{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mw3h7cpg/", "data": {"id": "mw3h7cpg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mw3h7cpg/", "kind": "article", "headword": "இளம்பூரணர்", "romanization": "iḷampūraṇar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.146845+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர், தமிழ் இலக்கிய வரலாற்றில் உரையாசிரியர்கள் தனியிடம் பெறுகிறார்கள்.", "body_ta": "தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர், தமிழ் இலக்கிய வரலாற்றில் உரையாசிரியர்கள் தனியிடம் பெறுகிறார்கள். தொன்மை வாய்ந்த இலக்கண நூல்கள் அழிந்துபடாமல் காக்கப்பட்டமைக்கும், அவற்றின் நிலைபேற்றிற்கும் அவர்தம் உரைகளே காரணமாயின.\n\nதொல்காப்பியத்திற்குப் பலர் உரை கண்டுள்ளனர். அவர்களுள் பெயர் தெரிந்த உரையாசிரியர்களாக அறுவர் உள்ளனர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடனார் என்னும் அவ்வறுவருள் இளம்பூரணர் ஒருவரே தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்டுள்ளார். கிடைத்துள்ள உரைகளுள் இவரது உரையே காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆயினும் இளம்பூரணருக்கு முன்னும் தொல்காப்பியத்திற்கு உரை இருந்திருக்க வேண்டுமென்பது இவர் உரையால் தெரிகிறது. ‘ஒரு சாரார்’, ‘ஒருசார் ஆசிரியன் உரை’, ‘ஒரு திறத்தார்’, ‘இரு திறத்தார் ஆசிரியர்’ ‘என்பாரும் உளர்’, ‘இனி ஒரு கருத்து’, ‘உரைப்பாரும் உளர்’, ‘எழுதுவாரும் உளர்’ போன்ற வாய்பாடுகள் இளம்பூரணருக்கு முன் இருந்த உரைமரபுகளைக் குறிக்கின்றன. இவை வெறும் வாயுரைகளைச் சுட்டுகின்றன என்று கொள்ளுதற்கில்லை; எழுத்து வடிவ உரைகள் இருந்தமையினைக் குறிப்பிடுகின்றன என்று கொள்ளுதற்கு இடமுண்டு. ‘குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி’ (தொல். சொல். 56) என்னும் நூற்பாவிற்கு இளம்பூரணர் கூறும் உரை அவ்வுண்மையை நன்கு விளக்கும். ஆயினும், அத்தகைய உரைகள் எல்லாம் கிடைக்காத நிலையில் இளம்பூரணர் உரையே முழுமையான முதல் உரையாக இன்றளவுங் காணப்படுகிறது.\n\nஇவர், பிற உரையாசிரியர்களாகிய சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்றோரால் ‘உரையாசிரியர்’ என்று அழைக்கப்படுகிறார். அடியார்க்கு நல்லாரும் மயிலை நாதரும் ‘இளம்பூரணர்’ என்றே சுட்டுவர். ‘உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்’ என்று இவர் சுட்டப்படுவதால் ‘இளம்பூரணர்’ என்பது இவரது இயற்பெயர் என்றும், உரையாசிரியர் என்பது சிறப்புப் பெயர் என்றும் கூறலாம். எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றினுக்கும் இவர் உரை எழுதியிருந்தமையால் இவரை உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைத்தனர். அச்சிறப்புப் பெயரே பின்னர் இவருக்கு இயற்பெயராகி, உரையாசிரியர் என்றாலே இளம்பூரணரைச் சுட்டுகிற அளவிற்கு இயற்பெயர் போல் அமைந்துவிட்டது. இப்பொழுது கிடைக்கிற ஓலைச்சுவடிகள் கூட ‘உரையாசிரியருரை முற்றும்’ என்னும் அளவில் தான் காணப்படுகின்றன.\n\nஇவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்பது இவர் உரையால் அறியக்கிடக்கிறது. நும்நாடு யாது என்பதற்குத் ‘தமிழ்நாடு என்றல்’ (தொல். சொல். 13) என்பதனை விடையாகக் காட்டியுள்ளார். பின்னர்ச் செந்தமிழ்நாடு என்பதனைச் சோழநாடு என விளக்கியுள்ளார் (தொல். சொல். 392). இவற்றை நோக்குங்கால் இவர் சோழநாட்டினராவர் என்று கருதக் கூடும். ‘கருவூர்க்கு வழியெது?’ (தொல். சொல். 13), ‘உறையூர்க்குச் செல்லாயோ?’ (தொல். சொல். 15), ‘இருவிளக்கொற்றன்’ (தொல். எழுத்து. 217) எனச் சில எடுத்துக்காட்டுகள் காட்டியுள்ளார். இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தனவாக இருப்பது கொண்டும் இவர் சோழ நாட்டைச் சேர்ந்தவராகலாம் என்று உறுதி கூறலாம்.\n\nஇவர் தம் உரையுள் யாப்பருங்கல விருத்தியின் (கி.பி. 1010–1040) மேற்கோட் பாடல்களை மிகுதியும் எழுத்து ஆள்கிறார். வீரசோழியத்தில் (கி.பி. 1063–1070) காணப்படும் உடம்படுமெய் பற்றிய நூற்பாக் கருத்தை (வீரசோழியம். 7) இவர் தம் உரையுள் (தொல். எழுத்து. 141) எடுத்தாண்டுள்ளார். இளம்பூரணரை ‘உரையாசிரியராகிய இளம் பூரண அடிகள்’ என்று அழைக்கும் அடியார்க்கு நல்லாரின் காலம் கி.பி. 1150 ஆகும். எனவே இவரது காலம் வீரசோழியத்திற்கும் அடியார்க்கு நல்லாருக்கும் இடைப்பட்ட காலமாகும். பிற்காலச் சோழர்களுள் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1118–1136) அமைச்சனாக இருந்த ‘மறையவன் கண்ணன்’ என்பவனைப் ‘பார்ப்பான் கண்ணன்’ (தொல். சொல். 41) என இளம்பூரணர் தம் உரையுள் சுட்டுவர். எனவே, இக்கருத்துகளை நோக்கும் பொழுது இவரது காலம் கி.பி. 1118–1150 என்று கொள்ளலாம்.\n\nஇவரை ‘அடிகள்’ என்று கூறுவதால், இவர் சமண சமயத்தைச் சார்ந்த துறவி என்று கூறுவர். தொல்காப்பிய முதற் நூற்பா உரையில் ‘னகாரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான்’ பின்வைக்கப்பட்டது என்று இவர் கூறுவதைக் கொண்டு, இவர் சமணர் என்ற கருத்து வலியுறுகிறது என்பர். அவ்வாறாயின் இக்கருத்தையே ஏற்றுக் கொண்டாற் போல, ‘வீடு பேற்றிற்குரிய ஆண் மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரத்தைப் பின் வைத்தார்’ என்று எடுத்து மொழிந்த நச்சினார்க்கினியரையும் சமணர் என்றே கொள்ளவேண்டியிருக்கும். இளம்பூரணர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கான சான்றுகள் இல்லை.\n\nஇருப்பினும் உரைச் செய்திகளை நோக்கும் பொழுது அருகிய சில செய்திகள் இவரைப்பற்றி அறியத் துணை நிற்கின்றன. பொருளதிகாரத்துள் (நூ. 193) ஒரு நூற்பாவிற்கு அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலை எடுத்துக்காட்டி உரை எழுதியுள்ளார். ‘மணிமிடற்றந்தணன் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே’ என்பதற்கு ‘மணிமிடற்றந்தணனது சிவானு பூதியிற் பேருலகம் தங்கிற்று’ என்று சைவ சித்தாந்த முதன்மைக் கோட்பாட்டை விளக்கும் வண்ணம் உரைகூறியுள்ளார். மேலும் தொகை நூல்களில் காணப்பெறும் சைவக் கடவுளர் பற்றி அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பலகாலும் தம் உரையில் மேற்கோள் காட்டுகிறார். சிவபெருமான் பற்றிய பாடல்களை இரண்டிடத்திலும் (தொல். பொருள். 193, 399), முருகப் பெருமான் பற்றிய பாடல்களை ஏழு இடங்களிலும் (தொல். பொருள். 274, 277, 320, 357, 360, 384, 409) மேற்கோளாகத் தருகிறார். முருகப் பெருமான் பற்றிய பாடலை எடுத்துக் காட்டி விளக்கும் பொழுது ‘இதனுள் குறித்த பொருள் முருகவேள் காப்ப உலகம் காவற்பட்டது’ (தொல். பொருள். 384) என்று கூறுவர். இவற்றால் இளம்பூரணர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்று கொள்ளுதற்கு வாய்ப்புண்டு.\n\nஇவர் தொல்காப்பியத்திற்கு அன்றி வேறு எந்நூலுக்கும் உரை எழுதியதாக இவர்தம் உரையி- னின்றும் அறிய இயலவில்லை. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் எழுதிய உரையைத் தனித்தனி நோக்கினால் சில வேறுபாடுகளையும், ஒரு நோக்கில் கண்டால் சில உண்மைகளையும் காணவியலும். எழுத்ததிகார உரை தொடக்கவுரை என்பதால் அமைப்பில் தெளிவுடையதாகவும் நூற்பாவிற்குரிய நேர்ப் பொருளை ஆற்றொழுக்காகத் தருவதாகவும் அமைந்துள்ளது. சொல்லதிகாரவுரை அமைப்பில் சிதைவுடையதாகவும், முறையற்ற அமைப்புடனும் காணப்படுகிறது. பொருளதிகார உரை எழுத்ததிகார உரை அமைப்போடு ஒத்துக் காணப்பட்டாலும், விளக்கப்படாத பகுதிகள் மலிந்து காணப்படுகின்றன. எழுத்து, சொல் உரையைக் காட்டிலும் பொருளதிகார உரை விரைவு கருதி அமைக்கப்பட்டது போன்று அமைந்துள்ளது.\n\nபிறர் பெயர் சுட்டாது உரை கூறும் மரபு இளம்பூரணரிடம் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. ஐயப்பாடுடைய கருத்துகள் இருப்பின் தாமே அவற்றின்மேல் முடிவுக்கு வாராது பயில்வோரின் முடிவுக்கு விடுகின்ற சிறப்பு இவரிடம் காணப்படுகிறது. உரை கூறும் போக்கில் முன்னோக்கியும் பின்னோக்கியும் நினைவு கூர்ந்து உரை கூறும் தன்மை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இலக்கணக் கருத்துக்குரிய எடுத்துக்காட்டை மட்டும் கூறாது, அக்கருத்தை எடுத்துக்காட்டோடு பொருத்திக் காட்டும் தனிச் சிறப்பு இவரது உரையின் ‘நெறி’யாகவே காணப்படுகிறது. இவர்தம் உரை நெறிகளையே பின்வந்த உரையாசிரியர்கள் போற்றிக் கொண்டுள்ளனர்.\n\nஇவர் எழுதிய உரையில் தம் காலத்துச் சமுதாய அமைவுகளை இயலும் இடங்களிலெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இவர் காலத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் இருந்தமை (தொல். பொருள். 90), பிறப்பால் உயர்வு தாழ்வு கருதப்பட்டமை (தொல். தொல். 41), சாதிகளுக்குள் ஒவ்வாமை நிலவியமை (சொல். பொருள். 256) போன்ற செய்திகள் இவர் தம் உரையில் தெளிவாகக் காணக் கிடக்கின்றன. ‘கணிகை குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல்’ (தொல். பொருள். 149) போன்ற பல கருத்துகள் இவர் உரையுள் காணப்படுவதால் இவர் காலத்துச் சமுதாய நிலை நன்கு புலனாகிறது.\n\nஇவர் நூற்பாவிற்கு உரை எழுதுகிற பல்வேறு நிலைகளில் பல அரிய இலக்கணக் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய இலக்கணக் கொள்கைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்றால் அத்தொகுதியே ஓர் இலக்கண நூலாக அமையும். எடுத்துக்காட்டாக ‘ஒரு சொல் முன் ஒரு சொல் வருங்கால் தொகை நிலை வகையான் வருதலும் எண்ணுநிலை வகையான் வருதலும் பயனிலை வகையான் வருதலும் என மூன்று வகையான் அடங்கும்’ (தொல். சொல். 1) என்பதையும், ‘மிக்க எண்ணொடு குறைந்த எண் வருங்கால் உம்மைத் தொகையாகவும், குறைந்த எண்ணொடு மிக்க எண் வருங்கால் பண்புத் தொகையாகவும் கொள்’ (தொல். எழுத்து. 480) என்பதையும் கூறலாம்.\n\nஇவர் உரையில் காணப்படும் சொற்பொருள் விளக்கங்கள் சிறப்புடையனவாக உள்ளன. சொற்பொருள் கூறும் தன்மை இளம்பூரணர்பால் அரிய கலையாகவே அமைந்துள்ளது. தமக்கு முன்னிருந்த இறையனார் களவியல் உரை, மணக்குடவர் உரை போன்றவற்றில் நல்லனவற்றை எடுத்தாளும் தன்மை இவர்பால் சிறப்பாகக் காணப்படுகிறது.\n\nஇளம்பூரணர் உரையைப் பின்பற்றியே பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்திருக்கிறார். உரைக் கருத்துகளை முழுமையாகவும் பகுதியாகவும் ஏற்று நூற்பாவாக்கியுள்ளார். பொதுவாக நன்னூலுக்கு இளம்பூரணர் உரை ஓர் உரை மூலமாக விளங்கியது.\n\nஎளிமையும் தெளிவும் உடையதாய் உள்ள இளம்பூரணர் உரை தொல்காப்பியத்திற்குச் சீரிய திறவு கோலாய் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. சா.கி."}}