{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mzqgnhav/", "data": {"id": "mzqgnhav", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mzqgnhav/", "kind": "article", "headword": "இரும்புத் தூண்", "romanization": "irumput tūṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.004971+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மெகரொலி என்ற {Mehurli) இடத்தில் குவ்வாதுல் – இசுலாம் மசூதியின் (Quwwatu'l Islam Mosque) சுற்று வெளியிடத்தின் நடுவில் அமைந்துள்ளது.", "body_ta": "மெகரொலி என்ற {Mehurli) இடத்தில் குவ்வாதுல் – இசுலாம் மசூதியின் (Quwwatu'l Islam Mosque) சுற்று வெளியிடத்தின் நடுவில் அமைந்துள்ளது. இத்தூணில் வடமொழியில் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த குப்தர் காலத்திய எழுத்து வடிவத்தைக் கொண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இத்தூணைச் சந்திரா என்ற (Chandra) மன்னன், திருமாலுக்காக விட்டுணுபாத (Vishnupada) மலையின்மேல் நாட்டியதாக அறியக் கிடக்கின்றது. சந்திராவைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த போதிலும், பெரும்பாலானோர், இவர் கி.பி. 375 முதல் கி.பி. 413 வரை ஆட்சி செய்த குப்த மரபைச் சார்ந்த இரண்டாம் சந்திரகுப்தரே (Chandragupta II) என்று கருதுகின்றனர்.\n\nஇரும்புத்தூண்\n\nஇரும்புத் தூணின் உச்சியில் (Capital) ஓர் ஆழமான துளை உள்ளது. இத்தூணின் தலையையொட்டித் திருமாலின் வாகனமான கருடன் இருந்திருக்க வேண்டும். அது இப்போது காணப்படவில்லை. தூணின் அடிப்பகுதியில் சிறுசிறு இரும்புத் துண்டுகள் இணைந்திருக்கின்றமையால் புடைப்புகள் நிறைந்ததாக உள்ளது. மண்ணில் புதைந்துள்ள பகுதி ஈயத் தகட்டால் போர்த்தப்பட்டுள்ளது. 7.20 மீட்டர் உயரம் கொண்ட இத்தூண் 93 செ.மீ. ஆழத்தில் புதைந்துள்ளது. இன்னும் துருப்பிடிக்காத நிலையிலுள்ள இவ்விரும்புத்தூண், உலோகத் தொழிற்கலையில் நம் முன்னோர்கள் கொண்டிருந்த தேர்ந்த அறிவினை நன்கு புலப்படுத்துகிறது.\n\nஇத்தூண் பிரதிகார மரபினரின் கீழ்க் குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்துவந்த தோமர் மரபைச் (Tomar) சார்ந்த அனங்பால் (Anangpal) என்ற மன்னரால், கி.பி. 7 அல்லது 8–ஆம் நூற்றாண்டளவில் தில்லிக்குக் கொண்டுவரப்பட்டது. ஆயினும், இது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை யாரும் அறிந்திலர். கே.இரா."}}