{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/knzpqpz5/", "data": {"id": "knzpqpz5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/knzpqpz5/", "kind": "article", "headword": "இளங்கோவேண்மாள்", "romanization": "iḷaṅkōvēṇmāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.971169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சேரமன்னன் செங்குட்டுவனின் மனைவி.", "body_ta": "சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சேரமன்னன் செங்குட்டுவனின் மனைவி. இவள் கோப்பெருந்தேவியாக விளங்கியவள். சேரன் செங்குட்டுவன் வஞ்சிமா நகரிலுள்ள இலவந்திகை வெள்ளிமாடத்தில் இளங்கோவேண்மாளோடு வதிந்தபோது, மலைவளம் காண விரும்பி அரண்மனைக் குழுவினரோடு பேரியாற்றங் கரையினை அடைந்தான். அப்போது குன்றக் குறவர்கள் காணிக்கைப் பொருளொடு வந்து கண்டு, கண்ணகி தன் கணவனுடன் வானகம் சென்ற காட்சியினைக் கூறக் கேட்டான். பாண்டிமாதேவி, கண்ணகி ஆகிய இரு பத்தினியருள் தம்மால் போற்றத்தக்கவர் யார் என்று செங்குட்டுவன் தன் மனைவி இளங்கோ வேண்மாளிடம் கேட்க, அவள் கருத்துப்படி, கண்ணகிக்குச் சிலையமைக்கக் கல் வேண்டி வடநாடு சென்றான்.\n\nஇளங்கோ வேண்மாள், இளங்கோ வேளிர் மரபினைச் சேர்ந்தவள் என்றும். இருக்குவேள், இளங்கோவேள் என்பன பிற்காலச் சோழர் காலத்தில் விளங்கிய கொடும்பாளூர்ச் சோழர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்கள் என்றும், அதனால் செங்குட்டுவன் மனைவியாகிய இளங்கோவேண்மாள், இவ்வேளிர் மரபினைச் சார்ந்தவளாதல் வேண்டும் என்றும் மு. இராகவையங்கார் கூறியுள்ளார்.\n\nஇவளைச் சிலப்பதிகாரம், இளங்கோவேண்மாள் என்றும், வதுவை வேண்மாள் மங்கல மடந்தை என்றும் குறிப்பிடுகிறது. மேலும், செங்குட்டுவன் வடநாடு சென்று எதிர்த்த மன்னர்களைப் போரில் வென்று, கண்ணகிக்குச் சிலை கொண்டு வஞ்சி நகரடைந்தபின், வஞ்சி மாநகர் அரண்மனை நிலா முற்றத்தில் செங்குட்டுவனும் இளங்கோவேண்மாளும் மணியரங்கில் இருந்து சாக்கைக் கூத்தினைக் கண்டுகளித்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது."}}