{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m76kmj27/", "data": {"id": "m76kmj27", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m76kmj27/", "kind": "article", "headword": "இலார்க்கானா", "romanization": "ilārkkāṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.562111+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பாகிசுத்தான் நாட்டில் சிந்து மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; இலார்க்கானா (Larkana) என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டது.", "body_ta": "பாகிசுத்தான் நாட்டில் சிந்து மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; இலார்க்கானா (Larkana) என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டது. சிந்து ஆற்றிற்கு மேற்கில் கார் கால்வாயின் (Ghar Canal) கரையில் இலார்க்கானா உள்ளது. இதனருகில் வாழும் இலாராக்கு (Larak) மரபு மக்களின் பெயரிலிருந்து இலார்க்கானா என்ற சொல் உருவாயிற்று. இந்நகரின் மையத்திலுள்ள இருப்புப் பாதைச் சந்திப்பு இதனை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ளது பழைய நகரம். மேற்கில் இலாகோரி (Lahori) என்னும் சிற்றுரும் அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இலார்க்கானா கி.பி. 1855–ஆம் ஆண்டில் நகராட்சியாக மாற்றப்பட்டது. இந்நகரம் உணவு தானியச் சந்தையினையுடைய வாணிக மையமாகும். இங்குப் பித்தளையும் ஏனைய உலோகப் பொருள்களும் சிறப்பாகக் கிடைக்கின்றன. கால்ஒரர்கள் (Kalhoras) ஆட்சியின்போது இது சிந்து மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பல கட்டடங்களும் கல்லறைகளும் அழிந்த நிலையிலுள்ள கோட்டையும் உள்ளன. நகராட்சிக் கழகம் நிருவகிக்கும் பூந்தோட்டமொன்றும், சிந்துப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இரு கல்லூரிகளும் இந்நகரிலுள்ளன.\n\nஇலார்க்கானா மாவட்டத்தின் பரப்பு 7423 ச.கி.மீ. இது மாவட்டமாக 1901–இல் உருவாக்கப்பட்டது. இங்குள்ள வளமான சமவெளியைச் ‘சிந்துவின் பூந்தோட்டம்’ (Garden of Sind) என்பர். இதன் மேற்குப் பகுதியாயுள்ள கிர்தார் மலைத்தொடர் இப்பூந்தோட்டத்தில் அடங்காது. கால்வாய்ப் பாசனத்தால் இச்சமவெளியில் கரும்பு, கோதுமை, நெல், பருப்பு, ‘ரேப்’ விதை, மாம்பழம், பேரிச்சை, கொய்யா போன்ற பழவகைகள் பயிரிடப்படுகின்றன. ஒட்டகங்கள் பெருமளவில் இங்கு வளர்க்கப்படுகின்றன. அரிசி ஆலைகள், மாவு ஆலைகள், சாயக் கூடங்கள் போன்றவை இங்கு மிகுதியாகச் செயற்படுகின்றன. பதப்படுத்தாத உப்பும் வெடியுப்பும் எளிதாகக் கிடைக்கின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் முதன்மையான தொல்லியல் மையமான மொகஞ்சதாரோ, இலார்க்காவுக்கு 24 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது இந்நகரின் மக்கள் தொகை 48,008 (1972); மாவட்டத்தின் மக்கள்தொகை 9,21,000 ஆகும்.\n\nபாகிசுத்தானின் தலைமை அமைச்சராக இருந்த சுல்பிகர் அலி புட்டோ (Zulfikar Ali Bhutto) இவ்வூரில்தான் பிறந்தார். இவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் இவர் உடல் இங்குத்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது."}}