{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nvs3n7zn/", "data": {"id": "nvs3n7zn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nvs3n7zn/", "kind": "article", "headword": "உத்தியுத்தர்", "romanization": "uttiyuttar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.824726+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிவன் தன் தடத்தநிலை மூன்றனுள் நடுவணதாகிய நிலையில் பெறுகிற பெயர்.", "body_ta": "சிவன் தன் தடத்தநிலை மூன்றனுள் நடுவணதாகிய நிலையில் பெறுகிற பெயர். சிவன் உலகமும் உயிர்களும் ஆகிய பிற பொருள்களை நோக்காது தன்னளவில்தான் நிற்றல் சொரூப நிலை. இது தமிழில் ‘தன்னிலை’ அல்லது ‘உண்மை நிலை’ என்று சொல்லப்படும். இந்நிலையில் அவன் எந்த ஒரு வடிவத்தையும் பெயரையும் செயலையும் உடையவனாய் இரான்.\n\nசொரூப நிலையில் உள்ள சிவன் தன் அருள் காரணமாக உயிர்களை நோக்கி அவற்றின் பொருட்டாக ஐந்தொழில் செய்தலை மேற்கொள்ளுதல் தடத்த நிலை. இது தமிழில் ‘பொது நிலை’ எனப்படும். இந்நிலை ‘இலயம், போகம், அதிகாரம்’ என மூன்றாகும். இவை ஒன்றை விட மற்றொன்று தூலம் (பருமை) ஆகும். இலயம்–ஒழுக்கம், போகம்–அருளல், அதிகாரம்–செயலாற்றுதல்.\n\nஇலய நிலையில் சிவன் சக்தியோடு சேரும் அளவில் இருத்தலால் ‘சத்தன்’ எனப் பெயர் பெறுவான். பின்பு ஐந்தொழில் செய்ய முனையும் நிலையே போகநிலை; ஆதலின், அந்நிலையில் சிவன் ‘உத்தியுத்தன்’ எனப் பெயர் பெறுவான். இப்பெயர் ‘உத்தியோகம்’ என்பதிலிருந்து வருவது. உத்தியோகம்–முயற்சி, பின்பு ஐந்தொழில்களை இயற்றும் நிலையே அதிகார நிலையாகும். அந்நிலையில் சிவன் ‘பிரவிருத்தன்’ எனப் பெயர் பெறுவான். இலயம் முதலிய மூன்று நிலைகளிலும் சிவன் முறையே அருவம், அருவுருவம், உருவம் ஆகிய திருமேனிகளைக் கொள்வான். அருவம்–உருவம் இல்லாதது. அருவுருவம்–உருவம் உடையதாயினும் முகம், கை, கால் முதலிய உறுப்புகள் இல்லாதது. அதுவே இலிங்கத் திருமேனி, உருவம்–முகம் முதலிய எல்லா உறுப்புகளோடும் கூடியது. அது மாதொரு பாகன் முதலாகப் பலவகைப்படும். சி.அ."}}