{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/heehhwfp/", "data": {"id": "heehhwfp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/heehhwfp/", "kind": "article", "headword": "இலா சால்", "romanization": "ilā cāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.321723+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலா சால் (கி.பி. 1643–1687) என்னும் பிரெஞ்சுக்காரர் புது நாடுகளைக் காணச் சென்ற ஆய்வாளர்களுள் ஒருவர்.", "body_ta": "இலா சால் (கி.பி. 1643–1687) என்னும் பிரெஞ்சுக்காரர் புது நாடுகளைக் காணச் சென்ற ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் வட அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் தொடக்கத்தை ஆராய்ந்தவர்.\n\nஇலா சால் (La Salle) பிரான்சு நாட்டில் உரூவன் என்னும் நகரில் கி.பி. 1643–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21–ஆம் நாள் பிறந்தார். இவருடைய தொடக்க காலப் பெயர் இரேனே இராபர்ட்டு கவிலியர் (Rene Robert Cavelier) என்பதாகும். வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், உரூவன் நகரிலிருந்த ஏசு கல்லூரியில் (Jesuit College) கல்வி சுற்று, ஏசு சங்கத்தில் பயிற்சி பெறாத இளைஞராகச் சேர்ந்தார். ஏசு சங்கத்தின் உறுப்பினராக கி.பி. 1660 அக்டோபர் 10 ஆம் நாள் தீட்சை பெற்றார்.\n\nஏசு பள்ளிகளில் கற்பித்துக் கொண்டே ஆறு ஆண்டுகள் இவர் தம் கல்வியை மேற்கொண்டார் இவருடைய தடுமாற்றக் குணங் காரணமாக இவர் தம் உறவினர்களும் நண்பர்களும் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். மேலும் இவர் சார்ந்திருந்த ஏசு சங்கத்தின் நடைமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டவை. இவற்றை ஏற்று நடக்கவும் இவரால் இயலவில்லை. இறுதியாக இவர் கி.பி. 1667–இல் ஏசு சங்கப் பிடிகளிலிருந்து விடுதலை பெற்றார். பின்னர் இவர் ஏசு சங்கத்தினரைக் கடுமையாகக் குறை கூறினார்.\n\nஇவர் தம் உடன்பிறப்பாளரான அபிசீன் கவலியர் என்பாருடன் கி.பி. 1667 இல் கனடாவிலுள்ள மாண்ட்ரியால் நகரிலுள்ள கல்விக்கூடத்தில் சேர்ந்தார். மாண்ட்ரியாலுக்கு அருகிலிருந்த இலாசின் (Lachine) என்னும் ஊரில் மென்மயிர் வணிகராக வாழ்வைத் தொடங்கினார்.\n\nஇலா சாலின் ஆய்வுப் பயணம்\n\nஉலூயி சோலியட்டு (Louis Jolliet) என்பாரும் மார்குவெட்டு பாதிரியாரும் (Father Marquette) மிசிசிப்பி ஆற்றை அர்க்கன்சா ஆறு வரை கண்டுபிடித்திருந்தார்கள். இலா சால் கி.பி. 1677–இல் மிசிசிப்பி ஆற்றை அதன் முகத்துவாரம் வரை கண்டறியும் உரிமையைப் பெறுவதற்காகப் பிரான்சு நாடு சென்றார். பிரான்சு அரசர் பதினான்காம் உலூயி (Louis XIV) கி.பி. 1678–ஆம் ஆண்டு மே மாதத்தில், வட அமெரிக்காவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டைகளை நிலைநாட்டும் உரிமையை வழங்கினார். இலாசால் பெருந்தொகையை முதலீடு செய்வதற்காகக் கடன் வாங்கினார். ஆண்டாரியோ (Ontario), ஈரி (Erie) ஏரிகளில் பயணம் செய்யக் கப்பல்களை விலைக்கு வாங்கினார். மியாமி (Miami), இல்லியனாய் ஆறுகளில் வாணிகப் பற்றிடங்களை நிலை நாட்டினார். பிராண்டிநாக்குப் பிரபுவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இல்லியனாய்ப் பகுதியில் மென் மயிர் வாணிகத்தைத் திருட்டுத்தனமாக மேற் கொண்டார் இலா சால். பிரான்சு நாட்டு மென்மயிர் வணிகரான என்றி டி தோண்டி (Henri de Tonti) என்னும் பயணியுடனும், இன்னும் பலருடனும் கி.பி. 1682–ஆம் ஆண்டில் மிசிசிப்பி ஆற்று முகத்துவாரம் வரை சென்றார். அவ்வாண்டு ஏப்பிரல் 9–ஆம் நாள் தாம் கண்டுபிடித்த பெரும் பகுதியைப் பிரான்சு நாட்டுக்கு உரிமையாக்கி அப்பகுதிக்கு இலூசியானா (Louisiana) என்று பெயர் சூட்டினார். இலூயி மன்னரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.\n\nஇலாசால் கி.பி. 1682–ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இல்லியனாய் ஆற்றின் போக்கிலிருந்த செங்குத்தான பகுதியில், புனித உலூயி கோட்டையைக் கட்டினார். மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்தில் குடியேற்றப் பகுதியொன்றை நிலைநாட்ட விழைந்தார்.\n\nபிரான்சிலிருந்து இலாசால் கி.பி. 1684–ஆம் ஆண்டு கப்பற் பயணம் மூலம் மெக்சிகோ வளைகுடாவுக்கு நான்கு கப்பல்களுடனும் 300 குடியேறுபவர்களுடனும் சென்றடைந்தார். எனினும், இப்பயணம் மிசிசிப்பியைச் சென்றடையவேயில்லை. ஏனெனில் லாசால் தவறுதலாக வேறு ஆறு ஒன்றில் பயணம் சென்று வழி தவறிவிட்டார். இவர் கி.பி. 1685–இல் குடியேற்றம் ஒன்றை நிறுவி அதற்குப் புனித உலூயி கோட்டை எனப் பெயரிட்டார். இது மிசிசிப்பிக்கு மேற்கிலுள்ளது.\n\nஏற்கனவே அங்கு வாழ்ந்து வந்த செவ்விந்தியர் இலாசாலின் புதிய குடியேற்றத்தை அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினர். மேலும், குடியேற வந்தவர்களுள் பலர் நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். இக்குடியேற்றப்பகுதி நீடித்து நிலைக்க கி.பி. 1687–இல் உடனடியாக உதவிகள் தேவைப்பட்டன. இலாசாலும் இவருடைய துணைவர்கள் பலரும் தரை வழியாக மிசிசிப்பியின் முகத்துவாரத்தைக் காணக் கனடாவிலிருந்து பயணம் தொடங்குவதெனத் திட்டம் தீட்டினர். எனினும் இவர்களால் அந்த ஆற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இலாசாலின், துணைவர்களுள் சிலர் கலகம் செய்தனர். முதலில் இலா சாலின் உடன்பிறந்தாரின் மகனையும் பின்னர் இலா சாலையும் கொன்று விட்டனர். இலாசால் கி.பி. 1687–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19–ஆம் நாள் தெக்சாசு (Texas) என்னுமிடத்தில் கொல்லப்பட்டார். இப்பயணத்தில் பங்கு பெற்றவர்களுள் அறுவரைத் தவிர ஏனையோர் மடிந்தனர். பின்னர்ப் பிரான்சு அரசு இலா சாலின் உரிமையின் அடிப்படையில், அமெரிக்காவில் உலூசியானாவை நிலை நாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.\n\nஅமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கனடாவிலும் இலா சாலின் பெயரில் நகரங்கள் உள்ளன."}}