{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q7myy47d/", "data": {"id": "q7myy47d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q7myy47d/", "kind": "article", "headword": "உடந்தை", "romanization": "uṭantai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.599355+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "குற்றச் செயலை ஒருவர் தாமாகச் செய்யலாம் அல்லது மற்றவரின் தூண்டுதலின் பேரில் செய்யலாம் அல்லது ஒரு பொதுத் திட்டத்தின் வழிச் செய்யலாம்.", "body_ta": "குற்றச் செயலை ஒருவர் தாமாகச் செய்யலாம் அல்லது மற்றவரின் தூண்டுதலின் பேரில் செய்யலாம் அல்லது ஒரு பொதுத் திட்டத்தின் வழிச் செய்யலாம். அவ்வாறு அக்குற்றச் செயலைச் செய்யத் தூண்டுபவர். அதாவது உடந்தையாக இருப்பவர் குற்ற உடந்தையர் (Abettor) ஆவர். பொதுத்திட்டத்தில் பங்கு பெறுபவர் சதிகாரர் (Consipirator) ஆவர். மற்றவருடன் கூட்டுச் சேர்ந்து குற்றம் புரிந்திருப்பின், பங்கு கொண்ட மற்றவர்கள் உடன் குற்றவாளிகள் (Accompalices) ஆவர்.\n\nஇந்தியத் தண்டனைச் சட்டத்தின் 107–ஆம் பிரிவு குற்ற உடந்தையை வரையறுக்கிறது. குற்ற உடந்தை (Abetment) மூன்று செயல்களால் ஏற்படுகிறது. ஒருவரைக் குற்றம் செய்யும்படி தூண்டுதல் (Instigation); ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் ஒன்று கூடிச் சதி செய்து அதன் விளைவாகச் சட்ட முரணான ஒரு செயலைச் செய்தல் அல்லது சட்டப்படி செய்ய வேண்டிய செயலைச் செய்யாதிருத்தல்; உட்கருத்துடன் ஒரு குற்றச் செயல் புரிவதற்கு வேண்டுமென்றே செயலுதவியாக (Aid) இருத்தல் ஆகிய இம்மூன்று செயல்களும் குற்ற உடந்தை என்பதில் அடங்கும்.\n\nகுற்ற உடந்தை முழுமை பெற வேண்டுமெனில் i) குற்ற உடந்தையர் என்ற ஒருவர் இருத்தல் வேண்டும். ii) அவர் குற்றத்திற்கு உடந்தையாக இருக்க வேண்டும். iii) அச்செயல் குற்றமாக இருத்தல் வேண்டும். ஒரு செயலைச் செய்யத் தூண்டுபவர் அச்செயலுக்கு உடந்தையாக இருக்கிறார். அவ்வாறு தூண்டுதல் குற்ற உடந்தையாகக் கருதப்படும். அவர் தூண்டுதலில் மட்டும் ஈடுபடாமல், செய்யப்படும் செயலிலும் பங்கேற்கலாம். ஒருவருக்கு மேற்பட்டவருடன் கலந்தாலோசித்து, ஒப்பந்தப்படி செயற்படலாம். அதேபோல உட்கருத்துடன் ஒரு குற்றத்திற்குச் செயலுதவி அளிக்கலாம். இவையாவும் குற்ற உடந்தையின் பாற்படும்.\n\nஇந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி ஒரு குற்றத்திற்குத் தூண்டுதல் மூலம் அல்லது சதி மூலம் உடந்தையாக இருந்தது உண்மையில் செயற்படாமற் போகலாம். எனினும், அது குற்ற உடந்தையாகக் கருதப்படும்.\n\nகுற்றம் புரியும் வேளையில் ஒருவர் உடனிருத்தல் மட்டும் போதாது; குற்றச் செயல் ஒன்றுக்கு உதவி அளித்து உறுதுணையாக இருத்தல் வேண்டும். இது தவிர, குற்றம் இழைக்கப்படும்போது குற்ற உடந்தையர் உடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குற்ற உடந்தையர் குற்றம் புரியும் வேளையில் இருந்தால் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படுவார்.\n\nதூண்டப்படும் குற்றம் செய்யப்படாமற் போனாலும் குற்ற உடந்தையர் தண்டனைக்குரியவரே.\n\nஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது மற்றொரு குற்றமாக முடியுமேயானால், பிந்தைய செயல் முந்தைய செயலின் எதிர்நோக்கக்கூடிய பின் விளைவாக இருக்கும் நிலையில் இரு குற்றங்களுக்கும் அவர் பொறுப்பாவார் (பிரிவு 111). (எ–டு) ஒருவர் ஒரு குழந்தையை மற்றொருவர் உணவில் நஞ்சிடும்படி தூண்டுகிறார். தூண்டுதலின் விளைவாக அக்குழந்தை தவறுதலாகப் பக்கத்தில் இருப்பவரின் உணவில் நஞ்சைக் கலந்து விடுகிறது. இப்பொழுது, முதல் குற்றத் தூண்டுதலுக்குத் தூண்டியவர் பொறுப்பாவது போல், இரண்டாம் குற்றத் தூண்டுதலுக்கும் பொறுப்பாகிறார்.\n\nஒரு குறிப்பிட்ட விளைவை உண்டாக்கும் உட்கருத்துடன் ஒருவர் ஒரு செயலுக்கு உடந்தையாக இருந்து, அவ்வாறு செய்யப்பட்ட செயல் உட்கருத்தில் கொள்ளப்பட்ட செயலுக்கு வேறுபட்ட விளைவை ஏற்படுத்தினால், உடந்தையாக இருந்த செயல் அந்த வேறுபட்ட விளைவை உண்டாக்கக்கூடும் என்பதை அவர் அறிந்திருக்கும் போது, அந்தச் செயலுக்கும் அதே முறையில் அதே அளவு பொறுப்புடையவர் ஆவார். (எ–டு) ஒருவர் மற்றொருவருக்குக் கொடுங்காயம் விளைவிக்கும்படி தூண்டுகிறார். கொடுங்காயம் விளைவாக அவர் இறந்தால், அவரது மரணத்திற்கும் குற்ற உடந்தையர் பொறுப்பாவார்.\n\nஒரு குற்ற உடந்தைக்குத் தூண்டப்படும் ஒருவர் குற்றம் புரியத் தகுதியற்றவராக இருந்தாலும், குற்றம் புரிய ஊக்குவித்தவர் குற்றவாளியாவார். குழந்தைகள், புத்திசுவாதீனமற்றவர்கள் குற்ற உடந்தையராக இருக்க முடியாது.\n\nகுற்ற உடந்தைக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமேயாகும் (Abetment of an abetment is an offence)."}}