{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jcjqn7ep/", "data": {"id": "jcjqn7ep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jcjqn7ep/", "kind": "article", "headword": "செவி கடினமாதல்", "romanization": "cevi kaṭiṉamātal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.123220+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "எலும்பு உறை இறுக்கம், அங்கவடியின் தகட்டில் பரவுவதால், அதன் அசையும் தன்மை குறைந்து இறுகி விடும்.", "body_ta": "எலும்பு உறை இறுக்கம், அங்கவடியின் தகட்டில் பரவுவதால், அதன் அசையும் தன்மை குறைந்து இறுகி விடும். இதனால், ஒலி கடத்தல் செவிடும், காதில் இரைச்சலும் உண்டாகும். இரு செவியும் பாதிக்கப் படலாம். சில சமயம் ஒரு காது செவிடாக இருக்கலாம். இளம் வயதிலும் குறிப்பாக 15–25 வயது பெண்களிடம் நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மகப் பேற்றிற்குப் பிறகும் கேட்கும் திறன் குறைகிறது. நெருங்கிய உறவினர்களுள் திருமணம் செய்து கொள்பவரின் குழந்தைகளுக்கு இது பரம்பரையாக வருகிறது. நோய் உடலில் இருந்தாலும், பருவ வயதில்தான் கேட்கும் திறன் குறைவது தெரியும்.\n\nஅங்கவடி எலும்பின் அடித் தகட்டின் முன் பகுதியில் பெருமளவிலும், பின் பகுதியில் சில சமயங்களிலும், மாற்றங்கள் ஏற்படுகின்றன. அங்குள்ள கடினமான எலும்பும், எலும்பு மஜ்ஜையும், பஞ்சு போன்ற எலும்புத் திசுவாக மாறும். இம்மாற்றம் முட்டை வடிவச் சாளரம் (oval window), நடுச் செவியின் உட்புறப் புடைப்பு, காக்ளியாவின் உச்சி ஆகிய இடங்களில் தோன்றினாலும், முக்கியமாக, அங்கவடி எலும்பின் முன் பகுதியில் பரவுகிறது. எலும்பு இறுக்கமடைந்து, முட்டை வடிவச் சாளரம் மூடப் படுகிறது. இதனால், அங்கவடியின் முன் விளிம்பு, ஒலி அசைவினால், உள்ளே சென்று திரும்பும் அசைவு பாதிக்கப் பட்டு, முடிவில் முற்றிலும் அசைவற்று விடுகிறது.\n\nசெவிட்டுத் தன்மை அதிகரிப்பதுடன், அதிகமான காது இரைச்சலும் தோன்றும். இது முற்றிலும் ஒலி கடத்தல் செவிடேயாகும். நாளடைவில், காக்ளியா பாதிக்கப் பட்டால், நரம்பு வகைச் செவிடும் சேர்ந்து விடும். தொடக்கத்தில் கீழ் ஒலி பாதிக்கப்படும். தொடர் வண்டி நிலையம், பேருந்து நிலையம், சந்தை ஆகிய இடங்களில் உள்ள இரைச்சல் கீழ் ஒலியாகும். இச்சூழ்நிலையில், நோயாளி எதிரே நிற்பவர் பேச்சைக் கேட்கிறார். இரைச்சல் கேட்காமையால். இரைச்சலால் பாதிக்கப்பட்டவர் குரலை உயர்த்திப் பேசுகிறார். செவிடாக இருந்தும், கேட்கும் திறனுக்கு முரண்பாடாக நன்கு கேட்கும் திறன் (paracusis of willis) என்று பெயர்.\n\nஆய்வில் செவிப் பறையும், தொண்டை நடுச் செவிக் குழாயும் நல்ல நிலையில் உள்ளமை தெரியும். ஒலிக் கட்டு ஆய்வில் ஒலி, கபாலம் வழியாக நன்கு கடத்தப் படுவதை அறியலாம். செவித் திறன் ஆய்வுக் கருவி (audio meter) மூலம் ஆய்வு செய்யும் போது, ஒலி கடத்தல் திறன் குறைந்திருப்பதும் தெரியும். நரம்புத் திறன் நன்றாக இருக்கும். நோயாளிக்கு விரைவில் மனத் தளர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் தோன்றுவதால், அவர் மிகவும் மென்மையாகப் பேசுவார்.\n\nமருத்துவம். நோயின் காரணம் தெரியாத நிலையில், எந்த வித மருந்தும் பயன் தருவதில்லை. ஃபுளூரைடை நீண்ட காலம் உண்டு வந்தால், எலும்பு இறுகுவதை ஓரளவு தவிர்க்கலாம். —டி.எம். பரமேஸ்வரன்"}}