{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hnxss6mb/", "data": {"id": "hnxss6mb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hnxss6mb/", "kind": "article", "headword": "நேர் குடல்", "romanization": "nēr kuṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.525258+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பெருங்குடலின் கடைப் பகுதியாகிய நேர் குடல் (rectum), திரிகம் என்பிலிருந்து, குத நேர் குடல் வளைவு வரை உள்ள பகுதியாகும்.", "body_ta": "பெருங்குடலின் கடைப் பகுதியாகிய நேர் குடல் (rectum), திரிகம் என்பிலிருந்து, குத நேர் குடல் வளைவு வரை உள்ள பகுதியாகும். வளைந்த பெருங்குடல், நேர் குடலாக மாறிக் குதத்தில் முடிகிறது. குழந்தைகளிடமும், முதியோர்களிடமும் மட்டுமே இது நேராக இருந்தாலும், ஏனைய பருவத்தினருக்கு மூன்று வளைவுகளுடன் காணப் படும். இரு குழிந்த வளைவு இடப் பக்கமும், ஒரு குழிந்த வளைவு வலப் பக்கமும் காணப் படுவதால், நேர்குடல் ஆய்வு இடப் பக்க வாட்டில் படுக்க வைத்து நிகழ்த்தப் படும். இக்குடற்சுவரில் காணப் படும் நீள்தசைக் குறுக்கத்தால், சளிப் படலம் மடிந்து ஹீஸ்டன் தடுக்கிதழ்களைத் தோற்றுவிப்பதை, வளைகுடல் அக நோக்கியால் (sigmoidoscopy) நோக்கும் போது காணலாம் . குதமும், நேர் குடலும் இணையும் இடத்தில் உள்ள குத நேர் குடல் வளைவு (anorectaraig), பியூபோரெக்டாலிஸ் தசை (puborectalis), வெளிச் சுருக்கத் தசை (external sphinter), நீள் தசைகளின் இணைந்த பகுதி (conjoined longitudinal muscle), உள் சுருக்குத் தசை (internal sphinter) ஆகியவை, இணைவதாலேயே உண்டாகிறது. விரல் கொண்டு ஆய்வு செய்யும் போது, பக்க வாட்டிலும், பின் புறமும் தொட்டு உணரக் கூடிய இவ்வளைவு கிழிபட நேர்ந்தால், மலம் கட்டுப்பாடின்றி வெளியேறும். கீழ்க் குடல் தாங்கித் தமனியில் கடைக் கிளையான மேல் நேர் குடல் தமனி, நடு நேர் குடல் தமனி, கீழ் நேர் குடல் தமனி ஆகியவை, தூய குருதி கொண்டு வரும். நேர் குடல் சளிப் படலத்தின் அடியில் காணப் படும் உள் சிரைப் பின்னலும், வெளி நேர் குடல் சிரைப் பின்னலும் இணைந்து, முறையே மேல், நடு, நேர் குடல் சிரை வழியே சென்று, ஈரல் (portal) உள் சிலியாக் கிளைகளில் இணையும். இதனுடன் இணைந்து செல்லும் நாளம் முறையே மேல், நடு நேர் குடல் நிணநீர்க் கணுவிற்குச் செல்கிறது.\n\nநேர் குடலைப் பார்த்து ஆய்வு செய்யும் போது, குதத்தில் உள்ள, கீழிறங்கிய மூலம், பாதுகாக்கும் மூலம், புரை மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் கண்டுணரலாம். விரல் கொண்டு ஆய்வு செய்யும் போது, நேர் குடலின் உள் உள்ள தொங்குத் தசைக் கட்டி (polyp), இறுகிய மலம், குடற் சுவரிலுள்ள புற்றுக் கட்டி, குடலுக்கு வெளியே ஆண்கள் என்றால், புரஸ்டேட் சுரப்பியையும், பெண்களில் டக்லஸ் பையினுள் உள்ளவற்றையும் ஆராயலாம். ஆய்வு செய்த விரலில் காணப் படும் குருதி கலந்த சளி, குடல் செருகு நோயையும் சீழ்க் கட்டிகளையும் கண்டு பிடிக்க உதவும். —மா. ஜெ. ஃபிரெடரிக்ஜோசப்"}}