{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j6dw7sgz/", "data": {"id": "j6dw7sgz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j6dw7sgz/", "kind": "article", "headword": "இளங்கோவடிகள்", "romanization": "iḷaṅkōvaṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.932094+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிலப்பதிகாரத்தை இயற்றியவர்.", "body_ta": "சிலப்பதிகாரத்தை இயற்றியவர். இவர் சேரமன்னன் குடக்கோ நெடுஞ்சேரலாதனின் மகன்; சேரன் செங்குட்டுவனின் தம்பி. இவர் தாய் சோழன் மகள் நற்சோணை. இவர் கடைச்சங்க காலத்தவர். இளங்கோ இளமைப்பருவத்தில் தம் தந்தை, தமையனோடு இருந்தபொழுது நிமித்திகன் ஒருவன், இளங்கோவடிகளுக்கு அரசு கட்டில் ஏறும் இலக்கணம் உண்டெனக் கூறினான். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் மனம் வாடக் கண்ட இளங்கோ, நிமித்திகனை வெகுண்டுரைத்துத் தம் தமையன் மனம் வருந்தாதிருக்க அன்றே துறவு பூண்டார்.\n\nசேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் கோயில்கட்டி விழாவெடுத்தபோது, கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் வாயிலாகக் கேட்டு, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் எனச் சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. சிலப்பதிகாரம், புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று நகரங்களை மையங்கொண்டு சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிறப்பினை இணைத்து, முத்தமிழ் தழுவிய காவியமாக விளங்குகிறது. சமணம், சைவம், வைணவம் ஆகிய முச்சமயங்களையும், அருகன், முருகன், திருமால் ஆகிய முக்கடவுளரையும் வாழ்த்தும் சிறப்புடைய சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களுக்குப்பின் தோன்றிய முதல் தொடர்நிலைச் செய்யுள்; முதற் காப்பியம் தமிழில் காப்பிய இலக்கணங்கள் தோன்றுவதற்கு முன்பே இக்காப்பியம் தோன்றியது.\n\nசங்க காலப் பெருமன்னர்கள் தம்முள் பகைமை கொண்டு போரிட்டுக் கொண்டிருந்ததைப் புறநானூற்றின் வாயிலாக அறியலாம். முப்பெரு வேந்தரையும், முப்பெரு நாட்டையும் இணைத்துப் பார்க்கும் நோக்கில் இளங்கோவடிகள் சிலம்பினைப் பாடியுள்ளார். குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாக வைத்துப் பாடிய புதுமைக் காப்பியமாகவும் சிலம்பு விளங்குகிறது.\n\nஇளங்கோவடிகள் ஒப்புயர்வற்ற சான்றோர். பிறரை இழித்துக்கூறும் மனப்பான்மை இவரிடம் இல்லை. சுடுசொற்களை இவருடைய காவியத்தில் காணமுடியாது. தாம் கூறவந்த கருத்துகளை மிக இன்னலத்துடன் கூறுவதில் வல்லவர். தம் வாழ்வையே பறித்துக் கொண்ட மாதவியைக்கூட, கண்ணகி பழித்துக் கூறியதாகச் சிலம்பில் யாரும் காண இயலாது. சமண சமயத்தினர் பெண்களைப் பொருட்படுத்துவதில்லை. மாறாக, அவர்களை இழித்துக் கூறும் மனப்பான்மை உடையவர்கள். ஆனால், இளங்கோவடிகள் அதற்கு மாறானவர். பெண்களுக்கு ஏற்றம் தந்த பெரியார்களுள் இவரை முதன்மையானவராகக் கொள்ளலாம். சங்க காலத் தமிழ்ச் சமுதாயத்தில் பரத்தைமை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. இந்நிலை இளங்கோவடிகளின் மனத்தைத் தொட்டிருக்கலாம். எனவே, தாம் படைத்த சிலப்பதிகாரத்தில் மாதவி என்னும் ஓர் ஒப்பற்ற பாத்திரத்தைப் படைத்து, கணிகையர் குலத்தில் பிறந்தவளாயினும் நல்வாழ்வு நடத்த முடியும் என்பதை அவள் மூலமாக மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். பெண்கள் கற்புக்கு அறிகுறியாக அணிவது முல்லை மலர். கண்ணகி அம்முல்லைமலரைச் சூடியிருந்தாள். இளங்கோவடிகள் மாதவிக்கும் முல்லை மலரை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்.\n\nஅரசக் குடும்பத்தில் பிறந்தவராதலின் இவர் பல கலைகளையும் கற்றறிந்திருத்தல் வேண்டும். மாதவி அறுபத்து நான்கு கலைகளையும் கற்றறிந்தவள் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டு அணிகலன்கள் பலவற்றை இவர் தம் நூலில் கூறியுள்ளார். இவையன்றி அரங்கேற்று காதையில் அரங்க அமைப்பு, நாடக ஆசிரியர், புலவன், இசையாசிரியன், தண்ணுமையாசிரியன், குழலாசிரியன், தோரிய மடந்தையர் ஆகியோரையும். அவர்களுக்குரிய இலக்கணங்களையும் இவர் தெளிவாக எடுத்துரைக்கிறார்; மாதவியாடிய பதினோராடல்களையும் தெரிவிக்கிறார்.\n\nகானல்வரிப் பாட்டில் ஆசிரியர் இளங்கோவடிகளின் இசைப் புலமையை நன்குணரலாம். கானல்வரிப்பாட்டுச் சொல், பொருள், இசையழகு, குறிப்புப்பொருள் பொருந்தியது. சிறந்த இசைக்கலையில் மட்டுமன்றி, நாட்டுப்புறப் பாடல்களிலும் இவர் மனம் தோய்ந்திருந்ததை இவர்தம் குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி முதலியவற்றால் அறியலாம். இவற்றால் இவர் பல்லேறு கலைகளையும் கற்றறிந்த கலைஞர் என்பது புலனாகும்.\n\nஇவர் இந்திர விழவூரெடுத்த காதையில் புகார் நகரச் சிறப்பினையும், ஊர்காண் காதையில் மதுரை மாநகரச் சிறப்பினையும், வஞ்சிக்காண்டத்தில் சேரநாட்டுப் பெருமையினையும் படிப்போர் கண்முன் நிறுத்திக்காட்டுகிறார். ஊழ்வினையின் பயனை யாரும் தவிர்க்க இயலாது என்ற கொள்கையினை இவர் பலவிடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார். தம் காவியத்தில் திருப்பு மையமாக ஊழ்வினையினையே இவர் பயன்படுத்துகிறார். ‘யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்துருத்ததாகலின்’ கோவலன் மாதவியைப் பிரிந்து சென்றான் எனக் கூறுகிறார். ‘ஒய்யா வினைப் பயன்’ என வினைப் பயனை விலக்க இயலாதென்று எடுத்துரைக்கிறார். கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம், கோவலன் இறந்ததற்கு அவன் ஊழ்வினையே காரணம் என எடுத்துரைப்பதும் இவர் ஊழ்வினைபால் கொண்ட நம்பிக்கையைத் தெரிவிக்கும்.\n\nஇவர் தம் காப்பியத்தில் ஆங்காங்கே பல கிளைக் கதைகளைக் கூறுவதைக் காணலாம். தேவந்தியின் வரலாறு, குரங்குக்கை கொண்ட தேவன் வரலாறு. கீரிப்பிள்ளையினைக் கொன்ற பார்ப்பனி வரலாறு, பொற்கைப் பாண்டியன் வரலாறு, பத்தினிப் பெண்டிர் எழுவர் வரலாறு முதலியன சான்றாகும். இவை காப்பியத்துக்குக் கூடுதல் சுவையைத் தருவதோடு பழைய மரபுகளை அறிந்து கொள்ளவும் துணைபுரிகின்றன.\n\nஇவர் சமயப் பொதுநோக்குடையவர், சமயக் காழ்ப்பு இவரிடம் சிறிதும் இல்லை. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது சிலம்பின் நூல் வாயிலாகப் பெறப்படும். பொதுவாகச் சமணர்கள் பிற சமயத்தைப் பழித்துக் கூறுவது இயல்பு. ஆனால், இவர் தம் மதக் கோட்பாடுகளை எடுத்தியம்புவதோடு நில்லாமல் பிற சமயங்களின் வெற்றியையும் பாராட்டும் சால்பினராக விளங்குகிறார். கவுந்தியடிகள் என்னும் பாத்திரம் மூலம் சமண சமயக் கருத்துகளை மிக நயமாக எடுத்துரைக்கிறார். திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனை இவர் வருணிக்கும் திறமும், திருவேங்கடத்தில் நின்ற கோலத்துடன் காட்சி தரும் வேங்கடவனை வருணிக்கும் திறமும் இவரது சமய சமரச உணர்வைக் காட்டுவன. ஆய்ச்சியர் குரவையில் இவர் பாடும் பாக்கள் ஆழ்வார்கள் பாடலோடு ஒப்பிடத்தக்கன.\n\nமேலும், வேட்டுவ வரியிலும் குன்றக் குரவையிலும் முருகனையும், அவன் எழுந்தருளியுள்ள குன்றங்களையும் நயம் தோன்றப்பாடுகிறார். சிவபெருமானைப் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ எனப் பாராட்டுகிறார். இவர் கொல்லாமை விரதத்தை மேற்கொண்டவராயினும், காளிக்குப் பலியிடுவதையும் புனைந்துள்ளார். யார் யார் எந்த விதமாக அவரவர் கடவுளைத் தொழுகின்றனரோ அதனை அட்டியின்றி ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவர் இவர். இவர் சிறந்த அறவோர். தம்முடைய காப்பியத்தில் ஆங்காங்கே நல்வினையின் நன்மையையும் தீவினையின் தீமையையும் இவர் எடுத்துக்காட்டுகிறார்.\n\nஇளங்கோவடிகள் தம் காப்பியத்தின் இறுதியில் பொதுமக்களை விளித்துத் ‘தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்; பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு மின்: ... ... செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடு மின்’ எனக் கூறும் அறவுரைகள் சிலம்பிற்கே முடிமணியாக, ஒளி விளக்காக அமைந்தனவாகும். இதனைச் சிலம்பின் ஒலி என்றும், சிலம்பின் சாரம் என்றும் கூறலாம். இளங்கோவடிகள் தலைசிறந்த நல்லிசைப் புலவர்; சிறந்த அருங்கலைஞர்; ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்; பெண்கள் விடுதலைக்கு வித்திட்டவர்; தேசிய ஒருமைப்பாட்டாளர். நா.சி."}}