{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kjdntavz/", "data": {"id": "kjdntavz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kjdntavz/", "kind": "article", "headword": "உணர்வுசார் கற்றல்", "romanization": "uṇarvucār kaṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.365656+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உணர்வுகள், மதிப்புகள், மனப்பாங்குகள் ஆகியவற்றின் மாறுதல்களையொட்டித் தோன்றும் நடக்கை, திறன், துலக்கம் போன்றவற்றை மாற்றம் அடையச் செய்யும் கல்வி முறையே உணர்வுசார் கற்றல் எனச் சொல்லப்படுகிறது.", "body_ta": "உணர்வுகள், மதிப்புகள், மனப்பாங்குகள் ஆகியவற்றின் மாறுதல்களையொட்டித் தோன்றும் நடக்கை, திறன், துலக்கம் போன்றவற்றை மாற்றம் அடையச் செய்யும் கல்வி முறையே உணர்வுசார் கற்றல் எனச் சொல்லப்படுகிறது. இவ்வகைக் கற்றல் முறை, வயதுவந்தோர் கல்வியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\n\nகிரத்வால் (Krathwohl, 1964) என்னும் அறிஞர் உணர்வுப் பகுதியானது (Affective domain) விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுதல், ஆர்வத்தோடு பங்கு பெறுதல், மனப்பாங்குகளை மதித்துப் பண்படுத்துதல், பொறுப்பேற்றல், மதிப்புக் கோலங்களை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற அடிப்படை அனுபவங்களையும், மதிப்புகளின் எடுத்துக்காட்டாக இருத்தல், அவற்றையொட்டி வாழ்ந்துகாட்டுதல் போன்ற உயர் அனுபவங்களையும் கொண்டது எனக் கூறுகிறார்.\n\nஉணர்வுசார் கற்றல் என்பது வளர்ச்சியடைந்த மனிதனின் உணர்ச்சி, கிளர்ச்சி, அன்பு, பயம், காதல், இரக்கம், கோபம், எழுச்சி போன்ற பல்வகை அனுபவங்களைக் குறிப்பது எனக் கிது (Kidd, 1973) என்னும் அறிஞர் கூறுகிறார். தன் உணர்வுகளை உணர்ந்து அவற்றோடியைந்து வாழ்க்கையில் மிகுந்த மனநிறைவு கொள்வது உணர்வுசார் கற்றலை வெளிப்படுத்தும். மன உளைச்சலை உதறித் தள்ள முனைவதும் பிறர்மேல் அன்பு காட்டுவதும், பிறர் அன்பு காட்டத் தகுந்தவராவதும் உணர்வுசார் கற்றல் நடைபெற்ற தன்மையினைக் காட்டும்.\n\nஇலாசுகர் (Lasker, 1980) என்பார் கற்றல் முறையை நடத்தைக் கொள்கை, அறிவுக் கொள்கை, மனிதவியல்புக் கொள்கை என்ற மூவகைகளில் பிரிக்கிறார். உணர்வுசார் கற்றல் மனிதவியல்புக் கொள்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். மனிதவியல்புக் கொள்கை, கல்வி கற்றலின் நோக்கம் முழுமையான மனிதனாவதும் மனிதநேயமுடையவனாவதும் ஆம் எனக் கூறும்.\n\nகுடும்பவாழ்வு, தொழில் வாழ்வு, பண்பாட்டு அரசியல், பொருளாதார வாழ்வு, சொந்த (தனியார்) வளர்ச்சி, வாழ்நாள் கற்றல் ஆகிய ஐந்து பகுதிகளில் வயதுவந்தோர் (Adults) உணர்வுசார் கற்றல் பண்பினைப் பெறுவதன் மூலம், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தம்மைத் தகவமைத்துக் கொள்ள இயலும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று. குடும்ப வாழ்க்கையில், உணர்வுசார் கற்றல் என்பதில் ஆண்–பெண் உறவுமுறை பற்றி அறிந்திருத்தல், குடும்பநலம் (Birth Control) பற்றி நல்ல மனப்பாங்கும் உணர்வும் கொண்டிருத்தல், குழந்தை நலம் பேணுதல், ஊட்டச்சத்துணவு பற்றிய கருத்துகளை வளர்த்தல், பெற்றோர் பங்கும் பணியும் அறிந்திருத்தல், திருமண உறவும் நெறியும் தெரிந்திருத்தல் போன்றவை யாவும் அடங்கும் என நாக்சு (Knox, 1977) என்னும் அறிஞர் கூறுவர்.\n\nஇதே போல், தொழில் வாழ்க்கையில் பணியளிப்போர், பணியாளர் உறவை வளப்படுத்துவது, தொழிலூக்கம் கொள்வது, பணிகுறித்த மனநிறைவு பெறுதல் போன்றவை உணர்வுசார் கற்றலில் அடங்கும். நேர்மையோடு நடத்தல், சட்டத்தை ஏற்று மதித்துப் பின்பற்றுதல், ஒழுக்க நெறிமுறையுடன் நடத்தல், இனம், பண்பாடு போன்ற வேறுபாடுகளை மதித்துப் போற்றுதல், சுற்றுப்புறச் சூழல் ஆபத்துகளை உணர்தல், மனித வாழ்வைப் பாதிக்கும் வகையில் எழக்கூடிய அரசியற் சிக்கல்களையும் வளர்ச்சியையும் உணர்தல் போன்றவையும் பண்பாட்டு, அரசியல், பொருளாதாரம் சார்ந்த உணர்வுசார் கற்றல் வகையில் அடங்கும் எனக் கிராசு (Cross, 1981) என்பார் மொழிவார்.\n\nதன்னைப் பற்றிய நேரான தற்கருத்தினை-வாழ்நாள் முழுவதும் வளர்த்துக்கொள்வதும், வாழ்நாள் முழுதும் கற்றுக் கொண்டேயிருப்பதற்கான அடிப்படைத்திறன், பொறுப்பு ஆகியன குறித்த மனப்பாங்கினை வளர்ப்பதுவும் உணர்வுசார் கற்றலின் தலையாய பங்காகும் என நோவலசு (Knowles, 1975) கூறுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, உணர்வுசார் கற்றல் பண்புகளைப் பிறரது அல்லது ஆசிரியரின் கண்காணிப்பில் வளர்த்துக் கொள்வதை விட, தாமே மாணவர்கள் முயன்று கற்று வளர்த்துக் என்ற கொள்வது வாழ்நாள் முழுவதும் கற்றல் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கும்.\n\nதுணை நூல்கள்\n\nKidd, J.R., How Adults Learn, Association Press, New York, 1973.\n\nKnowles, M.S., Self-directed Learning: A Guide for Learners and Teachers, Follett, Chicago, Illinois, 1975.\n\nKrathwohl, D.R., Taxonomy of Educational Objectives: Affective Domain, Mekay, New York, 1964."}}