{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jfdxh76j/", "data": {"id": "jfdxh76j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jfdxh76j/", "kind": "article", "headword": "உக்கிரன்கோட்டை", "romanization": "ukkiraṉkōṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.750602+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பாண்டிய நாட்டிலுள்ள நகரம்.", "body_ta": "பாண்டிய நாட்டிலுள்ள நகரம். முற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் உக்கிரன் கோட்டை அரசியல், சமூக, பொருளாதார முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது கரகிரிகளந்தை, கரவந்தபுரம், களக்காடு முதலான பெயர்களாலும் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றது. திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கரவந்தபுரம் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டுச் சிறந்த பாளையமாக (படைவீடு) விளங்கியது.\n\nஉக்கிரன் என்னும் பெயர்கொண்ட புரட்சித் தலைவன் இதனைத் தனது தலைமையிடமாகக் கொண்டிருந்ததால் இது உக்கிரன்கோட்டை எனச் சொல்லப்பட்டது. இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உக்கிரன் என்னும் புரட்சித் தலைவன் உக்கிரன் கோட்டைப் பகுதியில் பாண்டியர்க்கு எதிராகப் புரட்சிக்கொடி உயர்த்தினான் என்பதனையும் இராசசிம்மன் அவனை வென்று அடக்கினான் என்பதனையும் கல்வெட்டுகளால் அறியலாம். முதலாம் வரகுணன் ஆய்வேளிரை அடக்குவதற்கு உக்கிரன் கோட்டையில் கோட்டை கட்டி, அங்குப் பெரும் காவற் படையும் அமைத்திருந்தான்.\n\nஅரசியல் அதிகாரிகளின் பிறப்பிடம்\n\nஇங்குப் புகழ்பெற்ற அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றியுள்ளனர். நெடுஞ்சடையன் பராந்தகனின் ஆட்சிக்காலத்தில் மாறன் காரி என்பான் முதலமைச்சராகவும் (உத்தர மந்திரி) ஆணத்தியாகவும் பணிபுரிந்தான். இவன் மூவேந்த மங்கலப்பேர- ரையன், வைத்திய சிகாமணி, மதுரகவி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றான்; ஆனைமலையில் நரசிம்மனுக்குக் குடைவரை ஒன்றினைக் குடைவித்தான்.\n\nமாறன் காரியின் தம்பியான மாறன் எயினன் தன் அண்ணனின் இறப்பிற்குப்பின் பாண்டியனின் முதலமைச்சர் பதவியை ஏற்றான். இவனுக்குப் பாண்டிமங்கல விசயரையன் என்னும் பட்டம் பாண்டியனால் வழங்கப்பட்டது. சாத்தன் கணபதி என்னும் கரவந்தபுரத்தினன் அடுத்துப் பாண்டியர் படையின் தலைமைப் படைத்தலைவனாகப் பணிபுரிந்தான். இவன் மகாசாமந்தன். இவனுக்குப் பாண்டி அமிர்தமங்கலப் பேரரையன் என்னும் சிறப்புப்பெயர் பாண்டிய வேந்தனால் வழங்கப்பட்டது. இவன் திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலுக்குப் பல அறக்கொடைகள் வழங்கினான். இவன் மனைவி அரக்கன் கொற்றி இக்குடைவரையில் சேட்டாதேவிக்கும் துர்க்கைக்கும் கோவில்கள் எடுத்துப் புகழ்பெற்றாள்.\n\nசாத்தன் கணபதியின் தம்பியான ஏனாதிசாத்தனும் பாண்டியர் படையில் அதிகாரியாகப் பணிபுரிந்தான். பெரும் தமிழ்க் கவிஞனாகிய இவனே வேள்விக்குடிச் செப்பேட்டின் பாக்களை இயற்றியவன். இவர்கள் அனைவரும் கரவந்தபுரம் வைத்திய குலத்தைச் சேர்ந்தவர்களே.\n\nதீரதிரன் மூர்த்தி எயினன் என்பவன் கரவந்தபுரம் வைத்திய குலத்தைச் சார்ந்த மற்றுமொரு முதன்மைப் படையதிகாரி. இவன் நெடுஞ்சடையன் பராந்தகனின் மகாசாமந்தன், இவன் வீரமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் பெற்றான்.\n\nபாண்டியர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் சோழர் காலத்திலும் சிறப்புப் பெற்று விளங்கியது என்பதனைச் சோழர் கல்வெட்டுகளாலும் அறியலாம்.\n\nஅண்மைக் காலத்தில் மத்தியத் தொல்பொருள் துறையினர் உக்கிரன் கோட்டையில் அகழ்வாய்வினை மேற்கொண்டனர். இதில் பல கட்டடங்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை ஏறத்தாழ 52.6 எக்டேர் பரப்பளவு கொண்டதாக விளங்கியது என அகழாய்வு தெரிவிக்கிறது.\n\nகோயில்கள்\n\nஉக்கிரன் கோட்டையில் பெருங் கோட்டை மட்டுமன்றி, பல கோயில்கள் இருந்ததற்கான தடயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இங்குச் சூரியன் கோயில் (ஆதித்தியபட்டாரர் கோயில்), சொக்கலிங்கேசுவரர் கோயில், வடவாயில் அமர்ந்தாள் கோயில், விட்டுணுகோயில் முதலான கோயில்கள் இருந்தன. இன்றும் இங்குச் சொக்க நாயகி கோயிற் பகுதிகளில் சப்தமாதர், விட்டுணு (நின்றநிலை), பைரவர், காளி முதலான சிலைகள் அழகாகக் காட்சி தருகின்றன.\n\nகரவந்தபுரத்தில் வணிகர்குடியிருப்பும் பார்ப்பனர் குடியிருப்பும் இருந்தன. இதனால், இந்நகர் பண்டு பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தமை புலனாகும்.\n\nபராந்தக வீர நாராயணன் தளவாய்புரச் செப்பேட்டைக் கரவந்தபுரத்தில் தங்கியிருந்தபோது வெளியிட்டான் என்பது அச்செப்பீட்டின்வழி அறியப்படுகிறது. உக்கிரன்கோட்டை பெருமை சான்ற பல அரசியல் தலைவர்களின் பிறப்பிடமாதலாலும் சிறந்த கோட்டையுடன் கூடிய நகரமாதலாலும் பாண்டியர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது."}}