{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jk7nv5q5/", "data": {"id": "jk7nv5q5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jk7nv5q5/", "kind": "article", "headword": "சிறுநீரக மாற்றம்", "romanization": "ciṟunīraka māṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.428458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிறுநீரகம் பொருத்துதல், சிறுநீரகச் சவ்வூடு பிரிப்புக்கு (dialysis) முந்திய முறையாகும்.", "body_ta": "சிறுநீரகம் பொருத்துதல், சிறுநீரகச் சவ்வூடு பிரிப்புக்கு (dialysis) முந்திய முறையாகும். 1954இல் பாஸ்ட்டன் நகரில், முதன் முறையாகச் சீர் கெட்ட சிறுநீரகம் அகற்றப்பட்டு, நன்னிலை கொண்ட சிறுநீரகம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. முதன் முதலில் இரட்டையர்களே இதற்குத் தெரிந்தெடுக்கப்பட்டனர். தடுப்பு முறை மருத்துவம் பின்பற்றப்படவில்லை. 1960இல் அசோதயோபிரின் என்ற மருந்தும், ஸ்டீராய்டு மருந்தும் கையாளப்பட்டன. இன்றும் இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.\n\nசிறுநீரகம் பொருத்துவதில் உள்ள சிக்கல்கள். தடுப்பாற்றல் குறை நச்சுயிரிப் பாதிப்பு, பொருத்தப்பட்ட சிறுநீரகம் மறுதலிக்கப்படுதல், அறுவை நுணுக்க முறைகள், புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு, இதய நாள நோய் உண்டாகும் வாய்ப்பு என்பன.\n\nசிறுநீரகம் பொருத்துவதன் பயன்கள். சிறுநீரகப் பணிகள் சீராக நடைபெறுதல், நீண்ட கால வாழ்வு, மீண்டும் பழைய பணிக்குத் திரும்புதல், இயல்பான வாழ்வு நடத்துதல் என்பன பயன்களாகும்.\n\nசிறுநீரகச் சவ்வூடுமுறை பயனுள்ளதா அல்லது சிறுநீரகம் பொருத்துதல் பயனுள்ளதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும், சிறுநீரகச் சவ்வூடு முறையைக் கொண்ட நோயாளிகள் அனைவருக்கும் (புற்று, இதய நோயாளிகள் தவிர) இறுதியில் சிறுநீரகம் பொருத்தியே தீர வேண்டும் என்பதும், பெரும்பாலோரின் கருத்து. சிறுநீரகம் பொருத்தப்பட்ட நோயாளிகளை விடச் சவ்வூடு முறையை ஏற்ற நோயாளிகள் நீண்ட காலம் வாழ்வதாகத் தெரிகிறது.\n\nசிறுநீரகம் பொருத்தப்பட்ட நோயாளிகள், முழுமையாகத் தங்களின் முந்திய பணியில் ஈடுபடலாம். மேலும் சோகை ஆக்கச் சிதை மாற்ற எலும்பு நோய்கள், சிறுநீர்க் கோளாறுகள், புற நரம்பு அழற்சி, பால் உணர்ச்சி ஆகியவை நன்முறையில் இருக்கின்றன.\n\nநோயாளியின் பராமரிப்பு. சிறுநீரகம் இடுப்புக்கு மேலே பொருத்தப்படுகிறது. அதன் தமனியும், சிரையும் இலியாக் உட்குருதி நாளங்களுடன் இணைக்கப்படும். சிறுநீரகக் குழலும் சிறுநீர்ப் பையுடன் இணைக்கப்படுகிறது. தடுப்பு மருத்துவத்தில் (immuno suppressive) அசோதயோபிரினும், சைக்ளோஸ்போரினும், ஸ்டீராய்டுகளும் அடங்கும். 3—6 மாதங்களில் ஸ்டீராய்டின் அலகு குறைக்கப்படுகிறது. குருதி மிகு அழுத்தம், நுண்ணுயிர்ப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வரையில், பொருத்தப்பட்ட சிறுநீரகம் சீராகவே இயங்கும். மொத்தத்தில், இறந்தவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நோயாளியை விட, உயிரிருள்ளவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நோயாளிகள் 2—3 ஆண்டுகள் மேலும் உயிருடன் உள்ளமை தெரிகிறது. அண்மைக் காலமாக O.K. T.3 என்ற மருந்து, பொருத்தப்பட்ட சிறுநீரகம் மறுதலிக்கப்படுவதைத் தடுப்பதில் துணை புரிகிறது.\n\nHLA (Human Leucocyte Antigen = மனித வெள்ளணு எதிர் அங்க ஊக்கி) மரபு நுட்ப அணுமுறையைத் தெரிந்து கொண்டால், பொருத்தப்பட்ட சிறுநீரகம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பொருத்தப்பட்ட சிறுநீரகம் மறுதலிக்கப்படுவது நான்கு வகையாக இருக்கும். உடனடியான தீவிர மறுதலிப்பு. இங்கு, சிறுநீரகம் பெறுபவரின் குருதியில் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர் அங்கம், சிறுநீரக நுண் தமனியைத் தாக்குகிறது.\n\nதுரிதமான மறுதலிப்பு. சிறுநீரகம் அளிப்பவரின் எதிர் அங்க ஊக்கிக்கு எதிரான எதிர் அங்கம் மிகவும் குறைந்த அளவில் இருப்பதால், மறுதலிப்பும் விரைவாக நடைபெறுகிறது.\n\nதீவிர மறுதலிப்பு. தடுப்பாற்றல் மண்டலம் விரைவாக அயல் பொருளை மறுதலித்து விடுகிறது. இதுவே பெரும்பாலும் நிகழும் மறுதலிப்பாகும்.\n\nநாட்பட்ட மறுதலிப்பு. குருதி நாள உள்அணி சேதமடைவதால் நிகழ்கிறது.\n\nசெய்முறை. சிறுநீரகத் தானம் செய்பவரின் சிறுநீரகம், அறுவை மூலம் அகற்றப்படுகிறது. மேலும், தமனியும், சிரையும் அகற்றப்படுகின்றன. இறந்தவரின் சிறுநீரக அகற்றலில், இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்படுகின்றன. இத்துடன் பெருந்தமனியும், பெருஞ்சிரையும் அகற்றப்பட வேண்டும். இறந்த 100 நிமிடங்களுக்குள் சிறுநீரகங்கள் அகற்றப் பட வேண்டும். பின்னர் சிறுநீரகங்களை 8—12°C க்குக் குளிர வைக்க வேண்டும். இந்த அகற்றும் அறுவை நடந்து கொண்டிருக்கும் போதே, பெறுபவரை உணர்வு நீக்கி, ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். சிறுநீரகத் தமனியை உள் இலியாக் தமனியுடன் இணைக்க வேண்டும். —சாரதா கதிரேசன் நூலோதி. A.J. Harding Rain, Bailey and Love's Short Practise of Surgery, Seventeenth Edition, E.L.B.S, London, 1979."}}