{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hcqakd43/", "data": {"id": "hcqakd43", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hcqakd43/", "kind": "article", "headword": "பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை", "romanization": "pakuppāyvu, oḷi umiḻvu muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.646687+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது ஒரு குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளி பாய்ச்சப் பட்ட பொருள் அவ்வொளியை உறிஞ்சி, அதே அலை நீளம் அல்லது அதை விடக் கூடுதலான அலை நீளம் கொண்ட ஒளியை உமிழ்தலை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு முறை (fluorometric analysis) ஆகும்.", "body_ta": "இது ஒரு குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளி பாய்ச்சப் பட்ட பொருள் அவ்வொளியை உறிஞ்சி, அதே அலை நீளம் அல்லது அதை விடக் கூடுதலான அலை நீளம் கொண்ட ஒளியை உமிழ்தலை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு முறை (fluorometric analysis) ஆகும். இம்மறு உமிழ்வு 10-9 நொடிக்குள் நிகழ்ந்தால்,  உடனொளிர்தல் (fluorescence ) என்றும், 10-6 நொடிக்குப் பின் நிகழ்ந்தால், நின்றொளிர்தல் (phosphorescence) என்றும் குறிப்பிடப் படும். ஒளிர்தலுக்குத் தோற்றுவாயான பொருளைக் கண்டறிவதற்கு உமிழப் படும் ஒளியைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.\n\nஇம்முறையைப் பயன் படுத்துவதற்கு முன், ஆய்வுக்குள்ளாகும் பொருளைத் தக்க கதிர் வீச்சுக்குட்படுத்தி அல்லது வேதிவினைக்குட்படுத்தி உடனொளிர்வு உண்டாக்க இயலுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கரிமச் சேர்மங்கள் கிளர் ஒளிர்தலுக்கு ஏற்றவை. உலோக அயனிகளுள் யுரேனியம், தாலியம் போன்ற ஒன்றிரண்டு அயனிகளே உள்ளார்ந்த ஒளிர்தலைத் தர வல்லன. எனினும், பல உலோக அயனிகளைக் குறிப்பிட்ட வேதிப் பொருள்களுடன் வினைப் படுத்தி, ஒளிரும் அணைவு சேர்மங்களாக மாற்றலாம்.\n\nகிளர்தலைத் தூண்டுவதற்குத் தேவைப்படும் ஒளியைப் பெறுவதற்குப் பல பொருள்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. பாதரச ஆவி விளக்கு, செனான் வில் விளக்கு ஆகியன உள்ளிட்ட பல (உரிமைக் காப்பு கொண்ட) ஒளி மூலங்கள் இத்துறையில் பயனாகின்றன. 450 மில்லி மைக்ரானில் அடர்வான கிளர்தல் பட்டையைக் கொண்ட பொருட்களுக்கு டங்ஸ்டன் விளக்கு தக்கதாகும். தேவைப் படும் கிளர் ஒளிப் பட்டையிலிருந்து, மற்ற ஒளிக் கீற்றுகளைத் தனித்துப் பிரிப்பதற்குக் குறுக்கீட்டு வடிகட்டிகளைப் பயன் படுத்தலாம். மாலிப்டினம்/ டங்ஸ்டன் ஒளித் தோற்றுவாய், உரிய ஒளி வடிகட்டி மற்றும் திண்ம மாதிரிப் பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எக்ஸ்–கதிர்ப் பகுதியிலும் ஒளிர்தல் பகுப்பாய்வை நிகழ்த்தலாம்.\n\nஆய்வுப் பொருளின் மீது பாய்ச்சப் பட்டு, ஒளிக் கற்றையின் பாதைக்குச் செங்குத்தான பாதையில் ஒளிர்தல் அளக்கப் படுகிறது. படம் 1இல் இவ்வுத்தியின் கூறுகள் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. மிகக் குறைந்த கிளர் ஒளி அடர்வுகளில் (intensity) நிகழ்த்தப் படும் அளவறி பகுப்பாய்வுப் பணியில் கிளர் ஒளி தரும் பொருளின் செறிவுக்கு ஒளியின் செறிவு நேர் விகிதமாகும். உயர் (ஒளி) அடர்வுகளில் ஒளி அடர்வு–பொருள் செறிவு சார்பு வரை படம் நேர் கோடாக இராது. இதன் காரணமாக, பொதுவாக, கிளர்தல், பகுப்பாய்வு செய்வதற்குப் பொருளின் மிக நீர்த்த கரைசலையே பயன் படுத்த வேண்டியுள்ளது. மேலும், கிளர் ஒளி உமிழும் பொருளின் செறிவையும், ஒளி அடர்வையும் இணைக்கும் அளவு குறித்தல் வரை படம் (Calibration curve), ஒவ்வோர் ஆய்வுக்கும் முன்னோடியாகப் பெறப் பட வேண்டும்.\n\nஒளிர்தல் பகுப்பாய்வு முறைகளின் முதன்மைச் சிறப்பியல்பு, அவற்றின் உணர்வு நுட்பம் (Sensitivity )ஆகும். 108இல் ஒரு பங்கு என்னும் நுண்ணிய அளவுக்குத் துல்லியம் உண்டு. ஒளி உறிஞ்சல் முறையை விட இது, 2 அல்லது 3 படி (Orders of magnitude) உயர்வாகும். ஒளி உறிஞ்சல் முறைகளில், கரைசல் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளியின் மிகச் சிறிய பின்னமே கண்டறியப் படுகிறது. ஒளிர்தல் முறையிலோ, சுழிச் செறிவு இருட்டைக் குறிப்பதால், மிக மெல்லிய உமிழ்வையும் இருண்ட பின்னணியில் தெளிவாகக் கண்டறியலாம். தொழில் நுட்பம் மிகுந்த மின்னணுவியல் மற்றும் ஒளியியல் உத்திகளைப் பயன் படுத்தி, இவ்வமைப்பை உயர் தரக் கருவியாக்கலாம். பொருத்தமான சூழ்நிலைகளில், ரோடமின் 5 DGN எனும் பொருளின் செறிவை 1012-ல் ஒரு பங்கு என்னும் நுண்ணளவு வரை அளந்தறியலாம். இந்த ஒளிர்தல் வகைச் சாயத்தைக் குறியாகப் பயன் படுத்தி, ஆழ் கடலில் நீரோட்டங்களைப் பற்றி அறிய முடியும். போன்டோகுரோம் BBR-அலுமினியம் அணைவும், மோரின்–பெரிலியம் அணைவும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன.\n\nகரைசலில் இடம் பெறும் பல வகைப் பொருள்களால் ஒளிர்தலின் அடர்த்தி குறையக் கூடும். தணித்தல் (quenching) எனும் இந்நிகழ்வு, முதனிலை அல்லது உமிழ்வு ஒளியைக் கரைசல் மிகையளவில் உறிஞ்சுவதால் தோன்றலாம் (செறிவுத் தணித்தல்). ஒளிரும் பொருளினாலேயே இத்தணித்தல் நிகழ்ந்தால், இதனைத் தன்–தணித்தல் (self quenching) எனலாம். கிளர் ஒளி தரு பொருளில், வேதி மாற்றம் நிகழ, நிகழத் தணித்தல் ஏற்படக் கூடும். அமில–கார –அளவீடு (PH) ஒளிர்தலின் அடர்த்தியைப் பாதிக்கும் காரணிகளுள் முதன்மையானதாகும். PH = 5–13 வரம்பில் அனிலீன் நீல நிறக் கிளர் ஒளியைத் தருகிறது. 5–க்குக் குறைவான PH மதிப்புகளில், அனலீன் மூலக் கூறு அனிலீனியம் நேர் அயனியாகிறது. 13–க்கு மேற்பட்ட PHஇல் எதிர் அயனியாகிறது . இரு சூழ்நிலைகளிலும் ஒளிர்தல் மறைகிறது. வைட்டமின் B₂ (ரிபோஃப்ளேவின்), அமினோ அமிலங்கள், நியூக்ளியிக் அமிலங்கள், கனிமங்களில் இடம் பெறும் யூரேனியம் ஆகியவற்றை அளந்தறிய இம்முறை சிறந்தது. ஒற்றை நிறப் பிரிப்பிகள் (monochromators) இரண்டினைக் கொண்ட ஓளிர்தல் பகுப்பாய்வு கருவி இத்துறையில் ஒரு புதுமையாகும்.\n\nஒளிர்தல் முறையில் பகுப்பாய்வு செய்வதற்கேற்ற சேர்மங்கள் சம தளம் கொண்ட, விறைப்பான மூலக் கூறுகளாலானவை. அதிர்வு, அழற்சி வகை மாற்றங்களின் மூலம் ஆற்றல் இழப்பு ஏற்படுவதை, மூலக் கூறின் விறைப்பு குறைக்கிறது. இவ்வகையில் இரட்டைப் பிணைப்பும் (பை எலெக்ட்ரான்கள்) இன்றியமையாத் தேவையாகும்.\n\nமூலக் கூறுடன் எலெக்ட்ரான் ஈய வல்ல தொகுதிகள் கிளர் ஒளிர்தலைக் கூடுதலாக்குகின்றன. நின்றொளிர்தல் குறைக்கப் படுகிறது. எலெக்ட்ரான் ஈர்க்கும் தொகுதிகள் இதற்கு எதிர் வினையை ஏற்படுத்தும். கிளர் ஒளிர் தரு பொருள்களுள் ஃப்ளூரின்–9,10–டைஃபீனைல் ஆந்த்ரசீன் பெரைலீன் ஆகியன குறிப்பிடத் தக்கவை. —மே.ரா. பாலசுப்பிரமணியன்"}}