{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ntezczwc/", "data": {"id": "ntezczwc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ntezczwc/", "kind": "article", "headword": "அகலிகை வெண்பா", "romanization": "akalikai veṇpā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.202939+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வெண்பாக்களால் இயன்று அகலிகை வரலாற்றை உரைக்கும் நூல்.", "body_ta": "வெண்பாக்களால் இயன்று அகலிகை வரலாற்றை உரைக்கும் நூல். இது கடவுள் வழிபாடு, அவையடக்கம் நீங்கலாக 129 வெண்பாக்களைக் கொண்டது. இறுதியில், வாழ்த்துப்பா ஒன்றும் உள்ளது. இதில் ‘ஐந்தாம் சார்சாம் எம் அரசர் பிரான் வாழி’ என அரச வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது.\n\nஇந்நூலின் கடவுள் வாழ்த்து, தனிப்பட்ட எந்தத் தெய்வத்தின் மீதும் அமையவில்லை; பரம் பொருள் வாழ்த்தாக அமைந்துள்ளது. “எந்தப் பொருளைச் சமயங்கள் எல்லாம் தாம் தாம் கண்டு கொண்டனவாகக் கூறுகின்றனவோ, எந்தப் பொருளைச் சாத்திரங்கள் ஆராய்ந்தும் எட்டமாட்டாமல் இளைக்கின்றனவோ, எந்தப் பொருளை நாத்திகர் ஒரு சிறிதும் தெரியேம் என்று பிடிவாதமாகக் கூறுகின்றனரோ, அந்தப் பரம்பொருளை எனது நெஞ்சே, நீ பற்றுக் கோடாகப் பற்றி உய்வாயாக” என்பது கடவுள் வாழ்த்தின் பொருளாகும்.\n\nவெ.ப. சுப்பிரமணிய முதலியார்\n\nஇந்நூலாசிரியர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் ஆவார். இவர் காலம் 1857-1946. இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கால் என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேளாண்மைக் கல்வி பெற்ற இவர், சென்னை மாநிலக் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணியாற்றினார். இவர் கம்பராமாயண சாரம் என்னும் தொகுப்பு நூல், நெல்லைச் சிலேடை வெண்பா, கோம்பி விருத்தம், ஆகிய நூல்களையும் சுவர்க்க நீக்கம் என்னும் மொழி பெயர்ப்புக் காவியத்தையும் செய்துள்ளார்.\n\nஇந்நூலாசிரியர் திருக்குறளில் மிகவும் ஈடுபட்டவர். இவர் திருக்குறள் தொடர்களை ஆள்வதும் குறட்கருத்தினைத் தழுவி எழுதுவதும், குறள் உவமைகளைத் தாமும் கையாளுவதும் இதனை மெய்ப்பிக்கின்றன. ‘நோய்நோக்கும் அந்நோய்தனை நீக்கும் மருந்து நோக்கும்’ என வரும் பகுதியும், ‘கொன்ற தீங்கு என்போல் இழைத்தாரும் இல்லை’ என்னும் தொடரும் ‘புலியதன் தோல்போர்த்த புல்விய எருது’ என்னும் உவமையும் சான்றாம்.\n\nகவிச்சுவையை மிகுவிக்கும் உவமைகள் பலவற்றை இந்நூலில் காணலாம். காட்டாகப் பாற்கடலில் விடமும் அமுதமும் தோன்றியது போல, அகலிகையின் கண்ணின் கருவிழியும் வெண்படலமும் ‘நீலவிடமும் வெண்ணிறத்த அமுதமுமாக’ இந்திரனுக்குத் தோன்றுகின்றன. இந்திரன் முன் அஞ்சி நடுங்கி நின்ற அகலிகைக்குக் “கட்டவலைப் பட்ட மயில்”, ‘வன்புலி கௌவிப் பற்றும் மான்’, ‘பையரவம் வாயுள் அகப்பட்ட தவளை’, ‘தீண்டார்கள் தொட்டிட்ட செம்மண் கலம்’ எனப் பல உவமை கூறியுள்ளார். இழிந்த காமத்தில் இச்சை வைத்த இந்திரனைத் ‘தூய அவி திருடித் துய்த்த திருட்டு நாய்’ என்கிறார். “பெண் எனில் வெம்பேயும் பெரிதிரங்கும்” “வெல்லம் கசந்திடுதல் வாய்க்குற்றம்” என்பன போலப் பழமொழிகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.\n\nஇந்நூலில் காலாந்தகன், போன்ற சில வடசொற்களும், களவாணி போன்ற வழக்குச் சொற்களும், வெந் (முதுகு) போன்ற அருஞ்சொற்களும் ஆளப்பட்டுள்ளன.\n\nஎங்கள் பிரான் முக்கண்ணன், ஈசன், மேருவில்லி, மாதேவன், பரன், அரன் ஆகிய பெயர்களைத் தக்க இடத்தில் ஆண்டிருப்பது இந்நூலாசிரியர் பிறந்த சைவசமயப் பற்றாளர் என்பதைக் காட்டுகிறது.\n\nஇந்நூலில் அகலிகைக்கும் இந்திரனுக்கும் இடையே நிகழும் நீண்ட உரையாடலில், சேக்சுபியரின் கருத்துக்களைக் கூட்டியும் குறைத்தும் ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளதாக இந்நூலாசிரியர் கூறியுள்ளார்.\n\nஇந்நூலின் பாடல்கள் யாப்பிலக்கணத்திற்கு ஏற்பவும், பொருள் நன்கு புலப்படுமாறு சந்தி பிரித்தும், நிறுத்தக் குறிகள் இடப்பெற்றும் அமைக்கப் பெற்றுள்ளன. அரிய சொற்களுக்கும், தொடர்களுக்- கும் குறிப்புரையை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். மேலும் செய்யுட் பயிற்சி இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘அகலிகை வெண்பா வசனம்’ என்னும் பகுதியையும் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளார்.\n\nமதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 1915-ஆம் ஆண்டு இராமநாத புரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தலைமையில் நிகழ்ந்தபோது இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அக்காலத்துச் சிறந்து விளங்கிய சேது சமசுதான வித்துவான் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் எட்டையபுரம் காசி விசுவநாதபிள்ளை அவர்களும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளனர். ஜி.ஆர்.கி."}}