{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nnmajctc/", "data": {"id": "nnmajctc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nnmajctc/", "kind": "article", "headword": "நொண்டுதல்", "romanization": "noṇṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.182797+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கால் நடைகளில் பல்வேறு காரணங்களினால், நொண்டுதல் ஏற்படுகிறது.", "body_ta": "கால் நடைகளில் பல்வேறு காரணங்களினால், நொண்டுதல் ஏற்படுகிறது. காலில் ஏதாவது அடிபட்டாலோ, காயங்கள் ஏற்பட்டாலோ, முள் இருந்தாலோ, கால்நடை நொண்டும். நொண்டுதல் என்பது வாதம். சுண்டு வாதம், மூட்டு வீக்கம், நரம்பு வீக்கம், கால்வாய் நோய் போன்றவற்றின் அறிகுறியாகும். கால்நடைகளில் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ நொண்டுதல் காணப் படலாம். எனவே, நொண்டுதல் காணப் பட்டால், அதற்கான காரணத்தை நன்கு அறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும். கால்நடைகள் புல் மிகுதியாக இருக்கும் மேய்ச்சல் தரை, காடு, மலைப் பகுதிகளில் மேயச் செல்லும் போது, கால்களில் அடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், காயங்கள் ஏற்பட்டுப் புண்ணாக மாறி, வலி தோன்றுவதால் நொண்டுதல் காணப் படும். முள், சிறு கற்கள் போன்றவை கால் குளம்புகளில் குத்தியிருப்பதாலும் நொண்டும். இவ்வாறு, காலில் ஏதாவது வலி ஏற்பட்டால் நிற்கும் போது, அந்தக் காலைத் தூக்கிக் கொண்டிருக்கும். நடக்கும் போது, நீண்ட நேரம் தரையில் அந்தக் காலை ஊன்ற முடியாமையால், அந்தக் காலைத் தரையில் வைத்தவுடன், தூக்கிக் கொண்டு நொண்டி, நொண்டி நடக்கும். சிறு காயங்கள் இருந்தால், பூச்சிக் கொல்லி கொண்டு தூய்மைப் படுத்திக் களிம்பு தடவி, தகுந்த மருத்துவம் செய்வதன் மூலம் குணப் படுத்தலாம். முள், கல் போன்ற குளம்புகளில் இருந்தால், இடுக்கி (forceps) மூலம் அதனை வெளியே எடுத்து விட்டு, மருந்து போட்டுக் குணப் படுத்தலாம். சில சமயங்களில், கால் தவறி வழுக்கிக் கீழே விழுந்து, கால் எலும்பு முறிவு ஏற்படக் கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டால், காலைக் கீழே வைக்கக் கடினப் படும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உணர முடியும். இவற்றிற்கு உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி, உரிய மருத்துவம் செய்தல் வேண்டும். வசதிப் பட்டால், எக்ஸ்–கதிர் மூலம், முறிந்த எலும்பினைச் சரியாக அறிந்து, அதற்கேற்றவாறு கட்டுப்போட வேண்டும். உடனே கால் எலும்புகளைச் சரியாக ஒன்றோடொன்று பொருத்தி, இறுக்கமாகக் கட்டுப் போட வேண்டும். உரிய நேரத்தில் தக்க மருத்துவம் செய்யாவிடில், கால் அழுகிக் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.\n\nமூட்டு வீக்கம். திடீரென ஏற்படும் இந்நோயின் போது, வலி கடுமையாக இருக்கும். நோய் கண்ட கால்நடைகள் நொண்டும். மேலும், வீக்கமான இடத்தைத் தொட்டால், வலி கடுமையாக இருப்பதால், காலைத் தூக்கும். மூட்டுகள் சற்றுச் சூடாக இருக்கும். பொதுவாகக் கன்றுக் குட்டிகளின் கொப்பூழ் வழியாகப் பாக்டீரியா போன்றவை சென்று, மூட்டு வீக்கத்தை ஏற்படுத்தும். இதனைக் கால்நடை மருத்துவரிடம் காட்டித் தகுந்த மருத்துவம் செய்வதன் மூலம் குணப் படுத்தலாம். வீக்கத்தின் மேல் ஒற்றடம் கொடுப்பதன் மூலமும், அயோடின் கலந்த களிம்புகளை அழுத்தித் தேய்ப்பதன் மூலமும், மூட்டு வீக்கத்தைக் குறைக்க முடியும். தற்போது இதனைக் குணப்படுத்தச் சிறந்த ஊசி மருந்துகள் உள்ளன.\n\nசுண்டு வாதம். இது வேலைக்குப் பயன் படும் காளை மாடுகளில் மிகுந்து காணப் படுகிறது. இந்நோயைப் பசு மாடு, எருமை மாடுகளிலும் காணலாம். மாட்டின் பின்னங்காலில் எலும்பு ஒன்று இடம் பெயர்ந்து, தசை நார் பிசகுவதால், இது ஏற்படுகிறது. வாதமுள்ள காலைத் தரையில் இழுத்துக் கொண்டே நடக்கும். திடீரெனக் காலை வெட்டித் தூக்கும். காலை மடக்க முடியாமையால், நொண்டிக் கொண்டே நடக்கும். இதனைச் சிறு அறுவை மூலம் சரி செய்து விடலாம். எனவே, சுண்டு வாதம் கண்ட மாடுகளை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி, உரிய அறுவை செய்து கொள்வதன் மூலம் குணப் படுத்தலாம்.\n\nகால்நடைகள் சிலவகை நோயின் போதும், சோர்வின் போதும், நொண்டுதல் காணப் படும். கால் குளம்புகளில், கொப்புளங்கள் ஏற்பட்டுப் புண்ணாக மாறி விடும். இது கால்வாய் நோயின் அறிகுறியாகும். இந்நோய் உள்ள கொப்புளம் உடைந்து புண்ணாவதால், வலி ஏற்பட்டுக் கால்நடைகள் நொண்டும். எனவே, கால்நடை நொண்டுவதைக் கண்டவுடன், கால்நடை மருத்துவரிடம் காட்டி, முறையான மருத்துவமளிக்க வேண்டும். —வே. ஜெயா கிறிஸ்டி"}}