{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mp6xmz9a/", "data": {"id": "mp6xmz9a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mp6xmz9a/", "kind": "article", "headword": "நுண் திவலையாக்கி", "romanization": "nuṇ tivalaiyākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.175027+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிறு பரும அளவிலுள்ள ஒரு நீர்மத்தைப் பல நுண் திவலைகளாகப் பகுப்பதே, நுண் திவலையாக்கம் எனப் படும்.", "body_ta": "சிறு பரும அளவிலுள்ள ஒரு நீர்மத்தைப் பல நுண் திவலைகளாகப் பகுப்பதே, நுண் திவலையாக்கம் எனப் படும். நடைமுறையில், நீர்மத் திவலையாக்கம், வேறு பல சொற்களால் குறிப்பிடப் பெற்றாலும், இதற்கான வழி முறையைக் குறிக்கும் செந்தரப் படுத்தப் பட்ட துறைச் சொல் ஏதும் இல்லை. ஒரு நீர்மத்தைச் சிதறல், பீற்றல் முறையில் திவலைகளாக்குதல், தெளித்தல் முறையில் திவலைகளாக்குதல், கருவிகள் கொண்டு, நுண் திவலைகள் கொண்ட மறைப்புப் படலமாக்குதல் (misting) முறைகளில் பல திவலையாக்க முறைகள் உள்ளன. வெவ்வேறு முறைகளில், 10-1000μm விட்டமுள்ள நீர்மத் திவலைகளை உருவாக்க இயலுமாயின், 10μm விட்ட அளவிற்குக் குறைந்த நீர்மத் திவலைகளே நுண் திவலைகள் எனக் கொள்ளலாம்.\n\nபொதுவாக நீர்ம இயக்க ஆற்றல் முறை (hydraulic), வளிம இயக்க ஆற்றல் முறை (pneumatic), சுழற்சிமுறை (rotary) ஆகிய முறைகளில் செயற்படும் கருவிகள் கொண்டு, நீர்ம நுண் திவலையாக்கம் இயற்றப் படுகிறது. இவை தவிர, அதிர்வு முறை (vibration), நிலை மின் இயல் முறை (electrostatic technique) ஆகிய முறைகளின் வழி இயங்கும் திவலையாக்கிகளும், அண்மையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கேளா ஒலி அதிர்வி முறையில் நீர்மத்தை நுண் திவலைகள் கொண்ட முகிற்படலமாக மாற்றலும், மீ வெப்ப நிலையில் உள்ள ஒரு நீர்மத்தை நீர்மப் படல வெடிப்பு முறையில் திவலையாக்கம் செய்தலும், புவியீர்ப்பு ஆற்றல் கொண்டு திவலையாக்கம் செய்தலும், நடைமுறையில் இருப்பினும், இம்முறைகளின் நீர்மத் திவலையாக்க மாற்ற விகிதம் குறைவானதே.\n\nகொள்கை. நீர்மப் பரப்பு இழு விசையின் (surface tension) காரணமாக, எந்த ஒரு நீர்மமும், சிறு பரும அளவில் உள்ள போது, அதன் பரப்பு ஆற்றல் மிகக் குறைந்த அளவில் இருக்கக் கூடிய கோள உருவத்தையே கொள்வதாக அமையும். திவலையாக்க முறையில், நீர்மத்தின் உள்ளீடாக அல்லது வெளியிலிருந்து செயல் படும் ஒரு விசையின் மூலம் நீர்மப் பரப்பு விசையின் ஒருமித்த இந்த விளை பயனைத் தகர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீர்மத்தில் இயல்பாக உள்ள பாகியல் தன்மையால் உண்டாகும் சறுக்குப் பெயர்ச்சி இறுக்க விசை (Shearing stress), எத்தகைய படிவ மாற்றத்தையும் எதிர்ப்பதாய் இருப்பதால், சமன் செய்து நிலைமத் தன்மைக்கு மீட்கும் வகையில் அமையும் அல்லது நீர்மத்தைச் சிறு பகுதிகளாகப் பிரிக்கும் அந்த விசையினைக் குறைப்பதாய் அமையும். இந்நிலையில் நீர்மத்தைச் சூழ்ந்துள்ள புற ஊடகத்தால் செயற்படும் சறுக்குப் பெயர்ச்சி அழுத்த விசை நீர்மத் திவலையாக்கத்தை எளிதாக்கும் வகையில் துணை நிற்கும்.\n\nமிக எளிமையான திவலையாக்கம் தொங்கு முறையில் (pendant drops) பெறப் படுவதாகும். மிகக் குறைந்த அளவில் கசியும் வகையில், ஒரு பரப்பின் மேல் பாயும் நீர்மம் (எ-டு) வழியே மிகக் குறைந்த வேகத்தில், ஒரு நுண் குழாய் வழியே கசியும் நீர்மம், அதன் விளிம்பை அடையும் போது, புவியீர்ப்பால் இழுக்கப் பட்டுச் சிறு துகளிகளாக நுனியிலிருந்து வடிகிறது. ஒரு தட்டையான பரப்பின் மேல் படலமாகப் பரந்து நிற்கும் நீர்மமும், புவியீர்ப்பால் ஒரு நுனி வழியே துளியாக வடியும் (எ-டு) இலை மேலுள்ள நீர் இலை நுனி வழி வடிதல்) இவ்வகையில் 500μm விட்டத்திற்குக் குறைவான நீர்த் துளிகளைப் பெற இயலாது.\n\nநடை முறையில் நீர்மத் திவலையாக்கம் பயனுள்ள வகையில் அமைய வேண்டுமாயின், திவலைகள் நுண் அளவினவாகவும், நீர்மத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து பெறும் வகையிலும் இருக்க வேண்டும். இதற்கான பொதுவான வழிமுறைகள் கீழ் வருமாறு:\n\n1. பரும நிலையிலுள்ள நீர்மத்தை முடுக்கத்துடன் பாயச் செய்து, ஒரு படலமாகவோ, ஒரு நுண் நீர்ம ஓட்டமாகவோ, நீர்த் தாரை வடிவிலோ மாற்றுதல்.\n\n2. அவ்வாறு செல்லும் நீர்மத்தின் பரப்பில், சிறு அதிர்வுகள், சிறு அலைவுகள் (ripples) அல்லது புடைப்புகள் இடையே செயற்படும் வகை செய்தல்.\n\n3. நீர்மப் பரப்பில், நீர்ம அழுத்தம், அல்லது ஏனைய விசைகளின் இயக்கத்தால், நீர்மத்தை நுண நீர் பீற்றுக்களாகப் (ligamants) பிரித்தல் அல்லது பகுத்தல்.\n\n4. இச்சிறு நீர்மப் பீற்றுக்கள் நீர்மப் பரப்பு விசைச் செயற்பாட்டால் சிறு திவலைகளாக மாற்றமடைதல்.\n\n5. நீர்மத் திவலைகள் மேலும் ஒரு வளிமத்தின் ஊடே செலுத்தப் பட்டு, அதன் அழுத்தம், இறுக்க விசை விளைவாகச் சிதறி, நுண் திவலைகளாக மாற்றமடைதல்.\n\nகுறைந்த வேகத்தில் இயங்கும் நுண் திவலையாக்கிகளின் எந்திர ஆற்றலை, நீர்மப் பரப்பு விசை ஆற்றலாக மாற்றும் நிலை மாற்ற இயக்கு திறன் (conversion efficiency) மிகுந்து, இருக்கும். மெல்லிய நீர்மப் படலங்களைக் கையாண்டும், நுண்ணிய துளை வாய்களைக் கொண்டும், நீர்மப் பீற்று வேகத்தை மிகைப்படுத்தியும், ஒரு நுண் திவலையாக்கியின் திவலையாக்க விகிதத்தைக் கணிசமாக உயர்த்தலாம். நீர்மப் பீற்றுத் திசை வேகத்தை உயர்த்தும் போது, ஆற்றல் இழப்பு மிகுதியும் இருப்பினும், மிக நுண்ணிய திவலையாக்கம் பெற இயலும். இவ்வகைத் திவலையாக்கக் கருவிகளின் நிலை மாற்றத் தகைக் கெழு மிகக் குறைவாகவே இருக்கும்.\n\nகுழல் துளை வழி, நீர் இயக்க ஆற்றல் வழித் திவலையாக்கத்தில் பெறப் படும் திவலைகள் 100–3000μm விட்ட அளவு கொண்ட பெரிய துளிகளாகவே இருக்கும். இவ்வகை, தோட்ட வேலை, பூச்சி மருந்து தெளிப்பது போன்றவற்றிற்குப் பயன்படும். திவலையாக்கிகளிலும். தொழிற் கூடத் தூபிகளின் (Towers) உட்புறச் சுவர்களைத் தூறு சுரண்டித் தூய்மைப் படுத்தவும், அவற்றின் பரப்பை நீர்மப் பதனப் படுத்துவதற்கும் (humidification) பயன் படும். வளி இயக்கத்தால் செயற்படும் திவலையாக்கிகள் 5–100μm விட்டமுள்ள மிக நுண் திவலைகளைத் தர வல்லவை. இவ்வகை, வண்ணப் பூச்சிற்கும் (colour painting) நீர்மப் படலங்கள் பெறுவதற்கும், பூச்சி கொல்லி தெளிப்பான்களிலும் பயன் படும். சுழற்சி வகைத் திவலையாக்கிகள் பெரும்பாலும், நீர்ம இயக்க ஆற்றலில் செயற்படுபவை. இவை 30–300μm விட்டமுள்ள திவலைகளைக் பெறப் பயன் படுகின்றன. இவ்வகைத் தெளிப்பான் நீர்மத்தை, ஒரு பரப்பில் தெளித்து உலர வைப்பதற்குப் பெரிதும் துணையாகும். (எ-டு) பாகியல் மிகுந்த நீர்மம், நீர்மச் சாந்தாக உள்ள பொருள்கள், புகை போன்ற நீர்மப் படலங்களைப் பெறப் பயன் படுத்தப் படும் மீநுண் திவலையாக்கிகளில் பெரும்பாலானவை வளி இயக்க ஆற்றல் அல்லது கேளா ஒலி ஆற்றல் வழி செயல் படுபவையே. இவை நீர்மத்தை ஆவியாக்கல் முறையிலேயே மீ-நுண் திவலைகளை உருவாக்குகின்றன. நிலை மின் வழிச் செயற்படும் திவலையாக்கிகளும், நீர்ம இயக்க அல்லது வளிம இயக்க ஆற்றலை பயன் படுத்திச் செயற் படுபவையே. நிலை மின் புலம், மின்னூட்டம் பெற்ற திவலைகளை, அவை படியவிருக்கும் பரப்பிற்குக் கடத்திச் செல்ல துணை நிற்கின்றது. —எம்.எஸ்.கோவிந்தசாமி"}}