{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ktvm2hp7/", "data": {"id": "ktvm2hp7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ktvm2hp7/", "kind": "article", "headword": "இனக்குழு மொழியியல்", "romanization": "iṉakkuḻu moḻiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.474607+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "புதைநிலைப் பேச்சின் ‘கருத்தாக்கக்குறியீடே’ (Conceptual Code) ‘மொழி’ என்றும் சமுதாய நடத்தைக்குப் புறத்தேயுள்ள கருத்தாக்கக் குறியீடே ‘பண்பாடு’ என்றும் உணர்ந்து கொண்டால், ‘பண்பாட்டின் திட்டவட்டமான பகுதியே மொழி’ என்பது பெறப்படும்.", "body_ta": "புதைநிலைப் பேச்சின் ‘கருத்தாக்கக்குறியீடே’ (Conceptual Code) ‘மொழி’ என்றும் சமுதாய நடத்தைக்குப் புறத்தேயுள்ள கருத்தாக்கக் குறியீடே ‘பண்பாடு’ என்றும் உணர்ந்து கொண்டால், ‘பண்பாட்டின் திட்டவட்டமான பகுதியே மொழி’ என்பது பெறப்படும். பண்பாடுகளை அறியும் முயற்சிக்கு உறுதுணையென இனக்குழுக்களின் மொழிகளைக் கற்ற பல மானிடவியவாளர், மொழிகளுக்கும் அவை சார்ந்த பண்பாடுகளுக்குமிடையே நெருங்கிய உறவு நிலவுவதைச் சுட்டி வந்தனர். இந்நிலையில் முகிழ்த்த ஒரு துறையே ‘இனக்குழு மொழியியல்’ (Ethnolinguistics). மக்களின் பண்பாட்டு அமைப்புகளுக்கும் அவர்தம் மொழிகளின் சொல் அமைப்புகளுக்கும் இடையே திகழும் நெருங்கிய உறவுநிலையை ஆய்ந்துணரும் தனிப் பெருந்துறையே இனக்குழு மொழியியல் என்பார் இக்கர்சன் (Hickerson).\n\nதமது சமுதாயத்தின் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகிய மொழியின் உறுதுணையோடு மனித குலம் நிலைபெற்றிருக்கிறது. ஏனெனில், ஒரு குழுவின் மொழிப் பயன்பாட்டின் மீதே ‘உண்மையான உலகு’ தன்னையறியாமலேயே பெரும்பான்மையும் கட்டப் பெற்றுள்ளது.\n\nஒரு மொழி தன்னைப் பேசுபவர்களைத் தாம் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தம்மைத் தொடர்புபடுத்திப் பார்க்கவும், இயற்கை மற்றும் பண்பாட்டுப் பொருள்களை விளக்கிக் கூறவும், அவற்றை இனங்கண்டு கொள்ளவும், தமது சமுதாயச் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டு அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கவும் வழிவகை செய்கிறது. பறவைகள், மீன், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும்பொழுது இந்த முயற்சி அவ்வளவு ஒன்றும் பெரிதானதன்று. ஏனெனில், இவையனைத்தும் குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்குள் வரையறுக்கப்பட்டனவாகும். இதற்கு நேர் மாறாக, பல்வேறு மொழிகளுக்கிடையே தொடர்ச்சியான அல்லது வரையறையற்ற பரப்புகள் தொடர்பான பட்டறிவுகளைத் துண்டாக்கி வகைப்படுத்தும் முறைகளில், பல்வேறு மொழிகளுக்கிடையே மிகத் தெளிவான மாறுபாடு நிலவுகிறது. மனித உடல் போன்ற ‘முழுமைகள்’ (Wholes) பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. எண்ணுதற்கும் அளத்தற்கும் ஏற்ற வகையில் ‘நேரம்’ (Time), ‘இடம்’ (Space) ‘அலகுகளாகப்’ (Units) பகுக்கப்படுகின்றன. ஐம்பொறிகளின் பட்டறிவுகளான ஒலிகள், சுவைகள், நிறங்கள் போல்வன குழுப்படுத்தப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. புறப்பண்பாட்டு உள்ளொளிகளின் (Material Phenomena) அமைப்புகளில் பண்பாடுகள், தமக்குள் வேறுபடுவதோடு நில்லாது, தாம் அமைக்கும் புறப்பண்பாட்டு உள்ளொளிகளிலும் வேறுபடுகின்றன. இதற்குச் சான்றாக, குளிர்ப் பகுதியில் வாழும் ஆங்கிலேயர், பனித்துளி (Dew), பனிமூட்டம் (Fog), பனிக் கட்டி (Ice), பனி (Snow), மூடுபனி (Mist), என வேறுபடுத்திப் பார்க்க, தென்னிந்தியாவைச் சார்ந்த கோயர் என்னும் நடுத்திராவிடப் பழங்குடியினர் ‘மஞ்சு’ என்னும் ஒரே சொல்லால் மேற்குறித்த அனைத்து நிலைகளையும் சுட்டுவதையும், துருவப் பகுதிகளில் வாழ்ந்து வரும் எசுகிமோப் பழங்குடியினர் நூற்றுக் கணக்கான சொற்களைக் கொண்டுள்ளதையும் கூறலாம்.\n\nசொற்கோவையின் அளவு, சிறப்புநிலை, வேறுபடுத்துநிலை முதலானவற்றின் வாயிலாகப் பண்பாட்டு வலியுறுத்தலின் கருத்துகள், மொழியில் நேரடியாக எதிரொலிக்கப்படுகின்றன. அதாவது, மொழி பேசுநர் நெருங்கிய உறவுடைய சுற்றுச் சூழல் அல்லது பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பாக, மிகுதியான தனிச் சொற்களும் ஒரு பொருட்பன் மொழிகளும் (Synonyms) நுண் பகுப்புகளும் காணுதல் இயல்புடையதே.\n\nபோவாசு (Boas) என்னும் மானிடவியலார், கனடாவைச் சார்ந்த நடுப்பகுதி எசுகிமோக்கள் குறித்த தம் ஆய்வுப் படைப்பில், எசுகிமோக்கள் தங்கள் சுற்றுச் சூழலின் தலையாய கூறுகளான ‘சீல்’ (Seal) என்னும் விலங்கு, ‘பனி’ முதலானவற்றிற்கு மிகுந்த சொற்களைத் தம் மொழியில் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். மொழிக்கும் பண்பாட்டிற்கும் இடையே நிலவும் நெருங்கிய உறவைச் சுட்டிக்காட்ட இது செம்மையான சான்றாகப் பெரிதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. போவாசைத் தொடர்ந்து அவர் மாணவரான சப்பீர் (Sapir), பண்பாடும் மொழியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து செயற்படுவதைத் தம் ஆராய்ச்சிகளின் வழி வெளியுலகுக்கு அறிவித்தார் என்றாலும், மொழிக்கும் பண்பாட்டிற்கும் இடையிலுள்ள உறவை அறுதியிடுவதில் மிகவும் புகழ் வாய்ந்த மானிடவியல் அணுகுமுறையாக ஒர்பு (Whorf) என்பாரின் ஆய்வேடுகளைக் கூறலாம்.\n\nகாப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஓர்பு தீ, வெடி விபத்துகள் தொடர்பான கோப்புகளில் மொழித் தன்மையே விபத்துகளுக்குக் காரணமாயிருந்ததைக் கண்ணுற்றார். எடுத்துக்காட்டாக, ‘காசோலின்’ (Gazoline) எனப்படும் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் நிரப்பியிருந்த வெற்றுப் பீப்பாய்கள், கவனக் குறைவுடனும் அலட்சியப் போக்குடனும் கையாளப்பட்டதனால், வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளமையைக் கண்டார். அதாவது, ‘வெற்றுப் பீப்பாய்கள்’ எனத் தவறாகக் கருதிப் பற்ற வைப்புச் செய்ததனாலேயே இவ்விபத்துகள் ஏற்பட்டன. இது போன்றே, விரைந்து தீப்பற்றக்கூடிய ‘இசுபன் சுண்ணாம்புக் கற்கள்’ (Spun lime Stone) என்னும் வேதியியல் பொருளின் தீங்கு உணரப்படாததனால், தீ விபத்துகள் பெரிதும் நடந்தன என்றும் கண்டார். இங்கு, இவ்வேதியியல் பொருளின் பெயரோடு காணப்படும் ‘கல்’ இதை ஒரு எரியாப் பொருள் எனத் தவறாக எண்ண வைத்து விட்டதே பெரும்பாலான தீ விபத்துகளுக்கு ஏதுவாயிற்று. தண்ணீர் பட்டதும் தீப்பற்றும் இயல்புடைய அசிட்டிலின் (Acetelene) வாயுவை ‘இக்கல்’ தோற்றுவிக்கும் என்பது பணியாளர்களால் அறியப்படவில்லை.\n\nஅமெரிக்க இந்தியப் பழங்குடி மொழியாராய்ச்சியில் ஓர்பு\n\nதென்மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த அமெரிக்க இந்தியப் பழங்குடி மொழியான ஓப்பி (Hopi) மொழியை இவர் முறையாக ஆராய்ந்தார். தம் ஆய்வேடுகளில் ‘நிலையான சராசரி ஐரோப்பிய மொழி’யுடன் (SAE = Standard Average European) ஓப்பி மொழியை ஒப்பு நோக்கினார் (ஆங்கிலம், பிரெஞ்சு, செருமனி உள்ளிட்ட மொழிகளே நிலையான சராசரி ஐரோப்பிய மொழி என இவரால் பொதுவாகச் சுட்டப்படுகின்றன).\n\nபன்மையும் எண்ணிக்கையும்\n\nஉண்மையான மற்றும் கற்பனையான பன்மைகள் (Real and Imagining Plurals) நிலையான சராசரி ஐரோப்பிய மொழிகள் உருவாக்கக் கூடியன. ‘பத்து மனிதர்’ என்பதை உண்மையான பன்மைக்கு எடுத்துக்காட்டாகவும், ‘பத்து நாள்கள்’ என்பதைக் கற்பனையான பன்மைக்கு எடுத்துக் காட்டாகவும் கூறுவர். நேரத்தைத் தொகுப்பாகக் காட்டவியலாது என்ற உண்மையின் அடிப்படையிலேயே இத்தகைய பன்மைகளைக் ‘கற்பனையான பன்மைகள்’ என்கின்றனர். நேரத்தைச் சுழற்சியான நிகழ்ச்சியாகக் காண்பது ஓப்பிப் பண்பாடு. எனவே, கற்பனைப் பன்மைகளையும் அளவிடக்கூடிய பொருள்களாகக் காண்பது–உணர்வது நிலையான சராசரி ஐரோப்பிய மொழியின் சிறப்புப் பண்பாகும்.\n\nநிலையான சராசரி ஐரோப்பிய மொழியில் வினைச் சொற்களுடைய ‘மூன்று காலப் பாகுபாட்டு அமைப்பு’ (Three–tense System), நேரம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளிலும் தனது தாக்கத்தைக் காட்டி நிற்கிறது. நேரத்தைப் பருப்பொருள் போன்று பார்க்கும் நோக்கினால், நேர அலகுகளை வரிசைப்படுத்தியும் அவற்றுக்குள் எல்லைக் கோடுகள் உள்ளன போன்றும் காணலாம். உண்மையில், நேர அலகுகளுக்கிடையே சீரிய ஒற்றுமை காணப்படுகிறது; தமக்குள் எல்லைக் கோடுகள் ஏதுமின்றிப் பிரித்தறிய முடியாதவாறு சங்கிலித் தொடராகவே உள்ளன. நிலையான சராசரி ஐரோப்பிய மொழிகளைப் போலல்லாது பல பழங்குடியினர் மொழிகளிலும் ‘முந்தையது’, ‘பிந்தையது’ என்ற இரு காலப் பாகுபாடே காணப்படுவது இங்கு நினைவுகூரத்தக்கது. ஏனைய நுண் பகுப்புகளனைத்தும் வினைச் சொற்களுடன் குறிக்கப்படும் ‘மதிப்பீட்டு வடிவங்கள்’, பார்க்கும் கோணம் ஆகியவற்றின் துணையால் உணர்த்தப்படுகின்றன. பேசுநர் குறிப்பிட்ட ஒரு செயலைத் தெரிவிக்கிறாரா, எதிர்பார்க்கிறாரா, தம் முந்தைப் பட்டறிவுவழி பேசுகிறாரா என்பதை மதிப்பீட்டு வடிவங்களும் செயலின் கால அளவும் சுட்டுகின்றன. சுருங்கச் சொன்னால், நிலையான சராசரி ஐரோப்பிய மொழியின் நுண்ணலகு (Micocosm) புறவுலகைப் பொருள்களாகப் பார்ப்பதுடன், பரப்பு (Space) அல்லாதவற்றிற்கும் பரப்பு வடிவங்களைக் (Spatial forms) காண்கிறது. மாறாக, ஓப்பி உள்ளிட்ட பழங்குடியினர் மொழிகள் பெரும்பாலும் உண்மைநிலையை நிகழ்ச்சிகளாகவே பகுத்துணர்கின்றன.\n\nஒர்பு எடுகோளும் ஒர்பு புதிய எடுகோளும்\n\nஒர்பின் ஆய்வு முடிவுகளின் பிற்கால வளர்ச்சியுற்ற நிலையே சப்பீர்–ஒர்பு எடுகோள் என்றும் ‘ஒர்பு எடுகோள்’ (Whorfian Hypothesis) என்றும் மானிடவியலாரால் கருதப்படுகிறது. மொழியும் பண்பாடும் தனித்தனியே பிரித்தறிய வொண்ணாமல் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்த நிலையை உடையன என்பதே ஒர்பு எடுகோளின் மையக் கருத்து.\n\nசிந்தனை மற்றும் பண்பாட்டு நடத்தைகள் தொடர்பாக மொழிக்கு ஓர் உருவாக்கப் பங்கை (Formative Role) எடுகோளாக்கும் செயலில் ஒர்பு மட்டும் ஈடுபடவில்லை. இவர்தம் காலத்தவரான தோரத்தி இலீ (Dorathy Lee) என்னும் அம்மையார், பல்வேறு பண்பாடுகளில் பட்டறிவைக் குறித்தற்கு மொழியே சீரியதொரு வழிமுறையெனக் கிரேக்க, திரோபிரியாண்டுப் (Trobriand) பண்பாட்டாய்வுகளின் வாயிலாகத் தெளிவுபடுத்தினார். தம் அனைத்து ஆய்வுகளிலும் மொழியின் இலக்கணக் கூறுகளுக்கும் தருக்க நெறிமுறைக்கும் இடையிலுள்ள இணைப் போக்கை இனங்காண்பதே ஒர்பின் குறிக்கோளாக விளங்கிற்று. இந்தச் சீரிய குறிக்கோளே மானிடவியல் ஆய்வரங்கங்களில் ஒர்புக்குத் தனியிடத்தைத் தேடித் தந்தது. இருப்பினும், காலப் போக்கில் ஒர்பின் எடுகோள் மதிப்பை இழக்கத் தொடங்கியது.\n\nஎடுகோளுக்கு எதிராக எழுந்த மறுப்புரைகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் தன்னிலை விளக்கம் கூறும் வண்ணம் ஒர்பு புதிய எடுகோளை (NeoWorfian Hypothesis) கரோல் என்பார்முன் வைத்தார். ‘கட்புலனால் உணரப்படும் பட்டறிவை விளக்கும் வழிமுறைகளில் மொழிகள் மாறுபட்டு நிற்கும் வரை மொழியைப் பயன்படுத்துவோர் தத்தம் மொழிகள் காட்டும் கூறுகளுக்கேற்பத் தம் பட்டறிவுகளைப் பிரிப்பதிலும் வேறுபடுத்திப் பார்ப்பதிலும் வெவ்வேறான போக்குகளையே கொண்டிருப்பர்’ என்பதே ஒர்பு புதிய எடுகோளின் அடித்தளம்.\n\nமொழிக்கும் பண்பாட்டிற்குமிடையே நிலவும் நேர் உறவு\n\nஒரு மொழியின் சொற்கோவையை ஆழ்ந்து ஆராயும்போது, மொழிக்கும் பண்பாட்டிற்குமிடையே மிகப் பெரியதோர் உறவு இருக்கிறது என்ற உண்மை எளிதில் புலப்படும்.\n\nசொற்கோவை\n\nபோவாசால் விளக்கப்பட்ட எசுகிமோப் பண்பாட்டில் பனி, சீல் போல்வன தொடர்பான சிறப்புச் சொற்களின் எண்ணிக்கை மிகுதி என்பது முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இது போன்றே, ஆயர் வாழ்க்கை நடத்தும் நூயர் (Nuer) பழங்குடியினருடைய மொழியில், கால்நடைகளின் பொருளாதாரப் பண்பாட்டு இன்றியமையாமையினால் சிறப்புச் சொற்கள் மிகுதியாக வழங்கப்படுதலை இவான்சு பிரிச்சர்டு காட்டுகிறார். தம் ஆழ்கடல் மீன்பிடி தொழிலோடு முதன்மையாகத் தொடர்புடைய காற்று, கடல் நீரோட்டம், விண்மீன், வலை முதலியன குறித்த பல சொற்களை மீனவர் தமது தமிழ்க் கிளைமொழியில் பெற்றிருத்தல் மற்றுமொரு சீரிய எடுத்துக்காட்டாகும். ஏனெனில், நேரமறியவும், காற்று மழையினை அறியவும் விண்மீன்களையே இவர்கள் துணையாகக் கொண்டுள்ளனர். இதனாலேயே ஏனைக் கிளைமொழிகளில் ‘வாடை’, ‘தென்றல்’ எனக் காற்றைக் குறிக்க ஓரிரு சொற்களே இருக்க, வாடெ, குன்னுவடெ, சல்வா, மூலச்சல்வா, செம்போத்து, கொண்டல் எனப் பல சொற்கள் இவர் தம் கிளைமொழியில் காணக்கிடக்கின்றன. வே வெள்ளி, வாடெ வெள்ளி, குருசு வெள்ளி, கப்ப வெள்ளி என்பன போன்ற விண்மீன் பெயர்களும், மே முறி, கீ முறி, வன்னி வெள்ளொம், சோனி வெள்ளொம் போன்ற நீரோட்டத்தைக் குறிக்கும் பெயர்களும் மீனவர் பண்பாட்டை எதிரொலிப்பனவே.\n\nஉருவகங்களும் பொருளின் விரிவும்\n\nபண்பாட்டுச் சூழலுடன் ஒரு மொழியின் சொற்கோவை தொடர்பு பெறும் சிறப்பு வழி ஒன்றைச் சொற்பொருளியலார் (Semanticists) சுட்டிக் காட்டுகின்றனர். பொருள் விரிவின் அடிப்படையில் சுட்டப்பெறும் உருவகங்களே அந்தச் சிறப்பு வழி. இவற்றுள் மனித உடலுறுப்புகளை அடியொற்றி உருவாக்கப் பெறும் உருவகங்களே உலகளாவிய தன்மையன. ‘ஊசிக் காது’, ‘மேசைக் கால்’, ‘நாற்காலியின் கை’ என்பன இதற்குச் சான்றாகும். தமது சுற்றுச் சூழல் பண்புகளைத் தம்மிடமிருந்து பிரித்தறியாத நிலையில் மொழி பேசுநர் காணும் போக்கே, இத்தகைய ‘உடற்கூறு அடிப்படை நோக்கு’ க்குக் (Physiogaamic Perception) காரணமாகிறது. இது போன்ற உலக நோக்கின் அடிப்படையில் உருவகங்களை விரிவாகப் பயன்படுத்தும் போக்கைப் பார்க்கும்பொழுது, இத்தகைய அணுகுமுறை தொன்மையானதும் உலகளாவியதும் ஆகும் என்னும் கருத்து வலிவு பெறுகிறது.\n\nமாறுபடும் பண்பாட்டில் தொழில் துறை அறிமுகத்திற்கு ஏற்ற சொற்கோவையை வழங்குதலில் எவ்வாறு உருவகப் பொருளின் விரிவு பயன்படும் என, மேற்கு அப்பாச்சிப் பழங்குடியினரிடையே தாம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பாசோ (Basso) என்பார் தெளிவுபடுத்துகிறார். சான்றாக, தொழில்துறை அறிமுகத்தால் புறப்பண்பாட்டுப் பொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உந்து வண்டிகளைக் குறிக்க, ஏற்- கெனவே உள்ள சொற்களை ஒட்டு மொத்தமாகப் பொருளின் விரிவுக்கு உட்படுத்தி, அப்பாச்சிப் பழங்குடியினர் பயன்படுத்துவதைக் காட்டுவார்.\n\nவகைப்பாட்டியல்\n\nஇனக்குழுவினரிடையே வழங்கப்பெறும் வகைப்பாட்டியல் (Taxonomy) அமைப்புகள் தொடர்பான செய்திகளைத் திரட்டவும், அவற்றை ஒப்பு நோக்கவும் உரிய கள ஆய்வு நெறிமுறைகளை வளர்ப்பதில் இப்பொழுது மானிடவியலாளர் முனைந்துள்ளனர். இந்த அணுகுமுறையே இனக்குழு அறிவியல் (Ethnoscience) எனப் பண்பாட்டு மானிடவியலாளரிடையே பெயர் பெறுகிறது. இத்துறையிலும் மொழியிலும் பண்பாட்டு ஆய்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்படுகின்றன. எப்பொழுது, எந்தச் சூழலில் பொதுச் சொற்களும் சிறப்புச் சொற்களும் வளர்ச்சியுறுகின்றன என ஆராய்வதும், பயன்தரு தாவரங்கள், விலங்குகளை வகைப்படுத்துதலில் நுண்ணிய சொற் பகுப்புகள் செய்யப்படுகின்றனவா? பயனில் தாவரங்கள், விலங்குகளில் இத்தகைய வேறுபாடுகள் உணரப்படுவதில்லையா? என ஆராய்வதே இனக்குழு மொழியியலுள் வகைப்பாட்டியலின் பரப்பாகும்.\n\nநிறச் சொற்கள்\n\nஒவ்வொரு பண்பாட்டிலும் நிறங்களை அடையாளம் காட்டுவதிலும், பெயரிடுவதிலும், வரையறை செய்வதிலும் மொழிகளுக்கிடையே தெளிவான வேறுபாடுகள் உள்ளன என்பது வெளிப்படை. நிறமாலையை (Colour Spectrum) உண்மையில் ஒரு தொடர்ச்சியாகக் கருதுவது கடினமானது எனினும், அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும், தொழில் சார்ந்த சமுதாயங்களின் பல்வேறு மொழிகளிலும் ‘நிறச் சொற்கள்’ நுண்மை மட்டத்திற்குப் படிமலர்ச்சியடைந்துள்ளன. அதாவது, பண்பாட்டுப் பொருள்களிலிருந்தும் சுற்றுச் சூழலைச் சார்ந்த ஏனைய நிறமிகளிலிருந்தும் (Pigments) நிறமாலையின் பிரிவுகள் அனைத்தும் நிறத்தைக் குறிக்கும் தனிச் சொற்களாகச் சுட்டப்படுகின்றன. இத்தகைய சொற்களே அடிப்படை நிறச் சொற்கள் (Basic Colour terms) எனப்படுகின்றன; என்றாலும், பொதுவாக உலக மொழிகளில் நிறச் சாயல்களைக் (Colour Shades) குறிக்கவும் சொற்கள் வழக்கில் உள்ளன. இவையே விளக்கச் சொற்கள் (Descriptors) அல்லது விளக்க நிலை நிறச் சொற்கள் (Descriptive Colour terms) எனப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் இந்த விளக்க நிலை நிறச் சொற்கள் மாறுபடுகின்றன.\n\nபெரும்பாலான மொழிகளில் தாவர உலகையே நிறச் சொற்கள் முதன்மையாகக் குறிக்கக் காணலாம். தமிழில் வழங்கும் மஞ்சள், பசுமை அல்லது பச்சை, பழுப்பு முதலிய நிறச் சொற்களை இதற்குச் சீரிய எடுத்துக் காட்டுகளாகக் காட்டலாம். வேறு சில மொழிகளில் உடற்கூற்றியல் சார்ந்தனவாக நிறச் சொற்கள் உணர்த்தப்படுகின்றன. சிவப்பு நிறம் பெரும்பாலும் இரத்தம் என்றே மிகுதியான மொழிகளில் குறிக்கப்படுகிறது. இன்னும் சில மொழிகளில் வெளிச்சமும் இருட்டும் நிறச் சொற்களின் சொற்கோவைக்கு ஊற்றாகின்றன.\n\nபெர்லின் என்பாரும் இரே என்பாரும் கூட்டாக நடத்திய ஆராய்ச்சியில், ஒரு மொழியின் வரலாற்றில் நுண்மை அல்லது அடிப்படை நிறப் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் அமைகின்றன என வெளிப்படுத்தினர்.\n\nஅவர்கள் கருத்துப்படி, (அ) அனைத்து மொழிகளும் கருப்பு வெள்ளை ஆகிய நிறங்களுக்குப் பெயர்களைக் கொண்டுள்ளன. (ஆ) ஒருமொழி மூன்று நிறப் பெயர்களைக் கொண்டிருப்பின் சிவப்பைக் குறிக்கும் ஒரு பெயர் மூன்றாவதாக இருக்கும். (இ) ஒரு மொழி நான்கு நிறப் பெயர்களைக் கொண்டிருப்பின் பச்சை அல்லது மஞ்சளைக் குறிக்கும் ஒரு பெயரை நான்காவதாகக் கொண்டிருக்கும். (ஈ) ஒரு மொழி ஐந்து நிறப் பெயர்களைக் கொண்டிருப்பின் பச்சை, மஞ்சள் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்களைக் கொண்டிருக்கும். (உ) ஒரு மொழி ஆறு நிறப் பெயர்களைக் கொண்டிருப்பின் நீலத்தைக் குறிக்கும் ஒரு பெயரை ஆறாவதாகக் கொண்டிருக்கும். (ஊ) ஒரு மொழி ஏழு நிறப் பெயர்களைக் கொண்டிருப்பின் பழுப்பைக் குறிக்கும் ஒரு பெயரை ஏழாவதாகக் கொண்டிருக்கும்.\n\nபெரும்பான்மைப் பழங்குடியினர் மொழிகளில் ‘இ’ நிலையும் இக்காலத் தொழில் மயமாக்கப்பட்ட சமுதாயங்களில் ‘ஊ’ நிலையும் காணப்படுவதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.\n\nசுற்றுச் சூழல் குறித்த சொற்கோவை\n\nஎப்பொழுதும் காணப்படக் கூடியதும் அனைவராலும் எப்பொழுதும் பேசப்படுவதற்குரியதுமான சுற்றுச் சூழல், தனது இயற்கைச் சுற்றுச் சூழலுடன் பின்னிப் பிணைந்து, ஒன்றையொன்று சார்ந்த உறவுநிலையை ஒவ்வொரு சமுதாயமும் கொண்டிருக்கக் காணலாம். இத்தகைய இன்றியமையா உறவுநிலையினின்றே சுற்றுச்சூழல் ஒரு வடிவு பெறுகிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான முழுமையான உறவின் அடிப்படையிலேயே சுற்றுச்சூழல் குறித்த சொற்கோவை உருவாக்கப் பெறுகிறது என்பதனால். எந்த ஒரு மொழியின் சுற்றுச்சூழல் குறித்த சொற்கோவை- யும் தக அமையும் தன்மையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.\n\nகுளிர் பகுதியில் வாழும் ஆங்கிலேயர் தம் மொழியில் பனி நிலையைக் குறிக்கச் சில சொற்களே காணப்பட, துருவப் பகுதியில் வாழும் எசுகிமோப் பழங்குடியினர் மொழியில் நூற்றுக்கணக்கான சொற்கள் காணப்படுதல் இதற்குச் சீரிய எடுத்துக்காட்டு, பனி நிலை எந்த வகையிலும் முதன்மையாக அமையாத பெரும்பாலான தென்னிந்திய மொழிகளில் பனி என்னும் ஒரே ஒரு சொல் அனைத்து நிலைகளையும் உணர்த்தக் காணலாம்.\n\nசிறப்புப் பெயர்கள்\n\nஉறவுமுறைப் பெயர்களுக்கு அடுத்து, பெயர்களின் (Personal Names) சொற்கோவை மொழியின் மற்றுமோர் உலகளாவிய பகுதியாக அமைகிறது. தனி மனிதரை இனங்கண்டு கொள்ளவும் வகைப்பாடு செய்யவும் இதுவே வழிகோலுகிறது. இந்நிலையில் சொற்கோவையின் சிறந்த வகை எனவும் இதைக் கூற வாய்ப்பு ஏற்படுகிறது.\n\nஒவ்வொரு சமுதாயத்திலும் சில குறிப்பிட்ட சிறப்புப் பெயர்களே பெயரிடுவதில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குச் சான்றாக, மிகக் குறைந்த எண்ணிக்கைப் பெயர்களிலிருந்தே தமக்குரிய பெயரை அமெரிக்கர் பெறுவதைக் கூறலாம். பொதுவாக, ஆடவர் பெயர்கள் பன்னிரண்டும் பெண்டிர் பெயர்கள் இருபதுமே கோடிக்கணக்கான அமெரிக்கரின் சிறப்புப் பெயர்களாக அமைகின்றன. இதனால், ஏறக்குறைய ஆறு மிலியன் ‘சான்’களும் (John's) நான்கு மிலியன் ‘மேரி’களும் (Mary) பெருத்த அளவில் ‘வில்லியம்சு’களும் (Williams) காணப்படுகின்றனர். பெரும்பாலான சமுதாயங்களில் சமய நம்பிக்கைகள் இத்தகைய நிலைக்கு முதற் காரணமாகின்றன.\n\nபெரும்பான்மைத் தொல்குடிச் சமுதாயங்களில் சிறப்புப் பெயர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையே உள்ளன. இப்பெயர்களே அடுத்தடுத்த பரம்பரையிலும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. மூதாதையரின் ஆவிகள் பேரப்பிள்ளைகளாக மறு பிறவி எடுக்கின்றன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்தம் சிறப்புப் பெயர்களே பேரப்பிள்ளைகளுக்கும் இடப்படுகின்றன. ஒரிசாவைச் சார்ந்த கொந்தர் (Khond) பழங்குடியினர் தம் குழந்தைகளுக்கு இறந்துபோன பெற்றோரின் பெயர்களுள் ஒன்றையே இடுவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், உறவுமுறை அமைப்பிலும் மூதாதையரின் உறவுமுறைப் பெயர்களே அவர்தம் பேரப்பிள்ளைகளுக்கும் அமைகின்றன.\n\nபிறந்த குழந்தைகள் நிலைக்காமல் இறந்து கொண்டேயிருந்தால் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு மண்ணாங்கட்டி, குப்பன், பிச்சை, மூக்கன், பண்டாரம் என்னும் இழிவான பெயர்களை இடுவதன் வாயிலாகக் குழந்தையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை தமிழ் நாட்டுப்புறச் சமுதாயங்களில் உள்ளது.\n\nமொழியையும் பண்பாட்டையும் உறவுபடுத்திப் பார்க்கும் இத்தகைய ஆராய்ச்சிகளிலேயே மானிடவியலாளர் பெரிதும் ஈடுபாடுற்றனர். பண்பாட்டு மானிடவியலாளர் களப் பணிக்கு ஏற்ற செய்முறைக் கருவியாகவும், பண்பாட்டாய்வில் ஆர்வத்தைத் தூண்டும் ஊற்றுக்களமாகவும் மொழியைக் கண்ணுற்றனர். இது போன்றே, பண்பாட்டுப் பின்னணியில் மொழியை ஆராய்தல் பொது மொழியியலில் ஆழத்தையும் பலவித ஆய்வுப் போக்குகளையும் அளித்துள்ளது மொழியியலாளரும் கண்டு கொண்டுள்ளனர். எனவே, இனக்குழு மொழியியல் ஆராய்ச்சிகள் மானிடவியல், மொழியியல் என்னும் இரு துறைகளுக்கும் பொதுவானவை என்பது பெறப்படும். சி.ம.\n\nதுணை நூல்கள்\n\nBoas, Franz, Race, Language and Culture, Free Press, New Work, 1940.\n\nHickerson, N.P., Linguistic Anthropology; Holt, Rinehort, New York, 1980.\n\nSapir, Edward, Language: An Introduction to the Study of Speech, Harcourt, Brace, New York, 1921.\n\nWhorf Benjamin L., The Relation of Habitual Thought and Behaviour to language, in L. Sapir et.al., Language, Culture and Personality, Wisconsin Banta, Menasha, 1941."}}