{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jf83wckj/", "data": {"id": "jf83wckj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jf83wckj/", "kind": "article", "headword": "உணர்வுசார் ஆசிரியர் கல்வி", "romanization": "uṇarvucār āciriyar kalvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.352623+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசிரியர் அறிவு, ஆசிரியர் திறன்கள், ஆசிரியர் உணர்வு ஆகிய மூன்று பண்புகளும் பொதுவாக ஆசிரியர் கல்விப் பயிற்சியில் வலியுறுத்தப்படுகின்றன.", "body_ta": "ஆசிரியர் அறிவு, ஆசிரியர் திறன்கள், ஆசிரியர் உணர்வு ஆகிய மூன்று பண்புகளும் பொதுவாக ஆசிரியர் கல்விப் பயிற்சியில் வலியுறுத்தப்படுகின்றன. உணர்வுசார் ஆசிரியர் கல்வி (Affective Teacher Education) என்பது ஆசிரியரின் உணர்வுகள், விழிப்புணர்ச்சி (Teacher Feelings and Self-awareness) ஆகியவற்றை வளர்த்திடும் வகையில் அமையும் கல்விப் பயிற்சி எனச் சொல்லப்படுகின்றது. கர்க்குபு (Carkhuff, 1982) என்னும் கல்வியாளர் உணர்வுசார் ஆசிரியர் கல்வியினை, ஆசிரியர் – மாணவர் உறவில் நல்ல மதிப்புகளையும் மனப்பாங்குகளையும் வளர்க்கும் பயிற்சியாகக் கருதுகிறார். மேலும், உணர்வுசார் ஆசிரியர் கல்விப் பயிற்சியில், மனித உறவுகளை வளர்த்திட உதவும் உணர்வுகளும் திறன்களும் ஆசிரியரிடையே வளர்ச்சியுறுவனவாக அவர் கருதுகிறார்.\n\nஉணர்வுசார் ஆசிரியர் கல்வி பற்றிப் புகழ்ந்து பேசும் கல்வியாளர்கள், இன்றைய ஆசிரியர் கல்வியானது, கற்பித்தல் அறிவையும் திறனையும் மட்டும் வளர்ப்பதாக உள்ளது எனக் குறை கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, செயல்வழி ஆசிரியர் கல்வி (Performance-based Teacher Education), திறமைசார் ஆசிரியர் கல்வி (Competency-based Teacher education) போன்ற புதிய ஆசிரியர் பயிற்சி முறைகள், கற்பித்தல் திறன்களுக்கு முதன்மையிடம் தந்து, மனித உறவுத் தொடர்பான உணர்வுப் பகுதியினை ஒதுக்கிவிட்டன என்பது அவர்களின் குற்றச்சாட்டு.\n\nமெனர்ட்டு (Mehnart, 1979) என்பவர், இன்றைய ஆசிரியர் கல்வியின் குறைபாட்டால், மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை ஆசிரியர்கள் அறிய இயலாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சியோடு ஒன்றாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சித் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கல்வி உத்திகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் உள்ளனரெனக் கூறுகிறார். முரே (Murray, 1979) என்பவர், ‘ஆசிரியர், கற்பித்தல் திறன்களைப் பெற்றிருப்பதோடு, மனித உறவுகளைப் பலப்படுத்தும் திறன்களைக் கொண்டவராகவும் தன்னையும் பிறரையும் அறியும் உணர்வுத் திறன் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்’ எனக் கூறுகிறார்.\n\nஉணர்வுசார் ஆசிரியர் கல்வியின்படி, கற்பித்தல் என்பது ஆசிரியர், மாணவர் என்ற இரண்டு ஆளுமைகளுக்கு (Personality) இடையே நிகழும் ஒரு நிகழ்ச்சி; இதில் ஆசிரியர் உயர்ந்தவர் என்றோ மாணவர் தாழ்ந்தவர் என்றோ எண்ண இடமில்லை. உயர்ந்த அனுபவமுள்ளவரின் வழிகாட்டலாக ஆசிரியர் செயல் மாணவர்களுக்கு அமைகிறது. மாணவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளுதல், வகுப்பறையில் மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுக் காரணத்தைக் கண்டறிதல், அவ்வுணர்ச்சிகளுக்கு ஏற்றவகையில் கற்பித்தல், உத்திகள் அமைத்தல், மாணவர்களின் உணர்ச்சி உந்துதல்களையொட்டிப் பாடத்திட்டம் அமைத்தல் – போன்றவற்றில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதே உணர்வுசார் ஆசிரியர் கல்வியின் அடிப்படை நோக்கங்கள் என பிரவுன் (Brown, 1975) குறிப்பிடுகிறார். இக்குறிக்கோள்களை அடையும் வகையில், ‘நடைமுறைச் செயற்’ பகுப்பாய்வு (Transactional Analysis), தனியாள் வளர்ச்சித் திட்டம் (Personal Development Programme), உணர்வுசார் கல்வி வளர்ச்சித் திட்டம் (Affective Education Development Programme), ஆசிரியர் திறப் பயிற்சித் திட்டம் (Teacher Effectiveness Training Programme), மனித ஆற்றல் வளர்ச்சி மாதிரி (Human Resources Development Model), செய்தித் தொடர்பு முறைத் திட்டம் (Communication Network Programme) ஆகிய கல்விப் பயிற்சி முறைகள் உணர்வுசார் ஆசிரியர் கல்வியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பங்கேற்பு (Role–play), கற்பனை அனுபவம், போலி நிலை (Simulation) போன்ற உத்திகளும் இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஅசுபி, உரோபக்கு (Aspy and Roebuck, 1982) ஆகியோரது ஆராய்ச்சியின் முடிவின்படி, மனித உறவுத் தொடர்பான உணர்ச்சிப் பாங்கினை ஆசிரியர்கள் பயிற்சியின் வழியாக உயர்த்திக் கொள்ள இயலும் என்பது புலனாகிறது. மேலும், இவர்களின் மற்றோர் ஆய்வு முடிவின் படி, உயர்ந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்கள் குறைந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்களை நோக்க மிகக் குறைந்த அளவே சிக்கல்களையும் இடையூறுகளையும் வகுப்பறையில் ஏற்படுத்தினார்கள் என்பது தெரிய வருகிறது. உயர்ந்த உணர்ச்சித் திறம் பெற்ற ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி, மனப்பாங்கு, வருகைப்பதிவு, தன்னோக்குக் கருத்து (Self-concept), நடத்தை (Behaviour) ஆகியவற்றில் சிறந்திருந்தனர் என்பதையும் அவர்களது, ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.\n\nமனித உறவுகள் தொடர்பான திறன்களை (Interpersonal Skills) ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்க இயலும் என்பது பலருடைய ஆராய்ச்சி முடிவில் கண்ட உண்மை. ஆயினும், இன்று பொதுவாக ஆசிரியர் கல்வியில் அறிவுப் பகுதி வளர்ச்சிக்கு (cognitive domain development) மட்டுமே மிகுந்த முதலிடம் தரப்படுகிறது. வருங்கால ஆசிரியர் கல்வியில் உணர்ச்சிப் பகுதி வளர்ச்சிக்கும் (Affective domain development) பயிற்சி தருவதன் மூலம், அப்பயிற்சியினை முழுமையுடையதாக்குவது அவசியமாகும்.\n\nதுணை நூல்\n\nGordon, I., Teacher Effectiveness Training, Wyden Newyork, 1974."}}