{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kzjwange/", "data": {"id": "kzjwange", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kzjwange/", "kind": "article", "headword": "இல்பொருளுணர்வு", "romanization": "ilporuḷuṇarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.360298+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இல்லாத பொருள்களைப் புலனுணர்வினால் காண்பது, கேட்பது அல்லது நுகர்வது போல்வன இல்பொருளுணர்வு (Hallucination) எனப்படும்.", "body_ta": "இல்லாத பொருள்களைப் புலனுணர்வினால் காண்பது, கேட்பது அல்லது நுகர்வது போல்வன இல்பொருளுணர்வு (Hallucination) எனப்படும். இது பெரும்பாலும், ஒரு வகையான புலன்காட்சிச் சீர்கேடு (Perceptual Disorder) என்னும் பொருள்பட வழங்கப்படுகிறது. ஒரு பொருள் இருப்பதற்கு அல்லது ஒரு நிகழ்வு நடைபெறுவதற்கு ஏற்ற தூண்டல் இன்றியே அதற்கான துலங்கல் ஏற்படுவதை இல்பொருளுணர்வு என்று கூறுகிறோம். இது திரிபுணர்வுடன் தொடர்புடையதாக அமையலாம் அல்லது இல்லாத பொருளை உணர்பவனிடம் தான் காண்பது, கேட்பது அல்லது நுகர்வது மெய்யானதே என்னும் உறுதிப்பாடு அமையப் பெறாமலும் இருக்கலாம். அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலோர் இல்பொருளுணர்வு நிலையை எய்துகின்றனர். ஆனால், இடைவிடாத தீவிரமான இல்பொருளுணர்வு அனுபவங்கள் உளக் கோளாறு, உளப்பிணி ஆகியவற்றின் அறிகுறியாகும்.\n\nதனிமனிதனின் நிறைவேறாத ஆசைகள் ஆழ்மன ஒடுக்கல்களாக மாறி, அவற்றின் காரணமாகவும் இல்பொருளுணர்வு ஏற்படலாம். தனிமனிதனின் குறிப்பிட்ட சில நிறைவேறாத ஊக்கிகளும் அடைய முடியாத உந்துகளும் நனவிலியில் தள்ளப்பட்டு, எப்பொழுது நனவு நிலையை அடையலாம் என்று காத்திருக்கின்றன. இவ் உந்துகள் நனவு நிலையை அடையும் வழிகளுள் இல்பொருளுணர்வும் ஒன்றாகும். ஆதலின், இல்பொருளுணர்வு ஓர் உளப்படைப்பாகும். உடல்சார் தூண்டல்களினாலும் இல்பொரு- ளுணர்வு ஏற்படலாம். ஒரு மனிதனுடைய பெரு மூளைப் புறப்பகுதிகளில் அதிர்ச்சி ஏற்படுத்தினால், அவன் ஓர் ஒளிக்கீற்றைக் காண்கிறான். இதைப் போன்றே உடலில் நச்சுப் பொருள்கள் மிகுதியானால் உடல்சார் இல்பொருளுணர்வுகள் தோன்றுகின்றன. அறிதுயில் முறையில் துயிற்றப்படுவோர் கருத்தேற்றல்களினால் இல்பொருளுணர்வு நிலையை அடைகின்றனர்.\n\nஇல்பொருளுணர்வை நாம் திரிபுணர்வு, கானல் நீர் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டும். கானல் நீர் என்பது பாலைவனத்தில் சில ஒரு தூண்டல்களின் காரணமாகத் தோன்றுவதாகும். இது திரிபுக் காட்சியினுள் அடங்கும். இல்பொருளுணர்வால் எவ்விதத் தூண்டல்களும் இன்றியே ஒருவன் காட்சிகளையும் தீர்வுகாண நிகழ்ச்சிகளையும் புதுமையான மனிதர்களையும் இவ்வாறே காண்கிறான்; பலவித சுவைகளை அனுபவிக்கிறான்; பல்வேறு நறுமணங்களையும் நுகர்கிறான். உளவியல் அறிஞரான பிராய்டின் கருத்துப்படி, நாம் காணும் கனவுகளும் ஒருவகையான இல்பொருளுணர்வுகளே யாகும். நாம் காணும் பகற்கனவுகள் நம்முடைய கற்பனையின் அடிப்படையில் எழுபவை. இல்பொருளுணர்வுகளைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தி அறியலாம். இவ்வகைப்படுத்துதல் இல்பொருளுணர்வுகள் தோன்றும் புலன்களின் அடிப்படையில் அமையும்.\n\n1) கேள்வி இல்பொருளுணர்வு\n\nஉளக்கோளாறுகள் உடையவன் குழப்பமான பலவித ஒலிகளையும் குரல்களையும் கேட்கிறான். சில வேளைகளில் இக்குரல்கள் இடும் கட்டளைப்படியும் அவன் நடக்கிறான். பெரும்பாலும் இத்தகையோர் தம்முடைய குரலையே கேட்கிறார்கள் என்பது கருதப்படுகின்றது.\n\n2) காட்சி இல்பொருளுணர்வு\n\nஉளக்கோளாறு உடையோன் பலவிதமான காட்சிகளையும் ஒளி நிறம் ஆகியவற்றையும் காண்கிறான். சில வேளைகளில் இறந்துபோன மனிதர்கள் தம்முன் நிற்பதாகவும் முன்பின் தெரியாத ஒருவர் பலகணி வழியே எட்டிப் பார்ப்பதாகவும் உணர்கிறான். இத்தகையவர்களே பேய், பிசாசுகளைக் கண்டதாகவும், அவைகளுடன் தாம் பேசியதாகவும் கூறுகின்றனர்.\n\n3) சுவை இல்பொருணர்வு\n\nஇத்தகைய இல்பொருளுணர்வினர் எப்போதும் பல்வேறு சுவைகளை உணர்கின்றனர். தாம் உண்ணும் உணவு நச்சுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உணர்கின்றனர். இத்தகையோர் ஐயமிக்கவராக இருக்கின்றனர்.\n\n4) முகர் இல்பொருளுணர்வு\n\nஇத்தகைய உணர்வுடையோர் பலவிதமான நாற்றங்களை உணர்கின்றனர். தாம் இருக்கும் இடத்தில் ஏதோ ஒரு நச்சுப்புகையின் மணம் வீசுவதாகவும் அதனால் மூச்சுத்திணறுவதாகவும் உணர்கின்றனர். இந்த உணர்வு ஆழ்ந்த குற்ற மனப்பான்மையின் காரணமாக ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.\n\n5) மெய்சார் இல்பொருளுணர்வு\n\nஇத்தகைய உணர்வினர் தம் உடல் மீது பூச்சிகள் ஊர்ந்து செல்வதாக உணர்கின்றனர். இவ்வுணர்வு மிகையான குடிப்பழக்கத்தின் காரணமாக ஏற்படும் உளப்பிணியின் அறிகுறியாகவும் இருக்கலாம். உளவியலாரின் கருத்துப்படி இல்பொருளுணர்வினர் உளப்போராட்டங்களுக்குப் புறத்தோற்றமுறையில் தீர்வுகாண விழைகின்றனர்; தம் முயற்சியில் தோல்வியும் அடைகின்றனர்.\n\nஆழ்ந்த உறக்கநிலையிலிருந்து எழுந்திருப்பவருக்கும் அரைத் தூக்க நிலையில் இருப்பவருக்கும் காட்சி இல்பொருளுணர்வு ஏற்படுகிறது. மெசுகலைன் (Mescaline), எல்.எசு.டி (L.S.D.) போன்ற போதை மருந்துகளும் காட்சி இல்பொருளுணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. போதை மருந்துண்பவர்கள் தமக்கு இல்பொருளுணர்வுகள் ஏற்படுவதை அறிகிறார்கள். ஆனால், உளக்கோளாறுடையவர்கள் தமக்கு ஏற்படுவது உண்மையான அனுபவம் என்று உணர்கிறார்கள்.\n\nகுடிப்பழக்கத்தின் காரணமாக ஏற்படும் உளப்பிணியாகிய உடல்உள நடுக்க நிலையை (Delerium Tremens) அடைந்தவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு வகைகளான இல்பொருளுணர்வுகளை அனுபவிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உடல்சார் இல்பொருளுணர்வுகளை அனுபவிக்கின்றனர். தம் உடல்மீது சிறு பூச்சிகல் ஊர்வதைப் போன்ற இல்பொருளுணர்வு இவர்களுக்கு ஏற்படுகிறது. மற்றவர்கள் கூறும் கருத்துப் பகர்வுக்கு ஏற்ப, இல்லாத பொருள்களை இவர்கள் காண்கின்றனர். மிகையான குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் குடியை ஓரிரு நால்கள் நிறுத்திவிட்ட குறுகிய இடைவெளிக் காலத்தில் மற்றவர்களின் சொற்களால் தூண்டப் பெற்று, வன்முறை, கொலை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில் இவர்கள் இல்லாத பொருள்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதும் உண்டு.\n\nகடுமையான உள நடுக்க நிலையை அடைந்தவர்கள் கேள்வி இல்பொருளுணர்வுகளை அனுபவிக்கிறார்கள். இவர்களுடைய ஆழ்மன ஒடுக்கல்களில் இருக்கும் அச்சங்கள், குறைபாடுகள் போன்றவை மற்றவர்களால் பேசப்படுவதாக உணர்கிறார்கள். உளக்கோளாறுகளின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் குடிப்பழக்கம் காரணமாக உடல்உள நடுக்க நிலையை அடைந்தால் இத்தகைய இல்பொருளுணர்வுகளால் கடுமையான தொல்லைக்கு உள்ளாகின்றனர்.\n\nகாட்சி இல்பொருளுணர்வு மீத்தொளி வடிவத்தினின்றும் (Eidelic Image) வேறுபட்டது. முன் அனுபவத்தையொட்டித் துல்லியமாக ஏற்படும் காட்சி வடிவங்கள் மீத்தொளி வடிவங்கள் ஆகும். இத்திறன் குழந்தைகளிடம் மிகையாகவும் வயது ஏற ஏறக் குறைவாகவும் காணப்படும். குழந்தைகளிடம் அச்சத்தின் காரணமாக ஏற்படும் இல்பொருளுணர்வுகள் காரணமாகப் பொய் இல்பொருள் உணர்வுகள் ஏற்படும். இவை நிலையாக இருப்பதில்லை. இவை தோன்றி மறையும் தன்மையுடையன."}}