{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j5p7agvw/", "data": {"id": "j5p7agvw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j5p7agvw/", "kind": "article", "headword": "இலாசா", "romanization": "ilācā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.308347+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திபெத்தின் தலைநகர். இந்நகரம் திபேத்து நாட்டின் தென்பகுதியில் 3600 மீட்டர் உயரத்தில் உள்ளது.", "body_ta": "திபெத்தின் தலைநகர். இந்நகரம் திபேத்து நாட்டின் தென்பகுதியில் 3600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கியி ஆற்றின் வடகரையில் இரு மருங்கிலும் 5500 மீட்டர் உயரமுள்ள மலைப்பள்ளத் தாக்கில் இது அமைந்துள்ளது.\n\nஉயரம் மிகுந்த நகரமாக இலாசா (Lhasa) இருந்தாலும், இதன் தட்பவெப்ப நிலை வாழ வசதியானதாகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. குளிர் காலத்தில் பனி உறையும் நிலையை விடத் தாழ்ந்த அளவு வெப்பமும் கோடைக் காலத்தில் மிதமான வெப்பமும் கொண்டு இந்நகரம் விளங்குகிறது. ஆண்டில் மழை 380 மில்லிமீட்டர் வரை பொழிகிறது. இம்மழை சூன் முதல் அக்டோபர் மாதம் வரை பெய்கிறது. எனவே இங்குப் பனி பெய்வது அருமை. சனவரி முதல் ஏப்பிரல் வரை புழுதி நிறைந்த பலமான காற்று வீசுவதால், தட்பவெப்பநிலை சீர்கெடுகிறது.\n\nஇலாசா ஏறத்தாழ 2.5 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரின் மையத்தில் சோகாங்கு (Jokang) என்னும் வழிபாட்டிடம் உள்ளது. இதனைச் சுற்றிலும் மக்கள் வீடுகளில் வாழ்கிறார்கள். இக்கோயில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் சோகாங்குக் கோவிலில் புத்தரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கி.பி. 642 ஆம் ஆண்டில் சீன இளவரசி ஒருத்தியால் கொண்டுவரப் பெற்றதாக வரலாறு கூறும். இவ்விளவரசி சாங்ட்சென் காம்போ (Songtsen Gampo) என்ற அரசரின் மனைவி. இந்த அரசரே திபேத்திற்குப் புத்த சமயத்தைக் கொண்டுவந்தவர். அணிகலன்கள் பூட்டப்பட்டிருக்கும் இச்சிலைக்கு முன்னால் தூய தங்கத்தாலான\n\nஇலாசாவில் உள்ள தலாய்லாமாவின் அரண்மனை\n\nபெரிய அழகிய நெய் விளக்குகள் படிநிலைமுறைப்படி வைக்கப்பட்டுள்ளன.\n\nகோயிலுக்கு எதிரிலுள்ள அகன்ற தெருவில் மூன்று மாடிக் கற்கட்டடங்கள் மொட்டைத் தளங்களுடன் வெள்ளையடித்த நிலையிலுள்ளன. இங்குள்ள சாளரங்கள் கறுப்பு நிறமானவை. இக்கட்டடங்கள் முன்னர்த் திபேத்தியப் பெருங்குடிமக்களுக்குச் சொந்தமாயிருந்தவை. கீழ்த் தளத்து முன் அறைகள் கடைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கோயில் சதுக்கத்திற்குப் பின்னால் ஒழுங்காகக் கட்டப் பெறாத, குறுகிய சந்துபொந்துகளில் உள்ள வீடுகளில் பிரபுக்களும் வணிகர்களும் வாழ்கிறார்கள். இவற்றைத் தவிரச் சிறப்பான சமயக் கட்டடங்களும் உள்ளன. இவை பல்லாண்டுகளுக்குமுன் கட்டப்பட்டவை.\n\nஇலாசா திபேத்து நாட்டின் ஆன்மிக மையமாகும். இது திபேத்தின் தலைநகரமாக கி.பி. 1642–ஆம் ஆண்டில் ஆக்கப்பட்டது. அப்போது ஐந்தாம் தலாய் லாமாவாய் இருந்தவர் அரசராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்நகருக்கு ஒன்றரைக் கி.மீ. தொலைவில் கட்டப்பட்டிருக்கும் போட்டாலா மாளிகை (Potola Palace) இவருடைய தூண்டுதலால் கட்டப்பட்டதாகும். பளிச்சிடும் வெண்ணிறக் கற்களையும் சிவப்பு வண்ணக் கல்முடிகளையும் கொண்ட இம்மாளிகை ஏறத்தாழ 300 மீட்டர் அகலமுள்ள குன்றுப் பாறையின் உச்சியில், பள்ளத்தாக்கிலிருந்து 120 மீட்டா உயரத்தில் எழிலுடன் நிற்கிறது. இம்மாளிகை பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. உருவ அமைப்பிலும் படிநிலை அமைப்பிலும் வேறுபாடுகள், வண்ணங்கள், மாடிகள், சாளர வரிசைகள், வளைந்து வளைந்து செல்லும் மாடிப்படிகள் இறந்துபட்ட முன்னாளைய தலாய் லாமாக்களின் பளபளக்கும் கூரைகளைத் தாங்கிய கல்லறைகள் ஆகியவை மயிர்க் கூச்செறியும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. தலாய் லாமா தங்கும் அறைகளுடன் வியப்பூட்டும் பல முற்றங்கள், மன்றங்கள், வழிபாட்டிடங்கள், கல்லறைகள், படிநிலை மண்டபங்கள், மாடிப்படிகள் போன்றவற்றையும் இம்மாளிகைக்குள் கண்டுகளிக்கலாம். குன்றின் அடிவாரத்தில் சோ (Sho) என்னும் சிற்றூரும், அச்சுக்கூடம் ஒன்றும், ஆயுதச் சாலையொன்றும், சிறைச்சாலை யொன்றும் அமைந்துள்ளன.\n\nஇதன் அண்மையில் இரும்புக் குன்று ஒன்றும் (Iron Hill) சுற்றிச் சுற்றிச் செல்லும் கோபுரக் கோயில் உச்சியில் உள்ளது. இங்குத்தான் நோய்களைக் குணமாக்கும் புத்தரின் (Healing Buddha) ஆலயமுள்ளது. இதற்கும் மேற்கில் குண்டலிங்கு மடாலயம் (Kundeling Monastery) அமைந்துள்ளது. இங்கிருந்து மாநகரின் கிழக்கு எல்லை வரையிலுள்ள வட்ட வடிவப் பாதையைப் பயணியர் சாலை என்பர். இது பத்துக் கி.மீ. நீளமுள்ளது. இறைப்பற்றுள்ள அன்பர்கள் நாள்தோறும் இதனை வலம் வருவர்.\n\nசீனர்களின் ஆட்சிக்கு முன்\n\nஇலாசாவின் மக்கள் தொகை 1951–ஆம் ஆண்டுக்கு முன்னர் 25,000 என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இம்மக்கள் தொகையுள் இலாசாவுக்கருகில் அமைந்துள்ள இரு மடாலயங்களில் வாழும் 15,000 புத்த பிக்குகள் அடங்கார். திரிபாங்கு (Drepang), சேரா (Sera) என்னும் பெயர்களைக் கொண்ட இம்மடாலயங்கள் இலாசாவின் கோயிலிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ளவை. இம்மடாலயங்களில் வாழும் புத்த பிக்குகளின் வலிமையான செல்வாக்குக்கு இங்குள்ள சமயச் சார்புள்ள அரசு பணிகிறது.\n\nஒவ்வோராண்டும் பிப்பிரவரி–மார்ச்சு மாதங்களில் புத்தாண்டு வழிபாட்டிற்காக ஆயிரமாயிரம் பிக்குகளும் பயணிகளும் இலாசாவில் திரளுகிறார்கள். இத்திருவிழா இரண்டு வாரங்களுக்கு நடைபெறுகிறது. அதனை அடுத்துப் பண்டைய படைக்கலங்களை ஏந்திய குதிரைவீரர்களின் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. இத்திருவிழாக்களில் ஆங்கில அரசின் பேராளர்கள் 1936 முதல் 1947 வரையிலும், பின்னர் இந்தியாவின் பேராளர்கள் 1962–ஆம் ஆண்டு வரையிலும் கலந்துகொண்டு அவற்றைச் சிறப்பித்தனர். தேசிய சீனாவின் பேராளர்கள் 1935 முதல் 1950 வரையிலும் கலந்து கொண்டனர். நேபாள நாடும் பேராளர்களை அனுப்பி வந்தது\n\nசீனாவின் பொதுவடைமைக் கட்சியினர் திபேத்தை 1951–இல் கைப்பற்றிக் கொண்டனர். அதுவரை இலாசா நகர் இக்கால நகரமாக மாறவில்லை. இங்கு மின்வசதிகள், குழாய்நீர், சாக்கடை வசதி, சாலைகளைத் துப்புரவு செய்யும் பணி, வாகன வசதி, காவல் படை போன்றவை இல்லை. எனினும் இது சுறுசுறுப்பான ஒரு வணிகமையமாக உள்ளது. கோவேறு கழுதைகளின் மீது சுமந்து கொண்டுவரப்பட்ட செங்கல், தேயிலை, பட்டுப் போன்றவை சீனாவிலிருந்தும், துணிமணிகள், உலோகப்பொருள்கள், பல்வேறு தட்டுமுட்டுப் பொருள்கள் போன்றவை இந்தியாவிலிருந்தும், அரிசி பூட்டான் பகுதிகளிலிருந்தும் இந்நகருக்கு வருகின்றன. மயிர், கால்நடைகளின் பதனிடப்படாத தோல்கள், புனுகு, பொன்துகள் போன்றவை ஏற்றுமதிப் பொருள்களாகும்.\n\nசீனர்களின் ஆட்சி 1951–இல் ஏற்பட்டது. சீனப் படைவீரர்களும் அலுவலர்களும் திபேத்து வந்துற்றபோது பெரும் மாற்றங்கள் விளைந்தன. இலாசாவிற்குப் புதியசாலைகள் போடப்பட்டன. நகருக்கு அண்மையிலிருந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினார்கள். இராணுவப் பாடி வீடுகளும் அலுவலர் குடியிருப்புகளும் புதிதாகக் கட்டப்பட்டன. மருத்துவமனைகள், நகரமன்றம், சிறுசிறு தொழிற்சாலைகள் போன்றவை இங்கு அமைக்கப்பட்டன. புதிய கட்டடங்களைத் தலத்திலே கிடைத்த பொருள்களைக் கொண்டு அமைத்தார்கள். பின்னர்ப் பெருங்கற்களால் கட்டப்பெற்ற கட்டடங்களும் நீர்மின் ஆலையும் எழுந்தன.\n\nஅயலார் ஆட்சியை எதிர்த்து 1959–இல் பொது மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். ஆனால், அதனைச் சீன அரசு நசுக்கிவிட்டது. தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதன் பின்னர்ச் சீன அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. திபேத்திய அரசும் சமயமும் சமூகமும் அழிக்கப்பட்டுக் கலைக்கப்பட்டன. இராணுவ ஆட்சி நிலைநாட்டப்பட்டது. மடாலயங்கள், பெருங்குடி மக்கள் போன்றோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சமயத் தொடர்பான கட்டடங்கள் சமயத் தொடர்பில்லாப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இங்கிருந்த கட்டடங்களுள் புகழ் பெற்றிருந்த ஒரு சிலவே வரலாற்றுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டன. கம்பளத் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட்டது. போதுமான அளவு மின்சக்தியை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. சாலைகளைத் துப்புரவு செய்யும் பணி தொடங்கப்பட்டாலும் குழாய்வழி நீர்வழங்குதல், பாதாளச் சாக்கடைகள் போன்றவை இன்றும் செய்து தரப்படவில்லை.\n\nஇலாசாவில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதன் பரப்பு இருமடங்காகப் பரந்துள்ளது. மக்கள் தொகையும் பெருகியுள்ளது. புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்றவை கட்டப்பட்டுள்ளனவாகக் கூறுகிறார்கள். ஆனால், 1962–ஆம் ஆண்டுக்குப் பின்னர் அயலார் இந்நகரத்திற்குள் அனுமதிக்கப்படாமையால் சரியான செய்தியை அறிந்து கொள்வது எளிதன்று 1966–67–இல் ஏற்பட்ட பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலர்கள் அத்துமீறி நடந்து, இலாசாவிலிருந்த புத்த சமயக் கோயி- லைச் சீர்குலைத்ததுடன், புத்தசமயச் சுவடுகள் கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். அயல் நாட்டு வாணிகம் 1959–ஆம் ஆண்டுக்குப் பின்னர், நின்று விட்டது. இக்காலத்தில் பெருமளவில் சீனர்கள் இங்கு வந்து குடியேறியுள்ளதாகத் தெரிகிறது.\n\nஇலாசாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 1,00,000 (1975)."}}