{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k4semgax/", "data": {"id": "k4semgax", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k4semgax/", "kind": "article", "headword": "ஈனயானம்", "romanization": "īṉayāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.675887+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஈனயானம் என்பது புத்தமதத்தின் ஒரு பிரிவு; மற்றொன்று மகாயானம்.", "body_ta": "ஈனயானம் என்பது புத்தமதத்தின் ஒரு பிரிவு; மற்றொன்று மகாயானம். இவையேயன்றி, வச்சிரயானம் (வைர நெறி) முதலிய பிற பிரிவுகளும் உள. ஆயினும், மேற்கூறிய இரண்டுமே புத்த சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.\n\nஇவற்றுள் ஈனயானம் (Hinayana) ஏறத்தாழ கிறித்து ஆண்டுத் தொடக்க காலம் வரை பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த சமய நெறியாகும்.\n\nஏறத்தாழ கி.மு. 486–இல் புத்தர் மறைந்தார். அப்போது இருபெரும் சீடர்களான உபாலி, ஆனந்தர் என்போர் அவர்தம் சமயக் கருத்துகளையும் போதனைகளையும் தொகுத்துப் பௌத்தர்களுக்கு எடுத்துரைத்தனர். இவர்களுள் முந்தியவர் ‘விநய பிடகம்’ (சமயநெறிமுறைகள்) என்பதையும், பிந்தியவர் ‘சுத்தபிடகம்’ (புத்தரின் சமயக் கூற்றுகள்) என்பதையும் தொகுத்தனர். அபிதம்மபிடகம் என்ற மற்றொன்றும் உண்டு. இவை மூன்றும் திரிபிடகம் எனப்படும். பிடகம் என்பதற்குக் ‘கூடை’ என்பது பொருள். புத்த சமயத்தின் நெறிகள் பண்டைக் காலத்தில் ஏட்டுச்சுவடிகளில் வரையப்பெற்று தனித்தனிக் கூடைகளில் சேமித்து வைக்கப்பட்டமையால் அவற்றிக்கு இப்பெயர் வரலாயிற்று.\n\nபுத்தர் மறைந்தவுடன் கூட்டப்பெற்ற ஒரு ‘புத்த சமயப் பேரவை’யில் (Buddhist Council) இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக அச்சமய மரபினர் கூறுவர். ஆயினும், ‘அப்பேரவை பற்றிய மரபுவழிச் செய்திகள் முற்றிலும் நம்பத்தகுந்தவை என்று கூற இயலாது’ என்பர் சில அறிஞர். அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கழித்து வைசாலி என்னுமிடத்தில் மற்றுமொரு பேரவை கூடியதாகத் தெரிகிறது. இப்பேரவையில் புத்தசமயக் கோட்பாட்டினர்களிடையே பிளவு தோன்றியது. இவ்வாறு இருவேறு சமயக் கருத்துகளைப் பரப்ப முன்வந்தவர்கள் தேரவாதிகள் என்றும், மகா சங்கிகர் என்றும் இருவகைப்படுவர். அவர்களுள் தேரவாதிகள் பெரியோர் போதனைகளைப் பின்பற்றுவோர். மகாசங்கிகள் மாபெரும் சங்கத்தின் உறுப்பினர்கள்.\n\nஅசோகர் காலத்தில் பாடலிபுத்திரத்தில் மூன்றாம் புத்த சமயப் பேரவை கூடிற்று. அதில் சமயக் கருத்து வேறுபாடுகள் தோன்றின. தேரவாதிகள் உண்மையான புத்த சமய மரபைப் போற்றியவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். மறுப்பாளர் புதுமை போற்றிகளாகக் கருதப்பட்டுச் சங்கத்தினின்றும் நீக்கப் பெற்றனர். இக்கூட்டத்தில் பாலி மொழியில் இயற்றப்பட்ட சம்பத் திருமுறைகளின் இறுதிப்பகுதியான ‘சுதாவத்து’ சேர்க்கப்பட்டது. இது அபிதம்ம பிடகத்தின் ஒரு பகுதி.\n\nபுத்தருடைய போதனைகளாக அவர் சீடர்களால் எடுத்துக் கூறப்பெற்றவையும், திரிபிடகங்கள், பாலி மொழி (புத்த சமய) இலக்கியங்கள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளவையும் ஈனயானச் சமயக் கோட்பாடுகளாகக் கருதப்பெறுபவை.\n\nபுத்தர் காலம் தொடங்கி வளர்ந்து வந்த இச்சமயக் கருத்துகளும் கோட்பாடுகளும் கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்தில் சில சிறப்பான மாறுதல்கள் அடையத் தொடங்கின. மேலை, நடு ஆசியப் பகுதிகளிலிருந்து வடமேற்கு இந்தியாவில் புகுந்த பல சமயப் பண்பாட்டுச் செல்வாக்குகளால் பாதிக்கப்பட்ட புத்தம் நாளடைவில் ஈனயான நிலையிலிருந்து மகாயான நிலைக்கு மாறலாயிற்று. புத்தரை ஒரு சமயப் போதகராகவும் நன்னெறி புகன்ற ஆசானாகவும் மட்டும் கருதாமல், ஏறத்தாழக் கடவுளுக்குச் சமமாகவே கருதும் நிலை உண்டானது. இம்மாறுதலுக்குப் புறத்தார் செல்வாக்கும், இந்திய பௌத்தர்களிடையே வரையப்பெற்றுத் நாளடைவில் தோன்றிய கருத்து வேறுபாடுகளுமே காரணம். இம்மாறுதல்கள் தோன்றியபின் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவிய புத்தம் மகாயானம் ஆகும். இப்பிரிவைச் சேர்ந்த புத்தசமய நூல்கள் வடமொழியிலும், ஈனயான இலக்கியங்கள் பாலி மொழியிலும் எழுதப்பெற்றன.\n\nஈனயானக் கருத்துகளைக் கூறும் சமய இலக்கியங்களையும் திருமுறைகளையும் சூத்திரங்களையும் தொகுத்துச் சிங்களப் பௌத்தர் முறைப்படுத்தினர். அவர்கள் இவற்றை கி.பி. முதல் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆண்ட வட்ட காமனி என்னும் மன்னர் காலத்தில் முறைப்படுத்தினர்.\n\nஈனயானச் சமய மரபு திரிபிடகங்களில் பெரும்பாலும் அடங்கும். விநயபிடகத்தில் புத்தர் ஆங்காங்குச் சொற்பொழிவுகளிலும் அறவுரைகளிலும் எடுத்துக் கூறிய பேருண்மைகள் கூறப்பட்டுள்ளன. முதல் புத்த சமயப் பேரவையில் ஆனந்தர் எடுத்துக் கூறிய சுத்தபிடகம் திரிபிடகங்களுள் சிறந்தது. அதுவே அளவிலும் பெரிது. அது ஐந்து பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ‘நிகாயம்’ எனப்படும். அவை திகநிகாயம், மச்சிம நிகாயம், சம்யுத்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குத்தக நிகாயம் என்பன. அவற்றுள் திக நிகாயம் புத்தர் ஆற்றிய நீண்ட சொற்பொழிவுகளையும் அவை எக்காலத்தில் எங்கு, எதற்காக ஆற்றப்பட்டன என்னும் விவரங்- களையும் எடுத்துரைக்கிறது. மச்சிம நிகாயம் என்பது போதுமான அளவினாலான அறவுரைச் சொற்பொழிவுகளின் தொகை. சம்யுத்த நிகாயமாவது சமயத் தொடர்புடைய பல செய்திகளைப் பற்றிப் புத்தர் சுருங்கக் கூறியுள்ள உரைநடைகளைத் தொகுத்துரைக்கிறது.\n\nஅங்குத்தர நிகாயம் என்பது ஏறத்தாழ 2000 சிறு போதனைகளை 11 அதிகாரங்களாகப் பிரித்துக் கூறுகிறது. அது நன்னெறியிற் செல்ல விழைவார் தவிர்க்க வேண்டியவற்றையும் மேற்கொள்ள வேண்டியவற்றையும் கூறுகிறது. குத்தக நிகாயம் செய்யுளும் உரைநடையுமாக உள்ள பல சிறு நூல்களைக் குறிக்கின்றது. அவற்றுள் சில பகுதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம் என்பது அறிஞர் சிலர் கருத்து, இப்பிரிவில் தம்மபாதம், தேரகாதா, தேரிகாதா, சாதகக் கதைகள் (Jataka Tales) என்பன அடங்கும். அவற்றுள் தம்மபாதம் என்பது அறம் கூறும் பாடல் தொகுதி. தேரகாதா, தேரிகாதா என்பவை புத்த சமயத் துறவிகளின் சமயப்பாடல்கள்; சாதகக் கதைகள் புத்தர் தாமே தம் முற்பிறப்புக் கதைகளை எடுத்துக் கூறியதாக அமைந்துள்ளவை. அவற்றிற்குப் யுத்தகோசர் என்னும் பேரறிஞர் உரை செய்துள்ளார். மூன்றாம் பிடகமான அபிதம்மபிடகம் புத்த சமயம் பற்றிய சில உணவியல் தத்துவங்களைக் கூறுகிறது. அது முன்பு கூறிய இருவகைப் பிடகங்களைவிடக் காலத்தாற்பிந்தியது. அவையேயன்றி, ஈனயானக் கருத்துகளையும் தத்துவங்களையும் கூறும் பிற நூல்களும் உண்டு. அவற்றுள் மிலாண்டரின் வினாக்கள் (Milinda Panha) என்பது முதன்மையானது. அந்நூலில் மிலாண்டர் என்னும் கிரேக்க–பாக்டீரிய மன்னனும் நாகசேனர் என்னும் பௌத்தத் துறவியும் நிகழ்த்திய உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிங்களத்தில் இயற்றப்பெற்ற தீபவம்சம், மகாவம்சம், குளவம்சம் என்பவையும் ஈனயானக் கருத்துகளை உடையவை.\n\nஈனயான பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கை இன்னா செய்யாமை (அகிம்சை). பிராமண சமயத்திலும் கிராம மக்களின் சிறு தெய்வவழிபாடுகளிலும் வன்முறையும் பலியிடுதலும் இடம்பெற்றிருந்தன. வேள்வியில் விலங்குகள் பலியிடப்பட்டன. புத்தர் இவ்வன்முறைகளை எதிர்த்து ‘அன்பின்பாற்பட்ட சமய’த்தை நிறுவினார். அவர் உளவியல் முறையில் மனித குலத்தின் சிக்கல்களை அணுகினார். ‘மனிதனின் துன்பங்கள் யாவற்றிற்கும் ஆசையே (காமம்) காரணம்; ஆசை வெகுளிக்கும், வெகுளி அறியாமையாகிய மயக்கத்திற்கும் காரணம்; எனவே, ஆசையை ஒழித்தால் துன்பங்கள் உருவாகா’ என்று அவர் அறிவுறுத்தினார். ஆசையாற் பிறக்கும் துன்பங்களே துக்கம் எனப்படும். வருத்தம், நோவு, போதாது என்னும் மனநிலை என்பன ஆசையை விட்டார்க்கு இல்லை. தனி மனிதனின் ஆர்வங்களே துக்கத்திற்குக் காரணமாதலின், தனி மனிதக் கோட்பாடு நீக்கப்படல் வேண்டும் என்பது புத்தரின் அறவுரை என்பர் சிலர்.\n\nபுத்தர் எண்வகை நன்னெறிகளைக் கூறினார். அவை, நேர்மையான தூய கருத்துகள், தீர்மானம், பேச்சு, நடத்தை, வாழ்க்கை, முயற்சி, ஞாபகம், உள்ளுதல் என்பன. துக்கத்திற்குக் காரணமான ஆசையை ஒழிக்காவிடில் மறுபிறப்பு உண்டாகும்; ஆசையை அறவே ஒழித்து நன்னெறிகளைக் கடைப்பிடித்தால் மறுபிறப்பு உண்டாகாது; வீடுபேறு எய்தும் என்பது ஈனயான புத்தத்தின் அடிப்படைக் கொள்கை.\n\nஇயலுலகு (பிரபஞ்சம்) துக்கம் நிறைந்தது; அழியும் தன்மை உடையது. மறுபிறப்பைப் புத்தம் உடன்பட்ட போதிலும், ஒரே உயிர் ஓருடலினின்றும் மற்றொன்றிற்குத் தாவுகிறது என்னும் கருத்தை அது ஏற்கவில்லை. இச்சமயம் வினைக் (கர்மா) கோட்பாட்டை ஏற்று, முற்பிறவியில் செய்யப்பட்ட வினைப் பயன்களே மறுபிறவியை உண்டாக்குகின்றன எனக் கூறுகிறது. ஆன்மா, கடவுள் என்னும் கருத்துகளை இது ஏற்றுக் கொள்ளவில்லை.\n\nஇச்சமயம் சிரீலங்கா, பர்மா, சயாம், கம்போடியா, சீனா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. ந.சு.\n\nதுணை நூல்கள்\n\nEliot, Sir, C., Hinduism and Buddhism, London, 1922.\n\nRhys Davids, T.W., Buddhism, Its History and Literature, London, 1926.\n\nThomas, E.J., History of Buddhist thought, London, 1933.\n\nKeith, A.B., Buddhist Philosophy in India and Ceylon, Oxford, 1923."}}