{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jem8tj5b/", "data": {"id": "jem8tj5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jem8tj5b/", "kind": "article", "headword": "இல்பரி துருக்கர்", "romanization": "ilpari turukkar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.346392+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "துருக்கிசுத்தானில் (Turkestan) வாழும் புகழ்மிக்க மரபினருள் ஓரினத்தவர்.", "body_ta": "துருக்கிசுத்தானில் (Turkestan) வாழும் புகழ்மிக்க மரபினருள் ஓரினத்தவர். தில்லி சுல்தானிய வமிசங்களுள் ஒன்றான அடிமை வமிசத்தைச் சார்ந்த பால்பன் இல்பரி துருக்கிய (Ilbari Turk) இனத்தைச் சார்ந்தவர். இல்வரி துருக்கர் இந்தியாவை ஏறத்தாழ எண்பதாண்டுகள் (கி.பி. 1206–1290) ஆண்டனர். எனினும் அவர்தம் ஆட்சியின்போது தில்லி அரசு ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் குழுவாகத் திகழவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை ஆண்ட இல்பரி துருக்கியச் சுல்தான்களின் ஆட்சி ஆக்ரா, அயோத்தி, பீகார், குவாலியர், சிந்து, மத்திய இந்தியாவில் சிலபகுதிகள், இராசபுதனம் போன்ற பகுதிகளில் மட்டுமே பரவியிருந்தது. வங்காளமும் இவர்களுடைய ஆட்சிக்குட்பட்டதாயினும். அதனை ஆண்ட ஆளுநர்கள் பெரும்பாலும் சுதந்திர அரசர்கள் போன்றே செயற்பட்டார்கள். பஞ்சாபிலும் இவர்களுடைய ஆட்சியை மங்கோலியர்கள் தாக்கும் அச்சநிலை நிலவியிருந்தது. தில்லியைச் சுற்றிக் கொடுக்கப்பட்டிருந்த மானிய நிலங்களில் இல்பரி துருக்கியரின் இசுலாமியச் செல்வாக்கு ஓங்கியிருந்தாலும், உள்ளூர்க் குறுநில மன்னர்கள் பலர் சுதந்திரமானவர்களாக இருந்தனர். இவர்களின் ஆட்சியால் ஒரு சிறிதும் பாதிக்காத குடிமக்கள் மத்திய அரசின் அதிகாரத்தை எப்போதும் எதிர்க்கத் தலைப்பட்டனர். இல்பரி துருக்கிய மன்னர்களும் வலுவான ஆட்சியை நிலைநாட்டக் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டார்கள்.\n\nஇல்பரி துருக்கர் மரபில் வந்த அரசர்களுள் பால்பன் போன்றவர்கள் ஒழுக்கம் மிக்கவர்கள். தம்மை எதிர்த்த குறுநில மன்னர்களை இவர்கள் ஒறுத்து அடக்க முயற்சி செய்தாலும், தமக்கு அடங்கிப் போனவர்களை இல்பரி துருக்கிய அரசர்கள் இராணுவப் பணியிலும் உள்நாட்டுப் பதவிகளிலும் அமர்த்தினார்கள். இவர்கள் ஆட்சி நேர்மையானதாகவும், மனிதத் தன்மையை மதிப்பதாகவும் இருந்தது என்பது வரலாற்றாசிரியர்கள் கருத்து."}}