{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q3pzg7ts/", "data": {"id": "q3pzg7ts", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q3pzg7ts/", "kind": "article", "headword": "இறுதிநிலை உற்பத்தித் திறன்", "romanization": "iṟutinilai uṟpattit tiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.635291+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பொருளியலில் பகிர்வு ஒவ்வோர் உற்பத்திக் காரணிக்கும் கிடைக்கும் பங்கையும் அது பெறும் ஊதிய அளவையும் ஆய்கிறது.", "body_ta": "பொருளியலில் பகிர்வு ஒவ்வோர் உற்பத்திக் காரணிக்கும் கிடைக்கும் பங்கையும் அது பெறும் ஊதிய அளவையும் ஆய்கிறது. உற்பத்திக் காரணிகளின் ஊதியத்தை இறுதி நிலை ஆக்கத்திறன் (Marginal Productivity) கோட்பாடு விளக்க முனைகிறது. உற்பத்திக் கார- ணிகளின் விலையானது தூய போட்டி, முழு வேலைநிலை (Full Employment) முதலியவற்றால் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதைப் பகிர்வு முறையில் இறுதிநிலை ஆக்கத்திறன் கோட்பாடு பருத்தாய்கிறது.\n\nஇறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு\n\nசே.பி. கிளார்க்கு (J.B. Clark), விக்சுடீடு (Wicksteed) ஆகியோர் இக்கோட்பாட்டை கி.பி.19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கினர். உற்பத்திக் காரணியின் திறனுக்கேற்ப அதன் விலை வரையறுக்கப்படும். காரணியில் உற்பத்தித் திறன் உயர்ந்ததாக இருந்தால் அதன் விலையும் உயரும். உற்பத்திக் காரணியின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் விலையும் குறையும். இதுவே பகிர்வின் பொதுக் கோட்பாடு (General Theory of Distribution) என்றும், நாட்டு வருவாய்ப் பகிர்வுக் கோட்பாடு (National Dividend Theory of Distribution) என்றும் கூறப்படுகிறது.\n\nஇக்கோட்பாடு நுண் பொருளியல் (Micro Economics) கோட்பாட்டைச் சார்ந்ததாகும். இது மேலும் நிறைவுப் போட்டி, முழுவேலையுடைமை, நீண்டகாலம் குறைந்துசெல் விளைவு விதி, உச்ச ஆதாய நோக்கம், காரணி அலகுகளின் ஓரியலான தன்மை, பகுபடுந் தன்மை, தடையற்ற பெயர்ச்சி, விளைவுகளைக் கணக்கிட இயலும் தன்மை ஆகிய எடுகோள்களைக் கொண்டது.\n\nஉற்பத்திக் காரணியின் ஊதியம் (மதிப்பு விலை) அதன் இறுதி நிலை உற்பத்தித் திறனுக்கேற்ப அமைகிறது என்பது இக்கோட்பாட்டின் அடிப்படை விளக்கமாகும். ஓர் உற்பத்திக் காரணியின் அளவை மட்டும் (பிற காரணிகளின் அளவு மாறாதிருக்கும் போது) மாற்றும்போது ஏற்படும் விளைவுகள் மாறும் காரணியின் இறுதிநிலை உற்பத்தித்திறன் எனப்படும். அக்காரணியின் உள்ளீட்டு (Input) அலகைத் தொடர்ந்து மிகுதியாக்கினால் தோன்றும் இறுதிநிலை உற்பத்தி முதலில் உயர்ந்தும் பின்னர் நிலையாகவும் இறுதியில் குறைந்தும் செல்லும். ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இறுதிநிலை உற்பத்தித் திறன் உறுதியாகக் குறையத் தொடங்கிவிடும். இதனைக் குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி (Law of Diminishing Marginal Utility) எனக் குறிப்பிடுகின்றனர்.\n\nஇறுதிநிலை அலகின் விளைவு இறுதிநிலைப் பொருள் உற்பத்தி (Marginal Physical Product–MPP) எனப்படுகிறது. இறுதிநிலை உற்பத்திப் பொருளினால் பெறப்படும் வருவாய் ‘இறுதிநிலை வருவாய் உற்பத்தி’ (Marginal Revenue Product) எனப்படுகிறது. உற்பத்திக் காரணியின் இறுதிநிலை வருவாய் உற்பத்தி மிகுதியாகவும் அக்காரணிக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாகவும் இருந்தால், அக்காரணியை மேலும் பயன்படுத்தி ஆதாயத்தைப் பெருக்கத் தொழில் முனைவோர் முயல்வர். தொடர்ந்து இந்நிலை நீடித்தால், அக்காரணியின் உற்பத்தித் திறன் குறைந்து, ஒரு குறிப்பிட்ட நிலையில் காரணியின் இறுதிநிலை உற்பத்தித்திறனும் அதற்கு வழங்கப்படும் ஊதியமும் (விலை) ஒப்பானதாகும். அந்நிலையில் தொழில்முனைவோன் உச்ச ஆதாயத்தைப் பெறுவான். அவ்வுற்பத்திக் காரணியின் அங்காடி விலைக்கு ஒத்ததாக அதன் இறுதி நிலை வருவாய் உற்பத்தி இருக்கும்.\n\n:{|\n\nநிறைவுப் போட்டி அங்காடியில் விலை வரையறுக்கப்படுவதை வரைபடம் விளக்குகிறது. இக்கோட்பாடு மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறது (1) உச்ச ஆதாயம்; (2) அதை அடைவதற்காகத் தொழில் முனைவோர் செலவு மிகக் குறைவான (Least Cost) உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்துதல். (3) அந்தத் தெரிவு (Choice of Least Cost Combination) இச்சமன்பாடுகளின் மூலம் பெறப்படுதல்.\n\n::(i) p = MP_f\n\n::(ii) \\frac = \\frac = \\frac\n\np = விலை, f = காரணி, MP = இறுதிநிலை உற்பத்தித் திறன், A,B,N = காரணிகள்.\n\nஇக்கோட்பாடு, நடைமுறையில் செயற்படாத நிறைவுப் போட்டி அங்காடி, உண்மைக்குப் புறம்பான பல எடுகோள்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், நடைமுறையில் உற்பத்திக் காரணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கு மாறாக உள்ளது. உற்பத்தியில் தனியாக ஒரு காரணியின் பங்கையும் அதன் உற்பத்தி அளவையும் கணக்கிட இயலாது. ஓர் அலகை நீக்கி விடுவதால் ஒரு வேளை உற்பத்தியே நின்று விடும் நிலைக்குள்ளாகும் உற்பத்தி முறைகளும் காணப்படுகின்றன. பேரளவு உற்பத்தியில் ஓர் அலகினால் மாற்றம் எதுவும் ஏற்படுவதில்லை. பேராசிரியர் கீன்சு (J.M. Keynes) கருத்துப்படி, இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கேற்ப உற்பத்திக் காரணிகள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. உற்பத்தியில் காரணிகளின் பங்கு அக்காரணிகளால் மொத்த உற்பத்தியில் ஏற்படும் பயன்களைப் பொறுத்தது. அதற்கேற்ப அதன் விலை அமையும். எஸ்.பெ."}}