{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j3h5dj8j/", "data": {"id": "j3h5dj8j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j3h5dj8j/", "kind": "article", "headword": "நூற்புழு உடல் செயலியல்", "romanization": "nūṟpuḻu uṭal ceyaliyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.733959+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வளர்ச்சி, அதனால் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள், சிதைவுகள் அல்லது சேமிப்புகள், உணவு முதலியன நூற்புழுச் செயலியலில் (nematode physiology) அடங்கும்.", "body_ta": "வளர்ச்சி, அதனால் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள், சிதைவுகள் அல்லது சேமிப்புகள், உணவு முதலியன நூற்புழுச் செயலியலில் (nematode physiology) அடங்கும். நூற்புழுக்களில், அவ்வப்போதைய செயல் மாற்றங்களும், இயற்கையாகவே உண்டாகும் அல்லது வேதி மருந்துகளால் ஏற்படும். இத்தகைய செயல் மாற்றங்களுக்குக் காரணமறிய அதன் செயலியலைத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.\n\nநூற்புழுவின் வேதிப் பொருள்கள். ஏனைய உயிரினங்கள் போலவே, நூற்புழுக்களிலும், மாவுப் பொருள்கள், புரதச் சத்து, கொழுப்புச் சத்து, உட்கருப் புரத அமிலங்கள், நுண்ணுயிரிச் சத்து, ஹார்மோன்கள், கரிம உப்புச் சத்துகள் போன்றவை உள்ளன. ஆனால், அவற்றைப் பற்றிய நுட்பமான அளவும், நிலையும் இது வரை சரியாக ஆராய்ந்து அறுதியிடப் படவில்லை. நூற்புழுவில் உள்ள வேதிச் சத்துகள் அவற்றின் வாழ் நாள், வெளி வெப்ப நிலைக்கெதிரான தடுப்பாற்றல், வறட்சி தாங்கும் ஆற்றல், வெளி உப்புச் சத்து முதலியவற்றால் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றை அறிய உதவுகின்றன. சில வகைச் சர்க்கரைச் சத்துகளும், 15 வகைத் தனித்தியங்கும் புரதங்களும், அமினோ அமிலங்களும் ஓரிரு நூல் புழுக்களில் கண்டறியப் பட்டுள்ளன. நூற்புழு புறத் தோல் சவ்வு, புரதம், கொழுப்புச் சத்து, பாலிஃபீனால், உட்கருப் புரத அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n\nநூற்புழுப் புறத் தோல் சவ்வின் புரதம், பூச்சிகளில் உள்ள கொம்புப் பொருளாக (Chitin) இல்லாமல் கெரடின் என்னும் புரதப் பொருளாக உள்ளது. வளர்ச்சி, சிதைவு. நூல் புழுக்களின் உடலில் இரு வகை அமினோ அமிலங்கள் உற்பத்தியாகின்றன. நூற்புழுக்களின் உணவுக் குழாய்ச் சுரப்பி, பலவகையான வேதி நீர்மங்களை உற்பத்தி செய்கிறது. இவை அலகு மூலம் வெளிப்பட்டுத் தாவரங்களின் செல்லினுள் சென்று, மாவு, புரதம், சர்ககரை, நார்ப் பொருள்கள், பெக்டின் ஆகியவற்றைக் கரைத்து விடுகின்றன. இதனால், நீர்மப் பொருள்கள் எளிதாக அலகு மூலம் நூற்புழுவின் உடலுக்குள் உறிஞ்சப் பட்டு விடும்.\n\nசுவாசித்தல். நூல் புழுக்கள் சுவாசிப்பதற்கெனச் சிறப்பான சுவாச உறுப்புகள் இல்லை. எனினும், அவை உயிர் வாழ, ஆக்சிஜன் இன்றியமையாதது. குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நிலையிலும், நூற்புழுக்கள் செயல் படும் என்றாலும், அவற்றின் வளர்ச்சியும், முட்டை பொரிதலும் பாதிக்கப் படும். முட்டை உற்பத்தி, சட்டை உரிக்கும் நிலை போன்ற செயல்களின் போதுள்ள நூற்புழுக்களும் ஆக்சிஜன் குறைந்த நிலையில் பாதிக்கப் படும்.\n\nவெப்பம். நூல் புழுக்களுக்கு உடலின் தட்ப, வெப்ப நிலையைக் கட்டுப் படுத்த இயலாது. எனவே, இவற்றின் வளர்ச்சி, சிதைவு போன்ற செயல்களும், சூழலில் உள்ள வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. பொதுவாக, 5–30°C வெப்ப நிலை வளர்ச்சிக்கு ஏற்றது. உடல் நீர் மிகக் குறைந்த நிலையிலுள்ள நூல் புழுக்களுகட்குக் குறைந்த அல்லது மிகுதியான வெப்பத்தைத் தாங்கும் தன்மை, ஈரம் மிகுந்த நூல் புழுக்களை விட மிகுதியாக இருக்கிறது. இதற்குக் காரணம், நீர் மிகுந்துள்ள உடலில் உள்ள நொதிகள், வெப்பத்தின் மாறுதல்களால் பாதிக்கப் படுவதேயாகும். மாறாக, நீர்ப் பசை குறைந்த நூற் புழுவின் குடலில் உள்ள நொதிகள், வெப்ப மாறுதல்களைத் தாங்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. இதற்கு மையக் காரணமாக ஈரமே அமைகிறது.\n\nஈரம். நூல் புழுக்கள் வாழ்வதற்கு மிகச் சிறிதளவாவது நீர் தேவைப் படுகிறது. புழுக்கள் நிலத்திலிருந்தாலும், மண் துகள்களைச் சுற்றியுள்ள நீரிலேயே இருக்கின்றன. நூற்புழுவின் உடலிற்கு வேண்டிய சத்துகளும், தாதுக்களும் அவற்றைச் சுற்றியுள்ள நீரில் கரைந்த நிலையிலேயே கிடைக்கின்றன.\n\nதாவரங்களின் திசுக்களிலும், செல்களிலும் நூல் புழுக்களுக்குத் தேவையான நீர்க் கரைசல் மிகுதி. நீரும், அதில் கரைந்துள்ள பொருள்களும், நூற்புழுவின் தோல் சவ்வு மூலம் ஊடுருவி உட்செல்கின்றன. நீர் குறைந்த நிலையில் நூற்புழுக்கள் தங்கள் உடலில் உள்ள நீர்மம் முற்றிலும் வெளியேறி விடா வண்ணம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன எனக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நிலத்தின் நீர், செடி வாடல் நிலைக்குக் (wilting point) குறைந்தால், அங்குள்ள நூற்புழுக்களின் செயல் பாதிக்கப் பட்டு, அழிந்து விடும்.\n\nபல வகை நூற்புழுக்களும், ஒவ்வாத சூழ்நிலையில் அழிந்து விடாமல் தங்களைக் காத்துக் கொள்ள, தம் செயல்கள் அனைத்தையும் முடக்கிக் கொண்டு, செயல் முடக்க நிலையில் காணப் படுகின்றன. ஏற்ற சூழ்நிலை வரும் போது, மீண்டும் சிறுகச் சிறுக, இவை செயல் படத் தொடங்குகின்றன. செயல் முடக்க நிலை என்பது ஒவ்வொரு நூல் புழுவிற்கும், அதன் வாழ்நாளின் ஒரு பருவத்தில் மட்டுமே காணப் படும். கோதுமையைத் தாக்கும் நூல் புழுவில், இரண்டாம் இள நிலைப் பருவமும், உருளைக் கிழங்கு நூற்புழுவில் முட்டைக் கூட்டினுள் இருக்கும் முட்டையிலுள்ள நூல் புழுவும், நெல் வெண் இலை நூற்புழுவில் முன் முதிர்ச்சிப் பருவமும், செயல் முடக்க நிலையில் அமையும். நூல் புழுக்கள் நன்றாக வாழ்ந்து பல்கிப் பெருக ஏற்ற தாவர உணவு தேவை. இது இராத போது, நூல் புழுக்களின் வாழ்நாள் சுற்றுப் புறச் சூழ்நிலையின் கட்டுப்பாட்டிற்குள் அமைகிறது. தேவையான பயிர் விளைவிக்கப் படும் போது, நூல் புழுக்களின் எண்ணிக்கை மீண்டும் பெருகி மிகுதியாகிறது.\n\nவளர்ச்சியும் பால் மாறுபாடும். மிகுந்த உணவு உள்ள போது, நூற்புழுக்கள் பல வாழ்க்கைப் பருவங்களையும், விரைவாகத் தடையின்றி அடைந்து, வளர்ச்சி பெற்று முதிர்கின்றன. ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், தோல் சவ்வும் விரிவடைகிறது. அதே போல், ஒவ்வொரு வளர்ச்சியின் முடிவையும் குறைக்க, நூற்புழுவின் மேல் தோல் உரித்து அகற்றப் படுகிறது. மரபைத் தழுவியும், உணவின் அளவைப் பொறுத்தும், நூற்புழுக்களின் ஆண், பெண் இனப் பாகுபாடு அமையும். உணவு குறையும் போது, பெரும்பாலும், ஆண் இனம் மிகுதியாகிறது. ஏற்ற சூழ்நிலையில் உணவு, குறையும் போது, பெரும்பாலும், ஆண் இனம் மிகுதியாகிறது. ஏற்ற சூழ்நிலையில், உணவு, தேவைக்கு மேல் உள்ள போது, பெண் இனம் பெருகவும், முட்டைகள் மிகுந்த இனப் பெருக்கம் நிகழவும் வாய்ப்பாகிறது. நூல் புழு எதிர்ப்புத் திறன் படைத்த பயிரில் உள்ள நூல் புழுக்களிலும், பெரும்பான்மையாக ஆண் இனமே இருக்கும்.\n\nஉணவு. தாவர நூல் புழுக்கள் திசுக்களில் உள்ள சாற்றையே உணவாகக் கொள்கின்றன. சில நூல் புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு, தம் அலகால் வேரின் திசுக்களைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். சில வகை நூல் புழுக்கள் வேரினுட் சென்று, சாற்றை உறிஞ்சும். அவற்றின் உடல் பகுதி மட்டும் வெளியில் தெரியும். சில வகை நூல் புழுக்கள் வேரினுட் சென்று, சாற்றை உறிஞ்சும். அவற்றின் உடல் பகுதி மட்டும் வெளியில் தெரியும். சில வகை நூல் புழுக்கள், தம் வாழ்நாள் முழுவதையுமே தாவரங்களின் திசுக்களினுள் கழிக்கும்.\n\nநூற்புழுக்கள் திசுக்களைக் குத்திக் கிழித்து, ஊடுருவ அலகு உதவுகிறது. திசுக்களிலுள்ள சாற்றை நன்றாகக் கரையச் செய்ய, உணவுச் சுரப்பிகளின் நொதி ஓரளவு செரிக்கச் செய்து பின்னர், அந்தச் சாற்றை அலகின் நடுவில் உள்ள நுண்ணிய பாதை மூலம் உறிஞ்சி, உணவுக் குழாய் வழியாகக் குடலை அடையும். இதற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலில் நூற்புழு மண்ணில் திசை அறியாமல், சரியான தாவரத்தின் வேரை நாடிச் செல்லும். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை நிலத்தில் கழிக்கும் நூல் புழு, உணவிற்கு ஏற்ற தாவர வேரைக் கண்டு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நூல் புழுவில் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கும் நரம்பு மண்டலமும், அதைச் சார்ந்துள்ள உணர்வு, நுகர் உறுப்புகளும், தாவரங்களின் வேர் மண்டலத்திலிருந்து வெளிப் படும் வேதிப்பொருள்களுக்குத் தக்கவாறு செயல் படும். தகுந்த உணவுச் செடியின் வேரில் ஏற்படும் வேதிக் கசிவால் ஈர்க்கப் பட்டு, நூல் புழுக்கள் நிலத்தில் உள்ள நீரின் வழியாக வேரை அடைந்து, பின்னர், ஊடுருவி உட்செல்லும் அல்லது வெளியிலிருந்து கொண்டே தலையை மட்டும் உட்புகுத்தி, உணவுச் சாற்றை உறிஞ்சும். நூற்புழுக்களின் பாதை முதலில் திசை தெரியாமல் செல்லும் (அ, ஆ, இ, ஈ). வேர் மண்டலத்திற்கு அருகில் வந்தவுடன், (ஈ) தனக்கேற்ற தாவரத்தின் வேரில் கசிவு இருந்தால், நுகர் உறுப்புகளின் மூலம், அதனை உணர்ந்து, பின்னர், வேர் மண்டலத்தினூடே சென்று வேரை அடையும். —சிவகாமி வடிவேலு"}}