{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jtrx3kgq/", "data": {"id": "jtrx3kgq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jtrx3kgq/", "kind": "article", "headword": "இனக்குழுவியல்", "romanization": "iṉakkuḻuviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.500302+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இனக்குழுவியல் என்பது பண்பாட்டு மானிடவியலின் அடித்தளமாக அமைவது.", "body_ta": "இனக்குழுவியல் என்பது பண்பாட்டு மானிடவியலின் அடித்தளமாக அமைவது. இது ஓர் இனக்குழு அல்லது ஒரு சமூகத்தைப் பற்றிய விரிவான, முழுவதுமான அறிவினை எடுத்தியம்புகிறது. பழங்குடிச் சமூகம், கிராமச் சமூகம் முதலான சிறு சமூகங்களின் இடவியல்பு விளக்கம், மக்களின் உருவத் தோற்றம், வாழிட அமைப்பு, வாழ்க்கை முறை, பேசும் மொழி, சமூக அமைப்பு, பொருளாதாரம், சமயம், சட்டமுறைகள், தொழில் நுட்பம், கலை மற்றும் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, அப்பண்புகளை முறைப்படுத்தி இனக்குழுவியல் விளக்கும். ஒவ்வொரு சமூகத்தின் அக, புறப் பண்பாடுகளை அறிவியல் நோக்கில் இது ஆராயும். இது மானிடவியல் துறையின் துணைப் பகுதிகளுள் ஒன்று.\n\nஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய முற்படும் இனக்குழுவியலார் அப்பண்பாட்டின் உறுப்பினர்களுடன் பலகாலம் ஒன்றி வாழ்ந்து, அன்றாடச் சூழலில் அவர்கள் கையாளும் ஒவ்வொரு செயற்பாட்டினையும் அறிவியல் பின்னணியுடன் கூர்ந்து ஆராய்வர். இன்றைய சமூகத்தினரைப் போன்றே ஆதிக்குடிகளிடமும் பழங்குடிகளிடமும் பண்பாட்டின் கூறுகள் பல்வேறு முறைகளில் செயற்படுகின்றன. சான்றாக, உறவுமுறை அமைப்பு, திருமண முறை, பிழைப்புப் பொருளாதாரம், பங்கீட்டு முறை, சொத்துரிமை, சமயச் செயற்பாடுகள், கலைகள், தலைமையமைப்பு முறை போன்ற அனைத்துச் செயல்களிலும் அந்தந்தச் சமூகத்தினர் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், உணர்வுகள், மதிப்பீடு, உலகத்தின்பால் அவர்- கள் கொண்டுள்ள கருத்து ஆகியவற்றோடு, பண்பாட்டுக் கூறுகளனைத்தும் ஒன்றோடொன்று பெற்றுள்ள தொடர்பினையும் இத்தொடர்புகளின் செயல்முறைகளையும் இவர்கள் விரிவாக ஆராய்வர்.\n\nஇனக்குழுவியலின் வரலாறும் வளர்ச்சியும்\n\nஐரோப்பியர்கள் புதிய நிலப் பகுதிகளைக் கண்டறியக் கடல்வழிப் பயணங்களையும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டபொழுது தாம் சென்ற பகுதிகளில் பல்வேறு இன மக்களைக் கண்டனர். இவர்களின் பண்பாட்டுக் கோலங்களை ஐரோப்பியர்கள் கையெழுத்துப் படிகளில் எழுதி வைத்தனர். இவர்களில் இயற்கைவியலார், ஆட்சியாளர், பயணியர் போன்றோரின் குறிப்புகள் பல்வேறு அணுகு முறையில் காணப்பட்டாலும் இதன் வளர்ச்சியே இன்றைய இனக்குழுவியலுக்கு வித்திட்டது.\n\nகுடியேற்ற ஆதிக்க அரசுகள் கி.பி. 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டமையாலும், இயற்கையியலாரின் ஆய்வுகள் மிகுந்திருந்தமையாலும், சமயபோதனை அமைப்புகளின் வளர்ச்சி பரவியதாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிக்குடிச் சமூகங்களைப் பற்றிய விரிவான வாழ்க்கை முறைகளை எழுத முற்பட்டனர். பிகாபெட்டா (Pigafetta) என்பவர் கி.பி. 1525–இல் மேற்கொண்ட மெகல்லன் பயணத்தில் செபுவினரைப் (Cebus) பற்றி எழுதியதை முதன்மையாகக் குறிப்பிடலாம். இதன் பின்னர், அருங்காட்சியகவியலாரும் பல்வேறு பண்பாட்டு மக்களின் வாழ்க்கைமுறையைச் சித்திரிக்கும் பொருள்களையும் அம்மக்களைப் பற்றிய குறிப்புகளையும் எழுதத் தொடங்கினர். இக்கால கட்டத்தில்தான் இனக்குழுவியலின் உத்திகள் செம்மைப்படுத்தப்பட்டன. தகவலாளரைப் பயன்படுத்துதல், வினாப்பட்டியல் தயாரித்துக் களத்தில் குறிப்புகளைச் சேகரித்தல், குறுகிய காலக் களப்பணி மேற்கொள்ளுதல், மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துதல் போன்ற கள முறைகளைக் கையாளத் தொடங்கினர்.\n\nஇனக்குழுவியல் 1925-இல் நன்கு வளர்ச்சி பெற்றது. இக்காலத்தில் அமெரிக்க, ஆங்கிலேய, ஐரோப்பிய மானிடவியலார் இத்துறையின் அடிப்படையில் ஓர் அணுகுமுறையைக் கொண்டிருந்தும் தங்களுக்கென்று தனிப்பாதையை அமைத்துக்கொண்டனர். அமெரிக்க இனக்குழு ஒப்பாய்வியல் கழகம் (American Ethnological Society), அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History), அமெரிக்க மானிடவியல் சங்கம் (American Anthropological Association), இலண்டன் பொருளியல் பள்ளி (London School of Economics), பிரிட்டன் அயர்லாந்து நாடுகளின் அரசு மானிடவியல் நிறுவனம் (Royal Anthropological Institute of Great Britain and Ireland) போன்ற அமைப்புகள் இனக்குழுவியல், இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) துறைகளில் ஈடுபட்ட வல்லுநர்களால் நிறுவப்பட்டு, தொடக்க காலத்திலிருந்தே இயங்கி வருகின்றன.\n\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இனக்குழுவியலைப் பண்பாட்டு இலக்கணம் என, இப்பகுதியின் பரப்பையும் ஆழத்தினையும் அறுதியிட்டு, இதன் விரிவான ஆய்வுப் பகுதியையும் வகுத்தனர்.\n\nஓர் இனக்குழுவின் பண்பாட்டை விவரிக்கும் இனக்குழுவியல் பல கள உத்திகளைக் கொண்டிருக்கிறது. இனக்குழுவியலார் தாம் ஆராயவிருக்கும் சமூகத்துடன் ஒன்றாகக் கலந்து, அவர்களோடு பல காலம் வாழ்ந்து, தம் தகவலாளர்களுடன் நல்லுணர்வை வளர்த்துச் செயற்பட வேண்டியுள்ளதால், களப்பணியே இன்றியமையாததாகிறது. களப்பணியில் நேர்கண்டறிதல் (Participant observation), குடிவழிப்பட்டியல் (Genealogy), கருத்தறி பட்டியல் வினாப்பட்டியல், நேர்காணல், முன்னோடி ஆய்வு முதலான ஆய்வு நெறிகளைக் கையாளுகின்றனர்."}}