{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nums7jcy/", "data": {"id": "nums7jcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nums7jcy/", "kind": "article", "headword": "அசமுகி", "romanization": "acamuki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.828785+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பவள் சூரபதுமன் தங்கை. இப்பெயர் ஆட்டுமுகம் உடையவள் எனப் பொருள்படும்.", "body_ta": "என்பவள் சூரபதுமன் தங்கை. இப்பெயர் ஆட்டுமுகம் உடையவள் எனப் பொருள்படும். மாயை என்னும் அசுரப் பெண் நான்காம் சாமத்தில் ஆட்டினுருக்கொண்டு காசிபரைக் கூடியதால் இவள் பிறந்தாள், இவள் துருவாசரை வலிதிற் கூடி வாதாவி வில்லவர்களைப் பெற்றாள், தனித்திருந்த இந்திராணியைத் தன் அண்ணன் சூரனுக்கு மனைவியாக்க விரும்பி வலிந்து இழுக்க முயன்றாள், அப்போது மகாகாளரால் கையறுக்கப்பட்டாள். பின் தனக்கு நேரிட்டதைத் தன் அண்ணனுக்கு உணர்த்தினாள். பிரமனால் கைவளரப் பெற்றாள். கச்சியப்பரின் கந்த புராணத்தில் இவளைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.\n\nஅவற்றுள் சில வருமாறு; அசமுகி மணம்புரிந்து கொள்ளாதவள்; ஒழுக்கக் கேடானவள்; தேவர்களின் மனைவிகளைத் தன் தமையன்மார்களுக்கு மனைவிகளாக ஆக்குபவள்; முனிவர் இயற்றும் வேள்விகளை அழிப்பவள்; தீமையே வடிவானவள்; அசுரர்களை அழிக்கும் தீவினை போல் எங்கும் உலாவி வருபவள்; தன் கிளைஞரை இகழ்பவர்களைக் கொன்று தின்பவள்; அழகிற்சிறந்த ஆடவர்களைத் தேடி வலிந்து கூடுபவள்.எஸ்.சௌ."}}