{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gsbunvrj/", "data": {"id": "gsbunvrj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gsbunvrj/", "kind": "article", "headword": "நொ", "romanization": "no", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.319421+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நொச்சி", "body_ta": "நொச்சி\n\nஇதற்கு ஐந்திலை, இந்திர சூரியம், திரிபுரம் எரித்தான், சிந்துகம், சிந்துவரம் நித்தில், நீர்க்குண்டி, வெள்ளை நொச்சி, வெண்ணொச்சி என்று பல பெயர்கள் உண்டு. இதன் தாவரப் பெயர் வைட்டெக்ஸ் நெகுண்டோ (Vitex negundo) என்பதாகும். நொச்சியை இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தானம், மியான்மர், சீனா, இந்தோ சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் காணலாம். இமய மலையின் வெளிப்புறங்களில் 1 கி.மீ. உயரம் வரையில் பெரும் எண்ணிக்கையில் காணப் படுகிறது. பூச்சி கொல்லி தன்மையுள்ள புதர்ச் செடியான இதன் இலைகளை வெட்டிப் பசுந்தழை உரமாகவோ, எருவாகவோ பயன் படுத்தலாம். இதனைப் பெரும்பாலும் ஆற்றங்கரையோரம், ஈரமான நிலம், தரிசு நிலம், வேலியோரம், இலையுதிர்க் காடு ஆகியவற்றில் கூட்டங் கூட்டமாகக் காணலாம்.\n\nஅமைப்பு. இது 4–6 மீ. உயரம் வளரும் மணமுள்ள புதர்ச் செடி அல்லது சிறு மரமாகும். இதன் கிளைகள் அடர்த்தியாக வெண்ணிற மயிரால் போர்த்தப் பட்டிருக்கும். எதிர் அடுக்கில் அமைந்த இலைகள் விரல் போல் 3–5 கூட்டிலைகளாக இருக்கும். முழுமையான சிற்றிலைகள் தலை கீழ் ஈட்டி வடிவில் தோல் போன்றிருக்கும். மேல் பக்கம் வழுவழுப்பாகவும், கீழ்ப் பக்கம் மயிரடர்ந்தும், நுனி கூராகவும் இருக்கும். மஞ்சரி உச்சியில் அமைந்திருக்கும். கூட்டுப் பூத்திரள் (Panicle), நுனி வளர் கிளை (corymb) மஞ்சரியிலுள்ள மலர்கள் காம்புடனோ, காம்பற்றோ காணப் படும். பூவடிச் செதில்கள் சிறியவை; சில சமயம் முதிரு முன்னரே உதிர்ந்து விடும். புல்லி வட்டம் 3 மி.மீ. அளவானது. புல்லி இதழ்கள் மணி வடிவமாகவோ, குழல் கொண்ட புனல் வடிவமாகவோ இருக்கும் அல்லது 5 குறுகிய முக்கோண வடிவ மடலால் ஆகியிருக்கும். அல்லி வட்டம் 7 மி.மீ. குறுக்களவானது. ஈருதடு பெற்ற அல்லி இதழ்கள் சிறியவை. 5 மி.மீ. நீளமான அல்லிக் குழல் மிகவும் குட்டையானது; மகரந்தத் தாள்கள் நான்கும், ஏற்றத் தாழ்வு கொண்டவை. சூல்பை 2–4 அறைகளைக் கொண்டது. இதில் 4 சூல்கள் இருக்கும். சூலகத் தண்டின் நீளம் 7 மி.மீ. கனி உருண்டை வடிவ அல்லது முட்டை வடிவ அல்லது நீள் வட்ட உள்ளோட்டுச் சதைக் கனி (drupe) வகை. புல்லி வட்டத்தினால் தாங்கப் பெற்றிருக்கும். இதன் நடு உறை சதைப் பற்றானது. உள்ளுறை எலும்பு போன்றது; இது 4 அறைகளும், 4 விதைகளும் பெற்றது. விதைகள் முட்டை வடிவம் அல்லது நீள் சதுரமானவை. இதன் புறவுறை தடிப்பானது. இதில் முளை சூழ்தசை (endosperm) இல்லை. சதைப் பற்றான வித்திலைகளில் பூக்கள் இரு பருவங்களில் தோன்றுகின்றன. சமவெளியில், ஜனவரி–ஏப்ரல் வரையிலும், மலைப் பகுதியில் ஜூலை–அக்டோபர் வரையிலும் பூக்கிறது. கனிகள் ஆண்டு முழுவதும் காணப் படுகின்றன.\n\nபூச்சி நோய்கள். நொச்சியில் செர்க்கோஸ்போரா அகர்வலியை (Cercospora agarwalii) என்னும் பூசணம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில், இலைப் புள்ளி நோயை ஏற்படுத்தியுள்ளது. சிஸ்டோசெர்க்கா கிரிகேரியா (Schistocerca gregaria) என்னும் வெட்டுக் கிளி இலைகளைத் தின்று அழிக்கும். இலைகளைக் குடையும் புழுக்களுள், லேப்டியா கல்லிஸ்ட்ரேப்டா (Labdia callistrepta), ஸ்டேக்மேட்தோஃபோரா அக்கேந்தோடஸ் (Stagma tophora acanthodes) என்பவை குறிப்பிடத் தக்கவை. சாற்றை உறிஞ்சி அழிவு செய்யும் பூச்சிகளுள் ஏஃபிஸ் மால்வாய்டெஸ் (Aphis malvoides), டிரோசிகா டால்பெர்ஜியே (Drosicha dalbergiae), டிரைசெண்ட்ரஸ் பைகலர் (Tricentrus bicolor) என்பவை அறியத் தக்கவை. தமிழ்நாட்டில் இலைகளை மடக்கி அழிக்கும் பூச்சியான பிக்னார்மன் காபெராலிஸ் (Pycnarmon caberalis) குறிப்பிடத் தக்கது.\n\nபயன். நொச்சியை வேலிப் பயிராக வளர்ப்பது வழக்கம். இதைக் கால்நடைகள் உண்பதில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், இதை நட்டுப் பயன் பெறலாம்.\n\nஇப்புதர்ச் செடி மண் அரிப்பைத் தடுக்க உதவும். காற்றுத் தடை வேலிப் பயிராகவும் இதை வளர்க்கலாம். இதன் இலைக்குப் பூச்சிகளை விரட்டும் தன்மை உண்டு. சேமிப்புத் தானியங்களுடன் இதன் இலைகளை வைத்திருக்க, பூச்சிகள் அண்டுவதில்லை. இதன் இலைக்குப் பாக்டீரியாக் கொல்லித் தன்மையும் உண்டு. இலைகளில், புற்று நோயைப் போக்கும் பண்பும் உள்ளது. ஃபிலிப்பைன்சில் விதைகளை அவித்து உண்கின்றனர். நுனிக் கொழுந்துகளை கூடை முடையப் பயன் படுத்துகின்றனர். இச்செடிச் சாம்பலில் பொட்டாசியம் கார்பனேட் மிகுந்துள்ளது. இச்செடி சாயம் தயாரிக்கவும் உதவுகிறது.\n\nஇச்செடியின் அனைத்துப் பகுதிகளும், மருத்துவத்திற்கு உதவுகின்றன. இலைகளை உலர்த்தி, மருத்துவத்திற்குப் பயன் படுத்துகின்றனர். மணமுள்ள இலைகள் உடலைத் தேற்றும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். கட்டிகளைக் கரைத்து, கெட்ட மாசுகளை நீக்கும். அண்ட வீக்கம், வாதப் பிடிப்பு, அழற்சியால் உண்டாகிய வீக்கத்தையும் கரைக்கும். சுளுக்கு, மூட்டு வீக்கத்தைப் போக்கும். இலையை வெண் சுருட்டுப் (cigarette) போலச் சுற்றிப் புகைத்தால், நீர்க் கோவை தலை வலி முதலிய நோய்கள் அகலும். இலைகளை நீரிலிட்டுத் கொதிக்க வைத்து, ஆவி பிடிக்கக் காய்ச்சல் குணமாகும். இலைகளைச் சுக்குடன் சேர்த்தரைத்துப் பற்றிடத் தலைவலி போகும். இலைச் சாறு மாதவிடாயை வெளிப் படுத்தும்.\n\nஇலைச் சாறு புண்களின் கழிவுகளையும் நீக்கும். இலைச் சாற்றை எண்ணெயிலிட்டுக் காய்ச்சிப் புரையோடும் புண், கண்டமாலை, விரணம் ஆகியவற்றிற்குப் பயன் படுத்தலாம். சாற்றை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலையில் தடவி வர, தலை மயிர் நன்கு வளரும். இலைச் சாற்றுடன் திப்பிலியைச் சேர்த்துத் தர, சளியுடன் சேர்ந்த காய்ச்சல், தலை கனம், காது மந்தம் குணமாகும். தலையணையில் பஞ்சுக்குப் பதிலாக, நொச்சித் தழையை நிரப்பிப் படுத்து வர, உடல் வலி போகும். கழுத்து நரம்பு வலி, ஒரு பக்க நரம்பு வலி, வாதக் காய்ச்சல், சன்னி இருமல், திருப்ப முடியாத கழுத்து வலி போன்ற நோய்கள் நீங்கும்.\n\nஇலையிலிருந்து எடுக்கப்படும் தைலத்தைத் தடவ, நாற்றப் புண்கள் குணமாகும். நொச்சி இலை, பொடுதலை, நுணா முதலியவற்றைச் சேர்த்துக் குடி நீர்செய்து, குழந்தை களின் மாந்தத்திற்குத் தரலாம். நொச்சி இலைக் கொழுந்து, சுக்குத் தூள் ஆகியவற்றை மந்தித்துச் சர்க்கரை கலந்த பசு நெய்யைச் சேர்த்துக் கிளறி, 40–50 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வரச் சீதக் கழிச்சலால் உண்டாகும் கடுப்பு நீங்கும்.\n\nஆஸ்துமா குணமாக நொச்சியிலை, மிளகு, இலவங்கம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை மென்று, சிறிது சிறிதாக அவற்றின் சாரத்தை விழுங்க வேண்டும். நொச்சி இலையை மண் சட்டியிலிட்டு, ஆமணக்கெண்ணெயை ஊற்றி, வதக்கிக் கீல் வாதம், மூட்டு வலி, இடுப்பு வலி, வீக்கம், முடக்கு வாதம் ஆகிய நோய்களுக்கு ஒற்றடம் தரலாம். நொச்சி இலை, வேலிப் பருத்தி இலை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, மண் சட்டியிலிட்டு, ஆமணக்கெண்ணெயை ஊற்றி வதக்கி, மாலை வேளைகளில் இளஞ்சூடாக ஒற்றடம் தர வாத நோய்கள் குணமாகும்.\n\nவணிக முறையில், இதன் வேர்கள் நீளமான, உருளை போன்ற மருந்தாக விற்கப் படுகின்றன. இதன் வெளித் தோல் சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும், நீள வாக்கில் பல பிளவுகளைப் பெற்றும் இருக்கும். உள் மரக் கட்டை இளம் மஞ்சள் நிறமானது. வேருக்கென்று தனி மணமில்லை. வேரைத் தூள் செய்தால், இள மஞ்சள் நிறத் தூள் கிடைக்கும். வேருக்கு உடலைத் தேற்றும் பண்பும், காய்ச்சல் மற்றும் சளியைப் போக்குந் தன்மையும், சிறு நீரைப் பெருக்கும் இயல்பும் உண்டு. வேர்த் தூளை வயிற்றுக் கடுப்பு, மூலம் ஆகியவற்றிற்குப் பயன் படுத்தலாம்.\n\nநொச்சி வேரைக் குடிநீரிலிட்டு பால், பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை குடித்து வர, வாத நோயுடன் கூடிய மேக நோய், தொழு நோய் முதலியன நீங்கும். வேரை அரிசிக் கஞ்சியில் அரைத்துப் புண்களை ஆற்றுவதற்குப் பயன் படுத்தலாம்.\n\nபூக்களை உலர்த்திப் பொடித்துப் பன்னீர், கற்கண்டு சேர்த்துத் தரக் குருதி வாந்தி, குருதிச் சீதபேதி போகும். பூக்கள் வயிற்றுப் போக்கு, வாந்தி பேதி, காய்ச்சல், ஈரல் நோய், மார்பு நோய்களைப் போக்கும். உலர்ந்த காய்கள் குடற்புழுக்களைக் கொல்லும். சீனாவிலும், மலேயாவிலும் காய்கள் தலை வலியைப் போக்கவும் கண்ணீர்ப் பெருக்கை நிறுத்தவும் பயன் படுகின்றன. விதை, தோல் நோய், தொழு நோய் ஆகியவற்றைப் போக்கும். நொச்சி இலையுடன், சிறிதளவு வேப்பெண்ணெயைக் கலந்து வதக்கி வைத்துச் சிறிது சூட்டோடு வெற்றிலையை மேலே வைத்துக் கட்ட, மூட்டு விக்கம் குணமாகும். —கே.ஆர். பாலச்சந்திர கணேசன் —கோ. அர்ச்சுனன் துணை நூல். G.H.M. Lawrence, Taxonomy of Vascular Plants, Oxford and IBH Publishing Company, New Delhi 1974.\n\nநொடிப்பு\n\nபம்பரம் போன்ற ஒரு தற்சுழற்சியுள்ள திண்மப் பொருள், ஒரு செங்குத்து அச்சைப் பற்றித் கொண்டு, அச்சுச் சுழற்சியை நிகழ்த்தும் போது, அது விரைந்து மேலும் கீழுமாக நகரும் நிகழ்ச்சியை எந்திரவியலில் நொடிப்பு (nutation) என்பர்.\n\nசுழலும் பம்பரத்தின் இயக்கத்தை ஆராய்ந்தால், அதன் தற்சுழற்சித் (spin) திசை வேகம் மிகக் குறைவாக இருக்கும் போது, அச்சுச் சுழற்சியும் (precession), நொடிப்பும் காணப் படுவதை உணரலாம். படம் (அ) அச்சுச் சுழற்சியுடன் கூடிய சமச் சீர்வுள்ள பம்பரத்தின் இயக்கத்தைக் காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகத்திலேயே சுழலும் பம்பரத்தின் அச்சும் நகருமானால், அச்சு இயங்கும் பாதையைப் படம் (ஆ) காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகத்தின் திசைக்கு எதிர்த் திசையில் சுழலும் பம்பரத்தின் அச்சு நகருமானால், அச்சு இயங்கும் பாதையைப் படம் (இ) காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகம் சுழியெனில், பம்பரத்தின் அச்சு நகரும் பாதையைப் படம் (ஈ) காட்டுகிறது. படங்கள் (ஆ) (இ) (ஈ) களில் (θ₂ - θ₁) என்னும் கோண அளவு நொடிப்பின் அளவைக் குறிக்கிறது.\n\nஉயர்ந்த தற்சுழற்சித் திசைவேகம் கொண்ட ஒரு பம்பரத்தின் அச்சின் நொடிப்புக்கான கோண அதிர்வெண் \\omega_n = \\frac {Iz}{Ix} s Iz , Ix என்பன முறையே Z, X அச்சுகளில் நிலைமத் திருப்புத் திறன்களாகும். S என்பது தற்சுழற்சி கோணத் திசை வேகம். மேலும், அச்சுச் சுழற்சி அதிர்வெண் Wp என்பது சீரானது அன்று. நேரத்திற்கு ஏற்றபடி, நொடிப்பு அதிர்வெண் வீதத்தில் அது மாறுகிறது. Wpக்கும் Wnக்கும் உள்ள தொடர்பு வருமாறு: \\omega_p = \\frac {W_i}{Izs} (1 - cos \\omega n t) W என்பது பம்பரத்தின் எடை; । என்பது அதன் புவியீர்ப்பு மையத்திற்கும், அது தரையைத் தொடும் கூர் முனைக்கும் உள்ள தொலைவு; சராசரி அச்சுச் சுழற்சி அதிர்வெண் (Wp) சராசரி = சமன்பாடு (1)இலிருந்து தற்சுழற்சி அதிர்வெண் S கூடும் போது, நொடிப்பு அதிர்வெண்ணும் கூடுகிறது எனத் தெரிகிறது. அப்போது நொடிப்பு இடப் பெயர்ச்சி (θ₂ - θ₁) விரைவாகக் குறைகிறது. எனவே, ஓரளவுக்கு விரைந்து தற்சுழலும் ஒரு பம்பரத்திற்கு அச்சுச் சுழற்சியுடன் கூடவே நொடிப்பு இடப் பெயர்ச்சியும் மிகக் குறைவாக இருக்கும். மேலும், பம்பரம் தரையோடு தொடும் புள்ளியில் உள்ள உராய்வினால், இந்த நொடிப்பு இடப் பெயர்ச்சி கண்ணுக்கே தெரிவதில்லை. அந்நிலையில் பம்பரம் நொடிப்பின்றிச் சீரான அச்சுச் சுழற்றியுடன் இயங்குவதாகவே தோன்றுகிறது. —மு. சேக் முஸ்தபா துணை நூல். H. Goldstein, Classical Mechanics, Addison Wesley, Second Edition, 1980.\n\nநொண்டுதல்\n\nகால் நடைகளில் பல்வேறு காரணங்களினால், நொண்டுதல் ஏற்படுகிறது. காலில் ஏதாவது அடிபட்டாலோ, காயங்கள் ஏற்பட்டாலோ, முள் இருந்தாலோ, கால்நடை நொண்டும். நொண்டுதல் என்பது வாதம். சுண்டு வாதம், மூட்டு வீக்கம், நரம்பு வீக்கம், கால்வாய் நோய் போன்றவற்றின் அறிகுறியாகும். கால்நடைகளில் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ நொண்டுதல் காணப் படலாம். எனவே, நொண்டுதல் காணப் பட்டால், அதற்கான காரணத்தை நன்கு அறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும். கால்நடைகள் புல் மிகுதியாக இருக்கும் மேய்ச்சல் தரை, காடு, மலைப் பகுதிகளில் மேயச் செல்லும் போது, கால்களில் அடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், காயங்கள் ஏற்பட்டுப் புண்ணாக மாறி, வலி தோன்றுவதால் நொண்டுதல் காணப் படும். முள், சிறு கற்கள் போன்றவை கால் குளம்புகளில் குத்தியிருப்பதாலும் நொண்டும். இவ்வாறு, காலில் ஏதாவது வலி ஏற்பட்டால் நிற்கும் போது, அந்தக் காலைத் தூக்கிக் கொண்டிருக்கும். நடக்கும் போது, நீண்ட நேரம் தரையில் அந்தக் காலை ஊன்ற முடியாமையால், அந்தக் காலைத் தரையில் வைத்தவுடன், தூக்கிக் கொண்டு நொண்டி, நொண்டி நடக்கும். சிறு காயங்கள் இருந்தால், பூச்சிக் கொல்லி கொண்டு தூய்மைப் படுத்திக் களிம்பு தடவி, தகுந்த மருத்துவம் செய்வதன் மூலம் குணப் படுத்தலாம். முள், கல் போன்ற குளம்புகளில் இருந்தால், இடுக்கி (forceps) மூலம் அதனை வெளியே எடுத்து விட்டு, மருந்து போட்டுக் குணப் படுத்தலாம். சில சமயங்களில், கால் தவறி வழுக்கிக் கீழே விழுந்து, கால் எலும்பு முறிவு ஏற்படக் கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டால், காலைக் கீழே வைக்கக் கடினப் படும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உணர முடியும். இவற்றிற்கு உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி, உரிய மருத்துவம் செய்தல் வேண்டும். வசதிப் பட்டால், எக்ஸ்–கதிர் மூலம், முறிந்த எலும்பினைச் சரியாக அறிந்து, அதற்கேற்றவாறு கட்டுப்போட வேண்டும். உடனே கால் எலும்புகளைச் சரியாக ஒன்றோடொன்று பொருத்தி, இறுக்கமாகக் கட்டுப் போட வேண்டும். உரிய நேரத்தில் தக்க மருத்துவம் செய்யாவிடில், கால் அழுகிக் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.\n\nமூட்டு வீக்கம். திடீரென ஏற்படும் இந்நோயின் போது, வலி கடுமையாக இருக்கும். நோய் கண்ட கால்நடைகள் நொண்டும். மேலும், வீக்கமான இடத்தைத் தொட்டால், வலி கடுமையாக இருப்பதால், காலைத் தூக்கும். மூட்டுகள் சற்றுச் சூடாக இருக்கும். பொதுவாகக் கன்றுக் குட்டிகளின் கொப்பூழ் வழியாகப் பாக்டீரியா போன்றவை சென்று, மூட்டு வீக்கத்தை ஏற்படுத்தும். இதனைக் கால்நடை மருத்துவரிடம் காட்டித் தகுந்த மருத்துவம் செய்வதன் மூலம் குணப் படுத்தலாம். வீக்கத்தின் மேல் ஒற்றடம் கொடுப்பதன் மூலமும், அயோடின் கலந்த களிம்புகளை அழுத்தித் தேய்ப்பதன் மூலமும், மூட்டு வீக்கத்தைக் குறைக்க முடியும். தற்போது இதனைக் குணப்படுத்தச் சிறந்த ஊசி மருந்துகள் உள்ளன.\n\nசுண்டு வாதம். இது வேலைக்குப் பயன் படும் காளை மாடுகளில் மிகுந்து காணப் படுகிறது. இந்நோயைப் பசு மாடு, எருமை மாடுகளிலும் காணலாம். மாட்டின் பின்னங்காலில் எலும்பு ஒன்று இடம் பெயர்ந்து, தசை நார் பிசகுவதால், இது ஏற்படுகிறது. வாதமுள்ள காலைத் தரையில் இழுத்துக் கொண்டே நடக்கும். திடீரெனக் காலை வெட்டித் தூக்கும். காலை மடக்க முடியாமையால், நொண்டிக் கொண்டே நடக்கும். இதனைச் சிறு அறுவை மூலம் சரி செய்து விடலாம். எனவே, சுண்டு வாதம் கண்ட மாடுகளை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி, உரிய அறுவை செய்து கொள்வதன் மூலம் குணப் படுத்தலாம்.\n\nகால்நடைகள் சிலவகை நோயின் போதும், சோர்வின் போதும், நொண்டுதல் காணப் படும். கால் குளம்புகளில், கொப்புளங்கள் ஏற்பட்டுப் புண்ணாக மாறி விடும். இது கால்வாய் நோயின் அறிகுறியாகும். இந்நோய் உள்ள கொப்புளம் உடைந்து புண்ணாவதால், வலி ஏற்பட்டுக் கால்நடைகள் நொண்டும். எனவே, கால்நடை நொண்டுவதைக் கண்டவுடன், கால்நடை மருத்துவரிடம் காட்டி, முறையான மருத்துவமளிக்க வேண்டும். —வே. ஜெயா கிறிஸ்டி\n\nநொணலை\n\nஇந்தியாவில் காணப் படும் நொணலை மீனை மத்தி, எண்ணெய் சார்டைன் எனவும் குறிப்பிடுவர். இந்தியாவில் ஓர் ஆண்டில் பிடிக்கப் படும் மொத்த கடல் மீன்களின் அளவில், மூன்றில் ஒரு பங்கு இம்மீனேயாகும். இம்மீனை மக்கள் பெரிதும் விரும்பி உண்கின்றனர். இம்மீனிலிருந்து எடுக்கப் படும் சார்டைன் எண்ணெய் பல தொழில்களுக்கும் பயன் படும். இம்மீன் தூள் (fish meal) கோழி மற்றும் மாட்டுத் தீவனங்கள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. சார்டைன் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் நைட்ரஜன் பாஸ்பேட் அடங்கிய குவானோ (guano) என்னும் கழிவுப் பொருள், காபி, டீ, தென்னை, கரும்பு, புகையிலை போன்ற தாவரங்களுக்கு உரமாகிறது. வகைப்பாடு குளுப்பியா லாங்கிசெப்ஸ் (Clupia longiceps) இந்நொணலை மீன் முள்ளெலும்பு மீன் வகுப்பில் ஆக்டினோடேரிஜி துணை வகுப்பில், குளுப்பி ஃபார்மிஸ் வரிசையில் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதற்குச் சார்டினெல்லா லாங்கிசெப்ஸ் (Sardinella longiceps) என்றும், சார்டினெல்லா நியோகோவி (S/newhowii) என்றும், குளுப்பியா ஸ்கம்பிரினா (C/scombrina) என்றும் வேறு பெயர்கள் வழங்கப் படுகின்றன.\n\nபரவல். இம்மீன் உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளில் வசித்தாலும், இந்தியக் கடலில் மிகுந்து காணப் படுகிறது. இது பொதுவாகச் சோழ மண்டலக் கடற் பகுதியை விடக் கேரளக் கடற்பகுதியில் கூடுதலாகக் காணப் படும். இம்மீனின் முட்டை, பெரும்பாலும் ஆகஸ்டு–நவம்பரில் கோழிக்கோடு பகுதியில், நீரின் மேற்பரப்பில் மிதப்பதைக் காணலாம். குஞ்சுகளும், வளர்ச்சியுற்ற மீன்களும் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளில் காணப் படுகின்றன.\n\nபுற அமைப்பு. இம்மீனின் வயிற்றுப் பகுதி மருங்கு வாக்கில் தட்டையாகவும், கூர்மையான விளிம்புடனும் இருக்கும். இவ்விளிம்புகளில் சாதாரணமாக ரம்பப் பல் போன்ற முள்களையுடைய செதில்கள் (scales) உள்ளன. செவுள் மூடி நான்கு பகுதிகளாலானது. செவுள் திறப்புகள் பொதுவாக மிகப் பெரியனவாக இருக்கும். பொய்ச் செவுள்கள் காணப் பட்டால், அவை நன்கு வளர்ச்சியுற்றிருக்கும். பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும் கண்களுக்குக் கொழுப்பாலான இமைகள் உள்ளன. மேல் தாடையின் விளிம்பு, முன் நடுப் பகுதியில் முன் மேல் தாடை எலும்புகளாலும், பக்கவாட்டில் மேல் தாடை எலும்புகளாலும் ஆனது. வாய் அகலமாகவும், மேல் தாடை அல்லது கீழ்த் தாடை வெளியே நீட்டிக் கொண்டுமிருக்கும். உணர் நீட்சிகள் இல்லை. இம்மீனின் துடுப்பாரைகள் அசையக் கூடியவை.\n\nமுதுகுத் தடுப்பில் (dorsal fit) நடுத்தரம் அல்லது குறைந்த எண்ணிக்கை கொண்ட வலிமையற்ற ஆரைகள் (fin rays) காணப் படுகின்றன. மலப் புழைத் துடுப்பில் (anal fin) சில சமயங்களில், பல ஆரைகள் உடலின் மேற்பரப்பில் காணப் படுகின்றன. தலைப் பகுதியில் செதில்கள் காணப் படுவதில்லை.பக்கக் கோடு பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. ஏறக் குறைய, எளிய அமைப்புடைய காற்றுப் பை ஒன்றுண்டு. இம்மீனின் தலை சற்றே நீளமானது. பற்கள் நன்கு வளர்ச்சியுற்றிருப்பதில்லை. இம்மீனின் முதுகு, பச்சையும், நீலமும் கலந்த நிறத்துடன் தங்கம் போல மினுமினுக்கிறது. வயிற்றில் பச்சை நிறம் கலந்த தங்க நிறத்தாலான புள்ளி காணப் படும்.\n\nஉணவும் உணவுப் பழக்க வழக்கமும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில், இது கடல் அடிப் பரப்பில் காணப் படும் சகதியை உணவாகக் கொள்கிறது. ஏனைய காலங்களில், பெரும்பாலும் இது தாவர மிதவை உயிரிகளை விரும்பி உண்கிறது. நீரின் மேற்பரப்பில் காணப் படும் இத்தாவர மிதவை உயிரிகளின் அளவைக் கொண்டே இம்மீன் இருக்குமிடத்தை மீனவர்கள் அறிவர். கோப்பி போட், டையனோ பிளாஜல்லேட், ஆஸ்ட்ராகோட், இறாலின் வேற்றிளவுயிரி, இரு ஓடுடைய மெல்லுடலிகளின் வேற்றிளவுயிரி, மீன் முட்டை, நாக்டிலுக்கா, ரேடியோலேசியன், நண்டுகளின் வேற்றிளவுயிரி போன்ற விலங்கு மிதவைஉயிரிகளையும் இது உணவாகக் கொள்கிறது. இம்மீன் குஞ்சாக உள்ள போது, ஊணுண்ணியாகவும் (carnivore) முதிர்ச்சியடைந்த பின்னர், தாவரவுண்ணியாகவும் (herbivore) வாழ்கிறது. மிதவை உயிரிகளை வடி கட்டுவதற்கு ஏற்றவாறு, குஞ்சுகளின் செவுள்கள் நன்கு வளர்ச்சியுற்றுக் காணப் படாமையே, இதற்குக் காரணம் என்று கருதப் படுகிறது.\n\nதொடக்க கால வாழ்க்கை வரலாறு. இம்மீனின் முட்டைகள், 24 மணிக்குள்ளாகக் கரு வளர்ச்சியடைந்து, 2.75 மி.மீ. நீளமுடைய வேற்றிளவுயிரிகளாக வெளி வருகின்றன. இவை, தம்மிடமுள்ள எண்ணெய் உருண்டை மற்றும் கருவுணவின் உதவியால் நீரில் மிதக்கின்றன. இவற்றின் மேற்புறத்தில் கறுப்பு நிறமிச் செல்கள் (chromotophores) ஆங்காங்கே காணப் படுகின்றன. இவை ஒரு நாளுக்குள் தன்னிடமுள்ள கருவுணவையும், எண்ணெய் உருண்டையையும் உணவாக உட்கொண்டு, 3.35 மி.மீ. நீளம் வரை வளர்ந்து விடுகின்றன. அப்போது, மேற்புறத்திலுள்ள கறுப்பு நிறமிச் செல்கள் பக்கவாட்டிற்கும், கீழ்ப் புறத்திற்கும், இடம் பெயர்கின்றன. இரண்டு நாள்கள் வயதுடைய வேற்றிளவுயிரிகள் மிகவும் சுறுசுறுப்புடனும், நன்கு வளர்ச்சியடைந்த வாயுடன் 3.7 மி.மீ. நீளம் வளர்ந்து காணப் படுகின்றன. செவியுறுப்பு, மார்புத் துடுப்பு, கண், உணவுக் குழாய் போன்ற உறுப்புகள் முழு வளர்ச்சியடைந்துள்ளன.\n\nஇனப்பெருக்கம். ஆண், பெண் இனங்கள் 14 செ.மீ. நீளத்திற்கு மேல் வளரும் போது, புறத் தோற்றத்தில் வேறு படுகின்றன. ஆண் இனத்தில், தசையாலான ஒரு முகிழ்ப்பு (papilla) பொதுப் புழைக்கு (cloaca) உள்ளே அமைந்திருக்கும். ஆனால், பெண் இனத்தில் இம்முகிழ்ப்பு சவ்வால் ஆக்கப் பட்டு, மலப் புழைக்குப் (anus) பின் புறம் அமைந்திருக்கும். இரு பால்களிலும், இவ்வறுப்பு வயது முதிர்ந்த நிலையில் வெளிப்படையாகவும், முதல் முதலாக வளர்ச்சியுறும் நிலையில் தெளிவாகத் தெரியாமலும் இருக்கும்.\n\nமுட்டையிடும் காலம். தக்க சூழ்நிலை அமையும் போது, குறிப்பாக ஜுன்–அக்டோபரில் இவை முட்டையிடுகின்றன. இருப்பினும், இவை தென் மேற்குப் பருவக் காற்று வீசும் இரண்டு, மூன்று மாதங்களில் மட்டுமே மிகுதியாக முட்டையிடுகின்றன. இப்பருவக் காற்று தொடங்குவதில் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டாலும், முட்டையிடும் கால அளவு தள்ளிப் போவதாகத்தெரிகிறது. இம்மீன் பொதுவாக, இருள்மதிக்கு ஒரு சில நாள்களுக்கு முன்னால் அல்லது பின்னால் முட்டையிடுகிறது.\n\nஇனப் பெருக்க வளம். ஒரு மீன் தன்னுடைய உடலளவு, வயது, சினையகம் (ovary) ஆகியவற்றைப் பொறுத்து 38,000–80,000 முட்டைகள் இடுவதாகக் கருதப் படுகிறது.\n\nபால் விகிதம். குஞ்சுகளாக இருக்கும் போது, ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை மிகுந்து இருப்பதாகவும், முட்டையிடும் போது, பெண் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் இறப்பதால், வளர்ச்சியடைந்த நிலையில் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களை விட மிகுந்து இருப்பதாகவும், முதுமை நிலையை அடையும் போது, பெண் மீன்களே மீண்டும் கூடுதலாக இருப்பதாகவும் அறியப் பட்டுள்ளது.\n\nவயதும், வளர்ச்சியும். இம்மீன் 4 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பதாகவும், 220–229 மி.மீ. வளர்வதாகவும் கண்டறிந்துள்ளனர். முதல் ஆண்டில் 100 மி.மீ. வரையும், இரண்டாம் ஆண்டில் 150 மி.மீ. வரையும், மூன்றாம் ஆண்டில் 190 மி.மீ. வரையும், நான்காம் ஆண்டில் 210 மி.மீ. வரையும் வளரும். முன் பருவத்தில் (ஜுன், ஜூலை மாதங்களில்) இடும் முட்டைகள் பின்பருவத்தில் (ஜுலை, ஆகஸ்டு மாதங்களில்) இடப்படும் முட்டைகளை விட, மிக விரைவாக வளர்ச்சியடைகின்றன.\n\nஒன்று கூடும் பழக்கம். ஒரே சிறப்பு இனத்தைச் சேர்ந்த ஒரே அளவுள்ள, ஒரே வயதுள்ள, ஒத்த வேகத்தில் நீந்தக் கூடிய பல உயிரிகள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதையே, ஒன்று கூடும் பழக்கம் என்பர். இம்மீன்களில் பல வகையான கூடும் பழக்கங்களைக் காணலாம். வளைந்து, வளைந்து செல்லும் போது, நீரில் ஏற்படும் ஒலியை வைத்துப் பகல் மற்றும் இரவு வேளைகளிலும், எதிரிகளிடமிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கு நீரிலிருந்து சிறிது தொலைவு வெளியில் துள்ளும் போதும், உடல் நிறத்தைக் கொண்டும், இரவு வேளைகளில் ஒளியை உண்டாக்கியும், நீரின் மேற்பரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியும், ஒன்று கூடுகின்றன. நீரின் அடித் தளத்தில் தொடர்ச்சியாக இவை வெளியிடும் காற்றுக் குமிழ்களைக் கொண்டும், இவை சுரக்கும் கோழைகளின் மணத்தைக் கொண்டும், இவை கூடும் பழக்கத்தை மீனவர்கள் அறிந்து, அங்கு வலை வீசி மீன்களைப் பிடிக்கின்றனர்.\n\nஒட்டுண்ணிகளும், எதிரிகளும். மீன் வகையில் ஒட்டுண்ணிகள் காணப் படுவதில்லை. இருப்பினும், 4 உறிஞ்சுகளைக் கொண்ட பிளாட்டி போத்திரியம் சார்டினெல்லே (Platybothrium Sardinellae) என்னும் செஸ்டோடு (cestode) ஒட்டுண்ணியின் வேற்றிவுயிரிகள் குடற்பையில் காணப் படுகின்றன. டால்பின், சுறா, மத்திக்காக்கா, கடல் காக்கா போன்றவை இம்மீனின் எதிரிகளாகும். —இரா. பக்தவச்சலம்\n\nநொதி\n\nஅனைத்து நொதிகளும், புரதத் தன்மையையும், பெரிய மூலக் கூறுகளையும் கொண்டவையாகும். இவற்றின் மூலக் கூறின் எடை 1.5 x104106 இருக்கும். ஏனைய புரதங்களைப் போலவே, இவை நிலையற்றவையும், இயல்பிழந்தால் செயலற்றனவாயும் இருக்கும். பெரும்பாலான நொதிகள் பெரிய பாலிபெப்டைடு அல்லது புரதப் பகுதியையும், வேறு வகையான இணைக் காரணி (co–factor) ஒன்றினையும் பெற்றிருக்கும். இணைக் காரணி இல்லையேல், நொதிகள் செயலற்றிருக்கும். இந்த இணைக் காரணிகள், இணை திறன் இரண்டுடைய உலோக அயனிகளாகும். சில நேரங்களில், சிறிய மூலக் கூறு எடை கொண்ட, புரதத் தன்மையற்ற கரிமப் பொருள்களும், இணை காரணியாகச் செயலாற்றும். இங்கு, இணைக் காரணிகள் புரதப் பகுதியுடன் தளர்வாகப் பிணைக்கப் பட்டிருக்கும். இவ்வகையான நொதிகளிலிருந்து பெறப் படும் இணைக் காரணிகள், இணை நொதிகள் (coenzyme) எனப் படும். பிற இயல்பான நொதிகளில், இணைக் காரணிகளுடனான தொடர்பு இறுக்கமாக இருக்கும். இவை ஹாலோ நொதிகள் (holoenzyme) எனப் படும். நொதி எந்தப் பொருளின் மீது வினை புரியுமோ, அப்பொருளின் பெயருடன் 1ஏஸ் (-ase)எனும் பகுதியைச் சேர்த்து, அந்நொதிக்குப் பெயரிடுவர். எடுத்துக் காட்டாகச் சூக்ரோசைக் குளுகோசாகவும், ஃபிரக்டோசாகவும் பிரிக்கின்ற நொதிக்குச் சுக்ரேஸ் என்று பெயர். மால்டோசை நீர்ப் பகுப்பு (Hydrolyse) செய்கிற நொதிக்கு மால்டேஸ் என்று பெயர். இவ்வகையான பெயரிடும் முறை, அந்நொதியின் வினையின் வேதித் தன்மையை எடுத்துக் காட்டப் போதுமானதாக இல்லை. எனவே, அனைத்துலக உயிர் வேதியிலார் சங்கத்தின் (International Union of Biochemists) 1961ஆம் ஆண்டின் பரிந்துரையின் படி, அனைத்து நொதிகளும் ஆறு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. அவை குழுமாற்றி (Transferase), நீராற் பகுப்பி (Hydrolase), ஆக்சிஜன் ஏற்ற ஒடுக்கி (Oxido-reductase), லையேஸ் (Lyase), ஐசோமெரேஸ் (Isomerase), இணைப்பு நொதி (Ligase) என்பன. ஒரு பொருளின் மூலக் கூறில் உள்ள ஒரு தொகுதியைப் பிறிதொரு பொருளுக்கு மாற்றுகிற வினைக்குக் காரணமான நொதி குழு மாற்றி ஆகும். ஒரு பொருளின் வேதித் தன்மையை நீரால் சிதைப்பது, நீராற் பகுப்பி எனப் படும். ஒரு வினையின் போது, வினை புரியும் பொருளின் மீது ஆக்சிஜனை ஏற்றும் அல்லது அப்பொருளிலிருந்து ஆக்சிஜனை ஒடுக்கும் நொதி ஆக்சிஜனேற்ற ஒடுக்கி வகையைச் சாரும். ஒரு மூலக் கூறின் இரு பகுதிகளுக்கு நடுவே, இரு பிணைப்புகளை(double bond)உருவாக்கும் நொதி லையேஸ் ஆகும். ஒரு மூலக் கூறின் பகுதிகளின் நிலையை மாற்றி, வடிவ ஐசோமெர் (geometrical isomer), ஒளியியல் ஐசோமெர் (optical isomer), இடஐசோமெர் (spatial isomer) ஆகியவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிற நொதி ஐசோமெரஸே் எனப் படும். இரண்டு பொருள்களை ஆற்றல் மிகுந்த பாஸ்பேட் பிணைப்பை உடைப்பதால், வெளியாகும் ஆற்றலைக் கொண்டு இணைக்கும் நொதி இணைப்பு நொதியாகும்.\n\nஅனைத்து நொதிப் பொருள்களும் வினையின் வேகத்தை அதிகரிக்கின்றன. ஆனால், அவ்வினையின் ஆற்றலின் தேவையை மிகுதியும் குறைக்கின்றன. இத்தன்மையின் விளைவாக, வெப்ப நிலை மாறுபாடுகளைத் தாங்கி, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் மிக வேகத்தோடு, அதிக மூலக் கூறுகளை வினைக்கு ஆட்படுத்தும். ஹைட்ரஜன்–பர்–ஆக்சைடு சிதைவடைந்து, ஆக்சிஜனாவும், நீராகவும் பகுப்படைய வேண்டுமானால், நிலையில் ஒரு மூலக் கூறுக்கு 18,000 கலோரி ஆற்றல் தேவைப் படுகிறது. ஆனால், காடலேஸ் (catalase) எனும் நொதி, இவ்வினையில் ஈடுபடுமானால், ஒரு மூலக் கூறுக்கு 5,500 கலோரிகளே போதும். இவ்வாறு நொதிப் பொருளின் விளைவாக வினைக்குத் தேவையான ஆற்றலின் அளவு இயல்பான அளவை விட மூன்றில் ஒரு பங்கே ஆகும்.\n\nஎந்த நொதிப் பொருளும் வினையின் போது, வினைப் பொருளோடு (substrate) ஒரு தற்காலிகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இதன் காரணமாக, நொதி வினைப் பொருள் கூட்டமைப்பு (Enzyme–substrate complex). உருவாகிறது. இதன் பின்னரே, இக்கூட்டமைப்பில் உள்ள வினைப் பொருள் வேதி வினைக்கு ஆட்பட்டு, வினைப் பொருளைத் தருகிறது. நொதிப் பொருள் எவ்வித மாற்றமுமின்றி, மீண்டும் வினைக்காக வெளியேறுகிறது. 1880ஆம் ஆண்டில் வேர்ட்ஸ் என்பார், தம் கோட்பாட்டில் இதை விளக்கினார். பின்னர் 1890ஆம் ஆண்டில், எமில் ஃபிஷர் என்பாரால் பூட்டு–சாவிக் கோட்பாடு (lock and key hypothesis) உருவாக்கப் பட்டது. இக் கோட்பாட்டின் படி,நொதியுயம், வினைப் பொருளும் ஒன்றோடொன்று பூட்டு, சாவியைப் போலப் பொருந்திக் கூட்டமைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நொதியிலும் வினை புரியும் பகுதிகள் உண்டு. இவ்விடத்தில் வினைப் பொருள் இணையும். இவ்விணைப்பு ஹைட்ரஜன் அல்லது நீரெதிர்ப்பும் (Hydrophobic) மின் நிலையியல் பிணைப்பாகும். இதைத் தொடர்ந்து, வினைப் பொருளில் உள்ள பிணைப்புகள் உடைந்து. புதிய வினைப் பொருள் உருவாகிறது.\n\nநொதிப் பொருள் இருக்கிற வினை புரியும் பகுதிகளின் வேதிப் பண்பு முழுமையாகக் கண்டறியப் படவில்லையாயினும், சில நொதிகளில் மட்டும் ஓரளவிற்குக் காணப் பட்டுள்ளன. அதனை நோக்குகையில், வினை புரியும் பகுதி அமினோ அமிலச் சங்கிலி (Amino acid chains) என்பது புலனாகும். சில நொதிகளில் இது ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கச் சங்கிலிகளையும் பெற்றிருக்கும். இந்தப் பக்கச் சங்கிலி பக்கத்திலேயே அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை. அது ஆங்காங்கே அமைந்திருப்பின், நொதியின் மூலக் கூறு மூன்றாம் நிலை மடிப்புக்கு உள்ளாகும் போது, அருகருகே அமையும். வினை புரியும் பகுதி பெரும்பாலும் -SH, -OH, -NH₂ கார்பாக்சைல் ஆகியவற்றின் தொகுதிகளில் ஏதாவதொன்றைப் பெற்றிருக்கும். நொதிப் பொருள், இணைப்புப் புரதத் தன்மை உடையதாயின், அதன் வினை புரியும் பகுதியில், ஓர் இணைக் காரணி அடிப்படைப் பொருளாக அமைந்திருக்கும்.\n\nஒவ்வொரு நொதியும் குறிப்பிட்ட வினை புரியும் பொருள்களோடு மட்டுமே வினையாற்றும். ஆனால், சில நொதிகள் தனக்குரிய வினை புரியும் பொருள்களைப் போன்ற பிற பொருள்களுடனும் வினை புரியும். சில, நொதிகள் அல்லது ஒளியியல் ஐசோமெர்களுடன் மட்டுமே வினை புரியும். எனவே ஒரே ஐசோமெர் இரண்டு ஆக்ஸிடேஸ்களைப் பெற்றிருக்கும். ஒன்று ஐசோமெருக்காகவும், மற்றொன்று ஐசோமெருக்காகவும் அமையும். இத்தகைய குறிப்பு வினைகளைப் பெற்றிருப்பினும், சில அமினோ அமில ரசிமேஸ் நொதிகள் மற்றும் ஐசோமெர்களுக்கிடையே ஒளியியல் ஐசோமெர்களை ஒன்றுக்கொன்று மாற்றும் தன்மையன. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது இந்நொதிகள் வினை புரியக் காரணம் வினை புரியும் பொருளின் அளவு, மூலக் கூறு அமைப்பு, மின்னமைப்பு ஆகியவற்றோடு ஒத்திருப்பதே ஆகும். சில நொதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வினை புரியும் பகுதிகள் அமைந்திருக்கும். பெப்டிடேஸ், எஸ்டரேசஸ் போன்றவை இவ்வகையில் அடங்கும். சில நொதிகள் ஒரே பொதுப் பண்புடைய பல பொருள்கள் மேல் வினை புரியலாம். இப்பண்பிற்கும் குழுக் குறிப்பு வினை (Group specificity) எனப் பெயர். எடுத்துக் காட்டாகப் பெப்சின், பெப்டைடு பிணைப்பு எந்த பொருளில் இருந்தாலும், அதன் மேல் வினை புரியும். எஸ்டரேசஸ், எஸ்டர் இணைப்புகளைத் தாக்கும்.\n\nஒரு நொதியின் செயல் வேகத்தைக் கட்டுப் படுத்தப் பல காரணிகள் உள்ளன. வினை புரியும் பொருளின் அடர்த்தி அதிகரிக்கப் படும். அதே விகிதத்தில் வினையின் வேகமும் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட நிலை வந்தவுடன், அதற்கும் மேல் செய்யும் அடர்த்தி அதிகரிப்பு எவ்விதப் பயனும் தராது. எனவே, எந்த அடர்த்தி நிலையில் வினை வேகம் உச்ச நிலை அடைந்ததோ, அந்நிலையில் நொதியின் மூலக்கூறுகள் நிறை–நிலை (saturation) அடைந்து, நொதி–வினை புரியும் பொருள் கூட்டமைப்பாக (Enzyme–substrate complex) இருக்கும். இது மீகெய்ல்ஸ்–மெண்டன் சமன்பாடு மற்றும் மீகெய்ல்ஸ்–மென்டன் மாறிலி இச்செயல் வினை மூலம் விளக்கப் படுகிறது. நொதியின் அடர்த்தியும், வினை புரியும் பொருளின் அடர்த்திக்கு ஏற்ப அதிகரிக்கப் படின், வினை வேகம் அதிகரிக்கும். ஆனால், ஒவ்வொரு நொதி மூலக் கூறும் மிகு ஆற்றல் கொண்டிருப்பதால், மிகக் குறைவான அடர்த்தியே அதிகப் பொருள்களைத் தாக்கும் தன்மை படைத்ததாகும். எனவே, நொதி அடர்த்தியின் உச்ச நிலையை எளிதில் காண இயலாது.\n\nஅனைத்து வேதி வினைகளுக்கும் வெப்ப நிலை ஒரு காரணியாக இருப்பது போலவே, நொதிகளின் வினை வேகத்திற்கும் அது அடிப்படையாக விளங்குகிறது. ஆனால், அனைத்து வெப்ப நிலையிலும், நொதிகள் தன் உயர்ந்த அளவு செயல் திறனைக் காட்டுவதில்லை. எந்த வெப்ப நிலையில் ஒரு நொதிப் பொருள் தன் உயர்ந்த அளவு செயல் திறனோடு வினை புரிகிறதோ, அதுவே, அந்நொதிக்கு ஏற்ற வெப்ப நிலை (Optimum temperature) ஆகும். இவ்வெப்ப நிலையை விட, மிகக் குறைந்த உறை வெப்ப நிலையிலும், மிக உயர்ந்த வெப்ப நிலையிலும், நொதிகளின் வினை வேகம் குறைந்து, தன் செயல் திறனையே இழக்கும்.\n\nஒவ்வொரு நொதியும், ஒரு குறிப்பிட்ட ஹைட்ரஜன் அயனியின் அடர்வு (PH) நிலையில் கூடுதல் செயல் திறனோடு வினை புரியும். அந்த அடர்வு நிலை, பொருத்தமான ஹைட்ரஜன் அயனியின் அடர்வு நிலை (Optimum PH) ஆகும். 7.5 முதல் 8.0, 7.0, 6.9, 1.5 ஆகியவை முறையே லைபேஸ், கொலின்ஈஸ்டரேஸ், அமைலேஸ், பெப்சின் ஆகிய நொதிகளின் பொருத்தமான ஹைட்ரஜன் அடர்வு நிலைகளாகும்.\n\nஎக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவையும் நொதிகளின் வினைத் திறனை அழிக்கும் காரணிகளாகும். சில பொருள்களின் சேர்க்கையால், நொதிகளின் செயல் திறன் மிகவும் குறைக்கப் பட்டு அல்லது தடுக்கப் பட்டு விடுகிறது. இப்பொருள் வினை அடக்கி (Inhibitors) எனப் படும். வினை புரியும் பொருளைப் போன்ற அமைப்புக் கொண்ட சில பொருள்கள் நொதியோடு வினை புரியும் பகுதியில் இணைவதால், அந்நொதியின் வினைத் திறன் பாதிக்கப் படுகிறது. இவ்வகையில், செயலாற்றி நொதி வினையைத் தடுக்கும் பொருள் போட்டி வினை அடக்கி (competitive inhibitor) எனப் படும். இத்தகைய வினைகள், வினை புரியும் பொருளின் அளவு அதிகரிக்கும் போது, மீளும் தன்மையுடையன. சான்றாக, ஆர்கனோ பாஸ்ஃபேட்டின் மூலக் கூறு அசிடைல் கொலினின் மூலக் கூற்றின் அமைப்பை போலவே இருப்பதால், பின்னதன் சிதைவை ஊக்குவிக்கிற அசிடைல் கொலின் எஸ்டரேஸ் எனும் நொதியின் வினை புரியும் பகுதியில் பொருந்தி, நொதியின் வினையைத் தடுத்து விடுகிறது. மற்றொரு வகையான வினை அடக்கி, போட்டியிடாத வினை அடக்கி (Non-competitive inhibitor) எனப் படும். இது, நொதியின் வினை புரியும் பகுதியில் பொருந்தாமல் வேறு பகுதிகளில் பொருந்தும். இதனால், நொதியில் வினை புரியும் பகுதி கிடைத்தாலும், வினை நடப்பதில்லை. ஏனெனில், வினை அடக்கி, நொதியின் வேதித் தன்மையை மாற்றி விடுகிறது. எனவே, வினை மீளும் தன்மை அற்றது. சான்றாக அஸ்காரிஸ் எனும் குடற்புழு சுரக்கிற இரண்டு பாலிபெப்டிடேசிஸ், பெப்சின், டிரிப்சின் ஆகிய நொதிகளின் வினையைத் தடுக்கும். இதன் மூலம் இவ்வுயிரி, மேற்சொன்ன நொதிகளால் செரிக்கப் படுவது தடுக்கப் படுகிறது. மூன்றாம் வகை வினை அடக்கி, போட்டியில்லா வினை அடக்கி (Un–competitive inhibitor) எனப் படும். இது நொதி வினை புரியும் பொருள் கூட்டமைப்போடு (Enzyme–substrate complex) இணைந்து, கூட்டமைப்புச் சிதைந்து, விளை பொருள் உருவாவதைத் தடுக்கிறது. இவ்வினை மீளும் தன்மை கொண்டதாகும்.\n\nசில நொதிகளின் வினையைத் தொடக்கவும், நொதி வினையில் வேகத் திறனை அதிகரிக்கவும், சில பொருள்கள் நொதிகளுக்குத் தேவைப் படுகின்றன. அவை கிளர்வு ஊக்கி (Activator) எனப் படும். பெரும்பாலான நொதிகள் தங்கள் உயர் செயல் திறனுக்காக உலோக கனிம அயனிகளின் துணையைக் கொண்டுள்ளன. ஆர்ஜினேஸ், கோபால்ட், மாங்கனிஸ், இரும்பு ஆகியவற்றின் ஏதாவதொன்றின் அயனி இருந்தால்தான் நன்கு வினை புரியும். இத்தகைய பொருள்கள் நொதியோடு இணைவதால், புரத அமைப்பு சற்று மாறி, நொதியின் வினை ஊக்குத் திறன் அதிகரிக்கப் படுகிறது. இவற்றின் கூட்டமைப்பு தற்காலிகமாகவும், எளிதில் உடைந்து விடக் கூடியதாகவும் விளங்கும்.\n\nஅனைத்து நொதிகளும் சுரக்கப்படும் போதே, செயல் திறனோடு இருப்பதில்லை. அவை செயலற்ற நிலையில் சுரக்கப் படுகின்றன. இவ்வகை நொதிகள் முன் நொதிகள் (Proenzymes) எனப் படும். பெரும்பாலான செரிப்பு நொதிகள், குருதி உறைதலுக்கான நொதிகள் இவ்வகையைச் சார்ந்தவை. சான்றாகப் பெப்சினோஜன் என்னும் முன் நொதி, வயிற்றின் ஹைட்ரோ–குளோரிக் அமிலத்தால் செயல் திறன் மிக்க பெப்சின் நொதியாக மாற்றப் படுகிறது. இந்நிகழ்வின் போது, முன் நொதியின் சில பெப்டைடு இணைப்புகள் உடைக்கப் படுகின்றன. இதனால், இந்நொதியின் வினை புரியும் பகுதி முழுமையற்றதாயினும், முழு வினை புரியக் கூடிய தன்மை பெறுகிறது. —சா. முத்தழகு\n\nநொதி உற்பத்தி, தொழிலக\n\nதொழிலக அளவில் பயன்படும் நொதிகள் குளூக்கோஸ், ஐசோமரேஸ் போன்ற தூய படிகங்கள் முதல் பாக்ரியாட்டின் எனும் உலர்ந்த, தூளாக்கப்பட்ட திசு வரை பல வகைப் பட்டவை. குளூட்டரால்டிஹைடு கொண்டு நிலை நிறுத்தப் பட்ட முழு நுண்ணுயிர்ச் செல்களும் இவற்றிலடங்கும். விலங்கின,பயிரின, நுண்ணுயிரின நொதிகள் அனைத்திற்கும் நொதித் தயாரிப்பு முறை பொதுவானதே.\n\nசெல் புற (extra cellular) நொதிகள் பொதுவாக நீராற்பகுப்பு வகையைச் சார்ந்தவை. அத்தி மரச் சாறிலிருக்கும் ஃபிசின் (ficin) எனும் புரோட்டியேசும், பப்பாளி மரப் பாலிலுள்ள பாப்பயினும், வயிற்றுச் சுரப்பு நீர்மத்திலுள்ள பெப்சினும் இவ்வகையைச் சார்ந்தவையே. நுண்ணுயிர் (நீராற்பகுப்பு) நொதிகள் செல்களால் சுரக்கப் பட்டு, ஒரு வளர் ஊடகத்திற்கு மாற்றப் படுகின்றன. (லாக்டேஸ் , அமைலேஸ், புரோட்டி யேஸ், பெக்டினேஸ்) அமைப்பு. நொதிகள் சில செல்களால், முறை தவறாது சுரக்கப் படுகின்றன. இவை செல்லின் நிறையுடன் நெருங்கிய தொடர்புடையவை. குறிப்பிட்ட தூண்டலின் விளைவாகத் தோன்றும் நிலைக்கேற்பத் தழுவும் (adaptive) நொதி குளுக்கோஸ் ஐசோமரேஸ் போன்றவை மற்றொரு வகையைச் சார்ந்தவை.\n\nநொதி செறிந்த பொருளைத் தயாரித்தலும், சேகரித்தலும் தொழிலக அளவில் செம்மைப் படுத்தப் பட்டுள்ளன. விலங்கின நொதிகள், குறிப்பிட்ட உறுப்புகளிலிருந்து உண்டாக்கப் படுகின்றன. சிறு விலங்குகளின் தொண்டைச் சுரப்பிகளில் தோன்றும் லிபேஸ், கணையத்திலிருந்து சுரக்கப் படும் பாங்க்கிரியாட்டின், குருதிச் சுற்றோட்டத்திலேயே உறை கட்டியைக் கரைக்க வல்லதும், மனிதச் சிறுநீரிலிருந்து பிரித்தெடுக்கப் படுவதுமான யூரோகினேஸ் ஆகியன, ஊடக முதிர்வு நிலை ஆகியன பற்றிய தீவிர கவனம் தேவை. வளர்ச்சி வட்டத்தில் எக்கட்டத்தினால், நொதி விளைச்சல் உயர்கிறது என்பது பற்றி ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்ட வளர் சிதை மாற்றிகளைச் சேர்த்தோ, அகற்றியோ நொதி விளைச்சலைக் கூடுதலாக்க இயலும்.\n\nநீரில் அமிழ்ந்த பண்ணைச் சாதன உத்திக்குப் பயன் படும் நொதிப்பிகளின் (fermenters) கொள்ளளவு 10–200மீ³ என்னும் வரம்பில் அமைந்துள்ளது. நுண்ணுயிர் எதிர் மருந்துத் (antiobiotics) தயாரிப்புக்குத் தொழிலக அளவில் தயாரிப்பதற்கு ஏற்றதன்று எனக் கருதப் படும் நொதிக் கருவிகள் நொதித் தயாரிப்பில் கையாளப் படுகின்றன. நுண்ணுயிர் வழி நொதிகளைத் தயாரிப்பதற்குப் பயனாகும் உயிரிகள் நிலைத் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். உயிரிகளின் தேர்வும், வளர்ச்சியும், நொதி விளைச்சலை அறுதியிடும் காரணி களாகும். இவற்றில் தகுந்த கவனம் செலுத்தினால், நொதி விளைச்சலைப் பல்லாயிரம் மடங்கு உயர்த்தலாம். முன்னாளில், வணிக அளவில் முதன்மையாகத் தேவைப் பட்ட நொதி வகைகள் இயற்கையில் கிடைக்கும் வளர் ஊடகங்களிலிருந்து, தக்க ஆய்வுக்குப் பின் பிரித்தெடுக்கப் பட்டன. சில நேரங்களில், தக்க ஊட்டச் சத்துகளைக் கொண்டு, செய்முறைகள் திருத்தியமைக்கப் பட்டதும் உண்டு. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்டரனேஸ் தயாரிக்கும் உயிரியை விளைவிக்கும் தனி ஊடகத்தில் டெக்ஸ்ட்ரான் மட்டுமே கார்பன் மற்றும் ஆற்றல் தோற்றுவாயாகும். இயற்கையிலிருந்து நொதித் தேர்வு செய்யும் முறையில் செய்யப் பட்டுள்ள சிறப்புத் திருத்தமொன்றின் படி, கதிர் வீச்சு அல்லது வேதிப் பொருளைப் பயன் படுத்தித் தேவைக்கேற்ப மாறு பட்ட உயிரினங்களை (mutants) உருவாக்கி, அவற்றை ஆய்வு செய்வர். அண்மைக் காலத்தில், மரபு சார் பொறியியலில் (genetic engineering) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட நொதியைத் தயாரிப்பதற்கு உதவும் மரபிகளின் (genes) உற்பத்தியை இரட்டிப்பாக்கும் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.\n\nநொதிகள் யாவுமே நொதி மலினம் பெற்ற இயற்கைப் பொருள்களிலிருந்து பிரிக்கப் படுவதில்லை. அமைலேஸ், ஸ்டார்ச் இரண்டுக்கும் கூட்டுத் தோற்றுவாயான பார்லி முளை விடும் போது தோன்றும் சிறு வேரிலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. பொதுவாக, முளைத்தல் நிகழ்வு நொதி அடக்கத்தைக் கூடுதலாக்குகிறது. இது நிகழும் போது, மற்றைய நொதிகள் வளர் ஊடகத்தில் தாமாகவே கலக்கின்றன. பெசிலஸ் சப்ட்டிலிசின் (Bacillus subtilis) எனும் அமைலேஸ் நொதி ஆழமான தொட்டிப் பண்ணையில் தயாரிக்கப் பட்டு, நீர்ம வடிவிலேயே துணிகளிலிருந்து மிகை கஞ்சியை அகற்றுவதற்குப் பயன் படுகிறது. சாறு இறக்கம் (extraction) எனும் உத்தி எளிய, சிக்கலற்ற வழி முறையாகத் தோன்றினாலும், நொதிகளைப் பிரித்தெடுப்பதற்கு முன்பாகச் செல்கள் திறக்கப் பட வேண்டும். செல் சவ்வுடன் நொதிகள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் வாய்ப்புண்டு. மைடோ காண்ட்ரியா போன்ற ஒழுங்கு படுத்தப் பட்ட சிற்றுறுப்புகளிலும் (organelles) நொதிகள் தங்கி விடலாம். எனவே, சாறு இறக்குவதற்கு முன்போ, நிகழ்வின் போதோ, செல்கள் திறக்கப் பட்டு, நொதிகள் கரைய வல்லனவாக்கப் பட வேண்டும். பெரும்பாலும், இவ்வழி முறை தன்னிச்சையாகவே நிகழ்ந்து விடுகிறது. செல்கள் இறந்தவுடன், தன் முறிவு (antolytic) வகை நொதிகள் செல்லிலிருந்து வெளி வந்து, இதனைச் செய்து முடிக்கின்றன. டொலுயீனால் கொல்லப் பட்ட பெனிசீலியம் நொட்டேட்டம் (Penicillium notatum) எளிதில் தன் முறிவு அடைகிறது. மாறாக, சாக்கரோமைசேஸ் செரிவிசே (Saccharomyces cerevisial), அசெட்டேட் டினால் எளிதில் பிளாஸ்மாவாற் பகுப்பு (plasmolysis) அடைந்தாலும், செல்லை உடைப்பதற்கு மிகு நறுக்கு விசை தேவைப் படுகிறது. செல் பிளப்பைச் செயலாக்குவதற்கு, நொதி சேர்த்தல், செவி உணரா ஒலியைப் பயன் படுத்துதல், குண்டு ஆலையிடல் (ball milling), அரைத்தல், உறையச் செய்து மீண்டும் உருக்குதல் (freezing and thawing), நன்கு கலத்தல் ஆகிய முறைகள் பயன் படுகின்றன.\n\nநொதிக் கரைப்புக்குத் தன் முறிவினால் விளையும் செல்லுறை நொதிகளே உதவுகின்றன. மேற்பரப்புச் செயல், லைசோசைம் ஆகியவற்றைச் சேர்த்தல், நன்கு அழுத்தி, பின்பு அழுத்தத்தைத் திடீரென விலக்குதல், உறைந்த நிலையில் அரைத்தல் போன்ற உத்திகள் பயனாகின்றன. கரைத்த பின்பு வடிகட்டல் அல்லது எதிரோட்டச் சாறு இறக்கல் வாயிலாக நொதிகள் பிரித்துப் பெறப் படுகின்றன.\n\nதூய்மையாக்கலும், செறிவூட்டலும். பெரும்பாலும், தொழிலக நொதிகளுக்கு நீரியச் சாற்றைச் செறிவூட்டி நிலையாக்கினால் போதுமானது. தேவைப் படின், நீருடன் கலக்க வல்ல கரைப்பான்௧ளான அசெட்டோன், மெத்தனால், எத்தனால் ஆகியவற்றைச் சேர்த்து நொதிகளை வீழ் படிவாக்கலாம். கரைப்பான் விகிதமும், மதிப்பும் இம்முறையில் செம்மைக்கு வித்திடும் காரணிகளாகும். அசெட்டோன்–நீர் விகிதம் 0.5–1.5 வரம்பிலும், ஆல்கஹால்–நீர் விகிதம் 2.5–4 வரம்பிலும் அமைய வேண்டும். இக்கலவைகளில் பெருவாரியான நொதிகள் நிலைத்திருப்பதில்லையாதலால், அவை 0–10°C என்னும் தாழ் வெப்ப நிலை வரம்பில் வீழ் படிவாக்கப் படுகின்றன. கரைப்பானுடன் தொடர்புறும் கால இடைவெளி இயன்ற வரை குறைவாக இருத்தல் வேண்டும். பல முறைகளில், இந்நேரம் சில நிமிடங்களுக்கு மட்டும் நிகழ்த்தப் படுகிறது.\n\nவீழ் படிவான நொதியைத் தகட்டுச் சட்ட வடி கட்டியில், (plate and frame filter) வடி கட்டிப் பிரிக்க வேண்டும். வடி கட்டுதல் விரைவு படுத்துவதற்கு டையாட்டம் மண் சேர்க்கப் படலாம். உயர் விசை மைய விலக்கலாலும், இப்பிரிப்பை நிகழ்த்தலாம். கூடை வடிவ மைய விலக்கி (basket centrifuge) இத்துறையில் பெரிதும் துணையாகிறது.\n\nநொதி, வீழ் படிவு தாழ் வெப்ப நிலைகளில் (0–50°C)விரைவாக வெற்றிடத்தில் உலர்த்தப் படும். தயாரிக்கப்பட்ட நொதியை, ஆவியாகும் கரைப்பான் நன்கு உலரும் வரை, தாழ் வெப்ப நிலையில் வைத்திருக்க உதவுகிறது. உலர்ந்த நொதி பொடியாக்கப் பட்டு, மதிப்பிடப் பட்டு, தர நிர்ணயத்திற்குப் பின், பைகளில் நிரப்பப் படுகிறது.\n\nசூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு, தொழிற் சாலைகளில் கரிம–நீர்ம ஆவி பரவுவதால் தோன்றும் சிக்கல் பற்றிய ஒழுங்கு விதிகள், கரிம நீர்ம விலையேற்றம் ஆகியன நொதித் தயாரிப்பில் புதிய திருப்பங்களைத் தோற்றுவித்துள்ளன. நீர்ம அளவைப் பெருமளவு குறைக்கும் நோக்கத்துடன், நுண் வடிகட்டல் முறை பின்பற்றப் படுவதால், கரைப்பான் தேவையும் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. தற்போது, நொதிகள் நீர்ம வடிவில் தயாரிக்கப் படுவதால், கரைப்பான் தேவை ஏறக் குறையத் தவிர்க்கப் பட்டு விட்டது.\n\nசில நொதிகள் மிக உயர் நிலைத் தூய்மையாக்கலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். நொதிகள் புரதங்களாகையால், புரதங்களைத் தூய்மையாக்கும் உத்திகள் இங்கும் பயனாகின்றன. அம்மோனியம் சல்ஃபேட், மக்னீசியம் சல்ஃபேட் ஆகியவற்றால் வீழ் படிவாக்கல், குளிர் உலர்வு ஆகியன குறிப்பிடத் தக்க முறைகளாகும். அயனிப் பரிமாற்ற நாட்ட வகைப் பரப்புக் கவர்ச்சிப் பகுப்பு, மின் சார்பு இறுத்து வடித்தல் (electrodecantation), கூழ் வடி கட்டல் ஆகிய நுண்மை மிக்க உத்திகள் தற்போது வழக்கிலுள்ளன. விரும்பத் தகாத உடன் விளைவுகளைத் தவிர்க்க வேண்டியாயினும், தூய்மையாக்கல் நிகழ்த்தப் பட வேண்டும். எடுத்துக் காட்டாக, மியூகர் மிசை (Mucor michei) எனும் நுண்ணுயிர் மிகுந்த அளவில் லிப்பேஸ் எஸ்ட்டரேஸ் நொதியைத் தருவதுடன், அமில புரோட்டியேசையும் தருகிறது. லிப்பேசைக் குறைக்கா விடில், அது பாலாடைக் கட்டியில் நீராற் பகுப்பு நிகழ்த்தி, நெடியை உருவாக்கும். சூடு படுத்தியும், அமிலம் சேர்த்தும், லிப்பேசை மட்டும் செயலற்றதாகச் செய்யலாம். குளுகோஅமைலேசில் மாசுப் பொருளாக விளங்கும் டிரான்ஸ்குளுகோசிடேசை மலியக் நீரிலியைப் பயன் படுத்தி அகற்றலாம்.\n\nதயாரிக்கப் பட்ட நொதியை, நிலைத்ததாகச் செய்வதற்குப் பின் வரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. அவை: PH மதிப்புத் திருத்தி; பாஸ்ஃபேட், சிட்ரேட், சில கரிம மற்றும் கனிம அமிலங்கள்; பாதுகாப்பான்கள்: நுண்ணுயிர் எதிரிகளான பென்சோயெட், சார்பேட்; மிகு ஊடழுத்தப் பொருள்: சோடியம் குளோரைடு, கிளிசரால், சார்பிட்டால், எத்திலீன் கிளைகால்; தனித்து ஒதுக்கும் பொருள்: EDTA, சிட்ரேட்; வினையூக்கி: கால்சியம், கோபால்ட் உப்பு; விளாவி: நீர், டையாட்டம் மண், லாக்ட்டோஸ், மரத் தூள், மானிட்டால், தயிர் நீர்மம். —மே.ரா.பாலசுப்ரமணியன் துணை நூல். Krik–Othmer Encyclopedia of Chemical Technology, vol.9, Third Edition, Wiley Interscience, 1980.\n\nநொதிச் செயலியல்\n\nஇரைப்பை, குடல் மண்டலம் வழியாகவே பெரும்பாலான சத்துப் பொருள், வைட்டமின், தாதுப் பொருள், நீர்மம் ஆகியன உட்கவரப் படுகின்றன. புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் யாவும் உடைக்கப் பட்டுச் செரிமானமாகும் நிலையில், சிறு குடலுக்குள் அனுப்பப் படுகின்றன. செரிமான மான பொருள் வைட்டமின், தாதுப் பொருள், நீர் யாவும் சிலேட்டுமப் படலத்தை ஊடுருவி, நிண நீர் அல்லது குருதியை அடைகின்றன. செரிமானம் அடைய மிகவும் தேவையானவை செரிமான நொதிகளாகும். இவற்றில் சில உமிழ் நீர்ச் சுரப்புக் கட்டிகளிலும், இரைப்பைகளிலும், கணையத்திலும் காணப் படுகின்றன. சில நொதிகள் சிறு குடலின் செல் படலங்களில் அமைந்துள்ளன. இரைப் பையில் சுரக்கப் படும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கல்லீரலில் சுரக்கும் பித்த நீரும், நொதிகளுக்கு உறுதுணையாக உள்ளன.\n\nஉமிழ் நீர்ச் சுரப்பிகளின் நொதியான உமிழ் நீர், அமைலேஸ் நீர்மமாகி, டெக்ஸ்டிரின், மால்ட்டோ டிரியோஸ் ஆகியவற்றை உண்டாக்கும். இரைப் பையின் நொதிகளான பெப்சின், டிரிப்சின், கைமோடிரிப்சின்,எலாஸ்டேஸ், கார்பாக்சிபெப்டிடேஸ் ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் எண்டரோகைனேஸ், டிரிப்சின் ஆகியவற்றின் உதவியால், அமினோ அமிலத்தையும், அர்ஜினின், லைசின் ஆகியவற்றையும் உருவாக்குகின்றன. கணையத்தின் நொதிகளான கார்பர்க்சிபெப்டிடேஸ் B கணைய லைபேஸ், கணைய எஸ்ட்ரேஸ், கணைய அமைலேஸ், ரிபோ நியூக்ளியேஸ், டி ஆக்சிரிபோ நியூக்ளியேஸ், பாஸ்ஃபோலைப்பேஸ் ஆகியவை டிரிப்பிசினன் உதவியால், அமினோ அமிலம், மோனோ கிளிசரைடு ,கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் நியூக்ளியோடைடு, லைசோ லெசித்தீன் ஆகியவற்றை உருவாக்குகின்றன. சிறு குடல் சிலேட்டுமப் படலத்திலிருந்து எண்டரோ பெப்டிடேஸ், அமினோ பெப்டிடேஸ், லாக்டேஸ், சுக்ரேஸ், நியூக்ளியேஸ் போன்ற நொதிகள் உண்டாகி, டிரிப்சின், அமினோ அமிலம், குளுகோஸ் , காலக்டோஸ், பெண்டோஸ்,பியூரின், பிரிமிடின் ஆகியவற்றை உருவாக்குகின்றன. பின்னர், இரைப்பைச் சிறு குடல் துளையிலிருந்து குருதி ஓட்டத்தைப் பரவல் (diffusion) முறை மூலம் அடைகின்றன.\n\nசிறு குடலில் சிலேட்டுமச் செல்களில் பிரஷ் விளிம்பு (brush border) இருக்கிறது. இதில், நுண் உறிஞ்சி கிளைகோகாலிக்ஸ் என்னும் அடுக்கால் மூடப் பட்டுள்ளது. இதில், அமினோ சர்க்கரை காணப் படுகிறது. கடைச் சிறு குடலின் துளை 0.75 மி.மி. விட்டமாகவும், இலியத்தின் துளை 0.35 மி.மி. ஆகவும் அமையும். நொதி இரா விடில், செரிமானமும், உட்கவர்தலும் நடைபெறாது. பெரும்பாலான இரைப்பை–சிறு குடல் நோய்கள் நொதி இன்மையால் உண்டாகின்றன. —மு.கி.பழனியப்பன்\n\nநொதி (உயிர் வேதியியல்)\n\nவளி மண்டல அழுத்தத்திலும், வெப்ப நிலையிலும் பல்வேறு வேதி வினைகள் மிக மெதுவாக நிகழ்கின்றன. ஆனால், இதே வகை வினைகள் உடலில் உள்ள உயிர்ச் செல்களுக்குள் மிக விரைவாக நிகழ்கின்றன. இதற்குக் காரணம், உடலில் உற்பத்தியாகும் சில வினையூக்கிகளேயாகும். 1878ஆம் ஆண்டில் குனே என்பார் இவ்வினையூக்கிகளுக்கு, அதாவது உயிர்ச் செல்களில் உண்டாகும் கரிம வினையூக்கிகளுக்கு நொதிகள் (enzymes) எனப் பெயரிட்டார்.\n\nநொதி என்னும் பெயர் “ஈஸ்ட்டில்” என்று பொருள் படும்(en-உள்ளே; Zyme=ஈஸ்ட்). ஈஸ்ட் என்னும் நுண்ணுயிரி வெளிப் படுத்தும் சைமேஸ் என்னும் நொதி சர்க்கரைக் கரைசலை எத்தில் ஆல்கஹால் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றியது கண்டறியப் பட்டது. இவ்வினைக்கு ஆல்கஹால் நொதிப்பு (alcoholic fermentation) என்று பெயர். இவ்வினையே நொதி என்னும் பெயர் வரக் காரணமாக அமைந்தது.\n\n1950ஆம் ஆண்டில் சம்னர், மைபாக் ஆகியோர் நொதிக்குத் தக்கதொரு வரையறை வழங்கினர். இதன் படி, நொதிகள் என்பன குறிப்பிட்டதொரு வினையை மட்டும் ஊக்கும் எளிய அல்லது இணைவுப் புரதங்களாகும்.வரலாறு. 1830ஆம் ஆண்டில் டூப்ரன்ஃபாட் என்பார், முளை விட்ட பார்லி விதையில் இருந்து, மால்ட் சாரத்தைத் தயாரித்தார். இச்சாரம், ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக மாற்றும் இயல்பைக் கொண்டிருந்ததை அறிந்தார். பின்பு 1833ஆம் ஆண்டில் பேயன், பெர்சோஸ் என்னும் இருவரும், மால்ட் சாரத்தை ஆல்கஹால் மூலம் வீழ் படிவாக்கி, டயாஸ்டேஸ் என்னும் நொதியைத் தயாரித்தனர். அதே ஆண்டில், டீ.சாசர் என்பார், முளைக்கும் கோதுமையிலிருந்து டயாஸ்டேஸ் போன்ற மற்றொரு நொதியைத் தயாரித்தார். இந்நொதி டயாஸ்டேஸ் போலவே, ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக மாற்றியது.\n\n1857ஆம் ஆண்டு பாஸ்ச்சூர் என்பார், உயிருள்ள ஈஸ்ட் செல்கள் ஆல்கஹால் நொதிப்பு வினை நடை பெற வைப்பதை அறிந்தார். இதன் மூலம் சில வினைகள் உயிர்ச் செல்களால் அல்லது உயிரற்ற பொருள்களால் ஊக்குவிக்கப் படும் உண்மை புலப் பட்டது. இவ்வினையூக்கிகள் ஒழுங்கு அமைப்பான நொதிப் பொருள்கள், ஒழுங்கு அமைப்பில்லாத நொதிப் பொருள்கள் என இரு வகையாகப் பிரிக்கப் பட்டன. ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் ஒழுங்கமைப்பான நொதிப் பொருள் வகையையும், டயாஸ்டேஸ் போன்றவை ஒழுங்கமைப்பில்லாத நொதிப் பொருள் வகையையும் சேர்ந்தவை. உடலில் உற்பத்தியாகும் வினையூக்கிகள் ஒழுங்கமைப்பில்லாத நொதிப்பொருள் வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து குனே என்பார் அவற்றை நொதி எனப் பெயரிட்டார்.\n\n1926ஆம் ஆண்டில் சம்னர் என்பார், ஜாக் வகை அவரையில் இருந்து யூரியேஸ் என்னும் நொதியைப் பிரித்துத் தூய்மைப் படுத்தினார். இவருடைய கண்டு பிடிப்பு முறை பிற்காலத்தில், நொதிகளைத் தூய முறையில் தயாரிக்க வழி வகுத்தது. 1937ஆம் ஆண்டில் சம்னர், டெலின்ஸ் ஆகியோர் எருமையின் கல்லீரலில் இருந்து காட்டலேஸ் என்னும் நொதியைத் தயாரித்தனர். 1946ஆம் ஆண்டில் நார்த்ராப் என்பார் பன்றியின் வயிற்றிலிருந்து, பெப்சின் நொதியையும், 1950இல் குனிட்ஸ் என்பார் எருமைக் கணையத்திலிருந்து DNA நொதியையும் தயாரித்தனர். இவ்வாறே, பல்வேறு ஆய்வாளர்களால் இது வரை 840 நொதிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\n\nபெயரிடும் முறைகளும், வகைகளும் தளப் பொருள்களைப் பொறுத்துப் பெயரிடுதல். நொதிகள் சில குறிப்பிட்ட தளப் பொருள்கள் (substrates) மீது வினை புரிகின்றன. இத்தளப் பொருள் பெயருடன் ஏஸ் (-ase) என்னும் பின்னொட்டைச் சேர்த்து நொதிகளுக்குப் பெயரிடப் பட்டது. சான்றாக, மால்ட்டோஸ் சர்க்கரையின் மீது வினை புரியும் நொதிக்கு மால்டேஸ் எனவும், சுக்ரோஸ் சர்க்கரை மீது வினை புரியும் நொதிக்குச் சுக்ரேஸ் எனவும் பெயராகும். அட்டவணை 1இல் தளப் பொருள்களும், அவற்றின் மீது வினை புரியும் நொதிகளின் பெயர்களும் தரப் பட்டுள்ளன. அட்டவணை 1\n\nஊக்குவிக்கும் வினையைப் பொறுத்துப் பெயரிடல்.சில நொதிகள் குறிப்பிட்ட வினைகளை மட்டும் ஊக்கவிக்கின்றன. அவ்வினைகளின் பெயருடன் ஏஸ் என்னும் பின்னொட்டைச் சேர்த்துப் பெயரிடப் பட்டன. சான்றாக, நீராற் பகுப்பு வினை ஊக்குவிக்கும் நொதிக்கு ஹைட்ரோலேஸ் எனப் பெயரிடப் பட்டது. அட்டவணை 2இல் வினைகளும், அவற்றை ஊக்கும் நொதிகளின் பெயர்களும் தரப் பட்டுள்ளன. அட்டவணை 2\n\nதளப் பொருள் மற்றும் ஊக்குவிக்கும் வினை இரண்டையும் சேர்த்துப் பெயரிடல். தளப் பொருளுடன் நிகழ்த்தும் வினையையும் சேர்த்து, நொதிகளுக்குப் பெயர்கள் கொடுக்கப் பட்டன. சான்றாக, சக்சினிக் அமிலத்திலிருந்து, ஹைட்ரஜனை நீக்கும் வினையை ஊக்குவிப்பது சக்சினிக் டீஹைட்ரோஜினேஸ் என்னும் நொதியாகும். அதே போன்று, ட குளுட்டாமிக் அமிலத்திலிருந்து, ஹைட்ரஜனை நீக்கும் நொதிக்கு ட குளுட்டாமிக் ஹைட்ரோஜினேஸ் எனப் பெயரிடப் பட்டது.\n\nதயாரிக்கப்படும் பொருளைப் பொறுத்துப் பெயரிடல். நொதிகள் தம் செயலால் தயாரிக்கும் பொருளின் பெயருடன் ஏஸ் என்னும் பின்னொட்டைச் சேர்த்துப் பெயரிடப் பட்டது. சான்றாக, ரோடோனேட் டைத் தயாரிக்கும் நொதிக்கு, ரோடோனேஸ் எனப் பெயரிடப் பட்டது.\n\nமொத்த வேதி வினையைப் பொறுத்துப் பெயரிடல். 1961ஆம் ஆண்டில் (International Union of Biochemistry–IUB) உயிர் வேதியியல் ஐக்கிய வேதி வினைகளைப் பொறுத்து, நொதிகளுக்குப் பெயரிடும் விதிகளையும் அவற்றின் வகைகளையும் வரையறுத்தது. இம்முறை சிக்கலாக இருப்பினும், துல்லியமும், விளக்கமும் கொண்டது.\n\nIUB விதிகள் பின்வருமாறு. 1. வேதி வினைகளும், அவற்றை ஊக்குவிக்கும் நொதிகளும் 6 முதன்மைப் பிரிவுகளாகவும் (major class), ஒவ்வொரு முதன்மைப் பிரிவும் 4–13 துணைப் பிரிவுகளாகவும் (sub class) பிரிக்கப் பட்டுள்ளன.\n\n2. நொதியின் பெயர் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தளப் பொருளின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி ஏஸ் என்னும் பின்னொட்டுடன் முடியும் வினையைக் குறிக்கிறது.\n\n3. வினையின் பண்பைக் குறிக்க வேண்டிய தேவையிருப்பின், அதனை இறுதியில் அடைப்புக்குள் தர வேண்டும்.\n\nசான்றாக, ஒரு நொதி பின் வரும் வினையை ஊக்குவிப்பதாகக் கொள்ளலாம்.\n\nL மாலேட் + NAD \\longrightarrow பைருவேட் + CO₂ + NaOH + H+ இவ்வினையின் தளப் பொருள்கள் = மாலேட்: NAD வினையின் பெயர் = ஆக்சிஜனேற்ற ஒடுக்கம், கார்பாக்சில் நீக்கம்.\n\nஆகவே, இந்நொதியின் பெயர் L-மாலேட்: NAD ஆக்சிடோரெடக்டேஸ்.\n\nஒவ்வொரு நொதிக்கும் முறையான குறியீடு எண் (Systematic code number) கொடுக்கப் பட்டுள்ளன. இந்த எண் நொதிக் கமிஷன் எண் (enzyme commission number–EC) என்பர். இது நான்கு இலக்க எண்ணைக் கொண்டது. முதல் எண் முதன்மைப் பிரிவின் எண்ணைக் குறிக்கும். இரண்டாம் எண் துணைப் பிரிவின் எண்ணைக் குறிக்கும். மூன்றாம் எண் துணைப் பிரிவில் உள்ள உள் துணைப் பிரிவின் எண்ணைக் (sub–sub class number) குறிக்கும். இறுதி எண் துணைப் பிரிவின் கீழ் உள்ள உள் துணைப் பிரிவில், எந்தக் குறிப்பிட்ட எண்ணைக் கொண்டது என்பதைக் குறிக்கும். சான்றாக EC2, 7.1.1 என்பதில் 2 என்பது முதன்மைப் பிரிவையும் (டிரான்ஸ்ஃபரேஸ்), 7 என்பது துணைப் பிரிவையும் (பாஸ்பேட் மாற்றம்) அடுத்த 1 என்பது உள் துணைப் பிரிவையும் (ஆல்கஹால் தொகுதி, பாஸ்ஃபேட் தொகுதி ஏற்பியாக) இறுதி 1 என்பது உள் துணைப் பிரிவில், முதல் நொதியான ஹெக்சோகைனேஸ் என்பதையும் குறிக்கும்.\n\nகுறிப்பிட்டதொரு வகையில் அடங்காத நொதிகளை 99 என்னும் இறுதி எண்ணால் குறிக்கின்றனர். நொதிகளின் வகைகள் நொதிகள் 6 முதன்மைப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவை பின் வருமாறு. ஆக்சிடோரிடக்டேஸ். ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைகளை ஊக்குவிக்கும் நொதிகள் ஆக்சிடோரிடக்டேஸ் எனப் படும். இந்நொதிகள் இரு தளப் பொருள்களுடன் வினை புரிகின்றன.\n\nஇந்நொதிகள் எலெக்ட்ரான் இடப்பெயர்ச்சிக்குத் துணை புரிகின்றன. - CH -OH,-C = O,- CH-CH, -CH- NH₂, -CH=NH ஆகிய தொகுதிகளை இவை, ஆக்சிஜனேற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் உட்படுத்தப் படுகின்றன. இப்பிரிவில் உள்ள சில முக்கிய துணைப் பிரிவுகளாவன:\n\nஅ. 1.1 -CH-OH தொகுதியின் மீது வினை புரியும் நொதிகள்: சான்றாக, 1.1.1.1 ஆல்கஹால் : NAD ஆக்சிடோரிடக்டேஸ் இதன் பொதுப் பெயர்: ஆல்கஹால் டீஹைட்ரோஜினேஸ்\n\nஆ. 1.3. -CH- CH தொகுதியின் மீது வினை புரியும் நொதிகள். சான்றாக. C.A.1.3.2.2 அசைல் சைட்டோகுரோம் சி. ஆக்யசிடோரிடக்டேஸ் . இதன் பொதுப் பெயர்: அசைல் CoA. டீஹைட்ரோஜினேஸ்.\n\nடிரான்ஸ்ஃபரேஸ்.இரண்டு தளப் பொருள்களிடையே ஒரு தொகுதியை, இட மாற்றம் அடையும் வினையை ஊக்குவிக்கும் நொதிகள், டிரான்ஸ்ஃபரேஸ் எனப் படும். S - G + S'\\longrightarrow S + G - S' S-S' என்பவை இரண்டு தளப் பொருள்கள். G என்பது இட மாற்றம் அடையும் தொகுதி. இந்நொதிகள் ஆல்டிஹைடு , கீட்டோன், அசைல் , கிளைகோசைல், அல்க்கைல் போன்ற தொகுதிகளை இட மாற்றம் அடைய உதவுகின்றன. இப்பிரிவில் உள்ள சில முக்கிய குறிப்பிடத் தக்க துணைப் பிரிவுகளாவன:\n\nஅ. 2.3 அசைல் டிரான்ஸ்ஃபரேஸ்.சான்றாக, 2.3.1.6 அசெட்டைல் CoA கோலின் ஓ. அசெட்டைல் டிரான்ஸ்ஃபரேஸ். இதன் பொதுப் பெயர்: கோலின் அசெட்டைல் டிரான்ஸ்ஃபரேஸ்\n\nஆ. 2.4 கிளைகோசில் டிரான்ஸ்ஃபரேஸ். சான்றாக, 2.4.1.1. α-1,4 - குளுகான்; ஆர்த்தோபாஸ்ஃபேட் கிளைகோசில் டிரான்ஸ்ஃபரேஸ். இதன் பொதுப் பெயர்: பாஸ்ஃபோரிலேஸ்.\n\n3. ஹைட்ரோலேஸ். நீரின் H+ , OH --அயனிகளைத் தளப் பொருளுடன் இணைக்கும் வினையை ஊக்குவிக்கும் நொதிகள் ஹைட்ரோலேஸ் என்பனவாகும்.இவை எஸ்ட்டர், ஈதர், பெப்டைடு,அமில நீரிலி ஆகிய தளப் பொருள்களுடன் இவ்வினையைப் புரிய உதவுகின்றன. இப்பிரிவில் உள்ள குறிப்பிடத் தக்க துணைப் பிரிவுகளாவன:\n\nஅ. 3.1 எஸ்ட்டர் பிணைப்பு மீது வினைப் படும் நொதிகள். சான்றாக 3.1.1.3 கிளிசரால் எஸ்ட்டர் ஹைட்ரோலேஸ். இதன் பொதுப் பெயர்: லிப்பேஸ்.\n\nஆ. 3.2. கிளைகோசைல் சேர்மம் மீது வினைப் படும் நொதிகள்.சான்றாக, காலக்டோசைட்டேஸ்.\n\nலையேஸ். தளப் பொருளிலிருந்து சில குறிப்பிட்ட தொகுதிகளை நீக்கும் வினையை ஊக்குவிக்கும் நொதிகள் லையோஸ் எனப் படும். இவ்வினையில் இரட்டைப் பிணைப்புடைய சேர்மம் கிடைக்கிறது. இந்நொதிகள், கார்பன்-கார்பன், கார்பன்-ஆக்சிஜன், கார்பன்-நைட்ரஜன் பிணைப்புகள் மீது வினை புரிகின்றன. இப்பிரிவில் உள்ள சில குறிப்பிட்டத் தக்க துணைப் பிரிவுகளாவன.\n\nஅ. 4.1. கார்பன்-கார்பன் லையேசெஸ், சான்றாக, ஆல்டொலேஸ்.\n\nஆ. 4.2. கார்பன்-ஆக்சிஜன் லையேசெஸ். சான்றாக, பியூமரேஸ்.\n\nஐசோமெரேஸ். மூலக்கூறு உள் சார்ந்த இட மாற்ற வினையின் (intra molecular rearrangement) மூலம் ஒளியியல், வடிவ அல்லது இடச் சார்பு மாற்றியங்களின் (iosomers) தொகுதிகளை இட மாற்றம் புரிய வைத்து மாற்றிய அமைப்புகள் உண்டாகும் வினையை ஊக்குவிப்பது ஐசோமெரேஸ் எனப் படும். இதன் இன்றியமையாத துணைப் பிரிவுகளாவன:\n\nஅ. 5.1 எபிமெரேஸ், சான்றாக 5.1.1.1. அலனின் ரெசிமேஸ்.\n\nஆ. 5.2. சிஸ் டிரான்ஸ் ஐசோமெரேஸ். சான்றாக ரெடினீன் ஐசோமெரேஸ்.\n\nலிகேஸ். ATP போன்ற சேர்மங்களில் இருக்கும் பைரோபாஸ்ஃபேட் பிணைப்பைப் பிளப்பதால், வெளிப் படும் ஆற்றலைப் பயன் படுத்தி இரண்டு சேர்மங்களை இணைத்து, ஒரு புதிய சேர்மத்தை உண்டாக்கும் வினையை ஊக்குவிப்பது லிகேஸ் எனப் படும் நொதியாகும். இவ்வினையின் மூலம் கார்பன்-கார்பன் பிணைப்புகள் உண்டாகின்றன. இதிலுள்ள சில இன்றியமையாத் துணைப் பிரிவுகளாவன:\n\nஅ. 6.2 கார்பன்-கந்தகம் பிணைப்பை ஊக்குவிப்பதும் நொதிகள். சான்றாக 6.2.1.2. அசெடேட்: CoA லிகேஸ்.\n\nஆ. 6.3. கார்பன்-நைட்ரஜன் பிணைப்பை ஊக்குவிக்கும் நொதிகள். சான்றாக,6.3.1.2. L-குளுட்டாமேட்; அம்மோனியாலிகேஸ் . இது வரை கண்டு பிடிக்கப் பட்ட 840 நொதிகளில், 225 நொதிகள் ஆக்சிடோரிடக்டேஸ் பிரிவிலும், 205 நொதிகள் ஹைட்ரோலேஸ் பிரிவிலும், 105 நொதிகள் லையேஸ் பிரிவிலும், 45 நொதிகள் ஐசோமெரேஸ் பிரிவிலும் 45 நொதிகள் லிகேஸ் பிரிவிலும் அடங்கும்.\n\nநொதிகளின் பண்புகள் வேதி இயைபைப் பொறுத்து இவை எளிய புரத நொதிகள், சிக்கலான புரத நொதிகள் என இரு வகையாகப் பிரிக்கப் படுகின்றன.\n\nஎளிய புரத நொதிகள். எளிய அமைப்பைப் பெற்ற இவை, அமினோ அமிலங்களால் ஆன புரதங்கள். எ-டு: யூரியேஸ், அமைலேஸ்.\n\nசிக்கலான புரத நொதிகள். இவை இணைவுப் புரதங்கள் (conjugated proteins) ஆகும். இவை அப்போ நொதி என்னும் புரதப் பகுதியையும், புரதமில்லாப் பகுதியையும் (prosthetic group) கொண்டது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து, மொத்தமாக நொதி மூலக் கூறு ஹேலோநொதி (haloenzyme) என்ற பெயர். எ-டு: காட்டலேஸ், சைடோகுரோம்.\n\nஒரு நொதி தனிப் பட்ட பண்பைப் பெறுவது, அது கொண்டுள்ள புரதமிலாத் தொகுதியின் இயல்பினாலேயே ஆகும். புரதமிலாத் தொகுதியைக் கூழ்மப் பரிப்பி (dialysis) முறையில், நொதியிலிருந்து தனியே பிரிக்கலாம். இவ்விதப் புரதமிலாத் தொகுதிகளுக்குச் சக நொதி (co-enzyme) அல்லது சககாரணி (co-factor) எனப் பெயர். பெரும்பான்மையான வைட்டமின்கள் சக நொதிகளாகச் செயல் புரிவன.\n\nகூழ்மப் பண்பு. நொதிகள் கூழ்மத் துகளாக உள்ளன. அவற்றின் மூலக் கூறுகள் பெரியவை. பெரும் பான்மையான நொதிகளின் மூலக் கூறு நிறை 50,000-5,00,000 என அமையும். ஒரு சில, குறைந்த மூலக் கூறு நிறை கொண்டவை. நொதிகளின் மூலக் கூறு நிறையை ஆராயும் போது அவை 17,500 இன் மடங்குகளாக உள்ளமையைக் காணலாம். அட்டவணை 3இல் நொதிகளின் மூலக் கூறு நிறைகளும் அவற்றின் மடங்குகளும் தரப் பட்டுள்ளன. அட்டவணை 3\n\n(n* என்பது ஒரு முழு எண். அதன் மதிப்பு 17,500). அதிக நிறை, அதிக பருமன் ஆகியவற்றின் காரணமாக, நொதிகளின் விரவுதல் வேகம் (rate of diffusion) மிகக் குறைவு.\n\nவினையூக்கிப் பண்பு. உயர் திசுக்களில் நிகழும் வேதி வினைகள் வேகத்தை, நொதிகள் உயர்த்துகின்றன. ஆனால், இவை வினையில ஈடுபடுவதில்லை. சில நொதிகள் வினைகளில் ஈடுபட்டாலும், இறுதியில் தனியாகப் பிரிந்து விடுகின்றன. எனவே, மிகக் குறைந்த அளவில் நொதிகள் இருப்பினும், மிக அதிக வினையாற்றல் கொண்டவையாக உள்ளன.\n\nஒரு நொதியின் வினையூக்கி ஆற்றலை மாற்று எண் (turn over number) என்னும் மதிப்பால் குறிக்கின்றனர். ஒரு நொடியில், எத்தனை தளப் பொருள் மூலக் கூறுகளை விளை பொருளாக மாற்றத் துணை புரிகிறதோ, அந்த எண்ணே அந்நொதியின் மாற்று எண் ஆகும். மாற்று எண் 1–10 வரை உள்ளது. கார்போனிக் அன்ஹைட்ரேஸ் என்னும் நொதி மிக உயர்ந்த மாற்று எண்ணைக் கொண்டது. (நொடிக்கு 60000) அட்டவணை 4இல் சில நொதிகளின் மாற்று எண்கள் தரப் பட்டுள்ளன.\n\nஅட்டவணை 4\n\nபொதுவாக வெப்ப நிலை உயரும் போது, நொதியின் வினை வேகம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு 10°C உயர்வுக்கும், நொதியின் வேகம் 2–3 மடங்கு அதிகரிக்கிறது. வினையின் வேகம் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலை வரை அதிகரித்துச் சென்று பின்பு, குறையத் தொடங்குகிறது. 60°C வெப்ப நிலைக்கு மேல் நொதியின் மூலக் கூறு அமைப்பில் ஒரு மீளா மாற்றம் (irreversible change) நிகழ்ந்து, வீழ் படிவாக மாறி விடுகிறது. இந்நிலையில் நொதிகள் வினை புரியா நிலையை அடைகின்றன. ஆனால் விதைகள், வித்துகள் (spores) போன்ற உலர்ந்த திசுக்களில் உள்ள நொதிகள் 100–120°C வெப்பம் தாங்க வல்லவை.\n\nவெப்ப நிலையை 0°C அல்லது அதற்குக் கீழ் தாழ்த்தினால், வினை புரியா நிலையை அடையும். ஆனால், வெப்ப நிலை குறையும் போது உண்டாவது ஒரு மீள் மாற்றம் (reversible change) ஆகும். வெப்ப நிலையைப் பழைய நிலைக்கு உயர்த்தினால், மீண்டும் வினை புரியும் நிலையை எய்தும். பெரும்பாலான நொதிகள் 30–40°C வெப்ப நிலையில் வினை புரிகின்றன. சான்றாகக் காட்டலேஸ் 30°C இல் நன்கு வினை புரிகிறது.\n\nவரை படம் 1இல் AB என்னும் கோடு, வெப்ப நிலை உயரும் போது, நொதியின் வினை வேகம் உயர்வதைக் குறிக்கிறது. CD என்னும் கோடு வெப்ப நிலை உயரும் நொதிகள் சிதைவடைவதைச் சுட்டுகிறது. AE என்பது நொதிகளின் நிகர வினை வேகத்தைக் காட்டுகிறது. இது முதலில் உயர்ந்து பின்பு தாழ்கிறது.\n\nவினையின் மீள் தன்மை. நொதியின் வினை, மீள் வினையாகும். சான்றாக, லிப்பேஸ் என்னும் நொதி டிரைபால்மிட்டினை நீராற் பகுத்துக் கிளிசரால், பால்மிட்டிக் அமிலம் ஆகியவற்றைத் தரும். விளை பொருள்களை மீண்டும் வினை புரிய வைத்து, டிரைபால்மிட்டினையும் தர வல்லது.\n\nலிப்பேஸ்\n\nடிரை–பால்மிட்டின் + நீர் ════════ கிளிசரால் + பால்மிட்டிக் அமிலம்\n\nபின்னோக்கு வினையை அதே நொதி ஊக்குவிக்க வேண்டும் என்பதில்லை. வேறொரு நொதியும் அச்செயலைப் புரியலாம். சான்றாக, அர்ஜினேஸ் என்னும் நொதி, அர்ஜினினை யூரியாவாக மாற்ற வல்லது. யூரியேஸ் என்னும் நொதி பின்னோக்கு வினையை நிகழ்த்துகிறது.\n\npH நுட்பம் (pH sensitivity) கரைசலில் உள்ள H* அயனிகளின் செறிவு நொதியின் வினை வேகத்தைக் கட்டுப் படுத்துகிறது. ஒவ்வொரு நொதியும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அல்லது pH எல்லைக்குள் நன்கு வினை புரிகிறது. அந்த pH அளவைக் குறைத்தாலோ , உயர்த்தினாலோ, நொதியின் வினையாற்றல் குறைகிறது.\n\nஅட்டவணை 5 இல் நொதிகள் வினை புரியும் இசைவான pH (optimum pH) அளவுகள் தரப் பட்டுள்ளன. அட்டவணை 5\n\nஇலக்கு வினைத் திறன். ஒவ்வொரு நொதியும் ஒரு குறிப்பிட்ட வினையை மட்டும் ஊக்குவிக்கிறது. இது நான்கு விதமான இலக்கு வினை புரிவதாக் கண்டறியப் பட்டுள்ளது. தனி இலக்கு வினை (absolute target action). சில நொதிகள் ஒரேயொரு தளப் பொருளுடன் மட்டும் வினை புரிகின்றன. சான்றாக, யூரியேஸ் யூரியாவுடன் மட்டும் வினை புரிந்து, கார்பன் டை ஆக்சைடு, அம்மோனியாவாக மாற்றத் துணை புரியும். கார்போனிக் அன்ஹைட்ரேஸ் என்பது கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றை மட்டும் சேர்த்துக் கார்போனிக் அமிலமாக மாற்றத் துணை புரியும்.\n\nஅ. தொகுதி இலக்கு வினை (group specificity). சில நொதிகள் குறிப்பிட்டதொரு தொகுதியை மட்டும் இட மாற்றம் செய்விக்கின்றன. சான்றாக. CH₂-CO-COOH + DPN-H₂ CH₂CH(OH) COOH + DPN ஆ. ஒளியியல் இலக்கு வினை (optical specificity). ஒளியியல் மாற்றியங்களான L மற்றும் D சேர்மங்களில் ஒன்றுடன் மட்டும் நொதி வினை புரிகிறது. சான்றாக, அர்ஜினேஸ் L–அர்ஜினைன் உடன் மட்டும் வினை புரிகிறது. D–அர்ஜினைன் சேர்மத்துடன் வினை புரிவதில்லை. சில நொதிகள் ஒரு வகை ஒளியியல் மாற்றியத்தை மற்றொரு வகை ஒளியியல் மாற்றியமாக மாற்றுகின்றன. சான்றாக L–அலனைன் சேர்மத்தை, அலனைன் ரெசிமேஸ் என்னும் நொதி D அலனைன் ஆக மாற்றுகிறது.\n\nஇ. வடிவ இயல் இலக்கு வினை (geometrical specificity) சில நொதிகள் ஒருபுற (cis), எதிர்ப்புற (trans) மாற்றியத்துடன் மட்டுமே வினை புரிகின்றன.சான்றாக, ஃபியூமரேஸ் பியூமாரிக் அமிலத்துடன் மட்டும் வினை புரிகிறது. மலீக் அமிலத்துடன் வினை புரிவதில்லை.\n\nவினை வழி முறை நொதிகள் ஒரு வினையின் கிளர்வு கொள் ஆற்றலைக் (activation energy) குறைத்து வினையை விரைவில், எளிதில் நடை பெறச் செய்ய உதவும். AB, CDஎன்னும் இரு தளப் பொருள்கள் வினை புரிந்து AD,CB என்னும் விளை பொருள்களைத் தருமெனக் கொள்ளலாம். AB + CD ----⇢ AD + CB நொதிகளின் துணையின்றி நடை பெறும் மேற்காணும் வினையின் கிளர்வு கொள் ஆற்றல் E₁-E₂ எனலாம் (படம் 2). நொதியின் துணையுடன் இவ்வினை நிகழும் போது, கிளர்வு கொள் ஆற்றல் E₃-E₂, அளவு குறைகிறது. குறைந்த ஆற்றலைப் பயன் படுத்தி, அதிக அளவு விளை பொருள்களை அடைய நொதிகள் உதவுகின்றன.\n\nதளப் பொருளுடன் நொதியின் மூலக் கூறு இணைவதற்கு ஏற்றவாறு, நொதியின் வினை புரி இடங்கள் (active sites) உள்ளன. நொதியின் மூலக் கூறு பெரியதாக இருப்பினும், வினை புரி இடம் பரவியிருக்கும் பகுதி சிறியதே ஆகும். வினை புரி இடம் மேடு பள்ளங்களைக் கொண்டது. அவற்றினுள், அஸ்பார்ட்டிக் அமிலம், குளுட்டாமிக் அமிலம், செரின் ஆகிய மூலக் கூறுகள் உள்ளன. COOH, NH₂, CH₂OH முதலிய தொகுதிகள் பரப்புகளில் நீட்டிக் கொண்டிருக்கின்றன.\n\nஃபிஷரின் பூட்டு–சாவி பான்மை. 1898இல் ஃபிஷர் நொதிகள் வினை புரியும் முறையை ஆராய்ந்து, பூட்டு–சாவி பான்மை (lock and key model) வினை வழி முறையை வெளியிட்டார். அவ்வழி முறை பின் வருமாறு:\n\nநொதிகள் இரண்டு படிகளில் (steps) வினை புரிகின்றன. முதல் படியில், ஒரு நொதியின் மூலக் கூறு (E) ஒரு தளப் பொருள் மூலக்கூறுடன் (S) இணைந்து ஓர் இடைச் சேர்மத்தை (ES) தருகிறது. இந்த இடைச் சேர்மத்திற்கு நொதி–தளப் பொருள் அணைவுச் சேர்மம் (enzyme–substrate complex) எனப் பெயர்.இவ்வினை ஒரு மீள் வினையாகும். S இரண்டாம் படியில் (ES) அணைவுச் சேர்மம் சிதைவுற்று, விளை பொருளையும் நொதியையும் தருகிறது.\n\nE + S === ES ES \\longrightarrow P + E P = விளை பொருள்\n\nதளப் பொருள் மூலக் கூறு அமைப்பு நொதியின் வினை புரி இடத்தில் நன்கு பொருந்துமாறு உள்ளது. ஆகவே, நொதியின் வினை புரி இடத்தில் தளப் பொருள் மூலக் கூறு பூட்டில் சாவி போல நன்கு பொருந்துகிறது. ஒரு பூட்டு குறிப்பிட்டதொரு சாவிக்கு மட்டுமே வினை புரியும். வினை புரியும் இடத்தில் சரியாகப் பொருந்தாத தளப் பொருட்கள் நொதியுடன் வினை புரிவதில்லை. நொதியும், தளப் பொருளும் இணைந்த ES அணைவுச் சேர்மத்திலிருந்து, விளை பொருள் விடுபட்டு நொதி மீண்டும் கிடைக்கிறது.\n\nபயன். நொதிகள் அன்றாட வாழ்க்கையில் நன்கு பயன் படுகின்றன.\n\nபழச் சாறு தயாரித்தல். திராட்சைச் சாறு, ஆப்பிள் சாறு போன்றவற்றைப் பதப்படுத்தப் பெக்டிக் நொதிகள் பயன் படுகின்றன. இந்த நொதிகள், பெக்டிக் பொருள்களை நீராற் பகுத்து வீழ் படிவாக்குகின்றன. வீழ் படிவுகளைப் பிரித்துப் பழச்சாறைப் பெறுகின்றனர்.\n\nமது வகைகள் தயாரித்தல். சர்க்கரைக் கழிவுப் பாகு (molasses) ஸ்டார்ச் போன்றவற்றிலிருந்து, இன்வெர்ட்டேஸ், சைமேஸ் முதலிய நொதிகளால் எத்தில் ஆல்கஹாலைத் தயாரிக்கின்றனர். திராட்சை போன்ற பழச் சாற்றில் இருந்து, உயர் வகை மது வகைகளைப் பெறுகின்றனர்.\n\nவெண்ணெய்த் தயாரித்தல். பசுவின் இளங்கன்றுகளின் நான்காம் இரைப் பையில், ரென்னெட் என்னும் நொதிகள் உள்ளன. கன்றுக் குட்டிகளைக் கொன்று, இந்நொதி எடுக்கப் படுகிறது. இதனால், பாலிலுள்ள கேசின் புரதத்தை வீழ் படிவடைச் செய்து, வெண்ணெய் தயாரிக்கின்றனர்.\n\nதுணி இழைகளில் உள்ள பசைப் பொருளை நீக்குதல். துணி ஆலைகளில் இழைகளைத் தயாரிக்கையில், ஸ்டார்ச் போன்ற பசைப் பொருள்களால், பூச்சு கொடுத்து இழைகளுக்கு வலிமையூட்டுகின்றனர். பின்னர், துணி இழைகளைச் சாயமிடுவதற்கு முன், இப்பசைப் பொருள்களை நீக்க வேண்டும். துணி இழைகளை நொதிக் கரைசலில் அமிழ்த்தி எடுத்துச் சில மணி நேரம் அப்படியே வைத்திருக்கையில், ஸ்டார்ச் போன்றவை நீராற் பகுப்படைந்து கரையும் பொருள்களாக மாறி நீக்கமடைகின்றன. பாக்டீரியா, பூசணம், மால்ட் முதலிய பொருள்களைப் பசைப் பொருள் நீக்கலுக்குப் பயன் படுத்துகின்றனர்.\n\nதுணிகளில் உள்ள கறைகளை நீக்குதல். உலர் சலவை செய்கையில், துணிகளில் ஜெலாட்டின், ஸ்டார்ச், வஜ்ஜிரம் முதலிய கறைகளை அகற்ற நொதிகள் பயன் படுகின்றன.\n\nதோலில் உள்ள மயிர்களை நீக்குதல். தோல் பதனிடும் தொழிலில் மயிர்களைக் களைய, நொதிகளால் கரைத்து நீக்குகின்றனர். புகைப் படத் தகடுகளில் (film) உள்ள வெள்ளியைப் பிரித்தல். புகைப் படத் தகடுகளில் ஜெலாட்டின் பொருளுடன், வெள்ளிச் சேர்மமும் கலந்துள்ளது. பெப்சின் நொதியால் ஜெலாட்டினைச் சிதைத்து, வெள்ளிச் சேர்மத்தைப் பிரிக்கின்றனர்.\n\nஉணவுச் செரிப்பில் பயன்படல். உடலில் உணவு செரிக்க நொதிகள் பயன் படுகின்றன. கீழ்க் காணும் அட்டவணையில், உடலில் சுரக்கும் நொதிகள் புரியும் பணிகள் தரப் பட்டுள்ளன.\n\nஉடலில் தகுந்த அளவு நொதிகள் இல்லாதிருப்பின், உணவு சரி வரச் செரிக்கப் படுவதில்லை. ஆகவே, நொதிகள், உயிர் வாழ்விற்கு இன்றியமையாதன.\n\nபுண்களை ஆற வைத்தல். பன்றியின் கணையங்களில் உற்பத்தியாகும் புரதப் பகு (proteolytic) நொதிகள் உடலில் உண்டாகும் தோல் நோய், சாதாரணப் புண், படுக்கைப் புண்கள்(0௦0 sores) ஆகியவற்றை விரைவில் குணப் படுத்துகின்றன.\n\nஉயிர் வேதிச் சேர்மங்களின் பகுப்பாய்வில் பயன்படுதல். குருதியிலுள்ள யூரிக் அமில அளவைக் கணக்கிட, யூரிகேஸ், யூரியேஸ் நொதிகள் பயன் படுகின்றன. சர்க்கரைக் கலவையிலுள்ள சுக்ரோஸ், ராஃபினோஸ் ஆகியவற்றின் எடையைச் சுக்ரேஸ், மெலிபையேஸ் ஆகிய நொதிகளால் தள விளைவுக் கோண அளவி முறையில் (polarimetry) கணக்கிடுகின்றனர்.\n\nகுருதிக் கட்டியைக் கரைத்தல். சிறுநீரில் யுரோகினேஸ் என்னும் நொதி உள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்நொதியைக் கொண்டு, மூளையிலும், குருதிக் குழாய்களிலும் தோன்றும் குருதிக் கட்டியைக் கரைத்துக் குணப் படுத்துகின்றனர். —கே. ஆர். கங்காதரன் துணை நூல். H.S.Srivastava, Elements of Biochemstiry, Rastogi Publication, Meerut, 1983; Suckling , Enzyme Chemistry, 8.1. Publiicatios, Madras, 1985.\n\nநொதித் தடுப்பு\n\nகுறிப்பிட்ட வினைக்குத் தொடர்பற்ற ஏதோவொரு பொருளுடன் வினையுறுவதால், நொதியின் வினை வேகம் தணிக்கப் படுகிறது.நொதியின் வினையைத் தடுக்கும் வேதிப் பொருள்கள் பல வகையானவை. பொதுவாக, இவை நொதி மூலக் கூறின் கிளைச் சங்கிலிகளுடனோ, தொகுதிகளுடனோ இடையீடுறுபவை. Ag*,Cd2+, Hg2+ N- எத்தில் மலியிமைடு ஆகியன வலிவு மிக்க நொதித் தடுப்பான்களாகும். முதற்படியாக, இவை யாவும் சிஸ்டீன் எனும் புரதப் பொருளின் (அமினோ அமிலம்) SH தொகுதியைப் பாதிக்க வல்லன. நரம்பு முடக்கு வளிமங்களான ஈரைசோ–புரோப்பைல் ஃப்ளூரோ பாஸ்பேட் மற்றும் டெட்ராஎத்தில் பைரோ பாஸ்ஃபேட் ஆகியன செரைன்,திரியோனைன், ஹிஸ்டிடீன் ஆகியவற்றின் தொகுதியுடன் இணைவதன் மூலம், நொதியின் வினைத் திறனைக் குறைக்கின்றன. இரும்பு பாஸ்பைரீன்களைச் சயனைடு அயனியும், இணைப்புப் புரதங்களின் கூட்டுறுப்புப் பகுதிகளைத் தாமிர அயனியும், அண்டை SH தொகுதிகளைக் கொண்ட டை தயால்களைக் கரிம ஆர்செனிக் சேர்மங்களும் பெரிதும் பாதிக்கின்றன.\n\nநொதித் தடுப்பு என்பது போட்டியிட்டுத் தடுத்தல் (competitive inhibition), மீளாத் தடுப்பு (irreversible or non-competitive)cror இரு வகைப் படும். போட்டியிட்டுத் தடுத்தலில், தடுப்பான் மூலக் கூறின் வடிவம், நொதியின் வடிவத்திற்கு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும். பற்றுப் பொருளிலுள்ள (substrate) கிளர்வு கொள் மையத்துடன் இணைவதற்கு, நொதியுடன் இப்பொருள்கள் தடுப்புச் செயல் முறையைத் திருப்பி ஒடுக்கலாம். மீளாத் தடுப்பில், நொதியும், தடுப்பானும் சக பிணைப்பு மூலம் ஒரு நிலையான அணைவுச் சேர்மத்தை உருவாக்குகின்றன. போதுமான அளவு தடுப்பான் இடம் பெறுமாயின், சாதாரண பற்றுப் பொருளின் மீதான நொதியின் வினை வேக மாற்றத் திறன் முழுமையாக அழிக்கப் பட்டு விடும்.\n\nமேற்கூறிய தடுப்பான்௧கள் நொதியின் வினைத் திறன் மிக்க பகுதியுடன் இணைவதால், செயல் நீக்கம் புரிகின்றன. மாறாக, வேறு சில பொருள்கள், நொதியின் வினையுறு மையத்தின் வச அமைப்பை (confirmation) மாற்றுவதன் மூலம் பணி புரிகின்றன. அயலினத் தடுப்பான்கள் (allosteric effectors) எனப் படும் இப்பொருள்களின் அமைப்பு, நொதி மூலக் கூறின் அமைப்புடன் எவ்வகைத் தொடர்புமற்றது. —மே.ரா. பாலசுப்ரமணியன் துணை நூல். I.L.Finar, Organic Chemistry, Vol–II, Fifth Edition, ELBS, London, 1975; B.L.Gslery (Ed.), Hawk's physiological chemistry, 14th Edition, Tata-McGraw-Hill Publishing company Ltd., 1971.\n\nநொதித்தல்\n\nஉணவுப் பொருள்கள் சிதைவுற்று, வளிமங்கள் வெளியாவது நொதித்தல் (fermentation) எனப் படும். சர்க்கரை, நொதித்தல் அடைந்து, ஆல்கஹாலாக மாறுகிறது. இம்மாற்றத்தின் போது, கார்பன்–டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. நொதித்தலுக்கு, நுண்ணுயிரிகளால் உண்டாகும் நொதிகள் தேவைப் படுகின்றன. நுண்ணுயிரிகள் காரணமாகத்தான் நொதித்தல் நிகழ்கின்றது என்னும் உண்மை பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. உயிர் அமைப்புகளில் ஏற்படும் ஆக்சிஜனேற்றமே நொதித்தல் என்றும், இதனால், நுண்ணுயிரிகள் காற்று இன்றி உயிர் வாழ்கின்றன என்றும், லூயிஸ் பாஸ்சூர் கூறியுள்ளார். உணவுப் பொருள்கள் அழுகுதலும், நொதித்தலும் ஒத்த நிகழ்வுகளே. புரதங்கள் சிதைவுற்று, நாற்றமுள்ள விளை பொருள்கள் உண்டாவதை அழுகுதல் எனலாம். சர்க்கரை போன்ற பொருள்கள் சிதைவுறுவதால், இனிய மணமும், சுவையும் உள்ள விளை பொருள்கள் கிடைப்பதை நொதித்தல் என்பர். இவ்விரு நிகழ்ச்சிகளிலும், நுண்ணுயிரிகள் காற்றில்லாமல் கரிமப் பொருள்களைச் சிதைவடையச் செய்கின்றன. காற்றில்லாமல், கரிமப் பொருள்களை நுண்ணுயிரிகள் சிதைவுறச் செய்வதை நொதித்தல் என்று உயிர் வேதியியலில் வரையறுத்த போதிலும், நுண்ணுயிரிகளால் ஏற்படும் அனைத்து வினைகளும், பொதுவாக நொதித்தல் என்னும் சொல்லைப் பயன்படுத்தும்.\n\nஒவ்வொரு நொதித்தல் வினைக்கும், தனித் தனியான நுண்ணுயிரி பயன் படுகிறது. நொதித்தலின் போது, காற்றில்லாமல் கரிமச் சேர்மங்கள் சிதைவுறுவதால், முழுவதும் ஆக்சிஜனேற்றமடையாத பல பொருள்கள் கிடைக்கின்றன. ஆல்கஹால், லாக்டிக் அமிலம் போன்ற நொதித்தலினால் கிடைக்கும் விளை பொருள்கள் மனிதனுக்கு மிகவும் பயனாகின்றன. காற்றிலும் சில நொதித்தல் வினைகள் நிகழ்கின்றன. சான்றாக, ஆல்கஹாலிருந்து அசிட்டிக் அமிலம் இம்முறையில் கிடைக்கின்றது. அவ்வாறே, சர்க்கரையிலிருந்து சிட்ரிக் அமிலம் நொதித்தலால் உண்டாகிறது.\n\nநொதித்தல் நிகழும் போது, பல வேதிப் பொருள்கள் தயாரிக்கப் பயன் படும் நுண்ணுயிரிகள் எளிதில், விரைவாக வளரும் தன்மை படைத்தனவாக இருத்தல் வேண்டும். இம்முறையில் , பிற முறைகளில் ஆகும் செலவை விடக் குறைவாக ஆக வேண்டும். ஆல்கஹால், அசெட்டோன், பியூட்டிலீன் கிளைகால், கிளிசரால், பாலிஹைட்ரிக் ஆல்கஹால்கள் போன்ற கரைப்பான்கள் நொதித்தல் முறையில் தயாரிக்கப் படுகின்றன. அசெட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், குளுகானிக் அமிலம், ஃபுயூமரிக் அமிலம் ஆகியவற்றைத் தயாரிக்கவும் இம்முறை பயனாகிறது. சார்போஸ், ஃபிரக்டோஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் B₁₂, தயமின், ரிபோஃபிளவின் ஆகிய நோய் எதிர்ப்பு வேதிப் பொருள்கள், லைசீன், குளுட்டோனிக் அமிலம் போன்ற அமீனோ அமிலங்கள் ஆகியவற்றை நொதித்தல் முறையில் தயாரிக்கின்றனர். நுண்ணுயிர் எதிர் மருந்துகளான பென்சிலீன், ஸ்ட்ரெப்டோமைசின், டெட்ராசைக்ளின், குளோரம் ஃபினிகால் ஆகியவை நொதித்தல் முறையில் தயாரிக்கப் படுகின்றன. அமைலேஸ், புரோடிட்யேஸ் போன்ற நொதிகள் தயாரிக்கப் பல நுண்ணுயிரிகள் பயன் படுகின்றன. நொதித்தல் கலவையை அப்படியே பயன்படுத்தலாம்; அல்லது அக்கலவைகளிலிருந்து வேதிப் பொருள்களைத் தனியே பிரித்தெடுத்தும் பயன் படுத்தலாம்.\n\nரொட்டி, ஊறுகாய், மது பானம், பாலாடை, வெண்ணெய் ஆகிய உணவுப் பொருள்கள் தயாரிக்கவும், அவற்றை ருசி உடையவையாக மாற்றவும் நொதித்தல் பயன் படுகிறது. மேலும், கழிவுப் பொருள்கள் நொதித்தல் முறையில் வளிமங்களாக மாற்றப் பட்டு, நீக்கம் செய்யப் படுகின்றன. உயிர் வாழும் செல்கள் நொதிகளை உண்டாக்குகின்றன. இந்த நொதிகள் இல்லா விட்டால், நொதித்தல் வினைகள் மிக மெதுவாக நடைபெறும். ஒரு குறிப்பிட்ட வினைக்கு, ஒரு குறிப்பிட்ட நொதி மட்டுமே, வினை வேக மாற்றியாகப் பயன் படும். உயிர் வாழும் திசுக்களில் ஆயிரக் கணக்கான நொதித்தல் வினைகளை நடத்த வல்ல பல நொதிகள் காணப் படுகின்றன. சில நொதிகளும் அவை வினை வேக மாற்றியாகப் பயன்படும் வினைகளும் கீழே தரப் பட்டுள்ளன.\n\nபெப்சின். புரதங்களை நீராற் பகுத்துப் பெப்டைடு களாகவும், அமினோ அமிலங்களாகவும் மாற்றல்.\n\nயூரியேஸ். யூரியாவை அம்மோனியாகவும் கார்பன்–டை ஆக்சைடு ஆகவும் நீராற் பகுத்தல்.\n\nஅமைலேஸ். ஸ்டார்ச்சை மால்டோசாக நீராற் பகுத்தல்.பாஸ்போரிலேஸ். ஸ்டார்ச் , கிளைகோஜன் ஆகியவை குளுகோஸ் பாஸ்பேட்டாக மாறுதல். பைருவிக் கார்பாக்சிலேஸ். பைருவிக் அமிலம், அசெட்டால்டிஹைடாக மாறுதல்.\n\nஇந்நாள் வரை கண்டறியப்பட்ட அனைத்தும் புரதங்களே. வெப்பப் படுத்தலால் இவை தம் செயல் தன்மையை இழந்து விடும். மிகுந்த செறிவுள்ள உப்புக் கரைசல்களிலும், ஆல்கஹால், டிரைகுளோரோ அசெட்டிக் அமிலம் போன்ற கரைப்பான்களைச் சேர்ப்பதாலும், இவை வீழ் படிவாகின்றன. ஒரு கூறு புக விடும் சவ்வு வழியே நொதிகள் ஊடுருவிச் செல்லா. சிறிதளவு நொதியே ஒரு வினையை நடத்த வல்லது. 20–40°C வெப்ப நிலையில் இவை நன்கு செயலாற்றும்; உயர் வெப்ப நிலையில் இவை செயலற்று விடும். —எஃப் ஜே. மரிய புஷ்பராஜ் துணை நூல். Robert O. Bohinski, Modern Concepts in Bio Chemistry, Fourth Edition, Allyn and Baclon, Inc., Boston, 1985.\n\nநொபிலியம்\n\nதனிம மீள் வரிசை அட்டவணையில் ஆக்டினியம் தனிமத்தை அடுத்து வரும் ஆக்டினைடு தொடரில் அணு எண் 102 கொண்ட தனிமம்–நொபிலியம். இது யுரேனியம் கடந்த தனிமங்களின் பட்டியலில் செயற்கை முறையில் உண்டாக்கப் பட்ட தனிமமாகும்.\n\n1957இல் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் இயற்பியல் ஆய்வுக் கூடம், தன் ஆய்வுகள் மூலம் அணு எண் 102 கொண்ட புதிய தனிமத்தைக் கண்டு பிடித்ததாக அறிவித்தது. கியூரியம்–244 அணுவை, கார்பன்–13 உட்கருக்களால் தாக்கியதால், இப்புதிய தனிமம் உண்டாக்கப் பட்டது. ஆனால் அமெரிக்காவின் பிற ஆய்வுக் கூடங்களிலும், சோவியத் ரஷ்யாவிலும், ஸ்டாக்ஹோம் ஆய்வு மீண்டும் நிகழ்த்தப் பட்ட போது, தோல்வி ஏற்பட்டது.\n\nநிறை எண் 254 கொண்ட நொபிலிய ஐசோடோப்பு 1958இல் பெர்க்லி நகரில் உண்டாக்கப் பட்டது. கியார்சோ, சிக்கலண்டு, வால்டன், சீபோர்க் ஆகிய நால்வர் இந்த ஆய்வை நிகழ்த்தினர். இதில் ஹிலாக் (HILAC–Heavy lion Linear Acclerator) என்னும் கன அயனித் துகள் முடுக்கும் நேரில் பொறி பயன் படுத்தப் பட்டது.இது சைக்ளோட்ரானை விடப் பன்மடங்கு கூடுதல் ஆற்றலுடையது. நொபிலியத்தின் ஐசோடோப்புகள் அனைத்தும், மிகக் குறைந்த வாழ்நாள் காலம் கொண்டவையாதலால், அவற்றைத் தனித் தனியே பிரித்தெடுக்க சேய்த் தனிமத்தை ஆய்வுக்குட் படுத்திய போது, தாய்த் தனிமமான நொபிலியமே மீண்டும் உண்டாகியிருப்பதை அறிய நேர்ந்தது. பெர்க்லி ஆய்வுக் கூடத்தில் இரட்டைப் பின்னிழுப்பு (Double Recoil Technique) என்னும் புதிய நுட்பத்தைப் பயன் படுத்திச் சேய்த் தனிமங்களாக ஐசோடோப்புகள் சேகரிக்கப் பட்டன.\n\nபெர்க்லி ஆய்வில் கியூரியம்–246 அணு கார்பன்–12 உட்கருக்களால் தாக்குண்டு, நொபிலியம்–254 அணுவாக மாறுகிறது. (வினை எண்.1). இந்த ஐசோடோப்பில் பாதியளவு மூன்றே நொடியில், ஆல்ஃபாத் துகளை வெளியேற்றி விட்டு, ஃபெர்மியம்–250 தனிமமாகச் சிதைவடைகிறது. (வினை எண்.2) ஓரளவு அளவிடத் தக்க அரை–ஆயுட்காலம் கொண்ட (30 நிமிடங்கள்) ஃபெர்மியம்–250 தனிமத்தை வேதி ஆய்வுக்குட் படுத்திய போது, அணு எண் 102 கொண்ட தனிமம் வினையின் போது, உண்டாகியிருப்பது மெய்ப்பிக்கப் பட்டது.\n\nநிறை எண் 256 கொண்ட நொபிலிய ஐசொடோப் ஒன்று சோவியத் ரஷ்யாவில் 1963இல் கண்டறியப் பட்டது. கன அயனி சைக்ளோட்ரானிலிருந்து (Heavy lon cyclotron) வெளிப்படும் மீவேக ஆற்றல் கொண்ட நியான் அயனிகளால் யுரேனியம் அணுவைத் தாக்கி இப்புதிய ஐசொடோப்பு உருவாக்கப் பட்டது. இந்த ஐசொடோப்பின் வாழ்நாள் காலம் ஒரு நிமிடமேயாகும். நிறை எண்கள் 252,253,255 கொண்ட ஐசொடோப்புகளும் சோவியத் ஆய்வாளர்களால் கண்டறியப் பட்டுள்ளன.\n\nநிறை எண் 255 கொண்ட நொபிலிய ஐசொடோப்பு வேதி ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது. கரைசலில் காணப் படும் இத்தனிமத்தின் அயனிகளில் ஈரிணை திறன் நிலையே (No+2) நிலைப்புத் தன்மை மிக்கதாகும். இதற்கு மாறாக, குறைந்த அணு எண் கொண்ட பிற ஆக்டினைடுகள் (அணு எண் 89 முதல் 101 வரையிலான தனிமங்கள்) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான இணை திறன் நிலைகளைக் கரைசல் நிலையில் கொண்டுள்ளன. பதினான்கு எலெக்ட்ரான்களைக் கொண்ட நிறைவுற்ற 5f ஆர்பிட்டால்களைக் கொண்டிருப்பதை(No+2) அயனியின் நிலைப்புத் தன்மைக்குக் காரணமாகும். நிலையான ஈரிணைத் திறன் சேர்மங்களைத் தரும் லாந்தனைடு வரிசைத் தனிமமான இட்டர்பியம் என்பதுடன் நொபிலியத்தை ஒப்பிடலாம் —க. சேது துணை நூல். A.K.De, Text book of Inorganic Chemistry, sixth edition, Wiley Eastern Ltd, New Delhi.1987.\n\nநொய்ம்மை\n\nஓர் உலோகத்தில் இயற்பியல் அல்லது வேதி மாற்றங்கள் ஏற்படுவதன் விளைவாக, அதன் நீளுந் தன்மை (ductility) அல்லது கடினத் தன்மை (toughness) குறைவது நொய்ம்மை (embritlement) எனப் படுகிறது. ஒவ்வோர் உலோகமும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உட்படுத்தப்படும்.\n\nஉலோகங்களில் நொய்ம்மை பின் வரும் மாற்றங்களால் ஏற்படலாம். அவை வெப்ப நிலை மாற்றம், உலோகத்தின் உள் மூலக் கூற்றுக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றம், அரித்தல் (corrosion) நடை பெறும் அல்லது நடை பெறாத சூழலுக்கு (environment) உட்படுத்துதல் போன்றவை.\n\nவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் நொய்ம்மை. வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் நொய்ம்மை, உலோகத்தின் படிகக் கூட்டமைப்பு அணிக் கோவை (crystal lattice) வழியாகவோ, நுண் படிமங்களைப் (crystallities) பிரிக்கும் எல்லைகளிலோ, பிளவு (fracture) ஏற்படுத்தும். குறைந்த வெப்ப நிலையால் ஏற்படும் நொய்ம்மை உலோகத்தில் உரு மாற்றம் (deformation) அல்லது பிளவை உண்டாக்கும். மிகு வெப்ப நிலையால் ஏற்படும் நொய்ம்மை உலோகங்களின் மூலக் கூற்றுக் கட்டமைப்புகளை மாற்றும்.\n\nசூடாக்குவதால் ஏற்படும் நொய்ம்மை. எஃகுகள், பாள இரும்புகள் இவற்றைச் சூடாக்கும் போது, நொய்ம்மைக்கு உட்படுத்தப் படுகின்றன. எ-கா: எஃகு அல்லது அய உலோகக் கலவைகளை (ferrous alloys) கடுங்கரை காரத்திற்கு (caustic alkali) நீண்ட நேரம் உட்படுத்தும் போது, நொய்ம்மை உண்டாகிறது. இதனால், கொதி கலன்களில் பழுதுறல், வெடித்தல் இவை உண்டாகின்றன. தகுந்த முறையில் நீரைப் பயன் படுத்தி, இக்குறைபாடுகளை நீக்கலாம்.\n\nசூழல் மாற்றத்தால் ஏற்படும் நொய்ம்மை. இவ்வகை நொய்ம்மையை நீர்ம உலோக நொய்ம்மை, தகைவு–அரித்தல் நொய்ம்மை, ஹைட்ரஜன் நொய்ம்மை என மூவகையாகப் பிரிக்கலாம்.\n\nநீர்ம உலோக நொய்ம்மை. ஒரு திண்ம உலோகத்தின் ஆக்சைடற்ற பரப்பில், நீர்ம உலோகம் ஒன்றின் மெல்லிய படலத்தை வைக்கும் போது, படலத்தில் பிளவு ஏற்படுகிறது.எ-கா: பித்தளையில் பாதரசத்தை வைக்கும் போது ஏற்படும் பிளவு.\n\nதகைவு-அரித்தல் நொய்ம்மை. ஓர் உலோகத்தைத் தகைவிற்கு உட்படுத்திய உடனே, அரித்தல் இயல்புடைய அல்லது இயல்பற்ற சூழலுக்கு உட்படுத்தினால், உலோகத்தில் விரிசல், பிளவு இவை உண்டாகும். எ-டு: விண்வெளி பயன்பாடுகளில் இடம் பெறும் அமிலத்தைப் பயன் படுத்தித் தூய்மையாக்கும் போது, ஏற்படும் விரிசல்.\n\nஹைட்ரஜன் நொய்ம்மை. ஓர் உலோகத்திற்கு முலாம் பூசும் போது, அவ்வுலோகம் ஏற்கும் ஹைட்ரஜன் அணுவால் ஏற்படும் நொய்ம்மை ஹைட்ரஜன் நொய்ம்மை எனப் படுகிறது. இவ்வகை நொய்ம்மையை நீக்க உலோகத்தை மீண்டும் சூடாக்க வேண்டும். —இரா. இந்து\n\nநொலையாளி\n\nஇச்சிறுமரம் யூஃபோர்பியேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ஆண்டிடெஸ்மா பியூனியஸ் (Antidesma bunius) ஆகும். இது பசுமை குன்றா மர வகையைச் சேர்ந்தது. இந்தியாவின் வெப்பம் மிகுந்த பகுதிகளிலும், இலங்கையிலும் இம்மரத்தைக் காணலாம். இதனைப் பழங்களுக்காக வளர்ப்பதுண்டு. பழங்கள் சிறியவையாக முட்டை வடிவிலும், கருஞ்சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் பட்டை நச்சுத் தன்மை வாய்ந்தது. இதில் ஆல்கலாய்டு உள்ளது. இம்மரத்தைப் பயன் படுத்திக் காகித அட்டைகள் செய்யலாம்.\n\nஇந்தியாவில் ஆண்டிடெஸ்மா அசிடம் (Antidesma acidum) என்னும் புதர்ச் செடியைக் கேரளா, மேற்கு வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் காணலாம். இதன் பூக்கள் தனித் தனியாகவும் மிகச் சிறியவையாகவும் இருக்கும். கனி உள்ளோட்டுச் சதைக் கனி (drupe) ஆகும். இதன் வேரையும், இலைகளையும் இடித்துச் சாறு பிழிந்து, நீர் கலந்து, அருந்தச் சீதம் கலந்த வயிற்றுக் கடுப்பு நீங்கும். —கோ. அர்ச்சுனன்\n\nநொறுக்கலும், தூளாக்கலும்\n\nகல்,நிலக்கரி, கசடு போன்ற பொருள்களைச் சாலைக் கட்டுமானம், தளக் காரைத்தொகுப்பு, உலை எரிப்பு போன்ற பணிகளின் பயன்பாட்டிற்கு ஏற்பத் தகுந்த அளவுகளாகக் குறைக்கும் முறையே நொறுக்குதலும், தூளாக்குதலும் (crushing and pulverizing) ஆகும். இவை தாதுத் தூய்மிப்பின் போது, நடை பெறும் செயல் முறைகள் ஆகும். சிமெண்ட் சாம்பற்கட்டியை (clinker) மிகு நுண்ணிய போர்ட்லாண்ட் சிமெண்ட்டாகக் குறைக்கவும், தூளாக்கப்பட்ட நிலையில் எரிதலுக்கு ஏற்ற அளவிற்கு நிலக் கரியைக் குறைக்கவும், பருத்த பொருள்களை (bulk materials) உண்டாக்கவும், நொறுக்கலும், தூளாக்கலும் பயன் படும்.\n\nசுரங்கங்களிலிருந்து பெறப் படும் மிகப் பெரிய கற்களை நொறுக்கப் பயன் படும் கருவிகளைக் கொண்டு, மிகு செம்மையாகத் தூளாக்க இயலாது. எனவே, இவ்வகைப் பயன்பாடுகளுக்கு முதன்மை நொறுக்குதல், துணைமை நொறுக்குதல் என அடுத்தடுத்து மூன்று நிலைகளும் உள்ளீட்டுப் பொருளின் அளவு, பொருளின் தொகு பயன், குறை விகிதம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.\n\nபொருள்களின் அளவு குறைப்பு, பின் வரும் ஐந்து முறைகளில் மேற்கொள்ளப் படுகிறது. அவை மிகு விசையை மெதுவாகச் செயல் படுத்தி நொறுக்குதல், சுத்தியைப் பயன் படுத்தி அடித்தல், உராய்வு அல்லது தேய்த்தலுக்கு உட்படுத்துதல், உள் அழுத்தத்தைத் திடீரென வெளியேற்றுதல், புற ஒலி விசைகளுக்கு (ultrasonic forces) உட்படுத்துதல் என்பன. இறுதியாக குறிப்பிடப் பட்டுள்ள இரு முறைகளும் பொதுவாகப் பயன்படா. அட்டவணை நொறுக்குதல் குறிப்பீடுகள்\n\nமுதன்மை நொறுக்கி. 1 மணி நேரத்திற்கு, 1000 டன் திறன் கொண்ட பிலேக் தாடை நொறுக்கிகள் 23 செ.மீ. விட்டமுள்ள விளை பொருளை உண்டாக்கும். பிலேக் தாடை நொறுக்கி பெரிய அளவுகளிலும்; டாட்ஜ் தாடை நொறுக்கி சிறிய அளவுகளிலும் தயாரிக்கப் படுகின்றன.\n\nபடலை வகைச் சுழல் நொறுக்கியில் (Gyratory Crusher) கீழ்த் தாங்கி உறையால், மைய விலகு இயக்கத்தைப் பெறும் ஒரு சுழலாக் கூம்பு மெல்லிய வலைப்பை (mantle) இருக்கும். (படம் .2) ஒரு 107/304 செ.மீ. நொறுக்கி மணிக்கு 850 டன் திறன் கொண்டது. இது 69 செ.மீ. மணிக்கு 850 டன் திறன் கொண்டது. இது 69 செ.மீ. விட்டமுள்ள பாறைகளை 20 செ.மீ. விட்டமாகக் குறைக்கும்.\n\nசைமன் கூம்பு நொறுக்கியிலும், சுழல் இயக்கம் காணப் படும். ஆனால், இந்நொறுக்கியில் வாய் அகன்ற மெல்லிய வலைப் பை அல்லது கூம்பு காணப் படும். (படம். 3) மேற் பகுதியிலுள்ள கிண்ணம் (bowl) சுருள் வில்லால் நிலையாக வைக்கப் பட்டிருக்கும். இது முதன்மை அல்லது துணைமை நொறுக்கியாகப் பயன் படுகிறது. சீரான வழ வழப்பான தாடைகளுக்கு இடையே அரைக்க வேண்டிய கட்டியை நிலையாகப் பிடிக்கும் மிகப் பெரிய கோணம் நொறுக்கப் பயன் படும் பொருள்களைப் பொறுத்து 8–48 இருக்கும்.\n\nதுணைமை நொறுக்கி. ஒற்றை உருள் நொறுக்கி, இரட்டை உருள் நொறுக்கி இவற்றினுள் இயங்கும் உருளிகள் பற்களைக் கொண்டிருக்கும். இது நிலக் கரியை நொறுக்க மிகுதியாகப் பயன் படுகிறது (படம் .4). ஒற்றை உருள் நொறுக்கி 91 செ.மீ. நீளத்தையும், 137 செ.மீ. நீளத்தையும் மணிக்கு 275 டன் வெளியீட்டு திறனையும் கொண்டது. இது நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப் படும். நிலக்கரியை 32 மி.மீ. வளைய அளவிற்கு நொறுக்கும். தாது, பாறை, நிலக்கரி போன்றவற்றை நொறுக்கச் சுத்தி ஆலை (hammer mill) என்னும் துணைமை நொறுக்கி பயன் படுகிறது படம் 5). எந்திரச் சுத்தி ஆலை (reversible hammer mill) இரு திசைகளிலும் செயல் படக் கூடியது.\n\n107 செ.மீ. விட்டமும் 208 செ.மீ நீளமும் கொண்ட சுத்தி ஆலை ஒன்று, மணிக்கு 300 டன் பொருளை 6 மி.மீ. விட்டப் பொருள்களாகக் குறைத்து விடும். வளைய நிலக்கரி நொறுக்கி, சுத்தி ஆலை நொறுக்கியின் ஒரு வகை உருமாற்றமே ஆகும். ஏனெனில், சுத்தி ஆலையிலுள்ள சுத்திகளுக்குப் பதிலாக, இதில் வளையங்கள் பயன் படுகின்றன.\n\nதூளாக்கி. திறந்த - சுற்றுத் தூளாக்கியிலிருந்து வெளியேறும் பொருள் வெளி வகுப்பிற்கு (external classifier) அனுப்பப் படுகிறது. இங்கு நுண் தூளானவை போக எஞ்சியுள்ள பெரிய அளவு பொருள்கள் மீண்டும் தூளாகும் வகையில் தூளாக்கிக்கு உட்செலுத்தப் படும். குண்டு மற்றும் குழாய் ஆலை; தண்டு ஆலை, சுத்தி ஆலை, உராய்வு தேய்மான ஆலை ஆகியவை உராய்வு, தேய்மானம் ஆகிய செயல்பாடுகளின் அடிப்படையில் இயக்குகின்றன. காண்க: பந்து மற்றும் தடத் தூளாக்கி.\n\nஉருட்டும் அல்லது புரளுகைத் தூளாக்கி. இதில் இரு வகை உண்டு. இரு வகையிலும் உருள் அல்லது வரிசையான (cascade) எஃகு குண்டுகள் கூழாங்கற்கள் அல்லது தண்டுகள் ஆகியவற்றைக் கொண்ட கிடை மட்ட உருளிகள் காணப் படும். உருளையின் நீளம் 2–3 அங்குல விட்டத்திற்குக் குறைவாக இருப்பின், அது குழாய் அலை ஆகும். 3 அங்குலத்தைவிட விட்டம் மிகுதியாக இருப்பின், அது குழாய் ஆலை (tube mill) ஆகும்.\n\nதாது, பாறை ஆகியன தேய்ப்புப் பொருளாக உள்ளமையால், இத்தூளாக்கிகள் இயங்கும் போது, ஊடே குண்டுகளைச் சேர்ப்பது எளிது. 5–8 செ.மீ. விட்டமுள்ள பெரிய எஃகு குண்டுகளை உட்செலுத்தி, நொறுக்க வேண்டுமாயின், குண்டு ஆலைகளைத் திறந்த நிலையில் உள்ள ஒரு குழாய் ஆலையுடன் தொடராக இணைத்துப் பயன் படுத்தலாம். காண்க: கூழாங்கல் ஆலை.\n\nசிமெண்ட் ஆலைகளிலும், சுரங்கப் பணிகளிலும் பயன் படும் குண்டு ஆலை, குழாய் ஆலை, தண்டு ஆலை, கூழாங்கல் ஆலை போன்றவை இயங்கும் போது, தேவையான அளவு நீர் சேர்க்கப் படுகிறது. நீர் சேர்த்தமையால், விளை பொருள் சேறாகக் கிடைக்கும்.\n\nஇவ்வகைத் தூளாக்கிகளில், சாய்வு அல்லது கூம்பு வகை வகுப்பிகள் பயன் படுத்தப் படும்.\n\nநுண் தூளாக்கலை உண்டாக்கும் குழாய் ஆலைகள், திறந்த சுற்றில் பகுதி பிரிக்கப் பட்ட ஆலைகளாகவும் (compartment mill), மூடிய சுற்று ஆலைகளாகவும் பயன் படும். (படம் 7–(அ), (ஆ), (இ)) முப்பகுதியாகப் பிரிக்கப் பட்ட குழாய் ஆலை ஒன்றின் முதல் பகுதியில் உட்செலுத்தப் படும். பெரிய குண்டுகள், இரண்டாம் பகுதியில் இடை நிலைக் குண்டுகளாகவும், மூன்றாம் பகுதியில் சிறிய குண்டுகளாகவும் படிப் படியாக அளவில் குறைக்கப் படும். (படம் 7).\n\nஓடையிணைப்பித் தூளாக்கி (cascade Pulverizers) என்பது உருட்டுதல் தூளாக்கியின் பிறிதொரு வடிவமாகும். இது பெரிய கட்டிகளைத் தூளாக்கப் பயன் படும். வெளிக் காற்று வகுப்பி உள்ள மூடிய சுற்றில் காற்றுத் தூய்மையாக்கப் பட்ட கூம்புக் குண்டு ஆலை (airswept conical ball) பயன் படுகிறது. (படம் 8) ஆலையின் கூம்பு வடிவ அமைப்பு, குண்டுகளைப் பிரிப்பதுடன், உட்செலுத்தும் முறையில் பெரிய குண்டுகளையும், சிறு வெளியேற்று முனையில் சிறு குண்டுகளையும் பிரிக்கும். பாறை, தாது ஆகியவற்றின் திறந்த சுற்றில் இக்கூம்புக் குண்டு ஆலைகள் மிகுதியாகப் பயன் படுகின்றன.\n\nஉருளித் தூளாக்கி. காற்றில் தூய்மையாக்கப் படும் ஊசல் உருளித் தூளாக்கியில், ஒரு சுழல் அச்சின் மையத்தில் உருளைகள் பொருத்தப் பட்டிருக்கும். உருளிகளின் மைய விலகு விசை உருளிகளுக்கும் வளையத்திற்குமிடையில் அழுத்தத்தைக் கொடுக்கும். உருளிகளுக்குக் கீழே காற்றைச் செலுத்தி, நன்கு தூளாக்கப் பட்ட நுண் பொடிகள் அகற்றப் படுகின்றன. சுழலும் உருளிகளும், மேற்குடைக் கம்பி அமைப்பும் மைய விலகு விசைக்கு உட்படுத்தப் படுவதால், தூளாக்கப் படாத பெரிய அளவு பொருள்கள் மீண்டும் தூளாக்கும் இடத்திற்கே வந்து சேரும். இம்முறையில் மேலும் மிகு நுண் தூளாக்க, மேல் உறைவிடத்தில் (housing) கூடுதல் சுழல் வகுப்பி. ஒன்று இணைத்துச் செயல் படுத்தப் படும்.\n\nகுண்டுச் சாய்வு தூளாக்கிகளில் (ball race Pulverizers) சாய்வுகளுக்கு இடையே பெரிய எஃகு குண்டுகள் பயன் படுகின்றன. கீழ்ச் சாய்வு நிலையானதாகவும், இடைப் பட்ட சாய்வு இயங்கு முனைகளுக்கு இடையே சுழலுவதாகவும் இருக்கும். மேலும், மேல் சாய்வு சுருள் வில்களால் கட்டுப் படுத்தப் படும். மைய விலகு விசையால், மையத்திலிருந்து 31 செ.மீ. மற்றும் 32.5 செ.மீ விட்டமுள்ள குண்டுகள் வழியே பொருள் வெளியேறும். சிமெண்ட் பாறையைத் தூளாக்க மூடிய சுற்றில் ஒரு குண்டுச் சாய்வு தொகுதியுடன் ஒரு காற்றுப் பிரிப்பியை இணைத்துப் பயன் படுத்துவர்.\n\nசல்லடை. தூளாக்க வேண்டிய பொருள்களை சல்லடை மூலம் சலிப்பதால், தேவையான அளவுக்கு அவற்றைப் பிரித்தெடுக்கலாம். 5 செ.மீ. அல்லது மேற்பட்ட விட்டமுள்ள பொருள்களுக்கு ஒரு திறந்த முனைத் துளைகளிடப்பட்ட உருளையான சுழலும் சல்லடை பயன் படுகிறது. சல்லடையின் ஒரு முனை சிறிதளவு உயர்த்தி வைக்கப் பட்டிருக்கும்.\n\nசிறிய அளவு பொருள்கள் சல்லடையின் துளைகள் வழியே செல்வதுடன், பெரிய அளவு பொருள்கள் சல்லடையின் (sieve) தாழ் முனையின் வழியே வெளியேறும். 200 வலைக் கண் (mesh) உடைய சல்லடை வழியே பொருள்களைச் செலுத்தினால், சுமார் 5 செ.மீட்டருக்கும் குறைந்த விட்ட அளவிலிருந்து 200 வலைக் கண் சல்லடை வழியே கடந்து செல்லத் தகும் 77 மைக்ரோமீட்டர் நுண் துளைகள் வரை உள்ள மிகு செம்மையாகத் தூளாக்கப் பட்ட விளை பொருள் கிடைக்கும்.\n\nஅதிர்வுறும் சல்லடைகளில், அதிர்வு இயக்கத்தைக் கொடுக்க, மின்னோட்ட அதிர்வி பயன் படுகிறது. (படம் 9). அதிர்வுறும் சல்லடை அமைப்பில், எஃகாலான தலை மிசையிலிருந்து தண்டுகள், சுருள் வில்கள் (spring) இவற்றுடன் இணைத்துத் தொங்க விடப் பட்டிருக்கும். பிறழ் மையத்தில் சுழன்று அதிரும். சில சல்லடைகளில் ஈரடுக்குச் சல்லடைப் பரப்புகள் காணப் படும். இவ்வகைச் சல்லடைகளில் ஒவ்வொரு அடுக்கும், வெவ்வேறு துளை அளவுகளைக் கொண்டிருக்கும். இதனால், விளை பொருள் மூன்றும் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும்.\n\nநேரடி நிலக்கரித் தூளாக்கி. இக்காலப் பெரிய நிலக்கரி எரி உலைகளுக்குத் தேவையான நிலக்கரி தூளாக்கியிலிருந்து, நேரடியாக ஊட்டப் படுகிறது. தூளாக்கியிலுள்ள நிலக்கரியை உலர்த்தவும், முன் சூடாக்கவும் 150–315°C வெப்ப நிலையிலுள்ள காற்று செலுத்தப் படுகிறது.\n\nஇடைப் பட்ட வேகத்தில் இயங்கும் கிண்ணத் தூளாக்கியில் சுழலும் சாணைப் பிடிப்புக் கிண்ண வளையத்திற்கும், சுழல் அச்சு மையத்தில் பொருத்தப் பட்ட நிலையான உருளைகளுக்கும் இடையே உள்ள நிலக்கரியைச் சுருள் வில்கள் நொறுக்கும். மேலும், நிலையான கூம்பு வகுப்பி தூளாக்கும் பகுதிக்குப் பெரிய அளவு பொருள்களை மீண்டும் செலுத்தும்.\n\nஇடைப்பட்ட வேகத்தில் இயங்கும் குண்டு, தட வகைத் தூளாக்கியில் ஒரு வெளியேற்றிக்குப் பதிலாக, காற்றூதி பயன் படுகிறது. குறைந்த வேகத்தில் இயங்கும் குண்டு ஆலை வகைத் தூளாக்கியில் வகுப்பிகள் காணப் படும். தூளாக்கப் படாத பெரிய அளவு பொருள்கள் மீண்டும் தூளாகத் தகுந்தவாறு, இரு புறங்களிலும் வெளியேற்றப் படும். மிகு வேகத்தில் இயங்கும் தூளாக்கியில் பொதுவாக, பல நிலைகள் காணப் படும். அதாவது, இரு நிலைத் தூளாக்கியில் முதன்மைத் தூளாக்கி, துணைமைத் தூளாக்கி என இரு தூளாக்கிகள் பயன் படும். தூளாக்கியினுள்ளே கட்டமைக்கப் பட்ட விசிறி ஒன்று காற்று, எரி பொருள் இவற்றை வெளியேற்றும். —இரா. இந்து\n\nநொறுங்குமை\n\nபொருள்களை முறித்து (fracture), அதனால் அறியப் படும் ஓர் எந்திரப் பண்பு நொறுங்குமையாகும். இந்நொறுங்குமை ஏற்படுவதற்கு முன், பொருள்கள் நீட்சி, உருச் சிதைவு அடையத் தயார் (plastic deformation) நிலையில் இருக்கும். பல பொருள்கள் உருச் சிதைவு நிகழ்ந்து, நீட்சி தன்மை அடையும் முன்பே உடைந்து விடும்.இந்நிலையே நொறுங்கு நிலை (brittle state) எனப் படுகிறது.அன்றாடம் பயன் படுத்தும் பொருள்களில் பல அதிக நொறுங்கு தன்மை வாய்ந்தவை. எ-டு: வார்ப்பிரும்பு, கண்ணாடி, காறைக் கட்டி (concrete block) முதலியவை.\n\nநொறுங்குமை மிகுந்த பொருள்கள் நீட்சி தன்மையைப் பெற்றிரா. எனவே, நீட்சித் தன்மையைப் பெறாப் பொருள்கள் நொறுங்குமைப் பொருள்கள் எனலாம். ஏனெனில், அவற்றைக் கம்பியாக நீட்டவோ, தகடுகளாக ஆக்கவோ இயலாது. இயல்பாக, நொறுங்கு தன்மை பெற்ற பொருள்களின் இழுவைத் (tensile strength) திறன், அப்பொருள்களின் அழுத்தத் திறனில் (compressive strength) மிகக் குறைந்த பின்னமாகவே இருக்கும். —வெ. ஸ்ரீதர்"}}