{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qqyve5t7/", "data": {"id": "qqyve5t7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qqyve5t7/", "kind": "article", "headword": "இளம்பெருமானார்", "romanization": "iḷamperumāṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.187348+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.", "body_ta": "கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். கல்வெட்டில் ‘கோட்டாற்று இளம்பெருமானார்’ என்று இப்புலவர் பெயர் காணப்படுவதால், இவர் ஊர் கோட்டாறு என்பது புலனாகிறது. கோட்டாறு என்பது இப்போதைய நாகர்கோயிலின் ஒரு பகுதியாகும். இப்பெயருள்ள ஊர் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளது. திருச்சியை அடுத்துள்ள செந்தலை என வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரிலுள்ள சிவன்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் இப்புலவர் பெயரும் இவரது பாடலும் காணப்படுகின்றன. பாடல் சிதைவுற்றுள்ளது. பல்லவ வேந்தரின் கீழ்ச் சாமந்தர்களாய் ஆண்டு வந்தவர்கள் முத்தரையர் ஆவர். அவர்கள் திருச்சி தஞ்சைப் பகுதிகளை ஆண்டுவந்தனர். அவர்களுள் ‘பெரும்பிடுகு முத்தரையன் சுவரன்மாறன்’ என்னும் அரசனின் வெற்றி பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்கள் முற்குறிப்பிட்ட சிவன்கோயில் தூண்களின் கல்வெட்டுகளில், ‘பெரும்பிடுகு முத்தரையனாயின சுவரன்மாறன்; அவன் எடுப்பித்த பிடாரி கோயில்; அவன் எறிந்த ஊர்களும் அவன் பேர்களும், அவனைப் பாடியோர் பெயர்களும் இத்தூண்கள் மேல் எழுதிய இவை’ எனத் தொடங்கிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்புலவருடைய பாடலில் இப்பொழுது தெளிவாகக் கிடைக்கும் பகுதி வருமாறு; ‘சேட்டிணர் பூந்தண் பொழிற் செம்பொன் மாரிக் கடியரணம், மூட்டின சீற்றமுன் சென்றது பின்பு பகட்டினத்தோர்....’. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட மன்னன் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்."}}