{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jxg34qyf/", "data": {"id": "jxg34qyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jxg34qyf/", "kind": "article", "headword": "இலா பூர்தோனே", "romanization": "ilā pūrtōṉē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.507809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலா பூர்தோனே என்பவர் பிரான்சு நாட்டின் கப்பற்படை அலுவலர்.", "body_ta": "இலா பூர்தோனே என்பவர் பிரான்சு நாட்டின் கப்பற்படை அலுவலர். இவர் பிரான்சில் செயிண்ட்டு மாலோ (St. Malo) என்னும் ஊரில் கி.பி. 1699–ஆம் ஆண்டு பிறந்தார். இலாபூர்தோனே (La Bourdonnais) பிரெஞ்சுக் கிழக்கிந்திய வாணிகக் குழுவில் ஊழியராகச் சேர்ந்தார். கி.பி. 1724–ஆம் ஆண்டளவில் தலைவராகப் (Captain) பதவியுயர்வு பெற்றார். இவர் கி.பி. 1726–இல் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த மாகியைக் (Mahe) கைப்பற்றினார். பின்னர்ச் சிறிதுகாலம் இவர் போர்ச்சுகீசியர்களுக்குப் பணியாற்றினார். இவர் கி.பி. 1735–இல் இல் டி பிரான்சு, இல் டி பூர்பன் என்னும் தீவுகளின் ஆளுநராகப் பதவியேற்றம் பெற்றார். இந்தியக் கடல்கள் பகுதியில் இருந்த பிரெஞ்சுக் கப்பற்படையின் தலைவராக இருந்தபோது கி.பி. 1741–இல் மாகியை முற்றுகையிலிருந்து விடுதலையடையச் செய்தார். இவர் கி.பி. 1745–இல் பிரெஞ்சுக் கவர்னர் தூப்ளேய்க்கு (Dupleix) உறுதுணையாக அமர்த்தப்பெற்றார். இத்தருணத்தில் புதுச்சேரியை ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டிருந்தனர். இவர் கி.பி. 1746–இல் சென்னையை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றினார். இதற்குப் பின்னர்த் தூப்ளேயுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இவர் சுமத்திராவுக்கு (Su Matra) அனுப்பப்பட்டார். தம்மிடம் எஞ்சியிருந்த படைவீரர்களுடன் மோரிசுத் தீவுக்குச் (Ile De France) சென்றபோது தமக்கு மாறாக வேறொருவரை ஆளுநராக தூப்ளே அமர்த்தியிருந்ததை அறிந்தார். இவர் கி.பி. 1748–இல் பிரான்சுக்குத் திரும்பினார். நிருவாகக் குறைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டுப் பாசுடைல் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். இரிச்சிலியூ (Riche-lieu), வால்டேர் (Voltaire) என்பவர்கள் இவர் குற்றமற்றவர் என மெய்ப்பித்தனராதலின் கி.பி. 1754–இல் விடுதலை செய்யப்பட்டார். இவருடைய விடுதலையைக் கேள்வியுற்ற பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதனிடையில் நோய்வாய்ப்பட்ட இவர் தம் சொத்துகளை இழந்தார். இவர் கி.பி. 1753–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10–ஆம் நாள் காலமானார். இவர் வாழ்க்கைக் குறிப்புகளை இவர் தம் பேரர் கி.பி. 1827–இல் தொகுத்து வெளியிட்டார்."}}