{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q2h9f6nu/", "data": {"id": "q2h9f6nu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q2h9f6nu/", "kind": "article", "headword": "ஒளி", "romanization": "oḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:25.883825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பொருட்களைப் பார்க்க ஒளி வேண்டும்.", "body_ta": "பொருட்களைப் பார்க்க ஒளி வேண்டும். இருட்டு அறையில் இருக்கும் பொருட்களைப் பார்க்க முடியாது. ஒளியானது பொருளின் மீது பட்டு மீண்டும் நம் கண்களை அடையும்போதுதான் பொருள் பார்க்க இயலுகிறது.\n\nஒளியானது கண்ணாடி, காற்று, நீர், வெற்றிடம் ஆகியவற்றின் வழியே ஊடுருவிச் செல்லும் திடப்பொருட்களான மரம், இரும்பு, கல் போன்றவற்றின் ஊடே ஒளி ஊடுருவ முடியாது. இவை ஒளி புகாப் பொருட்கள் ஆகும். எண்ணெய் தோய்ந்த காகிதம் வழியே ஒளி கசியும். ஊடகத்தின் அடர்த்திக்கேற்ப ஊடுருவும் ஒளிவேகம் அமையும்.\n\nஒளி மிகுந்த வேகத்தில் விரைந்து பாயும். ஒரு வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் எனக் கணக்கிட்டுள்ளனர். காற்றிலும் வெற்றிடத்திலும் இந்த வேகத்தில் செல்லும் ஒளி நீரில் வினாடிக்கு 2.22,000 கி மீ. கண்ணாடியில் வினாடிக்கு 1,98 000 கி.மீ. ஆகும்.\n\nஒலியைவிட ஒளி விரைந்து பாய்வதால் இடி மின்னல் ஏற்படும்போது இடி ஓசையைவிட மின்னல் ஒளியை முன்னதாகக் காண முடிகிறது.\n\nஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குப் பாயும்போது வளைந்து செல்லும். நீருள் காணும் நீளமான பொருட்கள் வளைந்துள்ளவை போல் காண்பதற்கு இதுவே காரணமாகும். இதை ஒளி விலகல் என்பர்.\n\nசூரியன் நமக்கு இயற்கையான ஒளியை நாளும் வழங்குகிறது. வெண்மை ஒளியாகத் தோன்றும் சூரிய ஒளிக்கதிரில் ஏழு வண்ணங்கள் அடங்கியுள்ளன. நீர்த் திவலைகளின் ஊடாகச் சூரியக் கதிர் செல்லும்போது ஏழு வண்ணங்கள் வானவில்லாகத் தெரியும்.\n\nமுற்காலத்தில் செயற்கையாக ஒளி பெற எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மெழுகுதிரி விளக்குப் போன்றவை பயன்பட்டன. இன்றோ விதவிதமான மின்விளக்குகள் ஒளி பெறப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nநமக்கு மட்டுமல்லாது தாவரங்கள் உயிர் வாழ்வுக்கும் ஒளி அவசியமாக உள்ளது. தாவரங்கள் சூரிய ஒளி மூலம் நீரையும் கரியமில வாயுவையும் சேர்த்து மாச்சத்தையும் சர்க்கரைச் சத்தையும் பெறுகின்றன. சூரிய ஒளிச் சேர்க்கையால் இவற்றைப் பெறுவதால் இந் நிகழ்ச்சி 'ஒளிச் சேர்க்கை’ என்றே அழைக்கப்படுகிறது."}}