{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gvygbbhe/", "data": {"id": "gvygbbhe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gvygbbhe/", "kind": "article", "headword": "அவிநயனார் கலாவியல்", "romanization": "avinayaṉār kalāviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.941788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அவிநயனார் கலாவியல் என்பது அவிநயனாரால் எழுதப்பெற்ற பாட்டியல் நூலாகும்.", "body_ta": "அவிநயனார் கலாவியல் என்பது அவிநயனாரால் எழுதப்பெற்ற பாட்டியல் நூலாகும். இந்நூலையும், அவிநயம் என்னும் இவக்கண நூலையும் எழுதியவர் இவரே. அவிநயனாரால் எழுதப்பட்ட பாட்டியல் நூலே, அவிநயனார் கலாவியல் எனக் கொண்டு நவநீதப்பாட்டியல் உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றது.\n\nஅவிநயனார் கலாவியல் நூற்பாக்களாக, இரு நூற்பாக்கள், நவநீதப்பாட்டியல் உரையில் மேற்கோளாக இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, வாதில் வெல்லும் நெறி பற்றியது; மற்றொன்று அவையில் புகும் நெறி பற்றியது.\n\nவாதில் வெல்லும் நெறி, அளவயில் புகும் நெறி பற்றிய இரு நூற்பாக்களும், பொதுவாகப் பாட்டிலியல் இடம் பெறுபவை. அவையில் பெறும் வெற்றி–தோல்வி பற்றிக் குறிப்பிடும் “நல்லவைக் கண்ணும்” (96) எனத்தொடங்கும் கலித்துறையின் பின்னே, இந்நூற்பாக்கள் நவநீதப்பாட்டியல் உரையில் இடம் பெற்றிருப்பதும், ‘பாட்டியல்’ ‘கலாவியல்’ என்பன ஒரு பொருளன என்பதைக் காட்டும்.\n\nஇவையன்றி, அவிநயனார் பாட்டியலில், பாலன், மீளி, மறவன், திறலன், காளை, விடலை, முதுமகன் ஆகிய ஏழு பருவ ஆடவர்க்குரிய அகவை பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது. பாலன் – 7 வயது வரை; மீளி – 10 வயது வரை; மறவன் – 14 வயது வரை; திறலன் – 15 வயது வரை; காளை – 16 வயது வரை; விடலை – 30 வயது வரை; முதுமகன் – 30 வயதிற்கு மேல்.\n\nபேதை முதல் பேரிளம் பெண் ஈறாக ஏழு பருவங்கள், பெண்டிருக்கு வகுக்கப்பட்டாற் போல, ஆடவர்க்கும் மேற்கண்டவாறு வகுக்கப்பட்டமை அவிநயனார் பாட்டியலால் புலனாகிறது.க.ப.அ."}}