{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h8aq692k/", "data": {"id": "h8aq692k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h8aq692k/", "kind": "article", "headword": "செயல் திறன் குறைவு", "romanization": "ceyal tiṟaṉ kuṟaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:00.263355+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செயலிழப்பும், உணர்ச்சியற்ற நிலையும், தடுமாற்ற நடையும் இல்லாத போது, ஒன்றை இயக்க முடியாத நிலைக்குச் செயல் திறன் குறைவு என்று பெயர்.", "body_ta": "செயலிழப்பும், உணர்ச்சியற்ற நிலையும், தடுமாற்ற நடையும் இல்லாத போது, ஒன்றை இயக்க முடியாத நிலைக்குச் செயல் திறன் குறைவு என்று பெயர். தானாகவே இயங்கும் அசைவு, கண்களின் அசைவு, முகத் தசைகளின் இயக்கம், பேசுதல், சுவைத்தல், விழுங்கல், கை கால்களை அசைத்தல், உட்கார்ந்து எழுதுதல் போன்ற அனைத்துமே செயல் திறன் குறைவால் பாதிக்கப்படலாம்.\n\nமூளையின் இடப் பக்க மடலின் (parietal) நைவுகளில், இரு பக்கங்களிலும் செயல் திறன் குறைவு ஏற்படலாம். இப்பகுதிக்கும், இட மைய முன் மேடுகளுக்கும் இடையே நைவுகள் ஏற்பட்டால், வலப் பக்கக் கை கால்கள் மட்டுமே பாதிக்கப்படும். வலப் புறத்தில் நைவுகள் ஏற்பட்டால், இடப் பக்கக் கை, கால்களில் செயல் திறன் குறைவு ஏற்படும். நோயாளியிடம் நாக்கை நீட்டச் சொன்னால், முதலில் வாயைத் திறந்து, சிறிது நேரம் கழித்து நாக்கை நீட்டுவான். உடைகளை அணிவதில் செயல் திறன் குறைவு ஏற்படின், அது வலப் பக்க மடலின் நைவைக் குறிக்கும். ஒரு விரலைக் கொண்டு, ஏனைய விரல்களைத் தொடச் சொன்னால், நோயாளியால் செய்ய இயலாது. ஆனால், கையை முழுதுமாக அசைத்துத் தம் காதைத் தொட முடியும். தீக்குச்சிகளை ஒரு வடிவத்தில் அடுக்கி வைத்து, அவ்வாறே செய்யச் சொன்னால், அவரால் செய்ய இயலாது. அப்போது தம் தவறையும், இயலாமையையும் உணர்வார். இதுவும் செயல் திறன் குறை நிலையாகும். —அ. கதிரேசன்"}}