{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nawyqe7k/", "data": {"id": "nawyqe7k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nawyqe7k/", "kind": "article", "headword": "உசுமானாபாது", "romanization": "ucumāṉāpātu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.220112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மகாராட்டிர மாநிலத்தைச் சார்ந்த மாவட்டங்களுள் ஒன்று.", "body_ta": "மகாராட்டிர மாநிலத்தைச் சார்ந்த மாவட்டங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 7510 ச.கி.மீ. மக்கள் தொகை 10,29,702 (1981). இதன் கிழக்குப் பகுதியில் கருநாடக மாநிலத்தின் பீதர் (Bidar) மாவட்டமும் வடக்கு, மேற்கு, தென்பகுதிகளில் அகமதுநகர், சோலாப்பூர் மாவட்டங்களும் எல்லைகள். இம்மாவட்டத்தின் நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர் இதனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இதன் வடகிழக்கிலும் கிழக்கிலும் மேட்டு நிலங்கள் உள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் சமவெளிகள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் குறுக்காக மாஞ்சிரா ஆறு பாய்கிறது.\n\nவெப்பம் மிகுந்த வறண்ட வெளி, சதுப்புள்ள குளிர்ந்தவெளி, ஈரமுள்ள வெளி என இம்மாவட்டத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். தென் மேற்குப் பருவக் காற்றினால் இம்மாவட்டம் ஏறத்தாழ 100 செ.மீ. மழை பெறுகிறது.\n\nஇம்மாவட்டத்தின் சிறப்பான தொழில் வேளாண்மையே. பருத்தி, கோதுமை, பயறுவகைகள், எண்ணெய் விதைகள், பருப்புப் போன்றவை இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றன. ஆடுமேய்த்தல் எளிய மக்களின் தொழில்களுள் ஒன்று. பருத்தி அரைத்தல், கம்பளி நெசவு, தோல் பதனிடல் போன்றவை சிறப்பான கைத்தொழில்கள்.\n\nஇம்மாவட்டம் முசுலிம்களின் ஆட்சிக்கு முன்னர் வரை இந்து அரசர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அலாவுதீன் கில்சி உசுமானாபாத்தைக் கைப்பற்றினார். பின்னர், இதனைப் பாமினி மரபினைச் சார்ந்த தக்காண முசுலிம்கள் ஆண்டனர். அவுரங்கசீபு இதனை மொகலாயப் பேரரசுடன் இணைத்தார். ஐதராபாத்து சுதேச அரசு கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டபோது உசுமானாபாத்து ஐதராபாத்து அரசின் பகுதியாயிற்று. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் பெரும் பகுதிகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்டபோது இதுவும் ஆங்கிலேயர் வசமாயிற்று, பின்னர் ஐதராபாத்து நிசாமின் ஆட்சிக்குக் கைமாறியது. மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்டபோது உசுமானாபாத்து மாவட்டம் மகாராட்டிர மாநிலத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. இம்மாவட்டத்தில் பல தொல்பொருள்களுக்குப் பெயர் பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல குகைக் குடைவுகள். உசுமானாபாத்து என்னும் பெயரில் வட்டமொன்றும் நகரம் ஒன்றுமுள்ளன. இவ்வூர் வணிகச் சிறப்புப் பெற்றது. இரா.அ."}}