படுத்தலாம். முதல் வகையைக் குல்லாய் இடைச் செருகல் ஏடு, அறை கலன் உறை, கம்பள விரிப்பு அடித் தளம், வடி கட்டி, வெப்பக் காப்பீட்டு அமைப்பு ஆகியவற்றுக்கும், இரண்டாம் வகையை மகளிர் சுகாதாரத் துண்டு, அறுவை மருத்துவ, தொழிலக வகை முகமூடி, வைப்புக் கட்டு, தூசிச் சேகரிப்பான் ஆகியவற்றுக்கும் பயன் படுத்தலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். B.P Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw–Hill Kogakusha Ltd., Singapore, 1985.\n\nநெய்வனம்\n\nபரப்புப் பூச்சு, நெய் வனம், புறப் பரப்புச் செம்மை எனப் பல சொற்றொடர்களினால், ஒரு பரப்புக்கு அரிமானப் பாதுகாப்பு அளிக்கும் செயல் முறை குறிப்பிடப் படுகிறது.\n\nபூச்சுகள் புறப பரப்புக்கு விரும்பத் தக்க பளபளப்பையும், நிறத்தையும், குறைகளற்ற தோற்றத்தையும் அளிப்பதுடன், உலோகப் பரப்புகளை அரிமானமுறாது, தடுக்கின்றன. நெகிழிப் (plastic) பரப்புகள் ஒளி படுவதால், நிலையிறக்கமாவதைத் தவிர்கின்றன. மரப் பலகைகளுக்கு நீர் புகாத படலங்களையும், கீறல் படாத பரப்புகளையும் அளிக்கின்றன. சில சிறப்பு ஒளிப் பண்புகளை வெளிப்படுத்தவும் பூச்சுகள் பயன் படுகின்றன. நீச்சல் குளங்களின் அடித் தளங்களில் ஒளியை உறிஞ்சி, நீரைச் சூடு படுத்துவதற்கும், (ராணுவ அமைப்புகளின்) ரேடார் கதிர்களை உறிஞ்சுவதற்கும், மின்னமைப்புகளுக்குக் காப்பீடு அளிப்பதற்கும் பூச்சுகள் பயன் படுவதுண்டு. மேலும் அடையாளக் குறியிடுதல், பாதுகாப்பு, சறுக்காத பரப்பு அளித்தல், வெப்ப நிலைக் கட்டுப்பாடு, ஒளிக் கட்டுப்பாடு, தூசுக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கும் பூச்சுகள் உதவுகின்றன.\n\nபூச்சுகள். இவை புறப் பரப்பு–காற்று இடைவெளியைப் புறப் பரப்பு–பூச்சு இடையீடாக மாற்றுகின்றன. பூச்சுகள் உலர்தல் வாயிலாகவோ, பதப்படுத்தல் வாயிலாகவோ கடினமாகின்றன. உலர்தல் ஓர் இயற்பியல் இயக்கமாதலால், கரைப்பான் ஆவியாக வெளியேறுகிறது. பதப்படுத்தல் ஒரு வேதி இயக்கமாதலால், இங்கு ஆக்சிஜனேற்றமும் பல்லுறுப்பாக்கமும் நிகழ்ந்து, நீர்மப் பூச்சு திண்மமாகிறது.\n\nநீர்மப் பூச்சு என்பது ரெசின் அல்லது உலரும் எண்ணெய் மற்றும் கரைப்பானாலான நீர்மத்தில் நுண் சிதறல்களாக்கப் பட்ட நிறப்பொருள்கள். விரும்பத் தக்க சில சிறப்புப் பண்புகளை ஏற்றும் பொருட்டு, சில கூட்டுப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன.\n\nநீரை அடிப்படையாகக் கொண்ட பூச்சுக்கள் மொத்தத்தில் 70%க்கும் மேலான பங்கு பெறுபவை. நீரை அடிப்படையாகக் கொண்ட, கட்டிடச் சிறப்புக் கலைப் பூச்சுகள் ரப்பர் பாலினாலானவை. நீரில் தொங்கல் நிலையிலுள்ள தொகுப்பு ரெசின்களே ரப்பர் பால் பூச்சு என வழங்கப் படுகின்றன. உலரும் பூச்சுப் படலத்திலிருந்து நீர்ஆவியாகி, துகள்கள் ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான படலமாக உருவாகி, நிறப் பொருளை இணைத்தும், புறப் பரப்புடன் ஒட்டியும் செயல் புரிகின்றன.\n\nநீர்மப் பூச்சின் இயைபு. வண்ணப் பூச்சுகளில் பொதுவாகக் கீழ்க் காணும் உட்கூறுகள் உள்ளன. அவை இணைப்பி அல்லது ஊடகம் (binder or vehicle), நிறப் பொருள் (pigment), உலர்தல் ஊக்கி (drier), கரைப்பான் அல்லது விளாவல் நீர்மம் (solvent or thinner) நிறப்பி (filler) அல்லது நீட்சிப் பொருள் (extender) என்பன.\n\nஇணைப்பிகள், கரிமச் சேர்மங்கள் ஆகும். இவை சிறுமப் பல்லுறுப்பிகளாவோ, பெருமப் பல்லுறுப்பிகளாகவோ விளங்குகின்றன. இறுதிப் படலத்தில் இவை தொடர்ச்சியான தளத்தை உருவாக்குகின்றன. பூச்சில் தாக்கு வலிமை, நெகிழ்ச்சி, பளபளப்பு, வேதி எதிர்ப்பு, பதப்படும் இயல்பு ஆகியன இணைப்பியின் தன்மையைப் பொறுத்தனவாகும்.\n\nஇணைப்பிகளின் பொது வகைப்பாடு. இவை ரப்பர் பால், நீர் கலந்த படலப் பொருள், நீரற்ற சிதறல், கரைப்பான் கலந்தவை என வகைப் படுத்தப் படும். ரப்பர் பால் வகையில் உயர் மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பித் துகள்கள் நீரிய ஊடகத்தில் சிதறியுள்ளன. பல்லுறுப்பிச் சிதறல் நிலையிலுள்ளதால், கலவையின் பாகு தன்மை நீரின் பாகு தன்மையைப் பொறுத்தது. இதனால், மிக உயர் மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பி பயன் படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. நீர் ஆவியாவதால், படலம் உருவாகிறது. பல்லுறுப்பித் துகள்கள் அயனி விலக்கு விசையை மீறி ஒன்றிணைகின்றன. துகள்கள் ஒன்றையொன்று தொடுகையில், அவற்றின் புறப் பரப்பு விசைப் படலம் இறுகித் தொடர்ச்சியாவதற்கு உதவுகிறது. அக்ரிலிக் அமைப்புகளும், வினைல்–அக்ரிலிக் சக பல்லுறுப்பி அமைப்புகளும், ரப்பர் பால் (பல்லுறுப்பிப் பால்) வகையின் உட்பிரிவுகளாகும். பால்மப் பல்லுறுப்பாக்கல் முறையில் ரப்பர் பால் வகைப் பூச்சு நீர்மங்கள் தயாரிக்கப் படுகின்றன. நீர் கலந்த பூச்சுகளில் அக்ரிலிக், பாலி எஸ்டர், யூரிதேன், ஃபினாலிக், எப்பாக்சி ஆகியன குறிப்பிடத் தக்கவை.\n\nநீரற்ற நீர்மச் சிதறல்கள் (non–aqueous dispersions). 1970ல் தானுந்திகளுக்கு இவ்வகைப் பூச்சு பயன் பட்டது. தற்போது, இது துணை நிலை இணைப்பியாக மட்டுமே கொள்ளப் படுகிறது. மிகச் சிறிதளவே கலக்கப் படினும், பூச்சு உலரும் தன்மையைப் பெரிதும் உயர்த்துகிறது. வண்ணப் பூச்சு\n\n│\n\n┌────────────────┴────────────────┐\n\n│ │\n\nநிறமி குழை வனம்\n\n│ │\n\n┌───────┴───────┐ ┌──────────┼──────────┐\n\n│ │ │ │ │\n\nநிறப் பொருள் நிரப்பி படல நீர்மம் சேர்க்கைப்\n\nஆக்கி (கரைப்பான்) பொருள்\n\n(நிரப்பி)\n\nகரைப்பான் சுமக்கும் பூச்சுகள். இவ்வகையில் முதன்மையானவை ஆல்கைடுகள், வேதி நோக்கில் பாலி எஸ்டர்களான இவை சோயா அவரை, ஆளி விதை, நீரகற்றப் பட்ட ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. கட்டிடங்கள், தானுந்திகள், தொழிலகங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பூச்சு உட்கூறுகளாக இவை பயன் படுகின்றன. தூனுந்திப் பூச்சுகளுக்கு அக்ரிலிக்குகளும், தொழிலகப் பராமரிப்பு, உலோகக் கலங்கள், மின் கம்பிச் சுருள் ஆகியவற்றுக்கு எப்பாக்சிகளும், காந்தப் புல அமைப்புகளுக்குப் பாலியூரித்தேன்களும், உலோக அறை கலன்களுக்குப் பாலி எஸ்டர்கள் மற்றும் திருத்தப் பட்ட மெலமின்களும் பயனாகின்றன. இணை இணைப்பியாகச் (co–binder) சைலேன் பயன் படுகிறது. வேதித் தடுப்பையும், ஈரத் தடுப்பையும் இதனால் உயர்த்த இயலும். சூடான, உருகிய நிலையிலும் கரைப்பானற்ற பூச்சுகள் பயன் படுகின்றன. குளிர்விக்கும் போது, உறைந்து, பூச்சுப் படலம் உருவாகிறது.\n\nவண்ணப் பூச்சு உலர்தல் இயக்கம். நைட்ரோ செல்லுலோஸ் மெழுகு பூச்சுகளும் வனப்பூட்டும் பால்மப் பூச்சுகளும் கரைப்பான் ஆவியாதலால் உலர்கின்றன. இவ்வகையில் இடம் பெறும் படல ஆக்கிகள் பெரும்பாலும், நேர் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பிகள்.\n\nகுறுக்குப் பிணைப்பை உருவாக்க வல்ல பல்லுறுப்பிப் பூச்சுகளில் உலர்தல் ஒரு வேதி வினையாகும். இவ்வகைப் பல்லுறுப்பிகள் எக்கரைப்பானிலும் எளிதில் கரைவதில்லை. எனவே, புட்டிகளில் நீர்ம நிலையிலும், பரப்பின் மீது பூசப்பட்ட பின்பு குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த திண்ம நிலையிலும் காணப் படுகின்றன.\n\nபூச்சு காற்றுடன் வினையுறுதல், பூச்சின் உட்கூறுகளுக்கிடையே வினை நிகழ்த்தல் ஆகிய இரு நிலைகள் குறிப்பிடத் தக்கவை. காற்றில் ஆச்சிஜனும், நீராவியும் வினைத் திறன் மிக்க உட்கூறுகளாகும். உலரும் எண்ணெய் மற்றும் பிற நிறையுறாத சேர்மங்களின் இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் வினையுறுகிறது. பாலி யூரித்தேனினுள்ள ஐசோ சயனேட்டுகள் காற்றிலுள்ள நீருடன் வினையுற்றுக் குறுக்குப் பல்லுறுப்பாக்கம் நிகழ்கிறது. இவ்விரு வினைகளுக்குமே காற்றுத் தேவைப்படுவதால், பூச்சின் வினையுறு பொருள்களின் மீது காற்றுப் படாதவாறு, காற்று நீக்கப்பட்ட புட்டிகளில் இவை அடைக்கப் படுகின்றன. இப்புட்டிகளில் காற்றுப் புக நேரிடின், நீர்மப் பூச்சின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலம் தோன்றுகிறது. இப்படலம் காற்றுப் புக விடும் படலமாக இருப்பின், வினை பூச்சின் முழுவதும் புகுந்து, முப்பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பாகி விடும். திருத்த முடியாத களி (irreversible gel) எனப் படும் இந்நிலையில் இப்பூச்சு பயனற்றதாகி விடும். மாறாக, பரப்பின் மீது பூசப் படும் வரை பூச்சு காற்றுப் படாமல் பாதுகாக்கப் பட்டிருப்பின், பூசப் பட்டவுடன் மென்மையான நீள் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பி கடினமான முப்பரிமாண குறுக்குப் பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பியாக மாறி விடுகிறது. அறை வெப்ப நிலையில் இச்செயல் முறை மெல்ல நிகழ்கிறது. ஏனெனில், காற்றிலுள்ள ஆக்சிஜன் பூச்சுப் படலத்தினுள் ஊடுருவிய பின்பே, படலம் கெட்டிப் படுதல் முழுமையடைகிறது. பூச்சிலுள்ள வினையுறு மூலக் கூறுகள் மிகுந்திருப்பின், கெட்டிப் படுதல் விரைவு பெறும். குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த எண்ணிக்கையில் தோன்றினால், கெட்டிப் படுதல் எளிதாகும். எனவே, பல்முனை வினையுறு திறன் கொண்ட (multi functional) மூலக் கூறுகள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் இவ்வகையில் மிகுந்த பயன் தரும். உலரும் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப் படும் வெளிச் சுவர்களுக்கான பூச்சுகள் காற்றுடன் வினையுற்று உலர்வனவாகும். பூச்சுகளின் உட்கூறுகளுக்கிடையே நிகழும் வினையினால், உலரும் நிலையில் பரப்பின் மீது பூசப்படும் வரை பூச்சின் உட்கூறுகள் ஒன்றோடொன்று பிணையுறுதல் தவிர்க்கப் பட வேண்டும். இந்நிபந்தனையை உறுதிப் படுத்துவதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை வினையுறு பொருள்களைத் தனித் தனிக் கலங்களில் அடைத்து வைத்துப் பயன் படுத்தும் தருணத்தில் கலத்தல், உயர் வெப்ப நிலைகளிலோ, கதிர் வீச்சின் தாக்கத்தினாலோ மட்டுமே வினையுறக் கூடிய உட்கூறுகளை அமைத்தல் என்பன. முதலாம் முறையில், கலத்தல் சரியான விகிதத்தில் இருத்தல் கட்டாயத் தேவை. மேலும், கலவை எஞ்சியிருப்பின், பயனற்றதாகி விடக் கூடும். இரண்டாம் முறையில், பூச்சை ஒரு கரைப்பானில் நீர்த்த கரைசலாக்கி, பாதுகாத்தலும் ஏற்றதே. இக்கரைசலைப் பரப்பின் மீது பூசும் போது, கரைப்பான் ஆவியாவதால் செறிவேற்றம் நிகழ்ந்து, குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, பூச்சு கெட்டிப் படும். தொழிலக அடுப்புகளுக்கான மேற்பூச்சுகளும், மரப் பரப்புக்கான பாலிஎஸ்ட்டர் பூச்சுகளும் இவ்வகையில் உலர்வன.\n\nஆளி விதை எண்ணெய் போன்ற நிறையுறாத கிளிசரால் எஸ்ட்டர்களின் உலர்தல் பின் வருமாறு அமைந்துள்ளது. இதில் உலரும் போது, கணிசமான அளவு ஆக்சிஜன் ஏற்கப் படுகிறது. தகுந்த உலர்தல் ஊக்கி கலக்கப் பட்ட ஆளி விதை எண்ணெய், அதன் எடையில் 12% வரை ஆக்சிஜனை உறிஞ்ச வல்லது. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புக்கான (Conjugated double bond) உள்ளடக்கிய கொழுப்பு அமிலங்களின் எஸ்ட்டர்களான எண்ணெய் இவ்வகையிலடங்காது. இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட எண்ணெயை விட விரைவாக உலரும். காட்டாக, 25°C இல் உலர்தல் ஊக்கிகளல்லாத நிலையில், ஆளி விதை எண்ணெய் (ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் இல்லாதவை) உலர்வதற்கு 120 மணி நேரம் தேவைப் படுகிறது. மாறாக, ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்பு களைக் கொண்ட (tung) எண்ணெய் உலர்வதற்கு 48 முதல் 72 மணி நேரமே போதுமானது. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் இடம் பெறாத எண்ணெயில், மூன்று இரட்டைப் பிணைப்புகளேனும் கொண்ட அமிலங்கள் இருத்தல் தேவை. அப்போதுதான், அவை அறை வெப்ப நிலையில் உலரும். இரண்டு இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட அமிலங்கள், கனல் வெப்ப நிலைகளில் மட்டுமே உலர வல்லன.\n\nஉலர்த்தி எனப் படும் உலோக சோப்புகளைக் கலந்தால், உலர்தல் விரைவாகும். இச்சூழ்நிலையில், ஆளி விதை எண்ணெய் 2¾ மணி நேரத்திலும், டங் 1¼ மணி நேரத்திலும் உலர்கின்றன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளற்ற, எண்ணெயில் ஆக்சிஜன் உறிஞ்சப் படுகையில், ஹைட்ரோ பெராக்சைடு மிகுதியாக உருவாகிறது. இந்த ஹைட்ரோ பெராக்சைடு சிதைவுறுதலும், குறுக்குப் பிணைப்பு உருவாதலும், ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புக் கொண்ட எண்ணெயில் பூச்சு நாட்படும் போது, தோன்றும் வேதி மாற்றங்களும், புற ஊதாக் கதிர்களின் பாதிப்புக்குட்பட வல்லன.\n\nமேற்கூறிய ஆய்வு வழி முடிவுகளின் அடிப்படையில், பின் வரும் வழி முறைகள் ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட எண்ணெய்க்கும், ஏனைய எண்ணெய்க்கும் தனித் தனியே வருவிக்கப் பட்டுள்ளன.\n\nஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புடை எண்ணெய். ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் நேரடியாகச் சேர்ந்து, இரண்டு முற்றுப் பெறாத இணை திறன்களைக் கொண்ட இயங்கு உறுப்புகளை (free radicals ) உண்டாக்குகிறது.\n\nஇரட்டைப் பிணைப்புகளில் இட மாற்றம் நிகழ்ந்து, அதன் விளைவாக 1,4 மற்றும் 1,6 இருக்கைகளிலும் இயங்கு உறுப்பு மையங்கள் உருவாகின்றன.\n\nஇம்மாற்றங்களில் பல்வேறு அணுக்களுக்கிடையே, எலெக்ட்ரான் பங்கீடு மட்டுமே மாறுபடுகின்றது. நிறைவுறாத இயங்கு உறுப்புகளில் இது வழக்கமானதொரு நிகழ்வாகும். இவ்வியங்கு உறுப்பு மையங்களுடன், ஆக்சிஜன் மூலக் கூறு இணைந்து, பெராக்சி இயங்கு உறுப்புகளை உண்டாக்குகிறது.\n\nபிற எண்ணெய் மூலக் கூறுகளிலுள்ள இரட்டைப் பிணைப்புகளை, இவ்வியங்கு உறுப்புகள் தாக்குவதால், குறுக்குப் பிணைப்புகள் தோன்றுகின்றன.\n\nவளர்ந்து வரும் ஈருறுப்பின் இரு முனைகளும் ஒன்றோடொன்று இணையும் போது, பல படியாக்கம் முற்றுப் பெறுகிறது. பாலி பெராக்சைடுகள் நிலைத் தன்மை மிக்கவையாயினும், ஒளியும், வெப்பமும் இடையறாது தாக்கும் போது, சிதைவுற்ற அல்காக்சி உறுப்புகளைத் தருகின்றன. இவ்வுறுப்புகளின் இணைப்பால், ஈதர்கள் உண்டாகின்றன.\n\nஉலர்தல் ஊக்கி அல்லது உலர்த்தி. எண்ணெய் வகை ஊடகத்தில் கரைய வல்ல அமிலப் பகுதியைக் கொண்ட உலோக சோப்பு, உலர்த்தி எனப் படுகிறது. தொகுப்பு முறையில் தயாரிக்கப் படும் ஆக்டாயிக் அமிலம் பெரும்பாலும் இதற்குப் பயனாகிறது; அடக்க விலை காரணமாக, நாப்தீனிக் அமிலங்களும் பயன் படுத்தப் பட்டு வந்துள்ளன.\n\nஉலர்த்தி, பூச்சுகளுக்குக் கூட்டுப் பொருளாகையால், ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே சேர்க்கப் படுகின்றது. முதனிலை உலர்த்திகள் நல்ல வினையூக்கியாகும்; மாறுபட்ட இணை திறன்களைக் கொண்டஉலோகங்கள் இதில் உள்ளன. எ–டு: கோபால்ட், மாங்கனீஸ். இவ்வுலோகங்கள் ஆக்சிஜன் உறிஞ்சப் படுதலையும், 2 பெராக்சைடு இயங்கு உறுப்புகளாகச் சிதைவுறுதலையும் ஊக்குவிக்கின்றன.\n\nகாரீயம் ஒரு துணை நிலை உலர்த்தியாகும். அது ஆக்சிஜன் ஏற்பதை மட்டும் ஊக்குவிக்கிறது. சிர்கோனியம், கால்சியம், சீரியம் ஆகியன மேலும் சில துணை நிலை உயர்த்திகளாகும். காரீயம் ஒரு திரள் வகை (cumulative) நச்சாகையால், வீட்டுக்கான பூச்சுகளில் காரீய அடக்கத்திற்கு அனுமதிக்கப் பட்ட உச்ச வரம்பு, ஐரோப்பாவில் 0.25% ஆகவும், அமெரிக்காவில் 0.06% ஆகவும் உள்ளது.\n\nஇதனால், பல பூச்சுத் தயாரிப்பாளர்கள் காரீயமற்ற பூச்சைத் தயாரிக்க முனைந்ததுண்டு. படலத்தின் மேல் அடுக்குகளை விரைவாகவும், உள் மற்றும் அடி மட்ட அடுக்குகளை மெல்லவும் குளிர்விக்கவும், வினையூக்கியாகக் கோபால்ட் செயல் படுவதால், கீழ் அடுக்குகள் இறுகும் போது, முன்பே உருவாக்கப் பட்ட மேலடுக்கு வெடிப்புறுகிறது.\n\nஎனவே, கோபால்ட்டுடன் சிறிதளவு சிர்கோனியம் அல்லது கால்சியம் சேர்க்கப் பட்டு, இக்குறைபாடு நீக்கப் படுகிறது.\n\nஅடுப்புகளுக்கும், உலைகளுக்குமான பூச்சுகளில் கோபால்ட், மாங்கனீஸ், சீசியம், இரும்பு ஆகியன பயனாகின்றன. 1970இல் அலுமினியம் அல்காக்சைடு சார்பு பொருள்கள் புதிய வகை உலர்த்திகளாகப் புகுத்தப் பட்டன.\n\nஎன்னும் பொது வாய்ப்பாட்டைக் கொண்ட இச்சேர்மங்களின் பதிவீட்டுத் தொகுதிகளான X, Y, –OR ஆகியன ஆல்க்கைடுகளிலுள்ள ஹைட்ராக்சில், கார்பாக்சில் தொகுதிகளில், ஹைட்ரஜன் அணுக்களுடன் வினையுற்று Hx,Hy,ROH போன்ற ஆவியாகும் பொருள்களை வெளி விடுகின்றன.\n\nஇதன் விளைவாக, பல அல்க்கைடு மூலக் கூறுகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இவ்வுலர்த்திகளைப் பயன் படுத்தி உருவாக்கப் படும் ஆக்சைடுகள் நீர் எதிர்ப்பு, பழுப்புறாமை, பளபளப்புக் குன்றாமை ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கின்றன. உலர்தல் இயக்கங்களுடன் இணைந்துள்ள பல்வேறு பண்புகள் அட்டவணை 1இல் தொகுக்கப் பட்டுள்ளன.\n\nநிறமி. வனப்புறு வண்ணம் அளிப்பதற்காகவும், முந்தைய பூச்சின் வண்ணத்தை மறைப்பதற்காகவும், பூச்சுப் படலத்தின் வலிவைக் கூடுதலாக்குவதற்காகவும், பூச்சுப் படலத்தின் ஒட்டும் திறனை உயர்த்துவதற்காகவும், பூச்சின் உறுதியையும், உழைப்பையும், பரிமாணமுறுதலைத் தடுப்பதற்காகவும், மெருகூட்டுவதற்காகவும் வண்ணப் பூச்சுகளில் நிறப் பொருள் சேர்க்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறமியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின் வரும் நிறமிப் பண்புகளை ஆய்ந்தறிதல் தேவை. அவை நிறமூட்டும் திறன் (tinting strength), ஒளியில் நிற நிலைப்பு (light fastness), கசியும் தன்மை (bleeding), மறைக்கும் திறன் (hiding power), ஒளி விலகல் எண் (refractive index), துகள் அளவு, துகள் வடிவம், அடர்த்தி, வேதி வினைத் திறன், வெப்பச் சிதைவு எதிர்ப்பு என்பன.\n\nஒரு வெண்ணிறப் பொருளுடன் மாற்று நிறப் பொருளைக் கலந்து, வெளிறிய சன்னமான நிறத்தை உருவாக்கலாம். இதற்குத் தேவைப்படும் நிறமியின் அளவு, எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்நிறமியின் நிறமூட்டும் திறன் கூடுதலாகும்.\n\nஒரு நிறமியின் நிறமூட்டும் திறனுக்கும், புறப் பரப்பை மறைக்கும் திறனுக்கும் தொடர்பு இல்லை. எனினும், பொதுவாக ஒளி புக விடும் திறன் கொண்ட நிறமிகளின் மறைக்கும் திறன் கூடுதலாகும்.\n\nஒரு குறிப்பிட்ட நிறப் பொருளின் நிறத்தை வெளிறிய சாயலுக்கு மாற்றுவதற்குத் தேவைப் படும் ஒரு வெண்ணிறமியின் (white pigment) அளவு அதன் நிறமூட்டும் திறனாகும்.\n\nநிறம் குன்றாமை. சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் பூச்சின் மீது விழும் போது, நிறமி மூலக் கூறுகளில் வேதி மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றன வேதிக் கூட்டமைப்பு மாறுவதால், ஒளி உறிஞ்சும் பண்பும் மாறி விடுகிறது. இதன் இறுதி விளைவாக நிறச் சாயல் மாற்றம் நிகழ்கிறது.\n\nகசிவு. அனைத்து நிறமிகளும்,  அனைத்துக் கரைப்பான்களிலும் கரைவதில்லை. சிவப்புப் பூச்சின் மீது, வெள்ளைப் பூச்சினால் பெயர் எழுதும் போது, சிவப்பு நிறமிகளே இக்குறைக்கு உள்ளாவதால், இதனைக் குருதிக் கசிவு (bleeding) என்பர்.\n\nபரப்பை மறைக்கும் திறன். பொதுவாக, பூச்சுப் படலங்களின் தடிமன் 25–100 மைக்ரோ மீட்டர் பரப்பில் இருக்கும். புறப் பரப்பை நன்கு மறைக்க வல்ல நிறமிகள் ஒளியை ஊடுருவாமல் தடுக்கும் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். ஒளியை உறிஞ்சுவதாலும், சிதறச் செய்வதாலும், இத்தன்மை பெறப் படுகிறது. ஒரு பூச்சின் மறைக்கும் திறன் எனப் படுவது 1 லி. பூச்சினால் முழுமையாக மூடப் பட்ட பரப்பின் அளவு ச.மீ. ஆகும். ஒரு நிறப் பொருளின் மறைக்கும் திறன் எனப் படுவது 1 கி.கி. நிறப் பொருளை உள்ளடக்கிய பூச்சினால் மூடப்படும் பரப்பளவு ஆகும். பூச்சின் மறைக்கும் திறனைப் படும் ஒளியின் அலை நீளம், அடர்வு நிறமியின் ஒளி விலகல் எண், நிறமித் துகளளவு, நிறமித் துகள் வடிவம் ஆகியவை பாதிக்கின்றன.\n\nஒளி விலகல் எண். வெண்ணிற நிறமிகள் சிறு கட்டி வடிவில், ஒளி புக விட வல்லனவாகவும், துகள் வடிவில் வெண்ணிறத்தில் ஒளி புகா விடா இயல்புடையனவாகவும் உள்ளன. இவற்றின் ஒளி விலகல் எண் வரம்பு 2.27 என இருப்பதே இதற்குக் காரணமாகும். துத்தநாக ஆக்சைடு : 2.01; துத்தநாக சல்பைடு : 2.37. இவ்வரம்பு, பூச்சின் படல ஆக்கிகளின் ஒளி விலகல் வரம்பை விடக் (1.4–1.6) கூடுதலாகும். இதன் விளைவாகவே, TiO₂ பளிச்சென்ற வெண்மையுடனும், மறைக்கும் திறன் மிக்கனவாகவும் உள்ளன. நிரப்பும் வகை (extender) நிறமிகளின் ஒளி விலகல் எண்கள் படல ஆக்கிகளின் ஒளி விலகல் எண்களினின்றும் பெரிதும் மாறுபட்டனவாக உள்ளமையால், அவை மறைக்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. கால்சியம் கார்போனேட்டும், கயோலினும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவை.\n\nதுகள் அளவு. புறப் பரப்பு இடைவெளிகளில் பெரும அளவு ஒளிச் சிதறல் நிகழ்வதற்குரிய நிறமித் துகள்அளவும், துகள்களுள் ஒளியின் அலை நீளமும் சற்றேறக் குறையச் சமமாக இருக்கும். துகளின் ஏற்ற குறுக்களவு, காற்றில் ஒளியின் அலை நீளத்தில் பாதியளவு இருக்கும்; அதாவது,0.2–0.4μm. இவ்வரம்புக்கு மேற்பட்ட நிலையில், குறிப்பிட்ட எடை நிறமியில் அமையக் கூடிய துகள் இடைவெளிகளின் எண்ணிக்கை குறைகிறது. நிறமியின் துகள் அளவு கறுப்புக் கார்பனில் 0.01 μm தொடங்கி நிரப்பி வகை நிறமி 50 μm வரை பரந்துள்ளது. எந்தவொரு நிறமிப் பொருளிலும், துகள்கள் யாவும் ஒரே அளவில் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட எடை நிறமிப் பொருள்களை நுண் துகளாக மாற்றத் துகளில். புறப் பரப்பு அளவு (surface area) கூடுதலாகிறது. 1.கி. ரூட்டைல் வகை TiO₂ (துகள் குறுக்களவு 0.2–0.3 μm) இன் புறப் பரப்பு 12 மீ²; ஆனால், அதே 1 கி. நுண் துகள் சிலிக்கா (குறுக்களவு 0.015–0.2 μmஇன் புறப் பரப்பு 190 மீ² ஆகும். நிறமியின் புறப் பரப்பு அளவை அதன் எண்ணெய் உறிஞ்சும் திறனிலிருந்து அறிந்து கொள்ளலாம். 100 கி. நிறப் பொருளை ஒரு பசையாக மாற்றுவதற்குத் தேவைப் படும் பதப் படுத்தப் படாத ஆளி விதை எண்ணெயின் அளவே அந்நிறமியின் எண்ணெய் உறிஞ்சு திறனாகும்.\n\nதுகள் வடிவம். நிறமித் துகள்கள் உருண்டையாகவோ, கன சதுர வடிவிலோ, முண்டு முடிச்சாகவோ (Nodular), ஊசி அல்லது குச்சி வடிவிலோ (acicular), தட்டையாகவோ (lammellar) இருக்கக் கூடும். துகளின் வடிவம் துகள்களின் ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கற்காரைக்கு இரும்பு வலிவூட்டுவது போன்ற பூச்சுப் படலங்களுக்குக் குச்சி வடிவிலான நிறமிகள் வலுவூட்டுகின்றன. தட்டை வடிவிலான துகள், ஒன்றின் மீது ஒன்று படிந்து, நீர் உட்புகாதவாறு தடுக்கும். அலுமினியம், மைகா நிறமிகள் இவ்வகையானவை.\n\nஅடர்த்தி. சம எடையில் ஒப்பிடப் படும் இரு பூச்சுகளில் அடர்த்தி குறைவாக உள்ள பூச்சு பெரிதும் விரும்பப் படும். இதன் காரணமாகவே, நிறப் பொருளின் பருமனைக் கூட்டுவதற்கு அடர்த்தி குறைவான, நிரப்பி வகைப் பொருள்கள் பயன் படுகின்றன.\n\nவினையுறும் தன்மை. வினையுறும் தன்மை கொண்ட சில நிறமிகளைக் குறிப்பிட்ட சில பூச்சுகளில் புகுத்த இயலாது. எடுத்துக் காட்டாக, துத்தநாக ஆக்சைடு அமில–கார ஈரியல்பு கொண்டது. எனவே, அமிலத் தொகுதிகள் மிகுந்த ரெசின்களுடன் வினையுறும் சோப்புகள் உருவாகி, குறுக்குப் பிணைப்புகள் தோன்றும். இதனால், சேமித்து வைக்கையில் பாகு தன்மை உயரும். மாறாக, சில நிறமிகள் அவற்றின் வினையுறு தன்மைக்காகவே விரும்பப் படுகின்றன. துத்தநாக, காரீய மற்றும் ஸ்ட்ரான்சியம் குரோமேட்டுகள் அவற்றின் அரிமான எதிர்ப்புத் திறனுக்காகவே சேர்க்கப் படுகின்றன.\n\nநிறமி வகை. நிறமிகள் இரு வேறு அடிப்படைகளில் இயற்கை அல்லது தொகுப்பு வகை, கரிம அல்லது கனிம வகை எனப் பிரிக்கப் படுகின்றன.\n\nஇயற்கையில் கிடைக்கும் நிறமிகளுள், பெரும்பாலானவை கனிம வகையைச் சார்ந்தவையாகும். ஆக்கர் (ochre), சியன்னா (sienna) சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு இரும்பு ஆக்சைடு, பெரும்பாலான தொகுப்பு நிறமிகள் ஆகியன கரிம வகையின. இவை கனிம உள்ளீட்டின் மீது கரிமப் பொருள்கள் படிவிக்கப் பட்டுத் தயாரிக்கப் படுகின்றன. காட்டாக, அலுமினியம் ஹைட்ரோக்சைடு மீது அலிசரின் படிவிக்கப் பட்டுப் படலங்கள் (lakes) உருவாக்கப் படுகின்றன.\n\nTiO₂ஐப் போன்ற தூய வெண்ணிறப் பொருளோ, கார்பனைப் போன்ற கரிய நிறப் பொருளோ கரிம வகைகளில் கிடைக்காது.\n\nகரிம வகைகளை விடக் கனிம வகைகள் புற ஊதாக் கதிர்த் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியவை.\n\nகரிம நிறப் பொருள்கள் 300°Cக்குள்ளாகவே சிதைவுறுகின்றன.\n\nகரிம நிறமிகள் அரிமான எதிர்ப்பு இயல்புடையவை. எனினும், அழகுக்கும், குளிர்ச்சிக்கும் கரிம வகையே சிறந்தவை. சாலோசயனின், குவினக்ரிடோன், பெரிலின், பெரினோன், டயாக்சசீன் ஆகியன கரிம வகையில் குறிப்பிடத் தக்கவையாகும்.\n\nநீர்ப்பி (thinner) அல்லது கரைப்பான். நிறமியையும், இணைப்பியையும் நன்கு கலப்பதற்குப் பின் வரும் நீர்ப்பிகளுள் ஒன்றைப் பயன் படுத்தலாம். அவை நீர், பாரபின், டெர்ப்பீன், அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன், ஆல்கஹால், எஸ்ட்டர், கீட்டோன், ஈதர் நைட்ரோ பாரபின், குளோரோ பாரபின் என்பன.\n\nபால்ம வகைப் பூச்சுக்கள் யாவற்றிலும் தொடர் ஊடகமாக அமைவது நீராகும். நீரைத் தனியாகவோ, ஆல்கஹாலுடன் கலவையாகவோ பயன் படுத்தலாம். எவ்வகை ரெசினையும் நீரில் கரையச் செய்யலாம். பொதுவாக, ஒரு பல்லுறுப்பியில் கார்பாக்கில் தொகுதிகளைத் தக்க அளவில் புகுத்தி, அதன் அமில மதிப்பை 50 அல்லது அதற்கு மேற்படுமாறு செய்யலாம். பின்பு இத்தொகுதிகளை அம்மோனியா அல்லது ஏதேனும் ஓர் அமீனைக் கொண்டு நடு நிலையாக்கி, நீரில் கரைய வல்ல உப்பாக மாற்றலாம். சான்றாக, உலர் எண்ணெயை மலியிக் நீரிலியுடன் வினையுறுத்தி, அமிலத் தன்மையை ஏற்றலாம். கார்பாக்சில் தொகுதிகள் முழுமையாக நடு நிலையாக்கப் படவில்லை யெனில், ஒரு பால்மம் தோற்றுவிக்கப் படும். இவ்வுப்பின் பல்லுறுப்புப் பகுதி எதிர் மின்னேற்றம் கொண்டது; எனவே, ஒரு மின் கல அமைப்பில் நேர் மின் முனையை நோக்கி நகர்ந்து, அம்மின் முனையில் மின்னிறக்கம் அடைகிறது. இம்மின் முனை ஓர் உலோகப் பொருளாக இருப்பின், அதன் மீது பூச்சுப் படலம் தோன்றும். படியும் பூச்சின் நுண் துளைமை குறைவாக இருப்பின், பூச்சின் தடிமன் கூடுதலாகும் போதே, அதன் மின் தடையும் கூடுதலாகிறது. இதன் விளைவாக, மின்னாற் படிதல் விரைவு குன்றி, இறுதியில் நின்று விடுகிறது. இவ்வுத்தியில், பூச்சின் தடிமன் தானாகவே கட்டுப் படும் என்பதும், எவ்வடிவினாலான உலோகப் பொருளாயினும், சமச் சீர்மையான பூச்சைப் பெறச் செய்யலாம் என்பதும் கூடுதல் நன்மைகளாகும். அமிலக் கார்பாக்சில் தொகுதிகளுக்குப் பதிலாக, அமினோ தொகுதிகளைப் புகுத்திப் பின்பு, அவற்றை அசெட்டிக் அல்லது லாக்டிக் அமிலத்தால் நடுநிலையாக்கலாம். இவ்வமைப்புகளில் ரெசின், நேர் மின்னேற்றம் கொண்டிருக்கும் எதிர் மின் முனையில் படியும். உப்போ, அயனியோ உருவாக்காமல், நீரில் கரையும் தன்மையைப் பூச்சுக்கு ஏற்றுவதற்கு, நீரில் கரைய வல்ல குட்டையான சங்கிலியமைப்புக் கொண்ட பல படியை ரெசினில் புகுத்தலாம். இவ்வகையில் பாலி எத்திலீன் கிளைக்கால் நன்கு பயனாகிறது.\n\nகரைப்பான்களின் கரை திறன், பல்லுறுப்பிகளின் தன்மைகளைப் பொறுத்ததாகும். கரைப்பானின் பாகுத் தன்மை, கொதி நிலை, ஆவியாகும் விரைவு ஆகியனவும் முதன்மைக் காரணிகளாகும்.\n\nபூச்சு (additive). ஓர் உண்மையான நீர்மத்தின் மீது செலுத்தப் படும் தகைவுக்கு நேர் விகித்தில் திரிபு வீதம் அமைந்திருக்கும். மாறாக, தேங்கி நிற்கையிலும், கலக்கப் படுகையிலும் மாறு பட்ட பாகு தன்மைகளைக் கொண்டிருக்கும் நிலையை, நியூட்டன் விதிக்கு ஒவ்வாத நீர்மம் (non–Newtonian liquid) என்பர். கூழ் போன்ற நிலையிலுள்ள பூச்சில் தூரிகையை நனைத்துக் கலக்கும் போது, நீர்த்த நிலையை அடைந்தால், அதற்குப் போலி நெகிழி (pseudo plastic) எனப் பெயர். இத்தன்மையைப் பூச்சுக்கு ஏற்றும் நோக்கத்துடன் சிலிக்கா, பென்டொனைட் எனும் அலுமினோ சிலிக்கேட், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட ஆமணக்கு எண்ணெய், பாலி அமைடு ஆகியன சேர்க்கப் படுகின்றன. டைட்டேனியம், சிர்கோனியம் கொடுக்கிணைப்புச் சேர்மங்கள் (chelates) இவ்வகையில் பெரும் பயன் தருகின்றன.\n\nபூச்சுப் படலம் தொய்வின்றிச் சம தளமாக இருப்பதற்குச் சோப்புப் போன்ற புறப் பரப்புச் செயலி (surfactant) சேர்க்கப் படுகின்றது. பூச்சின் பளபளப்பைச் கட்டுப் படுத்துவதற்கு நுண் தூள் வடிவிலான சிலிக்கா அல்லது பாரபின் மெழுகு சேர்க்கப் படுகிறது. பூச்சு உலர்தலைத் தொடங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் பல சேர்மங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.\n\nமெருகுப் பூச்சு (lacquer), அனைத்து வெப்ப நிலை களிலும் எளிதில் உலர வல்லதாக இருப்பதால், மெழுகு பூச்சு பெரிய அளவில் பயனாகிறது. நீண்ட சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பியொன்றின் கரைசலே, இவ்வகைப் பூச்சாகும். கரைப்பான் ஆவியாதலால், இப்பூச்சு உலர்கிறது. இவ்வகைப் பூச்சுகளில் நைட்ரோ செல்லுலோஸ், அக்ரிலிக் ஆகிய இரண்டு உட்பிரிவுகள் உள்ளன.\n\nசெல்லுலோஸ் ஒரு பெரும் பல்லுறுப்பி (மூலக் கூறு எடை 3,00,000–5,00,000) மூலக் கூறு ஆகும். அமிலங்களால் எஸ்ட்டராக்கல் வினைக்குட்படுத்தியோ, ஆல்ஹைல்களைக் கொண்டு ஈதராக்கியோ, கரிமக் கரைப்பான்களில் இதைக் கரைய வல்லதாகச் செய்யலாம். சான்றாகச் செல்லுலோஸ் அசெட்டேட், எத்தில் செல்லுலோஸ் ஆகியன பயன் படுகின்றன. செல்லுலோஸ் நைட்ரோ ஏற்றம் செய்து, பெறப் படும் நைட்ரோ செல்லுலோஸ் மெருகு பூச்சில் பயன் படுத்தப் பட்ட முதல் படலமாகும். நைட்ரோ செல்லுலோசின் கரை திறன் அதன் ஹைட்ரஜன் அடக்கத்தை பொறுத்ததாகும்.\n\nநைட்ரோ செல்லுலோஸ் எரியக் கூடியது எனும் கருத்து அதன் பயன் வரம்பைக் கட்டுப் படுத்துகிறது.\n\nஅக்ரிலிக் பல்லுறுப்பிகளின் அடிப்படைச் சேர்மங்கள் அக்ரிலிக் அமிலம் அல்லது மெத்தக்ரிலிக் அமிலமாகும். பாலி மெத்தில் மெத்தக்ரிலேட், பாலி எத்தில் எத்தகிரிலேட், பாலி அக்கிரிலமைடு ஆகியன சிறப்பானவை. அக்ரிலிக் பல்லுறுப்பியாயினும், செல்லுலோஸ் எஸ்ட்டர் பல்லுறுப்பியாயினும், தனித்த நிலையில் நொறுங்கும் தன்மை படைத்தவை. எனவே, மெழுகு பூச்சுத் தொழிலில் படல ஆக்கிகளுக்கு அடுத்த படியாக முதன்மை பெறுவது, மென்மையூட்டி (softener) ஆகும். சிறப்பான மென்மையூட்டிகளாக டைபியூட்டைல் தாலேட்டும், பியூட்டைல் பென்சைல் தாலேட்டும் விளங்குகின்றன. மெருகுப் பூச்சு நீள் சங்கிலி வடிவம் கொண்ட பல்லுறுப்பியாகவும், நெகிழ்வூட்டியாகவும், கரைப்பானாகவும், சேர்ப்பியாகவும் பயனாகிறது.\n\nசிறப்பு வகை வண்ணப் பூச்சு. வண்ணப் பூச்சை அரிமானத் தடுப்புக்கும், அலங்காரத் தோற்றத்திற்கும், பிற பயன்பாடுகளுக்கும் ஈடு படுத்தும் போது, சில சிறப்பு வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன.\n\nஒளிரும் பூச்சு. இருளிலும் பளிச்செனத் தெரியும் பூச்சுகளைத் தயாரிப்பதற்குச் சாதாரணப் பூச்சு உட்கூறுகளுடன் கிளர் ஒளி தரும் பொருள்களைச் (flurescent materials) சேர்த்தல் வேண்டும். துத்தநாக சல்ஃபைடு, கால்சியம் பாஃஸ்பேட் ஆகியன கிளர் ஒளி தரும் பொருள்களில் சிறந்தவை. இவ்வகைப் பொருள்கள் கட்புலனாகாப் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியவுடன், ஒளி உமிழப் பட்டால் உடன் ஒளிர் பொருள் என்றும், இரண்டுக்கும் இடையே காலத் தாழ்வு ஏற்படின், நின்றொளிர் பொருள் (Phosphor) என்றும் குறிப்பிடப் படும். இவ்வகைப் பூச்சு நெடுஞ் சாலைகளில் தொலைவு அறிவிப்புக் கற்களில் எழுதுவதற்கும், அறிவியல் தொழில் நுட்பக் கருவிகளில் முகப்பைத் தயாரிப்பதற்கும், கணிப்பான்களிலும், அலங்கார விளம்பரங்களிலும் பயனாகிறது.\n\nவெப்பம் தாங்க வல்ல பூச்சுகளில் சிலிக்கோன்களும், அலுமினியத் துகளும், வெப்ப எதிர்ப்புத் தன்மையை ஏற்றுகின்றன. இப்பூச்சு அடுப்புக்கும், உலைக்கும், சூளைக்கும், காளவாய்க்கும் பூசுவதற்குப் பயனாகிறது.\n\nசுடர்த் தடுப்புப் பூச்சுகளில் முதன்மை உட்கூறுகளாக விளங்குபவை சோடியம் அம்மோனியம் பாஸ்ஃபேட், போரேட் ஆகிய உப்புகளாகும். இவ்வாறு சேர்க்கப் படும் பொருள்கள் உருகிப் பரவி, எரிதலைத் தணிக்கின்றன; இவை வெப்பத்தினால் உயர் வெப்ப நிலை அமைப்புகளுக்கு ஏற்றவை.\n\nபாசித் தடுப்புப் பூச்சுகளில் பாசி மற்றும் கடல் வாழ் நுண்ணுயிரிகளுக்கு நச்சுகளாக விளங்கும் வேதிப் பொருள்கள் இடம் பெறுகின்றன. தாமிரம், பாதரசம் போன்ற உலோக நச்சுகள் இந்நோக்கத்துடன் சேர்க்கப் படுகின்றன. இப்பூச்சு படகுக்கும், கப்பலுக்கும், அடிப் பகுதிகளில் இடப் படுகிறது.\n\nநீர் விலக்கும் பூச்சுகளில், நீருடன் ஒட்டாத பாரபின் மெழுகு, சிலிகோன் ஆகியன இடம் பெறுகின்றன. நீர்த் தேக்கத் தொட்டி, ஆய்வக மேசை ஆகியவற்றுக்கு இப்பூச்சு முதன்மையானது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். G.P.A. Turner, Intorduction to Paint Chemistry, Third Edition, Chapman Hall, London, 1988; Kirk-othmer, Encyclopedia and chemical Technology, Third Edition, Vol–16, John Wiley& Sons, Newyork, 1978.\n\nநெய்வேலி அனல் மின் நிலையம்\n\nகாண்க: அனல் மின் நிலையம்\n\nநெர்ன்ஸ்ட், வால்தர் ஹெர்மான்\n\nஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் சிறந்த அறிவியலாராவார்; நவீன இயற்பிய–வேதியியல் பிரிவிற்கு அடி கோலியவர்களில் இவரும் ஒருவர். வால்தர் ஹெர்மான் நெர்ன்ஸ்ட் (Walther Hermann Nernst) 1864ஆம் ஆண்டு பிரிசென் என்னும் இடத்தில் ஜுன் திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். நெர்ன்ஸ்ட் உருவாக்கிய வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி 1920 ஆம் ஆண்டின் வேதியியலுக்குரிய நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக அமைந்தது. தனிச் சுழி வெப்ப நிலைக்கு மேல் அனைத்துப் பருப்பொருளும் (matter) ஒழுங்கற்ற இயக்கத்தைக் கொண்டவையாக, அனைத்து ஆற்றலையும் இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.\n\nஜூரிச், கிராஸ் (ஆஸ்திரியா), ஊர்ஸ்பெர்க் ஆகிய பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்ற பின்னர், 1887ஆம் ஆண்டு வில்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட் என்னும் வேதியலாரின் கீழ் ஆய்வு உதவியாளராகச்சேர்ந்தார். ஆஸ்ட்வால்ட் ஜேக்கோபஸ் வாண்ட் ஹாஃப் மற்றும் சுவாண்ட்டே அர்ரேனியஸ் ஆகியோருடன் இணைந்து, இயற்பிய வேதியியல் பிரிவில் சிறப்பான பங்காற்றிக் கொண்டிருந்தார். 1890இல் காட்டின்ஜன் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. 1905ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1924–1933இல் அங்கிருந்த ஆய்வு இயற்பியல் கழகத்தின் (experimental physics) இயக்குநராகப் பணியாற்றினார். இவர்தம் ஆய்வுகளுள் கால்வனோ மின் கலங்கள் பற்றிய கோட்பாடு, வேதிச் சம நிலையின் வெப்ப இயக்கம், உயர் வெப்ப நிலையில் ஆவிகளின் பண்புகள், குறைந்த வெப்ப நிலையில் திண்மங்களின் பண்புகள், ஒளி வேதியியலின் வினை வழி முறை ஆகியன அடங்கும். இவை தொழிலகப் பயன் மிக்கவை.\n\nநெர்ன்ஸ்ட் பயனுறு அறிவியலிலும், சிறப்பான ஈடுபாடு கொண்டிருந்தார். மேம்படுத்தப் பட்ட மின் விளக்கையும், மின்னணுத் தத்துவத்தில் செயற் படும் பியானோவையும் இவர் கண்டு பிடித்தார். கோட்பாட்டு வேதியியலில் (theoretical chemistry) இவர் எழுதிய நூல் 1893ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. இவர் தம் வாழ்நாளின் இறுதி நாள்களில், வான் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகளையே மேற்கொண்டார். நெர்ன்ஸ்ட் ஜெர்மெனியில் முஸ்கவ் என்னும் இடத்தில் 1941ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18ஆம் நாள் காலமானார். —த. தெய்வீகன்\n\nநெருங்க விடா மருந்து\n\nபூச்சிகள் பல்வேறு பயிர்களைத் தாக்கிப் பேரிழப்பைத் தருகின்றன. சில வேதி மருந்துகளைப் பயிர்களில் தெளித்தால், பூச்சிகள் அப்பயிரைத் தாக்குவதில்லை. இவ்வாறு தாக்க முனையும் காரணிகளை நெருங்க விடாமல் தடுக்கும் மருந்து, நெருங்க விடா மருந்து (repellant) எனப் படுகிறது.\n\nபிரெஸ்டான் எனப் படும் டிரைஃபினைல் டின் அசிடேட் மற்றும் டியடர் எனப் படும் டிரைஃபினைல் டின் ஹைட்ராக்சைடு போன்ற பூசணக் கொல்லிகள், பூசண நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. இவற்றைப் பயன் படுத்துவதால், புகையிலை வெட்டுப் புழுவாகிய ஸ்போடாப்டிரா லிட்டுரா (Spodoptera litura), நிலக் கடலைச் சுருள் பூச்சி, சிவப்புக் கம்பளப் பூச்சி முதலியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.\n\nபோர்டோ கலவை, பூசணக் கொல்லியாகப் பயன் படுத்தப் பட்டாலும், இலைத் தத்துப் பூச்சி, வண்டு ஆகியவற்றை நெருங்கி விடா மருந்தாகப் பயன் படுகிறது. நிலக்கரித் தார், இம்முறையில் கரையான், வண்டு, ஈ போன்றவற்றைத் தவிர்க்கும் திறன் கொண்டுள்ளது. துணிகளைப் பாதிக்கும் பூச்சியினங்களைச் சூடம் நெருங்க விடாமல் தடுக்கிறது. விலங்கினங்களைத் தாக்கும் பூச்சிகளை நெருங்க விடாமல் தடுப்பதற்காக, மண்ணெண்ணெய், மீன் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவை பயன் படுகின்றன. நாஃப்தலின் உருண்டைகள் துணிகளைப் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தத் துணையாகின்றன. பென்சைல் பென்சயோட், சிலந்திப் பேன்களை நெருங்க விடாமல் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. —கா. சிவப்பிரகாசம்\n\nநெருஞ்சி\n\nஇதன் தாவரவியல் பெயர் டிரிபுலஸ் டெரஸ்டிரிஸ் (Tribulus terrestris) ஆகும். இது இரு வித்திலைத் தாவரங்களுள், அல்லி இணையாத தொகுதியினுள், வட்டுடைப் பூத்தாவரங்கள் வரிசையில், ஜிரேனி யேல்ஸ் துறையில், சைகோஃபில்லேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடி ஐரோப்பா முதல் மத்திய ஆசியா வரையிலும், தென் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளிலும், இலங்கையிலும் வளர்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாட்டில் வளர்கிறது. பொதுவாக, இது ஒரு வெப்ப, மித வெப்ப மண்டல இடை நிலைத் தாவரம் (Mesophyte) ஆகும். இது நலிந்த தண்டுடைய நிலம் படர் செடியாகும். இதன் வேர்த் தொகுப்பு 10–20 செ.மீ. நீளமுடையது. மஞ்சள் அல்லது வெள்ளை நிற ஆணி வேரும், பிற கிளை வேர்களும் உண்டு. வேர்த் தொகுதியின் தரை மேல் பகுதி, சிறியதொரு மைய அச்சுப் பகுதியாக உள்ளது. இந்தக் குறுகிய மைய அச்சிலிருந்து 6–25 கிளைகள் தரை மட்டத்திலேயே உண்டாகி 40–125 செ.மீ. நீளத்திற்குத் தரையில் படர்ந்து வளரும்.\n\nஅமைப்பு. கிளைகளிலிருந்து சிறகு வடிவக் கூட்டிலை மாற்று இலையடுக்கமாகத் தண்டில் இணைந்திருக்கும். ஒவ்வொரு கணுவிலும், இரு சிறிய இலையடிச் செதில்கள் உள்ளன. ஒவ்வொரு கூட்டிலையிலும் 4–6 இரட்டைச் சிற்றிலைகள், எதிர் அடுக்கத்தில் இணைந்திருக்கும். தொடக்கச் சிற்றிலைகள் சிறியவை; ஒவ்வொரு சிற்றிலையும் நீள் சதுரம் அல்லது முட்டை வடிவானது; ஒழுங்கான இலை விளிம்பு காணப் படுகிறது. மைய நரம்பு சிற்றிலை நுனியில் சிறு நீட்சி. பெற்று இருக்கும். இலைக் கோண மொட்டிலிருந்து கோணக் கிளையோ, மலரோ உண்டாகும். மலர்க் காம்பு 15–22 மி.மீ. இரு பால், ஒழுங்கான, ஆரச் சமச் சீருடைய, நீளமான, ஆழ்ந்த மஞ்சள் நிற, ஐந்தங்கச் சூலகக் கீழ்ப் பூக்கள் மிக அழகாகத் தோன்றுகின்றன.\n\n5 புல்லி இதழ்கள் இணையாமலும், ஈட்டி வடிவாகவும், தழுவு இதழ் ஒழுங்குடனும், பசுமையாகவும் விளங்குகின்றன. 5 அல்லி இதழ்கள், இணையாமல் தழுவு இதழ் ஒழுங்குடன், நரம்புகள் கொண்டுள்ளன, இவற்றின் அடிப் பகுதி சிறுத்தும், நுனிப் பகுதி அகன்றும், புல்லி இதழ்களுக்கு இடையில் அமைந்துள்ளன. தனித்த 10 மகரந்தத் தாள்கள் உள்ளன. ஒவ்வொரு மகரந்தக் கம்பியின் அடிப் பகுதியிலும் சுரப்பிச் செதில் ஒன்று உள்ளது. நீண்ட மகரந்தப் பைகள் இரண்டு அறைகள் கொண்டவை; நீள் போக்கில் வெடிக்கும் இவை, அடியில் இணைந்தவை.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகின்றன.----> மேல் மட்டச் சூல் பையில் 5 சூலக இலைகள் இணைந்த சூலகம் உண்டு. 5 சூல் அறைகளில், ஒவ்வொரு சூல் அறையிலும் 1–5 சூல்கள் அச்சுச் சூல் அமைவில் தொங்கு சூல்களாகக் காணப் படும். சூல் பையின் வெளிப் புறத்தில் பல கூர்வளரிகள் உள்ளன; முனையில் நேரான சூலகத் தண்டும், 5 தடிப்புகள் பெற்ற சூலக முடியும் உண்டு. கனி, 5 கோணமுடையது; கனியுறை கூரிய முள்ளாக மாறியுள்ளது. இந்த வெடி கனி, 5 பகுதிகளாக வெடிக்கும்; ஒவ்வொரு பகுதியும் தொடக்கத்தில் குறுகியும், பிறகு அகன்றும் இருக்கும். இதன் பக்க வாட்டில் மேற்புறம் இரு கூரிய விரிந்த நீளமான முள்களும், கீழே இரு கூரிய குட்டையான முள்களும் காணப் படும். இதில் பிற வளரிகளும் உள்ளன. விதை முளை சூழ் தசை (endosperm) இல்லை. கனியின் கூரிய முள்கள் விலங்குகளின் உடலுறுப்புகளில் ஒட்டிக் கொள்வதால், கனி பரவுகிறது. மகரந்தச் சேர்க்கை வண்டினங்களால் நடை பெறுகிறது.\n\nபயன். மேக நோய், மேக வெட்டை, புற மேகம், வெட்டைநீர், கடும் சிறுநீர்ப்பை அழற்சி, உள்ளுறுப்புத் தடிப்பு நோய், சிறுநீர்த் தடை, கீல் வாதம், மலடு, கருப்பைக் கோளாறு, பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு இனப் பெருக்க வளம் உண்டாதல், இதய நோய் முதலியவற்றைப் போக்க, வறண்ட செடியும், கனியும் பயன் படுகின்றன. செடியை ஊற வைத்து, உண்டாக்கிய வழவழப்பான நீர் மலடு நீக்கவும், பெண் நோய் நீக்கவும் பயன் படும். நெருஞ்சியை சிறுநீர்ப் பாதை வீக்கத்திற்குக் கொடுக்கலாம். கனிச் சாறுடன் பொட்டாசியம் கார்பனேட் கலந்து, வலியுடன் கூடிய அடிக்கடிச் சிறுநீர்க் கழிக்கும் கோளாறுக்குக் கொடுக்கலாம்.\n\nநெருஞ்சிக் குடும்பம். நெருஞ்சிக் குடும்பத்தில் 27 பேரினங்களும், 200 இனங்களும் உள்ளன. இவை வெப்ப, குளிர் மண்டலங்களில் காணப் படுகின்றன. மத்திய தரைக் கடல் பகுதியில் மிகுந்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தென் ஃபுளோரிடா மாநிலத்தில், குயாய்கம் என்னும் பேரினம் உள்ளது. தென் பகுதியில் கல்ஸ்ட்ரோமியா என்னும் பேரினமும், தென் மேற்குப் பகுதியில் லார்ரியா, போர்லீரியா, பிகானம் என்னும் பேரினங்களும் காணப் படுகின்றன. 100 இனங்களைக் கொண்ட பெரிய பேரினமான சைகோஃபில்லம் ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ளது. 40 இனங்களைக் கொண்ட ஃபாகோனியாப் பேரினம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளது. இந்தியாவில் நெருஞ்சியும், ஃபாகோனியா அராபிகா (Fagonia arabica) என்னும் இனங்களும் மிகுந்து காணப் படுகின்றன.\n\nவளரியல்பு. பெரும்பாலானவை சிறு செடிகள் அல்லது புதர்ச் செடிகள். குயாய்கம் போன்ற பேரினம் அரிதாக மரமாகக் காணப் படும். இதன் கிளைகள் கணுக்களில் இணைந்திருக்கும்.\n\nஇலைகள். எதிர் இலையடுக்கம்; அரிதாக மாற்று இலையடுக்கம்; பெரும்பாலும், சிறகு வடிவக் கூட்டிலை (pinnately compound) வகையாகும். அரிதாக, இரண்டு இரட்டை இலைகளும், தனியிலைகளும் உள்ளன. இலைகள் சதைப் பற்றுள்ளவை அல்லது தோல் போன்று தடித்தவை; இரண்டு இலையடிச் செதில்கள் உள்ளன. அவை தோல் போன்றோ, சதைப் பற்றுள்ளவையாகவோ, தூவிகள் அல்லது முள்கள் பெற்றிருக்கும். இதில் வலைப் பின்னல் நரம்பமைப்பு காணப் படும்.\n\nமஞ்சரி. நுனியில் உள்ளது; தனிப் பூ அல்லது நுனி வளரா மஞ்சரி (cymose inflorescence) காணப் படும்.\n\nபூக்கள் . இரு பால் பூக்கள்; அரிதாக ஒரு பால் பூக்கள்; ஆரச் சமச் சீர் உடையவை; அரிதாக இரு பக்கச் சமச் சீர் உண்டு. ஐந்து அல்லது நான்கு அங்கப் பூக்கள்; சூலகக் கீழ்ப் பூ காணப் படும். பூத்தளம் பெரிதாக வட்டு (disc) ஆக இருக்கும். இது குவிந்தும், குழிந்தும் சுரப்பிகளின்றி இருக்கும்.\n\nபுல்லி வட்டம். புல்லி இதழ்கள் 5 அரிதாக 4, தனியாகவும், அடுக்கிதழ் அமைவிலும், கனியிலும் தோன்றும்.\n\nஅல்லி வட்டம். அல்லி இதழ்கள் 5, அரிதாக 4, தனியாகவும், அழகாகவும் அடுக்கிதழ் அமைவிலும், திருகு இதழ் அமைவிலும், அரிதாகத் தொடு இதழ் அமைவிலும் விளங்கும்.\n\nமகரந்தத் தூள் வட்டம். இது 1,2,3 அடுக்கங்களில் காணப் படும். ஒவ்வோர் அடுக்கத்திலும், 5 மகரந்தத் தாள்கள் உள்ளன. அல்லி இதழ் எண்ணிக்கையில் 5 ஆகவோ, அதன் இரட்டிப்பு எண்ணிக்கையில் 10 ஆகவோ, வட்டில் இணைந்திருக்கும். மகரந்தத் தாள்கள் சமமற்ற உயரமுடையவை; வெளி வட்ட மகரந்தத் தாள்கள் அல்லி எதிரானவை; மகரந்தக் கம்பிகளின் அடிப் பகுதியில் செதில்கள் (scales) உள்ளன. சுழல் மகரந்தப் பை இரண்டு அறைகள் கொண்டது; இது உள் நோக்கி, நீள் வாக்கில் வெடித்து, மகரந்தத்தைச் சிந்தும்.\n\nசூலக வட்டம். மேல் மட்டச் சூல்பை காணப் படும். சூல்கள் பள்ளங்கள், கோணங்கள், இறகுகள் கொண்டவை; சூலகம் காம்பில்லாதது; 4 அல்லது 5 சூலக இலைகள் இணைந்தது. 4 அல்லது 5 சூல் அறைகள் உண்டு. ஒவ்வொரு சூல் அறையிலும் 1, 2 அல்லது பல தொங்கு சூல்கள் (pendulous) அச்சுச் சூழ் அமைவில் அமைந்துள்ளன. சூலக முடி சூலகத் தண்டு நுனியில் உள்ளது; பெரும்பாலானவற்றில் கிளைகளற்றது.\n\nவிதை. விதை நேரான அல்லது வளைந்த கருவினை உடையது; கெட்டியான, மிகுதியான, முளை சூழ் தசை (endosperm) இருக்கும்; சிலவற்றில் இராது. மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடை பெறும்.\n\nகனி. நீள் வெடி கனி அல்லது குறுக்குச் சுவர் வெடி கனியாக இருக்கும். அரிதாகச் சதைக் கனி காணப் படும். —கே.ஆர். பாலச்சந்திர கணேசன் துணை நூல். G.H.M. Lawrence, Taxonomy of Vascular Plants, Oxford and IBH Publishing Co., New Delhi, 1974.\n\nநெருப்புக் கோழி\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இது பறவைகள் வகுப்பில் ஸ்ட்ருத்தியோனி ஃபார்மிஸ் வரிசையைச் சேர்ந்ததாகும். தற்போது உலகில் வாழும் பறவைகளுள், நெருப்புக் கோழியே மிகப் பெரியது. ஆண் பறவை நிற்கும் போது 20 மீ. உயரம் இருக்கும். கழுத்துப் பகுதி மட்டும் 1 மீ. இருக்கும். ஆண் பறவையின் இறகுகள் கருமையானவை. சிறகிலும், வாலிலும் வெண்ணிற இறகுகள் காணப் படுகின்றன. பெண் பறவையின் இறகுகள், பழுப்பு நிறத்துடனும், இறகு விளிம்புகள் மங்கிய நிறத்துடனும் இருக்கும். இப்பறவையின் கழுத்து, தலை, கால் ஆகிய பகுதிகளிலும், இறகுகள் இல்லை. ஒவ்வொரு காலின் பாதத்திலும், நன்கு வளர்ந்த விரல்கள் இரண்டு உள்ளன. விரல் நுனியில் பெரிய நீளமான கூர் நகங்கள் இருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளியோசின் காலத்தில் 9 வகை நெருப்புக் கோழி இனங்கள் இருந்தன. ஆனால், இக்காலத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கா, சிரியா, அரேபிய நாட்டுப் பாலைவனங்களில், ஐந்து இனங்கள் வாழ்ந்து வந்தன. இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் மட்டும் நெருப்புக் கோழி காணப் படுகிறது.\n\nஇருப்பிடம். பொதுவாக இப்பறவை பாலைவனங்களில் வாழ்கிறது. பாலைவனத்தில் பெருங் கூட்டமாகக் கூடி, உணவைத் தேடிச் செல்லும். நீர், ஈரம் மிகுந்த இடங்களில் சிறு சிறு கூட்டடங்களாகப் பிரியும். ஒவ்வொரு சிறு கூட்டத்திலும், ஓர் ஆண், பெண் பறவைகளும், இளம் பறவைகளும் இருக்கும். பெற்றோர் பறவை உணவு சேகரிக்கும் இடத்தையும், எப்பொழுது அங்கு செல்ல வேண்டும் என்பதையும் உறுதி செய்யும். நீர் கிடைக்கும் இடங்களில் சிறிய பறவைகள், நீர் குடித்த பின்னரே, பெற்றோர் பறவைகள் நீரினைப் பருகுகின்றன. இப்பறவை உயரமாக இருப்பதால், எதிரிகளிடமிருந்து எளிதாகத் தப்பி விடுகின்றன.\n\nஉணவு. நெருப்புக் கோழி செடி, இலை, பழம், விதை ஆகியவற்றை உண்ணுகிறது.மேலும் சிறு விலங்குகளையும், பல்லி, ஆமை போன்றவற்றையும் உணவாக உட்கொள்கிறது. உணவு எளிதாகச் செரிப்பதற்கு ஏற்ற வகையில், இப்பறவை சிறிதளவு மணலையும் சேர்த்து உண்ணுகிறது. ஒவ்வோர் ஆண் பறவையும், பல பெண் பறவைகளுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபடும். நெருப்புக் கோழியின் சமூக வாழ்க்கை குறிப்பிடத் தக்க இயல்புகளைக் கொண்டது. சிறு குஞ்சுகளும், பெண் பறவையும் செல்லும் போது, தந்தையற்ற ஆண் பறவை கூடச் சில வேளைகளில், அவற்றிற்குத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லும்.\n\nஇனப் பெருக்கம். இனப் பெருக்கம் மழையைப் பொறுத்து, ஆண்டில் எந்தக் காலத்திலும் நடைபெறும். இனப் பெருக்கக் காலத்தில், ஆணின் தலையில் சிவப்பு வண்ண நிறமிகள் உண்டாகின்றன. பல ஆண்கள், ஒரு பெண் இருக்குமிடத்தில் சிறகை விரித்து, வெள்ளை இறகுகள் தெரியும் படிக் கூத்தாடும். ஓர் ஆண் பறவை, மூன்று, நான்கு, ஐந்து பெண் பறவைகளை வளைத்துக் கொண்டு, இனப் பெருக்கத்தில் ஈடுபடுகிறது. இனச் சேர்க்கையின் போது, ஓர் ஆணும், பெண்ணும் தனியே பிரிந்து சென்று, தலையையும், கழுத்தையும் ஒரே விதமாக அசைத்துச் சேர்த்து உண்கின்றன. ஆண் பறவை தன் கழுத்தை அசைத்துச் சுழற்றும் போது, பெண் பறவை, ஆணைச் சுற்றி வந்து, இனச் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் நிற்கிறது.\n\nமுட்டை. ஒவ்வொரு பெண் பறவையும், 6–8 முட்டைகள் இடுகிறது. ஒவ்வொரு முட்டையும், 15 செ.மீ. நீளமும், 1.25 கிலோ எடையுமுள்ளது. முட்டைகள் 3 வார காலத்திற்குள் இடப் படுகின்றன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் பறவைகள் அனைத்தும், 3 மீ. விட்டமுள்ள ஒரே குழியில் முட்டையிடுகின்றன. முட்டையிட்டு முடிந்த பின்னர், வலிமை மிக்க தாய்ப் பறவை, ஏனைய பெண் பறவைகளை அவ்விடத்தை விட்டு விரட்டுகிறது. 6 வாரங்களில், முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வருகின்றன.இவ்வாறு வெளி வந்த குஞ்சுகளால், உடனே ஓட முடிகிறது. ஒரு மாத காலத்தில், இக்குஞ்சுகள் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஓடும் ஆற்றல் பெறுகின்றன. இப்பறவை 4–5 வயதில் முதிர்ச்சியடைந்து இனப் பெருக்கம் செய்யும்.\n\nதற்காப்பு. வயது வந்த பறவைகள் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடி எதிரி விலங்குகளிடமிருந்து தப்பி விடுகின்றன. ஆனால், குஞ்சுகள் நரி போன்ற ஊணுண்ணிகளுக்கு இரையாகின்றன. சில வேளைகளில், முதிர்ந்த ஆணும், பெண்ணும், சிறகுகளை விரித்துக் குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன. ஊணுண்ணி இவற்றை நெருங்கும் போது, ஆண் பறவை எதிர்த்து நின்று தடுக்கும். அப்போது, பெண் பறவை குஞ்சுகளுடன் தப்பி ஓடும். இடர் வரும் போது, இப்பறவை தன் தலையை மண்ணிற்குள் புதைத்துக் கொள்ளும் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் மெய்யன்று என்றாலும், இடர் வரும் போது, இப்பறவை தன் கழுத்தை நீள வாட்டத்தில் தரையோடு தரையாக வைத்துக் கொண்டு, தலையைச் செடி, கொடிகளில் மறைத்துக் கொள்ளும் என்று அறியப்பட்டுள்ளது. —ஏ. நடராசன்\n\nநெல்\n\nஉணவுப் பயிர்களில் நெல் மிகப் பழமையானது. பண்டைக் காலம் தொட்டு, இந்தியா, சீனா, இந்தோசீனா ஆகிய நாடுகளில் இது. பயிரிடப்பட்டு வந்துள்ளது. உலக மக்கள் பெரும் பகுதியினருக்கு இன்றியமையாத உணவுப் பொருளாக இது விளங்குகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் பொருள் அரிசியாகும். நெல், புல் குடும்பத்தைச் சேர்ந்த தானிய வகையாகும். இதில் ஏறத் தாழ நூறுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றுள் இரண்டு மட்டுமே பயிர் செய்யப் படுகின்றன. மற்றவை காட்டுப் புற்களாகவே இருந்து வருவன. நெற்பயிரின் தாவரவியல் பெயர் ஒரைசா சடைவா (Oriza sativa) என்பதாகும். ஒரைசா சடைவாவில் வளரிடம், பருமன், முதிரும் பருவம் முதலியவற்றைப் பொறுத்துப் பல வகைகள் உள்ளன. நெல்லின் தாயகத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூற இயலாதெனினும், இது இந்தியாவிலும், இந்தோசீனாவிலுமே முதன் முதலாகத் தோன்றியது எனலாம்.\n\nவளரியல்பு. நெற்பயிர் ஏறக் குறைய 1–2 மீ. உயரம் வளரும். முதலில் ஒரே ஒரு கிளை மட்டுமே தோன்றும். பிறகு, மேலும் பல கிளைகள் வெடித்துப் பரவும். ஒவ்வொரு கணுவும், குறைந்தது 5 அல்லது 6 இணைப்புகளைக் கொண்டது. ஒவ்வோர் இணைப்பிலும், ஓர் இலை உண்டாயிருக்கும். அந்த இலைகள் நீண்ட, கூரிய தட்டையான அமைப்புடையவை. நன்கு வளர்ந்து, கிளையாகப் பிரியும் இவை, ஒவ்வொன்றும் ஒரு தலைப் பகுதியைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தலையும் 50–300 நெற்கதிர்ப் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். அதிலிருந்து நெற்கதிர்கள் வளர்ச்சியடைகின்றன. அரிசியை உமி என்னும் கடின மேலுறை மூடிக் கொண்டிருக்கும். இதை அகற்றினால், பழுப்பு நிற அரிசி காணப் படும்.\n\nபயிர் செய்முறை. நெல்லுக்கு மிகுந்த வெப்ப நிலையும், நீரும் தேவை. அது வளரும் போது, 70–110°C வெப்பம் வேண்டும். மேட்டுப் பகுதியில் 25–30 அங்குல மழையளவுள்ள இடத்தில் புன்செய் பயிராகவும், பள்ளத்தாக்கில், 200 அங்குலம் அல்லது அதற்கு மிகுதியான மழையுள்ள இடத்தில் நன்செய் பயிராகவும் விளையும். இது மணல் சேர்ந்த குறுமண், களி, ஆழங்குறைந்த சரளை ஆகிய மண்ணில் பயிர் செய்யப் படுகிறது. சில வகைகள் கோடையிலும், சில வகைகள் குளிர் காலத்திலும் பயிராகும். சில வகை 80 நாளிலும். சில வகை 200 நாளிலும் முதிரும். இவ்வாறு, பல வகை வேறுபாடுகள் கொண்ட ஏறக் குறைய எட்டாயிரம் நெல் வகைகள் காணப் படுகின்றன.\n\nதமிழ்நாட்டில் மிக இன்றியமையாப் பயிரான நெல்லைச் சாகுபடி செய்ய, முதலில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். இதற்குச் சேற்று நாற்றங்கால், புழுதி நாற்றங்கால் என்று இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. நாற்றுகள் பரந்த அளவில், சேற்று நாற்றங்காலில் தயார் செய்யப் படுகின்றன. நல்ல வடிகால் வசதியும், நீர் வளமும் உள்ள இடத்தில், நாற்றங்காலை அமைத்துக் கொள்ள வேண்டும். நெல் நாற்றங்காலில் மண்ணின் பதத்தைச் சீராக்கினால், நல்ல நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.\n\nநாற்றங்காலுக்கு நிலம் குளிர நீர் பாய்ச்சி, இரு முறை நன்கு உழுது உரமிட்டு, நாற்றங்காலின் மண்ணை மென்மையாக்க வேண்டும். இதற்கு, இயற்கை உரங்கள், பசுந்தழை, தொழு உரங்கள் இவற்றை மிகுதியாக இட வேண்டும். இவை மண்ணை மென்மையாக்குவதோடு, நாற்றுக்குத் தொடர்ந்து ஊட்டச் சத்துகளையும் கொடுக்கின்றன. நாற்றங்காலில் சென்ட்டிற்கு 2 கிலோ டைஅம்மோனியம் பாஸ்ஃபேட் இட வேண்டும். நாற்றங்காலில் அடியுரமாக இட்ட மணிச் சத்து, நாற்றுகளில் வேர்களின் எண்ணிக்கையையும் வளர்ச்சியையும் மிகுதிப் படுத்துகிறது. மண் இறுக்கமாக உள்ள களி மண் நிலத்தில், நாற்று பறிக்கும் போது, வேரும், வேர் தோன்றும் அடிப் பகுதிகளும் பாதிக்கப் படுகின்றன.\n\nநெற்பயிருக்கு நுண்சத்துகள் இடுவது இன்றியமையாததாகும். இச்சத்துகளை நாற்றங்காலுக்கு இட்டால், நடவு வயலில் உள்ள சத்துப் பற்றாக்குறையைச் சரி செய்யலாம். உவர், களர் நிலங்களிலும், நீர் மிகுதியாகத் தேங்கி நிற்கும் இடங்களிலும், துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை காணப் படுகிறது. இதனால், பயிரில் ஆங்காங்கே வளர்ச்சி குன்றி, இலைகளில் புள்ளிகள் தோன்றும். பயிர் கருகுவதால், விளைச்சல் பாதிக்கப் படுகிறது. துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க நாற்றங்காலுக்குத் துத்தநாக சல்ஃபேட் உப்பை, ஏக்கருக்கு 25 கி.கி. வீதம் நாற்றங்காலில் பரப்பிற்கு தக்கபடி இட வேண்டும். பின்னர் நாற்றங்காலில் 54 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட ஒரு செண்ட் பாத்தி அமைக்க வேண்டும். விதைகளைச் சீராக விதைக்கலாம். நாற்றங்காலில் விதைத்த விதையனைத்தும், பழுதில்லாமல் முளைப்பதற்கு, விதைகளை நீரில் நன்கு ஊற வைத்து, முளை கட்டும் வரை வைத்திருக்க வேண்டும். இவ்விதைகள் எளிதாகவும், விரைவாகவும் முளைக்கும்.\n\nவிதைத் தரம். விதையின் தரம் புறத் தூய்மையையும், பாரம்பரியத் தூய்மையையும் பொறுத்தது. விதை நன்கு முளைப்பதும், கல், மண், களைச் செடிகளின் விதை, மாற்று வகை விதை முதலியவற்றின் கலப்பில்லாமல், ஏற்ற ஈரத் தன்மை கொண்டிருப்பதும், புறத் தூய்மை ஆகும். பாரம்பரியத் தூய்மை என்பது, வகையின் குணங்கள் தாய்ப் பயிரில் இருந்து புதிதாக வெளி வரும் பயிருக்கு வருவது. விதைகளின் தரம் குறையாமலும், இனக் கலப்பு ஏற்படாதவாறும் கவனிக்க வேண்டும்.\n\nவிதையின் தரம் கெடாமல் இருக்க, மூன்று ஆண்டிற்கு ஒரு முறை நெல் விதையை மாற்ற வேண்டும். தரமான வித்துகளின் தயாரிப்பில் மூன்று கட்டங்கள் உள்ளன. அவை பயிர் வல்லுநர் விதை, அடிப்படை விதை, சான்றிதழ் விதை என்பன. புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வகைகளின் விதைகளை மிகவும் கவனத்துடன் பயிர் செய்து, விதை உற்பத்தி செய்யலாம். ஆடுதுறை, கோயம்புத்தூர், அம்பாசமுத்திரம், திரூர், குப்பம் போன்ற இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளன. இந்நிலையங்களில் பயிர் வல்லுநரின் மேற்பார்வையில் விதை உற்பத்தி செய்யப் படுகிறது. கருவொட்டு மூலம் கிடைத்த புதிய வகைகளைப் பயிர் செய்து, அவற்றின் பண்புகள் மாறாதவாறு வல்லுநர்கள் பாதுகாக்கின்றனர். இத்தூய்மையான விதையே பயிர் வல்லுநர் விதை எனப் படும்.\n\nபயிர் நிபுணர்கள் அளித்த விதையைப் பெருக்கிப் பெறப் படுவது அடிப்படை விதை எனப் படும். இவ்விதை உற்பத்தி கிள்ளிகுளம், சாக்கோட்டை, மேட்டூர் அணை முதலிய இடங்களில் நிறுவப் பெற்றுள்ள அரசு விதைப் பண்ணைகளில் செய்யப் படுகிறது. இவற்றில் ஆண்டிற்கு ஏறத்தாழ 250 மெட்ரிக் டன் விதை உற்பத்தி செய்யப் படுகிறது.\n\nஅடிப்படை விதை தரமானதெனச் சான்றிதழ் கொடுக்கப் படுகிறது. இச்சான்றிதழ் பெற்ற விதை உழவர்களுக்கு வழங்கப் படுகிறது. ஆண்டிற்கு ஏறத் தாழ 9500 மெட்ரிக் டன் விதை வழங்கப் படுகிறது. உழவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்க வழி வகுப்பது விதைச் சட்டமாகும். இச்சட்டத்தின் படி, விதையின் தூய்மை முளைப்பு திறன், வகை முதலியவற்றை உண்மைக் குறிப்புச் சீட்டில் உற்பத்தியாளர் குறிப்பிட வேண்டும். இது அரசு அலுவலரால் ஆய்வு செய்யப் படும்.\n\nதரமான நெல் விதையில் 14% க்கு மேல் ஈரத் தன்மை இருக்கக் கூடாது. தூய்மைப் பண்பு 97%க்கும் மேலும், முளைக்கும் தன்மை 70%க்கும் குறையாமலும், இருக்க வேண்டும். விதையில் நோய் பரவாதிருக்க வேண்டும். சிறந்த சேமிப்பு முறையின் வாயிலாக, அழிவின் வேகத்தைத் தடுத்து நிறுத்த இயலும். விதையின் ஈர அளவு ஒரே சீராக இருக்குமாறு அமைக்கச் செயற்கை முறையில் சரியான தட்ப வெப்ப நிலை அமையுமாறு செய்ய வேண்டும். காற்றின் ஈரப் பசை 45–50% எனவும், வெப்பம் 10°C எனவும் இருந்தால், விதைகள் மூன்று ஆண்டுகள் கூடக் கெடாமலிருக்கும்.\n\nநடவு வயல் தயாரித்தல். நடவு வயல் என்பது நெற்பயிர், தன் வளர்ச்சிக் காலத்தில் பெரும் பகுதியைக் கழிக்க வேண்டிய இடமாகும். ஆதலின், உயர் விளைச்சல் பெற, நாற்றங்கால் நன்கு தயாரிக்கப் பட வேண்டும். நாற்றங்கால் தயார் செய்யும் போதே, நடவு வயல் பணியைத் தொடங்க வேண்டும்.\n\nவயலில் இயற்கை உரங்களைப் போட்டு, 10 நாள்கள் வரை வயலில் நீர் தேங்கியிருக்கும் படிச் செய்து வந்தால், பயிர் வளர்ச்சிக் காலத்தில் வயலில் நீர் குறையாமல் இருந்து வரும். பிறகு, நிலத்தை நன்கு சமப் படுத்த வேண்டும். வரப்புகளையும் செம்மையாக அமைக்க வேண்டும். வாய்க்கால்களிலும், வரப்புகளிலும் புல், பூண்டு முளைக்கா வண்ணம், அவை செதுக்கப்பட்டு, அழகாக அமைக்கப் பட வேண்டும். வயலில் சீரிய முறையில் நீர்ப் பாசனம் செய்யப் பாசனக் கால்வாய், வடிகால் கால்வாய் இவற்றைத் தனித் தனியே அமைத்துக் கொள்வது நலம் பயக்கும். தழையுரம் அழுகும் போது, உண்டாகும் நச்சு வளிமங்கள் நெற்பயிரின் வேர்களைப் பாதித்துப் பயிர்களை அழித்து விடும். பசுந்தழையைப் போட்டு, 10 நாள்கள் கழித்து, வயலில் ஒரு வித மணம் வரும் போது, மட்டுமே நடவு போட வேண்டும். வரப்புகளிலுள்ள புல், பூண்டு, கோரை போன்றவற்றை முற்றிலும் அழித்து விட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வயலில் பயிர் செழித்து வளரும்.\n\nநடவு முறை. சீராக வளர்ந்த நாற்றைக் குறித்த காலத்தில் நட வேண்டும். நெருக்கமாக வளர்ந்த நாற்றைச் சற்றுக் கூடுதலாக நட்டாலும், பாதிப்பு ஏற்படுவதில்லை. சம்பாப் பட்டத்தில் நெருக்கமாக விடப் பட்ட நாற்றின் வயது 70 நாள் வரை இருக்கலாம். பொன்னி நெல் வகைகளில், மிகுந்த விளைச்சல் பெற, இளம் நாற்றை நடாமல் 60 நாள் வயதுடைய நாற்றை நடுவதே சிறந்தது. நாற்று, பட்டையாக வளர்ந்து 4 அல்லது 5 தாள்களைக் கொண்டிருக்கும். இதைக் குறித்த காலத்தில் பறித்து நட்டு விட வேண்டும். சிறப்பாக நாற்றங்கால் தயார் செய்த இடத்தில் வாளிப்பான, செழிப்பான நாற்றுக் கிடைக்கும். இவற்றை வகைகளுக்கு ஏற்றவாறு தவறாமல் 25,35,45 நாள்களில் நட்டு விட வேண்டும்.\n\nஒரு குத்து நாற்று, பயிர் பூக்கும் பருவத்தையும், வளர்ச்சியையும் கட்டுப் படுத்துகிறது. நடப் படும் நாற்றுகளின் எண்ணிக்கை 1 ச. மீட்டரில் 400 கதிர்கள் கொடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பாப் பட்டத்தில் கூடுதலான நாற்றுகளையும், கார் பட்டத்தில் குறைவான நாற்றுகளையும் நட வேண்டும். குறுகிய கால நெல் வகைகளுக்கு (95–110 நாள்கள்) வரிசைக்கு வரிசை 15 செ.மீ. இடைவெளி தேவை. நீண்ட கால நெல் வகைகளுக்கு (150–180 நாள்கள்) வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளி வேண்டும்.\n\nநெல் விதை விதைத்து, பின் நட்ட பயிரில், எட்டுப் பருவ நிலைகள் காணப் படுகின்றன. அவை: தூர் கட்டும் பருவம், துடிப்போடு தூர் கட்டும் பருவம், அதிக அளவு தூர் கட்டும் பருவம், பூங்கொத்து தோன்றும் பருவம், தொண்டைக் கதிர்ப் பருவம், கதிர் வெளி வரும் பருவம், கதிர் முற்றும் பருவம், அறுவடைப் பருவம் என்பன.\n\nமுதலில் தூர் கட்டும் பருவம் தொடங்குகிறது. பிறகு, இத்தூர்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இதைத் துடிப்போடு தூர் கட்டும் பருவம் என்பர். தூர்கள் உயர் நிலையை அடைவது, அதிக அளவு தூர் கட்டும் பருவம் எனப் படும். உயர் நிலையிலிருந்து, தூர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து, ஒரு நிலையில் வலிமை பெற்றுக் காணப் படும். பயிரின் தண்டு தட்டையான நிலையிலிருந்து, உருண்டையான நிலையை அடைந்து வரும் இச்சமயத்தில், பயிரின் அடித் தண்டைப் பிரித்தால், உள்ளே இளங்கதிர் முளையைக் காணலாம். நெல் வளர்ச்சிப் பருவங்களில் இது முக்கியமான பருவமாகும்.\n\nதண்டு உருண்ட சமயத்தில் தோன்றிய இளங்கதிர், சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து 2 மி.மீ. நீளத்தை அடையும். பின் வளர, வளர கதிரில் மலர்கள் உருப் பெறத் தொடங்கும். இக்கட்டத்தை தொண்டைக் கதிர்ப் பருவம் என்பர். தொண்டைக் கதிரிலிருந்து கதிர் வெளி வரும் பருவம் முடிந்து, தானியம் உருவாகத் தொடங்கும். இப்பருவத்தில், பால் பிடிக்கும் நிலை, மாவு தோன்றும் நிலை, மணிகள் முதிரும் நிலை போன்ற உட்பிரிவுகள் உள்ளன.\n\nகளை எடுத்தல். நாற்றங்காலை நன்முறையில் தயாரிக்காத நிலையில், நெல் நாற்றுகளுடன், புல், பூண்டு முதலிய களைகள் வளருகின்றன. இதனால், நெற்பயிருக்குப் பேரழிவு உண்டாகிறது. நீர்ப் பாசனம் சீராக இருக்கும் இடத்தில் மிகாது. களைச் செடிகள் தம்முடைய பூப்பருவத்தையும், கதிர்ப் பருவத்தையும் அடைவதற்கு முன் அகற்றப் பட வேண்டும்.\n\nஉயர் விளைச்சல் பயிர் சாகுபடியாலும், பின் முறைச் சாகுபடியாலும் விளைச்சல் அதிகரிக்கலாம். விரைவான களையொழிப்பு மிக, மிக இன்றியமையாததாகிறது. தக்க சமயத்தில் களையொழிப்பு செய்யவில்லையென்றால், பயிர் வளர்ச்சியின்மையால், விளைச்சல் கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதற்கு வேதிக் களைக் கொல்லி பயன்படுத்தலாம்.\n\nபயிரில் நடந்து, வல, இடக் கைகளால் பயிரை விலக்கி, அடிப் பகுதியைக் காலால் மிதித்துச் செல்லும் போது, பயிரின் நடுவில் ஒளி மிகுந்து, புகையான் பூச்சி மறைகிறது. இவ்வாறு செய்யும் போது, பயிரின் அடிப் பகுதி மருந்து தூவவும் எளிதாக உள்ளது. இதனால், தத்துப் பூச்சிகளை ஒழிக்கவும் முடியும்.\n\nஉரமிடல். மண்ணில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருப்பதற்கும், சாகுபடி செய்து வரும் பயிர்கள் வளம் பெற்று, உயர் விளைச்சல் அளிக்கவும் உரமிடல் வேண்டும். தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றைத் தவிர, கால்சியம், கந்தகம், நுண் சத்து ஆகியவையும் தேவைப் படுகின்றன.\n\nநெற்பயிர் வளர்ச்சியின் தொடக்க காலத்திலும், தூர் கட்டுதல் மிகுதியாகிக் கொண்டிருக்கும் சமயத்திலும், தூர்களின் -எண்ணிக்கையை உயர்த்த, தழைச் சத்து தேவைப் படுகிறது. இது பயிருக்குக் கரும் பச்சை நிறத்தை அளிக்கிறது. நெல் மணிகளில் புரதச் சத்தைப் பெருக்கி, அரிசியின் ஊட்டச் சத்தை அதிகரிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும், மணிகள் பிடிப்பதற்கும் பாஸ்ஃபரஸ் தேவைப் படுகிறது. இச்சத்து சேற்று நிலத்தில் பயிருக்கு எளிதாகக் கிடைக்கிறது. நெற்பயிரின் வேர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. நிலத்திலுள்ள உணவுச் சத்துகளைப் பயிர் சீராக, உள்ளேற்க வழி வகுக்கிறது. பயிரைச் சீராகக் கதிர்ப் பருவத்திற்குக் கொண்டு வருகிறது. நெல் மணிகளை ஒரு மிக்க முதிர்ச்சியடையச் செய்கிறது.\n\nசாம்பல் சத்து. இச்சத்து நெற்பயிருக்கு மிகுதியான அளவு தேவைப் படுகிறது. இது தூர் கட்டுதலை ஊக்குவிக்கிறது. மேலும், எடையையும் சீராக்குகிறது. தண்டுகளில் உள்ள திசுக்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால், தண்டுகள் வலிமை பெற்று, வறட்சி போன்றவற்றை தாங்கும் ஆற்றலைப் பெறுகின்றன . இச்சத்துக் குறைவால், பயிர் வளர்ச்சி குன்றிக் காணப் படும். இலைகளின் விளிம்புகள் காய்ந்து கருகி விடும் .நெற் பயிருக்கு இரண்டாந் தரச் சத்துக்களான சுண்ணாம்பு, கந்தகம் போன்றவையும் தேவைப் படுகின்றன. தாமிரம், மாங்கனீஸ் முதலிய நுண் சத்துக்களும், பயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன் படுகின்றன.\n\nபயிருக்கு ௭௬, உரம் ஆகியவை இன்றியமையாதவை. நெற்பயிர்ச் சாகுபடியில் செயற்கை உரங்கள் செய்ய முடியாத சில பணிகளை இயற்கை உரங்கள் செய்ய முடியும். தும்பைச் செடியையாவது, சணற் செடியையாவது பயிராக்கி, நாற்று விடு முன் உழுது விட்டால், இதுவே மிகவும் குறைந்த செலவில், நன்கு பயன் படும் உரமாகும் அல்லது பசுந்தழை எரு இடுவது நல்லது. இது மண்ணில் உயிரோட்டத்தை அதிகரிக்கவும், மண்ணின் தன்மை கெடாமல் இருக்கவும், மண் வளத்தைக் காக்கவும் பயன் படும். பசுந்தழை உரம் தானியத்திற்குச் சுவையையும், புரதச் சத்தையும், வைட்டமின் சத்துகளையும் கொடுக்கிறது.\n\nநெற்பயிருக்குச் செயற்கை வேதி உரங்களும் தேவை. பாஸ்ஃபேட், பொட்டாசியம், யூரியா ஆகியன வேதி உரங்களாகும். பாஸ்ஃபேட்டில் மணிச் சத்தும், பொட்டாசியத்தில் சாம்பல் சத்தும் அடங்கியுள்ளன. இவற்றை அடியுரமாகப் பயன் படுத்த வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 2 கி.கி.டை–அமோனியம் உரமிட வேண்டும். பொட்டாசியம் வேதி உரத்தையும் அடியுரமாகப் பயன் படுத்தலாம். 15 கி.கி. பொட்டாசியம் உரத்தை இரு முறை மேலுரமாக அளிக்கலாம். நாற்றங்காலுக்கு துத்தநாக சல்ஃபேட் மற்றும் நீரில் வளரக் கூடிய அசோலா என்னும் செடியை உரமிடலாம். மேலும், கந்தகம் பூசப் பட்ட யூரியா, பிண்ணாக்கு, கரு நீலப் பாசி, அசோலா கம்போஸ்ட் போன்ற உரங்களும் பயன் படுகின்றன. கரிம உரங்களையும், கரியற்ற உரங்களையும் தக்கவாறு இட்டால், நிலத்தின் வளம் கெடாமல் மிகுந்த விளைச்சலைப் பெறலாம்.\n\nநெல்லின் உற்பத்திக்கான சில இன்றியமையாத் தேவைகளில், நீர் முதன்மை பெறுகிறது. பயிர் பூக்கத் தொடங்கியதிலிருந்து, தானியம் முதிரும் வரை நீர் இருக்க வேண்டும். 120–135 நாள்கள் வயதுடைய நெல் வகைகளுக்கு முறையான நீர்ப் பாசனம் மேற்கொள்ள வேண்டும். வயலில் நீர்த் தேக்கத்தை 5 செ.மீ. வைத்திருந்தால் போதுமானது. பாசனம் செய்ய வேண்டிய நீர், பாசனத்திற்குத் தகுதி வாய்ந்ததா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.\n\nபூச்சிகளும் நோய்களும். நெல் உற்பத்தி பாதிக்கப் பட்டு வருவதற்குப் பூச்சி, பூசண நோய்கள் முதன்மைக் காரணங்களாகின்றன. குருத்துப் பூச்சி, இலைச் சுருட்டைப் புழு, இலைப் புழு ஆகியவை பயிரின் தோகை, இளந் தண்டு ஆகியவற்றை உட்கொண்டு விடும். தத்துப் பூச்சி தண்டுப் பகுதியிலுள்ள சாற்றை உறிஞ்சி அழிக்கும். நெல் குருத்துப் பூச்சி என்பது அந்துப் பூச்சி வகையைச் சேர்ந்ததாகும். இளம் மஞ்சள் நிறப் பஞ்சு போன்ற மயிரால் இது மூடப் பட்டிருக்கும். இது தண்டினுள் நுழைந்து, குருத்தின் கீழ்ப் பகுதியைத் துண்டிக்கிறது. இதை ஒழிக்கப் பாரத்தியான், எண்ட்ரின் போன்ற தெளிப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். மேலும் மாவுப் பூச்சி, இலைப் பேன், புகையான், நெல் கருவண்டு போன்றவற்றால், நெல்லுக்குப் பேரழிவு உண்டாகி வருகிறது.\n\nகுலை நோய், இலைப் புள்ளி நோய், தண்டு அழுகல் நோய், தூர் அழுகல் நோய், இலைப் பட்டை அழுகல் நோய், வைரஸ் நோய் போன்றவையும் நெற்பயிரைத் தாக்குகின்றன. இவற்றை மருந்தைத் தூவியும், தெளித்தும் ஒழிக்கலாம். உழவர்கள், எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய நெல் வகைகளைப் பயிர் செய்து நோயைக் கட்டுப் படுத்துகின்றனர்.\n\nநெல் வகைகள். நெல் ஆராய்ச்சி நிலையங்கள் ஏறத்தாழ 85 வகைகளைக் கண்டு பிடித்துள்ளன. அவற்றுள், சில நெல் வகைகள் சிறப்பான விளைச்சலைத் தருகின்றன.\n\nஐ.ஆர்.8. இது தமிழ்நாட்டில் நல்ல வடிகால் வசதியுள்ள இடத்தில் சாகுபடி செய்ய ஏற்ற வகையாகும். இது மிக உயரமாக வளரும் பீட்டா எனும் நெல் வகைக்கும், மிகக் குள்ளமாக வளரும் டி.ஜி.ஆ.ஜென் என்னும் வகைக்கும் பிறந்ததாகும். 130 நாள் வயதுடைய இது, ஏக்கருக்கு 3 டன் வரை விளைச்சல் கொடுக்கக் கூடியது. பாசன வசதி இருக்கும் போது, கார், சொர்ண வாரிப் பட்டங்களிலும் சாகுபடி செய்யப் படுகிறது. ஐ.ஆர். 20. இது ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தது. ஐ.ஆர்.262–24–3 என்னும் வகையையும், தமிழ்நாட்டு ஒட்டுக் கிச்சிலி என்னும் டி.கே.எம் 6 வகையையும், ௧ரு ஒட்டுச் சேர்த்து உண்டாக்கப் பட்டது. தரமான அரிசியையும், மெல்லிய நெல்லையும் கொண்டுள்ள இதன் வயது 130 நாள்களாகும். இது பச்சரிசிக்கு ஏற்றது. அரிசி, அரைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் சமையலுக்கு ஏற்ற குணத்தை அடைகிறது. இது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. இது குருத்துப் பூச்சியின் தாக்குதலைத் தாங்குவதோடு, வறட்சியையும் தாங்குகிறது. செங்கற்பட்டு மாவட்டத்தில் புழுதிக்கால் சாகுபடிக்கு இவ்வகை ஏற்றது.\n\nபவானி. ஆந்திரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இது, பீட்டா என்னும் நெட்டையான வகையையும், பி.பி. ஐ. 76 என்றும் ஃபிலிப்பைன்ஸ் நெல்லையும் இனக் கலப்புச் செய்து, உருவாக்க ப்பட்டது. 130–135 நாள் வயதுடைய இவ்வகை நெல் ஏக்கருக்கு 2000 கி.கி. விளைச்சல் தருகிறது. நெல் அறுவடையின் போது மழை வந்தாலும், கதிர்களில் உள்ள நெல் மணிகள் முளைப்பதில்லை.\n\nபொன்னி. இது இந்திய வகைக்கும், ஜப்பான் வகைக்கும் உருவான நெல் வகையாகும். 140 நாள் வயதுடைய இது, குறைந்த உரமேற்று, நிறைந்த விளைச்சலைக் கொடுக்கும். இவ்வகை நெல் ஏக்கருக்கு ஏறத் தாழ 1500–1800 கி.கி. விளையும். தரமான அரிசியைத் தரும் இது, சமையலுக்கு மிகச் சிறந்தது. எனவே, இதன் சாகுபடி அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் முன் போகச் சம்பாப் பட்டத்திற்கு ஏற்றது. சற்று உயரமாக வளரக் கூடியது. நீர்ப் பிடிப்பு, வெள்ளம் இவற்றைத் தாங்க வல்லது. வெள்ளைப் பொன்னி, சிவப்புப் பொன்னி என்னும் இரு வகை இதில் உண்டு.\n\nகருணா. இது ஐ.ஆர் 8 வகையையும், ஆடுதுறை 27 வகையையும் இனக் கலப்புச் செய்து உருவாக்கப் பட்ட குள்ளமான நெல் வகையாகும். இது ஏறத்தாழ 180 நாள் வயதுடையது. ஏக்கருக்கு 1½ முதல் 2 டன் வரை விளைச்சல் தரும். இது பச்சரிசிக்கு ஏற்றது. அரிசியில் 10.58% புரதச் சத்து உள்ளது. கருணா வகை தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகுந்த அளவும் , மதுரை மாவட்டத்தில் குறைந்த அளவும் சாகுபடியாகிறது. இதன் வயது குறைவாக உள்ளமையால், வட கிழக்குப் பருவ மழை தொடங்கு முன், அறுவடைக்கு வந்து விடுகிறது.\n\nகண்ணகி. இது தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்ற படி நிலையான விளைச்சல் தந்து வரும் நெல் வகையாகும். இது ஐ.ஆர் 8 நெல்லுடன், ஒட்டுக் கிச்சிலி என்னும் டி.கே.எம்.6 வகையைக் கலப்புச் செய்து பெறப் பட்டதாகும். இந்த நெல் ஏக்கருக்கு 3 டன் வரை விளையும். இது கார், குறுவை, சொர்ண வாரிப் பட்டத்திற்கு ஏற்றது. வயல் முழுதும் உள்ள நெற்பயிர்கள் ஒருமிக்க பூப்பதால், கதிர் அனைத்தும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையக் கூடிய சிறப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். சமையலுக்கு மிகச் சிறந்த இதைக் குலை நோய் தாக்கா வண்ணம் காக்க வேண்டும். இந்நெல் இந்தியா முழுமையும் பரவியுள்ளமை குறிப்பிடத் தக்கது.\n\nஆடுதுறை 31. இது ஐ.ஆர். 8 நெல் வகையையும், வளர் வகை 340 நெல்லையும் கருவொட்டுச் சேர்த்து உண்டாக்கப் பட்டது. இதன் வயது 105 நாள்களாகும். இதில் பூச்சி நோய் பெரும்பாலும் தொற்றுவதில்லை. சமையலுக்கு மிகச் சிறந்த இது, கருணா, கரிகாலன் நெல் வகைகளை விட, மிகுந்த விளைச்சலைத் தரும். இவ்வகை நெல்லை 50% பயிர் பூக்கத் தொடங்கிய நாளிலிருந்து, 30 நாள்கள் தள்ளி அறுவடை செய்ய வேண்டும்.\n\nசொர்ணவாரிக் கிச்சடி. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவைப் பட்டத்தில் மிகுதியாகப் பயிர் செய்யப் படுகிறது. ஐ.ஆர். 8 நெல் வகையையும், தடுக்கன் என்னும் வகையையும் கருவொட்டுச் சேர்த்து உருவாக்கப்பட்டது. ஏறத் தாழ, 103 நாள் வயதுடைய இது, இலைச் சுருட்டைப் புழுவால் எளிதாகத் தாக்கப் படும். இது ஏக்கருக்கு 2 டன் விளைச்சல் தரும்.\n\nரத்னா. இது தமிழ்நாட்டில் பல போகப் பயிர்ச் சாகுபடியில் உயர் விளைச்சலை அடைய உதவியது. ஒர் ஆண்டில் மூன்று முறை சாகுபடி செய்து, ஒரு ஹெக்டேரில் 22 டன் பெற்று, உலகச் சாதனையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இது காஞ்சி டி.என். 1 நெல்லுக்கும், கோ 29 நெல்லுக்கும் உருவானது. ஏறத் தாழ 90 நாள் வயதுடைய இது, நடுத்தர நெல் வகையைச் சேர்ந்தது. இதன் அரிசி மோட்டா வகையில் அடங்கும். இது மிகுந்த விளைவைத் தருவதால், பெரிதும் விரும்பிச் சாகுபடி செய்யப் படுகிறது.\n\nகோ 32. இது ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற ஒரு போக நன்செய் நெல் வகையாகும். இது திருச்செங்கோடு சம்பா என்றும் குறிப்பிடப் படுகிறது. இதன் அரிசி சன்ன வகையைச் சேர்ந்தது. மிகுந்த உரமேற்று, சாயாத தன்மை வாய்ந்தது. ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற நெல் வகை கோ. 36, ஐ.ஆர். 8 வகைக்கும், கோ. 32 வகைக்கும் பிறந்த நெல் வகையாகும். இது 125–140 நாள் வயதுடையது. இவ்வகை நெல்லை ஜுன், ஜுலைப் பட்டத்தில் மட்டும் ஒரு போக நன்செய் பயிர் செய்ய வேண்டும். இது சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் பயிர் செய்யப் படுகிறது.\n\nகாஞ்சி, வைகை. காஞ்சி என்பது டி.என். 1 வகையையும், கோ. 29 வகையையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. வைகை என்னும் நெல் வகை டி.என். 1 வகைக்கும், கோ 29 வகைக்கும் பிறந்தது. வைகை 115–120 நாள் வயதுடையது. இது, இலைக் கருகல் நோயையும், கொள்ளை நோயையும் தாங்கும் திறன் கொண்டது. இதை எப்பருவத்திலும் சாகுபடி செய்யலாம். இவ்வகை நெல், செங்கற்பட்டு, தென் ஆர்க்காடு, கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம், மதுரை மாவட்டங்களில் பயிர் செய்யப் படுகிறது.\n\nகாவேரி. இது செங்கற்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரிப் பட்டத்தில் சாகுபடி செய்யப் படுகிறது. இது டி.கே. எம். 6 வகைக்கும், டி.என். 1 வகைக்கும் பிறந்தது. 110–115 நாள் வயதுடைய இதன் அரிசி சன்ன வகையைச் சேர்ந்தது.\n\nபெண்ணை. இது நெல்லை மாவட்டத்தில் சாகுபடி செய்யப் படுகிறது. இது கார் சம்பா என்னும் ஏ.எஸ் டி. 1 வகையையும், டி.என். 1 வகையையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. இதன் வயது 110–115 நாள்களாகும். இது சன்ன நெல்லையும், சிவப்பு அரிசியையும் கொண்டுள்ளது.\n\nஜெயா. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் விளைச்சல் தந்து கிருஷி பண்டிட் என்னும் விருதைப் பெற்றுத் தந்தது. இது டி.என். 1. நெல் வகையையம், டி. 141 நெல் வகையையும் ஒட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. 125 நாள் வயதுடைய இது, நல்ல விளைச்சல் அளிக்கும் திறன் பெற்றுள்ளது. நெல் மணிகளின் எடை மிகுதியாக உள்ளமையால், இதை வணிக முறையில் பயிர் செய்யலாம். அரிசி ஐ.ஆர். 8 போன்றது. இவ்வகை, குறுவைப் பட்டத்திற்கு ஏற்றது.\n\nமணிலா. இது, தென் ஆர்காடு மாவட்டம், விழுப்புரம் பகுதி முழுவதும் சாகுபடியாகிறது. இது 120 நாள் வயதுடையது. வைகாசி-ஆனிப் பட்டச் சாகுபடிக்கு ஏற்றது. அறுவடைத் தருணத்தில் மழை வந்தால், கதிரில் உள்ள நெல் மணிகள் முளைத்து விடும். ஆகையால், ஆடிப் பட்டத்தில் இதைச் சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது. இவ்வகை அரிசியின் விலை ஏனைய வகை அரிசியை விடக் குறைவாக உள்ளமையால், ஏழை மக்கள் மிகுதியாகப் பயன் படுத்துகின்றனர். இது சமையலுக்கு ஏற்ற அரிசியைக் கொண்டது.\n\nஅமராவதி (கோ 39). இது இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில், குளத்துப் பாசனப் பகுதியில் கிடைக்கும் நீரைக் கொண்டு, குறுகிய காலப் பயிராகப் பயிர் செய்யப் படுகிறது. இதன் வயது 90 நாளாகும். இது ஹெக்டேருக்கு 4–5 டன் விளைச்சலைத் தரும்.\n\nஅன்னபூர்ணா, திருவேணி. அன்னபூர்ணா, டி.என். 1 வகையையும், பி.டி.பி. 10 வகையையும் கருவொட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. அன்னபூர்ணாவுக்கும், பி.டி.பி. 15 வகைக்கும் பிறந்தது, திருவேணி நெல் வகையாகும். இது, 110 நாள் வயதுடையது. திருவேணியின் தானியம், வைக்கோல் இவற்றின் விளைச்சல் மிகுதி. இவ்வகை நெல் புழுங்கலரிசித் தயாரிப்புக்குச் சிறந்தது.\n\nநெய்க் கிச்சடி, சன்னச் சொர்ணவாரி. இது 110–115 நாள் வயதுடையது. ஏறத் தாழ ஏக்கருக்கு 2½ டன் விளையும் இது, குழாய்ப் பாசனம் மிகுதியாக உள்ள வட மாவட்டங்களுக்கும், சொர்ணவாரிப் பட்டங்களுக்கும் ஏற்றது. இவ்வகை நெல்லின் அரிசி, ஆர்க்காடு கிச்சடி, பொன்னி, பவானி இவற்றின் அரிசியை விடச் சன்னமாக வழுவழுப்பாக உள்ளது. இதனால், இது நெய்க் கிச்சடி எனப் படுகிறது. தரமான அரிசியைக் கொடுப்பதுடன், உயர் விளைச்சல் தரும் சன்ன சொர்ணவாரி சி.ஆர். 10–114 வகையையும், சி.ஆர். 115 வகையையும் கருவொட்டுச் சேர்த்து உருவாக்கப் பட்டது. இது 105–108 நாள் வயதுடையது.\n\nகிச்சடிச் சம்பா. இது தர்மபுரி மாவட்டச் சிறப்பு நெல் வகையாகும். ஏறத் தாழ 145–150 நாள் வயதுடைய இதைப் பூச்சி நோய் பெரும்பாலும் தாக்குவதில்லை. இவ்வகை நெல், ஏக்கருக்குச் சராசரியாக 15 மூட்டைகள் விளையும். இதை ஆனிப் பட்டத்தில் நாற்று விடுவர். இதை நடவு செய்யத் தனி நிலம் தேவையில்லை. நிலம் ஆயத்தமான நிலையில் நடலாம். நெல் மணிகள் மார்கழி–தையில் பனியின் போது, முதிர்ச்சியடையும். இதற்கு மிகுதியாக வேதி உரம் பயன் படுத்தத் தேவையில்லை. இதன் நாற்றைப் பருவத்தில் நட்டால், மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும். இவ்வகை நெல்லை அரைக்கும் போது, அரிசி உடையாத காரணத்தால், ப்படியே பச்சரிசி தயார் செய்யலாம். மேலும் கிச்சடி அரிசி சமையலுக்கு மிகவும் சிறந்தது. சமைக்கும் போது, குழையாதாகையால் இது, மிகவும் சுவையாக இருக்கும்.\n\nராஜராஜன். இது தமிழ்நாட்டில் மொத்த உணவுத் தானிய உற்பத்தியைப் பெரிதும் உயர்த்தக் கூடிய புதிய நெல் வகையாகும். இது ஐ.ஆர். 8 நெல்லுடன், கோ. 25 வகையை ஒட்டு முறையில் சேர்த்து உருவாக்கப் பட்டது. 170 நாள் வயதுடைய இது, ஏக்கருக்கு 2½ டன் விளைச்சல் அளிக்கும். நாற்றங்காலில், நாற்றுக்கு அதிக வயதாகி நட்டாலும், விளைச்சல் பாதிக்கப் படுவதில்லை. இதன் அரிசி சன்ன வகையைச் சேர்ந்தது.\n\nசிறப்பு நெல் வகைகள்\n\nபாஸ்மதி. இது ஆடிப் பட்டத்திற்கு மட்டும் ஏற்றது. 135–150 நாள் வயதுடையது. இதை 8 மாதம் வைத்திருந்து, அரைவை செய்தால், அரிசி குழையாமல் இருக்கும். இதன் புது நெல் அரிசி சமைக்கும் போது, குழைந்து விடும், அரிசி சமையல் செய்யும் போது, நறுமணத்துடன் மென்மையாக இருக்கும்.\n\nராஸ்காடம். இது மத்தியப் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப் பட்டது. இதன் வயது 150 நாளாகும். இது ஆடிப் பட்டத்திற்கு மட்டும் ஏற்ற நறுமணம் தரும் வகை.\n\nபுட்டு அரிசி. இதில் வெள்ளைப் புட்டு, கறுப்புப் புட்டு, கருஞ் சிவப்புப் புட்டு என்னும் மூன்று வகையுள்ளது. இவற்றின் வயது 150 நாள்களாகும்.\n\nசீரகச் சம்பா. இது கம்பன் எனப் படுகிறது. இது சம்பாப் பட்டத்திற்கு மட்டும் ஏற்றது. இதில் நறுமணம் தரும் வகையுள்ளது.\n\nசபர்மதி. இது நறுமணம் தரும் ஓர் உயர் விளைச்சல் நெல் வகையாகும். 125 நாள் வயதுடையது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடிக்குச் சிறந்தது.\n\nஆழ் நீர் நிலங்களுக்கு ஏற்ற நெல் வகைகள். கடற்கரைப் பகுதிகளில் ஆழ் நிலங்கள் கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளமையால், வடிகால் வசதி இருப்பதில்லை. செப்டம்பர் மாதம் முதல் நீர்த் தேக்கம் அதிகரிக்கும். இந்நிலங்களில், வாடல்–சம்பா, முழு முழுங்கி, களிங்ஞன் பூதலா எஸ்.எல்.ஓ.13, குள்ளக் கார் ஆகியன சாகுபடி செய்யப் படுகின்றன. இவ்வகை அரிசி சிவப்பாக உள்ளது. புழுங்கல் அரிசிக்கு இது ஏற்றது.\n\nகளர் நில நெல் வகை. இது பேராவூரணி 1 எனப் படுகிறது. 145 நாள் வயதுடையது. சில களர் நிலங்களில், ஐ.ஆர். 20 நன்றாக வளர்கிறது.\n\nஉப்பு நிலப் பயிர். மேற்குக் கடற்கரையில் ஆறுகள் கடலில் சேருமிடத்தில், உப்பு நீர் எதிர்த்து வருவதால், அங்குள்ள நீரும், உப்புத் தன்மை கொண்டுள்ளது. மார்ச்சுத் திங்களில், மண்ணைக் குவித்து வைத்து, ஜுன் திங்களில் பருவ மழை தொடங்கிய பின், சில குறிப்பிட்ட நெல் வகைகளை முளைக்க வைத்து விதைப்பர். நாற்று 15 அங்குல உயரம் வளர்ந்ததும், மண் குவியலைச் சிறு துண்டுகளாக வெட்டி விட்டு, அவற்றில் நாற்றுகளை நட்டு, அவை 9 அங்குலத் தொலைவில் இருக்கும் படிச் செய்து நீர் பாய்ச்சுவர்.\n\nநெல் சாகுபடிப் பட்டங்கள். தட்ப வெப்ப நிலை, சூரியனின் கிரணங்கள் விழுவதைப் பொறுத்து, மாறு படுகிறது. இதையே பருவங்கள் என்பர்.\n\nஆடிப் பட்டம். அழுத்தம் மிகுந்துள்ள காற்று தென் பகுதியிலிருந்து விரைவாக வடக்கு நோக்கிச் செல்கிறது. புவியின் சுழற்சியினால், இது தென் மேற்குத் திசையிலிருந்து அடிக்கிறது. இதைத் தென் மேற்குப் பருவ காலம் என்பர். இப்பருவம் ஏறத் தாழ, வைகாசி மாதம் 15ஆம் நாளில் மேற்குக் கரையில் தொடங்குகிறது. இக்காற்று பரந்த இந்துப் பெருங்கடலின் மேல் தவழ்ந்து வருவதால், நீர் உட்கொண்ட மேகம் நிரம்பிய ஈரக் காற்றாக இருக்கிறது. இக்காற்று, மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கிப் பெரு மழையைக் கொடுக்கிறது. இம்மழை ஆடிப் பட்டத்தில் சம்பா நெல் சாகுபடியைத் தொடங்கி வைக்கிறது.\n\nபுரட்டாசி, ஐப்பசி, கார்த்திகைப் பட்டம். ஆடிப் பட்டச் சூழ்நிலை, புரட்டாசி 15 ஆம் நாள் வரை நிலவும். பின்னர், வடக்கே நிலம் குளிர்ச்சி அடைவதால், காற்றின் அழுத்தம் மிகுந்து, தெற்கே வீசத் தொடங்குகிறது. இதை வட கிழக்குப் பருவம் என்பர். இக்காலம், தமிழ்நாட்டில் மார்கழி 15 ஆம் நாள் வரையில் நிலவும். இப்பருவக் காலத்தில், வங்கக் கடலில் உருவாகும் புயலாலும், காற்றாலும், மழை கரையோரப் பகுதிகளில் மிகுந்து காணப் படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அப்போது மழையும் மிகுதியாகக் காணப் படும். தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பயிரும், தாளடிப் பயிரும் திருநெல்வேலி மாவட்டத்தில், பிஷாணப் பயிரும் பயன் அடைவது வட கிழக்குப் பருவ மழையாலேயாகும்.\n\nகாரீஃப், ராஃபிப் பட்டங்கள். இவை பொதுவாக மழைக் கால, குளிர் காலப் பயிர்ச் சாகுபடிப் பட்டங்களைக் குறிக்கின்றன. காரீஃப் பட்டம் என்பது மாரிக் காலத்தில், குறிப்பாகத் தென் மேற்குப் பருவ மழை உதவியுடன், சாகுபடி செய்யப் படும் பட்டம் என்றும், ராஃபிப் பட்டம் என்பது குளிர் காலத்தில் தொடங்கிக் கோடை வரை தொடரும் பட்டம் என்றும் கொள்ளலாம்.\n\nசம்பாப் பட்டம். இது பொதுவாக, ஏறத் தாழ ஜுன் 21 முதல் டிசம்பர் 21 வரை நீடிக்கும் பட்டமாகும். இப்பட்டத்தைப் புயல், வெள்ளம், வறட்சி ஆகியனதாக்கும். பொதுவாகச் சம்பாப் பட்டத்தில், நீண்ட காலப் பயிரையே சாகுபடி செய்வது வழக்கம். இது ஏறத் தாழ 150–180 நாள் வயதுடையது. சம்பாப் பட்டத்தில் ஒளிக் காலமும், வெப்ப நிலையும் மாறு படுவதால், நெல் வகைகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n\nகோயம்புத்தூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆடிப் பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. கோ 36, பவானி, ஐ.ஆர். 20 ஆகியன இப்பட்டத்தில் நல்ல விளைச்சலைத் தருகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோடைப் பயிருக்கு அடுத்து வருவது புரட்டாசிப் பட்ட மாகும். இப்பட்டத்தில், ஈரோடு கோட்டத்தில் மிகுந்தளவு ஐ.ஆர். 20. பவானி ஆகியன சாகுபடி செய்யப் படுகின்றன.\n\nசாகுபடி முறைகள். இதில் மானாவாரிச் சாகுபடி, புழுதிக்கால் சாகுபடி, விதைக்கால் சாகுபடி, ஒட்டடம் சாகுபடி போன்ற முறைகள் உள்ளன.\n\nமானாவாரிச் சாகுபடி. நிலத்தை நன்கு சமமாக உழுது பண்படுத்தி, நெல் விதைகள் கையாலும், கலப்பையாலும் விதைக்கப் படுகின்றன. நிலத்தைச் சமப் படுத்தி, மண்ணை நன்றாக அழுத்தி விடுவதால், விதைகள் ஈரத்தை உறிஞ்சி, நன்கு முளைக்கின்றன. மழை பொழியும் போது, சிறிது யூரியா உரம் போடலாம். இவ்வகையில் நெல் விதைப்பு, மழை வளத்தைப் பொறுத்து, ஆடி மாத இறுதியில் அல்லது ஆவணித் தொடக்கத்தில் செய்யப் படுகிறது. பிசினி என்னும் சிவப்பு நெல் (டி.கே.எம் 1) விதைக்கப் பயன் படுகிறது. இது, 150 நாள் வயதுடையது; வறட்சியைத் தாங்கக் கூடியது. கோ. 31 நெல் வகையும், இம்முறை விதைப்புக்கு ஏற்றது. இது, 180 நாள் வயதுடையது. இதன் விளைச்சல், பருவ மழையைப் பொறுத்தே இருக்கும். சீராகச் சாகுபடி செய்த இடத்தில் ஏக்கருக்கு 6 மூட்டைகள் விளையும். தமிழ்நாட்டில் செங்கற்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரிச் சாகுபடி மிகுதியாகச் செய்யப் படுகிறது.\n\nபுழுதிக் கால் சாகுபடி. நிலத்தை நன்கு உழுது புழுதியாக்கித் தொழு உரமிட்டு, நெல் விதைக்கப் படுகிறது. இச்சாகுபடி, வட கிழக்குப்பருவ மழை வந்த பின்பு, நீர் தேங்கும் நிலங்களில் செய்யப் படுகிறது. பயிர் வளர்ந்ததும், களையெடுக்கப் பட்டு, மேலுரமாக யூரியா அளிக்கப் படுகிறது. இச்சாகுபடிக்கு, டி.கே.எம். 8 வகை மிகவும் சிறந்தது. மேலும் பொன்னி, பவானி, ஐ.ஆர். 20 ஆகியவையும், நிறைந்த விளைச்சலை அளிக்கின்றன. புழுதிக்கால் சாகுபடிக்கு, உயர் விளைச்சல் தரும் நெல் வகைகள் பயன் படுகின்றன. ஏக்கருக்கு 10–15 மூட்டை விளைச்சல் பெறலாம். இதை ஆவணி இறுதி அல்லது புரட்டாசித் தொடக்கத்தில் செய்ய வேண்டும். இம்முறை செங்கற்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.\n\nவிதைக்கால் சாகுபடி. முளை கட்டப் பட்ட வித்துகளை, நேரடியாக நிலத்தில் விதைப்புச் செய்வதை, விதைக்கால் சாகுபடி முறை என்பர். செங்கற்பட்டுப் பகுதிகளில், சம்பாப் பட்டம் முடியும் போது, கோ. 2 என்னும் நெல்லைச் சேற்றில் விதைப்பர். இம்முறை, விதைப்புக்கு இப்போது, குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் வகைகள் சிறந்தவை யாக உள்ளன. இம்முறையில், பயிரின் வயது குறைவதால், நீர்ப் பாசன வசதி குறையுமுன், பயிர் அறுவடைக்கு வந்து விடுகிறது. இலைச் சுருட்டுப் புழு போன்றவை, இப்பயிரைத் தாக்குவதில்லை. உழவர்களுக்குக் கார்த்திகைப் பட்ட விதைக்கால் சாகுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விதைக்கால் பயிரின் வயது, நடவுப் பயிரின் வயதை விட 10 நாள் குறையும்.\n\nஒட்டடம் சாகுபடி. இம்முறையில் 100 நாள் வயதுடைய குறுவை நெல் வகையுடன், 200 நாள் வயதுடைய நீண்ட கால நெல் வகையை, 3:1 விகிதத்தில் ஒன்றாகக் கலந்து நாற்று விட்டு, 25 நாளில் நடலாம். குறுவை செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப் படுகிறது. பின்னர், இரண்டையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுக்கப் பட்ட ஒட்டடம் மிகுதியாக வளர்ந்து, கார் கட்டி, கதிர் பிடித்திருக்கும். இது ஜனவரி–பிப்ரவரியில் அறுவடை செய்யப் படும். இம்முறை, செங்கற்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் மேற்கொள்ளப் படுகிறது. மறுதாம்புச் சாகுபடி. சம்பாப் பயிரை அறுவடை செய்தவுடன், நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். இதற்கு உரம், பூச்சி மருந்து ஆகியவை இட வேண்டும். மறுதாம்புப் பயிர் வளர்ந்து, உயர் விளைச்சல் அளிக்கும். இதைப் பூச்சியும், நோயும் பெரிதும் தாக்குவதால், இது புகழ் பெறவில்லை.\n\nஅறுவடை. கதிர் முதிர்ந்ததும், தாள் பழுத்துச் சிறிதே பசுமையாயுள்ள வேளையில், அறுவடை செய்யப் படுகிறது. குறுகிய, நடுத்தர வயதுடைய நெல் வகைகளில், பூப்பூத்ததும் 27–33 நாள் கழித்து அறுவடை செய்வதும், நீண்ட கால வயதுடைய நெல் வகைகளில் பூப்பூத்ததும், 33–39 நாள் கழித்து, அறுவடை செய்வதும் சிறந்ததாகும். அறுத்த கதிர்கள் 2 நாள் வயலில் கிடந்து உலர்ந்த பின், எடுத்துச் சென்று அடித்து, நெல்மணிகளை எடுக்கின்றனர். சில பகுதிகளில் காளைகளைக் கொண்டு அடிப்பர். சில பகுதிகளில் தாள்களைத் தரையிலோ, பலகையிலோ அடிப்பர். அடித்து எடுத்த நெல் மணிகளைத் தூசி நீக்கித் தூய்மை செய்து, காயப் போட வேண்டும். நெல் மணிகளைத் தானியம் உலர்த்தும் எந்திரங்களைக் கொண்டும் உலர்த்தலாம். ஈரப் பசையற்ற குளிர்ச்சியான காற்றிலும், நெல் தானியங்களை உலர்த்தலாம்.\n\nதானிய சேமிப்பு. அடித்துத் தூய்மையாக்கப்பட்ட பின், நெல்லை உலர்த்தி, மண், வைக்கோல், மூங்கில் பத்தை, கோளத் தட்டை முதலியவற்றால் ஆன குதிர்களில் சேமித்து வைப்பர். இதில் 10 சதவீதத்திற்கு மேல் ஈரம் இருக்கக் கூடாது. ஏனெனில், ஈரத்துடன் சேமித்தால், நெல்லில் பூச்சிகள் தோன்றும். புதிய கோணிப் பைகளில் சேமிக்கலாம். மூட்டைகளை அடுக்கும் போது, சுவரில் படாதவாறு 30 செ.மீ. இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். கோடைக் காலங்களில் சேமிப்பு அறைகளில் நல்ல காற்றோடம் இருக்கும்படிச் செய்ய வேண்டும். —அ. அரங்கநாதன் பூசண நோய் குலை நோய். பைரிக்குலேரியா ஓரைசே என்னும் பூசணத்தால் இந்நோய் உண்டாகிறது. இது நாற்றங்காலிலும், நட்ட பயிரிலும் காணப் படும். தொடக்கத்தில், நாற்றங்காலில் இந்நோயால் இலைகளில் சிறு, சிறு பூச்சிகள் தோன்றுகின்றன. நாளடைவில், இப்புள்ளிகள் பெரியவையாகக் கண் வடிவத்துடன் காணப் படுகின்றன. இப்புள்ளிகளின் ஓரங்கள் கருஞ்சிவப்பு நிறமாகவும், நடுப்பகுதி சாம்பல் நிறமாகவும் தென்படும். பின்னர், இப்புள்ளிகள் பெரியவையாகி ஒன்றோடொன்று சேர்ந்து, தோகை முழுவதும் பரவித் தோகையைக் கருகச் செய்கின்றன. நாற்றில் தோன்றும் இவ்வறிகுறிகளை, நட்ட பயிரிலும் காணலாம். நட்ட பயிர்களில், கணுக்கள் கருமை நிறம் அடையும். தாக்கப் பட்ட கணுக்கள் ஒடிந்து விடும். கதிர்கள் வெளி வரும் சமயத்தில், கதிர்களின் கழுத்துப் பகுதி கருமை நிறம் பெற்று ஒடிந்து விடும். நோய் கண்ட கதிர்களின் மணிகள், பால் பிடிக்கா. இந்நோயைக் கட்டுப் படுத்த, ஹெக்டேர் ஒன்றுக்கு எடிஃபென்பாஸ் 500 மி.லி, கார்பெண்டாசிம் 250 கி., மேன்கோசெப் 1000 கி. ஆகியவற்றில் ஒன்றைப் பயிரில் தெளிக்க வேண்டும்.\n\nசெம்புள்ளி நோய். இந்நோய்க்கு ஹெல்மிந்தோஸ் பொரியம் ஒரைசே என்னும் பூசணமே காரணமாகும். நோயுற்ற இலை, இலையுறை ஆகியவற்றின் மேல் செம்புள்ளிகள் வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ தோன்றும். நோய் கடுமையாகும் போது, இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, தாக்குதலுற்ற பகுதியைக் காய்ந்து விடச் செய்கின்றன. நெல் மணிகளின் மேல் கரும் பச்சை நிறத்தில், பூசண வளர்ச்சி காணப் படும். கதிரின் கழுத்துப் பகுதி தாக்கப் பட்டுப் பழுப்பு நிறத்தில் பூசண வளர்ச்சி காணப் படும். இந்நோயைக் கட்டுப் படுத்த 1.கி.கி. விதைக்கு 4 கி.கி. அல்லது 4 கி. கேப்டான் வீதம் விதை நேர்த்தி செய்த பின், நாற்றுப் பாவ வேண்டும். நடவுப் பயிரில், நோயின் அறிகுறிகள் தோன்றினால், ஹெக்டேர் ஒன்றுக்கு எடிஃபென்பாஸ் 500 மி.லி. மேன்கோசெப் 1000 கி. கேப்டபால் 600 கி. ஆகியவற்றில் ஒன்றைப் பயிரில் தெளித்துக் கட்டுப் படுத்தலாம்.\n\nதூர் அழுகல். ஃப்யூசேரியம் மொனிலிபார்மே என்னும் பூசணத்தால், இந்நோய் தோன்றுகிறது. இதனால், நாற்றங்காலில் நாற்றுகள் நீண்டு, மெலிந்து, நலிந்து வெளிறியோ, மஞ்சளாகியோ காய்ந்து விடும். நட்ட பயிரில், செடி நெட்டையாக வளர்ந்து, மெலிந்து கணுக்களில் சல்லி வேர்களைப் பெற்றிருக்கும். இந்நோயைக் கட்டுப் படுத்த விதைக்கும் முன், 1 கி.கி. விதைக்கு 4 கி.கி. அல்லது கேப்டான் மருந்தை விதை நேர்த்திச் செய்து பின், நாற்றுப் பாவ வேண்டும்.\n\nதண்டழுகல். இந்நோயை உண்டாக்கும் பூசணம் ஸ்கிளிரோசியம் ஒரைசே ஆகும். இந்நோயின் காரணமாக, நீர் மட்டத்தை ஒட்டிய இலையுறையில் நீண்ட கரும் புள்ளிகள் தோன்றும். இவை தண்டிற்கும் பரவித் தண்டை அழுகச் செய்யும். இலைகள் காய்ந்து தண்டு சாய்ந்து விடும். பிளந்த தண்டைக் கூர்ந்து நோக்கினால், கடுகு போன்ற கரு நிற இழை முடிச்சுகள் காணப் படும். இந்நோயைக் கட்டுப் படுத்த நடவு வயலில் நீரை வடித்து விட்டுக் கார்பெண்டாசிம் 0.1% மருந்தைச் செடிகளின் தூர்களில் ஊற்ற வேண்டும்.\n\nஇலையுறை அழுகல். கார்ட்டிசியம் சசாகி என்னும் பூசணம் இந்நோய்க் காரணியாகும். இந்நோயின் போது, நீர் மட்டத்தை ஒட்டிய இலையுறைப் பகுதியில், வட்டமான சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றிப் பரவி, இலையுறையை அழுகச் செய்யும். இதனைக் கட்டுப்படுத்த, நிலத்தில் தேங்கியிருக்கும் நீரை நன்றாக வடித்து விட்டுக் கார் பெண்டாசிம் 0.1%, பிராசிக்கால் 0.1% ஆகியவற்றில் ஒன்றைச் செடிகளின் தூர்களில் ஊற்ற வேண்டும்.\n\nகதிர் உறை அழுகல். அக்ரோசிலின்டிரியேம் ஒரைசே அல்லது சாரகிளேடியம் ஒரைசே என்னும் பூசணத்தால், இந்நோய் உண்டாகிறது. கதிர் உறைகளில் பெரிய பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். நாளடைவில், தாக்குதலுற்ற பகுதிகள் அழுகிக் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட பயிரிலிருந்து, கதிர் வெளி வருவதில்லை.\n\nமேலும் நோய் கண்ட கதிர்களின் மணிகள் பால்பிடிக்கா. இந்நோயைக் கட்டுப் படுத்த, நடவு வயலில் ஹெக்டேர் ஒன்றுக்குக் கார்பெண்டாசிம் 250கி., எஃபென்பாஸ் 500 மி., கேப்டபால் 600 கி. ஆகியவற்றில் ஒன்றைக் கதிர் வெளி வருவதற்கு முன்னால், ஒரு முறையும் 15 நாள் இடைவெளியில் மற்றொரு முறையும் தெளிக்க வேண்டும்.\n\nபாக்டீரிய நோய் பாக்டீரிய இலைக் கருகல். சாந்தோமோனாஸ் கேம்பெஸ்டிரிஸ் வகை, ஒரைசே என்னும் பாக்டீரியாவால் இந்நோய் உண்டாகிறது. இந்நோயால், இலை ஓரத்திலும், இலை நடு நரம்பு ஓரத்திலும், நீர்ப் புள்ளிகள் தோன்றி, நாளடைவில் நீண்ட கோடுகளாக மாறுகின்றன. அவை, வெண்மையாகவோ, மஞ்சளாகவோ காணப் படுகின்றன.\n\nஇக்கோடுகளின் அகலம் விரிவடைவதுடன், அவற்றின் ஓரங்கள் வளைந்து, காய்ந்து விடுகின்றன. இந்நோய் மிகக் கடுமையாகப் பரவினால், பயிரின் வளர்ச்சி தடைப் பட்டுக் குட்டையாகி விடுகிறது. இந்நோயைக் கட்டுப் படுத்த நோய் தாக்கிய பயிரிலிருந்து, பெற்ற விதைகளைப் பயன் படுத்தக் கூடாது. நடவுப் பயிரில் நோய் காணப்பட்டால், ஹெக்டேர் ஒன்றுக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்ஃபேட், குளோரோ டெட்ராசைக்கிளின் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுப் பொருள் 300 கி. அளவுடன், காப்பர் ஆக்சி குளோரைடு 1250 கி. சேர்த்துப் பயிரில் தெளிக்கலாம்.\n\nநச்சுயிரி நோய். துங்ரோ நோய் என்பது நச்சுயிரியால் ஏற்படுகிறது. பாதிக்கப் பட்ட பயிர் குட்டையாதல், தூர்களில் சிம்புகளின் எண்ணிக்கை குறைதல், ஆரஞ்சு நிறமும், மஞ்சள் நிறமும் கலந்த பழுப்பு நிறத்துடன் இலைகள் காணப் படல், இளம் மஞ்சள் இலைகளில் நரம்புகளுக்கிடையில், பச்சையம் குறைந்த வெளிர் நிறப் புள்ளிகள் அல்லது சிறு கோடுகள் காணப் படல்; தானியங்கள் சிறுத்துப் பழுப்பு நிறம் பெற்றிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். 8 செண்ட் நாற்றங்காலுக்கு நாற்றுப் பாவிய 10 நாளில் ஒரு முறையும், 10 நாள் இடைவெளியில் மறு முறையும், மோனோகுரோட்டோபாஸ் 40 மி.லி. அல்லது ஃபாஸ்ஃபாமிடான் 10 மி.லி. அல்லது ஃபென்தியான் 40 மி.லி. வீதம் தெளித்து, நோயைப் பரப்பும் பச்சைத் தத்துப் பூச்சிகளை அழிக்க வேண்டும். நட்ட பயிரில், நோயின் அறிகுறி இருந்தால், 15 நாளில் முதல் முறையும், 15 நாள் இடைவெளியில் மற்றொரு முறையும், ஹெக்டேர் ஒன்றுக்கு மோனோ குரோட்டோபாஸ் அல்லது ஃபாஸ்ஃபாமிடான் அல்லது ஃபென்தியான் 500 மி.லி. வீதம் தெளிக்க வேண்டும்.\n\nமைக்கோ பிளாஸ்மா. இந்நோய் மைக்கோ பிளாஸ்மா போன்ற நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இந்நோயால் பயிர்கள் மிகவும் குட்டையாக இருக்கும். தூர்களில், குறுகலான கிளை தூர்கள் மிகுதியாகத் தோன்றி, நோய் காணாத பயிர்களை விடக் கூடுதலாகத் தூர் கட்டியிருக்கும். மேலும், பயிர் வளைந்திராமல், நேராக நிற்கும். இலைகள் மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப் படும். இலைகளில், துருப் பிடித்த அல்லது கருத்த புள்ளிகள் தோன்றும். பாதிக்கப் பட்ட செடிகள் காய்ந்து விடுவதில்லையாயினும், கதிர்கள் தோன்றுவதில்லை. தோன்றினாலும், பதர்களே மிகுதியாக இருக்கும். இதனைக் கட்டுப் படுத்த, துங்ரோ நோய்க்கான கட்டுப்பாட்டு முறைகளையே பின்பற்றலாம்.\n\nதுங்ரோ நோய். துங்ரோ நோய் ஏறத் தாழ 68% விளைச்சலைப் பாதிக்கிறது. இந்நோய், டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார் ஆகிய மாநிலங்களில் மிகுதியாகப் பரவி வருகிறது. இது ஒரு நச்சுயிரி நோயாகும். பாதிக்கப் பட்ட செடியில், தூர்கள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகும். செடிகள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். செடியின் வயதிற்குத் தகுந்தாற் போல, வளர்ச்சிக் குறைவு வேறு படும். இளம் பயிர் தாக்கப் பட்டால், பயிர் மிகவும் குட்டையாகி விடும். நோயினால் பாதிக்கப் படாத பயிரில் உள்ள தோகைகள், ஒரே சீரான பச்சை நிறத்துடன் காணப் படுவது இயற்கையாகும். ஆனால்,இந்நோயினால் பாதிக்கப் பட்ட தோகையில் உள்ள பசுமை நிறம் மாற்றமடைந்து, நிற வேறுபாடு மிகுந்து காணப் படும். இத்தகைய நிற வேறுபாடுகள் இலைகளில், நரம்புகளுக்கிடையே உள்ள பகுதிகளில் தோன்றித் தேமல் போன்று, கரும் பச்சை நரம்புப் பகுதியும், நிற வேறுபாடு கொண்ட இடைவெளிப் பகுதியும் கலந்து காணப் படும். பசுமை நிறம் குறைந்த நிற வேறுபாடு கொண்ட பகுதிகள் வெளுத்து, நீண்ட வெளிர் கோடுகளாக நரம்புகளுக்கிடையே தோன்றும். சில நெல் வகைகளில் புதிதாகத் தோன்றும் தோகைகள், மஞ்சள் நிறத்துடன் பக்கவாட்டில் வெளிப் புறமாகச் சுருண்டு காணப் படும். நோய் கண்ட செடிகள் வளர்ச்சி குன்றிப் பூப்பதற்கு நீண்ட நாள்களாகும். பாதிக்கப் பட்ட செடிகளில் உண்டாகும் கதிர்கள் சிறுத்தும், தானியங்கள் வளர்ச்சியடையாமலும், பழுப்பு நிறத் திட்டுகளுடனும் காணப் படும். பொதுவாகக் கதிர்கள் சாவியாகி விடும்.\n\nபரவுதல். நெஃபோடெட்டிக்ஸ் வைரசென்ஸ் (Nephotettix virescens). நெஃபோடெட்டிக்ஸ் நைக்ரோபிக்டெஸ் (N. nigropictes), நெப்போடெட்டிக்ஸ் மலாயானஸ் (N. malayanus), ரெசிலியா டார்சாலிஸ் (Recilia dorsalis) ஆகிய தத்துப் பூச்சிகள் (leaf hoppers) மூலம் இந்நோய் பரவுகிறது. வயலிலும், வரப்பிலும் வளரும் புற்களையும், இந்நோய் தாக்குகிறது. தத்துப் பூச்சிகள் 30 நிமிடங்களில், நோய் கண்ட செடிகளிலிருந்து நக்சுயிரிச் சாற்றைத் தொற்றிக் கொண்டு பரப்பும் இயல்புடையன. நச்சுயிரியைத் தொற்றிக் கொண்ட 5 நாள்களுக்குப் பின், நச்சுயிரியைப் பரப்பும் திறனை இப்பூச்சிகள் இழந்து விடுகின்றன.\n\nகட்டுப்பாடு. ஐ.ஆர்.36, ஐ.ஆர்.50, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் வகைகள் இந்நோய்க்கு எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன. புற்களை, வயலிலும், வரப்பிலும் வளரா வண்ணம் அழித்து விட வேண்டும். —கா. சிவப்பிரகாசம் துணை நூல். K.M. Smith, Plant Viruses, Methven and Co Ltd, London, 1960.\n\nஆனைக் கொம்பன் ஈ. நெற்பயிரைப் பாதிக்கும் இப்பூச்சிக்குத் தண்டுத்தன் வெங்காயச் சருகு என்றும் பெயருண்டு. இப்பூச்சியின் அறிவியல் பெயர் ஒர்சியோலியா ஒரைசே (Orseolia oryzae) என்பதாகும்.\n\nஇப்பூச்சியின் தாக்குதலை இந்தியா உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணலாம். இந்தியாவில், முதன் முதலில் 1880ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் இது கண்டறியப் பட்டது. இப்போது, அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மேகாலயம், ஒரிஸ்ஸா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணலாம். தமிழகத்தில் இது, மதுரை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தென்னார்க்காடு, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் பரவலாகத் தென்படுகிறது.\n\nஅழிவு. இப்பூச்சியினால் மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில், முதல் பருவ நெற்பயிருக்கு இழப்பு ஏற்படுகிறது. தஞ்சையில், சம்பாப் பருவத்தில் அழிவுண்டாகிறது. இப்பூச்சி குறிப்பாக, ஆடுதுறை 36, கோ. 37, ஐ.ஆர்.20, கோ. 47 போன்ற வகைகளில் மிகுந்து காணப் படுகிறது. இது ஆகஸ்டு–டிசம்பர் மாதங்களில் பேரிழப்பை உண்டாக்கும். குறிப்பாக, அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பெரும் எண்ணிக்கையில் ஈக்கள் காணப் படும்.\n\nஇப்பூச்சியின் புழுக்கள், வளர்கின்ற தூர்களைத் தாக்குகின்றன. புழுக்கள் தூர்களின் உட்பகுதிக்குள் சென்று, வளரும் பகுதியை உண்கின்றன. இதனால் தாக்கப்பட்ட தூர்களில் ஒருவித நமைச்சல் ஏற்பட்டு, வெண்மையாக மாறி, மேற்கொண்டு இலைகள் வளராமல் தடுத்து, வெங்காய இலை அல்லது யானைத் தந்தம் போல் மாறி இருக்கும். எனவே, இதற்கு ஆனைக் கொம்பன் என்னும் பெயர் வந்தது. தாக்கப்பட்ட தூர்களிலிருந்து, கதிர்கள் வெளி வருவதில்லை. ஒரு குத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட தூர்களில் ஆனைக் கொம்பன் நோயின் அறிகுறிகள் தோன்றலாம். இந்த ஈக்கு மாற்று ஊனூட்டியாக விளங்குபவை இஞ்சிப் புல், கம்பன் புல், காட்டு நெல், குதிரை வாலி, வரகு முதலியவையாகும். சாதாரணமாகப் பெருமழையுடன் கூடிய குளிரான சூழ்நிலையில் அழிவைக் காணலாம். பொதுவாக வெப்பநிலை 24.1–31.2°C மற்றும் காற்றின் ஈரப் பதம் 62–81% இருக்கும் போது, இதனால் ஏற்படும் இழப்பு மிகும்.\n\nவாழ்க்கை முறை. ஆனைக் கொம்பன் ஈயில் 4 பருவங்கள் உண்டு. அவை முட்டை, புழு, கூட்டுப் புழு, முதிர்ந்த ஈ என்பவனவாகும்.\n\nமுட்டைப் பருவம். முட்டைகள் நீள்வட்ட வடிவிலும், வழவழப்பாகவும் 0.45X0.25 மி.மீ. அளவிலும் இருக்கும். பொதுவாக முட்டைகளைப் பயிரின் நுனியிலிருந்து மூன்றாம் இலையின் அடியில் காணலாம். முட்டைகள் தனித் தனியாக, இலைகளின் நரம்புகளுக்கு அருகிலோ, தண்டைச் சுற்றியுள்ள இலையுறைகளிலோ இடப் படுகின்றன. ஒரு தாய் ஈ 100–300 முட்டைகள் இடும் இயல்புடையது. பொதுவாக, முட்டைகளை இரவு 8–10 மணி வரை இடும். முட்டைப் பருவம் 7–10 நாள்களாகும்.\n\nபுழுப் பருவம். இதில் மூன்று நிலைகள்உண்டு. முதல் நிலைப் புழுக்கள் 0.5 மி.மீ. நீளமானவை. இப்புழு வயிற்றின் 12, 13ஆம் பிரிவுகளில் இரண்டு இணை மயிர்க் கால்களைப் பக்கத்திற்கு இரண்டாகப் பெற்றிருக்கும். இது 3 நாள்களில் முடிவுறும். இரண்டாம் நிலைப் புழு ஏறக் குறைய 1.7 மி.மீ. நீளமுடையது. வயிற்றில் 13ஆம் பிரிவில், இணை மயிர்க் கால்கள் பக்கத்திற்கு மூன்றாக அமைந்திருக்கும். மூன்றாம் நிலைப் புழு 3.5 மி.மீ. நீளம் வளரும். இதன் வாய்ப் பகுதி, சுவாசத் துளைகள் போன்றவை இளம் பழுப்பானவை. தூய வெண்மை நிறமான இப்புழு ஏறக் குறைய, 7 நாள்கள் நீடித்திருக்கும்.\n\nகூட்டுப் புழுப் பருவம். கூட்டுப் புழு இளஞ்சிவப்பு நிறமானது. ஆண் கூட்டுப் புழு 4 மி.மீ. நீளத்திலும், பெண் கூட்டுப் புழுவை விடச் சற்று வெளிர் நிறமாகவும் இருக்கும். பெண் கூட்டுப் புழு 5 மி.மீ. நீளமுடையது. இதன் கண்கள் கரு நீலமானவை . தலை, இறக்கை, கால்கள் ஆகியன மஞ்சள் நிறமானவை. இரண்டு இணை மயிர்க் கால்கள் தலைப் பகுதியில் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலில் தெளிவான பிரிவுகளைக் காணலாம். கூட்டுப் புழுப் பருவம் 7–10 நாள்கள் நீடித்திருக்கும்.\n\nமுதிர்ந்த ஈ. இளஞ்சிவப்பு நிறமாயிருக்கும். ஆண் ஈ 3.5 மி.மீ. நீளமாயும் பெண் ஈ 4–9 மி.மீ. நீளமாயும் இருக்கும். பெண் ஈயின் இறக்கை சற்று நீளமானது. ஆண் ஈயின் வயிற்றுப் பகுதி சற்றுக் கறுப்பாயும், பெண் ஈயின் வயிற்றுப் பகுதி ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். கால்கள் மற்றும் உடல் முழுவதும் சிறிய மயிர்களால் மூடப் பட்டிருக்கும். இறக்கைகள் வெளிர் நிறமானவை. ஈயின் வாழ்நாள் ஏறக் குறைய இரண்டு நாள்களாகும்.\n\nகட்டுப்பாட்டு முறைகள். வளர்ந்த ஈக்கள் குறைந்த வெளிச்சம் கொண்ட விளக்குகளுக்குக் கவரப் படுகின்றன. மற்றப் பூச்சிகளைப் போன்று, இதன் நடமாட்டத்தை வயலில் காண்பது எளிதன்று. வயலில் 10% தூர்கள் பாதிக்கப் பட்டுள்ளமையே இப்பூச்சிக்குப் பொருளாதார அழிவு நிலை யாகும். இதனைக் கட்டுப் படுத்துவதற்கு, பாஸ்ஃபமிடான் 250 மி.லி.,ஃபெந்தியான் 500 மி.லி. ,ஃபெனிட்ரோதியான் 625 மி.லி., எண்டோசல்ஃபான் 750 மி.லி. குவினால்ஃபான் /50 மி.லி., ஃபாசலோன் 1500 மி.லி. என ஒரு ஹெக்டேர் நிலத்திற்குப் பயன்படுத்தலாம்.\n\nநெற்பயிரைக் காலத்திற்கு முன் நட்டால், இந்த ஈயின் தாக்குதல் குறையும். ஆனைக் கொம்பனின் தாக்குதல் ஆண்டு தோறும் காணப் படும் இடங்களில், எதிர்ப்புத் திறனுள்ள வகைகளைச் சாகுபடி செய்யலாம். இதற்கு எம்டியூ 3, ஐஇடி 6315, ஐஇடி 6350, ஏசிம் 18, ஏசிம் 19, கீரன், விஜயா, பல்குணா, விக்ரம், சக்தி, காகத்தியா, சுரேகா ஆகிய வகைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. தழைச் சத்தை மிகுதியாக இட்டால், இந்த ஈயின் தாக்குதலும் கூடும். எனவே, பரிந்துரைக்கப் படும் தழைச் சத்தைப் பிரித்து, இட வேண்டும். நடவுக்குப் பின், அசோஸ்பைரில்லத்தை இடுவதாலும், இதன் தாக்குதல் குறைகிறது.\n\nஆனைக் கொம்பன் ஈயை, இயற்கையில் 12–க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் தாக்கி அழிக்கின்றன. அவற்றுள், பிளாட்டிகேஸ்டர் ஒரைசே (Platygaster oryzae) என்னும் குளவி 90% அழிவை ஏற்படுத்தும். தாய்க் குளவி, ஆனைக் கொம்பன் முட்டையினுள் தன் முட்டையை இட்டு அழிக்கிறது. இக்குளவி கதிர் வாங்கும் நிலையில், பேரிழப்பை உண்டாக்கும். பொதுவாக, இதன் தாக்குதலை அக்டோபர் 3ஆம் வாரம் முதல் ஜனவரி 2ஆம் வாரம் வரை காணலாம். இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. —கோ. அர்ச்சுனன்\n\nநெல்சன் நோயியம்\n\nகுரோமோபோப் (Chromophobe) செல்களே மிகையாகச் சுரந்தால், குஷிங் நோய் உண்டாகிறது. சிறுநீரகத்தின் மேல் இரு புறமும் இருக்கும் அட்ரினல் சுரப்பிகளை (adrenal glands) அறுவை மூலம் அகற்றி விடுவதே மருத்துவமாக அமைகிறது. அறுவைக்குப் பின், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிறமிகளின் மிகையான மாற்றங்களும் மிகத் தீவிரமான பிட்யூட்டரி கட்டியும் தோன்றி, விரைவாகப் பரவும். இந்நிலையே, நெல்சன் நோயியம் எனப் படுகிறது. இந்நோய் நிலையில் தோன்றும் சுரப்பிக் கட்டி, பிட்யூட்டரி குழிவை விரிவடையச் செய்து, பார்வை நரம்புகளின் குறுக்கீடுகளை நசுக்குகிறது. —அ. கதிரேசன் துணை நூல். D.H. Williams, Tex tbook of Endocrinology, W.B. Saunders, Philadelphia, 1981.\n\nநெல்லி\n\nஇதன் தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்பிளிகா (Phyllanthus emblica) ஆகும். இது இஃபோர்பியேசி என்னும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு எம்பிளிகா அஃபிசினேலிஸ் (Emblica officinalis) என்னும் வேறு பெயருண்டு. இதன் தாயகம் இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா ஆகும். இந்தியாவின் இலையுதிர் காடுகளில் தன்னிச்சையாகக் காணப் படும். வீட்டுத் தோட்டங்கள், தோப்புகளிலும் வளர்க்கப் படும்.\n\nவளரியல்பு. நெல்லி 8–12 மீ. உயரம் வளரக் கூடியது. மரப் பட்டை தடிமனாகப் பிளவு பட்டுத் தகடு தகடாகப் பிரிந்து வரக் கூடியது.\n\nஇலைகள். மாற்றிலையடுக்கு அமைப்பு; சிறகு வடிவக் கூட்டிலை. சிற்றிலைகள் 50 வரையில் இருக்கும். இலையடிச் செதில்கள் மிகச் சிறியவை.\n\nமஞ்சரி . இலைக் கோணக் கதிர் மஞ்சரி. சிறிய மலர்கள்; ஒரு பால் ஓரில்லப் பூக்கள். ஆண், பெண் மலர்கள் கலந்து காணப் படும். நுனியில் ஆண் பூக்களும், கீழே பெண் பூக்களும் அமைந்திருக்கும். பெண் பூக்களின் எண்ணிக்கை குறைவு. புல்லி வட்டம் மட்டுமே உண்டு. 6 மடல்கள்; மகரந்தத் தாள்கள் 3 இணைந்தவை. தேன் சுரப்பி உண்டு.\n\nசூலகம். 3 அறைகள் உள்ளன. சூல்கள், அறைக்கு 2 ஆக அச்சொட்டு முறையில் இருக்கும். கனி உள்ளோர் சதைக்கனி (drupe) ஆகும். விதைகள் முக்கோண வடிவம் கொண்டவை.\n\nசாகுபடி. பொதுவாக நெலலியை விதை மூலம் பெருக்கமடையச் செய்வர். போத்து, ஒட்டு, மொட்டிடுதல் மூலமும், இனப் பெருக்கம் செய்வதுண்டு. இம்மரத்திற்குப் பனி, வறட்சியைத் தாங்கும் திறன் இல்லை. பெரிய காய்களைக் கொண்ட இனம், வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப் படும். கவாத்து முறையில், வெட்டி எடுத்த போத்துகள் விரைவாகச் செழித்து வளரும். பூக்கள் கோடையில் தோன்றிக் குளிர் காலத்தில் காய்க்கும். சில சூழல்களில், இரண்டாம் பருவத்திலும் காய்கள் தோன்றுவதுண்டு; ஆனால், அவை தரமற்றவை. இளம் காய்கள் பச்சையாக இருந்து முதிர்ந்தவுடன், செங்கல் சிவப்பாக மாறும். காய்கள் துவர்ப்பாக இருக்கும். இவை ஊறுகாய் செய்ய, மிகச் சிறந்தவை.\n\nபயன். குஷ்ட நோயாளிகளுக்கு நெலலிக் கனி மிகச் சிறந்த மருந்தாகும். இதற்குக் காரணம், கனியிலுள்ள வைட்டமின் C மிக எளிதில் செரிக்கக் கூடிய நிலையில் இருப்பதேயாகும். இக்கனியிலிருந்து, வைட்டமின் C சத்தைப் பிரித்தெடுத்துப் படிகமாக்கும் ஆய்வு நடை பெறுகிறது. சித்த, ஆயுர்வேத நாட்டு மருத்துவத்தில் நெல்லிக் கனி சிறந்த மருந்தாகக் கருதப் படுகிறது. உலர்ந்த நெல்லிக் காயை வயிற்றுப் போக்கு, சீத பேதி, குருதிப் போக்கு, குருதிச் சோகை, மஞ்சட் காமாலை நோய்களுக்குப் பயன் படுத்துவர். திருபலா எனப் படும் மருந்தில் நெல்லி, கடுக்காய், தான்றிக் காய் மூன்றின் பொடியையும் பயன் படுத்துவர். தலை வலி, தலைச் சுற்றல், மலச் சிக்கலுக்கு இது மிகவும் ஏற்றது.\n\nநெல்லிக் கனியை எழுது மை (INK) மற்றும் தலை முடிச் சாயம் தயாரிக்கப் பயன் படுத்துவர். உலர்ந்த நெல்லிக் காயை, நெல்லி முள்ளி என்பர். இதை நீரில் ஊற வைத்துத் தேய்த்துக் குளித்தால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். காய், பட்டை மற்றும் இலையில் டானின் பெருமளவில் உள்ளது. இலைகளும், காயும் கால் நடைத் தீவனமாகப் பயன் படும். இலையைக் கொண்டு, பட்டு நூல் சாயம் ஏற்றுவதுண்டு. பாக்கு, ஏலப் பயிர்களுக்கு இலை சிறந்த உரமாகும். நெல்லிக் கட்டை சிவந்த, நெருக்கமான கோடுகளோடு காணப் படும். இக்கட்டை உடையக் கூடியது; ஆனால், நீரில் உடையாமல் நிலைத்திருக்கும். —ஸ்ரீ. கணேசன்\n\nநெல்லூர் ஆடு\n\nஇந்தியாவில் இப்போது 37 இனச் செம்மறி ஆடுகள் உள்ளன. இவற்றில் ஓர் இனம், நெல்லூர் ஆடு ஆகும். ஓர் இனம் என்பது குறிப்பிட்ட பகுதியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வெளித் தோற்றத்தையும், இயல்பையும் பெற்றிருக்கும். செம்மறி ஆட்டைக் கம்பள இன ஆடு, இறைச்சி இன ஆடு எனப் பிரிக்கலாம். இவற்றுள் நெல்லூர் ஆடு இறைச்சி இனத்தைச் சார்ந்தது.\n\nநெல்லூர் ஆடு ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்டத்தில் காணப் படுகிறது. இந்தியாவில் காணப் படும் செம்மறி ஆடுகளில், நெல்லூர் ஆடு மிக உயரமும், உடல் எடையும் கொண்டது. இதன் கொம்புகள் பின்னோக்கி வளைந்து காணப் படும். பொதுவாக, இரண்டு வளைவுகள் காணப் படும். நெல்லூர் ஆட்டுக்கு நீண்ட முகமும், நீளமான காதுகளும் உண்டு. தாடி அல்லது மணி என்று கூறப் படும் சிறிய உறுப்புகள், வெள்ளாடுகளின் கழுத்தின் கீழ்ப் புறம் காணப்படும். இவை செம்மறியாடுகளில் காணப் படா. ஆனால் நெல்லூர் இன ஆடுகளில் இவை காணப் படும்.\n\nபாலா நெல்லூர் இனம். இது வெண்மை நிறத்தில் இருக்கும். சில சமயம், வெண்மை நிறத்தில், பழுப்பு நிறத் திட்டுகளுடன் காணப் படும். பெரும்பாலும், இந்தத் திட்டு தலை, கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் காணப் படும்.\n\nஜோடிப் பூ அல்லது ஜோடிப் பூ நெல்லூர் இனம். இது வெண்மை நிறத்தில், கறுப்புப் புள்ளிகளோடு காணப் படும். இப்புள்ளி பெரும்பாலும் வாயைச் சுற்றிலும், கால், கீழ்த் தாடைகளிலும் காணப் படும். சில ஆடுகளில், இப்புள்ளிகள் வயிற்றுப் பகுதிகளில் காணப் படும்.\n\nடேரா நெல்லூர் ஆடு. இது பழுப்பு நிறத்தில் காணப் படும். நெல்லூர் மாவட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள பிரகாசம், ஓங்கோல், கடப்பா, குண்டூர், நலங்கொண்டா மாவட்டங்களிலும் மிகுதியாகக் காணப் படுகிறது.\n\nபருவமடைந்த நெல்லூர் ஆண், பெண் ஆடுகள் முறையே 30 கி.கி., 40 கி. கி. உடல் எடை இருக்கும். உடலின் நீளம் முறையே 68 செ.மீ., 67 செ. மீட்டரும், உயரம் முறையே 76 செ.மீ., 72 செ. மீட்டரும், மார்புச் சுற்றளவு முறையே 75 செ.மீ., 72 செ.மீட்டரும் இருக்கும்.\n\nநெல்லூர் ஆட்டின் தோலில் முடி குறைவாகவே இருக்கும். மார்பும், கழுத்தின் கீழ்ப் புறமும் சந்திக்கும் இடத்திலும், கழுத்திற்கு மேற்புறமும், தொடையின் பின் புறமும், முடி மிகுந்து காணப்படும். கொம்புகள் ஆண் ஆடுகளில் மட்டும் காணப் படும். பெண் ஆடுகளுக்குக் கொம்புகள் கிடையா. இதன் காது 15.செ.மீ. நீண்டு தொங்கும். வால் மிகவும் மெலிந்து, 10 செ.மீ. அளவில் சிறிதாகக் காணப் படும். மணி அல்லது தாடி பெரும்பாலான நெல்லூர் ஆடுகளில் காணப் படும்.\n\nநெல்லூர் ஆடு 20–23 மாத வயதில் பருவமடைந்து, முதல் குட்டியை 28 மாத வயதில் ஈனுகிறது. பொதுவாக, ஒரு முறை ஒரு குட்டி மட்டுமே ஈனும். குட்டி ஈன்ற பிறகு, அடுத்த குட்டி ஈனுவதற்கு ஏறத்தாழ 428 நாள்கள் ஆகும்.\n\nஇறப்பு. பொதுவாகப் பல காரணங்களினால், 14% குட்டிகள் 3 மாத வயதிற்குள் இறந்து விடுகின்றன. 4% குட்டிகள் 3–12 மாத வயதில் மடிந்து விடுகின்றன.\n\nஉடல் எடை. பிறந்த குட்டியின் எடை ஏறத் தாழ 2.5 கி.கி. இருக்கும். மூன்று மாத வயதில், 12 கி.கி. எடையும், 6 மாத வயதில், 16 கி.கி. எடையும், 12 மாத வயதில், 23 கி.கி. எடையும் இருக்கும். —மு. சேகர்\n\nநெளி சிரை ஒழுக்கு\n\nசிரை விரிவடைந்தும், நெளிந்தும், குருதி ஒழுக்குடனும் காணப் பட்டால், அது நெறி சிரை ஒழுக்கு (bleeding varices) எனப் படும். இந்நிலை, பொதுவாகக் கால்களில் ஏற்பட்டாலும், விரை நாளம், உணவுக் குழல், குத–மலக் குடல் ஆகியவற்றின் சிரைகளும் இந்நிலையை அடையலாம். நிமிர்ந்து நிற்பதால், நெளி சிரை நிலை ஏற்படுகிறது. விலங்கினங்களில், இந்நிலை காணப் படுவதில்லை. தசைகளின் விரைப்புத் தன்மையும், சுருங்கும் தன்மையும் சிரைக் குருதியை, இதயத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. ஆகவே, பிறவியிலேயே தடுக்கிதழ் இல்லாமை, தசைத் திறன் குறைவு, தசைச் சூம்பல், ஆழ் திசுத் தகட்டு இறுக்கும்ஆகியவை நெளி கீரைக்கு அறிகுறிகளாகின்றன. நிற்கும் போது, காலிலிருந்து இதயம் வரையுள்ள குருதியின் முழு எடை, சிரைத் தடுக்கிதழ்களைப் பாதிக்கிறது. சாஃபீன–தொடைச் சிரை, சாஃபீன பொதுத் தொடைச் சிரை, சஃபீன–முழங்கால் பின் பள்ளச் சிரை ஆகியவற்றில் காணப் படும் தடுக்கிதழ்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றன.\n\nதடுக்கிதழ்கள் செயலிழக்கும் போது, ஆழப் பகுதியிலிருந்து குருதி மேற்பகுதிக்கு ஒழுகி வருகிறது. இதனால், வலி உணர்வும் சோர்வும் உண்டாகின்றன. கால் வலியும், கணுக்கால் வீக்கமும், தோலில் அரிப்பும், சிலருக்கு இரவில் தசைப் பிடிப்பும் உண்டாகின்றன. நெளி சிரைகளை முழுமையாக ஆய்வு செய்வதிலேயே, இதற்குண்டான மருத்துவத்தின் வெற்றி அமைகிறது.\n\nமருத்துவம். சிரைகளைக் கடினமடையச் செய்யும் ஊசி மருந்துகளாக, எத்தனாலமின் ஓலியேட் 5%, சோடியம் டெட்ராடிசைல் சல்ஃபேட் 3% ஆகியன பயன் படுகின்றன. அறுவை முறைகளும் கையாளப் படுகின்றன. நெளி சிரை வெடிப்பால் உண்டாகும் குருதிப் பெருக்கு, கூடுதலாகவே இருக்கும். காலை உயரமாகத் தூக்கி வைத்து, இறுக்கமான கட்டுப் போட்டு, நெளி சிரை ஒழுக்கை நிறுத்தலாம். எக்காரணம் கொண்டும் டூர்ணிகே (tourniquet) எனப் படும் .இறுக்குக் கட்டைப் போடக் கூடாது. —சாரதா கதிரேசன் துணை நூல். A.J. Harding Rains and. H.David Ritchie (Eds), Bailey & Love’s Short Practice of Surgery, Seventeenth Edition, H.K. Lewis & Co.Ltd., London, 1977.\n\nநெறிப்பு\n\nபொதுவாக, மாரடைப்பின் அறிகுறியாக நெறிப்பு (angina) உள்ளது. இதயம் தொடர்பில்லாக் காரணங்களாலும், வலி உண்டாகலாம். வலி எங்கிருந்து உண்டாகிறது என்பதை அறிவது சில போது, கடமையாகும்.\n\nஇதயம் தொடர்பான நெறிப்புப் போன்ற வலி, இதயத் தசைக்கு வேண்டிய ஆக்சிஜன் பயன்பாட்டிற்கும், தேவைக்கும், இடைவெளி இருந்தால் உண்டாகிறது. இவ்வலி நெறிப்பு, இறுக்கம், எரிச்சல், நெஞ்சுச் சுமை, அமுக்கி நெறிப்பது போன்ற பல வகையாக இருக்கும். உடல் உழைப்புக்குப் பின்னான வலி, உணவு, உணர்ச்சி வயப் படுதல், குளிர் தட்ப வெட்ப நிலை ஆகியவற்றில் வலி உண்டாகலாம். புகை பிடித்தலின் போது, நுரையீரலின் உட்செல்லும் கார்பன் மோனாக்சைடும், ஹீமோகுளோபினும் சேர்ந்து, திசுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது. புகை பிடித்தலுடன், உள்ளிழுக்கப் படும் நிக்கோடினும், இதயத் துடிப்பு விகிதத்தை அதிகரிக்கிறது. சுருக்கழுத்தமும், விரிவு அழுத்தமும் கூடுதலாகும். கேட்டகால் அமீன்கள் வெளிப் படுவதால், இதய உந்து திறன் குறைகிறது.\n\nவலி மார்பிலோ, மார்பு நடு எலும்பின் பின்னேயோ, விலா எலும்புச் சந்திப்புக்குக் கீழேயோ, தோன்றிக் கழுத்துக்கோ, தோள் பட்டைக்கோ சில போது, பின் தலை அல்லது கீழ்த் தாடைக்கோ போகலாம். இவ்வலி ஒரு நிமிடத்திற்குக் குறைவாகவே இருக்கிறது. ஓய்வு எடுத்தாலோ, நைட்ரோ கிளிசரின் மருந்து அருந்தினாலோ, வலி நின்று விடுகிறது. நெறிப்பு அல்லது வலி என்பது ஓர்அறிகுறி மட்டுமேயன்றி,நோயன்று என்பது கருதத் தக்கது. காரணங்கள் இதயக் காரணங்கள். இதயப் பெருந்தமனித் தடிப்பு (coronary atherosclerosis), இதயத் தமனி நாள இறுக்கம், நுரையீரல் குருதி மிகு அழுத்தம், இதயக் குருதி மிகு அழுத்தம், பெருந்தமனித் தடுக்கிதழ்ச் சுருக்கம், பெருந்தமனிச் செயலிழப்பு, கடும் சோகை, ஆக்சிஜன் பற்றாக்குறை, இதய உறை அழற்சி, ஈரிதழ்ப் பிறழ்சி (mitral prolapse).\n\nநுரையீரல் காரணங்கள். நுரையீரல் தமனி அடைப்பு, நுரையீரல் உறைக் காற்று, நுரையீரல் அழற்சி.\n\nஇரைப்பை–சிறுகுடல் காரணங்கள். உணவுக் குழல் இறுக்கம், உணவுக் குழலில் எதிர்க்களிப்பு, உணவுக் குழல் கிழிந்து விடல். உளவய காரணங்கள். மனத் தளர்வு, சிடுசிடுப்பு, நடிப்பது.\n\nநரம்பு–தசை–எலும்புக் காரணங்கள். மார்பு வெளி வாயில் நோயியம், கழுத்து, மார்பு முள்ளெலும்பு நசிவு நோய், விலா எலும்பு மற்றும் குருத்தெலும்பு அழற்சி. —மு.கி. ராஜாசுப்பிரமணியம் துணை நூல். W. Dressler, Clinical Acids in cardiac Diagnosis, Grune & Stratton, New york, 1970."}}