{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nxr3n4db/", "data": {"id": "nxr3n4db", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nxr3n4db/", "kind": "article", "headword": "உடன்பாடு", "romanization": "uṭaṉpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.889791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உடன்பாடு என்பது ஓர் உறுதியுரை அல்லது தொகுப்பு எதிரிடை உறுதியுரை- கள் ஆகும்.", "body_ta": "உடன்பாடு என்பது ஓர் உறுதியுரை அல்லது தொகுப்பு எதிரிடை உறுதியுரை- கள் ஆகும். புரிவுரை (Proposal) ஒன்று ஏற்கப்படுவதன் வாயிலாக ஓர் உறுதியுரை அமைகிறது. எனவே, புரிவுரை ஏற்படுத்துகின்ற ஒரு புரிவுரையாளரும் அதனை ஏற்க உறுதியுரை ஏற்பவரும் என இருவர் இதற்கு வேண்டும். புரிவுரையாளரும் ஏற்பவரும் ஒன்றினையே ஒருமித்து ஒப்புக் கொள்ளல் வேண்டும்.\n\nஇந்திய ஒப்பந்தச் சட்டம் கி.பி. 1872–ஆம் ஆண்டு ‘உடன்பாடு’ (Agreement) என்ற சொல்லினைப் பிரிவு 2–இல் வரையறுத்துள்ளது. ஒன்றுக்கொன்று மறுபயன் அளிக்கக்கூடிய ஒவ்வோர் உறுதியுரையும் தொகுப்பு உறுதியுரைகளும் உடன்பாடாகும். ஏதாவது ஒன்று செய்யப்பட்டதற்கு அல்லது செய்யப்படப் போவதற்கு இருவர் ஒன்றாக இசைந்து ஒப்புக் கொள்ளுதலே உடன்பாடு எனப்படும். ஒருவர் ஒரு புரிவுரை ஏற்படுத்தி அதனை அடுத்தவர் ஏற்றுக் கொள்வதால் இது நிகழ்கிறது.\n\nஉடன்பாடுகளின் தன்மைகள் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 2–இல் விளக்கப்பட்டுள்ளன. சட்டத்தினால் நிறைவேற்ற முடியாத உடன்பாடு, இல்லா நிலை உடன்பாடு (Void Agrcement) ஆகும் சட்டத்தினால் நிறைவேற்றப்படும் உடன்பாடு, முறையான உடன்பாடு (Valid Agreement) ஆகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினரின் விருப்பின் படி சட்டத்தினால் நிறைவேற்றப்படும் உடன்பாடு தவிர்தகு உடன்பாடு (Voidable Agreement) ஆகும். நிறைவேற்ற முடியாமல் போகும் போது ஓர் உடன்பாடு சட்டத்தினால் நிறைவேற்ற முடியாது. சட்ட முரணான உடன்பாடுகள் அனைத்தும் இல்லாநிலை உடன்பாடுகள் ஆகும். ஆனால், இல்லாநிலை உடன்பாடுகள் அனைத்தும் சட்டமுரணான உடன்பாடுகள் ஆகா.\n\nஉறுதியுரை அளிப்பவர் (Promiser) விருப்பப்படி உறுதியுரை ஏற்பவர் (Promisee) ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால் அல்லது செய்ததிலிருந்து விலகியிருந்திருந்தால் அல்லது செய்தால் அல்லது செய்வதிலிருந்து விலகியிருந்தால் அல்லது ஒன்றைச் செய்ய உறுதியுரை அளித்தால் அல்லது சிலவற்றைச் செய்வதிலிருந்து விலகியிருந்தால் அத்தகைய செயல் அல்லது செயல் தவிர்ப்பு அல்லது உறுதியுரை ஒரு மறுபயன் (Consideration) ஆகும். இந்த மறுபயன் ஒவ்வோர் உடன்பாட்டிற்கும் இன்றியமையாதது. உறுதியுரையும் மறுபயனும் ஒப்பந்தம் ஒன்றின் தனித்தனி கூறுகள் ஆகும்.\n\nஉடன்பாட்டினைப் பின்வருமாறும் வரையறுக்கலாம். ஒன்றினைச் செய்வதற்கு அல்லது செய்யாமலிருப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் கருத்தொற்றுமையை ஒப்புதல் மூலம் சட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது உடன்பாடாகும். அவ்வாறு வெளிப்படுத்துதல் கீழ்க்காணும் சூழ்நிலைகளில் நிகழ்கிறது. (அ) தரப்பினர் தங்கள் பொது எண்ணத்தை வாய் மொழியாக அல்லது எழுத்து வடிவத்தில் உடன்படும் போதும் (ஆ) முனைவு (Offer) ஒன்றினை ஒருவர் செய்து அதனை மற்றவர் ஏற்கும்போதும் நிகழ்கிறது. உடன்பாட்டின் இன்றியமையாக் கூறுகளாவன; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், இருவருக்கும் தெரிந்த அவர்களது தனிப்பட்ட பொது எண்ணம் ஆகியவையாம்.\n\nமுத்திரை (Seal) யிடப்படாத ஓர் ஒப்பந்தம் உடன்பாடாகும். முத்திரையிடப்பட்டிருந்தால் அது ஓர் ஆவணம் (Deed) ஆகும். உடன்பாடு நிறைவேற்றப்பட்டதாக இருக்கலாம் அல்லது நிறைவேற்றப்படக் கூடியதாகவும் (Executory) இருக்கலாம்.\n\nஉடன்பாடு என்பது பரந்த கருத்துப் படிவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒப்பந்தம் என்பது அதில் ஒரு வகையாகும். ஒவ்வோர் ஒப்பந்தமும் ஓர் உடன்பாடாகும். ஆனால், ஒவ்வோர் உடன்பாடும் ஓர் ஒப்பந்தமன்று. ஆ.ச."}}