{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p3y84ghf/", "data": {"id": "p3y84ghf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3y84ghf/", "kind": "article", "headword": "உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு", "romanization": "ucca nampaka veḷiyīṭṭuk kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.970383+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது தங்கத்தையோ பிற மதிப்பு வாய்ந்த உலோகங்களையோ பிணையமாக (Security) வைக்காமல் செலாவணிக்கான பணத்தாள்களை வெளியிடும் கோட்பாடாகும்.", "body_ta": "இது தங்கத்தையோ பிற மதிப்பு வாய்ந்த உலோகங்களையோ பிணையமாக (Security) வைக்காமல் செலாவணிக்கான பணத்தாள்களை வெளியிடும் கோட்பாடாகும். பிணையமில்லாமல் குறிப்பிட்ட ஓர் உச்ச அளவுக்குப் பணத்தாள்களை வெளியிட அரசு தன் நாட்டின் மைய வங்கிக்கு அனுமதி அளித்தல் உச்ச நம்பக வெளியீட்டு முறை (Maximum Fiduciary Issue System) எனப்படும்.\n\nபணத்தாள் வெளியீடு\n\nசெலாவணிக் கோட்பாட்டின்படி (Currency Principle) 100 விழுக்காடு தங்கம் அல்லது வெள்ளியைப் பிணையமாக வைத்து மட்டுமே அதன் மொத்த மதிப்புக்கு ஈடான பணத்தாள்களை வெளியிட இயலும். ஆனால், இம்முறை எக்காலத்திலும் நடைமுறையில் செயற்படவில்லை. வங்கியியல் கோட்பாடு வலியுறுத்தும் பகுதியளவு வைப்பு முறையை (Partial Deposit System) உலகின் பல நாடுகள் செயற்படுத்துகின்றன. உச்ச நம்பக வெளியீட்டு முறை, நிலையான நம்பக வெளியீட்டு முறை (Fixed Fiduciary Issue System), ஒப்புவீதக் காப்பு இருப்பு முறை (Proportional Reserve System), குறைந்த காப்பு இருப்பு முறை (Minimum Reserve System) ஆகியன பகுதியளவு வைப்பு முறையின் நான்கு வகைகள்\n\nஉச்ச நம்பக வெளியீட்டு முறையைப் பிரான்சு முதன் முதல் கி.பி. 1870 முதல் 1928 வரை தன் நாட்டில் செயற்படுத்தியது. இங்கிலாந்து 1930–இலும், சப்பான் 1941–இலும் இம்முறையைப் பின்பற்றின. இம்முறையைப் பின்பற்றும் நாட்டின் அரசு தங்கம் அல்லது பிற மதிப்பு வாய்ந்த உலோகப் பிணையமின்றி எவ்வளவு உச்ச அளவு பணத்தாள்களை மைய வங்கி வெளியிடலாம் என்பதை வரையறுக்கும். இவ்வுச்ச அளவு வரையறை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்து அதன் தேவைக்குகந்த வகையில் திட்டமிடப்பட்டு உறுதி செய்யப்படும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலும் பணவியல் ஆய்வாளர்களின் திறனாய்வுகளின் அறிவுரைக்கு ஒத்த வண்ணமும், அவ்வப்போது உச்ச அளவு, நெகிழ்ச்சியுடையதாய் மறு ஆய்வு செய்யப்பட்டு அரசால் மாற்றி வரையறுக்கப்படும் இயல்புடையது.\n\nகோட்பாட்டின் அடிப்படையில் இம்முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பணத்தாள்களைச் சட்டமுறைப்படி ஒழுங்குபடுத்தக் கூடிய தனிச் சிறப்பு வாய்ந்த முறையென சே.எம். கீன்சு (J.M. Keynes) இதைப் பெரிதும் போற்றினார். ஆனால், நடைமுறையில் தேவைக்கு மிகையாக உச்ச அளவு வரையறுக்கப்பட்டு விடுவதால் பணவீக்கத்திற்கு (Inflation) உச்ச நம்பக வெளியீடு காரணமாகிறது. சில காலங்களில் அரசு எக்காரணமுமின்றி உயர்ந்த அளவில் உச்ச அளவை உறுதி செய்துவிடும் நிலை ஏற்பட்டும் பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு.\n\nநிலையான நம்பக வெளியீட்டு முறை\n\nஇம்முறையில் ஒரு குறிப்பிட்ட நம்பக அளவுக்கு மட்டிலுமே தங்கப் பிணையமின்றிப் பணத்தாள்களை வெளியிடச் சட்டம் இயற்றப்பட்டு, மைய வங்கிக்குச் சட்டமுறைப்படி (byLaw) ஆணை வழங்கப்படும். அதற்கு மேலாக வெளியிடப்படும் பணத்தாள்களின் மதிப்புக்கு ஈடான தங்கத்தை 100 விழுக்காடு பிணையமாக மைய வங்கி வைத்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட நம்பக அளவு மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கான மாற்றுச் சட்டம் இயற்றப்பட்ட பின்னரே அது செயற்படும்.\n\nநிலையான நம்பக வெளியீட்டு முறை இங்கிலாந்தில் கி.பி. 1844 முதல் 1939 வரை நடைமுறையிலிருந்தது. நம்பக அளவு காலச் சூழ்நிலைக்கேற்றவாறு அவ்வப்போது மாற்றப்பட்டது. இத்தாலி, நார்வே, பின்லாந்து (Finland) ஆகிய நாடுகள் இம்முறையை 1929க்கு முன்னர்ப் பின்பற்றின, சப்பானும் இம்முறையைச் சில மாற்றங்களுடன் பின்பற்ற முயற்சி செய்தது. இந்தியாவில் கி.பி. 1861–ஆம் ஆண்டுச் சட்டப் அளவு உரூபாய் 4 கோடியாக உறுதி செய்யப்பட்டது. இவ்வரையறை கி.பி. 1871–இல் உரூபாய் 6 கோடியாகவும், கி.பி. 1890–இல் உரூபாய் 8 கோடியாகவும், கி.பி. 1897–இல் உரூபாய் 10 கோடியாகவும், 1905–இல் உரூபாய் 12 கோடியாகவும், 1914–இல் உரூபாய் 14 கோடியாகவும், 1920–இல் உரூபாய் 120 கோடியாகவும் உயர்த்தப்பட்டது.\n\nநிலையான நம்பக வெளியீட்டு முறையினால் பணத்தாள்களைத் தங்கமாக மாற்ற இயலும் (Convertibility) நம்பிக்கை மக்களுக்கு உண்டாகிறது. இத்தகைய பணத்தாள் வெளியீட்டின் மூலம் பண வீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது; இம்முறையில், பணத்தாள் வெளியீட்டின் அளவை உயர்த்தத் தங்கமும் வெள்ளியும் தேவைப்படுவதால் தேவைக்கு மிகையாகப் பணத்தால் வெளியிடப்படுவது தவிர்க்கப்படுகிறது. இம்முறையின் நெகிழ்ச்சியற்ற தன்மை நெருக்கடிக்காலங்களிலும் வளர்ச்சியடையும் பொருளாதாரத்திலும் ஏற்படும் சிக்கல்களையும் தேவைகளையும் மேற்கொள்ள இயலாததாயுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த குறையாகும்.\n\nஒப்புவீதக் காப்பு இருப்பு முறை\n\nஇம்முறையில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தாள்கள் 100 விழுக்காடு தங்கப் பிணையத்தின் அடிப்படையில் மைய வங்கியால் வெளியிடப்படும். அதற்கு மிஞ்சியவை அனுமதிக்கப்பட்ட பிணைய ஆவணங்களின் (Approved Securities) அடிப்படையில் வெளியிடப்படும். தங்கப் பிணையத்தின் அடிப்படையில் வெளியிட பணத்தாள்களின் அனுமதிக்கப்படும். ஒப்புவீதக் காப்பு இருப்பு மொத்தப் பணத்தாள்களின் மதிப்பில் 25 முதல் 40 விழுக்காட்டுக்குள் அடங்கும்.\n\nபிரான்சு இம்முறையை 1928–இல் தழுவியது. ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, ஆசுத்திரேலியா (Australia), கனடா, நியூசிலாந்து, அர்செண்டினா ஆகிய நாடுகளும் இம்முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியா 1927 முதல் 1956 வரை இம்முறையைப் பின்பற்றியது. அதன்படி மொத்தப் பணத்தாள் வெளியீட்டில் 40 விழுக்காட்டுக்குத் தங்கக் கட்டி, தங்கக் காசுகள், இசுதெர்லிங்கு (Sterling) ஆகியவற்றைப் பிணையங்களாகவும், எஞ்சிய 60 விழுக்காட்டுக்கு பிணையங்களைப் உரூபாயில் மதிப்பிட்ட பிணையமாகவும் (Rupee valued Sccurities) கொண்டு பணத்தாள்களை வெளியிட்டது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டம் 1934–இன்படி, மொத்தப் பணத்தாள் வெளியீட்டில் 40 விழுக்காட்டுக்குத் தங்கமும் எஞ்சிய 60 விழுக்காட்டுக்கு இசுதெர்லிங்கும் பிற அயற்செலாவணியும் பிணையமாக வைக்க வேண்டுமென்பதை ஏற்படுத்தியது. இது விழுக்காட்டு வைப்பு முறை (Percentage Deposit System) என வழங்கப்பட்டது.\n\nஒப்புவீதக் காப்பு முறையில் நெகிழ்ச்சித் தன்மை, பிணையங்களின் அளிப்பைப் பொறுத்திருப்பதால் பல நாடுகளில் இது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அரசு சட்டப்படி வரையறுக்கும் ஒப்புவீதக் காப்பு அளவுகுறைக்கப்படக்கூடிய தன்மையற்றதால், தங்க அளிப்புக் குறையும்போது பணத்தாள்களின் அளிப்பும் குறைந்து பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வழி வகுக்கிறது.\n\nகுறைந்த காப்பு இருப்பு முறை\n\nஇம்முறையில் ஒரு நாட்டின் பணவியல் ஆணையகம் (Monetery Authority) ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவுத் தங்கத்தைச் சட்டப்படி பிணையமாக வைத்துக்கொண்டு பணத்தாள்களை வெளியிடலாம். இந்தியா இம்முறையை 1956–இலிருந்து பின்பற்றி வருகிறது. இந்திய மைய இருப்பு வங்கி குறைந்த அளவு உரூ. 200 கோடி மதிப்புப் பெறும் பிணயங்களை மொத்தப் பணத்தாள் வெளியீட்டிற்குக் காப்பாக வைத்திருக்க வேண்டும். இவற்றில் உரூ. 115 கோடி மதிப்புத் தங்கம் காப்பாக (Reserve) இருக்க வேண்டும்.\n\nகுறைந்த காப்பு இருப்பு முறையில் உச்ச நெகிழ்ச்சித் தன்மை அடங்கியுள்ளது. அதனால், பொருளாதாரத் தேவைக்குகந்த வகையில் மைய வங்கி பணத்தாள்களை வெளியிடலாம். ஆனால், நடைமுறையில் அரசுகள் தங்கள் நிதித் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு மைய வங்கிகளை மிகையான அளவு பணத்தாள்களை வெளியிட வற்புறுத்துகின்றன. அதனால், பணவீக்கம் ஏற்பட்டுப் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.\n\nபணத்தாள் வெளியீட்டு முறைகளை நன்கு பகுத்தாய்வு செய்தால் கோட்பாடுகளையும் முறைகளையும் விடச் செலாவணியின் மதிப்பு இக்காலத்தில் அதன் வாங்கும் திறனைப் பொறுத்தே அமைந்துள்ளது. பணத்தாள்களைத் தங்கமாகவோ பணமாகவோ மாற்றவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய மாறுபட்ட பொதுமக்களின் கண்ணோட்டம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் நடைமுறை வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு உந்தாத நெகிழ்ச்சியுள்ள பணத்தாள் வெளியீட்டு முறையே இக்காலத்தின் இன்றியமையாத் தேவையாகக் கருதப்படுகிறது. இதற்குத் திறமையான பணவியல் மேலாண்மையே (Monetary Management) தேவை. பின் தங்கிய நாடுகளுக்கு வளர்ச்சி படைந்து வரும் நாடுகளுக்கும் குறைந்த காப்பு இருப்பு முறையே சிறந்ததாகக் கருதப்படுகிறது."}}