{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jmds93rw/", "data": {"id": "jmds93rw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jmds93rw/", "kind": "article", "headword": "இன்னம்பர்", "romanization": "iṉṉampar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.212932+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று, இன்னம்பூர் என இக்காலத்தில் வழங்கப் பெறும் இவ்வூர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது.", "body_ta": "சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று, இன்னம்பூர் என இக்காலத்தில் வழங்கப் பெறும் இவ்வூர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து வடக்காகச் சென்று இவ்வூரினை அடையலாம். இத்தலத்தின் அருகில் சிவக்கொழுந்து தேசிகர் ஊராகிய கொட்டையூர் உள்ளது. இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இறைவன் பெயர் எழுத்தறி நாதர். இவர் எழுத்தறி நாதேசுவரர் எனவும் தான்தோன்றீசர் எனவும் அழைக்கப்படுவார். இறைவி பெயர் கொந்தார் பூங்குழலியம்மை. திருநாவுக்கரார் இத்தல இறைவனை, ‘இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது அகத்தியர் வழிபட்ட தலம் எனக் கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனை வழிபட்ட செய்தியினைச் சேக்கிழார். ‘ஏரின்மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி’ என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்."}}