{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m3w8svpz/", "data": {"id": "m3w8svpz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m3w8svpz/", "kind": "article", "headword": "இலிப்மன், வால்டர்", "romanization": "ilipmaṉ, vālṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.016370+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவர் நியூயார்க்கு மாநகரத்தில் கி.பி.", "body_ta": "இவர் நியூயார்க்கு மாநகரத்தில் கி.பி. 1889–ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தம் தாய் தந்தையர் யூதர்கள்; பெருஞ்செல்வமுடையவர்கள். இவர் படிப்பில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்; ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் படித்து 1910–ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.\n\nபகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுவதன் சிறப்பை இலிப்மன் (Lippmann, Walter) தம் கட்டுரைகளில் வலியுறுத்தி எழுதியுள்ளார். அரசியலறிஞர்கள் தம் முடிவுகளை அரசியல் அடிப்படையில் சிந்திக்காமல் வருங்கால மக்களுக்கு அவை எவ்வாறு பயன்படும் என்னும் அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமென இவர் தூண்டினார். அக்கால நடப்புகள் குறித்து இவர் எழுதிய கருத்துகள் உலகத்திலுள்ள பல அரசியல் தலைவர்களைக் கவர்ந்தன அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த பல குடியரசுத் தலைவர்கள், உலகத்தில் காணப்படும் பல்வேறு சிக்கல்களுக்கு இவர் கூறிய கருத்துரைகளையும் அறிவுரைகளையும் செவிமடுத்துச் செயற்பட்டதுண்டு.\n\nஇவர் ‘நியூயார்க்கு ஏரால்டு திரிபியூன்’ (New York Herald Tribune) என்னும் அமெரிக்க ஆங்கில நாளிதழில் 1931 முதல் 1967 வரை ‘இன்றும் நாளையும்’ என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதினார். இந்த நாளிதழில் வந்த கட்டுரைகளை உலகத்தில், 200க்கு மேற்பட்ட நாளிதழ்கள் அச்சிட்டுப் பெருமை பெற்றன. தாம் எழுதிய கட்டுரைகளுக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பன்னாட்டுச் செய்திகளைச் சீரிய முறையில் வெளியிட்டவர் என்ற காரணத்திற்காகப் புலிட்சர் விருதை 1962–ஆம் ஆண்டு இவர் பெற்றார்.\n\nஇவர் ‘நியூயார்க்கு உலகம்’ (New York World) என்னும் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக 1921–இல் சேர்ந்தார். ‘உலகம்’ (World) என்னும் இதழின் ஆசிரியராக 1929–இல் பதவியேற்று 1931 வரை பணியாற்றினார்.\n\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் வெளியிட்ட 14 அம்சத் திட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு இவர் உறுதுணையாக இருந்தார். அத்திட்டமே உலகப் போர் முடிவுற்றபோது அமைதி உடன்பாட்டிற்கு அடிப்படையாக அமையும் என்று உட்ரோ வில்சன் நம்பினார்.\n\nஇலிப்மன் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் அரசியல் கலை அறிமுகம் (A preface to Politics, 1913), பொது மக்கள் கருத்து (Public Opinion, 1922), பொதுத் தத்துவம் (The Public Philosophy, 1955) என்பன சிறப்பான நூல்களாகும். அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையைக் குறித்தும் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.\n\nஇவர் புகழ்பெற்ற அமெரிக்க இதழாசிரியர்; தம்முடைய அரசியல் கட்டுரைகளுக்காக உலகம் முழுவதும் பாராட்டப் பெற்றார். இவர் கட்டுரைகளைத் தெளிவாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் எழுதிய திறம் படைத்த இலக்கிய ஆசிரியராவர். இவர் 1974–ஆம் ஆண்டு நியூயார்க்கில் காலமானார்."}}