{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jd4e6k7s/", "data": {"id": "jd4e6k7s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jd4e6k7s/", "kind": "article", "headword": "பசுமைப் புரட்சி", "romanization": "pacumaip puraṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.946136+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றத்தைப் பசுமைப் புரட்சி (Green revolution) எனலாம்.", "body_ta": "வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றத்தைப் பசுமைப் புரட்சி (Green revolution) எனலாம். பசுமைப் புரட்சி கி.மு. 7000ஆம் ஆண்டிலேயே இஸ்ரேலிலும், மெசபடோமியாவை ஒட்டிய மேற்காசியப் பகுதியிலும் தோன்றியது. இப்பகுதியே, உழவுத் தொழிலின் பிறப்பிடம் எனலாம். இங்கு முதன்முதலாகக் கோதுமை, பார்லி போன்றவற்றை உணவுக்காகப் பயிரிடத் தொடங்கினர். இத்துடன் கால் நடை வளர்ப்பும் தொடங்கியது. இப்புரட்சி எகிப்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், வட இந்தியப் பகுதிகளான சிந்து, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களுக்கும் பரவியது. கி.மு. 2500இல் இப்பகுதியில் கோதுமை, பார்லி போன்ற பயிர்களை வளர்க்கத் தொடங்கினர்.\n\nகி.மு. 1000ஆம் ஆண்டில், வேளாண்மையில் இரும்பு பொருத்திய கலப்பைகளைப் பயன் படுத்தத் தொடங்கி, நாளடைவில் காடுகள் கழனிகளாக்கப் பட்டன. இயற்கை எருவின் சிறப்பினை அறிந்து, அதனைப் பயன் படுத்த முற்பட்டனர். உலக அளவில் ரோமானியர்களே, வேளாண்மைக்கு அடிப்படை அமைத்தவர்கள் எனலாம். தொடக்கத்தில் ஒரு தானியத்தைப் பயிர் செய்த பிறகு, நிலங்களைத் தரிசாகவே விட்டுக் கால்நடைகளை மேய்க்கத் தலைப் பட்டனர். ரோமானியர்கள் அவரை, பட்டாணி, லூபின், குதிரை மசால் போன்ற பயிர் வகைகளைப் பயிரிட முயன்று, பயிர்ச் சுழற்சி முறையையும் உருவாக்கினர்.\n\n17ஆம் நூற்றாண்டில் வேளாண்மைப் புரட்சி இங்கிலாந்திலும் தோன்றியது. அறிவியல் அடிப்படையிலான பயிர்ச் சுழற்சி முறையும், புதிய கருவிகளை வேளாண்மை வளத்துக்குப் பயன்படுத்தும் முறையும் பின்பற்றப் பட்டன. 18ஆம் நூற்றாண்டின் இடையில் விதைப்புக் கருவி, அறுவடைக் கருவி போன்றவை கண்டு பிடிக்கப் பட்டன. பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில், வேளாண்மைப் பொருள்களுக்கு ஏற்பட்ட விலையேற்றத்தால், வேளாண்மை பெரிதும் ஊக்குவிக்கப் பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இடையில் ஏற்படுத்தப் பட்ட வேளாண்மைக் கல்லூரிகள், அமெரிக்காவில் வேளாண்மைப் புரட்சி தோன்றக் காரணமாயின. இந்நூற்றாண்டின் இறுதியில், வேளாண்மையில் டிராக்டர் அறிமுகப் படுத்தப் பட்டது. 20ஆம் நூற்றாண்டில், செயற்கை உரங்களைப் பயன் படுத்தல், டி.டி.டீ எனும் பூச்சிக் கொல்லியின் கண்டு பிடிப்பு ஆகியவை வேளாண்மை உற்பத்தியில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்தன.\n\nஇந்தியப் பசுமைப் புரட்சியின் தொடக்கமாக, 1969ஆம் ஆண்டில் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில், கோதுமை உற்பத்தியில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றத்தைக் கூறலாம். பசுமைப் புரட்சிக்கான காரணங்களை ஆராய்ந் தால், வேளாண்மையில் நிகழ்ந்த தொழில் நுட்ப மாற்றம் இன்றியமையாதது எனலாம். குறிப்பாகக் கூடுதல் உற்பத்தித் திறன் நிறைந்த வித்துகள், வேதி உரங்கள், பண்ணைக் கருவிகள், பயிர்ப் பாதுகாப்பில் பூச்சி, பூசணக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தல், வேளாண்மை சார்ந்த பிற துறைகளின் வளர்ச்சி போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த காரணிகளைப் பசுமைப் புரட்சிக்கான அடிப்படை எனக் கொள்ளலாம்.\n\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா, இந்தியாவிலேயே சிறப்பாகப் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய மாவட்டமாகும். டாக்டர் நார்மன் போர்லாக் என்பாரின் ஆய்வுகளால், ஏறத் தாழ 150 கோதுமை வகைகள் 1963ஆம் ஆண்டில் இந்தியாவுக்குக் கிடைத்தன. இக்கோதுமை வகைகளைப் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழக அறிவியலார் முறையாகப் பயன் படுத்திக் கல்யான் சோனா 227, சொனலிகா போன்ற சிறந்த விளைச்சல் தரக் கூடிய வகைகளை வெளியிட்டு, அவை உழவர்களுக்கு எளிதில் கிடைக்கப் பல்கலைக் கழகமும், வேளாண்மைத் துறையும் சிறப்பாக முயற்சிகளை மேற்கொண்டன. உயர் உற்பத்திக்கான தொழில் நுட்பங்களும், விரிவாக்கப் பணியாளர் மூலம், எளிதில் உழவர்களைச் சென்றடைந்தன. இம்மாற்றங்கள் 1965–66இல் மிக விரைவில் நிகழ்ந்து, ஹெக்டருக்கு 6 டன் வரை கோதுமை விளைச்சல் கூடுதலானது. உலர் விளைச்சல் தரும் வகைகளைச் சாகுபடி செய்யும் நிலப் பரப்பும் இரு மடங்காகியுள்ளது. ஏனைய பயிர்களான கம்பு, மக்காச் சோளம், எண்ணெய் வித்து, நெல் போன்றவற்றின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. வேளாண்மைத் தொழில் நுட்பங்களும், எளிதில் கையாளும் அளவுக்கு மாற்றியமைக்கப் பட்டுள்ளன. மேலும், தீவிர சாகுபடித் திட்டங்களும் பின்பற்றப் பட்டுள்ளன. —கா. சிவப்பிரகாசம்"}}